ஒரு கலைஞன்; ஓர் ஓவியம்; ஒரு திரைப்படம்

தங்கா ஒரு தொன்மையான ஓவியக் கலை. இது திபேத்திய பௌத்த ஓவியத்தின் ஒரு வடிவமாகும். பெளத்த மதத்தில் தங்கா ஓவியம் ஓர் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. இந்த ஓவியங்களைப் பருத்தி அல்லது பட்டுப் துணியில் வடிப்பர். பௌத்த மத தெய்வங்கள், புராணக் காட்சிகள் அல்லது மண்டலாக்ககளைச் சித்தரிப்பவை இந்த ஓவியங்கள். தங்கா ஓவியம் அழகான ஒரு கலைப் படைப்பு மட்டுமல்ல, அவை தியானத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆன்மிகக் குறியீடும் ஆகும். தங்கா புனித மற்றும் பக்திக்குரிய பொருட்களாகவும் கருதப்படுகின்றன. தங்கா ஓவியங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள், குறியீடுகள் மற்றும் பின்புலக் காட்சிகள் இவை அனைத்திற்கும் வரையறையும் அதற்கான கோட்பாடுகளும் பௌத்த மரபுகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் வழிப்பாட்டிற்கும் சமய போதனைக்காகவும் இந்தியாவில் அஜந்தா குகையிலும் சீனாவின் மொகாவோ குகையிலும் வாழ்ந்த மக்களால் இந்தத் திபேத்திய பௌத்த ஓவியம் வரையப்பட்டது எனச் சரித்திரம் கூறுகிறது. இப்பொழுது பருத்தி துணியில் மட்டுமே எஞ்சியிருக்கும் இந்த ஓவியங்கள், புத்த மடாலயங்களிலும் புத்த மதம் தலைவர்களான லாமாக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமாக வளர்ந்து வருகிறது. லாமாக்கள் தன்னுடைய தத்துவ போதனைகளுக்குத் தங்காவைப் பயன்படுத்தி வருகிறார்கள். புத்த மத ஆன்மீகம் பிரிதிப்பலிப்பாக விளங்கும் இந்த ஓவியத்தை லாமாக்களுக்கு அடுத்ததாக காத்மாண்டு பள்ளத்தாக்கில் வசிக்கும் குருங் மற்றும் தமாங் இனக்குழு மக்களால் மட்டுமே தொடர்ந்து வரையப்படும் ஒரு சிறப்பான ஓவியமாகும்.

இவ்வளவு சிறப்பு அம்சங்கள் அடங்கிய இந்த ஓவியங்களை வாழ்நாளில் ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என மிகப் பெரிய கனவாக இருந்தது. என்னுடைய நேபாள் பயணத்தின் போது அந்தக் கனவு நினைவானது. அன்னபூர்னா மலை ஏறும் பயணத்தை முடித்துக் கொண்டு என் ஆத்மாவுக்கு நெருக்கமான பயணத்தை வரையரைத்துக் கொண்டேன். அதில் ஒன்றுதான் தங்கா கலைக் கூடத்திற்குச் செல்வது. நேபாளில் நிறைய தங்கா கலைக்கூடங்கள் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக இணையத்தில் அலசிப் பார்த்ததில், Heritage Thangka Gallery and Art School-க்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். குறிப்பாக இந்தக் கண்காட்சிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கானக் காரணம், தங்கா கலைக்கூடமும் அதன் பள்ளியும் சேர்ந்தே இருந்ததுதான். ஒரு கலை உருவாகும் படிநிலைகளைப் பார்ப்பது மிக முக்கியமானது. ஒரு கலை உருவாகும் இடத்தில் இருந்து அதன் வளர்ச்சியைப் பார்த்தால்தான் அதனுடைய மதிப்பை மிக ஆழமாக அறிய முடியும். அதனால் இந்தக் கலைகூடத்தைப் காண மிக அவசியம் எனத் தோன்றியது. இவை எல்லாவற்றையும் விட நான் தேர்ந்தெடுத்த இந்தத் தங்கா கலைக்கூடம் முகலாய படையெடுப்பிற்குப் பிறகு 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நேபாளத்தின் மிகப் பெரிய புத்த மடாலய ஸ்தூபி அருகில் அமைந்திருந்தது. லும்பினி பயணத்திற்குப் பிறகும் மீண்டும் புத்தர் அவரைக் காண அனுமதித்திருந்தார். 

என்னுடைய நேபாள் பயண ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் நாராயணனிடம் இந்தத் தங்கா கலைக் கூடத்திற்குச் செல்லும் விருப்பத்தைக் கொஞ்சம் தயக்கத்துடன் தெரிவித்திருந்தேன். எல்லோரும் சுரேஷ் நாராயணனைத் தனிப் பயணி எனவும் மலேசியாவைச் சைக்கிளில் சுற்றி வந்தவராகவும் அடையாளம் காண்பர். இதனை தவிர அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. அது அவர் செய்த பயணங்களைவிட சுவாரசியமானது. அவர் ஒரு கைத்தேர்ந்த இசை கலைஞன். சுரேஷ் முறைப்படி கர்னாடக சங்கீதத்தைப் பிரபல இசை கலைஞரான இசை தென்றல் மாரியப்பனிடம் (மலேசியா இசை கலைஞர்) கற்றுக் கொண்டவர். அதுமட்டுமின்றி சீனர்களின் வயலின் என அழைக்கப்படும் எர்ஹு (Erhu) எனும் சீன பாரம்பரிய இசைக்கருவியை வாசிக்கும் ஆற்றல் பெற்றவர். மலேசியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாசிக்கப்படும் சீனர்களின் இசைக்கருவிகளில் எர்ஹுவும் ஒன்று. அதனை சுரேஷ் வாசிப்பது மிக ஆச்சரியம். மதம், கலாச்சாரம், மொழி என எந்த ஒரு வேறுபாட்டின்றி எர்ஹுவின் இசை சுரேஷிடமிருந்து வெளிப்படுவதைப் பலமுறை யூடியூப்பில் பார்த்து ரசித்திருக்கிறேன். பல தமிழ்ச்சினிமா பாடல்களை அவர் எர்ஹுவில் வாசித்து, தன்னுடைய சமூக வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்வது அவருடைய வழக்கம். அதிலும் அவர் சைக்கிள் பயணத்தின் போது, பந்தாய் கெமசிக்யில்(Pantai Kemasik) ‘ஒரு பாடல் நான் கேட்டேன்’ எனும் தமிழ்ச்சினிமா பாடலை எர்ஹுவில் வாசிக்கும் காணொலியை எண்ணிக்கையில்லாமல் கேட்டிருக்கிறேன். அவர் எர்ஹுவை வாசித்து வெளிப்படுத்தும் இசை உள்ளத்தைத் தொடும்.

சுரேஷை, இசை எவ்வளவு தூரம் ஆட்கொண்டிருந்தால் அவரிடமிருந்து இப்படி ஓர் இசை வெளிப்படும் என்பதைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியமுட்டும். இசையில் ஈடுபடுவர்களின் மனதையும் அவர்களின் ரசனைப் பற்றியும் என்னால் ஓரளவுக்குப் புரிந்துக்கொள்ள முடியும். அவர் இதுவரை மேற்கொண்ட அனைத்து பயணங்களையும் இசையின் வழிதான் உணர்ந்திருப்பார். இப்படி ஓர் ஆளுமை கொண்டவர், நான் பயணிக்க விரும்பும் பட்டியலைப் பார்த்ததும் என் உள்ளுணர்வைக் கண்டுக்கொண்டிருக்கக் கூடும். அதனால் சுரேஷ் எந்தத் தடைகளையும் கூறாமல் நான் பரிந்துரைத்த எல்லா திட்டங்களுக்கும் ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறியிருந்தார். கூடுதலாக என் விருப்பத்திற்கேற்ப ஒரு பரிசையும் கொடுத்தார். பல வருடத்தின் தேடலுக்கான பரிசு அது. வாழ்நாள் முழுக்கச் சிந்தனையிலும் நிற்கும்.

அந்தப் பரிசு ‘தங்கா’ என்ற ஒரு திரைப்படம். சுரேஷ் அந்தப் படத்தைப் பார்க்கும் படி பரிந்துரைத்திருந்தார். அது தங்கா ஓவியத்தைப் பற்றியது. சுரேஷ் இந்தப் படத்தைத் தன்னுடைய மங்கோலியா(Mongolia) பயணத்தின்போது பார்த்ததாகக் கூறியிருந்தார்.

“நான் இந்தப் படத்தை நிறைய நண்பர்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறேன், ஆனால் இந்தப் படத்தைப் பார்ந்த அனைவரும் சலிப்புடன் very slow movie எனச் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் அப்படிச் சொல்ல மாட்டிங்க. இது உங்களுக்கான படம். கண்டிப்பாகப் பார்க்கவும்,” எனக் கூறியிருந்தார். 

எல்லா வேளைகளையும் தூக்கிப் போட்டு, அன்றிரவே சுரேஷ் பரிந்துரைத்த அந்தப் படத்தை யூடி.யூப்பில் பார்த்தேன். அது திபேத்தியன் மொழி படம். படத்தின் முதல் காட்சியே திடுக்கிட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்க்க வேண்டுமா எனவும் தோன்றியது. ஒரு இளம் வயது பெண் மிகத் தயக்கத்துடனும் பதற்றத்துடனும் குருவின் வருகைக்காகக் காத்திருப்பாள். குரு அருகில் வந்ததும், ‘கேலா’ என திபேத்தியன் மொழியில் குருவை அழைப்பாள். குரு அவள் புறம் திரும்பாமல், சற்று நேரம் நின்று மீண்டும் நடக்கச் செய்வார்.

குருவின் செயலை உள்வாங்கிக் கொண்ட சீடர் ஒருவர் “உனக்கு எத்தனை முறை சொல்வது? குரு பெண்களைச் சீடராக ஏற்றுக் கொள்ளமாட்டார்” எனக் கூறி குருவின் பின் நடக்கத் தொடங்குவான்.

பல கலை துறையில் பெண்களைச் சீடராக ஏற்றுக்கொள்ளாதக் காலக்கட்டம் இருந்தது. நாட்டிய, சங்கீதம் துறைகளில் கூட இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால், கலை பாலின பாகுபாட்டைக் காட்டாது. ஆர்வமும் அர்ப்பணிப்பும் உள்ள எவரும் எந்தக் கலை வடிவத்தையும் கற்று பயிற்சி செய்யலாம். அப்படிக் கற்று பயின்ற பல பெண்கள் கலைத்துறையில் பெரிய ஆளுமைகளாக இருக்கின்றனர். இந்தக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு டாக்டர் சரிகா சிங்(Sarika Singh) நினைவுக்கு வந்தார்.

அவர் ஓர் உலக புகழ் பெற்ற தங்கா ஓவியர். புத்த பாரம்பரியத்தில் முதல் இந்தியப் பெண் ஓவியராகவும் தங்கா ஓவியத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் திகழ்கிறார். அவருடைய நிறைய நேர்காணலை இணையத்தின் வழி கண்டதுண்டு. சுமார் 300-க்கு மேலான தங்கா ஓவியங்களை 25 வருடங்களாக வரைந்து வருகிறார். அவருடைய எல்லா ஓவியங்களும் முதல் தரமானவை எனப் புத்தப் பிக்குகளால் போற்றப்பட்டவை. இப்படி ஒரு ஆளுமை கொண்ட பெண் தங்கா ஓவியர் இருக்கையில், ஒரு பெண்ணைச் சீடராக ஏற்றுக் கொள்ளாத குருவை முதல் காட்சியில் காட்டுவதைப் பார்க்க ஆச்சிரியம் அளித்தது. இந்தப் படம் வெறும் தங்கா ஓவியத்தைப் பற்றியது மட்டுமில்லை எனப் புரிய தொடங்கியபோது அடுத்த காட்சி மேலும் ஓர் ஆச்சிரியத்தைக் கொடுத்தது.

குரு தன்னுடைய சீடர்களின் தங்கா ஓவியங்களைச் சரிப்பார்த்துக் கொண்டிருக்கும்போது, சீடர்களின் ஒருவனான குருவின் மகன் தாமதமாக குருகுலத்தினுள் நுழைகிறான்.

“உன் ஓவியத்தைக் காட்டு,” எனக் குரு தன் மகனிடம் கட்டளையிடுகையில், அவன் முகம் கொஞ்சம் பதற்றமாகிறது. “நீயே காட்டுகிறாயா, இல்லை நானே பார்க்கட்டுமா?”எனக் குரு கடினமாகக் கேட்கையில், சீடன் மூடி வைத்திருந்த தங்கா ஓவியத்தின் திரையை அகற்றுகிறான்.

தங்கா ஓவியங்களைத் திரை போட்டு மூடி வைத்திருப்பது ஒரு வழக்கம். பெளத்துவ தெய்வங்களை வரையும் ஓவியமாகத் திகழும் தங்கா ஓவியத்தை ஒரு திறைக் கொண்டு மூடுவது பெளத்த மத பிரதிநிதிகளுக்கு மரியாதை காட்டும் ஒரு வழக்கமாகும். தூசி மற்றும் சேதத்திலிருந்து ஓவியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவும் இந்த வழக்கம் உதவலாம். 

மூடிய திரையைத் திறந்ததும், குரு “மனிதன் மனிதன் போல் இல்லை, பேய், பேய் போலில்லை,” என்று சீடனான தன் மகனின் ஓவியத்தைப் பார்த்துக் கூறுகிறார்.

“அப்பா, நான் தங்கா ஓவியத்தில் புதுமை செய்து, அதில் உச்ச நிலை அடைய ஆசைப்படுகிறேன்…” எனக் கூறுகையில் மகனின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல். “நீ என் மகன். நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றுவது உன்னுடைய பொறுப்பு,” என மிகக் கடுமையாகக் கூறுவார் குரு.

“எல்லா ஓவியத்திலும் ஒரு புதுமை இருக்கும். நீங்கள் கலாச்சாரம் என நம்பப்படும் ஓவியம் ஆயிரம் காலத்திற்கு முன்பு புதுமையாக ஓவியமாகத்தான் இருந்திருக்கும். இப்பொழுது நான் செய்யும் புதுமை, இன்னும் 100 ஆண்டுகளில் கலாச்சாரமாக மாறலாம்,”என டுன்ஹு (DunZhu) தன் குருவான அப்பாவிடம் கூறுகிறான்.

இந்தக் காட்சி தங்கா ஓவியர்களுக்கு முற்றிலும் முரணானது. தங்கா ஓவியங்கள் திபெத்திய பௌத்த பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியவை மற்றும் குருவிடமிருந்து சீடருக்கு மிகக் கடுமையான பயிற்சியிலும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் உருவாக்கப்பட்டவை. தங்கா கலையின் பின்னணியில் உள்ள உத்திகள் தற்கால கலை வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இந்த ஓவியங்கள் தன்னலம் இல்லாதவை. பல தங்கா கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் கையெழுத்திட வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். புத்தரின் உருவத்தில் தங்களின் அடையாளம் இருக்கக் கூடாது என்று உறுதியாக நம்புகிறார்கள். மேலும், பௌத்தக் கோட்பாட்டின் படி தங்கா ஓவியங்கள் புனிதத்தைச் சித்தரிக்கின்றன. இவையனைத்தையும் விட, நேபாளத்தில், தங்கா ஓவியத்தை நெவார் சமூகத்தில் தமாங் மற்றும் குருங் எனும் ஒரு சிறுப்பான்மை மக்களிடைய மட்டுமே வரையப்படும் ஒரு ஓவியக் கலையாகும். ஆரம்பக்காலத்தில், தங்காக்களை உருவாக்கும் கலைஞர்கள் பெரும்பாலும் நெவார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. நெவார் மக்கள் கைவினைத்திறன் பொருட்களைத் தயாரிப்பதில் ஆசியா நாடுகளிடைய பிரபலம். நேபாளம் மற்றும் திபெத் இரண்டிலும் தங்காக்கள் பொதுவாக வழிபாட்டிற்கான சின்னங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆக, தங்கா ஓவியங்களை வரைவதற்கே மற்ற இன மக்களுக்கு அனுமதியில்லாதபோது, தங்கா ஓவியத்தில் புதுமையைக் கொண்டு வர நினைக்கும் குருவின் மகனை அவர் எப்படி அனுமதிப்பார் என வியப்பாக இருந்தது. அடுத்த காட்சியைப் பார்ப்பதற்கு ஆவலைத் துண்டியது. 

பாரம்பரிய தங்கா ஓவியத்தின் மீது ஆர்வம் இல்லாமல், நவீன தங்கா ஓவியத்தை வரையும் முயற்சியில் இருக்கும் தன் மகன், டுன்ஹுவைக் குரு தன்னுடைய சீடராக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அவன் மீது பெருங் கோபத்தில் இருக்கிறார். அனைத்துலக தங்கா ஓவியக் கண்காட்சியில் கலந்துகொள்ள தனக்கு ஒரு சீடர் இல்லை என மிக வருத்தத்துடன் தன் குருவின் படத்திற்கு முன் நின்று முறையிடுகிறார். சட்டென்று, சிவப்பு நிறமான பாதரசக் கணிப்பொருள் வகையைச் சேர்ந்த இங்குலிகமைக் cinnabar காண்கிறார். திபேத்தியம் கலாச்சாரத்தின் படி இங்குலிகம் மறு அவதாரத்தின் அடையாளம். தன் குரு வாழ்ந்த ஊரில் அவருடைய மறுபிறவி தங்கா ஓவியத்தை வரைய ஆவலோடு காத்திருக்கக்கூடும் என நம்பிக்கையில் தன் குருவின் வாழ்ந்த ஊரை நோக்கிப் பயணக்கிறார்.

குருவின் மகன், டுன்ஹு தன் அப்பாவின் எண்ணத்தை நிறைவேற்ற ஒரு வாகனத்தைத் தயார் செய்து, தன் அப்பாவை ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறான். போகும் வழியில், வாகனம் சேற்றில் மாட்டிக் கொள்கிறது. குரு வண்டியிலிருந்து இறங்கி சற்று தூரம் நடக்க ஆரம்பிக்கிறார். நடுவில் வேலி இருப்பதாலும் கண் பார்வை குன்றியதாலும் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். மகன் தன் அப்பாவுடைய இயலாமையைக் கண்டு வருத்தப்படுகிறான்.

பெரும்பாலும் தங்கா ஓவியர்கள் உன்னிப்பாக வரைவதால் கண் சோர்வு அல்லது பார்வைக் குறைபாடுகளைச் சந்திக்க நேரிடும். தங்கா ஓவியங்களை உருவாக்குவதற்குத் தீவிர கவனம் தேவைப்படும். பெரும்பாலும் நீண்ட மணிநேரம் சின்ன தூரிகையைப் பயன்படுத்தி வரையும் அவசியம் இருக்கும். நீண்ட நேர வேலைப்பாட்டினால் கண்களில் சிரமம் ஏற்பட்டு, கண் பார்வை திறனைக் காலப் போக்கில் இழக்கக்கூடும். நடுவில் வேளி இருப்பதைப் பார்க்காமல் குரு கடந்து போக முயற்சிப்பதைக் காட்டும் காட்சி மனதைச் சிதைக்க வைத்தது. உடலில் வரும் தாக்கங்களைப் பொருட்படுத்தாமல் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு வயதான கலைஞனின் நிலை அது.

சுரேஷ் கூறிய படி படம் மிக நிதானமாக நகர்ந்துக் கொண்டிருந்தது. என் சிந்தனையில் நீங்காத இடம் பிடித்தக் காட்சி ஒன்று இந்தப் படத்தில் வந்தது. அந்தக் காட்சியை மட்டும் நான் பல முறை கண்டு ரசித்திருந்தேன். அவை கொண்டு வரும் கருத்தை மனதில் மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டேன். ஒரு மாலை வேளையில் சீடர்கள் குருவுடன் ஒரு படத்தைப் பார்க்கிறார்கள். அது ‘2012’ எனும் ஆங்கிலப் படம். உலகின் பேரழிவைக் காட்டும் அறிவியல் புனைக்கதை. மிகப் பிரபலமானப் படமும் கூட. அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உலகில் ஏற்படும் அழிவுகளைப் பார்த்த சீடர்கள் மனம் கலங்கி அஞ்சுகிறார்கள்.

அதில் ஒரு சீடன் “என் அப்பா என் குடும்ப உறுப்பினர்களின் சம்பளத்தை வைத்து ஒரு வீடு காட்டிக் கொண்டிருக்கிறார். நாளை வீட்டைக் கட்ட வேண்டாம். உலகம் அழிய போகிறது எனச் சொல்லி பணத்தைக் சேமித்து யாத்திரைக்குச் செல்லலாம் எனச் சொல்லப் போகிறேன்,”எனச் சக சீடரிடம் கூறுவான்.

அதற்கு உடனிருந்த இன்னொரு சீடன், “உலகம் அழியும் தருவாயில் இருக்கிறது. நாம் செய்யும் இந்தக் கலைக்கு அர்த்தம் உள்ளதா? நாம் செய்வதெல்லாம் வீண்தானே!” எனப் பதிலுக்குச் சொல்வான்.

சீடர்களின் புலம்பலைக் கேட்ட குரு, அவர்களுக்கு ஒரு கதைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் சொல்லும் கதை என் மனம் வருந்தி கண்கள் கலங்கும்போதெல்லாம் ஆறுதல் படுத்தும் கதை.

புத்தர் ஒரு கோயிலில் கிடந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலந்தியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். “உலகின் மிக மதிப்புமிக்க விஷயம் என்ன?” சிலந்தி, “பெற முடியாதவை மற்றும் இழந்தவை”, என்று கூறுகிறது. பல நாட்களுக்குப் பிறகு, காற்று சிலந்தியின் வலையில் ஒரு பனித்துளியை வீசுகிறது. சிலந்தி பனி கசியும் தன்மையைக் கண்டு அதை நேசிக்க ஆரம்பித்தது. பின்னர் ஒரு பெரிய புயல் வந்து பனியை அகற்றி விடுகிறது. சிலந்தி மிகவும் சோகமாக அந்தப் பனியை நினைத்து வாடும். புத்தர் மீண்டும் தோன்றி அதே கேள்வியை மீண்டும் சிலந்தியிடம் கேட்கிறார். “இந்த உலகின் மிக மதிப்புமிக்க விஷயம் என்ன?”சிலந்தி பனியை நினைத்துத் தன்னுடைய கடந்த காலம் எனப் பதிலளிக்கிறது. புத்தர் சிலந்தியின் மன உணர்வை புரிந்து கொண்டு, சிலந்தியை மறுபிறவி எடுக்கச் செய்கிறார். சிலந்தி ஓர் அதிகாரியின் மகளாகப் பிறக்கிறாள். அவள் புதிய மாவட்ட நிர்வாகியாக வரும் ஒரு நபரைக் காதலிக்கிறாள். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த சிலந்தி காதல் தோல்வியால் எல்லா நம்பிக்கையையும் இழந்து தன்னைக் கொல்ல விஷம் குடிக்கிறது. அப்பொழுது சிலந்தியின் முன் தோன்றிய புத்தர் அவளுடைய மறுபிறவிக்கான காரணத்தைக் கூறி மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார். “இப்போது கூறு, உலகின் மிக மதிப்பு மிக்க விஷயம் என்ன?” அப்போது அந்தச் சிலந்தி, “இந்தக் கணம்” என்று கூறுகிறது. குரு இந்தக் கதையை ஒரு சின்ன புன்னகையுடன் தன்னுடைய சீடர்களுக்குக் கூறி முடிப்பார்.

இது மிகவும் ஆழமான கதை. இது உண்மையில் தற்போதைய தருணத்தின் மதிப்பைப் பற்றி சிந்திக்கவும் தற்போது நம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையவும் செய்கிறது. சில சமயங்களில், நமக்கு முன்னால் இருக்கும் விஷயங்களைப் புறக்கணிக்கிறோம், மேலும் கிடைக்காத அல்லது தொலைந்து போன விஷயங்களுக்காக ஏங்குகிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், உலகில் மிகவும் மதிப்பு மிக்க விஷயம் நிகழ்காலத்தில் நம்மிடம் இருப்பதுதான். நம் வாழ்வில் இருக்கும் மனிதர்களையும் தருணங்களையும் போற்றுவதற்கு இது ஓர் அழகான நினைவூட்டல். நிகழ்காலத்தில் தன்னிடம் இருப்பது உண்மையிலேயே விலைமதிப்பற்றது என நான் உணர்ந்த காட்சியது. ஆக, நிகழ்காலத்தில் நம்மிடம் இருக்கும் ஆற்றலைக் கொண்டு, காரியங்களில் ஈடுபடுவதுதான் மிகப் பெரிய விஷயம் என இந்தக் கதை கூறுகிறது.

படத்தில் குரு சொன்னக் கதையைக் கேட்ட சீடர்களுக்கும் இதன் உட்கருத்து புரிந்திருக்கும். ஆனால், இந்தக் கதையைச் சொல்லி முடித்த குரு நீண்ட நேரம் தனிமையில் இருப்பார். சீடர்களுக்குச் சொன்னக் கதை அவரிடமும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும். அந்த மாற்றங்களைக் காட்டுவதுதான் படத்தின் உச்சம்.

அதுவரை யாரையும் தொட அனுமதிக்காத ஒரு பழைய தேநீர் தொட்டியைக் குரு கைகள் இல்லாத ஒரு சீடனிடம் எடுத்து வரச் சொல்லுவார். அவன் எடுத்து வந்துக் கொடுக்கையில், குரு அதனைக் கீழே தட்டி விடுவார். தேநீர் தொட்டி சுக்குனூராக உடைந்து போகும். ஆனால், தேநீர் தொட்டியின் அடிதளம் மட்டும் உடையாமல் இருக்கும். அதன் மேல் தாரா தேவியின் ஓவியம் தங்கா பாணியில் செதுக்கப்பட்டிருக்கும். அதனைப் பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கும். குருவின் செயலை உணராத மற்ற சீடர்கள், கவனக் குறைவால் குரு போக்கிஷம் போல் வைத்திருந்த தொட்டியை உடைத்தற்கு அவனை ஏச ஆரம்பிப்பார்கள்.

டுன்ஹு “அது என் அப்பாவுடைய குருவின் கடைசி தங்கா ஓவியம். அவருடைய இறுதி நிமிடத்தின் போது, என் அப்பாவிற்குக் கொடுத்த போக்கிஷம் அது. என் அப்பா உன்னை ரொம்ப நம்பினார். அவருடைய குருவின் மறுபிறவி என உன்னை நினைத்தார். நீ தங்கா பாரம்பரியத்தைக் காப்பாற்றுவாய் என நம்பியிருந்தார். ஆனால் நீ! அவரின் போக்கிஷத்தை உடைத்துவிட்டாய்” என மிகக் கோவமாகக் கையில்லாத சீடனிடம் கூறுவான். பிறவியிலேயே ஊமை என்பதால் தன் நிலையை விளக்க முடியாமல் செய்வதறியாது நிர்ப்பான்.

குரு ஏன் அவ்வளவு நாள் போக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருந்த தேநீர் தொட்டியைத் தட்டிவிட்டார் எனப் படம் முடியும் தருவாயில் புலப்படும். இதுவரை தனக்கு பயிற்று வைத்த குரு தன்னுடைய கடைசி மூச்சின்போது கொடுத்த ஓவியத்தைப் பாதுகாத்தது மட்டுமில்லாமல், அவர் சொல்லிக் கொடுத்த மரபையும் பாரம்பரியத்தையும் கட்டி காப்பாற்றியிருந்தார். இனி உலகில் இம்மாதிரியான மரபுகளைக் கடைபிடித்தால் தங்கா எனும் மாபெரும் ஓவியக் கலை அடுத்தத் தலைமுறைக்குப் போகாது என நினைத்து, தேநீர் தொட்டியைத் தட்டிவிடுகிறார். இதுவரை கட்டிக் காத்த அனைத்து மரபையும் அதனுடன் போட்டு உடைப்பார். அதன் வழி, அவரின் குருவின் கடைசி தங்கா ஓவியத்தைத் தன்னுடைய சீடர்களுக்குக் காட்டுவதோடு மட்டுமில்லாமல், தன்னுடைய பரிணாமத்தையும் சீடர்களுக்குச் மறைமுகமாகச் சொல்லியிருப்பார்.

குரு இந்த மாற்றத்தை வேறோரு வகையிலும் உணர்த்துவார். தன்னுடைய மகனின் நவீன தங்கா ஓவியத்தை அவர் அனுமதித்து, தன்னுடைய சீடன் என முத்திரைக் குத்தி வெளிப்படுத்துவார். பிறகு, நீண்ட நாட்களாக தங்கா ஓவியத்தைப் பயில விரும்பும் பெண் சீடரைத் தன்னுடைய வகுப்பில் சேர்த்துக் கொள்வார். அதன் பிறகு குருவின் தங்கா ஓவியத்தைக் கண்காட்சிக்கு எடுத்துச் செல்கையில், கீழே தவறி விழுந்த ஓவியம் ஏவரஸ் மலை வரை பறந்துச் செல்லும் காட்சியைக் காண முடியும். குருவின் புகழும் அவரின் ஓவியக் கலையும் இந்த உலகத்தின் மிக உயர்வான நிலையை அடைந்ததன் பொருள் அது. குரு அவர் செய்த மாற்றத்திற்கான பிரிதிபலிப்பு என எனக்குத் தோன்றியது.

தங்கா ஓவியம் பாரம்பரிய எல்லைகளைக் கடந்து நவீன வெளிப்பாடாக மாறியதன் அடையாளமாக இருளிலிருந்து ஒளியை நோக்கி நடக்கும் குருவின் நிழலுடன் படம் முடிகிறது. குரு எனும் வார்த்தையில் வரும் ‘கு’, ‘அறியாமையின் இருள்’ மற்றும் ‘ரு’ என்றால் ‘அறிவின் தெய்வீக ஒளி’ எனச் சமஸ்கரத்தில் பொருள்படும். ஒரு குரு என்பவர் உண்மையான அறிவின் தெய்வீக ஒளியால் இருள் மற்றும் மாயையை அகற்றுபவர். இந்தப் படத்தில் வரும் குரு அவ்வாறான செயலைத்தான் செய்கிறார்.

காலம் பல்வேறு கலை வடிவங்களில் மாற்றங்களைக் கொண்டு வரலாம், ஆனால் ஒரு கலை வடிவத்தின் உண்மையான சாரத்தையும் அதன் அசல் தன்மையையும் யாராலும் மாற்ற முடியாது. அது தனக்கான பிரதிநிதிகளையும் கலைஞர்களையும் ரசிகர்களையும் தானாகவே தேடிக் கொள்ளும்.

தங்கா ஒரு வெற்று துணியிலும் சுவரிலும் வரையும் ஓவியம் மட்டுமல்ல. அது பல நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த மக்களின் நம்பிக்கை, பக்தி, கலாச்சாரத்தின் அடையாளம், சில வரையறை கோட்பாடுகளுடன் மிக அபூர்வமான ஓவியமாகத் திகழ்கிறது என சுரேஷ் பரிந்துரைத்த இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு புரிந்தது.

Tibetan Documentary movie – ThangKa – 2020

https://www.youtube.com/watch?v=enmRvEJT33MHYPERLINK “https://www.youtube.com/watch?v=enmRvEJT33M&t=5018s”&HYPERLINK “https://www.youtube.com/watch?v=enmRvEJT33M&t=5018s”t=5018s

2 comments for “ஒரு கலைஞன்; ஓர் ஓவியம்; ஒரு திரைப்படம்

  1. Seshathiri
    March 8, 2024 at 1:36 am

    Good writing mam..it’s very easy to read..

  2. Seshathiri
    March 8, 2024 at 1:37 am

    It’s very easy to read..writing also super mam

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...