குத்தாங்கட்டை ரகசியம்

கோபால், ரெக்ஸ் தியேட்டரை ஒட்டி இருந்த ஒரு பெரிய ஆங்சானா மரத்தடியில் ‘இங்கே பெரட்டா ரொட்டி கிடைக்கும்’ என்று போர்டு தொங்கிய ஸ்டாலுக்குப் போனான். தியேட்டரில், ‘16 வயதினிலே’ திரைப்படம் காண்பிக்கப்படும் போஸ்டர் தெரிந்தது. அன்று, ஞாயிற்று கிழமையாதலால் காலை 11 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி இருந்தது போல. ஸ்டாலில் நிறைய விடலைப் பையன்கள் பசியாறிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர், “இது எப்படி இருக்கு…” என்ற பட வசனத்தைப் பேசி, விஷமத்தனம் செய்து சிரித்துக் கொண்டிருந்தனர். கோபால், பசியாறைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, கடைக்காரரிடம் குத்தாங்கட்டை போமோவைப் பற்றி மெல்ல விசாரித்தான். தான் விசாரிப்பது யார் காதிலும் விழுந்துவிடக்கூடாது எனும் எச்சரிக்கை அவன் குரலில் இருந்தது.

“பௌர்ணமி அன்னிக்கிதானேப்பு அந்த போமோவ பாக்கமுடியும். மத்த நாள்ல அங்க ஒரு விஷேசமும் இருக்காதேப்பு!” என்று கடைக்காரர் சத்தமாகச் சொன்னது கோபாலுக்குச் சங்கடமாய் இருந்தது. எல்லாரும் தன்னையே பார்ப்பது போல கூச்சத்தில் நெளிந்தான்.

பௌர்ணமிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. அவரைப் பார்க்கப்போகும் வழியைத் தெரிந்து கொண்டு, மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பினான். வழி நெடுகிலும் கோபாலுக்குச் செல்வத்தின் நினைவாகவே இருந்தது.

காற்றில் கலந்து காணாமல் போகும் புகையைப் போல் செல்வம், கண்ணெதிரிலேயே காணாமல் போயிருந்தான். அவ்வப்போது, நண்பனின் வீட்டில் இரவு தங்கிவிட்டு மறுநாள் வரும் பழக்கமிருந்தவனாதலால் அன்றிரவு அவன் வீட்டிற்கு வராததை எண்ணி வசந்தி மனம் சுணங்கினாலும் கவலை கொள்ளவில்லை. ஆனால், எதையும் முன்கூட்டியே சொல்லிவிடுபவன் அன்று எந்தத் தகவலும் சொல்லாததுதான் சங்கடத்தைக் கொடுத்தது. அந்த உதாசினம் அவளுக்குச் சினத்தை மூட்டியது.

அவன், வழக்கமாகச் செல்லும் அருகிலிருந்த நண்பனின் வீட்டிற்குக்கூட சென்று விசாரித்து வந்துவிட்டாள்.அங்கெல்லாம் அவன் போகாதது மேலும் விபரீதமாகத் தோன்றியது. அவள், எதையெல்லாமோ எண்ணி பதற்றமுற்றாள். கணவன் வீடு திரும்பியவுடன் அழுதுக்கொண்டே செய்தியைச் சொன்னாள்.

“அதுக்கு ஏன் அழுவுற? 23 வயசாவுது! அவன் என்னா சின்ன பையனா?” என்று ஆறுதலைக் கண்டிப்பான குரலில் சொன்னான்.

“ஆனா வழக்கமா போற கூட்டாளி வீட்டுக்குகூட தம்பி போவலிங்க…” என்று வசந்தி பதறினாள்.

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு கணவன் கேட்டான்.

“நீ ஏதும் அவன ஏசுலியே?” அண்ணி என்ற ஸ்தானமே வீண் அபவாதத்தைத் தேடிக்கொள்ளும் உறவாக இருப்பதை அவள் அறிவாள்.

இப்போது, மனைவியின் கலக்கம் அவனையும் பிடித்துக் கொண்டது.

முதலில், விபத்து; ரகசிய கும்பலுக்கிடையே ஏற்படும் கைக்கலப்பு போன்றவற்றால் நேரும் துர்மரணங்களே நினைவிற்கு வந்தன. ஆனால், ரகசியக் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபாடுகொள்ளும் குணம் உடையவன் அல்ல அவன். நிச்சயமாக மது அருந்துபவனும் கிடையாது. ‘கடன் தொல்லைக்குப் பயந்து எங்காவது தலைமறைவாகிவிட்டானா? வயது கோளாரால் காதலில் விழுந்து எங்கேயாவது ஓடிப்போயிருப்பானோ!’

கோபால், எதையெல்லாமோ நினைத்து நிம்மதி கெட்டுத் தவித்தான். தெரிந்த எல்லா வழிகளிலும் அவனைத் தேடிப் பார்த்து விட்டான்.  

நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. காவல்துறையிடமிருந்துகூட எந்தத் தகவலும் இல்லை.

காலம், செல்வத்தின் இழப்பை எங்கெங்கோ மறைத்து வைத்து மறக்க முடியாமல் செய்தது. உடைகள், உபயோகித்தப் பொருட்கள், புகைப்படங்கள் போன்றவற்றிற்குப் பின்னால் அவன் மறைந்திருந்தது போல், அவற்றை பார்த்தக் கணமே மீண்டெழுந்து வந்து அவர்களைக் கலங்கடித்தான். இத்தனை வருடங்களில் கோபால்கூட அந்த இழப்புக்குக் கொஞ்சம் பழகிதான் போயிருந்தான். ஆனால் வசந்திதான் பாவம், உடைந்து போயிருந்தாள். ஏதோ ஒரு கவலை அவளைத் தின்றுக் கொண்டிருப்பது போல் இளைத்துக் கொண்டிருந்தாள். தனிமையில், யாருடனோ மானசீகமாய்ப் பேசிக்கொண்ட மொழி, மூன்றாம் மனிதனுக்குக் கேட்காத  முணுமுணுப்பாய் இருந்தது.

செல்வத்திற்கு 15 வயதாகும்போது தாய் புற்று நோய் கண்டு இறந்து போனபோது, கோபால்தான் தாய், தந்தை இருவரின் பங்கையும் தனி ஒருவனாகவே இருந்து பூர்த்திச் செய்தான். 38-வது வயதில் அவன் திருமணம் செய்து கொண்டு வந்த பின்னர், வசந்தியும் அந்தப் பாரத்தைக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டபோதுதான் கோபாலுக்கு நிம்மதி வந்தது. “செல்வத்த நம்ம புள்ளையா நெனச்சுக்க வசந்தி… நமக்குன்னு ஒரு கொழந்த இல்லாத கொறையே தெரியாது” எனக் கோபால் சொல்லும்போதெல்லாம் “என்னா இருந்தாலும் பெத்த பிள்ளயப்போல் வருமா?” என்று ஏக்கமாகப் பார்ப்பாள்.

வம்பர் 11 செல்வம் காணாமல் போன பின்னர், “இந்த 11-ம் தேதி வந்தாக்கா இதோட செல்வம் காணாம போயி மூனு வருஷம் ஆவப்போவுது… நாலு வருஷம் ஆவப்போவுது…” என்று ஒவ்வொரு வருடமும் அவனின் பிரிவைச் சில சொற்களில் நினைவுப்படுத்திக்கொள்வதாக உணர்ச்சிகள் சுருங்கிப் போயின.

தாய் உயிரோடு இருந்து, தம்பி இப்படி காணாமல் போயிருந்தால் அவர் எப்படி துடித்துப் போயிருப்பாரென்று கோபால் அவ்வப்போது நினைத்துப் பார்த்து நிம்மதி கெட்டுப் போனதுண்டு. ‘அவன் விஷயத்தில் நான்தான் கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டேனோ?’ என்று தன்னையே குற்றம் சொல்லிக் கொண்டு கலங்கலானான்.

வருடங்கள் ஆக ஆக ‘அவன் எங்கேயாவது உயிரோடதான் இருப்பான்…’ என்ற நம்பிக்கை,          ‘இன்னும் உயிரோடத்தான் இருக்கானோ என்னமோ தெரியிலியே…’ என்பதாகத் தளர்ந்து கொண்டிருந்தது. ஆயினும், அந்த நாளன்று அவனுக்குப் பிடித்தமான உணவையோ அல்லது அவனுக்குப் பிடித்த உடையையோ வாங்கி வைத்து, அவனை நினைவு கூறாமல் அவர்கள் இருந்ததில்லை; கோபால், தவறாமல் விடுமுறை எடுத்து தம்பியின் நினைவுகளில் தோய்ந்து போனான். 

அப்படித்தான் இந்த வருடம், தம்பிக்குப் பிடித்த டிஷர்ட் ஒன்றை வாங்க, குளோப் சில்ஸ் ஸ்டோருக்குப் போனான்.

“அண்ணே, நல்லா இருகீங்களாண்ணே?” என்று ஒரு குரல் பின்புறமிருந்து கேட்டது.

“என்ன உனக்குத் தெரியுமா? எனக்கு உன்ன பாத்த ஞாபகம் இல்லியே…” என்று கோபால் தடுமாறினான்.

வந்தவன், இவனுடைய கையைக் குலுக்கி, ஆர்வத்தோடு கேட்டான்.

“நீங்க செல்வத்தோட அண்ணன் தான? அவன் எப்படிண்ணா இருக்கான்? என்ன செய்யிறான் இப்ப?”

கோபால் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தம்பியைத் தெரிந்த நண்பன் ஒருவனைப் பார்க்கிறான். ஒரு வித பதற்றம் இவனைப் பீடித்துக் கொண்டது. வந்தவனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.

“எம் பேரு கேசவன். ஸ்கோலா மெனங்காவில செல்வத்தோட படிச்சேன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

கோபால், அவனைப் பக்கத்திலிருந்த கடைக்கு அழைத்துப் போய், செல்வத்தைப் பற்றி சொன்னான்.

நண்பனின் முகம் வெளிறிப் போனது. ஏதோ அசம்பாவிதத்தை எண்ணிக் கலங்குபவன் போல் கவலையில் ஆழ்ந்தான். “நாலு வருஷமா காணோமா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஆமாம்பா! அவன் எங்க போனான்னே தெரியில. சமயத்துல உயிரோடாதான் இருக்கானான்னே சந்தேகமா இருக்கு. நீ கடசியா எப்ப பாத்த? அவன் யாரையாவது காதலிச்சானா?”  தம்பியைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு பிடிமானம் கிடைத்தது போல் கோபால் அவசரம் கொண்டான்.

“ம்ம்ம்… நானும் அவன பாத்து நாலு வருஷம் இருக்கும்னு நெனக்கிறண்ண. ரொம்ப மன சங்கடத்துல இருக்குறதா சொன்னான். இப்ப யோசிச்சி பாத்தாக்கா அவன் காணாம போனதுக்கும் அவன் ஏங்கிட்ட கேட்ட ஒதவிக்கும் சம்பந்தம் இருக்குறாப்லதான் தோனுதுண்ண…” என்றான் கேசவன்.

“அவன் அப்புடி ஊங்கிட்ட என்ன ஒதவி கேட்டான்…”  கோபாலினால் பொறுமை காக்க முடியவில்லை.

கொஞ்ச நேரம் தயங்கிய கேசவன், “ரவாங் பக்கத்துல இருக்குற சக்காய்க்காரங்க கம்பத்துல யாரோ போமோ இருக்குறாராமே உனக்கு ஏதும் தெரியுமான்னு கேட்டான். அவர எல்லோரும் ‘குத்தாங்கட்ட போமோ’ன்னு சொல்லுவாங்க. ‘காட்டு ராஜா’ன்னு அவருக்கு இன்னொரு பேரு இருக்குறதையும், அவுருதான் ராத்திரீல மந்தரம் பாக்கறவருன்ற தகவலையும் அவங்கிட்ட சொன்னன்,” என்றான் கேசவன்.

“நீ அந்தக் குத்தாங்கட்ட போமோவ பாக்க ஏதும் போயிருக்கியா?”

“அய்யோ இல்லண்ணா. எல்லாம் சொல்கேள்விதான்,” என்று சொன்னான்.

“அந்த போமோவ எப்பிடி பாக்கப் போறதுன்னாவது தெரியுமா?”

“தெரியாதுண்ணா! ஆனா அவுரு ரவாங் வட்டாரத்துல ரொம்ப ஃபேமஸ்ன்னு கேள்விபட்டிருக்கன். அங்க உள்ளவங்கள விசாரிச்சா எல்லா சமாச்சாரமும் தெரிஞ்சிக்கிலாண்ண,” என்று நம்பிக்கை ஊட்டினான்.

கோபால், தம்பியே கிடைத்துவிட்டதுபோல் உற்சாகம் கொண்டான். கைக்கூப்பி வணங்காதக் குறையாகக் கேசவனின் கரங்களைப் பற்றிக்கொண்டு நன்றி சொன்னான்.

மனைவியிடம் அந்தச் செய்தியைச் சொன்னபோது அவள் பில்லி, சூனிய செய்வினையை எண்ணி நடுங்கிப் போனாள். போமோவிடம் போகும்படிக்கு அவனுக்கு என்ன அவசியம் வந்திருக்கும் என்று கோபால் கேட்டுக் கலங்கியது, அவளைத் தூக்கம் கொள்ளவிடாமல் தொந்தரவு செய்தது. கோபாலின் குழம்பிய கண்களை இரவெல்லாம் வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். “ஒரு வேள, அவன் யாராவது பொண்ண விரும்பி, அவள வசியம் செய்ய ஏதாச்சும் முயற்சி செஞ்சிருப்பானோ’ என்ற சந்தேகத்தைக் கோபால் எழுப்பியபோது ஒன்றும் சொல்லத் தோன்றாதவளாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

தொடர்ந்து வந்த இரண்டு வாரங்களுக்குக் கோபால் பலநூறு அனுமானங்களுக்கும், வசந்தி பலவிதமான மௌனவதைக்கும் ஆளாகித் தவித்தனர்.

பௌர்ணமியன்று கோபால் மீண்டும் ரவாங்கிற்குக் கிளம்பிப் போனான்.

‘காப்பார் பாரு’ எஸ்டேட்டிற்கு போகும் கிரவல் மண் சடக்கின் மூன்றாவது மைலில் ‘வெவர்லி எஸ்டேட்’ என்ற போர்ட் தெரியும் இடத்தில் இறங்கி, கரண்டு கம்பி வழியாக இரண்டு மைகள் ஏறி இறங்கினால் சக்காய்க்காரர்களின் கம்பம் வருமென்றும் அங்கிருந்து ஒரு மைல் தூரத்திற்கு காட்டிற்குள் நுழைந்தால் ‘குத்தாங்கட்டை’ வந்துவிடும் என்றும் கடைக்காரர் அடையாளம் சொல்லியிருந்தார்.

இருட்டுவதற்குள் காட்டிற்குள் போய்விட்டால், போமோவைப் பார்த்த பின்னர் இரவு அங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் காலையில் திரும்பிவிட ஏதுவாக இருக்கும் என்ற அறிவுரையையும் அவரே கொடுத்தார்.. 

‘வெவர்லி எஸ்டேட்’ போர்ட் அடையாளத்தைக் கண்டதும் இவன் இறங்கிக் கொண்டான். அங்கே இறங்கிய ஒற்றை ஆளாக இவன் இருந்ததில் ஒரு நிராதரவற்ற தனிமையை உணர ஆரம்பித்தான். கரண்டு கம்பி வழியாகச் சென்ற பாதை, மூன்று பேர் தாராளமாகச் செல்லத்தக்க வசதியில் அகலமாகவே இருந்தது. செந்தூல் ரயில்வே கம்பத்தில் பிறந்து வளர்ந்த கோபலுக்கு, அந்தக் காட்டுப் பயணம் அச்சமூட்டியது. காட்டு விலங்குகளின் திடீர் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் பலியாகக்கூடும் என்ற ஆபத்து கருத்திலேயே இருந்தது. சில்வண்டுகளின் ஆயத்தம் அப்போதே ஆரம்பமாகி வனத்தின் பின்னணியை இவனுக்குப் பரிச்சயம் செய்து பயமுறுத்தியது. திடீரென்று புதர்களுக்கிடையே தோன்றிய சிறு சலசலப்பும் இவனை நின்று நிதானிக்க வைத்தது. ஏதாவது காட்டுக் கோழியாக இருக்குமென்று சாதகமாக நினைத்து தனது பயத்தைத் தணிக்கப் பார்த்தான். ஆனால், மலைப்பாம்புகள், காட்டுப் பன்றிகளின் நினைப்பே எஞ்சி நின்று இவனை மிரள வைத்தது. அந்தச் செங்கூத்தான ‘கரண்டு கம்பி’ மேட்டில் ஏறி இறங்குவதற்குள் முட்டிகள் தளர்ந்து போயின.

மரக்கிளைகளாலும் ஓலைகளாலும் கட்டப்பட்ட சக்காய்க்காரர்களின் குடிசைகள் மரங்களுக்கு மத்தியில் தெரிந்தன. அவை யாவும் தரையிலிருந்து மூன்றடிக்கு மேலே உயர்த்திக் கட்டப்பட்டு, ஏறிச் செல்ல மரக்கிளைகளே படுத்த வாக்கில் படிகளாக அடுக்கப்பட்டிருந்தன. அந்தப் படிகளைத் தாங்கிப் பிடித்தவையோ பெரிய, உருண்ட கட்டைகள். கூரையிலிருந்து தொங்கிய கம்பியில் கார்பைட் விளக்குகள் ஒவ்வொரு குடிசையின் முன்னும் தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் சில கார்பைட் விளக்குகள், குடிசைகளின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட கட்டைகளின் மேல் பொறுத்தப்பட்டிருந்தன. விளக்குகள் இன்னும் ஏற்றப்படவில்லை.

குடிசைக்கு அடியில் படுத்துக்கிடந்த நாய்கள் கூட்டமொன்று உடனே கோபாலை நோக்கி குரைத்துக் கொண்டே பாய்ந்தோடி வந்தன. இவன், உஷாராகி அப்படியே நின்றான். அவ்வளவு நாய்கள் ஒன்றாக ஓடி வருவதைப் பார்த்து, உடல் சிலிர்த்து உதறியது. கலவரத்துடன் குடிசைகள் பக்கம் பார்த்தான். அப்போது, அங்கிருந்து புரியாதப் பாஷையில், கனத்தக் குரலில் ஒர் அதட்டல் கேட்டது. உடனே, நாய்கள் யாவுமே பின் வாங்கிக் கொண்டு குடிசைப் பக்கம் ஓடிப் போயின.

நாய்கள் குரைத்த சத்தத்தால் சிலர் வெளியே வந்தனர். பரட்டை தலையுடன் ஒருவன் அரைகால் சிலுவாருடன் வந்தான். பாராங் கத்தியொன்று மூங்கில் உறைக்குள் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் நின்ற பரட்டைத் தலை பெண், கைலி மட்டுமே கட்டியிருந்தாள். இடுப்பிலிருந்த குழந்தை அவளின் கனத்த மாரைச் சப்பிக் கொண்டிருந்தது. கோபால், கூடியிருந்த பிள்ளைகளின்பால் பார்வையைத் திருப்பிக் கொண்டான். சில வயது குறைந்த பெண் பிள்ளைகள் அம்மணக் குண்டியாய் இருந்தன. சிலர், சிறியதாய் குட்டை சிலுவார் மட்டும் அணிந்திருந்தனர். ஆண் பிள்ளைகள் எல்லோருமே அம்மணமாகவே இருந்தனர். அந்தப் பிள்ளைகளுக்கிடையயே மாத இடைவெளியே இருக்கும் போல் தோன்றியது. அவர்களின் ஏழ்மை, மனதை வாட்டியது. அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தை இவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. 

வெளியில் வந்திருந்த ஆளைப் பார்த்து கோபால் ‘போமோ…’ என்று மட்டும் சொன்னான். அவன், வலது பக்கமாகக் கையைக் காட்டி ஏதோ சொல்ல, இவன் நெஞ்சில் கையை வைத்து, தலையைத் தாழ்த்தி, நன்றியைக் காட்டிவிட்டுச் சென்றான்.

‘இந்த இடத்திற்கா தம்பி வந்தான்? யாருடன் வந்திருப்பான்? தனியாகவா? இந்தக் காட்டிற்குள் வர எப்படி துணிந்தான்? என்ன தேவை அவனை இப்படியெல்லாம் ஆட்டிப் படைத்தது?’  கோபாலுக்கு நினைக்க திகிலாய் இருந்தது.

இருட்டு, காட்டில் மேல் மெல்ல அப்பத் தொடங்கியிருந்தது. எட்டிப் பார்த்தப் பௌர்ணமியின் வெளிச்சம் இன்னும் பூரணப் பிரகாசத்தை எட்டவில்லை. அவன், ‘குத்தாங்கட்டையை’ அடைந்தபோது இருட்டியிருந்தது. குத்தாங்கட்டையைச் சுற்றிலும் கார்பைட் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. முப்பதடிக்கும் குறையாத அகலத்தில் அச்சுறுத்திய குத்தாங்கட்டை, நிலக்கரி நிறத்தில் பிரமாண்டமாய் காட்சி தந்தது. அதன் உயரம் பார்வைக்குப் பிடிபடாதபடிக்குத் தகரக் கூரை மறைத்தது.  ஏற்கெனவே, அங்கே பத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

குத்தாங்கட்டையோடு ஒரு கொட்டாய் இணைந்திருந்தது. குத்தாங்கட்டையின் அடிப்பாகத்தில் முதலைத் தோலால் போர்த்தப்பட்டது போல் தெரிந்த மேடையில் போமோ திறந்த மார்புடன் உட்கார்ந்திருந்தார். பக்கத்திலேயே மூங்கில் உறைக்குள் பாராங்கத்தி! புஜமும் மார்பும் திரண்டிருந்தன. தலையில் ஒரு துணியைச் சுற்றியிருந்தார். அந்தத் துணியில் திசைக்கொன்றாய் நான்கு இலைகள் சொருகப்பட்டிருந்தன. அவரின் புஜத்தில் நம்ப முடியாத அதிசயமாய் மரங்கொத்திப் பறவையொன்று உட்கார்ந்து, அங்கு நடப்பதைக் கண்காணிப்பது போல் தலையை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவருக்குப் பக்கத்திலேயே கட்டையில் செதுக்கப்பட்டு, ஒன்றரையடி உயரத்தில் மூன்று அமானுஷ்ய உருவங்கள் சற்று உயரமான மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒன்றின் கண்கள், உருவத்திற்குப் பொருந்தாத அளவில் பெரியதாகச் சிவப்பு வர்ணத்தில் பயமுறுத்திக் கொண்டிருந்தது. இன்னொன்று, சினிமாவில் காட்டப்படும் வேற்றுக்கிரக வாசியின் முகத்தை ஒத்திருந்தது. மூன்றாவது, அடையாளம் தெரியாத மிருகத்தின் சாயலில் இருந்தது. போமோவைப் பார்க்கப் போனவர்கள் முதலில் அந்த உருவங்களுக்கு வணக்கம் செலுத்திய பின்னரே அவருக்கு வணக்கம் செலுத்தினர். கோபால், பக்கத்திலிருந்தவனிடம் அந்த உருவங்களைப் பற்றிக் கேட்க நினைத்தான். ஆனால், யாருமே அணுகக்கூடிய சகஜபாவத்தில் இல்லை. அவை, ஜின்னாகவோ, தோயோலாகவோ, ஓராங் மீன்ஞாக் ஆகவோ இருக்குமோ என்று இவனுக்கு ஒரே பீதியாய் இருந்தது. சக்காய்க்காரர்களின் அமானுஷ்ய சடங்கொன்றில் அகப்பட்டுக் கொண்டது போல் இவன், மிரட்சியுடன் பார்த்தான். 

ஒரு நேரத்திற்கு ஒருவர் அல்லது ஒரு குடும்பம் மட்டுமே போமோவைப் பார்க்க அனுமதிக்கப்பட்டது. போமோ சக்காய்ப் பாஷையில் சொன்னதை அருகிலிருந்த உதவியாளன் மலாய் மொழியில் உரியவருக்கு விளக்கிச் சொன்னான். ஆனால், போமோ எந்தவித அமானுஷ்ய சக்திக்கும் ஆட்பட்டவராய்த் தெரியவில்லை. அடிக்கடி, அருகிலிருந்த உருவங்களை வணங்கிவிட்டு கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து போவது மட்டும் தெரிந்தது. பின்னர், கரங்களைக் குவித்து ஏதோ ஓதி, வந்தவர்மேல் ஊதியடித்து, பச்சை மற்றும் காய்ந்த தாவரங்களால் பின்னப்பட்ட கயிற்றோலையைக் கழுத்தில் மாட்டி விட்டார். அதில் சில பறவை இறகுகளும் காணப்பட்டன. 

சிலர், தமது பிரச்சினையைப் போமோவிடம் சொல்லி எதையோ காட்டினர். அவர், உதவியாளனிடம் ஏதோ சொல்ல, அவன் அவர்களைக் குத்தாங்கட்டைக்குப் பின்னால் அழைத்துச் சென்றான். அவர்களைத் தொடர்ந்து மரங்கொத்தி பறவையும் எங்கோ பறந்து செல்ல, கொஞ்ச நேரத்தில் அது, மரத்தைக் கொத்தும் சத்தம் கேட்டது. பின்னர், அது மீண்டும் வந்து போமோவின் புஜத்தில் அமர்ந்து அவரைத் திரும்பிப் பார்த்தது. அவர், பக்கதிலிருந்த கூண்டிலிருந்து ‘புள்ளத்தாச்சி பூச்சி’ ஒன்றைப் பிடித்து அதற்குக் கொத்தக் கொடுத்து, நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கோபால், தன் பாக்கெட்டிலிருந்த செல்வத்தின் படத்தைப் பார்த்து மீண்டும் உறுதி செய்து கொண்டான்.

கடைசியாக, இவன் அழைக்கப்பட்டான். எழுந்து பதற்றத்துடன் போமோவின் முன்னால் போய் அமர்ந்து, முதலில் அந்த உருவங்களுக்குச் சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்துவிட்டு, தொடர்ந்து போமோவிற்குக் கைகள் கூப்பி வணக்கம் சொன்னான். அவர், தலையை அசைத்து மரியாதையை ஏற்றுக் கொண்டு இவனுடைய கண்களுக்குள் பார்த்தார். அந்தப் பார்வையின் ஊடுருவலை உணர முடிந்தது போல் இவனுடைய இமைகள் படபடத்துக் கொண்டன. அவரின் உதட்டில் படர்ந்த புன்னகை, இவனுக்கு ஆரத்தழுவிக் கொண்ட உணர்வைத் தந்தது. மரங்கொத்தி, தலையைச் சாய்த்து இவனைப் பார்த்தது.

கோபால், பாக்கெட்டிலிருந்த புகைப்படத்தை உதவியாளனிடம் கொடுத்து, விஷயத்தைச் சொன்னான்.

“இவன் பெயர் செல்வம். நான்கு வருடங்களாக இவனைக் காணவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் எதற்காகவோ இவன் உங்களைப் பார்க்க வந்ததாக தகவல் கிடைத்தது. அதனால்தான் இங்கே வந்தேன்…”

உதவியாளன், அதை அப்படியே போமோவிடம் விளக்கிவிட்டு, போட்டோவை அவரிடம் கொடுத்தான்.

அவர், போட்டோவையே கொஞ்ச நேரம் கூர்ந்து பார்த்தார். மரங்கொத்தியையும் பார்க்கச் சொல்லி கேட்டுக் கொண்டது போல் அதுவும் தலையை அசைத்து போட்டோ பக்கம் பார்த்தது. போமோவின் காதில் ஏதோ ரகசியம் சொல்வது போல் நாக்கை நீட்டி, அலகை அசைத்தது.

அவர், மரங்கொத்தி சொன்ன செய்தியை ஆமோதிப்பது போல் தலையை அசைத்துவிட்டு, ஒரு முறை  மேடையிலிருந்த உருவங்களைப் பார்த்து வணங்கிவிட்டு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பின்னர், கோபாலைப் பார்த்தபடி உதவியாளனிடம் சொன்னார்.

“ஆமாம் வந்திருந்தான். மனதில் பெரும் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த ரகசியம் ஒன்றை இறக்கி வைக்க வேண்டுமென்று வந்தான். தனது பாவத்தையும் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அழுதான். பாவம், அந்த ரகசியத்தைச் சுமக்க முடியாமல் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தான். அது சரி! அவன் உங்களுக்கு என்ன வேண்டும்?”  

“நான், அவனுடைய அண்ணன்…” என்று கோபால் பாசம் பொங்கச் சொன்னான்.  

“ஓ… நல்லது. இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?. நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” 

“அவனுக்கு அம்மா, அப்பா இருவருமே கிடையாது. நானும் என் மனைவியும்தான் அவனுக்கு எல்லாம். எங்களிடம்கூட ஒன்றும் சொல்லாமல் காணாமல் போகும்படிக்கு அவனுடைய வேதனைதான் என்ன? அதை தெரிந்து கொண்டு அவனுக்கு எப்படியாவது உதவி செய்து, அவனை எங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். அவன் யாரோ ஒரு பெண்ணை மிகவும் விரும்பியதாக அறிந்தோம். அதுதான் அவனுடைய வேதனைக்கெல்லாம் காரணமென்றால் எப்பாடு பட்டாவது அதை தீர்த்து வைக்க நாங்கள் விரும்புகிறோம். அதற்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும்…” என்று போமோவிடம் வேண்டினான்.

போமோ, கோபாலை இரக்கத்துடன் பார்த்தார்.

“அது, அவன் இறக்கி வைத்த பாரம்! அதை நீங்கள் சுமக்கப் போகிறேன் என்கிறீர்கள். தாங்குவீர்களா?”

“அவன் என் தம்பி. அவனுடைய நலனுக்காக நான் எதையும் செய்ய தயார்..” என்றான் கோபால்.

“சரி, அதனால் அவனுக்கு ஒரு நன்மை நடக்குமென்றால் அப்படியே ஆகுக!” போமோ இவனுக்கு நல்லாசிகள் வழங்கினார்.

இவன், கரங்கள் கூப்பி நன்றி சொன்னான்.

அவர் ஒரு முறை, புஜத்திலிருந்த மரங்கொத்தியைப் பார்த்தார். அதுவும் தலையை திருப்பி அவரைப் பார்த்தது. உதவியாளரைப் பார்த்தான். அவன், தலையசைத்துத் தன் ஆயத்தத்தை உணர்த்தினான்.

திடீரென்று, கோபாலுக்கு ஒரு சந்தேகம்.

“என் தம்பி இன்னும் உயிருடன்தானே இருக்கிறான்?”  பரபரப்புடன் கேட்டான்.

“தவறான தகவலைத் தந்து யாருடைய நம்பிக்கையையும் நாங்கள் குழைக்க விரும்புவதில்லை,” என்று போமோ சொன்னது இவனைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கோபாலைத் தன்னுடன் வரச்சொல்லி உதவியாளன் குத்தாங்கட்டைக்குப் பின்னால் போனான். குத்தாங்கட்டையின் பின்புறத் தோற்றம் இன்னும் பிரமாண்டமாய் அந்த இடத்தையே ஆக்கிரமித்து, அரவணைத்துக் கொண்டிருந்தது. அந்த இடமெங்கும் கார்பைட் விளக்கு ஏற்றப்பட்டு எரிந்து கொண்டிருந்தன. கோபால், மேலே அன்னாந்து பார்த்தான். குத்தாங்க்கட்டையின் உயரம் பார்வையை மறைத்தது. ஆகாசம் தெரியாததால் பொளர்ணமி நிலவும் தெரியவில்லை.

ஐந்தடி உயரத்திற்குக் குத்தாங்கட்டை எங்கும் துளைகள் காணப்பட்டன. அவற்றில் சில துளைகளின் வாயில் களிமண்ணால் மூடப்பட்டு காய்ந்துகிடப்பது தெரிந்தது. இன்னும் சிலவோ கதவு திறந்துக் கிடக்கும் வாசலைப் போல் களிமண் அகற்றப்பட்டுக் கிடந்தன. ஒவ்வொரு துவாரத்தின் மேலும் ஏதோ எழுதப்பட்டிருந்தது. இவன் நின்ற இடத்திலிருந்து அது என்னவென்று தெரியவில்லை.

அப்போது, உதவியாளன் இவனுடைய தம்பியின் பெயரைக் கேட்டு மறு உறுதிபடுத்திக் கொண்டான்.

“செல்வம்.”

அவன், அடைக்கப்பட்டிருந்த துவாரங்களின் மேல் எழுதப்பட்டிருந்த எழுத்தைப் படித்துப் பார்த்து, ஒன்றை சுட்டிக் காட்டி,

“இதுதான்!” என்றான்.

கோபால் அருகில் சென்று பார்த்தான். குறியீடா அல்லது ஒரு மொழியின் எழுத்துக்களா என்பது இவனுக்குத்  தெரியவில்லை.

உதவியாளன் மேலே பார்த்தான். மரங்கொத்திப் பறவை, பார்வைக்குத் தெரியும் உயரத்தில் குத்தாங்கட்டையைப் பற்றிக் கொண்டிருந்தது. அவன், ஒரு கொட்டாங் குச்சியில் தண்ணீர் கொண்டு, துவாரத்தில் அடித்துவிட்டு, இவனிடம் ஒரு கூர்மையான மூங்கிள் குச்சியைக் கொடுத்து, களிமண்ணை விளக்கிவிட்டு, துவாரத்தில் காதை வைத்துக் கேட்கச் சொல்லிவிட்டுப் போனான்.

கோபால், மூங்கிலால் களிமண்ணைக் குத்திக் கிளறினான். உள்ளே, தண்ணீர் நனைக்காத களிமண், இவ்வளவு காலமாக ரகசியத்தைக் கட்டிக் காத்து வந்ததால் இறுகிப் போனதுபோல் கட்டித் தட்டிக் கிடந்தது. ஒருவாறாக, மண் முழுவதையும் விலக்கிவிட்டு, துவாரத்தில் காதை வைத்தபோது ரகசியத்தைச் சொல்லத் தொடங்குவதுபோல் மேலே மரங்கொத்தி, குத்தாங்கட்டையைக் கொத்தத் தொடங்கியது.

செல்வம், விம்மி அழுத்துக்கொண்டிருந்தான்.

நான்கு வடங்களுக்குப் பிறகு செவிமடுத்த அன்பு தம்பியின் குரல் அழுதுக் கொண்டிருப்பதைக் கேட்க கோபாலுக்கு நெஞ்சு பதறியது. அவனின் கஷ்டம் தெரியாமல் தவித்தான். தன்னால் ஏதும் செய்ய முடியாத இயலாமையில் முஸ்டிகள் தாமாகவே முருக்கேறி நரம்புகள் புடைத்துக் கொண்டன.

மரங்கொத்தி, தொடர்ந்து கொத்திக் கொண்டிருந்தது.

தம்பி, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்… தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தான்… மன்னிப்பு கோரி மன்றாடினான்.

மரங்கொத்தி குத்தாங்கட்டையைக் கொத்துவது நின்றபோது, செல்வத்தின் குரல் நின்றுப்போயிருந்தது.

கோபாலினால் கனத்தைத் தாங்க முடியவில்லை. குத்தாங்கட்டையில் சாய்ந்து, நீண்ட நேரம், மரத்துப்போய் நின்றான். ஆனால், இதயத்தின் ரணமாய் சுரந்துகொண்டிருந்த கண்ணீர், துடைத்துவிட விரல்களில்லாமல் வடிந்து கொண்டேயிருந்தது. இவனுக்கு வந்த திசை தெரியாமல் போனது.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர், எல்லா உள்ளூர்த் தமிழ்ப் பத்திரிகைகளிலும் கோபாலின் படம் ‘காணவில்லை’ எனும் அறிவிப்புடன் பிரசுரமாகி, பொதுமக்களின் உதவியைக் கோரியது.

4 comments for “குத்தாங்கட்டை ரகசியம்

  1. vijayalakshmi
    March 4, 2024 at 8:14 am

    கதையில் சூழல் வர்ணனை அருமை. கதை சொல்லும் விதம் சுவாரஸ்யம். என்ன ஆனது செல்வதிற்கு என்பதை ஓரளவு யூகிக்க முடிந்தாலும், நம்பிக்கை இழந்த மனம் நாடும் இடம் என்பது திகில் தான். வாழ்த்துகள் ஸ்ரீகாந்த்..
    ஸ்ரீவிஜி

  2. March 4, 2024 at 2:40 pm

    அவநம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் சுமக்க நேரும் பெரும்பாலான மனிதர்கள் அறிவியல் உண்மைகளை அறிவுப்பூர்வமான முடிவுகளை விவேகமான சிந்தனைகளை மறுதலித்துவிட்டு அமானுடத்தை நாடுவதும் அதன் மீது சாய்ந்து சற்று ஆவாசுவாசப்பட்டு ஆறுதல் தேடிக்கொள்வதையும் மையமிடும் கதை. நல்ல கதை .

  3. Ramasubramanian
    March 22, 2024 at 4:16 pm

    ரிஷி மூலம் கதையின் கரு போல் இருந்தது.குதாங்காட்டு இடப்பெயர். மலேயா பின்னணியில் நான் படித்த நல்ல சிறுகதை.

  4. இராஜேஸ் இராமசாமி
    April 15, 2024 at 5:51 pm

    ஆதியுணர்வுகளில் முதன்மையானது காமம். அதன் திசையும் விசையும் பிறழும் பொழுது கொண்டு சேர்க்கும் உளச்சிக்கல்களும் கோளாறுகளும், விமோசனத்திற்கு அப்பாற்பட்டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...