மூன்று குறுங்கதைகள்

1. நகக்குறி

என் வக்கீல் நண்பன் பாண்டியன் நகரத்தில் குடியிருக்கிறான். அவன் தாய் தந்தையர், குடும்ப உறுப்பினர்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள். உள்ளடங்கிய கிராமம். அவர்கள் வசிக்கும் வீட்டை அடைய நல்ல போக்குவரத்து வசதி இல்லை. சாலைகள் மோசமாக இருக்கும். காரை நிறுத்திவிட்டுக் குறுக்கு வழியில் வயல்களின் வரப்பு வழியாக அவர்கள் இருப்பிடத்திற்குப் பாண்டியன் கூட்டிச் சென்றான். தற்போது தொன்னூறு வயதான அவன் தந்தை மரணப் படுக்கையில் இருக்கிறார். ஞாபக சக்தி இல்லை. திடீரென்று கண்விழித்து, “பொன்னனையாளைக் கும்பிடுங்க” என்று சொல்லிவிட்டு, நினைவற்ற, பேச்சற்ற நிலைக்குச் சென்றுவிடுவார். எப்போது அவருக்கு விழிப்பு வரும் என்று அறிய முடியாது. விழிப்பு வரும்போது, “பொன்னனையாளைக் கும்பிடுங்க” என்பார். வயது தொன்னூறுக்கு மேல் என்றான் நண்பன். நோய் இல்லை. முதுமை ஆகி உடல் மரணத்தை நோக்கிக் கிடக்கிறது. பால் ஊற்றிப் பார்த்தார்கள். உயிர் பிரியவில்லை.

நான் அவரைப் பார்க்க விரும்பியதால் என்னைப் பாண்டியன் அவனது தந்தை இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறான்.

வீட்டை அடைந்தோம். பாண்டியனின் தந்தை படுக்கையில் மல்லாக்கப் படுத்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. எப்போது கண்கள் திறந்து அவர் அந்தச் சொற்களைச் சொல்வார் என்பது தெரியவில்லை. அசையாமல் கிடந்தார். சற்றுத் தள்ளி இருந்த நாற்காலிகளில் நானும் பாண்டியனும் உட்கார்ந்து, நோய்கள் பற்றியும் முதுமை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். “அந்தக் காலத்தில் முதுமக்கள்தாழி என்று ஒன்று இருந்தது. முதுமையடைந்தவர்களை அதற்குள் வைத்து மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். தற்காலத்தில் அது கருணையற்ற செயல். இப்போது அவ்வாறு செய்ய சட்ட அங்கீகாரம் கிடையாது” என்றான் பாண்டியன். நான் பொன்னனையாள் பற்றி கேட்டேன். “திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு படலத்தில் இந்தப் பொன்னனையாள் வருகிறார். புஷ்பவனேஸ்வரர் கோயில் சம்பந்தப்பட்ட படலம் அது. அந்தக் கோயில் திருப்புவனத்தில் உள்ளது” என்றான்.

2

பொன்னனையாள் எனும் உருத்திரக்கணிகையர் குலப் பெண் இரவு இருள் நீங்கும் முன் எழுந்து நீராடி நாயனார் அடி அர்ச்சனையும் நியமும் நடத்தி அடியார்களுக்கு இன்சுவை ஊன் அருத்தி எஞ்சியது அருந்துவதை நியமமாகக் கொண்டவள். சித்தர் வடிவில் சிவன் தோன்றி நகை அரும்ப நின்று அருட்கண்ணால் நோக்க, அவள் அருள்வலைப்பட்டாள். மாவடு நேர் விழியாய், பெரு வனப்பினைத் தாங்கும் உன் இடை இளைத்ததன் நோக்கம் என்ன என அவர் வினவ, முகிழ் முலைக்கொடி தாழ்ந்து அடியேனுக்கு மெலிவு இல்லை, என் நாயகன் சிவன் திருவுருவைப் பொன்னில் காண ஆசையாய் மனத்தில் உருச் சமைத்தனன். வருபொருள் அனைத்தும் பூசைக்கும் பசித்தோர் உண்டிக்கும் போக மிஞ்சியது ஏதுமில்லை என்று பதிலுரைத்தாள். செல்வம், மெய், இளமை நிலை இல்லாதவை என அறிந்த துணிந்த பெண்ணே, உன் வசம் உள்ள உலோகங்கள் அனைத்தையும் கொணர்க, அவை அனைத்தும் பொன்னாய் மாறும் ரசவித்தைப் பயன் அளிக்கக் காண்பாய் என்ற சித்தர் அவ்வாறே செய்து சிறந்த மாடங்கள் கொண்ட மதுரையை நோக்கி மறைந்து போயினார்.

பொன் கொண்டு செய்த சிவனின் வடிவ வனப்பினை நோக்கி அழகிய பிரானோ எனக் கூவி அள்ளி முத்தம் கொண்டு அன்பில் ஆட்பட்ட பிரானைப் பிரதிஷ்டை செய்து தேர் நடத்தினாள், பொன்னனையாள்.

நையும் நுண் இடையுடைய பொன்னனையாள், நாயகனின் கபோலத்தில் இட்ட நகக்குறி பொன்னில் படிந்து மின்னியது. சிவன், நடராஜன் வடிவமெடுத்துத் திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென, திருமுடி நீல ஒளி பளீர் பளீரென, திமி தக திரிகிட தோம் என மத்தளம் அதிர, சிவகாமி மணாளனாகத் திருச்சிற்றம்பலம் தனில் புன்னகையோடு இடதுபாதம் தூக்கி ஆட பொன்னனையாள் வீடு பேறடைந்தாள்.

3

பாண்டியனின் தந்தை மரணம் அடைந்துவிட்டார். சில நாட்கள் கழித்து, தந்தையின் விருப்பப்படி, பொன்னனையாளை வீட்டில் ஆவாஹனம் செய்து புதுச்சேலை, பண்டங்கள் படைத்து பாண்டியன் குடும்பத்தார் வணங்கினார்கள். நான் சென்றிருந்தேன்.

2. கனவுக் காட்சி

இப்படி ஒரு கனவு வரும் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய கல்லூரிப் பருவத்தில் நான் விரும்பிய ரஞ்சிதாவைக் கனவில் கண்டேன். கனவினூடே நான் பெரும் பரவசத்தை உணர்ந்தேன். அவளின் அம்மாவும் ஒரு தருணத்தில் வந்தார். ரஞ்சிதாவை நான் காதலித்தேன். அவள் காதலித்தாளா என்று தெரியவில்லை. அவள் கல்லூரிக்குச் செல்லும்போது நான் சாலையில் நின்று பார்ப்பேன். அவள் என்னைப் பார்ப்பாள். இதைத்தவிர வேறு தொடர்பில்லை. இதை காதல் என்று எப்படிச் சொல்லமுடியும். அவளுக்குப் படிக்கும்போதே திருமணமாகிவிட்டது. தூரத்து உறவு என்பதால் நான் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணப் பத்திரிகை கிடைத்த நாளிலிருந்தே நான் மன அமைதி இழந்திருந்தேன். சோகக்களையுடன் அவள் திருமணத்தில் இருந்தேன். அவள் சிரிப்புடனும் அடங்காத மகிழ்ச்சியுடனும் இருந்தாள். ஏன் இப்படி சிரித்துக்கொண்டே இருக்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. நான் முகம் வெளிறிப்போய் நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்தக் கூட்டத்தில் அவள் என்னைப் பார்க்கவில்லை. என்னை அவள் மனதில் நினைத்திருந்தால் அல்லவா என்னைத் தேடியிருப்பாள். அவளின் திருமணத்திற்குப் பின் சில நாட்கள் நடைபிணம் போல இருந்தேன்.

இப்போது பலப்பல வருடங்கள் கழித்து அவள் எதற்காக, எப்படிக் கனவில் வந்தாள் என்று என் உளவியலை ஆராய்ந்தேன். ஒன்றும் புலப்படவில்லை. அந்தக் கனவில் நான் அவள் மடியில் படுத்திருந்தேன். அவள் என் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தாள். என் மனைவியின் மடியில் நான் தலை வைத்துப் படுத்ததில்லை. அதற்கெல்லாம் அவள் கூச்சப்படுவாள். நானும் அதற்கு முயன்றதில்லை. எனக்கும் அந்த ரொமான்ஸ் கூச்சத்தைத் தரும் என்பதால் அதற்காக முயலவில்லை. ஆனால் கனவில் ரஞ்சிதாவின் மடியில் படுத்திருக்கிறேன். அவ்வளவு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தேன்.

இந்தக் காட்சிக்கு இடையில் வேறு ஒரு காட்சி கனவில் வந்தது. நானும் ரஞ்சிதாவும் அருகருகே உட்கார்ந்திருந்தோம். ரஞ்சிதாவின் அம்மா எனக்குக் காபி கொடுத்தார். அவர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஏன், ரஞ்சிதாவே உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், கனவில் வருகிறாள். திரும்பவும் நான் ரஞ்சிதாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் காட்சி.

நான் கனவில் எழுந்து உட்கார்ந்திருந்தேன். “நல்லாயிருக்கியா?” என்று அவளைப் பார்த்துக் கேட்கிறேன். அவள், “நான் நல்லாயிருக்கேன். நீங்க நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்கிறாள். நான், “நல்லாயிருக்கேன்” என்று சொல்லி அவள் மடியில் மீண்டும் படுத்துக்கொண்டேன்.

பிறகு வந்த காட்சியில் சிமெண்ட் தளம் போட்ட கிணற்றடியில் நின்று நானும் ரஞ்சிதாவும் பேசிக்கொண்டிருக்கிறோம். அதுபோன்ற கிணற்றடியை நான் நிஜ வாழ்க்கையில் பார்த்ததில்லை.

இதன் பிறகு வந்த காட்சியில் காடு போல செடி, மரங்கள் உள்ள பாதைதெளிவற்ற இடத்தில் செடிகளை விலக்கி நான் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறேன். வானத்தில் ரஞ்சிதா தோன்றுகிறாள். நான் அவளைப் பார்த்து நிற்கிறேன், கனவு கலைகிறது.

‘ரஞ்சிதா இறந்துவிட்டாளோ’ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தாங்கமுடியாத துக்கம் ஏற்பட்டு என் கண்களில் நீர் வழிந்தது.

“தாத்தா ஏன் அழுவுறீங்க. அம்மா காபி போடவான்னு கேக்குது” என்றாள் என் பேத்தி. “ஒண்ணுமில்லை. ஏதோ பழைய ஞாபகம். காபி போடச் சொல்லு” என்றேன்.

3. பாதாளம்

ஒரு உதவி இயக்குநரின் உதவியோடு அன்றைய படப்பிடிப்பைக் காணச் சென்றிருந்தேன். ஒரு காலத்தில் அழகான தோற்றத்துடன் மெலிந்து அழகாக இருந்த அந்த நடிகை தன் அழகை இழந்த நிலையிலிருந்தார். முகம் உப்பியிருந்தது. எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவர்தான் இந்தப் படத்தின் கதாநாயகி. தயாரிப்பாளரும் அவர்தான். பெரிதாக நஷ்டப்பட்டு எல்லாவற்றையும் இழந்துவிடுவார் என்று நினைத்தேன். என்னைப் போன்றே வேறு சிலரும் உணர்ந்து அவரிடம் சொல்லியதை அவர் பொருட்படுத்தவில்லை என்பதை உதவி இயக்குநர் மூலம் அறிந்தேன்.

அன்று கதாநாயகி சோகமாகத் தனியாகப் பாடும் காட்சியைப் படமாக்க வேண்டும். அவர் முகக்களையே சோகமாக இருந்தது. பாடல் காட்சிக்காக அவர் முக தோரணையை மாற்ற வேண்டியதில்லை. பெரிய நடிகை. பலவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால், தன்னுடைய உண்மையான நிலையை அவர் அறியவில்லை. ஏதோ அதிர்ஷ்டம் வந்து தன்னை முன்னேற்றிவிடும் என்று நினைத்திருப்பார். தவிர இந்தப் படம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம். அதனால் ஜெயித்துவிடும் என்று நினைத்திருப்பார்.

பாடல் காட்சியைக் குளோசப் லாங்ஷாட், நடந்து செல்லும் காட்சி, நிற்கும் காட்சி என்று பல கோணங்களில் படமாக்கினார்கள். சுமார் இரண்டு மணிநேரத்துக்கு மேல் ஆகியது. உதவி இயக்குநர் என்னை நடிகைக்கு அறிமுகப்படுத்தவா என்று கேட்டார். “என்னை யார் என்று அறிமுகப்படுத்துவாய்?” என்று கேட்டேன். “எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்துவேன்,” என்றான்.

“வேண்டாம். எந்தப் பத்திரிகையில் எழுதுகிறார் என்று கேட்பார். அவருக்குத் தெரிந்த பத்திரிகைகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் எழுதும் பத்திரிகைகளைக் கூறினால் அவர் அவை பற்றி அறியாமல் என்னை மட்டமாக நினைக்கக்கூடும். என்னை ஜோசியர் என்று அறிமுகப்படுத்து. கைரேகையும் பார்ப்பார் என்று கூறு. அவர் என்மீது ஆர்வம் கொள்ளக்கூடும்,” என்றேன்.

அவர் அவ்வாறே சென்று கூறினார். நடிகை ஆர்வத்துடன் என்னைப் பார்த்தார். உதவி இயக்குநர் என்னை அழைத்தார். நடிகை சிரித்த முகத்துடன் என்னைத் தன்னுடன் உள் அறைக்குக் கூட்டிச் சென்றார். உதவி இயக்குநரை வெளியே இருக்கச் சொன்னார்.

அறையில் நாங்கள் இருவரும் எதிர் எதிரே பார்த்து உட்கார்ந்திருந்தோம். அவர் தன் உள்ளங்கையை நீட்டினார். நான் ரேகைகளைப் பார்த்தேன். அவர் விரல்களைப் பற்றி நன்றாக விரித்துப் பார்த்தேன்.

“நீங்கள் மகாராணி. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கியது. நீங்கள் இந்தத் திரை உலகை ஆட்சி செய்தீர்கள். நம்பர் ஒன்னாக இருந்தீர்கள்…” நான் சொல்வதை அவர் புன்னகையுடன் கேட்டார்.

நான் தொடர்ந்தேன். “ஆனால் மனுஷாளுக்கு எப்போது துரதிருஷ்டம் வரும் என்று தெரியாது. நாம் எப்படி மாறியிருக்கிறோம் என்று நமக்குத் தெரியாது. கிழக்கிலிருந்து கிரகம் உங்களுக்கு மேற்கே வந்துவிட்டது. செய்யும் காரியத்தில் வெற்றி கிடைப்பது சிரமம். அதிர்ஷ்டம் நிலையானது அல்ல. ஒரு கட்டத்தில் நீங்கள் திரையுலகிலிருந்து வேறு தொழிலுக்குச் சென்றிருக்க வேண்டும். கிரகநிலை மீண்டும் கிழக்கில் நிலை கொண்டிருக்கும். இப்போது லாப நோக்குச் சிரமத்தில் இருக்கிறது…” என்றேன்.

அவர் முகம் இறுகியிருந்தது. இந்தப் படம் எடுத்து மாட்டிக்கொண்டோம் என்பதை அவர் உணர்வது போலிருந்தார்.

“இந்தப் படத்தை இத்துடன் நிறுத்திப் போனது வரை நஷ்டம் என்று நினைத்தால் மீண்டு வரமுடியுமா?” என்று கேட்டேன்.

“இல்லை. நிறைய பணம் செலவழிந்துவிட்டது. கடனும் வாங்கியாகிவிட்டது. இடையில் நிறுத்தினாலும் நான் தப்பிக்க முடியாது. படத்தை முடித்து அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க வேண்டியதுதான். ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தால் நான் நல்ல மேம்பட்ட நிலைக்கு வந்துவிடுவேன்” என்றார்.

“உங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டட்டும். தினமும் தானம் செய்யுங்கள். சிறிய அளவு போதும்” என்றேன்.

“நீங்கள் சொன்னபடி செய்கிறேன்” என்று கலங்கிய கண்களுடன் நடிகை சொன்னார். நாங்கள் இருவரும் அறையிலிருந்து வெளியே வந்தோம். அவர் அடுத்த டேக்குக்கு தயாரானார். மேக்கப் பெண் வந்து நடிகைக்கு மேக்கப்பைச் சரிசெய்தார்.

உதவி இயக்குநர் என்னிடம் வந்து, “மீண்டும் அதிர்ஷ்டம் வந்து நல்ல நிலைக்கு அவர் வருவாரா?” என்று கேட்டார்.

“அவர் படுபாதாளத்தில் விழப் போகிறார். அவர் மனதின் உள்ளுணர்வு அவருக்கு இந்தச் செய்தியைச் சொல்லிக்கொண்டே இருப்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது” என்றேன்.

நான் கணித்தபடியே நடிகை படுபாதாளத்தில், எழ முடியாதவாறு விழுந்து இறந்தார்.

1 comment for “மூன்று குறுங்கதைகள்

  1. A.Karunakaran.
    March 1, 2024 at 9:42 pm

    சிறுகதைகள், நாவல், குறுங்கதைகளில் தன் நவீன எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே செல்லும் சுரேஷ்குமார இந்திரஜித் சார் … சமீபத்தில் ஆவணப்படைப்பாக ஆலயப்பிரவேசம், குழந்தை திருமணம், ராணி மங்கம்மாள் வரலாறு ஆகியவற்றை நாவலாக படைத்தார்.
    படைப்பிற்கு படைப்பு புதுத்தடம் உருவாக்கி கொண்டேயிருக்கும் அவரது படைப்புகள் தற்போது செந்தமிழ் படைப்பாக வடிவெடுத்து புராண கதாபாத்திரங்களையும் சிறுகதையாக, குறுங்கதையாக அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அகழ் இணைய இதழில் வெளியான ‘அங்கயற்கண்ணி’ சிறுகதையானது, இனிது இனிது தமிழ் இனிது என்று சொல்லத்தக்க செறிவை கொண்டு திளைக்க வைத்தது.
    அது போல் தற்போது மார்ச் வல்லினம் கலை, இலக்கிய இதழில் வெளியாகியுள்ள குறுங்கதை ‘நகக்குறி.’ இக்கதையின் ஒரு பகுதியில் இடம்பெற்ற செந்தமிழ் நடை, தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்துள்ளோம் என்று பின்னி பெடலெடுக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித் சார்.
    வல்லினத்தில் ‘நகக்குறி’ குறுங்கதையோடு ‘கனவுக்காட்சி’, ‘பாதாளம்’ ஆகிய குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டும் வழக்கம்போலான சுருங்கக்கூறும் நடை. அவற்றை நாலைந்து நிமிடத்தில் மிக எளிதாக வாசித்து, புரியக்கூடிய படைப்பை போல் தோன்றினாலும் மற்ற கதைகளை போல் மிக சிரத்தையாக பல நாட்கள் நம் மண்டையை குடையும் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...