முனி

எதிர்வீட்டுக்கு ஒரு நாயோடு அவர்கள் குடிவந்திருந்தார்கள். முதல் நாள் பால் காய்ச்சுவதற்கே முருகேசையும் லட்சுமியையும் அழைத்தார்கள்.

“சொந்த வீடா கட்டிப் பால் காய்ச்சறாங்க? வாடக வீட்டுக்கு அழப்பு வேறயா? அதுக்குப் போவோணுமா?” என்று கேட்டான் முருகேசு.

“சொந்த வீட்டுல இருக்கறமுன்னு பீத்தாதீங்க. வர்றவங்க அலுப்பசிலுப்பமான ஆள் கெடையாது. பெரிய மாளிக மாதிரி ஊடு இருக்குதாம். எதோ நேரஞ் செரியில்ல, ஊடு மாத்திக் கொஞ்ச நாளுக் குடியிருங்கன்னு சோசியகாரன் சொன்னானாமா. அதுக்காவ வந்திருக்கறாங்க,” என்றாள் லட்சுமி.

பால் காய்ச்சிய ஞாயிற்றுக்கிழமை காலையில் இருபது முப்பது பேருக்கு மேல் வந்து நிறைந்திருந்தார்கள். ‘வாடகை வீட்டிற்குக் குடிவர இப்படி ஒரு ஆடம்பரமா?’ என்று முருகேசுக்குத் தோன்றியது. லட்சுமியின் வற்புறுத்தலால் ‘சரி, தலையைக் காட்டிவிட்டு வருவோம்’ என்று தயக்கத்தோடே போய் ஒருவாய் காப்பி குடித்துவிட்டுக் கொஞ்ச நேரம் நாற்காலியில் தனியாக உட்கார்ந்திருந்தான். பேசுவதற்கு ஒரு முகமும் தெரிந்ததாக இல்லை. தெருவில் வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை. நேரெதிர் வீடு என்பதால் இவர்களுக்கு மட்டும் அழைப்பு போல. பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றும் ஒருவரின் வீடு அது. பங்களா வடிவத்தில் அமைந்த அந்த வீடு எழுந்ததைக் கண்முன் முருகேசு பார்த்திருந்தான்.

குழந்தைகள் ஓடித் தாராளமாக விளையாடும்படி சுற்றிலும் ஐந்தடி அகல இடைவெளி. அகண்ட முற்றம். பெருவரவேற்பறை. நவீனச் சமையலறை. விரிந்த உணவறை. இணைப்புக் கழிப்பறைகள் கொண்ட மூன்று படுக்கையறைகள். தலையுயரம் சுற்றுச்சுவர். ஒரே ஒரு அறை மட்டும் கொண்ட முதல் மாடி. மீதப் பகுதியெல்லாம் மொட்டை மாடி. ‘அடேங்கப்பா’ என்று ஒவ்வொரு நாளும் தோன்றும். அவ்வீடு வளர வளரத் தன் வீடு சிறுத்துப் போனதையும் உணர்ந்திருந்தான். பொதுப்பணித் துறைப் பொறியாளர், பெரிய பதவி என்பதால் கட்டுமானப் பொருட்களை எல்லாம் ஒப்பந்ததாரர்கள் இலவசமாகக் கொண்டு வந்து போடுகிறார்கள் என்று தெருவில் பேச்சிருந்தது. அதைக் கேட்கும் போது முருகேசுக்கு உவப்பாக இருந்தது.

அப்போது “லஞ்சப் பணத்துல மாளிக எழும்புது. இதெல்லாம் நெலைக்குமா?” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

“எந்தப் பணமோ! இருக்குது, கட்டறாங்க. உட்டுட்டு உங்க வேலயப் பாருங்க” என்று லட்சுமி கோபித்துச் சத்தம் போடுமளவு அதைப் பற்றித் தன்னையறியாமல் பேசியிருந்தான்.

அவன் சாபம் பலித்ததோ என்னவோ. வீடு கட்டியதோடு சரி, பொறியாளர் குடும்பம் குடியிருக்க வரவில்லை. அவருக்குப் பதவி உயர்வு கிடைத்து இடமாறுதலில் சென்றுவிட்டார். “லஞ்சம் வாங்குனதால மாத்தியிருப்பாங்க,” என்றான் முருகேசு. புதுவீட்டை வாடகைக்கு விட வேண்டியதாயிற்று.

“அவனுக்கென்ன, போற எடத்துல எல்லாம் இது மாதிரி ஒவ்வொரு வீடு கட்டுவான். ஊராங் காசப் புடுங்கிச் சொத்துச் சேக்கறதுதான” என்று முருகேசு சொன்னான். அத்தனை பெரிய வீட்டுக்குச் சாதாரணர்கள் குடிவர முடியுமா? பெரிய கைகள்தான் வருவார்கள். ரொம்ப நாள் யாரும் வராமலே காலியாகக் கிடந்தது. அப்போதெல்லாம் “மாளிகையில மனுச நடமாட்டமே இல்ல. பேய் பங்களா மாதிரி இருக்குது” என்று முருகேசு சொல்லிக் கொண்டிருந்தான்.

சில மாதங்கள் ஆகியும் யாரும் வரவில்லை என்றதும் இரவுக் காவலர் ஒருவரை வேலைக்கு வைத்தார்கள். சாயங்காலத்திலேயே அவர் வந்துவிடுவார். வீட்டைப் பெருக்குவதும் விளக்கைப் போட்டுவிட்டு முற்றத்தில் படுத்துறங்குவதும் அவர் வேலை. இப்படிச் சில மாதங்கள் கழிந்தன. அப்போது “இதுக்கு வாடக குடுக்கச் சமுத்துள்ளவன் சொந்த வீடு கட்டிக்க மாட்டானா? எவனும் வர மாட்டான்” என்றான் முருகேசு. “அதுக்கும் ஆளு இருப்பாங்க” எனப் பதில் சொன்னாள் லட்சுமி. அவள் சொன்ன மாதிரியே ஒரு குடும்பம் வந்தது.

கிட்டத்தட்ட மூன்று வருசம் குடியிருந்தார்கள். வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவு ரகசியமாக இருந்தது. அவர்கள் முகம் எதுவும் மனதில் பதியவேயில்லை. ஏதேனும் சட்டவிரோதச் செயலில் ஈடுபடுகிறார்களோ என்று முருகேசு நினைத்தான். பிரச்சினை என்றால் நம்மையும் விசாரிப்பார்களே எனப் பயமாகவும் இருந்தது. அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி என்பதால் நமக்கு எதுவும் இடைஞ்சல் வராது என்று சமாதானமும் கொண்டான். ஆசிரியர் சங்கம் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்கூட அவன் இதுவரை பங்கேற்றதில்லை. சந்தா மட்டும் தவறாமல் கொடுத்துவிடுவான். அதனால் சங்கமும் அவனை எதுவும் சொல்வதில்லை. அப்படி இருக்கும்போது என்ன பிரச்சினை வந்துவிடும்?

அதற்குப் பிறகு இன்னொரு குடும்பம் வந்தது. அப்போதும் அமைதிதான். நான்கைந்து பேர் இருந்த குடும்பம். ஆனால் பேச்சுச் சத்தம்கூட வெளியே வராது. குடும்பத்தில் சிறு சண்டை கூடவா வராது? கதவு எப்போதும் சாத்தித்தான் இருக்கும். ஜன்னல்களையும் மூடிவிட்டுச் சண்டை போடுவார்களோ? வாசலுக்கு வரும்போது எதேச்சையாக எதிர்ப்பட்டால் புன்னகைப்பார்கள். பெரிய கார் வைத்திருந்தார்கள். டிரைவரும் இருந்தார். நுழைவாயில் கதவைத் திறந்ததும் காரில் ஏறி விடுவார்கள். எதிர்வீடு என்பதற்கான அங்கீகாரமாகப் புன்னகை கிடைத்ததே தவிர ஒரு வார்த்தையும் பரிமாறிக் கொண்டதில்லை. அவர்கள் புதிய வீடு கட்டுகிறார்கள் என்றும் முடியும் வரை அதைப் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக வாடகைக்கு வந்திருக்கிறார்கள் என்றும் லட்சுமி சொல்லித்தான் தெரிந்தது. புதுமனைப் புகுவிழாவுக்குக்கூட அழைக்காமலே ஒரு நாள் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் இரண்டு வருசத்துக்கு மேல் இருந்தார்கள்.

இப்போது வந்திருப்பது மூன்றாம் குடும்பம். அழைப்பெல்லாம் வருகிறது. சகஜமாகப் பழகுவார்கள் என்று தோன்றியது. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். சொந்தக்கார ஆண்கள் வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டை போட்டிருந்தார்கள். அலங்காரப் புடவைகளில் கழுத்து நிறைய நகைகளோடு பெண்கள் நடமாடினார்கள். பெரிய கை என்பதற்கான அடையாளங்கள் எல்லாம் இருந்தன. அந்நியமாகத் தெரிந்தாலும் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசிக் கொண்டு இயல்பாக இருந்தார்கள். கார் நிறுத்துமிடத் தூணில் நாய் கட்டியிருந்தது. எல்லோரையும் கண்களைச் சுழற்றிப் பார்த்துக் கொண்டு அமைதியாகப் படுத்திருந்தது. உடல் முழுக்கச் செம்மி நிறம். வாய் பகுதி அடர்கருமை கொண்டிருந்தது. கண்களைச் சுற்றிலும் மையை இழுக்கி விட்டது போல கறுப்பு. காது நுனிகளும் கறுத்திருந்தன. எழுந்து நின்றால் மூன்றடிக்கு மேல் உயரம் இருக்கும். ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. அது எழுந்தால் பார்க்கலாம் என்று நினைத்தான். அது எழுகிற மாதிரி தெரியவில்லை. தெரிந்தவர் வந்தால் படுத்தபடியே வாலை மட்டும் ஆட்டியது.

அவன் பார்ப்பதை அதுவும் கண்டு கொண்டது. அவன் பார்வையோடு மோதும்படி அதுவும் பார்த்தது. கரு விழியும் அதைச் சுற்றியிருந்த மஞ்சள் நிறமும் நன்கு தெரியும்படி கண்களை விழித்து அவனையே பார்த்தது. கூர்மை தாங்க முடியாமல் தன் கண்களை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். அங்கிருப்பவர்கள் எல்லோரையும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது பார்த்திருக்கும். அவன் ஒருவனே அதற்குப் புதியவன். அதனால்தான் அப்படி உற்றுப் பார்க்கிறது. அதனிடம் என்னவாவது பேசி அறிமுகமாகிக் கொள்ளலாமா என்று நினைத்தான். அதன் பெயர்கூடத் தெரியாது. இப்போது யாரிடமும் கேட்பது உசிதமில்லை. நாய்களோடு அப்படிப் பழகிய அனுபவமும் இல்லை. கிளம்பி விடலாம் என்று தீவிரமாக நினைத்தான்.

லட்சுமி உள்ளே போய் பெண்களுடன் கலந்துவிட்டாள். அவள் வருவாள் என்று எதிர்பார்த்துக் கொஞ்ச நேரம் இருந்தான். காலை உணவும் முடித்துத்தான் வருவாள் போலிருந்தது. எழுந்து வாசலுக்கு வருவது போல பாவனையோடு வந்து அப்படியே தன் வீட்டுக்குள் புகுந்தான். தெற்கு வடக்கில் நேராக வரும் தெரு இடப்பக்கம் வளைந்து பிறகு உடனே வலப்பக்கம் திரும்பிவிடும். முருகேசுவின் வீட்டில் மேற்குத் திசையில் ஒரு வாசல் உண்டு. தெரு வளைவில் எதிர்வீடு இருந்ததால் இரண்டு வீட்டு நுழைவாயிலும் நேருக்கு நேர் அமைந்திருந்தன. இரண்டு வீட்டுக்கும் நடுவில் தெரு. நுழைவாயில் நேராக இருந்தாலும் வீட்டின் பிற பகுதிகள் எதிரெதிர்த் திசையில் இருந்தன. எதிர்வீட்டிலிருந்து சத்தமே இல்லாமல் தன் வீட்டுக்குள் நுழைந்தான் முருகேசு. பிள்ளைகள் இருவருமே இல்லை. ஒருத்தி கல்லூரியில் முதலாம் ஆண்டு. இன்னொருத்தி பத்தாம் வகுப்பு. இருவரும் விடுதியில் இருந்தார்கள். பெரிய டம்ளரில் குடித்த காப்பி வயிறு முட்ட இருந்தது. அப்படியே படுக்கையில் விழுந்து விடுமுறை நாள் தூக்கத்தைத் தொடர்ந்தான். வெகுநேரம் கழித்து வந்து எழுப்பிய லட்சுமியிடம் பல தகவல்கள் இருந்தன.

“இன்னங் கொஞ்ச நேரம் இருந்திருந்தா டிபன் சாப்புட்டுட்டு வந்திருக்கலாமுல்ல? இப்ப உங்க ஒருத்தருக்காவ நான் செய்யோணும். அங்க விதவிதமா டிபன் இருக்குது. ஓட்டல்ல இருந்து ஆர்டர் பண்ணியிருக்கறாங்க. இப்பப் போனாக்கூடச் சாப்படலாம். நீங்க கெவுரவம் பாக்கற ஆளு. போவீங்களா? செரி, பசிச்சாச் சொல்லுங்க. ராத்திரி அரச்ச சட்னி இருக்குது, ரண்டு தோச ஊத்தித் தர்றன்” என்றவள் அவன் கேட்கிறானா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல் படபடவென்று விவரங்களைச் சொன்னாள்.

கிராமத்தில் பெரிய மாடி வீடும் தோட்டமும் அவர்களுக்கு இருந்தன. அதற்குள்ளேயே ஒரு லட்சம் கோழிகளுக்கு மேல் கொண்டிருந்த பெரிய கோழிப்பண்ணையும் வைத்திருந்தார்கள். ஒரு மகள்; ஒரு மகன். மகள் தம் குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். மருகனுக்குப் பன்னாட்டு நிறுவனத்தில் ஐடி வேலை. மகனுக்கும் திருமணமாகி விட்டது. ஐந்தாறு முட்டை வண்டிகள் ஓடுகின்றன. நாமக்கல் பண்ணைகளில் முட்டை எடுத்து அவற்றைச் சில நகரங்களுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கும் 407 வண்டிகள். நாமக்கல் – மோகனூர் சாலை புறநகர்ப் பகுதியில் சொந்த வீடு ஒன்று இருக்கிறது. அது அலுவலகமாகப் பயன்படுகிறது.

பத்துப் பதினைந்து ஆட்கள் வேலை செய்யும் கோழிப்பண்ணையை அப்பனும் அம்மாவும் பார்த்துக் கொள்கிறார்கள். முட்டை வண்டிகள் மகன் பொறுப்பு. எல்லோரும் கிராமத்துத் தோட்ட வீட்டில்தான் குடியிருந்தார்கள். மகனுக்கு ஐந்து வயதில் ஒரு பையன். மகன், மருமகள், பேரன் ஆகியோர்தான் இப்போது எதிர்வீட்டுக்குக் குடி வந்திருக்கிறார்கள். பேரனைச் சேர்த்திருக்கும் பள்ளிக்குப் போவதற்கு நகரத்தில் குடியிருப்பதுதான் சரி வரும் என்பதால் இந்த மாற்றம். அலுவலகம் இருக்கும் சொந்த வீட்டிலேயே மாடியில் கட்டிக் குடியிருக்கலாம் என்றால் மருமகளுக்கு அது பிடிக்கவில்லை. அலுவலகத்திற்கு யார் யாரோ வருவார்கள், அங்கே எப்படிக் குடியிருப்பது என்று சொல்லிவிட்டாள்.

“ஒல்லிப் பிச்சானா இருந்தாலும் பொம்பள கெட்டி. பாத்தாலே தெரீது” என்று மருமகளைப் பற்றிய தன் அனுமானத்தை லட்சுமி சொன்னாள்.

வியாபாரத்தில் கொஞ்சம் நஷ்டம் வந்துவிட்டது என்றும் அதனால் சொந்த வீட்டில் கொஞ்ச நாளுக்குக் குடியிருக்க வேண்டாம் என்றும் ஜோசியகாரன் சொல்லிவிட்டதாகவும் ரகசியமாகச் சொந்தக்காரப் பெண்ணொருத்தி சொன்னதையும் லட்சுமி கேட்டு வந்திருந்தாள்.

“நஷ்டமுன்னா இவங்களுக்கு என்ன தெரீமா? லாபத்துல கொஞ்சம் கொறஞ்சா அது நஷ்டம்” என்றாள் லட்சுமி. யாராவது அதைச் சொல்லிக் கேட்டு வந்திருப்பாளா, அவர்கள் சொன்னதை வைத்து அவளே ஊகித்திருப்பாளா என்று தெரியவில்லை. எப்படியோ தங்களுக்குப் பழக ஏற்றவர்கள் இல்லை என்று முருகேசு நினைத்தான்.

அன்றைக்கு இரவே பிரச்சினை தொடங்கிவிட்டது. நாயை அவிழ்த்துச் சுற்றுச் சுவருக்குள் திரியும்படி விட்டிருந்தார்கள். புது இடம் என்பதால் சுற்றுச்சுவர் இரும்புக் கதவுக்கு அருகில் நாய் வந்து நின்றுகொண்டு தெருவில் சிறு சத்தம் கேட்டாலும் கத்திக் குரைத்து ஆர்ப்பாட்டம் செய்தது. இரும்புக் கதவின் மேல் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு பரபரவென்று சத்தம் எழுப்பியது. வீட்டைச் சுற்றிலும் ஓடி ஓடி வந்தது. இரவில் அது மூச்சிரைக்கும் ஒலி பயங்கரமாகக் கேட்டது. அது கோடைகாலம் என்பதால் கொசுவலை அடித்த ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு வரவேற்பறையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த முருகேசுக்கு நாயின் இரைச்சல் பெரும் தொந்தரவாக இருந்தது.

புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான். தூக்கத்தில் கண் கிறங்கும் போது லொள்லொள் சத்தம் மண்டைக்குள் திடுமெனப் புகுந்து எழுப்பியது. காலையில் பள்ளிக்குப் போக முடியுமா என்று பயமாகிவிட்டது. ஜன்னல்களைச் சாத்திவிட்டு மின்விசிறியை அதிவேகமாக வைத்துப் படுத்தான். அப்போதும் புழுக்கம் தாங்க முடியவில்லை. மின்விசிறிச் சத்தம் மிகுதியாக இருந்தால் அதுவும் அவனுக்குப் பிடிக்காது. மனைவி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் போய் படுத்துப் பார்த்தான். சுவர்கள் நெருங்கி அழுத்துவது போலிருந்தது.

வெளியே வந்து தன் வீட்டு நுழைவாயில் அருகில் நின்று எதிர்வீட்டைப் பார்த்தான். அவன் வந்த அரவம் கேட்டு வாய் திறந்து ‘கெஸ்கெஸ்’ என்று மூச்சிரைத்துக் கொண்டு இரும்புக் கதவின் சந்துகளில் நாய் அவனைப் பார்த்துக் குரைத்தது. ஒரு குரைப்பு; சிறு இடைவெளி. மறுபடியும் குரைப்பு; இடைவெளி. இப்படித் தொடர்ந்தது. திருடனைக் காட்டிக் கொடுக்கும் குரைப்பாக அது இருக்குமோ என்று சந்தேகம் வரச் சட்டென்று வீட்டுக்குள் வந்துவிட்டான். படுக்கையறையில் இருந்த ஏசியைப் போட்டதும் கொஞ்ச நேரத்தில் அறை முழுவதும் குளுமை கூடியது. இப்படியே இரவு முழுவதும் ஓடினால் மின்கட்டணம் எகிறிவிடும். பொறுத்திருந்து குளுமை அழுந்தப் படிந்ததும் ஏசியை நிறுத்திவிட்டுத் தூங்க முயன்றான். கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான். வெகுநேரம் கழித்துக் குளுமை இறங்கியதும் ஒரு முறை விழிப்பு வந்தது. எழுந்து ஏசியைப் போட்டுக் குளுமையூட்டியை நிறுத்திவிட்டு மீண்டும் தூங்கினான். இப்படி மூன்று முறை செய்ய வேண்டியிருந்தது.

ஏதோ ஒரு வகையில் தூங்கினாலும் காலையில் கண் எரிச்சல் போகவில்லை. மனைவியிடம் விவரம் சொன்னான்.

“உள்ள வந்து படுக்காத அதென்ன ஹால்ல படுத்துத் தூங்கற பழக்கம்? இனியாச்சும் உள்ள வந்து படுங்க” என்றாள்.

“நாய் தொல்லைன்னு நாஞ் சொல்றது உங்காதுல கொஞ்சங்கூட ஏறலயா?” என்று கோபத்துடன் கேட்டான் முருகேசு.

“நாயிருந்தா நல்லதுதானே? நாய்க்குப் பயந்துக்கிட்டுத் திருடனெல்லாம் வர மாட்டானில்ல?” என்றாள் அவள்.

“ஆமா. இதுக்கு முன்னால வாராவாரம் திருட்டு நடந்துச்சா?”

“அப்பத் தெருவுல கம்மியாத்தான் வீடுங்க இருந்துச்சு. இப்பச் சனம் பெருத்துப் போகப்போகப் பயமாயிருக்குதில்ல?”
மனைவியிடம் பேசிப் பிரயோசனம் இல்லை என்று வெளியே போய் பல் துலக்கினான். அங்கே ஒரு குளியலறையும் கழிப்பறையும் இருந்தன. காலார நடந்து கொண்டு பல் துலக்குவது அவனுக்குப் பிடிக்கும். அப்போது நாயைப் பிடித்துக் கொண்டு தெருவில் அவன் வந்தான். முருகேசைப் பார்த்து லேசாகச் சிரித்தான். நடைப்பயிற்சிக்கான உடையோடு ஒரு கையில் நாய் சங்கிலியைப் பிடித்தபடி அவன் நின்று முருகேசுவிடம் பேச்சுக் கொடுத்தான்.

“காலையில நாயப் புடிச்சிக்கிட்டு ஒரு நட போயிட்டு வந்திருவீங்களா?” என்று பேச்சைத் தொடங்கினான் முருகேசு.

“முனியச் சொல்றீங்களா? ஆமா, அவனக் காலையில வெளிய கூட்டிக்கிட்டுப் போயே ஆவோணும். நாள் முழுக்க அப்பத்தான் பேசாத இருப்பான்” என்றான் அவன்.

அது ஆண் நாய், பெயர் முனி எனத் தெரிந்து கொண்ட முருகேசு அதை உற்றுப் பார்த்தான். வாலை மேலே தூக்கி வட்டம் போல சுருட்டிக் கொண்டு தலையை உயர்த்தி நின்றது அது. அகலத் திறந்த வாயிலிருந்து நாக்கு நீளத் தொங்கியது. முனியப்பன் சாமியின் தொங்கும் நாக்கு நினைவுக்கு வந்தது. சுற்றிலும் அலைபாய்ந்த நாயின் பார்வை அவன் மேல் ஒரு கணம் நிலை கொண்டு மீண்டும் வெளியே பாய்ந்தது. விட்டால் எதையாவது பாய்ந்து பிடித்துவிடும் வேட்கையுடன் இருப்பதாகத் தோன்றியது.

“முனியா? நாய்க்கு இப்படிக்கூடப் பேரு வெப்பாங்களா?” என்றான் முருகேசு.

“நம்ம வசதிக்கு வெச்சிக்கறதுதான பேரு? எங்க காட்டுல ஒரு முனியப்பன் கோயில் உண்டு. அதுக்கு ஒரு வேட்ட செஞ்சு வெச்சிருந்தாங்க. தலய ஒசத்திக்கிட்டு அது நிக்கறதப் பாத்தா நெச நாயாட்டமே இருக்கும். முனியப்பன் அதக் கையில புடிச்சுக்கிட்டுத் தெனமும் ராத்திரி வேட்டைக்குப் போவாருன்னு எங்க பாட்டி கத சொல்லும். அந்த ஞாபகமா இவனுக்கும் முனின்னு பேரு வெச்சம்” என்று அவன் விளக்கிச் சொன்னான்.

அதற்குள் முனி ஓரிடத்தில் நிற்காமல் இழுக்கவும் “செரி, வர்றங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன். நாய் பெயரைச் சொன்னானே அவன் பெயர் என்ன? நாய்க்காரன் என்று வைத்துக் கொள்ளலாம். இரவெல்லாம் முனி செய்யும் அழிம்பைப் பற்றிப் பேச வாய்க்காமல் போய்விட்டது. தன் கஷ்டத்தை அவனுக்குத் தெரிவித்துவிட்டால் நல்லது என்று தோன்றியது. முதல் நாளே புகார் சொல்வதும் நன்றாக இருக்காது. எதிர்வீடு தானே இன்னொரு முறை பார்க்கும்போது சொல்லிவிடலாம் என நினைத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்படத் தொடங்கினான். அவனிடம் பேசியதையோ நாயின் பேர் முனி என்பதையோ மனைவியிடம் சொல்லவில்லை.

இனி எப்படித் தூங்கப் போகிறோம் என்று அவ்வப்போது யோசனை ஓடியதோடு சரி. இரவு உணவின்போது அவன் கேட்காமலேயே லட்சுமி சொன்னாள்.

“அது ரொம்ப நல்ல நாயிங்களாம். சத்தமெல்லாம் நாலஞ்சு நாள்ல பழகிப் போயிருமாம். ரம்யா சொன்னா.”

நாய்க்காரியின் பெயர் ரம்யா போல.

“எம் புருசன் ரொம்பப் பயந்து போயிட்டாருன்னு சொன்னயா?”

“நான் போயிச் சொல்லிக்கிட்டுத் திரியறனா? சும்மா பேசறப்ப ராத்திரியெல்லாம் இப்படிக் கொலைக்குதே, எப்பிடித் தூங்கறீங்கன்னு கேட்டன். அவளே அப்பிடிச் சொன்னா.”

“நாயி வெச்சிருக்கறவங்க பழகிக்கிட்டும். நாம எதுக்குப் பழகிக்கோணும்?”

“இப்பிடி எல்லாம் கேட்டா எனக்குப் பதில் சொல்லத் தெரியாதப்பா.”

லட்சுமி வேகமாகச் சொன்னாள். அத்துடன் இருவருக்கும் பேச்சு முறிந்தது.

அடுத்தடுத்த நாட்களில் நாய்க்காரனைச் சந்திக்க வாய்க்கவில்லை. முருகேசு பல் துலக்கும் நேரமும் அவன் வரும் நேரமும் பொருந்தவில்லை. அவனிடம் சொல்லித்தான் என்னவாகப் போகிறது? அவன் பொண்டாட்டி சொன்னது போலப் ‘பழகிரும்’ என்று அவனும் சொல்வான். எப்படியும் வரவேற்பறையில் படுக்கை இனி இல்லை என்றாகி விட்டது. இந்த நாயால் மின்கட்டணம் அதிகரிக்கும். தண்டச்செலவு.

தூங்கப் போகும் முன் முன்னிரவில் அந்த நாய் போடும் விதவிதமான சத்தங்கள் கேட்டுக் கொண்டுதானிருந்தன. பதிலுக்குத் தெருநாய்கள் குரல் கொடுப்பதும் உண்டு. வேறு எதற்கெல்லாம் குரைக்கிறது என்பதை அவனால் சொல்ல முடியவில்லை. லட்சுமி அவ்வப்போது நாயைக் குறிப்பிடாமலே அதன் குரலொலியை இனம் பிரித்துச் சொன்னாள்.

“எலியோ பெருக்கானோ ஓடுதாட்டம் இருக்குது.”

‘தெருநாய்ங்க வந்து சும்மா சும்மா நின்னுக்கிதுங்க.”

“ஆரோ ஆளுங்க போறாங்க.”

“பூன எதோ ஓடுது.”

நாய்க்காரர்களுக்குக் கூட இந்த விவரமெல்லாம் தெரிந்திருக்காது. லட்சுமிக்கு எப்படித் தெரிகிறது? அவளிடம் கேட்கவில்லை. நாயின் குரலொலி கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்வதை அவளும் நிறுத்தவில்லை. அது மட்டுமல்ல. நாய்க்கு என்ன உணவு கொடுக்கிறார்கள், எப்படிக் குளிக்க வைக்கிறார்கள், எப்போதெல்லாம் மருத்துவமனைக்குக் கூட்டிப் போகிறார்கள் என்னும் விவரங்களை எல்லாம் லட்சுமி தந்து கொண்டேயிருந்தாள். அடிக்கடி அந்த நாய்காரியுடன் பேசிப் பழகுகிறாள் என்பது தெரிந்தது.

வீட்டுச் சுற்றுச்சுவருக்கும் தார்ச்சாலைக்கும் இடையே மூன்று நான்கடி தூரம் இருக்கும். செடி வளர்த்தால் அவ்வப்போது சுத்தம் செய்ய தோன்றும் என்று அவ்வப்போது ஏதாவது செடி வைப்பான். ஒரு சில நாட்கள் அதைப் பராமரிப்பான். பிறகு மறந்து போய்விடும். புற்கள் அடந்தேறி விட்டால் விடுமுறை நாளில் அவனே சுத்தம் செய்வான். பல முறை லட்சுமி சொல்ல வேண்டியிருக்கும். தேள், பூரான் வந்து அண்டிக் கொள்ளும். புற்களுக்குள் புதைந்து கிடக்கும் தவளைகளைப் பிடித்துண்ணப் பாம்பும் வரலாம். லட்சுமியின் அனத்தல் தாங்காமல் அந்த வேலையைச் செய்வான்.

அன்று மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது சுற்றுச்சுவரோரப் புற்களின் மேல் காய்ந்து கிடந்த நாய் விட்டை கண்ணுக்குப் பட்டது. எதிர்வீட்டு நாயாகத்தான் இருக்கும். அது தானாக வந்து பேண்டிருக்காது. வெளியே பிடித்துச் செல்ல நாய்காரனுக்கு நேரம் இருந்திருக்காது. இங்கேயே பேழட்டும் என்று விட்டிருப்பான். எதிர்வீட்டைப் பார்த்தான். முதல் மாடி ஒற்றை அறைக்கு மேல் தண்ணீர் தொட்டிக் கூரை காவி ஓடு வேய்ந்த வடிவமைப்பில் கூம்பு போல நீண்டு வானைத் தொட்டுக் கொண்டிருந்தது. ‘த்தூ. இந்த நாயூட்டுக்கு இது ஒரு கேடு’ என்று முணு முணுத்துக் கொண்டு இரும்புக் கதவுக்குள் பார்த்தான். ஆட்கள் இருக்கும் அசைவு தெரியவில்லை. நாய் சுவடும் காணோம். ‘நாய் பீ அப்படியே கிடக்கட்டும். அவனிடம் காட்டி அள்ளிப் போடச் சொல்ல வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான். நாய்காரனிடம் சொல்ல வேண்டியவைக் கூடிக் கொண்டே போவதாகத் தோன்றியது.

இரண்டு நாளுக்குப் பிறகு ஒரு மதிய வேளையில் வீடு திரும்பினான். அவன் பணியாற்றும் பள்ளி நகரத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தள்ளியிருந்தது. முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அவசரமாகக் கொடுக்க வேண்டிய கடிதத்தை அவனிடம் கொடுத்தனுப்பினார் தலைமையாசிரியர். அவன் வீடு இருக்கும் சாலையிலேயே அலுவலகமும் இருந்தது. கடித்தத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்லலாம், பள்ளிக்குத் திரும்ப வேண்டியதில்லை எனத் தலைமையாசிரியர் அனுமதி வழங்கினார். சீக்கிரம் வீட்டுக்கு வந்து செய்ய வேண்டிய வேலை எதுவுமில்லை என்றாலும் அப்படி வருவதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது.

வண்டியை வாசலில் நிறுத்தினான். தெரு இரண்டாம் வளைவின் ஓரத்தில் இருந்த வேம்படியில் நான்கைந்து பெண்கள் உட்கார்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தான். அவன் வந்ததைக் கண்டு லட்சுமி எழுந்து வருவது தெரிந்தது. பெண்களின் சிரிப்பு ஓயவில்லை. ஏதோ அவர்களுக்குள் சொல்லிச் சிரித்தார்கள். அவனுக்கு எரிச்சலாக வந்தது. எதிர்வீட்டு நாய்காரியும் அக்கூட்டத்தில் இருப்பாள் என்று நினைத்துச் சத்தமாகக் கத்தினான்.

“நாய் வளக்கறாங்களாம் நாயி. செவத்தோரத்துல தான் தெனமும் பேழ்றதுக்குக் கொண்டாந்து உடுவாங்களாம். இந்தப் பீய இன்னக்கிச் சாய்ந்தரத்துக்குள்ள அள்ளி எடுக்கலீன்னாத் தெரியும். அப்பறம் காம்பவுண்டுக்குள்ளதான் பீ கெடக்கும்.”

சொல்லிக்கொண்டே கதவைத் திறந்து வண்டியை உள்ளே தள்ளி நிறுத்தினான். அதுவரைக்கும் பெண்கள் கூட்டத்திலிருந்து சத்தம் வரவில்லை. “உங்களுக்குப் பித்துப் புடிச்சிருச்சா?” என்று பல்லைக் கடித்தபடி சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் லட்சுமி. அதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு பெண்குரல் ஓங்கி வந்தது. அவன் என்ன சொல்கிறான் என்பது தாமதமாகத்தான் புரிந்திருக்கும் போல.

“தெருவுல கண்ட நாயும் திரியுது. எது வந்து பேண்டு வெச்சுதோ? எங்க முனியத்தான் அப்படித் திரிய உடறமா? பில்லேறிச் சீன்றமாக் கெடக்கற அந்த எடத்தப் பாத்தாலே ச்சீன்னு துப்பீட்டுப் போயிருவான் அவன். மனசனுக்குத் தராதரம் தெரிய வேண்டாம்?”

பதில் பேசுவதற்குள் லட்சுமி வந்து தன் கையால் அவன் வாயை மூடி “பேசாத போங்க. நாஞ் சொல்லிக்கறன்” என்றாள். அவள் கையை இழுத்தெறிந்துவிட்டு “வாடக ஊட்டுல மனசன் இருக்கலாம். நாயெல்லாமா வெச்சிருப்பாங்க. ராத்திரி முழுக்க வள்ளு வள்ளுன்னு கத்தித் தொலைக்குது. தூங்கவா முடியுது?” என்று சொன்னான்.

நாய்க்காரி தெருவில் நின்றுகொண்டு ஏதோ கத்தினாள். லட்சுமியும் கத்திக் கொண்டு அவனை வீட்டுக்குள் தள்ளினாள். “வாடவ ஊட்டுல இருந்தா அலுப்பமாப் போயிருவமா?” என்ற வார்த்தை மட்டும் கேட்டது. அவனுக்கு மூச்சிரைத்து வேர்த்துப் போயிற்று. சோபாவில் உட்கார்ந்து மூச்சு வாங்கினான். மின்விசிறியைப் போட்டு விட்டுத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் லட்சுமி. அவன் குடித்து முடித்துத் தேறிய பிறகு “ஒரு நாய்க்காவ நீங்க எதுக்கு நாய் மாதிரி கத்தறீங்க?” என்று சொன்னாள். தொந்தரவுகளைப் பற்றி நாய்க்காரனிடம் சொல்லியிருக்க வேண்டும். அவனில்லாத போது பெண்ணிடம் சண்டைக்குப் போனது தப்போ? எதுவும் பேசாமல் அப்படியே சோபாவில் படுத்துத் தூங்கிப் போனான்.

அவன் கோபம் மாறவில்லை என்பதைத் தெரிந்து இரவில் லட்சுமி ஒன்றும் பேசவில்லை. இருவரும் மௌனமாக உண்டார்கள். அவர்கள் உண்ணும்போது எதிர்வீட்டு நாய் சத்தம் பலமாகக் கேட்டது. அது இரும்புக் கதவில் கால்களை வைத்து உடலை உயரவாக்கில் தூக்கி நிற்கும் காட்சியை உணர முடிந்தது. பரபரவென்று கதவின் ஒரு பக்கமிருந்து இன்னொரு பக்கம் வரை அப்படியே நகர்ந்து செல்லும் சத்தமும் கேட்டது. பாதிக் கதவு வரைக்கும் சந்து இல்லை. அதற்கு மேல் ஓரடிக்கு மெல்லிய சந்து இருக்கும். அதையடுத்து வளைந்து நெளிந்த டிசைன் கொண்ட பகுதி. அதில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நாய் சத்தமிடுகிறது.

நாய் சத்தம் அதிகமாகத்தான் இருக்கிறதோ என்னும் சந்தேகம் முதன்முதலாக லட்சுமிக்கு வந்தது. பெருங்கல்லில் இரும்பை உரசுவது போன்ற நாராசமான சத்தம். இன்னும் கொஞ்ச நேரமானால் மற்ற சத்தங்கள் அடங்கி இது மட்டுமே பூதாகரமாகக் கேட்கும். ஜன்னல்களை எல்லாம் சாத்தி ஏசியை ஓடவிட்டிருப்பவர்களுக்குப் பிரச்சினையில்லை. அவனோ வெயில் நாளில் மொட்டை மாடியில் படுத்துத் தூங்குபவன். கஷ்டம்தான் என்று நினைத்தாள். இதை எப்படிச் சரிசெய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. பணம் பெருத்தவர்களோடு மோத முடியுமா? சகித்துக் கொண்டு போக வேண்டியதுதான். அவனுக்குச் சொல்ல முடியாது. தானாக உணர்ந்தால்தான் உண்டு. எப்படியோ எதிர்வீட்டோடு பகை தொடங்கிவிட்டது. இனி மதிய நேரத்தில் பெண்கள் கூட்டத்தோடு போய் உட்கார முடியாது என்னும் கவலையில் அடிக்கடி பெருமூச்சு விட்டாள்.

தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்ததும் எல்லாம் மறந்துவிட்டது. படுக்கையறைக்குள் போய் படுத்து மின்விசிறியைப் போட்டுக்கொண்டு கையில் செல்பேசியைப் பிடித்தபடி ஒரு திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கியவன் பாதியிலேயே தூங்கிவிட்டான். லட்சுமி வந்து விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள். தூக்கப் பிசாசு பிடித்தவன் அவன். எந்த நேரம் படுத்தாலும் தூங்குவான். சிறு சத்தம் பிரச்சினையில்லை. பெருஞ்சத்தத்தால் திருப்தியாகத் தூங்க இயலாத எரிச்சல்தான் அவனை இப்படிக் கோபப்பட வைக்கிறது. தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை யோசித்துக் கொண்டு வெகு நேரம் கழித்தே தூங்கினாள்.

வழக்கமாக எழும் நேரத்திற்கே அவள் எழுந்து வேலைகளைத் தொடங்கினாள். இரவு நேரமாகவே தூங்கியதால் காலையில் சீக்கிரம் எழுந்து வெளியே வந்தான். இருள் இன்னும் முழுதாகப் பிரியவில்லை. அவன் அரவம் கேட்டு எட்டிப் பார்த்து “பல்லு வெளக்கிட்டு வாங்க. டீ வெக்கறன்” என்றாள். பதில் சொல்லாமல் சாவியை எடுத்துக் கொண்டு போய் வராந்தாவில் இருந்த கிரில் கதவைத் திறந்தான். மேற்குப் பக்கம் இருந்த இரும்புக் கதவுப் பூட்டைத் திறந்தபோது வித்தியாசமான சத்தம் கேட்டது. வெளியே போய் பார்த்தான். அவன் வீட்டுச் சுவரோரம் எதிர்வீட்டு நாய் கட்டியிருந்தது. அவன் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு உடலை நிமிர்த்தி நின்றபடி கத்த ஆரம்பித்திருக்கிறது. சுவரோரம் வைத்து முழங்கால் அளவு வளர்ந்திருந்த மல்லிகைச் செடியைச் சுருட்டிக் கட்டியிருந்த சங்கிலியை நாய் இழுப்பது நிழல் இருளிலும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அதே சமயம் தன் வீட்டுப் பெரிய இரும்புக் கதவைத் திறந்து கொண்டு நாய்க்காரன் வெளியே வந்தான். முருகேசுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“மல்லீப்பூச் செடிதான் நாயக் கட்டறதுக்கு உனக்குக் கெடச்சுதா?” என்று கத்தினான்.

அவன் வேகமாக நாயிடம் போனான். “அடடா…இருட்டுல கவனிக்கல” என்றபடியே சங்கிலியைக் கழட்டினான். “செடிக்கு ஒன்னும் ஆவுல” என்று முருகேசுவைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

“நேத்துப் பீ பேண்டு வெச்சிருந்திச்சு. இன்னக்கி இங்கயே கட்ட ஆரம்பிச்சிட்டியா? மொதல்ல அந்தப் பீய அள்ளிப் போட்டுட்டுப் போ” என்று முருகேசு கத்தினான்.

சத்தம் கேட்டு வெளியே வந்த நாய்க்காரி தன் புருசனிடம் கேட்டாள்.

“என்னங்க ஆச்சு?”

“முனியோட வாக்கிங் போவ வெளிய வந்தன். பாத்தா மொபைல மறந்து உள்ளயே வெச்சிட்டன். செரி, ஒரு நிமிசந்தான எடுத்துக்கிட்டு வந்தரலாமின்னு எதுத்தாப்பல ஒரு செடியில கட்டீட்டு உள்ளே போயிட்டு வர்றதுக்குள்ள இந்த ஆளு பீபீன்னு என்னமோ கத்தறாரு.”

“ஆமாங்க, இந்த ஆளு நேத்துலருந்து பீபீன்னு ஊதிக்கிட்டே இருக்கறான்.”

“உன்னோட நாய் பேழாம நீயா வந்து பேண்டு வெச்ச?” என்று சொன்ன முருகேசு நாய் பீ இன்னும் கிடக்கிறதா என்று பார்க்க அந்தப் பக்கம் போனான். சத்தம் கேட்டு லட்சுமி வெளியே ஓடி வந்தாள்.

“வாத்தியானுக்குக் கொழுப்பப் பாத்தியா? நான் போயி அவனூட்டுல பேழ்றனாமா.”

“உன்னோட நாயில்லன்னா ஆரு வந்து பேண்டு வெச்சிருப்பா?”

முருகேசுவின் பக்கம் இழுத்துக் கொண்டு காதுகளை விறைத்தபடி குரைத்த முனியைத் தன் மனைவியின் கையில் கொடுத்தான். அவள் இரும்புக் கதவின் மேல் பக்கக் கம்பியில் சுற்றி முடி போட்டாள். நாய் பீ கிடந்த இடத்திற்கு அவன் வந்தான். நின்றவாக்கில் அதைப் பார்த்தான். பின் ஒரு காலை மடக்கிக் கீழே உட்கார்ந்து பார்த்தான்.

“கண்டதையும் தின்னுட்டு தெருநாயி எதுவோ வந்து பேண்டு வெச்சிருக்குது. எங்க முனியோடது இல்ல” என்றான்.

“உன் நாய் பீ மணக்குமா?” என்றான் முருகேசு.

“சண்ட வேண்டாம். பேசாத இருங்க” என்றாள் லட்சுமி.

தெருவில் வாசல் கூட்டிக் கொண்டும் தண்ணீர் தெளித்துக் கொண்டுமிருந்த பெண்கள் சிலர் சத்தம் வந்த திசையில் பார்த்தார்கள். அதிகாலை பேச்சு வெகுதூரத்திற்குத் தெளிவாகக் கேட்டது. முருகேசுவின் கையைப் பிடித்து லட்சுமி உள்ளே இழுத்தாள்.

“எங்க முனி என்ன சாப்பிடுவான், அவன் ஆயி எப்படி இருக்குமின்னு எனக்குத் தெரியாதா?” என்றான் நாய்க்காரன்.

“முனியக் கட்ட எடமில்லாதயா கெடக்கறம்? உன்னூட்டுச் செவுத்தோரம் கொண்டாந்து கட்டறதுக்கு?” என்றாள் நாய்க்காரி

“இப்ப என்னூட்டோரத்துலதான கட்டுன?” என்று கேட்டான் முருகேசு.

“முனிக்காவத்தான் இத்தாப் பெரிய ஊட்ட வாடவைக்கு எடுத்தம். ஒரு நிமிசம் கட்டீட்டு உள்ள போயி வந்தன். அதுக்குள்ள என்னாயிருச்சி? அப்படியே செடி போயிருந்தாலும் புதுச்செடி வாங்கிக் குடுத்தர்றன்” என்றான் அவன்.

“நான் கஷ்டப்பட்டு வளப்பன். நீ நாயக் கட்டி ஒடிப்ப. அப்பறம் புதுசு வாங்கிக் குடுக்கறன்னு உம் பவுசுக் காட்டுவியா?” என்றான் முருகேசு.

“தெருவுல கொண்டாந்து செடி வெச்சிட்டு என்ன ஏறிக்கிட்டு வர்ற?”

“உங்காம்பவுண்டுக்குள்ளயா கொண்டாந்து கட்டுனாங்க?”

இருவரும் மாறி மாறிப் பேசினார்கள். முருகேசு கோபத்தில் என்ன செய்வானோ என்ற பயத்தில் “பேசாத வாங்க” என்று அவனைப் பிடித்து உள்ளே இழுத்தாள் லட்சுமி.

“உடு நாயே!” என்று லட்சுமியிடம் இருந்து விடுவித்துக் கொண்ட முருகேசு “இந்த நாய இன்னைக்கிக் கொல்லாத உட மாட்டன்” என்று சொல்லிக் கொண்டே ஏதாவது கட்டையோ தடியோ கைக்குக் கிடைக்குமோ என்று பார்த்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கே கிடந்த சிறுகற்களை எடுத்து அந்த நாயைப் பார்த்துச் சரமாரியாக இட ஆரம்பித்தான். ஒன்றிரண்டு கற்கள் நாய் மீதும் பட்டன. அவன் அதிர்ந்து தன் மேல் கல் படாமல் ஒதுங்கி நின்றான். அவள் சட்டெனக் கதவுக்குள் நுழைந்து மேல் கம்பியில் கட்டியிருந்த சங்கிலியை அவிழ்க்கத் தொடங்கினாள்.

“டேய் முனி… கல்ல எறிஞ்சவன் கையக் கடிச்சு எடுத்துக்கிட்டு வாடா” என்று நாயை உசுப்பேத்தினாள். அவசரத்தில் சங்கிலி அவிழ மறுத்தது. என்ன நடக்கிறது என்று புரிந்த லட்சுமி பதறி அவனை இழுத்தாள்.

“நாயக் கடிக்க உடப் போறாங்க அவ” என்று லட்சுமி சொன்னதும் நிலைமை உணர்ந்து நாய் வருவதற்குள் சட்டென்று உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினான் முருகேசு.

“இன்னக்கித் தப்பிச்சிட்ட. முனிகிட்ட மாட்டுவீடா நீ” என்று உள்ளேயிருந்த கத்தினாள் அவள்.

“உள்ள வாங்க நீங்க. ஆரு நாயின்னே தெரீல” என்று அவன் கையைப் பற்றிக் கொண்டு போய் வீட்டுக்குள் விட்டுக் கதவை ஓங்கிச் சாத்தினாள் லட்சுமி.

2 comments for “முனி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...