தனித்துக் களமாடிய இலக்கிய வீரன் க.நா.சு

க. நா. சுப்ரமண்யம்

க. நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் புதுமாதிரியான ஆளுமை. நாவலாசிரியராக, கவிஞராக, சிறுகதையாளராகப் பல படைப்புகளைத் தந்திருந்தாலும் ஓங்கி ஒலித்த ஒரு விமர்சன ஆளுமையாகவே பார்க்கப்பட்டார். நாவல் என்பது தொடர்கதைகளாக, மேம்போக்கான மரபை, குடும்ப உறவுகளைப் போற்றும் கதைகளாக வந்தபோது வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்தும் ஒரு கலை வடிவம் அது என்பதை உணர்ந்து நாவல் எழுதினார் க.நா.சு.

தமிழ் நாவல் இலக்கியத்திற்கு க.நா.சு வழியாகப் புதுத்தடம் போடப்பட்டது. யாப்பு கவிதையிலிருந்து விலகி உரைநடையைத் தக்கவைத்துக் கொண்டு மரபுக்கவி வடிவங்களையும் பழைய கருத்தியல் எண்ணங்களையும் உதறி புதுக்கவிதைகளை எழுதினார். வெகுஜன எழுத்துக்களையும், பண்டிதர்களின் ஆக்கங்களையும் இலக்கியப் படைப்புகள் அல்ல என்று முற்றாக நிராகரித்து புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, ந. சிதம்பரசுப்பிரமணியம், ஆர். சண்முகசுந்தரம், சங்கரராம் இவர்களின் ஆக்கங்களே இலக்கியப் படைப்புகள் என்று 1946 வாக்கில் விமர்சன ரீதியாக முன்வைத்தார். இதனால் வெகுஜன பத்திரிகைகளில் புகழ்பெற்று விளங்கிய கல்கி, அகிலன், சாண்டில்யன் என்ற எழுத்தாளர் வரிசைக்குப் பகைமையானதோடு அவரது வாசகர்களாலும் வெறுக்கப்பட்டார்.

தங்களின் வியாபார வழிவகைகளை அடைப்பதால் பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்களால் எழுத்து மேடைக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார் க.நா.சு அதைப்பற்றிக் கவலைப்படாமல் மணிக்கொடி வழியில் ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘இலக்கிய வட்டம்’ இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தீவிர இலக்கியத்தின் வழித்தடமாகச் சிற்றிதழ் மரபு உண்டானது. ‘தேனி’, ‘எழுத்து’, ‘சரஸ்வதி’ என்று தோன்றிய சிற்றிதழ்களிலும் ‘சுதேசிமித்திரன்’ போன்ற நாளிதழ்களிலும் எழுதினார். தமிழ்ச் சூழலில் பணம் சம்பாதிக்கும் எழுத்து வகைக்கு நேரெதிரான பணத்தையும் உழைப்பையும் கொடுத்து வாழ்க்கையை நடுத்தெருவில் நிறுத்திவைக்கும் சிற்றிதழ்களில் தன் இலக்கிய இயக்கத்தைத் தீவிரமாகத் தொடர்ந்தார். புதுமைப்பித்தன் தொடங்கிவைத்த விமர்சன மரபை தன் இறுதிக்காலம் வரை தனி ஆளாக நின்று வளர்த்தெடுத்தார்.

பண்டிதத்தனத்தைக் குறிப்பிட்டு அரசியல் சார்பை, கல்விப்புலம் சார்ந்தவர்களின் புனைவுகளை, வெகுஜன எழுத்தாளர்களை முற்றாக நிராகரித்தார் க.நா.சு. அவர்களுக்குத் தீவிர இலக்கியம் என்ன என்பதே தெரியாமல் இருப்பதைத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டினார். எனவே பல்வேறு திசைகளிலிருந்து வசைபாடப்பட்டார். அதுபற்றி கவலைப்படாமல் மேலான இலக்கியம் குறித்துப் பேசினார். இந்த நிராகரிப்பும் அவரது தேர்வும் ஓர் இலக்கியத் தகுதியை உருவாக்கியது. க.நா.சுவால் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் அவர் மீது வசைமாரி பொழிந்தனர். இந்த வசைகளைப் புறந்தள்ளியே இயங்கினார்.

ஐம்பது ஆண்டுகால இடைவிடாத அவரின் விமர்சனக்குரல் வலுவான ஓர் இலக்கிய மறுமலர்ச்சியைத் தமிழில் உண்டாக்கியது. காத்திரமானப் படைப்புகள் தோன்றின. க.நா.சு இலக்கியப்பள்ளி என்றே உருவானது. அவருடன் நேரடியாக உறவில் இல்லாமல் சற்று விலகியிருந்த முக்கியமான படைப்பாளிகள்கூட க.நா.சு அவர்களால் முக்கியத்துவம் பெற்றார்கள்.

1

க.நா.சுவின் இந்தத் தரப்படுத்துதல் வேலை நூற்றுக்கு நூறு சரியாக நடந்ததா என்றால் அரிதாக சில வேளை இல்லையென்றும் சொல்லலாம். தேர்வு சார்ந்து அவரிடம் சில சரிவுகளும் நிகழ்ந்தன. க.நா.சுவின் கலைகொள்கையை ஏற்று பின்தொடர்ந்தவர்களே இந்தச் சரிவுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவும் செய்தனர். இந்த விஷயத்தில் சுந்தர ராமசாமி, பிரமிள் போன்றவர்கள் இரும்பு பிடியாகப் பிடித்தனர்.

அநுத்தமாவின் ‘கேட்டவரம்’ நாவலை அறிமுகப்படுத்தி எழுதியதையும், சதா சாகித்திய அகாதமியின் செயல்பாடுகளை விமர்சித்த க.நா.சு அகாதமிக்காக தரமற்ற ‘குருதிப்புனல்’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததையும் சுந்தர ராமசாமி விமர்சித்தார். பிரமிள் என அழைக்கப்பட்ட தருமு சிவராம் ஒரு தேர்ந்த கவிஞர். சிறந்த விமர்சகர். இலக்கிய கட்டுரைகளில் வெளிப்பட்ட பிரமிளின் உழைப்பு அபாரமானது. எழுத்துலகில் தீவிரமாக இயங்கிய பிரமிளை கவிஞராகவோ விமர்சனராகவோ ஆரம்பத்தில் க.நா.சு முன்நிறுத்தவில்லை. அவரது சாதனை சிறுகதைகளில் பெரியளவில் இல்லை. ஒரு நல்ல சிறுகதையைப் பொறுக்கும் அளவிற்குக் கதைகள் படைக்கவும் இல்லை. பிரமிளைக் கவிஞராக அங்கீகரிக்காத க.நா.சு சிறுகதையாளராக அவரது ‘சந்திப்பு’ கதையை ஆங்கிலத் தொகுப்பில் சேர்த்திருப்பது ஒரு மோசமான முன்னுதாரணம் என்றார் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி அவ்விதம் குறிப்பிட்டிருந்தாலும் ஆங்கில தொகுப்பில் சேர்க்கப்பட்ட அக்கதை தொகுப்பின் சிறந்த கதையென்று இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ் எழுதியது. ஆர்.வி.யின் ‘அணையாவிளக்கு’ அகிலனின் ‘சிநேகிதி’, அநுத்தமாவின் ‘கேட்டவரம்’ போன்ற மூன்றாம் தரமான நாவல்களைக் க.நா.சு அறிமுகப்படுத்தியது ஒரு திருவிளையாடலாக இருக்கிறது என்று விமர்சித்தார் சு.ரா.

சுந்தர ராமசாமியின் விமர்சனத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளது என ஆராய வேண்டியுள்ளது. ‘கேட்டவரம்’ வெகுஜன சூழலில் பேசப்பட்ட ஒரு நாவல். பிராமண வாழ்க்கை முறை அந்நாவலில் நம்பகத்தன்மையுடன் கூடிவந்ததால் க.நா.சு அதனை அறிமுகப்படுத்தி இருக்கலாம். அதுபோல ‘குருதிப்புனல்’ நாவல் சாகித்திய அகாதமி விருது பெற்றபோது தஞ்சை மண்ணின் வாழ்க்கையைப் பேசாத ஒரு போலி படைப்பு என்று விமர்சிக்கப்பட்டது. க.நா.சுவிற்கும் அந்த நாவல் மீது எவ்வித மதிப்பும் இல்லை. சமூக உண்மையைத் தீவிரமாக அந்த நாவல் சொல்லவில்லை என்றே அந்நாவல் குறித்து மதிப்பிட்டிருந்தார். ஆனால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நிர்பந்தம் இருந்திருக்கிறது. க.நா.சுவின் மருமகன் பாரதிமணி இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் நடித்து வந்தார். இந்தத் தொடர்பு நிர்ப்பந்தித்திருக்கலாம். பணத் தேவை கருதி மொழிபெயர்த்திருக்கலாம் என ஊகிப்போரும் உண்டு. இவையன்றி இந்திரா பார்த்தசாரதி கேட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

2

க.நா.சுவுடன் ஐம்பதுகளில் நெருங்கிப் பழகிய சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் தனக்கும் க.நா.சுவுக்குமான உரையாடலைப் பதிவு செய்கிறார்.

‘தி. ஜானகிராமன் உயர்ந்த எழுத்தாளர்’ என்று சொல்லிவிட்டு ‘அவ்வளவு உயர்ந்த எழுத்தாளர் அல்ல’ என்று தன்னிடம் க.நா.சு சொன்னதைக் குறிப்பிடுகிறார். அதற்குச் சுந்தர ராமசாமி ‘இப்படிச் சொல்கிறீர்களே!’ எனக் கேட்க, “ஜானகிராமன் ரசானுபாவத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் தருகிறார். அவ்வளவு முக்கியத்துவம் அதற்குத் தரக்கூடாது. வாசகன் ரசித்துதான் ஆகணும் என்ற கட்டாயம் இல்லை. அவனை ரசிக்கவைத்துத்தான் ஆகணும் என்பதற்காக விஷயங்களைக் கதைக்குள் கொண்டுவரக்கூடாது. வடமொழியில் இருக்கக்கூடிய ஒரு மரபு இது. வடமொழிக் காப்பியங்களில் அது அதிகமாக இருக்கிறதே ஒழிய தமிழில் செய்ய வேண்டிய செய்யக்கூடிய விஷயமே அல்ல. கு.ப.ரா.வோட கிராஃப்ட்டை எடுத்துக்கொண்டு அதற்குள் தேனைவிடறது மாதிரி செய்கிறார் ஜானகிராமன்,” என்று க.நா.சு குறிப்பிடுவதாக சு.ரா. கூறுகிறார்.

சுந்தர ராமசாமி

தி.ஜானகிராமனைக் க.நா.சு விமர்சித்ததக்ச் சுந்தர ராமசாமி சொல்லியிருந்தாலும் க.நா.சு அவருடைய எழுத்தில் எங்கும் இப்படி விமர்சித்ததில்லை. அவை தனி உரையாடல்கள். இந்த விமர்சனத்திற்கும் பொருந்தக்கூடிய அவருடையப் படைப்பு ‘மோகமுள்’. ஆனால் மோகமுள்ளைத்தான் தி.ஜா. வின் சாதனைப் படைப்பு என்று க.நா.சு கூறியிருக்கிறார். ‘இந்த நாவல் பற்றி இலக்கியத் தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் மோகமுள் தமிழில் நல்லதோர் சாதனை – பெரியதோர் சாதனை’ என்று உறுதியளித்தார். இதனைக் காலச்சுவடு பதிப்பகமும் மோகமுள் நாவலின் அட்டையில் பொறித்திருக்கிறது.

மற்றோரிடத்தில் தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’ மிக லெகுவான விதத்தில் சாதனையாக அமைந்த படைப்பு என்று பாராட்டியிருக்கிறார் க.நா.சு. ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி வந்த க.நா.சு ‘மோகம்முள்’ அப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததால் மேலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியாமல் போனதில் வருத்தம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். பலராலும் பாராட்டப்பட்ட அவரது ‘அம்மா வந்தாள்’ நாவலை நம்பகத்தன்மை குறைவு என்று சொல்லியிருக்கிறார். ஆனால் சுந்தர ராமசாமி ‘மோகமுள்’ நாவலை விட ‘அம்மா வந்தாள்’ நாவலையே தி.ஜா. வின் சாதனை என்று முன்வைத்திருக்கிறார். இருவரின் பார்வைகளிலும் வேறுப்பாடைக் காண முடிகிறது.

தி.ஜா தன் நாவல்களில் பெண்களின் சாயல்களை ஆணின் பார்வையில் விதந்து சில வரிகள் எழுதியதுண்டு. நாவல், சிறுகதைகளில் தி.ஜா வாழ்வின் கசப்பையோ உன்னத தருணங்களையோத்தான் எழுதியிருக்கிறார். சிறுகதைகளில் தி.ஜாவின் சாதனை பெரியது. தி.ஜாவின் நடை வசீகரம் மிக்கது. அது இயல்பாகக் கூடிவந்த ஒன்று. தேனை ஊற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லாதது. சுந்தர ராமசாமி தி.ஜாவை ‘யதார்த்தத்தின்மேல் கனவின் பனிப்படலத்தை விரித்தவர்’ என்று எழுதியிருக்கிறார். தி. ஜானகிராமன் கதைகளைச் சிறந்த உருவத்தில் அமையாத கதைகள் என்று க.நா.சு விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர் எழுத்து, வாழ்வை ஒரு கோணத்தில் நின்று சொன்ன இலக்கியப் பூர்வமான சாதனைகள் என்று கொண்டாடவும் செய்திருக்கிறார். எப்படி விமர்சித்தாலும் தி.ஜா.வைக் க.நா.சுவால் கொண்டாடாமல் விட முடிந்ததில்லை. தி.ஜ.வின் மொழியும் பாத்திரங்களின் குணரூபங்களும் க.நா.சுவிற்குப் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. அதேபோல, சுந்தர ராமசாமி கதைகளில் உருவும் சொல்முறையும் அழகாகக் கூடிவந்தும் சொல்ல வந்த விசயம் கனமற்று, இல்லாமல் பறந்துபோன தோற்றத்தையே தருகிறது என்றும் க.நா.சு சொல்லியிருக்கிறார்.

தி. ஜானகிராமன்

க.நா.சு ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ வந்த புதிதில் பினான்சியல் டைம்ஸில் முக்கியமான நாவல் என்றே எழுதியிருக்கிறார். பின் தமிழில் எழுதியபோது அந்நாவலை நவீன அறிவியல் சிக்கல் தளத்தில் எழுதப்பட்ட தோல்வியுற்ற நாவல் என்று விமர்சித்திருக்கிறார். இவற்றிற்கெல்லாம் நடைமுறை காரணங்கள் இருக்கின்றன. க.நா.சுவின் விமர்சன முறையைச் சுந்தர ராமசாமி விமர்சித்துள்ளதும் பிற்காலத்தில் ‘கசடதபற’ குழுவுடன் இணைந்து செயல்பட்டுள்ளதும் க.நா.சுவின் இத்தகைய கருத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

3


தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் என்று ஆரம்பக்காலங்களில் கூறும்போது ஒரு வரி மட்டும் க.நா.சு ஜெயகாந்தக்ச் சேர்த்துள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தனின் பங்களிப்பு பற்றி அதிகம் சொல்லாமல் விட்டார். சுந்தர ராமசாமியை முக்கியமான இளம் எழுத்தாளர் என்று தொடர்ந்து வாசகர்களிடம் க.நா.சு முன்வைத்தபோது, ஜெயகாந்தனை அவ்விதம் தொடர்ந்து முன்வைக்கவில்லை. ஜெயகாந்தன் தன் கதைகள் மீது க.நா.சு வைத்த விமர்சனங்களுக்கு ஒரு வாசகனுக்குப் பதில் சொல்வதுபோல கதைத்தொகுதியின் முன்னுரையில் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். 1959 வரை ஜெயகாந்தனும் க.நா.சுவுடன் நெருங்கிய இலக்கிய உரையாடல்களில் கலந்துகொண்டவர்தான். க.நா.சு ஜெயகாந்தனைத் தவிர்த்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

க. நா. சுப்ரமண்யம்

1960இல் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்கத் தேர்தலில் க.நா.சுவை எதிர்த்து தி.மு.க சார்பாளர் எம்.பி சோமசுந்தரம் நின்றார். இந்தப் போட்டியில் இளம் வயதில் துடுக்குத்தனத்துடன் ஜெயகாந்தனும் போட்டியிட்டார். ஆனால் ஜெயகாந்தன் போட்டியிட்டதோடு மேற்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் நின்றுகொண்டார். ஜெயகாந்தனுக்கு ஐந்து வாக்கு கிடைத்தன. க.நா.சு ஒன்றோ இரண்டோ வாக்குகளில் தோற்றார். ஜெயகாந்தன் ஓட்டைப் பிரிக்காமல் இருந்திருந்தால் க.நா.சு வெற்றி பெற்றிருப்பார். மட்டுமல்லாமல் சோமசுந்தரத்திற்கும் இலக்கியத்திற்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. இடதுசாரி எழுத்தாளர்கள் க.நா.சுவுக்கு ஓட்டுப் போடக்கூடாது என்ற நிலை எடுத்தனர். தி.க.சி.யிடம் இருவரில் யார் தகுதியானவர் என்று க.நா.சு கேட்டிருக்கிறார். கட்சி கட்டளைப்படிதான் நடக்க முடியும் என்று தி.க.சியும் சேர்ந்தே தோற்கடித்தார். இலக்கியம் தெரியாத ஒருவரைக்கூட கொண்டுவருவோம் தவிர க.நா.சுவைக் கொண்டு வரமாட்டோம் என்ற நிலைப்பாடு இடதுசாரிகளிடமும் தி.மு.கவிடமும் இருந்தது. இதையெல்லாம் இங்குச் சொல்வதற்குக் காரணம் அல்லறை சில்லறை விவகாரங்கள் விமர்சனத்திலும் எதிரொலித்தன என்பதற்குத்தான்.

ஜெயகாந்தன் ‘மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் எதுவுமே எனக்கு எப்பொழுதுமே அருவருப்பைத் தருகின்றன. மிகைப்படுத்தப்பட்டது என்று முடிவுக்கு வரும்முன் அது சம்பந்தப்பட்ட சகல பரிமாணங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். தன் குறை தெரியாத மேதாவிகளுக்கு எல்லாம் தன் பலம் தெரிந்திருக்கும்போது என் குறை தெரிந்த எனக்கு என் பலம் தெரியாதா என்ன. அர்த்தத்தின் உந்துதலினாலே பல குறிப்பான உருவங்கள் தோன்றினாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட உருவத்திலும் இவ்வளவுதான் என்று எல்லையை நானே நிர்ணயித்துக் கொள்ளுதல் ‘கூடாது’ என்ற தடைவிதிப்பும் வேண்டுமென்ற உரிமை அளிப்பும் எனக்கு அவசியமாகிறது. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாபமுறுகிறேன். பிரச்சனைக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன். இலக்கிய விமர்சனம் என்பது எழுதினவனைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்காது. அதற்கு அப்பால் எழுதியது ஒன்று தன்னை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துப் பேச வேண்டும்’ என்றெல்லாம் எழுதியது க.நா.சுவை நினைத்துக்கொண்டுதான் என்று யூகிக்க முடியும். அதேபோல ஜெயகாந்தன் கதைகள் முற்போக்கா பிற்போக்கா என்று விவாதித்தபோது க.நா.சு ‘ஜெயகாந்தன் முற்போக்குக் கொள்கைகளை ஆதரிப்பவர் எனினும் இவரது கதைகளில் முக்கால்வாசி முற்போக்கு கொள்கைக்கு ஒத்துவராது’ என்று கூறியதைச் சாதகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயகாந்தன்

நியாயமாகத் தி. ஜானகிராமன், ஆர். சூடாமணி, ஜெயகாந்தன் மூவரையும் க.நா.சு பெரிய அளவில் பேசியிருக்க வேண்டும். இவர்கள் கலைமகள், ஆனந்த விகடன், கல்கி, தினமணிக் கதிர் இதழ்களில் எழுதி பெரிய செல்வாக்கைப் பெற்றனர். க.நா.சு சிற்றிதழ்களில் எழுதாத இவர்களைப் புறந்தள்ளினார். தி.ஜா வெகுஜன இதழ்களில் எழுதியவர் என்றாலும் தமிழில் வந்த எல்லா சிற்றிதழ்களுக்கும் சந்தா செலுத்தி சிற்றிதழில் நடக்கும் இலக்கியப் போக்குகளைக் கற்றுக்கொண்டே இருந்தார். அவ்வப்பொழுது சிவாஜி, இலக்கிய வட்டம், எழுத்து இதழ்களிலும் பங்களிப்புச் செய்தார். தரமற்ற எழுத்துக்களைக் கி.வ.ஜகந்நாதன் கலைமகளில் வெளியிடுவதாகத் தாக்கி எழுதத் தொடங்கியதும் கலைமகளிலிருந்து க.நா.சுவுக்கு வந்துகொண்டிருந்த பணம் இல்லாமல் ஆயிற்று. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமர்சித்தார் க.நா.சு.

க.நா.சுவை வெகுஜன இதழ்கள் வெறுத்து ஒதுக்கியது போலவே க.நா.சுவும் சிற்றிதழ் பக்கம் நின்று வெகுஜன இதழ்களைத் தீவிரமாகவே விமர்சித்தார். இந்த முரண்கூட தி. ஜானகிராமன், ஆர். சூடாமணி, ஜெயகாந்தன் மூவரையும் க.நா.சு அதிகம் பேசாமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். சுந்தர ராமசாமி சிற்றிதழ் சார்ந்து மட்டும் இயங்கியதால் அவருக்கு ஓர் அழுத்தமான அடையாளத்தைத் தர வேண்டும் என்று நினைத்தார் க.நா.சு.

4

க.நா.சு மேல் பெரும் மதிப்பு வைத்திருந்த கிருஷ்ணன் நம்பியின் எழுத்தையும் அவர் உச்சிமுகரவில்லை. க.நா.சுவிடம் சிஷ்யன்போல் உறவாடி இருந்தவர்தான் கிருஷ்ணன் நம்பி. க.நா.சுவை இடதுசாரிகளுக்கு பிடிக்காததைப் போல கிருஷ்ணன் நம்பியிடம் வெளிப்பட்ட இடதுசாரி மனோபாவம் க.நா.சுவிற்குப் பிடிக்கவில்லை. ‘அவர் கதைகளை நான் தமிழில் நல்ல கதைகள் என்று வெளிப்படுகிற பட்டியலில் சேர்ப்பதில்லை என்று அவருக்கு வருத்தம்தான் என்பது எனக்குத் தெரியும். அவர் தன் சிறுகதைகளில் நல்ல தரத்தை எட்டியவர் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தரத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு தரத்தை அவரால் எட்ட முடியாமல் போனது அவருடைய முற்போக்குச் சிந்தனை இருட்டினால்தான் என்றும் நினைப்பு’ என்று குறிப்பிட்டிருக்கிறார் க.நா.சு.

‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’, ‘மருமகள் வாக்கு’, ‘எக்சென்ரிக்’, ‘கணக்கு வாத்தியார்’, ‘விளையாட்டுத் தோழர்கள்’, ‘காலை முதல்’, ‘தங்க ஒரு’, ‘வருகை’, ‘நீலக்கடல்’ முதலிய கதைகள் எல்லாம் பொருட்படுத்தத்தக்கவை. நம்மையும் மீறி சரிந்துவிழ நேர்கிற வலியைக் கிருஷ்ணன் நம்பி கதைகளில் உணர்கிறோம். க.நா.சு முற்போக்குத் தன்மை என்பதை ஒரு குறையாகக் காணாமல் அணுகியிருக்க வேண்டும். என்றாலும் கிருஷ்ணன் நம்பி என்ற எழுத்தாளன்மீது க.நா.சுவிற்கு ஒரு மதிப்பிருந்தது என்பதே உண்மை.

5

சி.சு.செல்லப்பா ‘எழுத்து’ இதழ்வழி புதிய இலக்கிய விமர்சன மரபை ஏற்படுத்தினார். செல்லப்பாவின் அலசல் விமர்சன முறையைக் க.நா.சு ஏற்கவில்லை. எழுத்துவில் வந்த விமர்சனக் கட்டுரைகள் ஒரு படைப்பின் அடிப்படைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தன. க.நா.சு.வின் சுருக்கமான அபிப்பிராயப் பார்வையிலிருந்து அவை வேறானவை. அதில் உள்ள காரணக்காரியங்களை எடுத்துப் பேசின.

செல்லப்பா ‘எழுத்து’வின் ஆரம்ப எட்டு இதழ்களில் க.நா.சு(1959) மிகக் காரசாரமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மிகத் தீவிரமான கராறான மதிப்பீட்டை வெளிப்படுத்திய கட்டுரைகள் அவை. செல்லப்பா கல்விப்புலம் சார்ந்த கட்டுரையாளர்களுக்கு இடம் தர க.நா.சு விலகி ‘இலக்கிய வட்டம்’ (1963) என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். குழு மனப்பான்மையும் தொடர்ந்து இயங்கியிருக்கிறது. அந்த வகையில் பெயர் சொல்ல வேண்டியவர்களைப் பெயர் சொல்லாமலும் விட்டிருக்கின்றனர்.

சி.சு.செல்லப்பா

தேர்ந்த வாசகர்களுக்கு தன் அனுபவம் சார்ந்தும் இலக்கியப் பயிற்சி சார்ந்தும் மற்றவர்களுக்குத் தோன்றாத சில இலக்கியப் பார்வை வசப்பட்டுவிடும். அந்தப் பார்வை அதன் அளவில் உயர்ந்தது; மதிக்கத்தக்கது. அதனை ஒரு அளவுகோலாகக்கொண்டு மட்டும் க.நா.சுவை மதிப்பீடு செய்வது அவரது ஒட்டுமொத்த இலக்கியத்தை குறுக்கிப்பார்ப்பதாகும்.

1965 இல் க.நா.சு டெல்லி சென்றார். எழுத்தாளராக 20 ஆண்டுகள் டெல்லி வாழ்க்கையில் இருந்தாலும் அவ்வப்போது சென்னை வந்து தங்கினார். அப்படி வரும் நாட்களில் ‘கசடதபற’ குழுவினர் க.நா.சுவுடன் நெருங்கிப் பழகினர். ஞானக்கூத்தன், சா. கந்தசாமி, அசோகமித்திரன், நகுலன் போன்றோர் செல்லப்பாவின் எழுத்து இயக்கத்திற்கு மாற்றான தளத்தில் இயங்கினர். க.நா.சு பிந்தி இவர்களுடன் இணைந்து செயல்பட்டார். இந்தக் காலகட்டத்தில் செல்லப்பாவைவிட க.நா.சு மீது அவர்கள் அக்கறைச் செலுத்தினர். திரும்பவும் ஒரு இலக்கிய குழுபோல இயங்கினர்.

நவீனத் தமிழின் எழுச்சியே இந்தச் சிற்றிதழ் மரபுதான் என்றாலும் மணிக்கொடி காலம் தொட்டு குழுவாக இயங்கியதால் அந்தந்த குழுவில் ஓரளவு தலைமை ஏற்றவர்கள் குழுவில் இருந்தவர்களை முன்நிறுத்தினர். க.நா.சுவும் கசடதபற குழுவில் இருந்தவர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எழுத்து இதழில் இயங்கிய இளைஞர்கள் சிலரைக் குறிப்பிடாது விட்டார். அதேபோல செல்லப்பா பதிப்பித்த ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளை வசனக் கவிதையாகக் கொண்டார். மரபைப் போற்றுவது கவிதைக்குரிய குணமில்லை. புதிய உலகைக் காணவைப்பதில் அதன் ஆற்றல் இருப்பதாகக் கருதியதால் ந.பி.யின் கவிதைகளைப் புதிய கவிதை மரபாகக் க.நா.சு ஏற்றுக்கொள்ளவில்லை. புதுக்கவிதைக்கு உரிய உருவமற்ற உருவம் ந.பியிடம் உருவாகவில்லை என்று விமர்சித்தார் க.நா.சு. சி.சு. செல்லப்பா ந. பிச்சமூர்த்தியை முதன்மையானக் கவிஞர் என்று முன்நிறுத்துகிறார்.

6


க.நா.சுவைக் கலைக்காகவே இயங்கிய பிற்போக்குவாதி என்று இடதுசாரிகள் கடுமையாகவே விமர்சித்து வந்தனர். உண்மையில் கலை குறித்து அவர் சொன்ன கருத்துக்களை அவர்கள் ஆழ்ந்து படிக்கவில்லை. முற்போக்காளர்களின் எழுத்துக்களில் கலைநயம் இல்லை என்பது க.நா.சுவின் கருத்து. ‘உருவத்தைவிட விஷயம்தான் ரொம்ப முக்கியம். ஆனால் இலக்கியம் ஆவதற்கு உருவம் முக்கியம் என்பதும் தெரியும். விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது என் ஆசை’ என்கிறார்.

‘வேதாந்தமோ எக்ஸிஸ்டென்ஷியலிசமோ கலையைக் கட்டுப்படுத்த முடியாது. எழுதுகிற என்னையும் கட்டுப்படுத்த முடியாது. கலை வியக்கத்தக்க விதத்தில் புதிய வடிவங்களைத் தோற்றுவிக்கிறது. புதிய எதார்த்தங்களைக் காண்பிக்கிறது. இருக்கக்கூடிய நிஜத்தில் சற்று கூடுதலான நிஜத்தைத் தருவது கலை. இலக்கிய விமர்சன ரீதியாகக் கவனிக்கும் போதுகூட இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட விஷய கனத்தினால்தான் ஒரு நூல் நிலைக்கிறது என்று டி.எஸ்.எலியட் போன்ற கவி விமர்சகர்கள் உணர்ந்து சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விஷயத்தை உணர்ந்துகொள்ள இந்தியச் சிந்தனை, இந்திய வசனத்திற்கு உதவக்கூடும் என்பதே என் நம்பிக்கை. ஆழம் மனுஷ்யத்துவம் என்பது இலக்கியத்தின் ஆதார அடிப்படை. அது காணப்படாத இலக்கியம் எந்த அழகிய ஒரு உருவம் பெற்றாலும் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். உலக இலக்கிய வளத்தை ஓரளவு ஒரு எழுத்தாளன் தெரிந்து வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் படிக்கப் பயிற்சிசெய்து கொள்ளாத இலக்கிய ஆசிரியன் சில சமயம் மட்டமானதையும் உயர்ந்தது என்று எண்ணி ஏமாந்து விடுகிறான். தன் எழுத்தில் மட்டுமில்லை மற்ற எழுத்திலும் தரம் பார்க்க அவன் அறியாது இருந்து விடுகிறான்’.

க. நா. சுப்ரமண்யம்

இவ்விதம் தன் காலம் முழுக்க இலக்கியத்தின் அடிப்படைகள் குறித்து ஏராளமாகச் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறார். இதே கருத்துக்களை அவரது எண்ணங்களை தந்திரமாக மறைத்துவிட்டு க.நா.சுவை இலக்கியத்திற்குச் சமூக உறவு தேவையில்லை என்று சொன்னவர் என்றும் பெருங்காய டப்பா என்றும் வேலையில்லாமல் நாளை கழித்த மனிதகுல விரோதி என்றும் தகப்பனார் காசில் வாழ்ந்த சோம்பேறி என்றும் அமெரிக்க நாட்டின் ஏஜென்ட் என்றும், அமெரிக்க உளவாளி என்றும் இனிப்பும் காப்பியும் தின்னும் பிற்போக்குவாதி என்றும் முற்போக்குவாதிகள் விமர்சித்தனர். முக்கியமாக இடதுசாரிகளின் எழுத்துக்களைக் க.நா.சு கலைநயம் அற்றவை என்று ஏற்க மறுத்தார். க.நா.சு தரும் பட்டியல்களில் அவர்களது படைப்புகள் இடம் இல்லாது போயின. க.நா.சுவை வேறு விதமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். இலக்கியப்பூர்வமாக எதிர்கொள்ளாமல் கொள்கை சார்ந்து எதிரியாகப் பார்த்தனர்.

முற்போக்கு இலக்கியவாதிகளின் மிக முக்கியமான படைப்புகள் எவை என்று எடுத்துவைத்து முதன்மைப்படுத்தியிருக்க வேண்டும். க.நா.சு பாணியில் ஒரு பட்டியலைத் தந்து க.நா.சு தரும் பட்டியல் பொக்கானவை என்று நிரூபித்திருக்க வேண்டும். அவரது பட்டியலில் தம் படைப்பு இல்லை என்ற கண்ணோட்டத்திலேயே அவரைத் தாக்கினர். க.நா.சு முன்வைத்த படைப்புகள் மட்டும் இன்று ஏன் நிலைத்து நிற்கின்றன என்பதை இன்றுவரை கூட ஒரு ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

7


வெங்கட் சாமிநாதன் க.நா.சுவின் தொடர்ச்சிதான். க.நா.சு எழுத்தாளனின் தனித்தன்மை, தரம் என்றதை வெங்கட் சாமிநாதன் சுயத்துவம், தரம், கிராஃப்டில் இருந்து உருவாகாத கலையெழுச்சி என்றெல்லாம் சொன்னார். க.நா.சு இலக்கியம் குறித்தப் பாதையில் ஒருங்குவித்து இயங்கியபோது வெங்கட் சாமிநாதன் இலக்கியத்திற்கு அப்பால் ஓவியம், சிற்பம், நாடகம், கூத்து, மரபுக்கலை என்று நம்மிடம் உள்ள கலை போதாமை குறித்து விரிந்த தளத்தில் நின்று பேசினார். க.நா.சு இது குறித்து எல்லாம் அக்கறை கொள்ளவில்லை. இலக்கியத்தில் கூட அபிப்பிராயம் சொல்கிறார் தவிர இலக்கியக் கலை குறித்து ஆழமான பகுதிகளைப் பேசுவதாக இல்லை என்று விமர்சித்தார். உண்மையில் நாடகம், கூத்தின் நிகழ்த்து வடிவம் குறித்த அக்கறை இருக்கும் வெங்கட் சாமிநாதனிடம் ஒரு நாடகம் இலக்கியப் பிரதியாக இருக்கிறதா என்று காணும் பார்வை இல்லை என்று க.நா.சு குறிப்பிட்டார்.

வெங்கட் சாமிநாதன்

க.நா.சுவின் கவனம் முழுக்கத் தரமான இலக்கியம் என்பதிலேயே இருந்ததால் அவர் தமிழுக்கு மொழிபெயர்த்த உலக இலக்கியங்கள், உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்த காரியங்கள், உலகத் தரம் குறித்து அவர் எழுதி நிறுவ முயன்ற மகத்தான பணிபோல வெங்கட் சாமிநாதனின் இலக்கியச் செயல்பாடு இல்லை. க.நா.சுவின் பணி என்பது தனித்து உழுது உழுது உருவாக்கிய விளைநிலம். வெங்கட் சாமிநாதனின் பணி வரவு செலவு கணக்குப் போன்றது.

8


‘க.நா.சு படித்து எழுதுவதில்லை. உலக இலக்கியங்களை உலக என்சைக்ளோப் பீடியாவை வைத்துக்கொண்டு எழுதினார். பல ஐரோப்பிய மொழிகள் தெரியும் என்று ஏமாற்றினார். அவரது மொழிபெயர்ப்பு பத்திரிகைத் தனமானது. மூல ஆசிரியரின் படைப்பிற்கு நெருக்கமாகவோ படைப்பு மொழி சார்ந்தோ கையாளப்படாதது. சோர்ந்து சோம்பேறியாகி கீழே விழுந்துவிட்ட கிழ நரி க.நா.சு. கசடதபற வகையறாக்களைத் தனது பட்டியலில் புகுத்தி இழந்த செல்வாக்கைப் பெற முயன்றார். அவர்களும் க.நாசு. பட்டியலில் இடம்பெற ஒட்டுண்ணிகளாகச் சுற்றினர்’ என்று பிரமிள் எழுதினார். இதில் சிறிதளவு உண்மை இருக்கலாம். தன்னை அங்கீகரிக்காத கசடதபற குழுவினரைக் க.நா.சு குறிப்பிட்டு எழுபதுகளில் எழுதியதால் பிரமிளுக்கு ஏற்பட்ட கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

க.நா.சு ரொமாண்டிசத்தையும் ஹுயூமனிசத்தையும் பிரித்தறியாமல் குழப்படித்தார் என விமர்சிக்கிறார் பிரமிள். கலை கலைக்காகவே என்று ஆஸ்கர் வைல்ட் சொன்னது கலையம்சத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். க.நா.சு கலை கலைக்காகவே என்பது மனிதருக்காகத்தான் என்று கூறுவது சரியாக ஆராயாமல் சொல்வது என்கிறார். க.நா.சு.வின் ருசியுணர்வு சிந்தனை செம்மையிலிருந்து உருவாக்கிய உணர்ச்சியின் முதிர்ச்சியாக இல்லை என்றும் க.நா.சுவின் பார்வைப் போதாமைகள் கொண்டது எனவும் பலவற்றைக் க.நா.சு இறந்தபின் எடுத்து வைத்து விமர்சித்திருக்கிறார் பிரமிள். அந்தக் கட்டுரையில் க.நா.சு இலக்கியம் தெரியாத ஒரு அரைகுறை என்று காட்டி அவரைவிட தான் இலக்கியம் அறிந்த மேதை என்று நிறுவி துவசம் செய்துவிட வேண்டும் என்ற வெறிதான் பிரமிளிடம் வெளிப்பட்டிருக்கிறது.

பிரமிள்


உண்மையில் க.நா.சு லட்சியவாதத்தை உயர்த்திப் பார்க்கும் ரொமாண்டிசத்தை விரும்பாதவர் என்பதுதான் அவரை ஆராயும்போது கிடைக்கும் தகவல். லட்சியங்களும் உன்னதங்களும் இணைந்து கொண்டிருக்கும் உலகைத்தான் அவர் முன்வைத்தார். ‘பாரபாஸ்’, ‘தபால்காரன்’ போன்ற நாவல்களை மொழிபெயர்த்து முன்வைத்ததைப் பார்த்தாலே இது புரியும். இரண்டாவது, ஒரு படைப்பு கலையம்சப் பூரணத்துவத்தோடு ஏற்று சமூகத்தோடு உறவாட வேண்டும் என்றுதான் எல்லா இடங்களிலும் அவர் குறிப்பிடுகிறார். மூன்றாவது, க.நா.சுவின் ருசியுணர்வு சிந்தனை செம்மையிலிருந்து உருவான உணர்ச்சியின் முதிர்ச்சியாக இல்லை என்பது, க.நா.சுவை எப்படியேனும் மடக்கி மிதிக்க வேண்டும் என்ற நோக்கில் கூட்டமைக்கப்பட்ட வலி. க.நா.சு, கின்கேட், சாந்தர், ஏங்கள்ஸ் போல தத்துவவாதி அல்ல. அவரது ருசியுணர்வு முதிர்ச்சி இல்லாமலா சேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், தாஸ்தாவேஸ்கி, புதுமைபித்தனைக் கொண்டாடினர்.

பிரமிள் அவரது அறுபது ஆண்டு கால இலக்கியப் பணியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. மகத்தான இலக்கிய கனவிற்குத் தன்னை ஒப்புகொடுத்து போராடியதை மதிக்கவில்லை. தன்னை அங்கீகரிக்காத இலக்கியக் குழுவினரை எப்படி நய்யப் புடைக்கலாம் என்ற ஆவேசம் கட்டுரையில் இருப்பதைப் பார்க்கலாம்.

9


க.நா.சுவின் திறனாய்வைக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகால இலக்கிய மோசடி என்கிற தொனியில் கலாநிதி க. கைலாசபதி தனி நூலாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்.

கல்விப்புலம் சார்ந்த படைப்பிலக்கியவாதியான மு. வரதராசனை நல்ல இலக்கிய கர்த்தாவாக ஏற்றுக்கொள்ளாததைத் தான் எழுதினால் தன்னைப் பார்ப்பான், பார்ப்பனர் அல்லாதார் மீது பாகுபாடு உணர்வுடன் பார்க்கிறான் என்பார்கள் என்று கைலாசபதிக்குக் க.நா.சு எழுதிய ஒரு கடிதத்தின் அடிப்படையைச் சொல்லி, க.நா.சுவுக்குப் பார்ப்பன சாதியப்பற்று ஓங்கி இருந்ததாகவும், நிலையிழந்த பார்ப்பனர்களுக்கு நிலைபேறு தேடும் இலக்கியத்தைச் செய்து வந்திருப்பவர் என்றும் கைலாசபதி குறிப்பிடுகிறார்.

க. கைலாசபதி

எஸ்.பொ தமிழகம் வரும்போதெல்லாம் ஞானியுடன் சேர்ந்து அவரைச் சந்தித்து உரையாடுவது என் வழக்கம். அவர் திரும்பத் திரும்பச் சொன்னது, “இந்த வெள்ளாள சாதியினரான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி என்னை யாழ் பல்கலைக்கழகத்தில் நுழையவிடாமல் செய்தனர். என் வாழ்நாள் முழுக்க வெளிநாட்டில் எங்கெங்கோ பணியாற்றி ஜீவித்தேன். கைலாசபதி வெள்ளாளர் அல்லாதவரை வீட்டு வாசலிலேயே நிறுத்திப்பேசி அனுப்பிவிடுவார்,” என்றார். இதை எழுத்திலும் பல இடங்களில் பதிவுசெய்துள்ளார். ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா, க. கைலாசபதியை அவர் வீடு தேடிச் சென்று சந்தித்த அனுபவத்தை ‘நிலவிலே பேசுவோம்’ என்று தனி கட்டுரையாக எழுதியிருக்கிறார். வீட்டுக்குள் அழைத்துச் செல்லாமல் வெளியே நல்ல நிலவொளி வீசுகிறது என்று தெருவில் நிறுத்தி இலக்கியம் பேசி அனுப்பியதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பார்ப்பனன் பார்ப்பன ஜாதிக்குத்தான் சார்பாக இருப்பான் என்று விமர்சிப்போர் உண்டு. அப்படி விமர்சிப்பவர்கள் தங்கள் சாதிய மனநிலையில் என்னவாக இருந்தார் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

க.நா.சு, மௌனியைக் கொண்டாடினார். அவர் பார்ப்பனர். ந. சிதம்பர சுப்பிரமணியத்தைக் குறிப்பிட்டார். அவர் பார்ப்பனர். அதே காலகட்டத்தில் பார்ப்பனர் அல்லாத புதுமைப்பித்தன், மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்றார். புதுமைப்பித்தனை எப்படி பார்ப்பது? சரி பார்ப்பனர் அல்லாத ஆர். சண்முகசுந்தரத்தையும், புதுமைப்பித்தனையும் க.நா.சு புகழாரம் சூட்டியது எதனால்? பார்ப்பனரான தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை நம்பிக்கைத் தராத தோல்வியுற்ற படைப்பு என்றது எதனால்? அதே காலகட்டத்தில் எழுதப்பட்ட வாணியஞ் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்று என்று எழுதியது எதனால்? இப்படி க.நா.சு.வைச் சுயசாதி இலக்கியத்திற்கு முட்டுக்கொடுக்க வந்த விமர்சகன் என்பது நியாயமற்ற புழுகு.

தமிழ்நாட்டிலே பூர்ஷூவா இலக்கியச் சித்தாந்தத்தின் முக்கியமான சக்தியாய் இருந்து வந்தவர் க.நா.சு எனும் விமர்சனமும் உண்டு. க.நா.சு ஏன் ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’, ‘1984’ பேர்லாகர் குவிஷ்டின் ‘பாரபாஸ்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் எனும் எதிர்க்கேள்வியை வைக்க வேண்டியுள்ளது. அதுபோல பூமணியின் ‘பிறகு’, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதவேண்டும். க.நா.சு மீது வைக்கும் இம்மாதிரியான குற்றச்சாட்டுக்குத் தமிழகத்தில் உடனடி எதிர்ப்பு திரட்ட முடியும் என்பதால் பார்ப்பனன் என்ற பழியைப் பல இடங்களில் சுமத்தப்படுகிறது.

ஒரு சம்பவத்தை நினைவு கூறலாம். 1986இல் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பெரிய இலக்கிய நிகழ்வு. க.நா.சு சிறப்பு அழைப்பாளர். க.நா.சு பேசி முடித்தப்பின் பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் மதிய உணவு விருந்திற்கு அப்போது நட்சத்திர அந்தஸ்து பெற்ற சோழா ஓட்டலில் ஏற்பாடு ஆகியிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் க.நா.சு மீது மதிப்புகொண்ட வாசகர் பா. லிங்கம் அவரைச் சந்தித்தார். பா. லிங்கம் கதைகளையோ கவிதைகளையோ எழுதாதவர். அவர் க.நா.சுவிடம் தன் வீட்டிற்குச் சாப்பிட வாங்களேன் என்றதும் உடனே துணைவேந்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்தை நிராகரித்துவிட்டு எளிய வாசகரின் அழைப்பை ஏற்றுச் சென்றார். லிங்கம் க.நா.சுவின் மீது மதிப்பு கொண்டிருந்தாலும் அவர் அப்போது பெரியாரியவாதி. மட்டுமல்லாது அவர் தன்னை ஒரு தலித் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்பவர். அதே சமயம் இலக்கியத்தில் சார்பு இலக்கியங்களை முற்றாக நிராகரிப்பவர். உயர்ந்த தரத்தில் உள்ள படைப்புகளையே முன்வைப்பவர். அவர் வீட்டில் பெண்கள் க.நா.சுவின் பாதம் தொட்டு வணங்கி வரவேற்றிருக்கிறார்கள். பெரியாரியவாதியான லிங்கம் அவ்விதம் செய்யவில்லை. உணவு முடிந்து லிங்கத்துடன் இலக்கியம் குறித்து உரையாடி மகிழ்ந்திருக்கிறார். உலக இலக்கியம் குறித்து வெகு ஆழமாகப் பேசும் லிங்கம் இன்று 73 வயதிலும் தீவிர வாசிப்பிலிருந்து சோர்வடையாமல் வாசித்துக்கொண்டே இருக்கிறார்.

ஒரு சமயம் லிங்கம் பேசிக்கொண்டிருக்கும் போது “அப்போது பெரியாரியவாதியாக என்னைச் சொல்லிக் சொண்டாலும் இப்போது தோன்றுகிறது… க.நா.சு பாதம் தொட்டு வணங்கி இருக்க வேண்டும். அவர் இல்லை என்றால் நவீன இலக்கியம் இல்லை” என்றார்.

க.நா.சுவை நவீனத் தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கி நிலைநிறுத்திய பிதாமகன் என்பார் லிங்கம். லிங்கத்திற்கும் க.நா.சுவிற்கும் இடையிலான உறவு குறித்து தஞ்சை பிரகாஷ், நா. விஸ்வநாதன், சி.எம். முத்து முதலியவர்கள் எழுதியுள்ளனர். நா. விஸ்வநாதன் ‘நான் க.நா.சு.வின் ரசிகன். லிங்கம் க.நா.சு.வின் வெறியன்!’ என்றெல்லாம் கூட எழுதியும் சொல்லியும் வந்துள்ளார்.

தமிழகத்தில் திராவிட கழகம் வளர்ந்து ஆட்சியைப் பிடித்ததில் பிராமணர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. தி.க., தி.மு.கவின் நீண்ட கால பார்ப்பன எதிர்ப்பும் அவர்களுக்கு ஒரு வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது. அந்த வெறுப்பு நுட்பமாகச் செயல்பட்டிருக்கிறது. இந்த மோதலை மட்டும் வைத்துக்கொண்டு க.நா.சு.வின் இலக்கியப்பணியை அவ்வளவு லேசில் நிராகரிக்க முடியாது.

‘பூர்ஷூவா இலக்கிய சித்தாந்தத்தின் முக்கியமான சக்தி’, ‘பணம் சம்பாதிக்க எழுதியவர்’, ‘அப்பனின் பணத்தை மூட்டைக் கட்டிக்கொண்டு சென்னைக்கு வந்த பிற்போக்குவாதி’, ‘சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எறியும்போது மக்களின் இலக்கியங்களில் இறங்காமல் இலக்கியம் என்ற பெயரில் எதிர்ப்புரட்சி எழுத்தாளராக இருந்தவர்,’ ‘சுமாரான ஆங்கில அறிவைக்கொண்டு பம்மாத்து செய்தவர்,’ ‘பல எழுத்தாளர்கள் காந்திய இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டபோது க.நா.சு கவலையற்ற இலக்கிய வாழ்வு நடத்தியவர்’ இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகள் க.நா.சுவின் மீது விழுந்துகொண்டே இருந்தன.

ஓட்டல் முதலாளிக்கு இரண்டுமாத வாடகை பாக்கி கட்டமுடியாததால் க.நா.சு வெளியேற்றப்பட்டார். தன் வறுமையை வெளியே சொல்லாதவர். எழுதி பிழைப்பதைக் கேவலமாகப் பார்க்கத்தான் வேண்டுமா. க.நா.சு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லைதான். அப்படியென்றால் அதை விமர்சிக்கும் கைலாசபதி அரசு வேலையை விட்டுவிட்டு ஈழப் போராட்டத்தில் முன் நின்றாரா? இலக்கியத்தில் பெருஞ்சாதனை செய்ய வேண்டும் என்ற பெருங்கனவோடு வந்தவர் க.நா.சு. அப்படி ஒரு சாதனையை தன் மகன் நிகழ்த்த வேண்டும் என்றே வளர்த்தவர் க.நா.சுவின் தந்தை. தன் மகன் எழுத அமர்ந்தால் காபி போட்டு தரும்படி க.நா.சுவின் பாட்டியிடம் வற்புறுத்தியவர். பாட்டியிடம் சின்ன மனக்கசப்பில் (செல்லச் சண்டை) சென்னை செல்கிறேன் என்று கிளம்பி ரயில்நிலையம் வந்துவிட்ட மகனைத் தேடி ஓடிவந்து க.நா.சுவின் சட்டைப்பையில் இருந்த பணத்தை அள்ளித்திணித்து வழியனுப்புகிறார்.

இப்படி ஒரு தந்தை வாய்க்கவில்லையே என்று ஏங்கும் மனநிலை உள்ளவர்களாலேயே க.நா.சு விமர்சனம் என்ற பெயரில் ஏளனம் செய்யப்பட்டார். எந்த முகாமில் இருந்தாலும் பிள்ளைகள் நல்லவிதமாய் வளர்ந்து புகழ்பெற வேண்டும் என்று விரும்பாத தந்தைமார்கள் உண்டா. க.நா.சு ஓரிடத்தில் ‘ஜேம்ஸ் ஜாய்ஸூம், டி.எஸ்.எலியட்டும், எஸ்.ரா பவுண்டும் வகுத்துக்கொடுத்த மரபுக்கு நான் வாரிசு’ என்று எழுதியதை எடுத்துவைத்துக்கொண்டு புரட்சிக்கு மாறான எதிர் புரட்சியாளர்களின் இலக்கிய வழியை வற்புறுத்திய பூர்ஷவா என்று குறிப்பிடுகிறார் கைலாசபதி. சமயம் வாய்க்கும் போதெல்லாம் திரும்பத் திரும்பக் குறிப்பிடுகிறார். இதே அளவு அல்லது இதற்கு மேலாகக் கொண்டாடிய டால்ஸ்டாயையும் சேக்ஸ்பியரையும் தாஸ்தாவேஷ்கியையும் பல இடங்களில் உயர்த்திப் பேசுவதை வெட்டி எடுத்து மறைத்துவிட முயற்சிக்கிறார் என்பதிலே கைலாசபதியின் நோக்கம் தெரிந்துவிடுகிறது. மதிப்பிடுவது என்றால் முழுமையாக மதிப்பிடுவதுதான் நேர்மையான முறையாகும்.

‘வ.ரா ஒரு தேசத் தொண்டன். சுதந்திரப் போராட்ட தியாகி. பாரதியின் எழுத்து வன்மையை எடுத்துரைத்து மகாகவி என்று நிறுவிய பெருமகனார். இவர் எழுதிய நாவல்களை அவரது நோக்கங்களுக்குப் பாராட்டலாமே தவிர நாவல்களாகப் பாராட்ட முடியாது என்பதும், பொதுமக்களுக்கு விளங்கக்கூடியதாகவும், சாதாரணக் கதையைக் கொண்டதாகவும், சமூக – அரசியல் விஷயத்தையும் இலட்சியங்களையும் எடுத்துரைப்பதாகவும் இருப்பதால் ‘தியாகபூமி’ நாவலை ‘இலக்கியமாக அங்கீகரிப்பது சற்று சிரமம்தான்’ என்று க.நா.சு வ.ராவை விமர்சிக்கிறார். உலக இலக்கியம் என்று க.நா.சு கூறும்போது, தாஸ்தாவேஸ்கி, டால்ஸ்டாயை மனங்கொண்டு மட்டுமே ருசிய இலக்கியத்தை பேசுகிறார். இதற்கு மாறாக கைலாசபதி ‘மார்க்ஸூம் கார்க்கியும் உலக நாவல் மேதைதான் என்கிறார். க.நா.சு இவர்களை முன்வைப்பதில்லை. உலக நாவல் இலக்கியம் என்பதைப் பரந்த பொருளில் பேசாமல் மிகக் குறுகிய அர்த்தத்திலேயே பார்க்கிறார் க.நா.சு. உலக இலக்கியத்திற்குத் தரும் அளவுகோல், தேசியம், சமூகம், மக்கள் இயக்கம் முதலியவற்றை மறந்தும் மறைத்தும் நிராகரித்தும் எழுதப்படுகின்ற ‘தூய’ இலக்கியத்துக்குச் செய்யப்படும் வந்தனையாகும். முற்போக்கு எழுத்து வகைக்கு தீங்காகும். க.நா.சு.வைவிட எத்தனையோ மடங்கு தேசபக்தி உடையவர் கல்கி. எனவே கல்கியின் இலக்கியம் உயர்வானது என்ற விதமாய் பலப்பட விமர்சித்திருக்கிறார் கைலாசபதி.

கைலாசபதி, ஆக்கம் என்பதே சமூகப் பிரச்சனைகளை எடுத்துரைத்து அதனைத் தீர்க்கிற வழி வகைகளைப் பொதுசமூகம் முழுமைக்கும் சொல்ல வேண்டும். அதை செய்யாதன இலக்கியம் அல்ல. அவன் இலக்கிய ஆசிரியன் அல்ல. கலைநயம் என்பதோ வடிவ ஓர்மை என்பதோ இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எவ்வளவு பிரச்சனைகளைப் பொதுஜனங்களுக்கு எளிய விதத்தில் எடுத்து ஒரு படைப்பு முற்போக்கு சிந்தனையோடு பேசுகிறதோ அதுவே அதன் இலக்கியத் தகுதி என்பதைத் தெளிவாக முன்வைக்கிறார்.

கைலாசபதியின் இலக்கியக் கொள்கைக்கு நேர் எதிரானது க.நா.சு வற்புறுத்தும் இலக்கியக் கொள்கை. ஒரு படைப்பு படைப்பிற்கே உரித்தான ஒரு உருவில் சொல்லப்பட வேண்டும். நுணுக்கமும் செறிவும் கூடி நம்பகத்தன்மையின் வலிமையைப் பெற்றிருக்கவேண்டும். சமூகத்தின் ஏதோ ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டுதான் படைப்பு படைக்கப்படுகிறது. அது ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்வதாக இருக்கக் கூடாது. பிரச்சாரம் செய்வது இலக்கியத்தின் வேலை இல்லை. சார்பற்று ஒரு பிரச்சனையை அணுகிப் பார்ப்பதே படைப்புக்கலை. ஆசிரியரின் கொள்கை முழக்கம் அல்ல. வாசகனுக்கு வாழ்வின் உண்மைகளை வெளிச்சமிட்டுக்காட்டுவது என்பது க.நா.சு.வின் இலக்கியப் பார்வை. கைலாசபதி, முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்த இந்தப் படைப்பிலக்கியக் கொள்கை உதவாது. வர்க்க முரண்களைப் பேசுவதற்குத்தான் இலக்கியம். அவற்றை நிராகரிக்கிற க.நா.சு ஒரு அரைவேக்காட்டு விமர்சகர் என்கிறார். கலைக்கு முக்கியத்துவம் தேவையில்லை, கருத்துக்குத்தான் முக்கியம் என்பது கைலாசபதியின் கொள்கை. கலைநயம் அற்ற ஒரு படைப்பு வாசகனை ஈர்க்காது என்பது குறித்து அவர் அக்கறை காட்டியதே இல்லை. முற்போக்கு இலக்கியத்தை நிராகரிக்கிற க.நா.சுவை நிராகரிக்க வேண்டும் என்ற தெளிவான திட்டத்தோடுதான் விமர்சிக்கிறார்.

டி.கே.சி நல்ல கவிதைகள் இவை என்று பொறுக்கி எடுத்துக்காட்டியதுபோல க.நா.சு புனைகதைகளில் இவை நல்ல இலக்கியம் என்று பொறுக்கியெடுத்துக் காண்பித்தார். டி.கே.சி பட்டியல் தயாரித்தது போலவே க.நா.சு.வும் தன் மனச்சாய்வுக்கு ஏற்ப ‘சிறந்த நாவலாசிரியர்கள்’, ‘சிறந்த சிறுகதை ஆசிரியர்கள்’ என்று பட்டியல் தயாரித்து மோசடி செய்தார் என்கிறார் கைலாசபதி. க.நா.சு மனச்சாய்வோடு முன்வைத்தப் பட்டியலை எடுத்துக்கொண்டு ‘இவையெல்லாம் நாவல்கள் அல்ல. இவர்கள் எல்லாம் சிறுகதையாளர்களே அல்லர். இவைகள் மூன்றாம் தர எழுத்துக்கள். இவர்கள் மூன்றாம் தர எழுத்தாளர்கள்’ என்று ஏன் இன்றுவரை ஆய்வு செய்து நிராகரிக்கவில்லை. நிராகரித்துவிட்டு இவையே மிகச் சிறந்த இலக்கியம், மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் என்று ஒரு மாற்றுப் பட்டியலை முன்வைக்கவில்லை என்பதுதான் விவாதத்திற்கு உரியதாகும். கைலாசபதி அதைச் செய்யவேயில்லை. கைலாசபதி மட்டுமல்ல அன்று தொடங்கி இன்று எழுதும் முற்போக்கு விமர்சகன் வரையும்தான் அது நிகழவில்லை.

க.நா.சு மட்டும்தான் பட்டியல் போட்டாரா. 100 ஆண்டுகளாகவே மேலை விமர்சகர்கள் பட்டியல் இட்டே வந்துள்ளனர். பட்டியல்காரர் என்று நக்கல் அடிப்பவர்களுக்கு இந்த வார்த்தைகளுக்கு மேல் எதுவுமே தெரியாது. உதாரணமாகப் பஞ்சாங்கம் போகிற போக்கில் க.நா.சுவை மடக்கி துவசம் செய்துவிட்டது போல மேடையில் ‘பட்டியல்காரர்’ என்ற ஒரு சொல்லை மட்டும் வழங்குவார். உண்மையில் க.நா.சு உருவாக்கிய இந்தப் பட்டியல் தரமற்றவை என எதிர்க்கருத்துடைவர்கள் நிரூபிக்க க.நா.சு முன்வைத்த நட்ஹாம்சனின் ‘நிலவளம், மார்ட்டின் தூகார்ட்டின் ‘தபால்காரன்’ நாவல்கள் பொக்கானவை என்றோ ஆல்பர்ட் கனம்யூவின் ‘விருந்தாளி’, செல்மா லேகர்லேவின் ‘தேவமலர்’ போன்றவை நச்சு இலக்கியம் என்றோ நசிவு இலக்கியம் என்றோ விமர்சனத்தின் மூலம் நிறுவியிருக்க வேண்டும். அதைச் செய்யாதவரை இவர்களை வெற்று வாய்ச்சவடால் பேர்வழிகள் வெறும் பொச்சரிப்பு பேர்வழிகள் என்பதே சரியாக இருக்கும்.

தனி மனிதனிடம் வெளிப்படும் படைப்பு ஆளுமையை அவன் உருவாக்கும் படைப்பிலும் கூடிவருகிறது என்ற விதமாய் க.நா.சு நிரம்ப இடங்களில் பேசியுள்ளார். பாரதி, புதுமைப்பித்தன், இளங்கோ, வள்ளுவன், கம்பன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன் இவர்களிடம் தனித்துவமான படைப்பு மேதமை இருந்ததை எடுத்துக்காட்டியுள்ளார். இந்தத் தனிமனித ஆளுமை என்பதைச் சாதியில் உயர்ந்த பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று கூறுவதாகக் கைலாசபதி திரித்து பொதுஜன விரோதி க.நா.சு என்றும் நிறுவ முயன்றுள்ளார்.

1910லிருந்து 1960 வரை கல்வி கற்ற பார்ப்பனர்களே அதிகம். அவர்களே இலக்கியப் பணியில் ஈடுபட்டனர். அவர்களிலிருந்து சிலரை முக்கியமானவர்களாகக் கருதினார். அதன்பின் பிற சமூகத்தவர் கல்வியில் காலூன்றி இலக்கியத்திலும் கோலோச்சினர். இதையெல்லாம் மறைத்துவிட்டுத்தான் க.நா.சுவைப் பார்ப்பனருக்கு முட்டுக்கொடுக்கும் விமர்சகர் என்கின்றார். எஸ். வையாபுரிப்பிள்ளையின் பணியை டி.கே.சியின் பணியை இலக்கிய மோசடி என்று விமர்சிப்பதும் இவ்வகையானதுதான்.

10


க.நா.சு இலக்கிய அரசியல் செய்யவில்லையா என்றால் செய்திருக்கிறார் என்றே தெரிகிறது. க.நா.சுவின் கலைநயம், கலை ஆளுமை என்ற கோட்பாடுகளுக்கு மிகவும் அணுக்கமாக விளங்கிய ப. சிங்காரம், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், ஜி. நாகராஜன், எம்.எஸ். கல்யாணசுந்தரம் என்று முக்கியமான வரிசையே உண்டு. வண்ணதாசனை முன்னிறுத்தாததற்கு காரணம் தி.க.சி தனக்குச் செய்த துரோகத்திற்கு ஈடு என்று கொள்ளலாம். கி.ரா முழுக்க முழுக்க மேற்கத்திய இலக்கிய கொள்கைக்கு நேர்மாறான நாட்டுப்புற அழகியலை முன்வைத்தார். நவீன பிராமண இலக்கியவாதியிடம் கூடிவராத தமிழர் பண்பாட்டு அழகியலை ஒரு விமர்சன கண்ணோட்டத்துடன் சாகசமாக எழுத்தில் நிகழ்த்தி காட்டிய சிங்காரத்தின் கலை க.நா.சுவிற்குப் பிடிபடவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளும் மனவிரிவு இல்லை. சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை எங்கும் சிறப்பித்துச் சொன்னதில்லை. அவ்விதமான தமிழ்க் குடியானவர்களின் பண்பாடு சார்ந்த நாவலை முன்வைக்கவில்லை. அப்படைப்புகள் ஒருவகையில் மேலை நாடுகளில் உருவாகியிருந்த நவீன இலக்கிய அழகியலுக்கு நேர்மாறாக இருந்தன. க.நா.சு மொழிபெயர்த்தவை அத்தகைய இலக்கியங்களே. பரத்தையரின் உலகை நவீன குறுநாவலாகத் தந்த ஜி. நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’பற்றி எங்கும் பேசவில்லை. ஆ. மாதவன் அதிகம் தி.மு.க. சார்பு இதழ்களில் எழுதினார் என்பதினால் கவனப்படுத்தக் கூடாது என்று விட்டிருக்கலாம். டி. செல்வராஜின் ‘மலரும் சருகும்’ கு. சின்னப்ப பாரதியின் ‘தாகம்’ இப்படி எல்லாம் சொல்ல வாய்ப்பு இருந்தாலும் இடதுசாரி பார்வை அணுகவிடாமல் மறைத்திருக்கிறது. க.நா.சுவை வீழ்த்த வேண்டிய இடம் எதுவென்றால் கலை நயத்தை மற்றொரு கலை நயத்தால் நிறுத்துகிறபோதுதான். இந்த வகையில் க.நா.சுவின் மௌனங்களைக் கலைத்து ஆராயலாம்.

ப. சிங்காரம்

ஆரம்பத்தில் சில நல்ல கதைகளை எழுதிய ந. முத்துசாமியைப் பாராட்டியவர் க.நா.சு. அதைவிட சிறந்த எழுத்தாளரான பா. செயப்பிரகாசம், ராஜேந்திரசோழன் கதைகளைக் க.நா.சு கண்டுகொள்ளவில்லை. ராஜேந்திரசோழன் தீவிர இடதுசாரி முகாமில் இருந்துகொண்டு மனித அகப்பிரச்சனைகளை நுணுக்கத்துடன் எழுதினார். இவர்களின் நூல்கள் 70களின் தொடக்கத்தில் வர ஆரம்பித்தன. க.நா.சு டெல்லியில் ஒதுங்கி ஆங்கில இதழ்களுக்கு மட்டும் எழுதிக்கொண்டிருந்ததால் இவரது பார்வைக்கு அப்படைப்புகள் செல்லவில்லை என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுபோல கல்யாணசுந்தரம், சார்வாகன், ஆதவன், ஆர். சூடாமணி, அம்பை, சம்பத், விட்டல்ராவ், தஞ்சை பிரகாஷ் என்று க.நா.சு முக்கியத்துவம் படுத்தாமல் விட்ட ஒரு வரிசை இருக்கிறது. 1965இல் இருந்து 1980 வரை 15 ஆண்டுகள் டெல்லியிலிருந்து 65க்குப் பிறகு எழுத வந்தவர்களை முக்கியமாக 70களில் எழுத வந்தவர்களை அதிகம் படிக்காததால் க.நா.சு கவனப்படுத்தாமல் போனதற்கு இது காரணமாக இருக்கலாம். என்றாலும் திராவிட இயக்கத்தவர்களின் எழுத்துக்களை முற்போக்கு இயக்கத்தவர்களின் எழுத்துக்களை, ஜெயகாந்தன், செயப்பிரகாசம் முதலியவர்களை முன்வைக்காததற்கு அவரது கலை குறித்த நிலைப்பாடு என்றே வைத்துக்கொண்டாலும் சில கணக்கு வழக்குகளை வெளித்தெரியாமல் வைத்துக்கொண்டு பாரபட்சம் காட்டியிருப்பதும் தெரிகிறது.

தெளிவான ஒன்று 70களின் துவக்கத்தில் கசடதபற குழு க.நா.சுவை அரவணைத்திருக்கிறது. அதில் அதன் இயக்கத்தில் பின் நின்றவர்களையும் எழுதியவர்களையும் முக்கியத்துவப்படுத்தியிருக்கிறார் க.நா.சு கொடுக்கல் வாங்கல் சார்ந்த கைங்கரியம் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் சோடையான படைப்புக்களைத் தந்தவர்கள் அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்த இலக்கிய உரசல்களுக்கிடையிலேயும் வண்ணதாசன் கதையை ஆங்கிலத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார். சற்றுப் பிந்தி கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ குறித்து எழுதியிருக்கிறார் என்று பார்க்கும்போது டெல்லி சூழல் எழுபதுகளின் இலக்கிய எழுச்சியை முழுமையாகக் காணமுடியாமல் செய்திருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

க.நா.சுவையும் மீறி கல்விப்புலத்திலும் சிற்றிதழ்களை நடத்திய புதியவர்களிடமும் இலக்கியம் ஆழங்கால்பட்டு நிலைத்திருக்கிறது என்றாலும் இலக்கியம் குறித்த பார்வையில் க.நா.சுவின் வழியே ஆற்றல் வாய்ந்ததாகவே இருக்கிறது. முக்கியமாகப் படைப்பாக்கத்திற்கு அணுசரணையாகவும் கைவிளக்காகவும் இருக்கிறது. க.நா.சு வற்புறுத்துவது ஆய்வாளனுக்கான வேலையை அல்ல, படைப்பாளிக்கான வேலையை. இந்த வித்தியாசத்தைக் கைலாசபதி ஏற்றுக்கொள்ளவே இல்லை. க.நா.சு இலக்கிய உருவம் குறித்தும் எழுத்தில் பரிசோதனை என்பது குறித்தும் பேசியதை எல்லாம் கைலாசபதி தவறாகவே முன்வைத்தார். எழுதப்படும் படைப்பிற்கேயான ஒரு உருவம் பொருத்தமாக இருக்கும். அவ்வுருவம் தவிர்த்து வேறு ஒரு உருவம் சிறப்பாக அமையாது என்பதே உருவச் சிறப்பு. அதனை தன் படைப்பிற்கான வெளிப்பாட்டு உத்தியாகக் கொள்ளவேண்டும் என்றார். அதேபோல இலக்கியத்தில் பரிசோதனை என்பதை புதியமுறையில் கதைசொல்வது என்றார். அந்த விதத்தில்தான் லத்தின், அமெரிக்க சிறுகதையாளரான போர்ஹேவின் ‘குருட்டாம்போக்குவை முதன்முதல் மொழிபெயர்த்தார். மாய யதார்த்தத்தில் எழுதப்படும் கதைக்குத் தமிழில் அறிமுகம் தந்தார். ‘சுவடு தெரிகிற தளத்திலே செல்ல மறுத்து புதுத்தடம் போட்டுக்கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடைய செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம்’ என்று 1959 ஜனவரி எழுத்து முதல் இதழில் குறிப்பிடுகிறார்.

பின்நவீனத்துவ அழகியல் விதவிதமான கதைச்சொல்லல் முறைகளுக்கு இடம் அளிப்பதையே முதன்மையாக வற்புறுத்தியது. இந்த வகையில் பின்நவீனத்துவ உரையாடல் இல்லாத காலத்திலேயே மிகச் சரியானப் பார்வையை அன்றே தொடர்ந்து வற்புறுத்தினார் என்பது முக்கியமான விஷயம். கைலாசபதி கஞ்சி இருந்தால் போதும் கலையமே தேவை இல்லை என்பது போலத்தான் வறட்டுத்தனமாக வற்புறுத்தினார்.

புதுக்கவிதையை வளர்த்தது செல்லப்பாவின் எழுத்து இதழ் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் க.நா.சு. இது குறித்து எழுத்து இதழ் பிறப்பதற்கு முன்னமே சரஸ்வதியில் காத்திரமான கட்டுரைகள் எழுதினார். புதுக்கவிதை என்பது முதலாளித்துவ எழுத்து வடிவம். அதை எழுத வேண்டாம் என்று கைலாசபதி கடுமையாக எதிர்த்தும் செல்லப்பா, க.நா.சு இருவராலும் தமிழில் புதிய கவிப்போக்கை காலூன்றச் செய்தது என்பதும் வரலாறு.

கலை கலைக்காகவே என்பதை க.நா.சு கலைநயம் என்ற நிலைப்பாட்டில் பயன்படுத்தினார். கைலாசபதி பொதுமக்களுக்கு எதிரான முதலாளிமார்களின் ரசனைக்காக எழுதப்பட வேண்டும் என்று க.நா.சு விரும்புவதாகத் தவறாகவே கணித்தார். இலக்கியம் என்றாலே பிரச்சனையை வாசகன் முன்வைத்து விவாதிப்பதுதான். வாசகனை ஈர்க்கிற சக்தி படைப்பில் இருக்க வேண்டும். அந்த ரசனை இயல்பாகக் கூடிவரவேண்டும் என்றார் க.நா.சு. ரசனை என்பதற்குப் பதிலாக சில இடங்களில் படைப்பிலே வெளிப்படும் உண்மை ஒளியே நல்ல படைப்பு என்பதை காட்டி விடும் என்றும் கூறியிருக்கிறார்.

கலை கலைக்காகவே என்று சண்டமாருதம் செய்த க.நா.சுவின் வாரிசுகள் இன்றளவும் வலுவாகவே இருக்கின்றனர். கலை மக்களுக்காகவே என்று சொல்லும் வாரிசுகளும் வலுவாகவே இருக்கின்றனர். இந்த இரண்டு குழுவிலும் கலை குறித்த விவாதங்கள் நடந்தது க.நா.சு குழுவில்தான் என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. கைலாசபதி குழுவில் அப்படி ஒரு விவாதம் நடைபெறவே இல்லை.

இலக்கியம் குறித்த விவாதங்களில் அற்பத்தனங்கள், அல்லறை சில்லறை விஷயங்கள், வன்மங்கள், காழ்புணர்வுகள் வெளிப்பட்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் மீறி படைப்பின் உள் விவகாரங்களை இவர்களே அதிகம் பேசினர். ஒருவருக்கொருவர் இட்ட இலக்கியச் சண்டைகளில் விவாதப் பொருளாகி அதில் இருக்கும் நல்ல அம்சங்கள் ஏற்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தன. க.நா.சு.விடம் இருந்த குறைகளைச் சி.சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தரராமசாமி, பிரமிள், ந. முத்துசாமி விரிவாகவே விமர்சித்து மதிப்பீடு செய்துள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ இந்த குழுச் சண்டையால் தீவிர இலக்கியம் குறித்த புரிதல் வாசகர்களிடம் ஏற்பட்டது. கூடுதலாக இடதுசாரி விமர்சகர்கள் தி.க.சி, நா. வானமாமலை, கா. சிவத்தம்பி, சேஷாத்திரி போன்றோர் க.நா.சு மீது வைத்த விமர்சனங்கள் அங்குள்ள போதாமைகளை உணரச் செய்தன. வரலாற்று உணர்வும் சமூக உணர்வும் அரசியல் உணர்வும் படைப்பாளிக்குத் தேவை என்று உணர்ந்து செழுமைக்கு வழிவகை செய்தன. அவ்விதமான இலக்கிய விவாதம் கைலாசபதியை முன்வைத்து முற்போக்கு முகாமில் நடைபெறவே இல்லை. அவர் நிறுத்திய இடத்திலிருந்து புதியவர்களும் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.

இலக்கியம் என்பதில் க.நா.சு வற்புறுத்தியது கலைநோக்கு. கைலாசபதி வற்புறுத்தியது பிரச்சார நோக்கு. க.நா.சு ஒரு நூலை வரவேற்றால் அதற்கு முக்கியத்துவம் உண்டானது. கைலாசபதி அப்படி ஒரு நூலை முன்வைத்தால் அப்படியான ஒரு முக்கியத்துவம் உண்டாகவில்லை. அப்படி அவர் சொன்னதும் உண்டானால் கூட ஐந்தாறு ஆண்டுகளில் முக்கியத்துவம் இழந்து மறக்கடிக்கப்பட்டன. க.நா.சு முன்வைத்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் இன்றளவும் இழக்கவில்லை. இன்றும் அவை செவ்வியல் தன்மை கொண்டவையாகவே உயர்வு பெற்றிருக்கின்றன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முக்கியமான பொறுப்பாளராக இருக்கும் இடதுசாரி எழுத்தாளர் உதயசங்கரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘யாவர் வீட்டிலும்’ தொகுப்பைப் பற்ரி, ‘கதைதள் மிகவும் சிறப்பாக கூக்குரலில்லாமல் கூச்சல்போடாமல், போலி அறிவுத்தளம் காட்டாமல் அமைக்திருக்கின்றன என்பது மிக மிக விசேஷம். கதைகள் எல்லாம் ஒரு விட்டேத்தியான நகைச்சுவையுடன் உருவாகி இருக்குக்கின்றன. கதையின் பார்வையிலும் ஓட்டத்திலும் இளமை ததும்புகிறது. இவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது’ என்று எழுதியதோடு ‘டேனியல் பெரியநாயகத்திம் புல்லாங்குழல்’, ‘பெயிண்டர் பிள்ளையின் ஏழுநாள் பொழுது’ கதைகளைச் சிறப்பித்து எழுதியிருக்கிறார் என்பதையும் ஒரு சான்றாக முன்வைக்க வேண்டியுள்ளது.

11

க.நா.சு தன் பட்டியல்களில் அடிக்கடி பெயரை மாற்றினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அப்படி மாற்றியப் பெயர்களில் இலக்கியத் தகுதி இல்லாதனவா என்று விவாதித்திருக்க வேண்டும். அப்படியும் விவாதிக்கப்படவில்லை. புதியவர்கள் தரும் நல்ல படைப்புகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தந்திருக்கக் கூடும். அப்படி முன்வைத்த படைப்புகள் மதிப்பு மிக்கவையாகவே இருக்கின்றன. சிவசங்கரி, “மாமா என் படைப்புகளைப் பேசுவதில்லை” என்று வருத்தப்பட்டிருக்கிறார். தஞ்சை பிரகாஷ் க.நா.சுவின் மிக நெருங்கிய இளம் நண்பராக இருந்தார். உங்கள் படைப்புகள் குறித்து நல்ல விதமாய் க.நா.சு ஒன்றும் சொல்லவில்லையே என்று நண்பர்கள் கேட்டபோது, என் படைப்புகள் அவருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ என்று சொல்லியிருக்கிறார்.

தான் சொன்னால் அதற்கு ஒரு மதிப்பு உண்டு என்று அறிந்திருந்த க.நா.சு அதை தனக்குச் சாதகமாக சில கணக்கு வழக்குகளுடன் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டு உண்டு. என்னைப் பொருத்தவரை இது மிக மிகச் சிறிய உண்மையாகத் தெரிகிறது. இந்த அழுக்காறுகளை வைத்து க.நா.சுவைக் குறைத்து மதிப்பிடத் தோன்றவில்லை. அவை தனிமனித பலகீனங்கள். ஒரு க.நா.சு இல்லாது போயிருந்தால் தமிழ்ச் சூழலில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. கல்கி, கோவி. மணிசேகரன், சாண்டில்யன், அகிலன், நா. பார்த்தசாரதி, பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, லட்சுமி, அனுராதா ரமணன், இந்துமதி முதலியோர் எழுதியப் படைப்புக்களை இலக்கியத் தன்மையாக ஏற்றுக்கொண்டு சீரழிந்த இலக்கியத் தலைமுறை உருவாகியிருக்கும். அதை தனிமனிதராக நின்று தடுத்ததோடு புதிய இலக்கியச் சூழலையே உருவாக்கினார். தமிழில் நல்ல படைப்புகள், சிறந்த படைப்புகள் என்று எழுதப்படுவதற்குக் காரணம் அவர் வழிவகுத்துத் தந்திருக்கும் பாதைதான். உண்மையில் க.நா.சு போட்டது மகாச் செம்மையானப் பாதை. அவரது மௌனம் சில அரசியல் தந்திரங்கள் கொண்டவை என்பது தமிழில் நிகழ்ந்திருக்கலாம். அவர் தீவிரமாகவும் சற்றே அவசரத்துடனும் சகல இலக்கியத்தின் உன்னதங்களை விரித்துவைத்த விதத்திலும், மொழிபெயர்த்துத் தந்த பணியிலும் தனது மகத்தான பங்களிப்பைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்றே கூறுகிறேன்.

12

‘நான் தான் இலக்கிய விமர்சகன். க.நா.சு விமர்சகர் அல்ல’ என்று சொல்லும் திறனாய்வாளர்களால் இலக்கியம் வளர்ந்திருக்கிறதா என்றால், திடமாகச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் அழுத்தமாகச் சொல்வதாக இருந்தால் நல்ல இலக்கியம் வளர்வதற்குப் பதில் சார்பு இலக்கியம் வளர்ந்தது என்று சொல்லலாம். படைப்பாளியைவிட விமர்சகனின் கொம்பு உயரமானது. தான் நினைத்தால் முட்டித்தூக்கி வீசத் தெரியும். படாமல் துதிபாடவும் தெரியும் என்ற நினைப்பு க.நா.சு.விற்குப் பின் ஒரு கேடாக அமைந்துவிட்டது. இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் படைப்புகள் இலக்கியப்பூர்வமான செழுமை கொண்டவை அல்ல வறட்டுத்தனமானவை. இவ்விதமானவர்கள் அப்படி ஏதேனும் சொல்லி நிலைநிறுத்தியிருக்கிறார்களா என்றால் இல்லை. விமர்சகன் விரும்புவதை இலக்கியப் பிரதியில் தோண்டிப்பார்க்கும் சார்புநிலைதான். இங்கு மேலான படைப்புகளை முன்நிறுத்துவதற்குப் பதிலாக தான் கற்ற புதிய திறனாய்வு கோட்பாடுகளை வெளிப்படுத்திக்கொள்ள பிரதியைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு உருவானது. இவர்களால் இலக்கிய வளர்ச்சி பெரிய அளவில் தமிழில் நிகழவில்லை.

க.நா.சு உலக இலக்கியத்தை முன்வைத்துப் பேசினார்; எழுதினார்; மொழிபெயர்த்தார். ‘விருந்தாளி’ ஒரு புரட்சிக்காரனின் விடுதலை வேட்கையை மிகத் தூக்கலாகச் சொல்லும் கதைதான். ‘பாரபஸ்’ நாவல் கிறித்துவ நம்பிக்கையை மறுக்கிறது. ‘தேவமலர்’ கிறித்துவத்தின் அடிப்படையான மனித நேயத்தைப் புத்தம் புதிய கோணத்தில் காட்டுகிறது. அவர் மொழிபெயர்த்த ஒவ்வொரு கதையும் சில சித்தாந்தங்களுக்கு அனுசரணையாகவும் இருக்கிறது. எதிர் நிலையில் நின்று விமர்சிக்கிறதாகவும் இருக்கிறது. அப்படி என்றால் ஏன் அவ்விதம் மொழிபெயர்த்தார். வாழ்வை வெவ்வேறு விதத்தில் கலை நயத்தோடு சொன்ன படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது தெரிய வரும். க.நா.சு ஓரிடத்தில் சொல்கிறார், “மார்க்சும் சரி சார்த்தரும் சரி படைப்பு சக்திக்கு உதவி செய்ய வந்தவர்கள்.” பிரச்சாரம் கலையாக இருக்கலாம். கலை பிரச்சாரமாக இருக்கக்கூடாது என்பதுதான் க.நா.சு வற்புறுத்துவது.

திராவிட எழுத்தாளர்கள் காமரசத்தை விரிவாக எழுதி அதனைக் கண்டிப்பது போலப் பாவனை செய்வதைப் போலி எழுத்து என்கிறார். அதைவிட காமம் வாழ்வின் அடிப்படை சிக்கலாக அமைந்திருப்பதை ‘மோகமுள்’ யமுனா அப்பட்டமாகச் சொல்லும்போதும் கு.ப.ராவின் ‘சிறிதுவெளிச்சம்’ கதை நாயகி சொல்லும்போதும் அதன் உண்மைத்தன்மை இலக்கியத் தரத்தை கூட்டுகிறது என்று சொல்கிறார். ‘இருளிலிருந்து’ கதையில் கண சுகத்திற்குப் பிறகு எழுந்த அந்த ஆழ்ந்த வெறுப்பு என்று எழுதும்போது இன்னொரு கோணத்தைக் காட்ட முயல்கிறத்தன்மை இலக்கியத் தரத்தை கூட்டுகிறது என்கிறார்.

நட்ஹம்சனின் ‘நிலவளம்’, செல்மா லேகர்லேவின் ‘மதகுரு’, ‘விலங்குப் பண்ணை’, மார்ட்டின் துகார்டின் ‘தபால்காரன்’ என்று மகத்தான உலக நாவல்களில் 20க்கு மேல் தமிழில் மொழிபெயர்த்து தரமான நவீன இலக்கியச் சூழலைத் தமிழில் உருவாக்கினார். அதேபோல போர்ஹேசின் ‘பாபிலோனில் லாட்டரி’ ஆண்டென் செக்காவின் ‘புத்திரசோகம்’ என்று உலகின் மிகச்சிறந்த 100 கதைகளுக்குப் பக்கமாக மொழிபெயர்த்துத் தந்து தமிழ் இலக்கியச் சூழலை வளமாக்கித் தந்திருக்கிறார்.

என்னுடைய கவிதைத் திறனாய்வு வரலாற்று நூலில் விரிவாகவே புதுக்கவிதைக்கு அவர் ஆற்றியப் பணியை தொகுத்து தந்திருக்கிறேன். க.நா.சுவைப் பொறுத்தளவில் விமர்சனத்தை விட இலக்கியம் முக்கியம் என்று அது குறித்தே இயங்கியவர்.

கல்விப்புல திறனாய்வாளர்கள் இலக்கியப் பிரதிகளைத் திறனாய்வு செய்தார்கள். இதில் ஒருவர் ஓர் ஆளுமையாக உருவெடுத்து இலக்கியத்தை வளர்த்தார் என்று சொல்வதற்கு இல்லை. தமிழை முறையாகக் கற்று புனைகதையோ கவிதையோ எழுதியவர்கள், திறனாய்வு செய்தவர்களுக்கு இலக்கியம் என்பது புரிபடவில்லை என்றுகூட எழுதினார். அவர் காலத்தில் அப்படித்தான் இருந்தது.

13

க.நா.சு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் விமர்சனம் செய்துவந்தார். அதன் அடிப்படை, இது இலக்கியத் தகுதி கொண்டது, இது இலக்கிய தகுதிக்கு உரியது அல்ல என்பதுதான். க.நா.சு திறனாய்வுக் கோட்பாடுகளைப் பெரிதாக இலக்கியப் படைப்புக் கருவியாகக் கொள்ளவில்லை. இலக்கிய ஆக்கத்திற்குக் கோட்பாடு உகந்ததல்ல என்று சொல்லி வந்திருக்கிறார். அவர் செய்வது விமர்சனம் அல்ல என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். உண்மைதான்; மாற்றுக்கருத்து இல்லை. க.நா.சு.வின் விமர்சனம் என்பது உலக இலக்கியத்தில் மிகச்சிறந்ததைப் படித்துப் படித்து அதன் அடிப்படையில் உருவாகிவந்த ஓர் அணுகுமுறை. ஒரு விமர்சனப் பார்வை, ஒரு தேர்வு, ஒரு மதிப்பீடு. இதன் பயன் என்ன என்பது தரமானதை வாசகர்முன் வைப்பதும் தமிழ் இலக்கியப் பிரதேசத்தைச் செழுமையாக்குவதும்தான்.

தமிழில் தன்னை மிகச் சிறந்த வாசகர் என்று நம்பும் கல்வியாளர்கள் உண்டு. பல திறனாய்வுக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்துவிட்டு விமர்சிக்கிறவர்களும் உண்டு. உலக இலக்கியத்தைக் கற்றுத்தேர்ந்த வாசகர்களாக அவர்கள் இல்லை என்பதுதான் நகைமுரண். நுண்ணுணர்வுகளே இலக்கியத்தின் அடிநாதமாக இருந்து படைப்பாக மாற்றுகிறது என்ற எளிய விஷயம்கூட அவர்களுக்குப் புரிவதே இல்லை. சம்பட்டி கொண்டு பாறையைப் பிளப்பதாக நம்பிக்கொள்கிறார்கள். ஒரு ஆலம் தளிரின் மெல்லிய வேர் பாறையின் மயிறிழைக் கீறலில் இறங்கி பாறையைப் பிளந்து வளரும் விந்தை குறித்து காண்பதே இல்லை.

தமிழில் திறனாய்வாளர்கள் தங்களின் விருப்பமான சித்தாந்தங்களுக்கு உகந்ததாகப் பிரதி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களிடம் எது நல்ல இலக்கியம் என்று கேட்டால், அவர்களது சித்தாந்தங்களுக்கு அனுசரணையாக எழுதப்பட்டவற்றையே முன்நிறுத்துவர். குறிப்பிட்ட சித்தாந்தங்களுக்கு அப்படியே ஒத்துப்போகாதது கலை இலக்கியம் என்று க.நா.சு புரிந்து செயல்பட்டிருக்கிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் சமணத்திற்கும் இடம் உண்டு, பௌத்தத்திற்கும் இடம் உண்டு, சைவத்திற்கும் இடம் உண்டு, வைணவத்திற்கும் இடம் உண்டு, இஸ்லாத்திற்கும் இடம் உண்டு, கிறித்துவத்திற்கும் இடம் உண்டு, சித்தர் மரபிற்கும் இடம் உண்டு, மார்க்சியத்திற்கும் இடம் உண்டு, பகுத்தறிவாதத்திற்கும் இடம் உண்டு, நாட்டுப்புற நம்பிக்கைகளுக்கும் இடம் உண்டு, காவிய நாயகர்களுக்கும் இடம் உண்டு, காவிய வில்லன்களுக்கும் இடம் உண்டு, கதைப்பாடல் நாயகர்களுக்கும் இடம் உண்டு, கிளைக்கதை நாயகர்களுக்கும் இடம் உண்டு. இப்படி எல்லாவற்றிற்கும் இடம் அளித்து காலத்தைக் கடக்க முயலும் தன்மை கொண்டது இலக்கியம். சமூகத்தை மேலதிகமாகப் புரிந்துகொள்ளச் செய்வது. இந்தப் புரிதலில்தான் எது இலக்கியம் ஆகியிருக்கிறது என்று க.நா.சு சொல்கிறார். தன் சுதந்திரத்தை உணர்ந்து செயல்படாதவன் கவியாக இருக்க முடியாது. அரசகவி பதவி, கூலிக்கு மாரடிக்க வைக்கும். ஒரு கட்சிக்கு, ஒரு கொள்கைக்கு ஒப்புக்கொடுப்பவனால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. கவிஞன் ஒரு சமூகத்தில் சுதந்திரமாகச் செயல்படவேண்டும். கம்பரின் ராமாயணம் இலக்கியம் ஆகியிருக்கிறது. உமறுப்புலவரின் சீறாப்புராணம் இலக்கியமாக ஆகவில்லை என்றால் மதவெறுப்பாளராகப் பார்க்க முடியுமா. அப்படியும் பார்க்கப்படலாம். சிலப்பதிகாரம் உயர்ந்த இலக்கியமாக அமைந்திருக்கிறது. பெருங்கதை அவ்விதமான தகுதியைப் பெறவில்லை என்றால் கொங்கு வட்டாரப்பற்று உள்ளவர்கள் க.நா.சுவுக்கு காவிய தரிசனமே தெரியாது என்கின்றனர். ஆர். சண்முகசுந்தத்தின் ‘நாகம்மாள்’ இலக்கியமாகியிருக்கிறது என்றால் ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ இலக்கியம் இல்லையா? அதை இலக்கியம் என்று சொல்லவில்லையானால் நீ விமர்சகனே கிடையாது என்கின்றனர். இது திருக்குறள் வடிவச் செறிவிலும் வாழ்வை நுட்பமாகச் சொன்ன விதத்திலும் உலக அளவில் உயர்ந்து நிற்கும்போது ஏன் நாலடியாருக்கு அந்த முக்கியத்துவம் இல்லை என்பது போன்றது இதுபோன்ற புலம்பல்கள்.

இலக்கியத்தில் எல்லா பார்வைகளுக்கும் இடம் உண்டு. எழுதுவதற்கு ஜனநாயகத்தன்மை உண்டு. எழுதியவை எல்லாவற்றையும் ஜனநாயக முறைப்படி இலக்கியம் என்று சொல்ல முடியாது. வாழ்வின்மீது தேடிய உண்மை ஒளியின் பாரபட்சமற்ற வெளிச்சத்தால் ஒரு நூல் இலக்கியத் தகுதி பெறுவதும் பெறாமல் போவதுமான இரு எல்லைகளில் நிறுத்துகிறார்.

க.நா.சுவின் அளவுகோலின் படியே இலக்கியத் தகுதிப்பெறாத சில நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நிர்ப்பந்தத்தாலோ உதர முடியாத சூழலாலோ நேர்ந்திருக்கலாம். திரும்பத் திரும்ப இப்படைப்பை அவர் வாசகர் முன்னிறுத்தியதில்லை. க.நா.சுவின் இலக்கியக் குறிக்கோள் அது அல்ல. புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், பாரதி போன்றோரைத்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்கிறார். இதைத்தான் க.நா.சு விரும்பும் இலக்கிய நோக்கமாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.

அதேசமயம், ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’, ‘புயலிலே ஒரு தோணி’ முதலான சில மகத்தான படைப்புகள் குறித்து எங்கும் பேசியதில்லை. இந்நூல்களைப் படித்தார் என்பதற்கான தடயமும் இல்லை. படிக்காமல் தவறவிட்டிருப்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். அல்லது இப்படி முக்கியமான படைப்புகள் குறித்து அவரது இலக்கிய நண்பர்களாகிய மற்ற எழுத்தாளர்கள் அவருடன் விவாதித்து அவரது மதிப்பீட்டை கேட்டதாகவும் இல்லை. ஒருவேளை படித்து அதைப்பற்றி பேசாமல் இருந்திருந்தால் மிகப் பெரிய இலக்கிய துரோகமாகவே கருதுவேன்.

முன் வைத்திருக்க வேண்டிய தகுதியானப் படைப்புகளைக் க.நா.சு முன்வைத்துப் பேசாமல் இருந்தால் அவைகள் குறித்துப் பேசியிருக்க வேண்டும். அது இலக்கிய வளர்ச்சிக்கு உரமாகப் படிந்திருக்கும். அப்படியான விவாதம் நிகழவில்லை. நடந்தது சித்தாந்த பிரதிகள் சார்ந்தது.

ஒவ்வொரு படைப்பாளியிடமும் கூடிவந்த தனித்துவமான சொல்முறையில் புதைந்து கிடக்கும் நுணுக்கங்களை அர்த்தப் பரிமாணங்களை எடுத்து வைத்துப் பேசுவதைக் க.நா.சு தன் விமர்சன முறையில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார். இதனை இலக்கிய ரசனை என்றோ இலக்கிய நயம் என்றோ சொல்லலாம். இது திறனாய்வு இல்லை. நயம் பாராட்டுதல் என்று திறனாய்வில் பல விரல்களை முறித்துத் தூர எறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த இலக்கிய ரசனைதான் இலக்கியத்தை வளர்க்கிற மிக மிக அடிப்படையான ஆணிவேர். அதை க.நா.சு செய்தார். அப்படியான இடங்களை எழுதிவிடுகிற திறன் கொண்டவர்களைக் கலைஞன் என்று குறிப்பிட்டார். அவ்விடங்களைக் கண்டடைந்தவர்களைத் தேர்ந்த வாசகன் என்கிறார். செல்லப்பா கைக்கொண்ட அலசல் விமர்சனத்தில் பிரதிக்குள் என்னென்ன விஷயம் இருக்கிறது என்று சொல்லப் பார்க்கிறது. அப்பிரதி உண்டாக்கும் இலக்கிய அனுபவத்தைத் தவறவிடுகிறது. எனவே, அலசல் விமர்சனத்தை முக்கியமானதாக நான் நினைக்கவில்லை என்கிறார். நல்ல இலக்கியம் வாசகன் உள்ளத்தில் அவனே நினைத்துப் பார்க்காத விதத்தில் ஆழத்தில் கிடக்கும் அனுபவங்களைத் தீட்டி புதுமையான விதத்தில் புரிதலை ஏற்படுத்தும் கலை என்பதைத்தான் க.நா.சு சொல்கிறார். அல்லது அம்மாதிரியான இடங்களை எடுத்து நுட்பமாக விளக்குகிறார். பாரதியின் வசனக் கவிதையிலே வரும் ‘காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது’ ‘வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலந்திருப்பதுபோல கலந்தன’ என்று எழுதியிருக்கும் இடங்களைப் போல எழுத்தாளர்கள் வரிகளில் கொண்டு வந்திருக்கும் நுட்பமான விஷயங்களைக் க.நா.சு பேசுகிறார்.

14

உரைநடை எழுத்தாக்கத்தில் வார்த்தை செட்டு என்கிற விஷயம் மணிக்கொடி எழுத்தாளர்கள்தான் சிறப்பாகக் கையாளத் தொடங்குகின்றனர். அதற்குமுன் இல்லை. பாரதியிடம் வேகம், தெளிவு, எளிமை இருந்தது. வார்த்தை செட்டு அமையவில்லை. இளங்கோவிடமும் வள்ளுவரிடமும் மிகக் குறைவான வார்த்தைகளில் பயன் கண்டவர்கள். பின்வந்தவர்களிடம் அப்படிச் சொல்ல வேண்டியதில் மட்டும் குறியாக எழுதியதில்லை. ஈ.வெ.ராவின் நடையில் இலக்கியத் தரமான வார்த்தை செட்டு வெளிப்பட்டது. ஆனால் கல்கி, சாண்டில்யன், ராஜாஜி, மு.வ வரிசையில் யாருக்கும் வார்த்தை செட்டு என்ற செறிவு வாய்க்கவில்லை. பத்து வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைப் பக்கம் பக்கமாக எழுதினார்கள். இலக்கியத் தரத்திற்கு அதுவும் தரமானப் படைப்பிலக்கியங்களில் வார்த்தை செட்டு என்பது மிகவும் அவசியமான ஒரு குணம் என்று உதாரணங்களோடு எடுத்துக்காட்டியிருக்கிறார்.

புதுமைப்பித்தன்

எழுதுவது எவ்வளவு நுட்பமான வேலையோ அதைப்போலவே வாசிப்பதும் நுட்பமான வேலை. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, ‘சிற்பியின் நரகம்’, ‘கயிற்றரவு’, ‘கபாடபுரம்’ போன்ற பல கதைகளில் சொல்லாமல் விடப்பட்ட பகுதிகள் பல. அதை கண்டடைந்து அனுபவிக்கத் தெரிந்தவனே தேர்ந்த வாசகன். எல்லாவற்றையும் வாசகனுக்கு விளக்கி எழுதுவது ஜனரஞ்சக எழுத்தாளனின் வேலையாக இருக்கிறது. அப்படி வாழைப் பழத்தை உரித்துத் தரவேண்டும் என்கிற வாசகன் இலக்கிய வாசகன் அல்ல. ஜனரஞ்சனமாக எழுதுபவன் இலக்கியவாதியும் அல்ல. வாசகன்தான் தன் வாசிப்பின் வழி மேலே மேலே நல்ல இலக்கியவாதிகளின் எழுத்தை நாடிவர வேண்டும். புரியவில்லை என்பது வாசகனின் போதாமை தவிர எழுத்தாளனின் குறையல்ல. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா படைப்புக்களை மறுபடி இரண்டாம் முறை கவனமாகப் படித்தால் புரிந்துகொள்ளக்கூடிய ஆக்கங்கள்தான். அந்த அக்கறை உள்ளவர்கள்தான் வாசகர்கள் என்றெல்லாம் ஜனரஞ்சக வாசகனையும் ஜனரஞ்சக எழுத்தாளனையும் 50 ஆண்டு காலம் தொடர்ந்து இலக்கியத்திற்குப் புறம்பானவர்கள் என்று கடுமையாக விமர்சித்து ஒற்றை மனிதராகத் தமிழ் இலக்கியச் சூழலை வளப்படுத்தி தந்தார். அந்தத் தகுதி க.நா.சுவுக்கே உண்டு. இந்தக் காரியம் க.நா.சுவால் ஆற்றப்படாமல் இருந்தால் இங்கு என்னவிதமான எழுத்துக்கள் இலக்கியமாகக் கொண்டாடப்பட்டிருக்கும் என்பதை இலக்கிய வாசகன் யாராலும் புரிந்துகொள்ள முடியும்.

மரபை நூற்றுக்கு நூறு உதறி புதுமைசெய்துவிட முடியாது. நவ நாகரிகம் என்ற போர்வையில் ஒதுக்கப்பட்ட மரபில் உள்ள செழுமையை எழுத்தாளன் லேசில் ஒதுக்கிவிடமாட்டான். அதை எதிர்கால கண்ணியுடன் இணைப்பான். மரபில் ஊன்றி புதிய மரபை உருவாக்குவது இவ்விதம்தான். வள்ளுவனும், இளங்கோவும் நேற்று இன்று நாளை என்ற மரபுக் கண்ணியை ஆழமாகப் பிணைத்தவர்கள். இயல்பாகவே படைப்பு வீரியத்தால் மரபுக்கு இப்படி முன் பின் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்துகிறவன்தான் பெரும் படைப்பாளி என்கிறார்.

குரலை அளவுக்குமீறி உயர்த்தி, ஒலிக்கும் வார்த்தைகளை உபயோகிக்கிற வைரமுத்து, மேத்தா, காமராஜன் முதலிய சினிமாக் கவிகள் கவிகளே அல்ல என்று விமர்சித்திருக்கிறார். உண்மை என்பது எல்லா அம்சங்களையும் அடக்கியது. கட்சி உண்மையும் சித்தாந்த உண்மையும் பாரபட்சமான உண்மைகள்தான். உண்மை என்பதில் அவையும் அடங்கலாம். உண்மையின் எல்லாத் திறப்புகளையும் சொல்கிறவன்தான் கவி. வானம்பாடி கவிகளும் திராவிட கட்சி கவிகளும் நல்ல கவிதை எழுத முடியாமல் திணறுவதற்கு இந்த உண்மை மறைப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்று விமர்சித்திருக்கிறார்.

கண்ணதாசன்

கண்ணதாசனை உள் அமைதி இல்லாத கவிஞன் எத்தனை எழுதினாலும் அவன் கவிதை கவிதை போலவே இருந்தாலும் அவனைக் கவியாக மதிப்பதற்கில்லை என்று சிறப்புகொடுத்து விமர்சித்திருக்கிறார். நகுலன், ஷண்முக சுப்பையா, ஞானக்கூத்தன் முதலியோர் குரலை உயர்த்தாத நவீன கவி என்றெல்லாம் சிறப்பித்திருக்கிறார். எனினும் தன் திரைப்படப் பாடல்களின்வழி கண்ணதாசன் கவித்துவமான கணங்களை மொழியில் வசப்படுத்தியிருக்கிறார் என்பது என் கருத்து. க.நா.சுவின் நோக்கம் தீவிர இலக்கியம் வேறு வெகுஜன இலக்கியம் வேறு என்ற பாகுபாட்டை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் திரைத்துறையினரை எதிர்நிலையில் வைப்பதாகக் கொள்ளலாம்.

க.நா.சுவால் நிராகரிக்கப்படுகிறவர்கள் சில நல்ல கவிதைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவரால் அங்கீகரிக்கப்படுபவர்களின் கவிதையில் கவித்துவம் கூடிவராத கவிதைகளும் இருக்கின்றன. க.நா.சு இலக்கிய இயக்கப் போக்குகளில் நின்று மறுக்கிறார் என்று புரிந்துகொண்டாலும் வாசகனாக இருப் பக்கம் உள்ள நல்ல கவிதைகளைப் பொருட்படுத்தத்தான் ஆகவேண்டியிருக்கிறது.

ஓரளவு புதுக்கவிதை தமிழில் காலூன்றி 25 ஆண்டுகளில் வளர்ந்திருக்கிறது, வளர்கிறது என்றாலும் தமிழ் மரபுக் கவிதையில் நிகழ்ந்த சில சாதனைகளைப்போல நிகழவில்லை. ஆன்மிக மேன்மையைப் பக்தி இலக்கியத்தில் திருமூலர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், நம்மாழ்வார், ஆண்டாள் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். சங்க இலக்கியம் மனித உறவுகள், நடப்பு விஷயங்களில் ஒரு உச்சத்தை எட்டியிருக்கிறது. வள்ளுவர் வாழும் வாழ்க்கையில் எது மேன்மையான விஷயம் என்பதை வலுவாகப் புதிய வாழ்க்கை நெறியாகவே காட்டினார். மானுட வாழ்விற்கு ஒரு உச்சமான அர்த்த பரிமாணத்தை இளங்கோ, கம்பன், சாத்தனார் தன் காவியங்களின்வழி வழங்கினர். இதுபோல இன்னும் மரபுக் கவிதையின் சாதனைகள் தமிழில் நிகழ்ந்திருக்கின்றன.

ஷண்முக சுப்பையா, நகுலன், பசுவய்யா, சி. மணி, ஞானக்கூத்தன், தருமு சிவராம், என்று ஒரு தலைமுறையினரும், கலாப்ரியா, ஆனந்த், தேவதேவன், சுகுமாரன், சமயவேல், விக்ரமாதித்தன் என்று இளையவர்களுமாக இருபது முப்பது பேர் நன்றாக எழுதுகிறார்கள். இன்றைய நவீன உலகத்தின் வாழ்க்கை முறைகள் மாறியிருக்கின்றன. உறவுகளில் எண்ணங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதையெல்லாம் கிரகித்துக்கொண்டு புதுக்கவிதையில் ஒரு வலுவான புதிய இலக்கிய மரபை இன்றும் யாரும் ஏற்படுத்தவில்லை. அப்படி நிகழும்போதுதான் புதுக்கவிதையின் சாதனையாகக் கொள்ளப்படும் என்று புதிய இலக்கிய மரபு குறித்த தனது பார்வையை முன்வைத்து எழுதியிருக்கிறார். இந்தப் புதுக்கவிதைக்காரர்களின் பலம் பலவீனம் குறித்து விமர்சித்திருக்கிறார்.

டி.கே.சி கம்பன்தான் மிக உயர்ந்த கவி என்று சொல்லுகிறார். க.நா.சு கம்பனைவிட விஷயங்களைச் சிறப்பாகச் சொன்னவர்கள் இளங்கோவும் வள்ளுவரும் என்கிறார். சொல்ல வந்ததை வழியவிடாமல், அதிகமாகச் சொல்லாமல் சில விஷயங்களை மட்டும் பொறுக்கியெடுத்துச் சொல்வதில் தமிழில் ஒரே ஒரு கவியை மட்டும்தான் இளங்கோவுக்கு ஈடாகச் சொல்ல இயலும் – திருவள்ளுவரை. தேர்ந்தெடுத்துச் சொல்லுகிற விஷயங்களைச் சாதாரணமாக வார்த்தைகளில் வடித்துக் காட்டுகிற கவிதாசக்தி இருவருக்கும் நிறையவே இருந்தது. கம்பனால் அதிகமாகச் சொல்ல இயன்றது என்பது உண்மை. அதாவது சொல்ல வந்ததற்கு அதிகமாகவே சொல்லிவிடுகிற இடங்கள் அதிகம். இது ஒரு குறை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வள்ளுவரிலோ இளங்கோவிலோ இந்த மாதிரி குறையை என்னால் காண முடியவில்லை. அதனாலே வள்ளுவரும் இளங்கோவும் கம்பரைவிடப் பெரிய உத்தமக் கவிகளாக எனக்கு தோன்றுகிறார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்.

பாரதி சொன்ன தெளிவுற அறிந்திடுதல், தெளிவுற மொழிந்திடுதல் என்ற அடிப்படையில் கம்பன் சிலபடி பின்நகர்வதாகச் சொல்கிறார். ‘மிகத் தெளிவான நடையை உண்டாக்கிக்காட்ட கவிப்படுகிற பாடு வெளியே தெரிவதில்லை. அநாயசமாகச் செய்ததுபோல இருந்தாலும் நடைத்தெளிவு மிகவும் சிரமப்பட்டுத்தான் உண்டாகிறது என்று சொல்வது மிகையாகாது. ஏதாவது அகஸ்மாத்தாக ஏற்பட்ட விஷயமாக இந்தத் தெளிவு அல்லது கலைஞனின் உழைப்பின் பயனா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பாரதியில், இளங்கோவில், திருக்குறளில் இருக்கிற தெளிவு கம்பனில் இல்லை என்று சொன்னால் கம்பன் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளக்கூடும். உண்மை அதுதான். கம்பன் இரண்டு பண்பாடுகளுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டவன். தமிழ் பண்பாடும் சமஸ்கிருதப் பண்பாடும் அவனை நெருக்குகின்றன. இளங்கோவுக்கு இரண்டாவது பண்பாடு பற்றி அக்கறை இல்லை. வள்ளுவருக்கும்தான். பாரதியின் காலத்தில் மூன்று பண்பாடுகளுக்கு வாரிசு அவன். ஆனால் அவன் எதை தேர்ந்தெடுத்தான் என்பது தெளிவு. அதில் குழப்பமில்லை என்றும் கம்பனை வேறு கோணத்திலும் விமர்சித்திருக்கிறார்.

‘இளங்கோ ஒரு கைதேர்ந்த நாவலாசிரியர்போல பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் – பல விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருக்கிறார். மதுரையிலும் புகாரிலும் இந்தச் சாமியாருக்கு விலைமாதர் தெருவில் என்ன வேலை என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் ஒரு விலைமாதையே கதாநாயகியாக ஏற்றுக்கொள்கிற தைரியம் இந்தச் சாமியாருக்கு இருந்ததுதான் விஷயம். துறவு மனப்பான்மை உள்ளவர்களுக்குப் பணத்தினால் என்ன பரத்தினால் என்ன?’ என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இளங்கோவின் மேதமையை க.நா.சு சொல்லாமல் விட்டதில்லை. அப்படியொரு படைப்பு உச்சமென்று கருதுகின்றார்.

மரபு இலக்கியத்தில் திருமூலர், காரைக்கால் அம்மையார், தாயுமானவர், வள்ளலார் என்று பலரைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

சங்க கவிதையானாலும் சரி, வள்ளுவர் காலத்து கவிதையானாலும் சரி, கம்பன் காலத்து கவிதையானாலும் சரி உரை இல்லாமல் படித்து அனுபவிக்கிற ஒரு பயிற்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். உரையாசிரியர்கள் அவர்கள் நோக்கில் விளக்கம்தர முயல்கிறார்கள். கவிதை நமக்குத் தரும் அனுபவம் என்பது இல்லாமல் போகிறது. சங்க காலம் இறந்த காலம் அன்று! கவிதை எட்டுகிற உள்ளங்களில் அது எப்போதுமே நிகழ்காலம்தான். அதுதான் இலக்கியத்தின் ஆதார சக்தி. நேரடியாகப் பெறும் வாசிப்பு இன்பம் அவனது இதயத்திற்கு நெருக்கமானதாக மாறுகிறது என்றுகூட வாசிப்பு குறித்து ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். மாணவர்கள் கவிதைகளையும் கதைகளையும் நாவல்களையும் கோனார் நோட்ஸாகத்தான் படிக்கிறார்கள். பின் எப்படி இலக்கிய உணர்ச்சி சித்திக்கும்.

15

‘கலை கலைக்காகவே, கலை மக்களுக்கானது அல்ல’ என்ற கொள்கையைச் சேர்ந்தவர் என்று வசைப்பாடுபவர் உண்டு. எந்தக் கலையும் கலைக்காகவே என்று இருக்க முடியாது. கலை தனிமனிதனுக்கு, சமூகத்திற்கு, எதிர்காலத்திற்கு, இந்தக் காலத்திற்கு என்று பயன்நோக்கி இருக்கவே செய்யும். அதனைப் பிரச்சாரம் இல்லாமல் எழுதுவதைத்தான் கலை என்கிறேன். இலக்கணம் இலக்கியத்திற்காக மட்டும் இருக்க முடியுமா என்று கேட்கத் தோன்றுகிறது என்றெல்லாம் தன் இலக்கியப் பார்வையைச் சொல்லியிருக்கிறார். பிரச்சாரத்தையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதை இலக்கியம் இல்லை என்கிறார். இலக்கிய மார்க்சியர்கள் பிரச்சாரத்தை இலக்கியம் என்றனர். அதனால் க.நா.சுவைத் தாக்கி எழுதினர்.

க.நா.சு சொல்லிவிட்டார் என்பதற்காக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் குறைவாக மதிப்பிட்ட ‘அம்மா வந்தாள்’, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ தமிழ் நாவல் பரப்பில் மேலான இடத்திலேயே வைத்துப் பேசப்படுகின்றன.

சங்கரராமின் ‘மண்ணாசை’, ஆர். சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ தொடங்கி வண்ணநிலனின் ‘கடல்புரத்தில்’, நாஞ்சில்நாடனின் ‘தலைகீழ் விகிதங்கள்’ வரை ஐம்பதாண்டுகால பரப்பில் தமிழில் எழுதப்பட்ட முப்பத்தைந்து நாவல்களைச் சிறந்த நாவல்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெவ்வேறு சந்தர்பங்களில் சொல்லியிருக்கிறார். இன்றளவும் இந்நாவல்களே இலக்கிய மதிப்பை இழக்காமல் செவ்வியல் எல்லைக்குள் சென்றுகொண்டிருக்கின்றன. தனித்துவமானப் பண்பை வெளிப்படுத்தாத – ஒரு எல்லை வரையில் வாழ்வின் கோலங்களைக் காட்ட முயன்ற தமிழ் நாவல்களில் பத்துப் பதினைந்து வரை முன்வைத்துப் பேசியிருக்கிறார் (எஸ்.வி.வி.யின் ‘இராமமூர்த்தி’, ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’, சங்கரராமின் ‘பெண் இனம்’, லா.ச.ரா.வின் ‘புத்ரா’…)

‘சாயாவனம்’ நாவலில் சர்க்கரை ஆலையைப் பற்றி வரும் பகுதியும் ‘தலைமுறைகள்’ நாவலில் கிணற்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் பகுதியும் சரியாக வரவில்லை என்றும் சொல்கிறார்.

தமிழ் படித்த கல்விமான்கள்தான் இலக்கியத் தரத்தை எட்டாத கல்கி, அகிலன், கோ.வி., மணிசேகரன், ராஜம் கிருஷ்ணனின் நாவல்களைப் பாராட்டி நாவல் வளர்ச்சியைச் சீரழித்தவர்கள் என்று விமர்சித்திருக்கிறார். ஜெயகாந்தன் நாவல்கள் இன்று திரும்ப படிக்க முடியாத கலைநயம் குன்றியப் படைப்புகளாக இருக்கின்றன என்று குறிப்பிடுகிறார்.

க.நா.சுப்பிரமணியம் அக்கால பிராமணப் பிள்ளைகள் போல அரசு அதிகாரியாகவோ ஆங்கிலப் பேராசிரியராகவோ வேலையில் சேர்ந்து சுகபோகமான ஒரு வாழ்வைத் தேர்வு செய்திருக்கலாம். மறுத்து இலக்கியவாதி என்ற ஒரு பாத்திரத்தை மிகச் சிறிய வயதிலேயே தேர்வு செய்தார். அந்த லட்சியத்திற்கு உரமாக இருந்தவர் அவரது தந்தையார் கந்தாடை நாராயணசுவாமி. தன் மனைவி இறந்தப்பின் இரண்டாம் தாரத்தை வரித்துக்கொள்ளாமல் தன் மகனின் கனவிற்குத் தீவிரமாகத் துணை நின்றார். க.நா.சுவின் இலக்கிய வாழ்விற்குத் தன் சம்பாத்தியம் முழுமையையும் தந்தார். அப்பாவுடன் சின்னச் சண்டைப்போட்டுக் கிளம்பிச் சென்றாலும் இரயிலடிக்கு ஓடிவந்து க.நா.சுவின் சட்டைப்பையில் செலவிற்குப் பணத்தைத் திருப்பி அனுப்பினார். க.நா.சுவிற்கு வாய்த்த தந்தை ஒரு அபூர்வமான மனிதர்.

க.நா.சுவின் உலக இலக்கிய வாசிப்பு தமிழ் இலக்கியத்தின் மீது மூடியிருந்த பனித்திரையை விலக்கிக் காட்டியது. உலக இலக்கியத்தின் தரத்திற்குத் தமிழில் நவீன இலக்கியம் இல்லை என்ற பொறி தட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சின்ன மின்னல் கீற்றுப் போல இரு பேராளுமைகள் தோன்றி மறைந்ததும் தெரிகிறது. தேசிய எழுச்சிக் காலத்தில் பாரதியும் மணிக்கொடி வழி புதுமைப்பித்தனும் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களாக மின்னி அற்ப ஆயுசில் மரணமடைந்த காலச்சதியையும் காண்கிறார். பாரதி, புதுமைப்பித்தன் இல்லாத தமிழ் இலக்கியப் பரப்பு வெறுமைகொள்ளத் தொடங்கிய தருணத்தில் க.நா.சு தரமற்ற உலகில் என்னதமான இலக்கியங்களைத் தோற்றுவிக்க முடியும் என்ற ஒரு ஆவேச பாய்ச்சலை தன்னுள் உயிர்ப்பித்துக்கொண்டு தனியொரு மனிதனாக இலக்கியக் களத்தில் இறங்குகிறார்.


தீவிரமான வாசிப்புப் பழக்கம் அவரை வாநோதராகவே மாற்றிவட்டது என்பதற்கு ஒரு சிறிய நிகழ்வு. வெங்கெட்சாமிநாதன் ஒரு புகழ்பெற்ற நாடகத்தைப் பார்க்க க.நா.சுவை அழைத்துச் செல்கிறார். பார்வையாளர்கள் நாடகத்தில் மூழ்கியிருக்கின்றனர். அரங்கின் பின்னால் கதவோரம் சிறிய வெளிச்சம் உள்ளே வருகிறது. க.நா.சு அந்த வெளிச்சத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். எதைப் பற்றியும் நினைக்காமல், தன்னைச் சுற்றி நடப்பதைக் கவனிக்காமல் புத்தக வாசிப்பில் மூழ்கிவிடும் வாசிப்பின் பேராசை அவரை இயக்கிக்கொண்டே இருக்கின்றது.
கேளிக்கை மிக்க ஜனரஞ்சக சூழலுக்கு எதிராக ‘சுறாவளி’, ‘சந்ரோதயம்’ என்கின்ற சிற்றிதழ்களை நடத்துகிறார். இவர்கள் எழுதுவது இலக்கியமல்ல தழுவல்கள். உண்மையான தமிழ்ப் படைப்புக்கள் இனிமேல்தான் எழுதப்பட வேண்டும். அவ்விதம் எழுதப்படும் படைப்பு முதல் தரமாக இல்லாமல் இரண்டாம் தரத்தில் இருந்தால் கூட அதுவே வருங்கால இலக்கியத்திற்கான வழித்தடம் என்று விமர்சனத்தைத் தொடர்ந்தார், முன்வைத்துப் பேசினார். அதிகாரப் பீடத்திலிருந்து எழுதி இலக்கியவாதி என்று முகம் காட்டிய ராஜாஜி போன்றோரை, பத்திரிக்கை பலமும் வாசக பலமும் புகழ் பலமும் தேசியவாதி பலமும் கொண்டு இயங்கிய கல்கி போன்றோரை முற்றாக நிராகரித்தார். பதிலாக உலக இலக்கியத்தின் சிகரங்களை மொழிபெயர்த்து இலக்கியம் என்பதற்கு முன்வடிவான ஒரு சித்திரத்தை வரையத் தொடங்கினார்.

இலக்கியத் தேக்கக்காலத்தில் ஐந்து நல்லப் படைப்பாளிகள் தோன்றினால்கூட தமிழில் ஒரு நல்ல இலக்கியச் சூழலை நிறுவிவிட முடியும் என்று சொன்னார். ஒரு லட்சம் வாசகர்கள் தேவையில்லை. இரண்டாயிரம் நல்ல வாசகர்கள் தோன்றிவிட்டாலே நல்ல இலக்கியம் தோன்றுவதற்கு ஒரு மேடை கிடைத்துவிடும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார். அப்படித்தான் சிற்றிதழ்களில் தொடர்ந்து இயங்கிய க.நா.சு ‘இலக்கிய வட்டம்’ என்ற இதழையும் தொடங்கினார். தொடர்கதை எழுதி சாகித்திய அகாதெமி விருதுபெறும் எழுத்தாளர்கள் நமக்குத் தேவையில்லை. டால்ஸ்டாயின் எழுத்தைத் தொடும் படைப்பாளியே நமக்கு வேண்டும் என்று எழுதினார், படைத்தார், மொழிபெயர்த்தார்.

காந்தி அகிம்சையை ஒரு போராட்ட முறையாக ஏற்றுக்கொண்டு ஒரு லட்சிய எல்லையைத் தொட்டதைப் போல க.நா.சு உன்னத இலக்கியத்தைத் தமிழில் உண்டாக்குவது என்ற லட்சியக் கனவுடன் தனது இலக்கிய வாழ்வை மரணத்தின் கடைசி நொடிவரை ஏற்று நடந்தார். இன்று தமிழில் சிறப்பான இலக்கியச் சூழல் உருவாகி இருக்கிறது என்றால் அது க.நா.சு.வின் ஐம்பதாண்டுகால விமர்சன குரலால் விளைந்தது எனலாம். மற்றவர்களுக்கும் அதில் பங்கு உண்டு என்றாலும் அதன் தலைமகன் க.நா.சு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உலகத் தரமான இலக்கியத்திற்குத் தனித்து நின்று களமாடிய பெரிய வீரன் க.நா.சு.

‘என் இலக்கிய வாழ்விற்குப் பரிசு தாருங்கள்’ என்று வரிசையில் நிற்காமல், அல்லது சிபாரிசு நாடிச் செல்லாமல் இலக்கிய வாழ்வு வாழ்ந்த மகத்தான மனிதர். தன் வறுமையை வெளியே சொல்லாத கண்ணியவான் அவர். ஒருமுறை நாஞ்சில்நாடன் அவரிடம் 300 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கியபோது “நாஞ்சில் பத்து நாட்களுக்கு வீட்டில் அரிசி பஞ்சம் இல்லாமல் செய்துவிட்டாய்” என்று சொன்னவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் தொகுக்கப்படாத அவரின் எழுத்துக்கள் இன்னும் ஆயிரமாயிரம் இருக்கின்றன. தொகுக்கப்பட்டவையும் ஆயிரமாயிரம் இருக்கின்றன. தமிழ் எழுத்துக் களத்திலே தன்னை வைத்து ஆடிய துணிச்சல்காரர் அவர். தமிழில் இப்படியொரு சாதனைக்காரர்.

3 comments for “தனித்துக் களமாடிய இலக்கிய வீரன் க.நா.சு

  1. S.Manikandan
    March 9, 2024 at 12:58 am

    Ka.na.su.the person spent all his life for Tamil modern literary . Still we are unable to find another person to match his stature even three decades after his demise.

  2. March 12, 2024 at 5:19 pm

    க ந சு படைப்பிலக்கியம் சார்ந்தும் விமர்சனம் சார்ந்தும் முழுச் சித்திரமாக இருக்கிறது இக்கட்டுரை. தரமான எழுத்தை அடையாளம் காட்ட எத்தனை எதிர்ப்புகளை எத்தனை கேலிகளை எதிர்கொண்டார் என்பதும் வாசிக்கக் கிடைத்த கட்டுரை சு.வேவினுடையது. நன்றி.

  3. நலவேந்தன் வே.ம.அருச்சுணன்
    April 22, 2024 at 11:01 am

    கந்தாடை சுப்ரமண்யம் என்ற க.நா.சு, இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் கலங்காத இலக்கியவாதி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...