முரண்: பழமைவாதத்தின் பரண்

சாலினி

வல்லினத்தின் முன்னெடுப்பில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் 2 மார்ச் முதல் 3 மார்ச் 2024ஆம் ஆண்டு நடந்த இலக்கிய வாசிப்பு முகாமில்2022ஆம் ஆண்டு வெளிவந்த எழுத்தாளர் ந. பச்சைபாலனின் ‘முரண்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் அமர்வில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பையொட்டி எழுத்தாளர்கள் ஆதித்தன், சாலினி, குமரன் ஆகியோர் விரிவான விமர்சனப்பார்வையை முன்வைத்தனர்.

இளம் எழுத்தாளரான ஆதித்தன் தொகுப்பில் இருக்கும் கதைகள் பலவும் நாளிதழ் பணிச்சூழல், தோட்டப்புறச்சூழல், பள்ளிச்சூழல் என ஒரே மாதிரியான களங்களுக்குள் பயணிப்பதைக் குறிப்பிட்டார். தொகுப்பின் முதன்மை பலவீனமாகக் கதைகளில் வெளிப்படும் ஆசிரியரின் உரத்தத் தொனியையும் குறுக்கீடலையும் குறிப்பிட்டார். பல கதைகளில் நல்லுபதேசங்களை நேரடியான முறையில் பிரசாங்கம் செய்வதைப் போல கதைகூறல் மொழி அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன் கதைகளில் கதைபோக்கு ஒருபுறமிருக்க தன்னுடைய குரலையும் நேரடியாகவே முன்வைக்கிறார் என்றும் கூறினார். ஒரு பாத்திரத்தை அறிமுகப்படும்போது அடைப்புக் குறிக்குள் தன்னுடைய பார்வையை முன்வைப்பதைக் கதைசொல்லியின் பார்வை அல்லது எழுத்தாளரின் பார்வை ஆகியவற்றுள் எதுவாக எடுத்துக் கொள்வதென்கிற ஐயத்தைத் தருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய ஆதித்தன், “ஒரிரு வரிகளுடன் அழுத்தமின்றிச் சொல்லப்படுகின்ற சித்திரிப்புகளும் கதைகளைப் பலவீனப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, கோலாலம்பூர் இரவு வாழ்வின் கேளிக்கைகளைக் காட்டும் கதையில், அவ்வாழ்க்கை குறித்து ஓரிரு வரிகளால் சொல்லப்பட்டது காட்சி சித்தரிப்பைப் பலவீனமாக்கியது. ‘இராமசாமிகள் கவனிக்கவும்’ என்கிற கதையில் குடிப்பழக்கம் கொண்ட ராமசாமி எனும் உதிரி மனிதரின் கதை சொல்லப்படுகிறது. அவருடைய குடிப்பழக்கத்தைக் கண்டித்துச் சொல்லப்படும் கதையில் ராமசாமிகள் எனக் கதையாசிரியர் அடையாளப்படுத்தும் குடிகாரர்கள் எப்படி கதைபோக்கை கவனிப்பார்கள் என்ற கேள்வியெழுகிறது. அதனை, குடிப்பழக்கத்துக்கு ஆளாகியவரின் மனைவி, உறவுகளின் பார்வையில் சொல்லப்படுவதே அக்கதைக்குப் பொருத்தமாக இருக்கக்கூடும்”என்றார்.

தொடர்ந்து பேசிய ஆதித்தன், ஆசிரியரே நேரடியாக வாசகனுடன் கேள்வி கேட்டு பதிலையும் சொல்லும் கதைசொல்லல் பாணி சோர்வூட்டுவதாய் இருந்தது என்றார். கதையில் வாசகன் கற்பனையாலும் சிந்தனையாலும் பெறவேண்டிய இடங்களை ஆசிரியரே நிரப்பி வாசக இடைவெளியை இல்லாமலாக்கி விட்டதையும் குறிப்பிட்டார். “ஒரே மாதிரியான தேய்வழக்கான சூழல் இரு சிறுகதைகளில் சொல்லப்படுவதும் வாசிப்பில் சோர்வூட்டுகிறது. ‘சுழித்தோடும் ஆறு’, ‘விடியல்’ ஆகிய இரண்டு கதைகளிலும் அண்ணன் பாத்திரத்துக்கு ஏற்படும் இதயநோய் அப்படியானது. மேலும், கதைகளில் சொல்லப்படும் அழுத்தமற்ற உணர்ச்சி விவரணைகள் வாசிப்பில் வாசகனுக்கு எந்த உணர்ச்சியையும் கடத்தாமல் செல்கிறது.”என்றவர், தன்னுடைய ஒட்டுமொத்த மதிப்பீட்டில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு எந்த நேரடியான அழுத்தமான உணர்ச்சியற்ற, தனிக்கண்டடைதலையும் தராத வெறுமையான வாசக அனுபவத்தைத் தந்ததாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் குமரன், உரையின் தொடக்கத்திலே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாமே படைப்பை ஒட்டி முன்வைக்கப்படுவதையும் ஆசிரியரைப் பற்றியதல்ல என்பதையும் தெளிவுப்படுத்தினார். தொகுப்பில் நல்லுபதேசத் தொனி, அலட்சியமான கதைசொல்லல் முறை ஆகியவற்றையே முதல் வாசிப்பில் கண்டடைந்ததாகச் சொன்னார். தொடர்ந்து, ஒவ்வொரு கதையையொட்டியும் தன்னுடைய விமர்சனப்பார்வையை முன்வைத்தார். ” ‘ராமசாமிகள் கவனிக்கவும்’ என்கிற கதையில் இ.வா ராமசாமி எனும் குடிகாரரைப் பற்றிய சித்திரிப்புகள் அனைத்துக்குமே ஆசிரியரே விளக்கம் சொல்வது வாசகப்பங்கேற்பை முற்றிலுமே தடைசெய்கிறது. ‘யாசகம்’ என்கிற கதையில் வெவ்வேறு பாணியில் வாழ்வைச்சீரழித்துக் கொள்கிற இருவரைப் பற்றிய கதையில் போதனைத்தொனிகூட இல்லாத அழுத்தமற்றச் சித்திரிப்புகள் அமைந்திருக்கின்றன. மேலும், சமகால மலேசிய இலக்கியச் சூழலில் முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் மிக விரிவாகவும் அழுத்தமாகவும் காட்டியக் கதைக்களங்களும்சூழலையும் மிக மேலோட்டமாகவும் தேய்வழக்குடனும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.”என்றார் குமரன்.

“எழுத்தாளர் சீ. முத்துசாமி காட்டியிருக்கும் தோட்டத்தின் வெவ்வேறு பரிணாமங்கள், எழுத்தாளர் மஹாத்மன் கதைகளில் காட்டியிருக்கும் அலைந்து திரிபவர்களைப் பற்றிய சித்திரம் ஆகியவற்றை நூலாசிரியர் காட்டும் அழுத்தமற்றக் களச்சித்திரிப்பும், சூழல்சித்திரிப்புடன் ஒப்பிட்டு வாசிப்பதைத் தவிர்க்க முடியவில்லை”என்றார். ‘எதார்த்தம்’ எனும் கதையில் பார்வையற்றவர்களின் சிரமங்கள் சரியாக விவரிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க பார்வையுள்ளவர்களே செய்ய மறுப்பவற்றை பார்வையற்றவர்கள் அதனை எந்த எதிர்பார்ப்புமின்றிச் செய்யும் விவரிப்பு நுட்பமாக வெளிப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் தொகுப்பில் முத்தாய்ப்பான கதையாகச் ‘சுழித்தோடும் ஆறு’ எனும் கதையைக் குறிப்பிடலாம் என்றார் குமரன். இந்தக் கதையை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் வெவ்வேறு அடுக்குகள் வெளிப்பட்ட கதையாகக் குறிப்பிட்டார். தன்னைவிட பல வயது குறைந்த மனைவியைத் திருமணம் செய்து கொள்கின்ற கதையின் பாத்திரம் தன்னுடைய மகனின் இதய நோய்க்குச் சரியான சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் எடுத்துக்கொள்ளாமல் மகனின் இறப்புக்குக் காரணமாகிறார். அவருக்கு நேர்ந்து விடுகின்ற இயலாமையின் வலியை மறைப்பதற்கு வன்முறையைக் கைக்கொள்வதைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் சாலினி, தொகுப்பின் பலமாகக் கதையில் அமைந்திருக்கும் குழப்பமற்ற சித்திரிப்பையும் விவரணையையும் குறிப்பிடலாம் என்றார். அத்துடன் பாத்திர வார்ப்பில் வெளிப்படும் தெளிவையும் சுட்டிக்காட்டினார். தொகுப்பின் முதன்மை குறையாகக் கதைகளில் வெளிப்படும் அபத்தமான சிந்தனைகளைக் குறிப்பிட்டார். “ஆசிரியர் சமூகத்தில் நிலவும் சிக்கல்களான வறுமை, மதமாற்றம், குடிப்பழக்கம் ஆகியவற்றை ஒட்டிக் கதைக்களங்களை அமைத்து அதற்கு எளிமையான முறையில் தீர்வு சொல்லிச் செல்கிறார். அந்தத் தீர்வுகளில் அபத்தமான அடிப்படைவாத பார்வையைக் காண முடிகிறது. காலந்தோறும் மேம்பட்ட வாசிப்பின் மூலம் புதிய வாசிப்புச் சாத்தியங்களைத் தருகின்ற புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’, ஜெயகாந்தனின் ‘அக்னி பிரவேசம்’ ஆகிய சிறுகதைகள் ஏன் மேம்பட்டவை என்கிற கேள்வியை இக்கதைகளின் அபத்தமான முடிவுகளுடன் ஒப்பிட முடிகிறது”என்றார்.

சாலினி ‘முரண்’ தொகுப்பில் உள்ள கதைகள் பழமைவாய்ந்த, மரபார்ந்த சிந்தனைகளை வெளிகாட்டுவதைக் காண முடிந்தது எனக் குறிப்பிட்டார்.

ஆதித்தன்

” ‘சுழித்தோடும் ஆறு’, ‘நிலாகாலத்து மயக்கங்கள்’ ஆகிய சிறுகதைகளின் வாசிப்பின் முடிவில் ஆணாதிக்கச் சிந்தனை வெளிப்பட்டது. ‘நிலாகாலத்து மயக்கங்கள்’ சிறுகதையில் மாதவன் நோய்வாய்ப்பட்டபின் இளைய மனைவி நந்தினி அவரைக் கைவிடுவதும் மூத்த மனைவியே அருகிலிருந்து அவரைக் கவனித்துக் கொள்வதுமாகக் கதை முடிகிறது. நவீனப் பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கும் நந்தினி தன் தேவை நிறைவு செய்யப்படாததால் கணவனைக் கைவிட்டுச் செல்வதும் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டும் கணவனை அருகிலிருந்து முதல் மனைவி கவனிப்பதுமென பெண்களை அபத்தமாகச் சித்திரிப்பதாகவே அமைந்திருக்கிறது. ‘கவிஞரின் மகள்’ எனும் கதையில் தமிழ் தெரியாததால் காதலியைப் பெண்பார்க்கும் நிகழ்வில் நிராகரிப்பதென்பது நியாயமற்ற தமிழ்ப்பற்றின் வெளிப்பாடாகவே கொள்ள முடிகிறது. அந்த நிராகரிப்பை மற்றவர்களும் கைக்கொண்டால் போலித்தமிழ்ப்பற்றாளர்கள் திருந்துவார்கள் எனும் கதை முடிவு அபத்தமான சிந்தனையாக வெளிப்படுகிறது.”என்றார்.

தொடர்ந்து பேசிய சாலினி ” ‘சுழித்தோடும் ஆறு’, ‘தொடாத எல்லை’ ஆகிய சிறுகதைகளிலும் நிகழ்கின்ற சிக்கல்களின் முன்னால் மெளனமாகவும் ஒன்றும் செய்ய லாயக்கற்றவர்களாகவும் படைக்கப்பட்டிருக்கும் அம்மா பாத்திரங்கள் ஆணாதிக்கப்போக்கின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அத்துடன் பெண்ணிய நோக்கில் கதைகளை அணுகும்போது நவீனப்பெண்கள் குடும்பத்தைப் புறக்கணிப்பதும் மரபார்ந்த பெண்கள் குடும்பத்தைக் காப்பதுமான அபத்த சிந்தனையே பல கதைகளிலும் வெளிப்படுவதாகத் தெரிகிறது”என்றார்.

மூன்று வாசகர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட பின்னர் மற்ற பங்கேற்பாளர்கள் அதனையொட்டிக் கேள்விகளைக் கேட்டனர். எழுத்தாளர் இளம்பூரணன் “கதைகளில் வெளிப்பட்டதாகச் சொல்லப்படும் மரபார்ந்த பழைமைவாய்ந்த சிந்தனைகள்  வெளிப்பட்ட போக்கில்தான் கதைகள் பலவீனமடைகின்றதா?” என்ற கேள்வியை முன்வைத்தார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த சாலினி, மரபார்ந்த முறையில் கதையில் சொல்லப்படுகின்ற தீர்வுகளே கதையின் முதன்மை பலவீனமாக இருந்தது என்றார். மரபார்ந்த மனநிலை என்பது தொடர்ந்துவரும் சமூகக்கூறு எனும் அடிப்படையில் அதனை புனைவில் சொல்லப்படுவதில் தடையேதுமில்லை என்றார். இருந்தப்போதும் ‘பால்வண்ணம் பிள்ளை’ போன்ற கதையில் ஆணாத்திக்க, மரபார்ந்த சிந்தனைக்கு ஈடாகப் பெண்ணின் உளவியல் பேசப்பட்டிருக்கும். அம்மாதிரியாக, மரபார்ந்த சிந்தனையைப் படைப்புகளில் விமர்சன நோக்கில்  முன்வைப்பதே சிறப்பாக இருந்திருக்குமென்றார். அதுவும் நன்மை தீமை என்ற தெளிவான வரையறையைக் கதைக்குள் ஆசிரியர் ஏற்படுத்திக் கொண்டு கதையை அணுகும்போது அதனை நேரடியாக அவரின் சிந்தனையுடன் தொடர்புபடுத்தி நிராகரிக்க வேண்டியதாகிறது என்றார்.

எழுத்தாளர் கோ. புண்ணியவான் ‘முரண்’ சிறுகதைத் தொகுப்பின் பலவீனத்துக்கு ஆசிரியரின் நவீன இலக்கியப் பரிட்சியமின்மை காரணமாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார்.  அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் ம. நவீன், நவீன இலக்கியப் பரிட்சயமின்மை கதைகளின் பலவீனத்துக்கான ஒரு கூறாக முன்வைக்கலாம் என்ற போதிலும் அதனைச் சலுகையாக விமர்சனத்தில் அளிக்க முடியாது என்றார். நூலாசிரியர் எழுதிய சமகாலத்தில் கலையமைதியும் நேர்த்தியும் கூடிய கதைகளை எழுதிய சீ.முத்துசாமி, அரு.சு.ஜீவாநந்தன் ஆகியோர் இருக்க, குறிப்பிட்ட ஒருவரின் பலவீனத்துக்கு நவீன இலக்கியப் பரிட்சமின்மையைச் சலுகையாக முன்வைக்க வேண்டியதில்லை என்றார்.

“நவீன புனைவில், சீண்டலான கருத்துகளே முக்கியமானவையாக இருக்கின்றனவா?” என குமரனின் விமர்சனப்பார்வையை ஒட்டி ம.நவீன் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த குமரன் கூறுமுறையே நவீன இலக்கியத்தில் முக்கியமாகிறதே தவிர சீண்டல், முற்போக்கு, பிற்போக்கு ஆகிய கருத்து நிலைகள் முக்கியமில்லை என்றார். கூறுமுறை அடிப்படையில் கலையமைதியுடன் கதை அமைந்து கருத்து முரணாக இருப்பின் அதற்கு எதிர்வினையாற்றலாம் என்றார். கதைகளில் வெளிப்படும் அபத்தமான முடிவுகளுக்கான காரணம் என்னவாக இருக்கிறது என ம.நவீன் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த, குமரன் நூலாசிரியரின் போதிய வாசிப்பின்மையைக் குறிப்பிட்டார். அதைபோல மனித உணர்வுகள் சார்ந்த சரியான புரிதலின்மையும் காரணாமவதையும் குறிப்பிட்டார். மதமாற்றத்தால் ஒருவன் சீரழிவது, நவீனப்பெண்கள் குடும்பத்தைப் புறக்கணிப்பது என்பது ஒருவகையில் ஆசிரியரின் அகவன்முறையையும் கற்பனையாற்றலின்மையும் தான் காட்டுவதாக ம.நவீன் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் ஸ்ரீ காந்தன் ‘முரண்’ தொகுப்பு சிறுகதைகளில் தொனிக்கும் அபத்தமான முடிவுகளுக்குக் கால மாற்றங்களுக்கேற்ப நிகழும் போக்குகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மனத்தடை காரணமாக இருக்கலாம் என்றார். எழுத்தாளர் அ. பாண்டியன் பச்சைபாலனின் சிறுகதைகளில் ஆசிரியரின் தன்னிலை அனுபவங்கள் மட்டுமே வெளிப்படுகிறதென்றார். ஒரு சிறந்த சிறுகதை எழுதப்படுவதற்கு அனுபவங்கள், தகவல்கள் இவற்றுடன் அபாரமான கற்பனையும் அவசியமாகிறது. ‘முரண்’ தொகுப்பில் கற்பனை வறட்சியுடன் கதைகள் எழுதப்பட்டிருபதே அதன் முதன்மை பலவீனமென்றார். அத்துடன், நூலாசிரியர் செயற்பட்ட நாளிதழ் சூழலே அவரின் படைப்புகளின் சாரமின்மையை வடிவமைத்திருக்கலாமென்ற ஐயத்தையும் வெளிப்படுத்தினார்.

புனைவுக்குமான புனைவல்லாத எழுத்துக்குமான அடிப்படையான வேறுபாடாகக் கற்பனையைக் குறிப்பிடலாம் என ம.நவீன் குறிப்பிட்டார். புனைவல்லாத எழுத்து எடுத்துக் கொண்ட தகவல்களைத் தருக்கப்பூர்வமாக நிறுவுகிறது. புனைவெழுத்து அதனைக் கற்பனையுடன் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகளுக்கு மாறாகத் தனிப்பட்ட அகக்கண்டடைதலின் வாயிலாக நிறுவுவதைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் அரவின் குமார், ஒரு படைப்பை வைத்துக்கொண்டு நேரடியாக எழுத்தாளனின் ஆளுமையை மதிப்பீடு செய்ய இயலாது என்றார். ஆனால், பச்சைபாலனின் கதைகளில் வெளிப்படும் உரத்தத் தொனி, தீர்வுகள் முன்வைக்கும் பாணி ஆகியவற்றாலே அவருடைய ஆளுமையைப் பற்றிய மதிப்பீடுகள் உருவாகின்றன என்றும் குறிப்பிட்டார். மேலும், கூறுமுறை, வடிவ நேர்த்தி அடிப்படையில் அணுகியப்பின் அதன் அபத்தக்கருத்துகளுக்குச் சிந்தனைத்தளத்தில் மறுப்பு சொல்ல வேண்டுமென்றார். கதையில் வெளிப்படும் சிந்தனைகளே முதன்மையாகக் கதையின் தரிசனமாக இருப்பதால், அதனையே முதன்மையாக விமர்சனம் செய்யவேண்டுமென சாலினி குறிப்பிட்டார். எழுத்தாளர் தயாஜி, கதைகளின் அபத்தச் சிந்தனைகளுக்காக எழுத்தாளரின் மீது நேரடியான மதிப்பீடுகள் முன்வைக்கப்படலாகாது என்றார். எழுத்தாளர் ம.நவீன் பச்சைபாலனின் கதைகளில் கலைகுறைபாடுடன் அவரின் நேரடி கருத்துகள் வெளிப்பட்டிருப்பதால் அதனை அவருடைய ஆளுமையுடன் தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க முடியாது என்றார். “அப்படி நேரடியாக எழுத்தாளரின் ஆளுமையுடன் படைப்புகளைப் பொருத்திப் பார்க்கலாமா?” என அ.பாண்டியன் கேள்வியெழுப்பினார்.

பாரதியார், புதுமைபித்தன், ஜி.நாகராஜன் ஆகிய ஆளுமைகளுடன் இணைத்தே அவர்களின் படைப்புலகமும் அணுகப்பட்டிருப்பதை ம.நவீன் குறிப்பிட்டுப் பேசினார். அவ்வாறு அணுகப்படுவதன் மூலம் அவர்களின் படைப்புகள் இன்னும் அணுக்கமாக உணரப்பட்டிருப்பதை நவீன் குறிப்பிட்டார். ஆனால், ந.பச்சைபாலன் போன்று புனைவு கைவசப்படாதவர்களுக்கு இப்படியான பார்வை மேலும் பலவீனத்தையே சேர்க்கிறது என்று கூறி முதல் அமர்வை நிறைவு செய்தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...