தேவதைகளைத் தேடும் சிறுகதைகள்

மோகனா

மார்ச் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் ‘வல்லினம் விமர்சன முகாம் – 4’ மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடைபெற்றது. மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங்கள் குறித்த வாசக கலந்துரையாடல் அது. இந்த முகாமின் கலந்துரையாடலுக்காக மூன்று நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 20 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்றனர். ஒவ்வொரு புத்தகத்திற்கும் மூன்று படைப்பாளிகள் தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள்.

அவ்வகையில் முகாமின் மூன்றாவது அமர்வில் எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘தேவதைகளற்ற வீடு’ சிறுகதைத் தொகுப்பு  குறித்து மோகனா, இளமாறன், ஜி. எஸ். தேவக்குமார் ஆகியோர் பேசுவதற்கான தயாரிப்புகளுடன் வந்திருந்தார்கள்.

முதற்கட்டமாக, மோகனா இச்சிறுகதைத் தொகுப்பு குறித்த தன் பார்வையைப் பகிர்ந்தார். இத்தொகுப்பில் உள்ள பதினான்கு சிறுகதைகளில் எங்குமே தேவதைகள் இல்லை என்பதே அவரின் முதல் பார்வையாக இருந்தது. கே. பாலமுருகன் இத்தொகுப்பில் சேர்த்திருக்கும் ஒவ்வொரு கதையிலும் சாமானிய மனிதர்களையே தன்னால் பார்க்க முடிந்ததாகவும் அந்த மனிதர்கள் யாருக்கும் எந்தவித சலுகைகளும் இக்கதையில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். தலைப்பிற்கேற்றார் போலவே  இத்தொகுப்பில்  எந்தக் கதைகளிலும் தேவதைகளாகக் காலம் காலமாகச் சொல்லப்பட்டிருக்கும் எந்த உருவகத்தையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்றார்.

கவித்துவமான மொழி பயன்பாட்டை எழுத்தாளர் பயன்படுத்தியிருக்கின்றார் என்றவர் அழகான வர்ணனையால் வாசகனை ஈர்க்கும் மொழியையும் எழுத்தாளர் கையாண்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார். உதாரணமாக தொகுப்பில் இடம்பெற்ற ‘காளி’,  ‘நாவலின் முதல் அத்தியாயம்’ போன்ற கதைகளைச் சொல்லலாம் என்றார். இக்கதைகளில் அதிகமான பகுதிகளில் வர்ணனைகளே நிறைந்துள்ளதால் ஒரு கட்டத்தில் கதையைத் தொலைத்துவிடுகிறோம் என்றவர் இந்த இரண்டு கதைகளிலும் அதன் உச்சத்தை அக்கதைகள் தொடவில்லை என்றும் குறிப்பிட்டார். அதற்கான சாத்தியக் கூறுகள் கதையில் இருந்தாலும் ஏனோ எழுத்தாளர் அந்த இடத்திற்கு வாசகனை அழைத்துச் செல்லவில்லை என்று தன் கருத்தைப் பகிர்ந்தார்.

“குழந்தைகளின் உலகத்தை எழுத்தாளர் படைத்திருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. எழுத்தாளர் தனக்குள் இன்னமும் குழந்தையைத் தொலைக்காமல் வைத்திருப்பதால் என்னவோ அவரால் குழந்தைகளின் உலகத்தை இப்படியாக எழுத முடிகிறது. குழந்தைகள், ஒரு வேளை இப்படித்தான் யோசிப்பார்களோ என்று வாசகர்களையும் இக்கதைகள் சிந்திக்க வைக்கின்றன. அதே போல பெரும்பாலான கதைகளில் குழந்தைகள்தான் முதன்மை கதாபாத்திரங்களாக இருக்கின்றனர்,” என மோகனா குறிப்பிட்டார்.

இத்தொகுப்பில் முக்கியமான சிறுகதையாக ‘நெருப்பு’ சிறுகதையை மோகனா சுட்டி க்காட்டினார். சுராயா என்னும் இந்தோனேசிய பெண், தமிழரைத் திருமணம் செய்கிறார். கணவர் ஒரு கட்டத்தில் இறக்கிறார். பிறகு தன் குழந்தையைத் தனிமையில் சுராயா வளர்க்க ஆரம்பிக்கிறாள். இதுதான் அச்சிறுகதையின் களம். தனிமையில் அம்மாவால் வளர்க்கப்படும் மகனுக்குப் பல கற்பனைகள் உருவாகின்றன. எட்டு வயது நிரம்பிய அச்சிறுவனுக்குத் தன்னைச் சுற்றி உள்ள எந்தச் சிக்கலும் பிடிபடவில்லை. அச்சிறுவன் தினந்தோறும் தன் அம்மாவைக் காண்பதே மகிழ்ச்சியாக உணர்கிறான். அவன் உலகம் அவனது அம்மாவை மட்டுமே சுற்றியுள்ளது. பள்ளிக்கூடம் போகாதது குறித்தும் எந்தச் சிக்கலும் அந்தச் சிறுவனிடத்தில் இல்லை. அதே போல ‘தேவதைகளற்ற வீடு’ சிறுகதையில் வரும் சிறுவனும் கவனத்தை ஈர்க்கவே செய்கிறான் என மோகனா தன் பார்வையை முன்வைத்தார்.

“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளின் முடிவுகளை எழுத்தாளர் வாசகர்களிடமே விட்டுவிடுகின்றார். ‘நீங்க என்ன வேணுமோ நினைச்சிக்கோங்க… ஆனா நான் இந்தக் கதைகளோட முழுமுற்றான முடிவுகளைச் சொல்லப்போவதில்லை’என்ற உத்தியில் எழுத்தாளர் இக்கதை முடிவுகளைக் கையாண்டிருக்கிறார்” என்ற மோகனா இச்சிறுகதைகளை வாசிக்கும்போது வாசகர்களையும் இவ்வெழுத்து உள்ளே இழுத்துக்கொள்கிறது என்றார். “எழுத்தாளர் விவரிக்கும் காட்சிகள் நம் கண் முன்னே விரியத் தொடங்குகிறது. இதனாலேயே எழுத்தாளர் எந்த ஒரு நிலையான முடிவை இச்சிறுகதைகளில் கொடுக்காவிட்டாலும் தன்னால்  சுதந்திரமாகத் தனக்குத் தேவையான முடிவுகளை இச்சிறுகதைகளுக்குக் கொடுக்க முடிகிறது” என்றார் மோகனா.

குழந்தைகளை இக்கதைகளில் சுயமரியாதை உடையவர்களாகக் காட்டியிருப்பது தன்னைக் கவர்ந்திருக்கிறது என்றார் மோகனா. ‘துள்ளல்’ மற்றும் ‘இறைச்சி’ சிறுகதைகளில் வரும் சிறுவர் சிறுமிகளை அதற்கு உதாரணமாகச் சொன்னார்.

“இத்தொகுப்பில் உள்ள ‘எச்சில் குவளை’ சிறுகதையில் வரும் இரண்டு சிறுவர்களை வாரி அணைத்துக்கொள்ள தோன்றுகிறது. ஓர் உடல் ஊனமுற்ற குழந்தையின்  தனிமை, அந்தத் தனிமையைப் போக்க வரும் நண்பன். ஆனால் ஏதோ ஒரு சூழலில் அந்த நண்பன் தவறாகப் பார்க்கப்படுகின்றான். அவன் குற்றவாளியா இல்லையா என்பதை வாசகர்களிடமே எழுத்தாளர் விட்டுவிடுகிறார். அது வாசகர்களைக் கதைக்குள் இன்னும் ஆழமாக இழுத்துவிடுகிறது” என்றார்.

“வெறுமையான மனநிலையின் தன்மையைக் காட்டுவதாக ‘ஓர் அரேபியப் பாடல்’ சிறுகதையைச் சொல்லலாம். இக்கதையில் பெண்ணின் நுட்பமான உளவியலை எழுத்தாளர் பேசுகின்றார். அதற்காக அவரைப் பெண்ணியவாதி என நான் சொல்லவில்லை. ஆனால், பெண்கள் எதிர்நோக்கும் உளமன சிக்கலைப் பெரும்பாலும் யாரும் பேசுவதில்லை. எழுத்தாளர் அந்த இடத்தை ரொம்பவும் நுணுக்கமாகச் சொல்கிறார். இதனை பண்முக நோக்கில் பெண்களின் சிக்கலை அணுகுவதாகச் சொல்லலாம். தான் சொல்ல வந்ததில் எழுத்தாளர் வெற்றிபெற்றதாகவும் நான் பார்க்கிறேன்” என்றார் மோகனா.

” ‘அனல்’ சிறுகதையில் வரும் பெண் கதாபாத்திரம் தன்னகத்தே ஓர் அறத்தைக் கொண்டுள்ளார். தன் கணவனை இன்னொரு பெண் பங்குபோட்டுக்கொண்டாலும் அந்தப் பெண் மீது கோபத்தைக் காட்டாமல் கணவன் மீதே கோபத்தைக் காட்டுகிறாள். முரட்டுத்தனமான பெண்ணாகக் காட்டப்படும் பெண்ணிடம் தாய்மையுணர்வு வெளிப்படும் இடமும் கவனிக்கத்தக்கதாக இருந்தது” என்றவர், தன்னை மேலும் பாதித்த ‘இறைச்சி’ சிறுகதையைக் குறித்து பேசலானார்.

“சமூக ஊடங்களின் வருகைதான் பெண்கள் கெட்டுப்போவதற்குக் காரணம் என பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், புகைப்பட மார்ஃபிங் பற்றியோ அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ யாரும் பேசுவதில்லை. அப்படியாகப் புகைப்பட மார்ஃபிங் மூலம் பாதிக்கப்படும் குடும்பத்தை எழுத்தாளர் பேசுகின்றார். பெண்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பெண்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பமே பழி சுமக்க வேண்டியதாக உள்ளது. இக்கதையில் அப்பெண் ஏன் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றாள் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு வேளை குடும்பம், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக இருந்திருந்தால் அப்பெண் அந்த முடிவுக்குச் சென்றிருக்க மாட்டாளோ என யோசிக்க வைக்கும் கதை. இதன் முடிவும் வாசகர்களாகிய நம் கைகளில் எழுத்தாளர் கொடுத்துவிட்டார்.” என மோகனா தன் விமர்சனத்தை விரிவாக முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய மோகனா, ‘நீர்ப்பாசி’ என்னும் கதையில் வரும் சிறுவனுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும்படி ஆகிறது. பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டால் இப்படியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது. அப்படியான சிறுவன் நல்ல கற்பனை திறன் உள்ளவனாக இருக்கின்றான். அவனால் அவனுக்குத் தேவையானவற்றை அவனது கற்பனையினாலேயே உருவாக்கிக்கொள்ள முடிகிறது. தனது உறவினரால் பாதிக்கப்பட்ட மாணவன் அதனை எப்படி எதிர்க்கொள்கிறான். அது அவனது கற்பனையா அல்லது அந்தக் கொலைக்கு அவன் தான் கரணமா என்பதும் வாசகர்களிடம் விடப்பட்டுள்ளது.” என்றார்.

“தொகுப்பின் கடைசி கதை ‘மீட்பு’. பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படும் சிறுமியின் கதை. அதில் இருக்கும் கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என்கிற குழப்பத்திலேயே வடிக்கப்பட்டிருக்கும். நம்மாலும் உடனே ஒரு முடிவிற்கு வர முடியாது. அதே போல, ‘பேபி குட்டி’, ‘தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்’ கதைகளையும் சொல்ல வேண்டும். பேரன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத பாட்டி அந்த மரணத்தை எப்படி புறக்கணிக்கின்றார் என்பது ‘பேபி குட்டி’யின் கதை. ‘தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்’ கதையை வாசிக்கும்போது சோகம் மனதைத் தொற்றிக்கொள்கிறது. வயதான ஒருவரைக் குடும்பம் எப்படி பார்க்கிறது என்பதைக் காட்டும் கதையாகவே இதனைப் பார்க்கிறேன்.” என மோகனா குறிப்பிட்டார்.

இத்தொகுப்பு முழுக்க பல இடங்களில் மிருகங்களை அதன் போக்கிலேயே கே. பாலமுருகன் பயன்படுத்தியிருப்பதை குறிப்பிட்ட மோகனா, ‘காளி’ சிறுகதை தன்னைக் கவரவில்லை என்றார். இக்கதையில் வர்ணனைகள் நன்றாக இருக்கின்றன என்றவர்  கதை அதன் உச்சத்தைத் தொடவில்லையோ எனத் தோன்ற வைத்துவிட்டதைக் குறிப்பிட்டார்.

அதே போல ‘நாவலில் முதல் அத்தியாயம்’ சிறுகதையும் தன்னைக் கவரவில்லை என்றார். “தனிப்பட்ட முறையில் மாய யதார்த்தக்கதைகள் மீது எனக்குப் பிடிப்பு இல்லை. ஒரு கதை மாயமாக முடிந்தால் என்னால் அதனுள் தொடர்ந்து இருக்க முடியாது. அதனால்தான் என்னவோ இக்கதையை என்னால் ரசிக்க முடியவில்லை” என்று தொகுப்பு குறித்த தன் பார்வையை நிறைவுக்குக் கொண்டு வந்தார் மோகனா.

மோகனாவை அடுத்து இளமாறன் தன் பார்வையை முன்வைத்தார். விமர்சனமாக அல்லாமல் இக்கதைகள் தனக்குள் ஏற்படுத்திய கேள்விகளையே தான் முன்வைக்க நினைப்பதாகக் கூறினார்.

“பதினான்கு சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகள் ஏக்கம், தனிமை, ஏமாற்றம், வெறுமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதனை முக்கிய காட்சிகளாக எழுத்தாளர் திறன்பட எழுதியுள்ளதை, வாசிக்கும்போது நாம் உணரலாம். அவற்றை நம் வாழ்விலும் ஏதோ ஒரு இடத்தில் நம்மால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.” என்ற கூற்றோடு தமது பேச்சைத் தொடங்கினார்.

“’காளி’ மற்றும் ‘நாவலின் முதல் அத்தியாயம்’ என்ற இரு கதைளைத் தவிர மற்ற கதைகளில் உள்ள உண்மை தன்மை கதையை எனக்கு நெருக்கமாக்கியது. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கதைகளில் சில இடங்களில் நாமே கூட பங்குபெற்றிருக்கலாம். இனி கதைகளுக்குச் செல்லலாம். ” எனக் கூறி தமக்கு எழுந்த கேள்விகளை முன்வைத்தார்.

‘இறைச்சி’ சிறுகதையில் பிள்ளை சொல்லும் பதில் எப்படி ஓர் அப்பாவை அப்படியொரு மன உளைச்சலுக்கு ஆளாக்கும்? என்கிற கேள்வி எழுகிறது. கதை நிகழ்ந்த காலக்கட்டம் கதையில் சொல்லப்படவில்லை என்றும் இப்போதைய சூழலில் நிர்வாணப்புகைப்படத்தை முகநூலில் பகிர முடியாத கட்டுப்பாடு இருப்பதைக் குறித்தும் கூறினார்.

“‘ஓர் அரேபியப் பாடல்’ அப்பா, அம்மாவை இழந்த ஒரு பெண் தனிமையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அப்பாவிற்குப் பிடித்த பாடல் கேட்கும்போது ஓரிடத்தில் பல மணி நேரமாக அப்படியே நின்றுவிடுவதாய் கதாசிரியர் எழுதியிருக்கிறார். ஆனால், ஒரு மனிதனால் இவ்வளவு நேரம் இப்படி நிற்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது. என்னதான் ‘ஃபோபியாவாக’ இருந்தாலுமே, அப்படியா ஒரு மணி நேரத்திற்கு அப்படியே நிற்பார்கள். எழுத்தாளர் அவ்விடத்தை வேறு மாதிரி எழுதியிருந்தால் உண்மை தன்மையாக இருந்திருக்கும்” என இளமாறன் விரிவாகத் தன் பார்வையை முன்வைத்தார்.

தொடர்ந்து, ‘சுருட்டு’ சிறுகதையைக் குறித்துப் பேசினார் இளமாறன். சிறுவனுக்கும் அவனது பெரியப்பாவிற்குமான உறவு இக்கதையில் பேசப்பட்டுள்ளது. இக்கதையின் முடிவு தனக்குப் பிடித்திருந்தது என்றவர் அந்தச் சிறுவனின் அம்மா, 70 வயது நிரம்பியிருக்கும் அந்தப் பெரியப்பாவைப் பார்ப்பதாக முடித்து வாசகனுக்குக் கொடுக்கும் இடைவெளிதான் இக்கதையை மேலும் முன்நகர்த்துவதாகச் சொன்னார். 

தொடர்ந்து இளமாறன் ‘காளி’ கதை குறித்த தன் பார்வையை முன்வைத்தார்.

” ‘காளி’ சிறுகதையை இரு பாகங்களாக நம்மால் பிரிக்க முடியும். முதல் பாகத்தில் ஒருவர் தேடிப்போவதாக எழுதியிருக்கிறார். ஆனால், இரண்டாம் பாகத்திலும் அதையேத்தான் திரும்ப சொல்கிறார். அதனாலேயே அந்தக் காட்சிகள் சலிப்பைக் கொடுக்கின்றன. சுருக்கமாகச் சொல்லியிருக்க  வேண்டிய கதையை நீளமாகச் சொல்லி வாசகர்களுக்குச் சலிப்பைக் கொடுத்துவிட்டதாக இக்கதையைப் பார்க்கிறேன். இக்கதை நம்மை உச்சத்திற்கு அழைத்துப்போய்ச் சட்டென கீழே போட்டுவிடுகிறது” என்கிற கருத்தோடு இளமாறன் இத்தொகுப்பைக் குறித்த தன் பார்வையை நிறைவு செய்தார்.

கே. பாலமுருகனின் ‘தேவதைகளற்ற வீடு’ சிறுகதைத் தொகுப்பு குறித்து மூன்றாவது பார்வையை ஜி.எஸ்.தேவகுமார் முன்வைக்கலானார். அவர் உரை பின்வருமாறு அமைந்தது.

“இந்தத் தொகுப்பின் ஒட்டுமொத்த தன்மையாக இரு உலகங்களை  எழுத்தாளர் சொல்வதாக நாம் பொருள்கொள்ளலாம். அதிலொன்று குழந்தைகளின் உலகம் இன்னொன்று முதியோர்களின் உலகம். சில இடங்களில் இந்த இரண்டு உலகங்களையும் எழுத்தாளர்  இணைக்கவும் முயன்றிருக்கிறார்.

இவர் காட்டும் குழந்தைகளின் உலகம்கூட நாம் அறிந்திடாத ஒன்றாகவே இருக்கிறது. உதாரணமாகப் பழிவாங்குதல், தனிமை, ஏக்கம், வன்முறை போன்ற இருண்ட உலகமாகவே இருக்கிறது.

‘நீர்ப்பாசி’ சிறுகதையில் ஒரு மாணவன் வருகின்றான், அவனுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் சிக்கல் இருக்கிறது. அவனை மற்ற மாணவர்கள் புறக்கணிக்கவும் செய்கிறார்கள். மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களுமே அம்மாணவனைக் கேலிக்குட்படுத்துகிறார்கள். அவனது வகுப்பு மாணவர்கள் அவனைத் தாக்குவதன் வழி தங்களை வீரர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். அம்மாணவனை அடித்துக் கழிவறையில் வைத்துப் பூட்டிவிடுகிறார்கள். இந்தச் சிக்கல்களாலும் புறக்கணிப்புகளாலும் அந்த மாணவன் தனிமைக்குள் தள்ளப்படுகின்றான். வாழைத் தோப்பைத் தனது தனிமைக்குத் துணையாக அந்த மாணவன் நினைத்துக்கொகொள்கிறான்.  அது அவனது தனி உலகமாக மாறுகிறது. அங்குள்ள குளத்தில் குதித்து நீந்துவதை அவன் ரொம்பவும் ஆர்வமாகச் செய்ய தொடங்குகின்றான். அவனுக்குத் தொல்லை கொடுத்தவர்களைக் கற்பனைவழி வாழைத் தோப்பிற்கு வரவழைத்துப் பழிவாங்கவும் செய்கிறான். இந்தக் கற்பனை விளையாட்டே அம்மாணவனை ஒரு கொலை செய்யும் அளவிற்குத் தூண்டிவிடுகிறது. ஆங்கிலத்தில் வெளிந்த ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் நாயகனை இந்தக் கதையில் வரும் மாணவன் நினைவுப்படுத்தினான். சமூகத்தால் புறக்கணிக்கப்படும் ஒருவர் இச்சமுகத்துக்கு எதிராக மாறுகிறான் என்பதைக் காட்டும் ‘ஜோக்கர்’ போலவே இம்மாணவனும் புறக்கணிப்புகளால் தன் குழந்தைமையை இழக்கிறான்.

‘நெருப்பு’ சிறுகதையில் இன்னொரு பழிவாங்கும் விதத்தையும் எழுத்தாளர் சொல்கிறார். சீனக்கடை சூழலை இக்கதையில் வெகு இயல்பாக எழுத்தாளர் சொல்லியிருப்பார். இக்கதையிலும் கடையில் வேலை செய்யும் சிறுவனை எல்லோரும் கேலி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுவன், தன்னைக் கேலி செய்தவர்களை அவர்களுக்குக் கொடுக்கும் சாப்பாடுகள் வழி பழிவாங்க ஆரம்பிக்கின்றான்.

‘துள்ளல்’ என்ற சிறுகதையில் கணேசன் என்ற கதாபாத்திரம் வருகிறது. இந்தச் சிறுவனும் அவனது குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகின்றான். கோவிலில் சந்திக்கும் பஜனை பாடும் பாட்டி மீது இவனுக்கு ஈர்ப்பு வருகிறது. அவர் தன்னை காப்பாற்ற வந்த கடவுளாகவும் பார்க்கிறான். தனது குடும்பத்தில் இருந்து தப்பிக்க தன்னை அறியாமலேயே அந்தப் பாட்டியின் பின்னால் நடக்கிறான். பெரிய நம்பிக்கை அவனுக்குத் தோன்றுகிறது. இனி தானும் சுதந்திரமாக இருக்கலாம். பாட்டியைப் போலவே பஜனைகள் பாடலாம் என நினைக்கிறான். அப்போதுதான், ஒருவர் பாட்டியின் தலையில் தட்டி அவரைக் காரில் ஏற்றுவதைப் பார்க்கிறான். அந்த நொடியிலேயே அந்தச் சிறுவன் ஏமாற்றமடைகிறான். எழுத்தாளர் சித்தரிக்கும் சிறுவர்களின் உலகம் இப்படித்தான் ஏமாற்றம், தனிமை போன்வற்றில் வந்து நிற்கிறது. நேர்மறையாக இல்லாமல் தொடர்ந்து குழந்தைகளின் உலகத்தை எதிர்மறையாகவே இவர் காட்டுகிறார்.

குழந்தையையும் முதியோரையும் இணைக்கும் கதையாகப்  ‘பேபி குட்டி’ கதையைச் சொல்லலாம். பாட்டிக்கு வயது 92, பேரனுக்கு வயது 2. அந்தப் பேரன் இறந்துவிடுகிறான். பேரனின் அண்ணன்தான் கதையைச் சொல்கிறான். வீடே அழுதபடி இருக்கும். ஆனால், அந்தப் பாட்டி மட்டும் இயல்பாக நடமாடிக்கொண்டிருப்பார். அந்தப் பாட்டி கற்பனையிலேயே தன் பேரனை உருவாக்கி அவனுடன்  விளையாட ஆரம்பிக்கிறார். வழக்கமாகக் குழந்தைகள் செய்யும் கற்பனை போல பாட்டியும் கற்பனை உலகுக்கு வருகிறார். இதனைத்தான் சிறுவர்களையும் முதியோர்களையும் இணைக்கும் பாலமாக நான் பார்க்கிறேன்”  எனத் தன் விரிவான பார்வையை முன்வைத்தார் ஜி.எஸ்.தேவகுமார்.

மேலும் இத்தொகுப்பில் தனக்கு ரொம்பவும் பிடித்த சிறுகதையாக ‘அனல்’ என்னும் சிறுகதையைச் சொன்னார். கதையில் வட்டிக்கு விடும் ரௌடி பெண் ஒருத்தி வருகிறாள். ஆண்களே அதிகம் பயன்படுத்தும் மவுண்டன் சைக்கிலை இந்தப் பெண் ஓட்டி வருகிறாள். அதன் வழியே இந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தை நமக்கு எழுத்தாளர் சொல்கிறார். வழக்கமாக ஆண்களே அதிகம் பயன்படுத்தும் சைக்கிலை இங்கு பெண் பயன்படுத்தவதாகக் காட்டியிருப்பது அந்தக் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. அதோடு இக்கதையின் முடிவிலும் அந்த மவுண்டன் சைக்கலுக்கான ஒரு காரணமும் இருக்கிறது.

அந்தப் பெண் ஒருவன் வீட்டின் முன் நின்று அவனைத் திட்டி வெளியில் கூப்பிடும் காட்சியில் வீட்டு பக்கத்திலேயே துணிச்சலாக சிறுநீர் கழித்துவிட்டு வருவதோடு தன்னை தலைக்கவசத்தால் அடிக்கும் நபரை அதே தலைக்கவசம் கொண்டு தாக்கவும் செய்கிறாள். இப்படியான உக்கிரமான பெண்ணிடம் தாய்மை வெளிப்படும் இடம் இச்சிறுகதையில் நன்றாக அமைந்திருக்கும். கதை முடிவில் முன்பு ஓட்டி வந்த மவுண்டன் சைக்கிலை இப்போது அவள் தள்ளிக்கொண்டு போவதை இப்படித்தான் நான் புரிந்து கொள்கிறேன். ஏனெனில் அவ்வளவு உக்கிரமான பெண்ணாய் இருப்பவள் அங்கு குழந்தையைப் பார்த்ததும் மாறிவிடுகிறாள்.”

‘காளி’ சிறுகதையின் முடிவு சரியாக அமையவில்லை என்றவர், “இக்கதையின் முடிவினால் முழு கதையும் சொதப்பிவிட்டது. இக்கதை வாசிக்கும்போது முக்கியமான கதையாகத் தோன்றியது. ஒரு மனிதனின் குற்றவுணர்வைப் பேசும் கதை. தனக்குப் பழக்கமான காட்டில், மனைவியை விட்டுவிட்டு வந்துவிடுவான் நாயகன். பிறகு மீண்டும் மனைவியைக் காட்டில் தேடச் செல்வான்.  அது வரை அவனுக்குப் பழக்கமாக இருந்த காடு அவனை அப்போது பயப்படச் செய்கிறது. அக்காட்சியும் அதன் விவரணையும் நன்றாக வந்திருக்கும். நமக்கும் பயம் வரும் அளவிற்கு எழுத்தாளர் எழுதியிருப்பார். நன்றாகச் சென்றுக் கொண்டிருந்த கதையில் தேவையில்லாத கதாபாத்திரமாகக் குட்டியப்பன் என்ற நபர் வருகிறார். அதன் பின் கதை சினிமாத்தனமாக மாறிவிடுகிறது”  என்றார்.

“ஜப்பானிய எழுத்தாளர் முரகாமியின் பாணியில் ‘ஓர் அரேபியப் பாடல்’ சிறுகதை எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இக்கதை சரியாகச் சொல்லப்படாமல் தோல்வியடைந்து விட்டது. கதையில் வரும் விரோனிக்காவின் கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம்.” என்றார் தேவகுமார்.

நிறைவாக, ‘சுருட்டு’ சிறுகதையைக் குறித்துப் பேசலானார். “நல்ல கதைதான் ஆனால் பெரியப்பாவின் வயதும் கதையில் வரும் சிறுவனின் வயதும் சிறு குழப்பத்தைக் கொடுக்கின்றது. தாத்தா வயதில் இருப்பவரை பெரியப்பா என்று வாசிப்பதால் இருக்கலாம்,” என்றவர் ‘தேவதைகளற்ற வீடு’ சிறுகதைத் தொகுப்பு குறித்து தன் பார்வையைச் சொல்லி முடித்தார்.

மூவரும் பேசி முடித்ததும், கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் முழுக்க இச்சிறுகதைத் தொகுப்பு குறித்து வாசித்தவர்களின் பல்வேறு பார்வைகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சாளர்கள் மூவரும் பேசிய நேரத்தைவிடவும் கேள்வி பதில் அங்கமும் இத்தொகுப்பைக் குறித்த கருத்துப் பரிமாற்றமும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. அதிலிருந்து முக்கியமான சிலவற்றையும் இதனுடன் பகிர்கிறேன்

லாவண்யா கலந்துரையாடலைத் தொடக்கி வைத்தார்,

“இச்சிறுகதைகளை வாசித்து முடிக்கும்போது எனக்குப் பிரம்மாண்டமாதத் தெரிந்தது அதன் மொழி. ஆனால், இந்த அடர்த்தியான மொழி, இந்தச் சிறுகதைகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மறைந்துவிடுவதாகத்தான் தோன்றுகிறது. உதராணமாக ‘காளி’ சிறுகதையைச் சொல்லலாம். காளி என்பவள் ஒரு பெண் என்பதற்கான அடையாளமே இல்லை. வாசிக்கும்போது மனதில் காளி ஒரு தெய்வம் என்றே தோன்றியது. அதை நோக்கித்தான் கதை நகர்ந்தது. பிறகுதான் காளி அந்த நபரின் மனைவி என்ற விபரம் தெரிய வருகிறது. கதையின் முடிவு ஏமாற்றத்தையே கொடுத்தது. நான் வாசித்த வரையில் ‘காளி’, ‘சுருட்டு’, ‘மீட்பு’, ‘நீர்ப்பாசி’ ஆகிய நான்கு கதைகளில் நம்பகத்தன்மை குறைவாகவே உள்ளது. இந்த ஒவ்வொரு கதைகளிலும் கடைசி வரிகளில்தான் இந்தக் கதையில் என்ன இருக்கின்றன என வாசகனுக்குப் புரிகிறது. வாசகனுக்கு அதிர்ச்சி கொடுக்கவென்றே எழுத்தாளர் புனைந்துள்ள கதைகள் இவை.” என்றார்.

“ஓர் எழுத்தாளருக்கான உத்வேகத்தை எழுத்தாளர் கே. பாலமுருகன் கையில் எடுத்துக்கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. ‘பேபி குட்டி’ சிறுகதையை முன்னுதாரணமாக வைத்தே பிற சிறுகதைகளில் உள்ள பலவீனங்களை ஒப்பிடலாம். ‘பேபி குட்டி’யில் என்ன சஸ்பென்ஸ் இருந்தது. தொடக்கத்திலேயே பேரனின் இறப்பு சொல்லப்படுகிறது. அங்கிருந்துதான் கிழவியின் வாழ்க்கை விசாரணைக்கு உள்ளாகிறது. ஆனால், மற்ற கதைகளில் இப்படியானத் திறப்புகளைக் கொடுக்காமல் முடிவில்தான் அதனை அவர் வைக்கிறார். கதையை முழுக்க வாசித்து முடித்தால்தான் அது எதை பற்றிய கதை எனப் புலப்படுகிறது. இந்தக் கதையை வாசகர்கள் படிக்காமல் போய்விடுவார்களோ என்கிற எண்ணத்தில் எழுத்தாளர் கதைகளில் வேண்டுமென்றே வலைகளைப் பின்னிச் செல்கிறாரோ எனவும் தோன்றச் செய்கிறது.” என்று கூறி முடித்தார் லாவண்யா.

தொடர்ந்து மருத்துவர் ராஜேஸ் “சிறுகதைகளில் இருக்கும் வாசக இடைவெளி எந்த அளவிற்கு அனுமதிக்கப்படுகின்றது? அதன் எல்லை எது வரை?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

அக்கேள்விக்கு ஜி.எஸ்.தேவகுமார், “பத்து பேர் வாசிக்கும் சிறுகதைகளைக் குறித்து பத்து விதமானப் பார்வைகள் வருவது இயல்புதான். நவீன இலக்கியத்தில் கதையும் வாசகனுமே மட்டுமே இருக்கிறார், வேறு யாருக்கும் அங்கு இடமில்லை” என்றே தான் பார்ப்பதாகக் கூறினார். வாசகன் எந்த இடத்தைக் கண்டடைகின்றான் என்பதுதான் முக்கியம் எனவும்  கூறினார்.

“ஒரு கதைக்குக் கர்த்தா அதனை எழுதிய புனைவாளி, ஒரு கோடுப் போட்டு அதில் வாசகனை நேராக அழைத்துச் செல்பவரும் அவர்தான். வாசகனும் அதனை நோக்கித்தான் பயணிக்கின்றான். அங்கிருந்துதான் வாசகனுக்கு தனி பாதை உருவாகிறது. ஆனால், இங்கு வாசகனை அழைத்துச் செல்லும் தடமே சரியாக இல்லையோ” எனத் தோன்றுவதாகச் சொன்ன மருத்துவர் ராஜேஸ் மேலும், “எழுத்தாளர் கே. பாலமுருகன் அவரது சிறுகதைகளில் நம்மை 50 சதவித தூரம் கூட்டிசென்றுவிட்டார். மீதி 50 சதவிதத்தை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றால் அது சரியாக இருக்குமா?” என்று தன் கேள்வியை விரிவாக்கினார்.

“‘அனல்’ சிறுகதையில் அந்த ரௌடி பெண்ணிற்குத் தாய்மை வந்ததைத் பார்த்ததாக சொன்னீர்கள், ஆனால் எனக்கு, அந்த ஆணைத் திருமணம் செய்து தானும் நிம்மதியாக வாழவில்லை இன்னொரு பெண்ணும் நிம்மதியாக வாழவில்லை என்கிற தன்னிறைவுதான் அக்கதை எனத் தோன்றுகிறது. அந்தத் தன்னிறைவைத்தான் தாய்மையாக அவள் வெளிப்படுத்துகின்றாள் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன் இதுதான் உங்களுக்கும் எனக்குமான வாசக இடைவெளியாகப் பார்க்கிறேன்”  என்றார் ராஜேஸ்.

மீண்டும் ஜி.எஸ்.தேவகுமார், தன் விளக்கத்தைக் கொடுத்தார். தான் ‘அனல்’ சிறுகதை வாசித்த முதல் வாசிப்பில் தாய்மை உணர்வை மட்டும்தான் தான் பார்த்ததாகவும் அதே கதையை மறுவாசிப்பில் பார்க்கும்போது ஓர் உக்கிரமான பெண், ஒரு குழந்தை அழுவதைப் பார்த்து மனதிறங்குவதாகப் பார்க்கிறார் என்றார். ஆசிரியர் இந்தக் கதையின் முடிவில் சைக்கிளை அந்தப் பெண் தள்ளிக் கொண்டு போவதாக எழுதியிருந்ததை முக்கியமான ஒன்றாகத் தான் பார்ப்பதாகவும் இதுதான் வாசிப்பில் தனக்குக் கிடைத்த வாசக இடைவெளி என்றும் கூறினார்.

இதே கேள்விக்கு மோகனா பதில் கொடுத்தார். வாசக இடைவெளி என்பது அந்த எழுத்தாளரின் கைகளில்தான் இருப்பதாகக் கூறினார். எழுத்தாளர் எவ்வளவு கவித்துவமாக அக்கதையை எழுதியிருந்தாலும், உதாரணமாக ‘காளி’ கதையை நாம் பார்க்கலாம். காட்டை எழுதியதில் இருந்து  மெல்ல மெல்ல கதையின் உச்சிக்கு நம்மை அழைத்துச் சென்று கொண்டிருப்பார். ஆனால், அங்கு கதையின் உச்சத்தை நமக்குக் காட்டாமல் நம்மை ஏமாற்றியிருப்பார். ஒரு வேளை கதையின் தொடக்கத்திலிருந்தே நிதானமான கதைப்போக்கை அவர் கையாண்டிருந்தால், நாமும் பெரிய எதிர்ப்பார்ப்பை இக்கதையில் வைத்து ஏமாந்திருக்க மாட்டோம். காடு குறித்து அளவுக்கு அதிகமான வர்ணனைகளிலும், அந்த நபர் காட்டில் தனது மனைவியைத் தேடுவதை காட்டும் வர்ணனைகளிலும் கதை ஒரு உச்சியை நோக்கி நகர்கிறது.  ஆனால், அக்கதை உச்சியைத் தொடாமல் நம்மை ஏமாற்றிவிடுகிறது.  அதைத்தான் அந்த வாசக இடைவெளி என தாம் பார்ப்பதாக என்றவர் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி அதனை முழுமைப்படுத்தாமல் போவதும் வாசக இடைவெளிதான்  என்றார்.

கலந்துரையாடலின் தொடக்கத்தில் லாவண்யா முன்வைத்த கேள்விக்குஇளமாறன் பதில் கொடுத்தார். “கதையின் இறுதியில்  அது என்ன கதை என நாம் தெரிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் எழுதியிருப்பதுதான் அவரது பலமாக அமைந்திருக்கிறது” என்றார். ஏனெனில், தொடக்கத்திலேயே சொல்லிவிட்டால் நமக்கு அது என்ன கதை எனத் தெரிந்துவிடுகிறது. ஆனால், கடைசி வரை நம்மை வாசிக்க வைப்பது அந்த எதிர்ப்பார்ப்புதான். அதுதான் தன்னைப் பொருத்தவரை வாசக இடைவெளியாக அமைகிறது எனச் சொல்லி அது கதைக்குப் பலமாக அமைந்துள்ளதை மீண்டும் சொன்னார்.

இச்சிறுகதைத் தொகுப்பில் எழுத்தாளர் எழுத முயன்றிருக்கும் மாய யதார்த்த கதைகளை வாசிக்க பிடிக்கவில்லை என்று மோகனா தொடக்கத்தில் கூறியதை எழுத்தாளர் கோ. புண்ணியவானும் ஆமோதித்தார். ‘தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்’ கதையில் எழுத்தாளர் சொல்லியிருக்கும் மாய யதார்த்த சூழல்கள் கதையோடு ஒட்டவில்லை என்றார். ஒரு வேளை கதையை முடிக்க சிரமப்படும் எழுத்தாளர்கள் இதனை ஒரு யுக்தியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ என தனக்குத் தோன்றுவதையும் கூறினார்.

கலந்துரையாடலில் தொடர்ந்து ம. நவீன், ‘எச்சில் குவளை’ சிறுகதையில் இருந்து தனது கேள்வியை முன்வைத்தார். ‘எச்சில் குவளை’ கதையை மூன்று பேச்சாளர்களும் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பதனை அறியும் நோக்கில் கேள்வியின் சாரம் அமைந்திருந்தது.

ம. நவீனின் கேள்விக்குப் பதில் இவ்வாறு சொல்லப்பட்டது.

“உடல் ஊனமுற்ற பெண்ணுக்கும் ஆணுக்குமான நட்பைச் சொல்லும் கதை. இருவருக்கும் இருக்கும் தனிமை அவர்களை நண்பர்களாக்குகிறது. இயல்பாகவே மனிதர்கள் ஆதி இச்சை கொண்டவர்கள். அவர்களின் அத்தனை மேன்மைக்கும் கீழே மிருக குணம் உள்ளது. இக்கதையின் முடிவில் ஒரு காட்சி வருகிறது. அக்காட்சி அந்தப் பெண்ணின் அம்மா இது நாள் வரை உதவியாக இருந்த அந்தச் சிறுவன் மீது கோவப்படுகின்றார். அவனைக் குற்றவாளி ஆக்குகின்றார். என்னால் அந்தப் பையனையும் வெகுளியாகத்தான் பார்க்க முடிகிறது” என்று கூறினார் மோகனா.

ஆனால், அச்சிறுகதை அப்படியாகச் சொல்லப்படவில்லை என்றார் ம. நவீன். “அந்தக் கதையில் அந்தப் பையன்தான் அந்தப் பெண்ணை ஏதோ செய்துவிட்டதாகக் காட்டுவதாக எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஆனால், இக்கதையை நாம் இன்னொரு மாதிரியும் புரிந்துகொள்ளலாம். இரண்டு இடங்களில் இதனைக் கவனிக்கலாம். ஓரிடத்தில் அந்தப் பெண் அடிக்கும்போது அந்தப் பையன் அழவில்லை. ஆனால், ஏதோ ஒரு சம்பவம் நடக்கும்போது அவன் கதறி அழுதான் என இருக்கும். இது எழுத்தாளர் தவறவிட்ட இடமா அல்லது ஏதோ ஒன்றை இங்கு சொல்லவருகின்றாரா எனக் கேட்கிறேன். நாமாக இக்கதையைப் புரிந்துகொள்ள இரண்டு இடங்கள் இருக்கின்றன. ஒன்று அந்தப் பையனே அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்துவிட்டான் எனப் புரிந்து கொள்ளலாம். அல்லது வேறு யாரோ அந்தப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டார்கள், அப்பழிக்கு அவன் பலியானான் என்றும் கொள்ளலாம்” என்றவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கதை முக்கியமான கதை இல்லை என்றார்.

நவீன் தொடர்ந்து பேசினார்.

“இவ்வளவு மறைமுகமாக இக்கதையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, இதற்கு ஜெயமோகனின் ஒரு உவமையைக் குறிப்பிடலாம். ‘கன்னிவெடியை ரொம்ப மேலாக வைத்தால் யாரும் மிதிக்க மாட்டார்கள்; ரொம்ப ஆழமாக வைத்தால் யார் காலிலும் படாது’ என்பதற்கு ஏற்றார் போல வாசக இடைவெளியை எழுத்தாளன் கையாள வேண்டும் என்றார். தொடர்ந்து ‘இறைச்சி’ சிறுகதையைக் குறித்தும் தன் கருத்தினைப் பதிவு செய்தார்.

“அச்சிறுகதையின் பலவீனம் அப்பெண்ணின் தாயார் கதாபாத்திரம்தான். இவ்வளவு பெரிய சிக்கலில் எதுவுமே தெரியாதது போல நடந்து கொண்டிருப்பார். தான் பெற்ற பெண்ணுக்கு இப்படி நடந்துவிட்டதே என்கிற துடிப்பே அம்மாவிடம் இல்லை. இதுதான் கதைகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறது. ஒரு குடும்பத்தில் பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டு முதலில் துடிப்பவள் அவள் தாயாகத்தானே இருக்கும். அந்தத் துடிப்பு எங்கே?” என்ற கேள்வியை வைத்தார்.

தொடர்ந்து தயாஜி ‘எச்சில் குவளை’ சிறுகதையைக் குறித்த தன் பார்வையை முன்வைத்தார். “அந்தப் பையன் மேல் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. அங்கு நடந்த அந்தத் தவறுக்கு அந்தப் பெண் காரணமாக இருக்கலாம்” என்றார். “ஏனெனில், அந்தப் பெண் இதுநாள் வரை இறுக்கத்தில் இருக்கின்றாள். எது நல்லது, எது கெட்டது என்று யோசித்துச் செயல்படும் நிலையிலும் அந்தப் பெண் இல்லை. ஏதோ ஒரு வகையில் உணர்ச்சிவசத்தால் அந்தப் பெண் அந்தப் பையனிடம் தவறாக நடக்க முயன்று அது அந்தப் பையனின் அழுகைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்” என்றார்.

“ஆனாலும் இக்கதையை எழுத்தாளர் எழுதியிருக்கும் விதத்தை நாம் கவனித்தால் அவளால் அவனுக்கோ, அவனால் அவளுக்கோ பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற கண்ணோட்டத்தைத் தவிர அந்தப் பெண்ணுக்கு வேறொருவரால் இத்தகைய சிக்கல் நடந்திருக்கலாம்” என நம்மை யோசிக்க வைக்கிறது என்றார் ம. நவீன்.

தயாஜி சொல்லிய கருத்தோடு தான் உடன்படுவதாக இளம்பூரணன் பேசினார். “அந்தச் சிறுவன் கடைசியாக அந்தப் பெண்ணிடம் ஓர் அருவருப்பைக் காட்டுகிறான். முதன் முறையாக அப்போதுதான் அவ்வுணர்வைக் காட்டுகிறான்” என்றார். எழுத்தாளர் கே. பாலமுருகனின் கதைகள் பெரும்பாலும் பரிச்சார்த்த முயற்சிகளாக இருப்பதால் வாசகர்களைக் குழப்பிவிடுகின்றார் என்றவர், கதைகளின் பலவீனத்தை வாசகர் மீது தள்ளிவிடுகிறார் எனத் தோன்றுவதாகக் கூறினார். இந்தத் தொகுப்பில் உள்ள சில கதைகளும் தனக்கும் அவ்வாறான எண்ணத்தைக் கொடுத்ததாக அவர் கூறினார்.

பலரும் பல கதைகளைப் பேசினார்கள். ஆனால், தான் சிறந்த கதையாக நினைக்கும் ‘துள்ளல்’ சிறுகதையைப் பற்றி யாருமே பேசாதது குறித்து ம. நவீன் கேள்வி எழுப்பினார். அதே போல ‘பேபி குட்டி’யும் பலர் பாராட்டிய கதைதான் என்றவர், கே. பாலமுருகனின் ‘தேவதைகளற்ற வீடு’ சிறுகதைத் தொகுப்பைக் குறித்து ஒட்டுமொத்தமாக ஒரு விமர்சனத்தை முன்வைக்கலானார்.

“ஓர் எழுத்தாளர், சீரியசான எழுத்தாளரா அல்லது கமர்சியல் எழுத்தாளரா அல்லது வாசகர்களிடம் விளையாட நினைக்கிறாரா என்பதை அவர் கதையை எப்படி கொண்டு போகிறார் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

சுஜாதாவை நாம் ஏன் வணிக எழுத்தாளர் என்கிறோம் என்பதைப் பார்க்கையில் கதையில் மறைத்து வைத்து வாசகனிடம் விளையாடும் குணம் அவரிடம் இருந்தது. ‘அதிர்ச்சி! அதிர்ச்சி!’ என்கிற கதையை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். தொடக்கத்தில் கொலை சம்பவத்தைச் சித்தரித்து கதை முடிவில் அது ஒரு ஓவியத்தின் காட்சி என முடிப்பார். இதற்கிடையில் மனைவியைக் கணவன் கொலை செய்வானா மாட்டானா என்கிற கேள்வியை வாசகர்களுக்கு ஏற்படுத்தியிருப்பார்.

இம்மாதிரி ஒழித்துவைத்து விளையாடும் பாணி எனக்கு உடன்படாத பாணி. தேர்ந்த எழுத்தாளன் இதனைச் செய்யமாட்டான்” என்றவர், இத்தொகுப்பில் அதற்கு உதாரணமாக ‘அனல்’ சிறுகதையைச் சொல்லலாம் என்றார். தன்னைப் பொறுத்தவரை இக்கதை பலவீனமான கதை என்றார். “கதையில் முடிவுதான் முக்கியம்; அதே சமயம் அந்த முடிவு எதனால் ஏற்படுகிறது என்பதும் முக்கியம். அந்த முடிவு இயல்பாக வெளியே வருகிறதா, அல்லது எழுத்தாளர் வழித்து திணிக்கின்றாரா என்பதுதான் கேள்வி. இந்த ‘அனல்’ சிறுகதையில் ஒரு பெண் வருகிறாள். முதலில் அவளை வட்டிக்காரியாகக் காட்டுகிறார் எழுத்தாளர். வாசகனையும் நம்ப வைக்கின்றார். வாசகர்கள் அதனை நம்பிக்கொண்டிருக்கும் போது, அவள் வட்டிக்கு விடுபவள் அல்ல; அந்த நபரின் மனைவி என்கிறார். இப்படிக் காட்டுவது பலவீனமான எழுத்து” எனத் தனது கருத்தைச் சொன்னார் ம.நவீன். அந்தப் பெண்ணின் தாய்மையுணர்வை வெளிப்படுத்துவதுதான் கதையின் மையம் என்பதால் தொடக்கத்திலேயே அந்தப் பெண் அந்த நபரின் மனைவிதான் எனச் சொல்வதில் என்ன குறைந்துவிடப்போகிறது. இதில் என்ன ரகசியம்?” எனும் கேள்வியை எழுப்பினார் ம. நவீன்.

“இதுதான் தீவிர எழுத்திற்கும் கமர்சியல் எழுத்திற்குமான வித்தியாசம். கமர்சியல் எழுத்திற்கு வாழ்க்கையின் மீதான கேள்வி இல்லை. ஒரு வேளை இந்தக் கேள்வியில் இருந்து இக்கதை தொடங்கியிருந்தால் கதை மேம்பட்டிருக்கும்” என்றார் நவீன். “அதே போல ‘இறைச்சி’ சிறுகதையும் ஒரு முக்கியமான இடத்தைத் தொட்டு நகர்ந்திருக்கும் கதை. அக்கதையில் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு தம்பி அப்பாவின் அதிகார இடத்திற்குச் செல்லக்கூடிய தருணத்தைக் காட்டியிருப்பார் எழுத்தாளர். எந்த அதிகாரமும் இல்லாத  ஒரு பையன் ஒரு பெண் செய்யக்கூடிய தவறால் தன் அதிகாரத்தை மெல்ல மெல்ல நிறுவக்கூடிய இடம் இச்சிறுகதையில் வருகிறது. அந்த இடத்தை எழுத்தாளர் வளர்த்து கொண்டிருந்தால் இது தனித்துவமான சிறுகதையாக மாறியிருக்கும்.” என்றார்.

தொடர்ந்து ‘ஓர் அரேபியப் பாடல்’ சிறுகதையிலும் எழுத்தாளர்தான் பேசிக் கொண்டிருப்பார். எழுத்தாளரின் வேலை வாசகனுடன் விளையாடுவது அல்ல, அழுத்தமான ஒரு வாழ்க்கை மூலமாக நமக்கு ஒரு திறப்பை ஏற்படுத்த வேண்டும் என்றவர் ‘காளி’ சிறுகதை மீதான கடினமான விமர்சனத்தை முன்வைத்தார்.

இச்சிறுகதையைப் போலி இலக்கியம் என்று தான் சொல்லுவதாக ம. நவீன் சொன்னார்.  மிகவும் யோசித்து கவனமாகவே இந்த வார்த்தையை முன்வைப்பதாகவும் கூறினார்.

எது போலி இலக்கியம் என விளக்க நினைத்த ம. நவீன் மேற்கொண்டு பேசலானார். தெரியாத ஒன்றைத் தமக்குத் தெரிந்தது போல பாவனை செய்து எழுதி வாசகனை ஏமாற்றுவது போலி இலக்கியம் என்றும் அவ்வாறான படைப்புகள் தமக்கு ஒவ்வாமையையே அளிக்கின்றது என்றும் நவீன் கூறினார்.

எழுத்தாளருக்குக் காடு குறித்து எழுதுவதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால், அது பற்றி தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதை எழுதும்போது காட்டுகிறார். “உதாரணமாகக், ‘காளி’ கதையில் ஜொஜொபா செடி குறித்து வருகிறது. அந்தச் செடி மலேசியாவில் முளைக்காது ஏனெனில் அது வறட்சியான இடத்தில் முளைக்கக்கூடிய செடி. நம் நாட்டில் அச்செடியை நடுவதற்காக முதற்கட்ட நடவடிக்கைகள் இப்போதுதான் நடக்கின்றன. அந்தச் செடி காட்டில் கொத்து கொத்த்தாக முளைத்திருப்பதாக எழுதியிருக்கிறார். அதே போல காட்டில் 20 கிலோ மீட்டர் பயணம் என்பது பல மணி நேரத்தை எடுக்கக்கூடியது. ஒருவர் தன் மனைவியை அடித்து 20 கிலோ மீட்டருக்கு இழுத்துச் செல்கிறார். அவ்வளவு தூரம் அழுகின்ற மனைவி கணவரின் அம்மாவைக் காப்பாற்றி தியாகம் செய்தது தான் என்பதை ஏன் சொல்லவில்லை” எனக் கேள்வியோடு தமது பார்வையையும் ம. நவீன் குறிப்பிட்டார்.

ஏற்கனவே தனது முந்தைய தொகுப்பில் வெளிவந்து பாராட்டுகள் வாங்கிய கதைகளையும் சில புதிய கதைகளையும் இத்தொகுப்பில் எழுத்தாளர் சேர்த்திருக்கிறார். அவை அதற்குரிய பலம் மற்றும் பலவீனத்துடன் இருப்பதாக சொல்லி முடித்து கொண்டார் ம.நவீன்.

‘அனல்’ சிறுகதையில் ம. நவீன் சொன்ன பலவீனமே அச்சிறுகதையின் பலமாக இருப்பதை அ. பாண்டியன் சுட்டிகாட்டினார். ம. நவீன் சொல்வது போல கதையின் தொடக்கத்தில் அந்தப் பெண் வட்டிகாரியாகக் காட்டாமல் தொடக்கத்திலேயே மனைவி எனச் சொல்லியிருந்தால் அந்தக் கதாபாத்திரம் அவ்வளவு காத்திரமாகத் தோன்றியிருக்காது என்று அ. பாண்டியன் பேசினார்.

எழுத்தாளர் தன் சிறுகதைக்கு யுக்தியாகவே அதனை பயன்படுத்தியுள்ளார் என்பதையும் அது கமர்சியல் கதையா தீவிர கதையா என்பதைக் கதையின் முடிவுதான் சொல்கிறது என்றார் அ. பாண்டியன். அது இக்கதைக்குக் கனத்தைக் கொடுப்பதாகவும் சொன்னார்.

‘அனல்’ சிறுகதையையொட்டி இருவேறு நிலைப்பாடுகள் அங்கு ஏற்பட்டன. ஒரு சாரார்  ம. நவீன் சொல்வது போல அந்தப் பெண் அவனது மனைவிதான் என மறைக்காமல் கதையில் சொல்லியிருக்கலாம் என்றார்கள். இன்னொரு சாரார்  முதலில் அப்பெண் வட்டிக்காரியாகக் காட்டப்பட்டு அதன் பின் அவள் அந்நபருக்கு மனைவி எனக் காட்டியது அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்திற்குப் பலத்தைதான் கொடுத்தது என்று அ. பாண்டியன் கருத்தோடு ஒத்துப்போனார்கள். கடைசி வரை இருவரும் அவரவர் நிலைகளிலேயே நின்றார்கள்.

எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘தேவதைகற்ற வீடு’ சிறுகதைத் தொகுப்பையொட்டி கலவையான விமர்சனமே வந்திருந்தது. மொத்தத்தில் இப்படியான கூட்டு வாசிப்பில் எழுத்தாளரைக் காட்டிலும் வாசகர்களே அதிக பயன் பெறுகிறார்கள் என நினைக்க வைத்து அதனை நம்பவும் வைக்கிறது. நல்லதொரு கலந்துரையாடல். அனைவருக்கும் பயனான வகையில் அந்த உரையாடல் அமைந்திருந்தது.                        

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...