இளந்தமிழன் சிறுகதைகள்: பொது உண்மைகளின் பெட்டகம்

கடந்த 2 மார்ச் 2024 முதல் 3 மார்ச் 2024 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நிகழ்ந்த வல்லினம் முகாமின் இரண்டாவது அமர்வில் எழுத்தாளர் இளந்தமிழன் எழுதிய ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்நூலில் மொத்தம் 45 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ‘இளந்தமிழன் சிறுகதை’ நூலைக் குறித்து எழுத்தாளர்கள் கோ. புண்ணியவான், ஶ்ரீகாந்தன், அரவின் குமார் ஆகியோர் தங்களின் விமர்சனத்தை முன் வைத்தனர்.

முதலில், எழுத்தாளர் கோ. புண்ணியவான் தொடக்கநிலை, முதிர்ச்சியடைந்த நிலை என இளந்தமிழன் சிறுகதைகளை இரண்டு காலகட்டமாகப் பிரித்தார். கதாசிரியரின் அனுபவப்பகிர்வாக இந்நூல் அமைந்துள்ளதாகவும் இந்நூலில் உள்ள கதைகளைச் சரியாகத் தொகுத்திருந்தால் இந்நூல் நாவலாக மாறியிருக்கக்கூடும் என்றும் கூறினார். தமது சுய அனுபவத்தைத் தவிர்த்து வேறொரு களத்தை ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ பேசாததால், இக்கதைகள் முற்றிலும் அனுபவப்பகிர்வாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். இருப்பினும், 1978ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை எழுதப்பட்டிருக்கும் இச்சிறுகதைகளில் கதாசிரியரின் மொழியிலும் கதை சொல்லும் முறையிலும்   பரிணாம வளர்ச்சி உள்ளதைக் கோ. புண்ணியவான் கண்டறிந்தார்.

இளந்தமிழன் சிறுகதைகள் அனைத்தும் தொடக்கம், வளர்ச்சி, திருப்பம் என மரபார்ந்த வடிவத்தில் அமைந்து உரையாடல்கள் வழி கதைகளைக் கதாசிரியர் படைத்துள்ளது நன்றாக இருந்தது எனக் கோ. புண்ணியவான் கூறினார். ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளிவரும் கதைகளில் உள்ள எதிர்ப்பாரா முடிவு அல்லது திடீர் திருப்பம் கொண்ட கதை சாயலை இளந்தமிழன் தமது கதைகளில் கையாண்டுள்ளார். அதற்கு உதாரணமாக ‘காதல் குற்றவாளி’ எனும் சிறுகதையைக் கோ. புண்ணியவான் உதாரணமாக முன்வைத்தார். மேலும், சிறுகதைகளில் காட்சிப்படுத்துதல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அக்காட்சி மொழியை இளந்தமிழன் ‘இருவேறு உலகங்கள்’ சிறுகதையில் சிறப்பாகக் கையாண்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்டார். பிணத்திற்குப் பெட்டி அடித்தல், ஈமச்சடங்குகள் செய்தல், மனிதர்களின் மனநிலை எனக் கதைகளில் புறக்காட்சிகளை விவரித்துக் காட்சிப்படுத்தியது ‘இருவேறு உலகங்கள்’ சிறுகதையின் சிறப்பாக அமைந்தது. இருப்பினும், இளந்தமிழன் சிறுகதைத் தொகுப்பில் உள்ள தொடக்கக்கால கதைகளில் கதாசிரியர் காட்சிப்படுத்தும் உத்தியை முழுமையாகக் கையாளவில்லை எனக் கோ.புண்ணியவான் கூறினார். இந்நூலில் உள்ள தொடக்கக்கால கதைகள் தேய்வழக்குக் கதைகளாக அமைந்துள்ளது என்றும் பின்னர் கதைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கதாசிரியர் சமூக இயங்கங்கள் அல்லது குறிப்பிட்ட அரசியலைச் சார்ந்த கதைகளில் விவாத முறையைக் கையாண்டு மோதல்களைக் கதையில் உருவாக்கிய உத்தியும் சில கதைகளில் கதாசிரியரின் முதிர்ச்சியான சிந்தனையும் சிறப்பாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார் கோ.புண்ணியவான். கதாசிரியரின் முற்போக்குச் சிந்தனையைக் காட்டும் கதைகளாக ‘வாழவே வேண்டும்’, ‘கற்பும் கன்னிமையும்’, ‘ஒரு கோணம்;இரு பார்வை’ போன்ற கதைகளைக் காட்டாக முன்வைத்தார். ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ நூலில் உள்ள பல கதைகளில் தத்துவங்கள் கண்டறியப்படவில்லை என்றாலும் ‘அவகேசி’ எனும் கதை முழுமையாகத் தத்துவத்தோடு புனையப்பட்டுள்ளது எனக் கூறினார். சில கதைகளில் உள்ள தத்துவம் அபத்தமாக அமைந்தாலும் கதையில் கையாளப்பட்டுள்ள புலம்பல், ஏமாற்றம் அடிப்படையில் அத்தத்துவத்தை அழகியலாகக் கோ. புண்ணியவான் ஏற்றுக்கொண்டார். கதைகளில் இலட்சியவாதத் தொணியும் இருப்பதாகக் கூறினார். விவாதம், தத்துவம், அழகியல் என ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ தொகுப்பில் உள்ள சில கதைகள் நல்ல கதைகளாக அமைந்துள்ளதாகவும் சில கதைகளில் குறைபாடு உள்ளதாகவும் கோ. புண்ணியவான் கூறினார்.

ஶ்ரீகாந்தன்

அடுத்து எழுத்தாளர் ஶ்ரீகாந்தன் அவர்கள் ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ தொகுப்பைப் பற்றிய பார்வையை முன்வைத்தார். உரையாடல்கள் நிறைந்த கதைகள், பிரச்சாரத் தொனி தொனிக்கும் கதைகள், புனைவில் வலிந்து புகுட்டப்பட்ட தனித்தமிழ் சொற்கள், நேரடி அரசியல் என ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ தொகுப்பில் உள்ள கதைகளின் சில பொது அடையாளங்களை ஶ்ரீகாந்தன் கூறினார். தனித்தமிழ் என்பது அபுனைவுக்கானது என்று கூறி கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள தனித்தமிழ் சொற்களைக் குறித்து ஶ்ரீகாந்தன் விளக்கமளித்தார். “சிறுகதைகளில் கையாளப்படும் மொழியைக் கதையின் களமும் காலமும்தான் தீர்மானிக்கும். சிறுகதைகளின் உரையாடல்களில் தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்தியது உரையாடல்களில் போலித்தன்மையைத் தந்து கதையின் இயல்பைப் போக்குகின்றது” எனக் கூறி சில எடுத்துக்காட்டுச் சொற்களை முன்வைத்தார். அவை சரக்குந்து, சூழியம் சூழியம் ஒன்று, வழலைக்கட்டி, வெள்ளைப் பட்டை, திறவுகோல்போன்றவையாகும். மேலும், உயிரும் சதையுமாக வாழ்ந்த கித்தா மரத்தின் வாழ்க்கையைக் கூறும் கதையில் நொய்வ மரம் எனச் சொல்லின் பயன்பாடு ரப்பர் தோட்டத்தின் உயிரம்சத்தையே கெடுப்பதாக அமைகின்றது எனக் கூறினார்.

‘இளந்தமிழனின் சிறுகதைகள்’ நேரடி அரசியல்களைப் பேசுகின்றது என அவர் குறிப்பிட்டார். எழுத்தாளனின் புனைவில் நேரடி அரசியல் என்னவாக இருப்பதை அறிந்து மதிப்பிட வேண்டும் எனக் கூறி ‘House Taken Over’எனும் ஆங்கில அரசியலைப் பேசும் ஸ்பானிஷ் கதையை உதாரணமாகக் கூறினார். அர்ஜென்டினாவில் பரோல் என்ற சர்வதிகாரி ஆட்சி செய்ததை ஒட்டி 1946ஆம் ஆண்டு வெளிவந்த இக்கதையில் காட்டப்படும் பங்களாவை ஒரு நாடாக உருவகப்படுத்திக்கொண்டு கதையை அணுகினால் கதை பேசும் நுட்ப அரசியலைப் புரிந்துகொள்ளலாம் எனக் கூறினார். இளந்தமிழன் சிறுகதைகளில் காட்டப்படும் அரசியல்கள் உருவகப்படுத்திச் சொல்லப்படாமல் நேரடியாகச் சொல்லப்படுவது சிறப்பாக அமையவில்லை எனக் கூறினார்.  உரையாடல்கள் வழி கதை கூறியது இளந்தமிழன் சிறுகதைகளின் சிறப்பாக அமைகின்றது என்று ஶ்ரீகாந்தன் குறிப்பிட்டார். உரையாடல்கள் மூலம் சொல்லப்பட்ட சில கதைகள் கைக்கூடி வந்துள்ளதாகவும் சில கதைகளில் கலை விவரம் சொல்லப்படாமல் இருப்பதாகவும் கூறினார். கதைகளில் காட்சி, ஓசை, வாசம் என்ற மூன்று கூறுகளை விவரிப்பதன் மூலம் கதையைக் காட்சிபடுத்த முடியும் எனக் கூறி அக்காட்சி விவரணை ‘இருவேறு உலகங்கள்’ கதையில் சிறப்பாக அமைந்துள்ளதாகக் கூறினார். மேலும், கதையில் கதாசிரியரின் மொழி ஆளுமையைக் காட்டும் சில அழகிய வரிகளான ‘நாங்கள் பிறப்போடு கொண்டு வந்த அனைத்தையும் காதலின் பரிசாக பாக்கியின்றி பரிமாறிக்கொண்டோம்’(அவனும் அதுவும்), ‘ஒரே கடிதத்தை நூறு முறை அஞ்சல் பெட்டியில் போட வேண்டும் என யார்தான் உனக்கு சொல்லி தந்தார்களோ (மனித சுவடுகள்)’,‘இயற்கை வழங்கிய இந்தச் சக்தியை சின்னதொரு பிராணி எத்துணை இனிமையாய் வாசிக்கிறது’(உறவில் மறுபக்கம்) போன்ற வரிகளைக் காட்டாகக் கூறி இவ்வரிகளில் காட்டிய நுட்பத்தைக் கதையிலும் சொல்லிருந்தால்சிறப்பாக இருந்திருக்கும் எனக் கூறினார்.

தொடர்ந்து  ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ தொகுப்பில் உள்ள சிலகதைகளைக் குறித்து ஶ்ரீகாந்தன் விமர்சித்தார். நான் யார் என்று ஆத்ம விசாரத்துடன் தொடங்கும் ‘அவகேசி’ கதை மனதும் உடலும் மட்டும்தான் நிஜம் மற்றவை எல்லாம் பொய் எனப் புலம்பி கூடவே நின்று குழிப்பறித்த சாதி என்ற நிழலும்கூட ஒரு சமயத்தில் இல்லாமல் போகும் நிலையைச் சொன்னது சிறப்பாக உள்ளது எனவும் கதையில் உபயோகிக்கப்பட்ட உவமைகள் அருமையாக அமைந்துள்ளதாகவும் கூறினார். அடுத்து,  ‘காண்டா கம்பு’ கதை சிவப்பு அடையாள அட்டையின் சிக்கலைப் பேசி இருப்பது சிறப்பாக இருந்தாலும் 1960 பிற்பகுதி 1970 ஆரம்பக்காலத்தில் நிகழும் இக்கதையில் சீனியர் கெம்பிரிட்ஜ் தேர்வு எனச் சொல்லாமல் எஸ்.பி.எம்தேர்வு என்று குறிப்பிடுவது சாத்தியம் இல்லைஎனக் கதையில் உள்ள சில தகவல் பிழைகளைக் குறிப்பித்தார். பிரச்சனையை மட்டுமே மையாக எடுத்துச் சொல்லி கதாபாத்திரங்களின் உணர்வுகள் கலாப்பூர்வமாக இக்கதையில் உணர்த்தப்படவில்லை எனக் கூறினார். ஒரு நல்ல கதையாக வந்திருக்க வேண்டிய கதையாக ‘காண்டா கம்பு’ கதையை முன்வைத்தார். 

‘முடிவிலி’ கதையின் கற்பனை வித்தியாசமாக அமைந்திருந்தாலும் நீண்ட வாக்கியங்களும் சூழலுக்குத் தேவையற்ற விவரணைகளும் கதையின் குறையாக அமைகின்றது.  ‘புனிதங்கள் புரையோடுவதில்லை’ என்ற கதை நாடகத்தன்மையாக அமைந்துள்ளதாகவும் கூறினார். கலைஞனின் வேலை தீர்பு சொல்வதில்லை, ஒருவரைப் புரிந்துகொண்டு கதையாக்குவதே கலைஞனின் சவால் எனக் குறிப்பிட்டு மேலும் தொகுப்பில் உள்ள சில கதைகளைக் குறித்துப் பேசினார். ‘நம்பிக்கை’ கதையில் சித்தரிக்கப்படும் கிழவியின் பாத்திரப்படைப்பு அருமை எனவும் ‘மன்னிக்கனும் சார்’ கதையில் காட்டப்படும் பள்ளிக்கூட அரசியலில் கலையம்சம் இல்லை எனவும் ‘ஒரு கோணம்; இரு பார்வை’ கதையில் கூறப்படும்  பட்டப்படிப்பு என்பதே முன்னேற்றம் என்ற அபத்தமான சிந்தனையையும்‘இருவேறு உலகங்கள்’ கதையின் விவரணை சிறப்பாக அமைந்துள்ளது எனவும் கூறினார்.

தொடர்ந்து, எழுத்தாளர் அரவின் குமார் ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ தொகுப்பு பற்றி தன் விமர்சனத்தை முன்வைத்தார். அரவின் குமார் தமது விமர்சனத்தைத் தொடங்கும் முன் எழுத்தாளர் இளந்தமிழனின் கதைகளைப் பற்றிய பொது புரிதலையும் அவர் எழுதிய காலத்தைக் குறித்தும் விளக்கமளித்தார். வெகுஜன மக்களின் வாசிப்பிற்காக விற்கப்பட்ட இதழ்கள், நாளிதழ்களில் 1978 முதல் 1995ஆம் ஆண்டு வரை எழுதி பின்னர் 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு தேக்கம் கண்டு மீண்டும் 2012இல் இக்கதைகள் இளந்தமிழன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது எனக் கூறினார். அரவின் குமார் இளந்தமிழன் கதைகளின் பொது அம்சமாக மூன்று கூறுகளை முன்வைத்தார். முதலில், சமுதாயத்தில் உள்ள பேசு பொருள், சமுதாயச் சிக்கல் போன்றவைக் கதைகளின் கருவாக அமைந்துள்ளது இக்கதைகளின் பொது அம்சமாகத் திகழ்வதாகக் கூறினார். இரண்டாவது பொது வாசகரை மையப்படுத்தியக் கதைகளாக இக்கதை அமைந்துள்ளதாகவும் மூன்றாவது வாசகரின் எதிர்வினைக்கு ஏற்ப கதைகளில் மாற்றம் செய்து கதாசிரியர் கதை எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தன் விளக்கத்தையும் வாதத்தையும் கதையில் வைத்து வாசகருக்கு ஏற்ப கதாசிரியர் இக்கதைகளை எழுதியுள்ளதாகவும் அரவின் குமார் கூறினார். ஆக, வடிவம், அழகியல், சிந்தனை என மூன்று கூறு அடிப்படையில் அரவின் இக்கதைகளை  மதிப்பிட்டார்.

வடிவம் என்ற அடிப்படையில் இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் ஒற்றைபடைத் தன்மை வடிவில் அமைந்துள்ளதாகக் கூறினார் அரவின். இத்தன்மை வாசகன் மத்தியில் சோர்வை உண்டாக்குகின்றது என்றார். ‘மனிதச் சுவடு’ எனும் கதையைக் காட்டாக முன்வைத்தார். போலி பக்தியைக் குறித்துப் பேசிய ‘மனிதச் சுவடு’ கதையில் வாசிப்பு பங்கேற்புக்கான இடைவெளி வழங்கப்படவில்லை எனவும் மனப்பிறழ்ந்தவனின் உளவியலோ பக்தியாக உள்ள மக்களின் உளவியலோ காட்டப்படவில்லை என்றும் கூறினார். “இக்கூறுதான் நவீனத்துவ கதைக்கும் மரபார்ந்த கதைக்கும் வேறுபாடாக உள்ளது. நவீனத்துவ கதை வாசகனுக்குச் சுதந்திரத்தை அளிக்கும், மரபார்ந்த கதை கருத்தைக் கூறி முடங்கிகொள்ளும். அதைதான் இக்கதை செய்துள்ளது” என அரவின் கூறினார். கதையின் போக்குக்கேற்ப திருப்பத்தை வைக்காமல் கதைக்கு அப்பாற்பட்ட திருப்பத்தைச் சொல்வது அபத்தமாகவும் நியாயமற்றதாகவும் இருக்கிறது என்றார். ‘சில்மிஷம்’, ‘காதல் குற்றவாளி’ போன்ற கதைகளைக் காட்டாக முன்வைத்து ‘காதல் குற்றவாளி’ கதையில் கொலை செய்த ஒருவர் தான் செய்த கொலையைப் பற்றி அறியாத ஒருவரிடம் கூறுவதும் அந்தக் கொலை செய்தியைக் கேட்பவன் காவல் அதிகாரி என்ற திருப்பத்தைக் கதையில் காட்டுவதும் திரைப்பட பாணிக்குறிய கூறாக அமைகின்றது என்றார்.

அடுத்து, அழகியல் அடிப்படையில் இத்தொகுப்பில் உள்ள சில கதைகள் நல்ல கதைகளாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். ‘நாவும் மனதும்’ கதையில் கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஊடல் உரையாடலின் மூலம் காட்டியது சிறப்பாக இருப்பதாகக் கூறினார். இருப்பினும், கதையில் மனைவி குற்றமற்றவள் என நிரூபிக்க கதையை வலிந்து சொன்னது இக்கதையைச் சாதரணமான கதையாக்குகின்றது எனப் பதிவு செய்தார். “‘நம்பிக்கை’, ‘போலே ஜாடி மோட்டோ மெக்கானிக்கலா’ எனும் கதைகளிலும் பொது உண்மையைச் சுட்டிக்காட்டுவதற்காகக் கதையைப் படைத்தது கதையைப் பலவீனமாக்குகின்றது. ‘நம்பிக்கை’ கதையில் அரிசி பிச்சை பெறும் கிழவியின் உணர்வு, அலைக்கழிப்பு போன்றவை நம்பகமாகச் சொல்லப்பட்டு இறுதியில் அக்கிழவி வேறொரு கிழவனைத் திருத்துவதுபோல் கதை முடித்தது கதை இயல்பைக் கெடுக்கின்றது எனவும் ‘போலே ஜாடி மோட்டோ மெக்கானிக்கலா’ எனும் கதையில் தமிழ் மாணவர்களுக்கு எதிர்காலத்தைக் குறித்த அக்கறை இல்லை என்ற பொது உண்மையைக் கூறுவதற்காக அம்மாணவர்களின் உளவியலும் உணர்வுகளும் காட்டப்படாமல் எழுதியதும் இக்கதைகளைச் சாதாரணமான கதைகளாக்குகின்றது,” எனக் கூறினார்.

தொடர்ந்து, கதையில் காட்டப்பட்டுள்ள சில அபத்தமான சிந்தனைகளை அரவின் குமார் பேசினார். ‘இரண்டும் இரண்டும் ஏழு’ கதையில் அழகற்ற ஒருவன் தன் காதலிக்கும் பெண்ணை அடைய அப்பெண்ணையே கற்பழித்து இறுதியில் அந்த ஆணைப் பரிதாபமாகக் காட்டும் சிந்தனை மிக அபத்தமாக உள்ளது எனக் கூறினார். ‘கற்பும் கன்னிமையும்’ கதையில் கற்பிழந்த பெண்ணை ஒரு ஆண் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வது என்ற சிந்தனை கற்பிழப்பது பெரிய குற்றம் போலவும் அதனை அந்த ஆண் பெருந்தன்மையாக ஏற்றுகொள்வதைக் காட்டும் சிந்தனை சமூகச் சிந்தனையாக அமைவதாகவும் கூறினார். இரு வேறு முரண்பாட்டை உருவாக்கி கதையைப் படைத்த சிந்தனையைக் குறித்தும் அரவின் குமார் விளக்கமளித்தார். ‘இருவேறு உலகங்கள்’ கதையைக் காட்டாகக் கூறினார். “ ‘இருவேறு உலகங்கள்’ கதையில் தோட்டத்தில் உள்ளவர்கள் இறப்பின்போது ஒன்றுகூடி இருப்பதும் நவீனச் சூழலில் இறப்பென்பது தனிமனிதனுக்குரியது என்று காட்ட நவீன மக்கள், தோட்டப்புற மக்கள் என இரு முரண்களைக் கையாண்டு கதை கூறியது அபத்தமான சிந்தனையாக உள்ளது. கதைகளில் கையாண்டுள்ள முரண் சித்தரிப்பினால் கதை வாசகனிடம் சென்றடையவில்லை” என்றார்.

இளந்தமிழனின் சிறுகதைகள் நினைவேக்கமாக அமைந்துள்ளதாகவும் இக்கதைகள் கலையாக மாறாததற்குக் காரணம் இக்கதைகள் மனித உணர்ச்சிகளைத் தொடர்புப்படுத்தாமல் இருப்பதுதான் எனவும் இதனால் இவை வாசகனிடம் அணுக்கமாகச் சேரவில்லை எனக் குறிப்பிட்டார் அரவின். இளந்தமிழனின் சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகள் பிரச்சாரத் தொனியுடனும் கலைகுறைபாடுடனு ம்சுவாரஸ்யமின்றி இயல்பான ஊடாட்டமின்றி அமைந்துள்ளதாகவும் கதைகளின் சித்தரிப்பும் உரையாடல்களும் நன்கு கூடி வந்துள்ளதாகவும் அரவின் விமர்சித்தார்.

மூன்று பேச்சாளர்களும் நூலைக் குறித்து பேசியப் பிறகு,  கதையின் களம், தனித்தமிழ் சொற்கள் பயன்பாடு, சிறுகதையில் தத்துவம், பத்திரிகையின் பங்கு, பொது உண்மை எனப் பல கேள்விகள் வாசகர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. அவற்றில் மிக முக்கியமாக விவாதத்துக்குள்ளானது சிறுகதைகளில் தனித்தமிழ் சொற்கள் பயன்பாடு. தனித்தமிழ் சொற்கள் பயன்பாட்டினை மேலோங்கச் செய்வதற்குக் கதைகள் துணையாக அமைந்தாலும் உரையாடல்களில் தனித்தமிழ் சொற்களை வலிந்து பயன்படுத்துவது உரையாடலின் இயல்பையும் கதையில் காட்டப்படும் வாழ்க்கையின் சாரத்தையும் கதையுடைய உயிரையும் முற்றிலும் அழித்துவிடுகிறது என ஶ்ரீகாந்தன், ராஜேஷ், ம. நவீன் ஆகியோர் விவாதித்தனர். கதையின் களம்தான் கதையின் மொழியைத் தீர்மானிக்க வேண்டும் என ஶ்ரீகாந்தன் கூறினார்.

‘இளந்தமிழன் சிறுகதைகள்’ தொகுப்பின் பலமாகக் கதாசிரியரின் மொழி ஆளுமை அமைந்தாலும் வாசகன் அக்கதைகளை வாசித்து முடித்த பிறகு ஒரு பொது உண்மையை மட்டுமே அறிந்துகொண்டு மேல் வாசிப்பிற்கு இட்டுச் செல்லாமல் அக்கதைகள் புதிய திறப்பைக் கொடுக்காமல் நின்றுவிடுவதே இக்கதைகளைச் சிறப்பற்ற கதைகளாக்குகின்றது என ம. நவீன் குறிப்பிட்டார். உதாரணமாக, இளந்தமிழன் சிறுகதை தொகுப்பில் தோட்டப்புறச் சூழலில் நிகழும் வன்புணர்வைக் காட்டிய கதையான ‘வெளிச்சம்’ என்ற கதையையும் சீ. முத்துசாமி எழுதிய ‘இரைகள்’ கதையையும் ஒப்பிட்டு ம. நவீன் விளக்கமளித்தார். “இவ்விரண்டு கதைகளும் தோட்டப்புறச் சூழலில் நிகழும் வன்புணர்வைக் காட்டக்கூடிய கதைகளாக அமைகின்றன. இருப்பினும், இளந்தமிழனின் ‘வெளிச்சம்’ என்ற கதை தோட்டப்புறச் சூழலில் நிகழும் கொடூரமான வன்புணர்வு சூழலை மட்டுமே சுட்டிக்காட்டி பொது உண்மையைச் சொல்லி கூடுதல் வாசிப்பிற்கு இட்டுச்செல்லாமல் ஒரு வட்டத்துக்குள் அடங்கியுள்ளது. சீ. முத்துசாமியின் ‘இரைகள்’ கதையில் அதே தோட்டப்புறச் சூழலில் நிகழும் வன்புணர்ச்சி சூழல் காட்டப்பட்டு அதில் அப்பெண்ணின் மனவுணர்வையும் காட்டி அப்பெண் எடுக்கும் முடிவைக் குறித்து வாசகன் சிந்திக்கும்படி கதை அமைந்திருந்ததால் கதையை அடுத்தக்கட்ட கூடுதல் வாசிப்பிற்கு இட்டுச் செல்ல முடிந்தது” என ம. நவீன் கூறினார். ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ கூடுதல் வாசிப்பிற்கு இடம் தராமல் ஒரே வட்டத்திற்குள் முடங்கிவிடுவதால் இக்கதைகள் சிறந்த கதைகளாக அமையவில்லை என ம. நவீன் கூறி இரண்டாவது அமர்வை நிறைவு செய்தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...