தாரா: நிபந்தனையற்று மன்னித்தலின் தரிசனம்

ரேவின்

மார்ச் 2,3 ஆகிய நாட்களில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்த வாசிப்பு – விமர்சன முகாமில் 3 மார்ச் அன்று ஆறாவது அமர்வில் ‘தாரா’ நாவல் குறித்து ரேவின், புஷ்பவள்ளி, சுதாகர் ஆகியோர் உரையாற்றினர். மூவருமே வெவ்வேறு கோணத்தில் நாவலை அணுகினர். முதலாவதாக ரேவின் பேசினார்.

“ஒரு புனைவை வாசிக்கும்போது அதில் உள்ள எழுத்துப்பிழைகள் வாசிப்புச் சோர்வை உருவாக்கும். ‘தாரா’ நாவலில் எழுத்துப்பிழைகள் பெரும்பாலும் இல்லை. அதற்கு உழைப்பை வழங்கியவர்களுக்கு எனது பாராட்டுகள்” என்றே ரேவின் தன் உரையைத் தொடங்கினார். தொடர்ந்து, “சீரிய நாவலுக்கும் வெறும் திருப்புமுனைகளைக் காட்டி கண்ணாமூச்சி ஆடும் நாவலுக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமானது ஒரு குளத்தில் ஒரு கல்லை எறிவதற்கும், உயிருள்ள மீனை அதில் விடுவதற்குமான வித்தியாசம்தான். கல்லும், மீனும் குளத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் அளவுகளோடு ஒப்பிடுகையில் ‘தாரா’ நாவல் மீனாகவே தெரிகின்றது. நாவலுக்குள் நுழைவதற்கும், தொடர்ந்து பயணிப்பதற்கும் அதிலுள்ள மூன்று சிறுவர்களின் பாத்திரப் படைப்போடு நாம் எளிதில் ஒத்திசைந்து விடுவது நாவலின் மிகப் பெரிய பலம்.” என்றார்.

“வன்மமும் வஞ்சமும் அனலாக எரிந்து கொண்டிருக்கும் நாவலில்,  வாசகனை ஆசுவாசப்படுத்துவது அந்த மூன்று சிறுவர்களின் செயல்கள், சிந்தனைகள், எதார்த்த உரையாடல்கள்.” என்றார் ரேவின்.

தொடர்ந்து, “நாவலின் களமாக வரும்  நிலப்பகுதி அதை சுற்றித் திரியும் மூன்று சிறுவர்கள், குகன் மற்றும் அவனின் நான்கு நண்பர்கள், அஞ்சலை, மருது வழியாகத் தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால், நாவலில் மிக முக்கியமான சம்பவங்கள் நடக்கும் மையமாகக் காட்டப்படும் இரு நிலப்பரப்புகள், நேப்பாளிகள் வாழும் தெலுக் கம்பம் மற்றும் பூழியன் கூட்டம் வாழும் ஆற்றோர நிலப் பகுதிகள் சுங்கை கம்பம் காட்சிப்படுத்தப்பட்ட அளவிற்கு ஆழமாகக் காட்டப்படவில்லை. அந்த நிலப்பகுதிகளை இன்னும் கொஞ்சம் துல்லியமாகக் காட்டியிருக்கலாம். அதில் நாவலாசிரியர் குறை வைத்து விட்டார்.” எனத் தன் விமர்சனத்தை முன்வைத்தார்.

“சாமி, சாதி, நிலம் என்ற மூன்றும் தன்னிலையில் நாவலில் இயல்பாகவே பொருந்தி விட்டது. சாதி அசுத்தப்படுத்தும் நிலத்தை, சாமி சுத்தப்படுத்தும் ஒரு சித்திரம் நாவலில் காண முடிந்தது. இது சாமிக் கதையா, சாதிக் கதையா என்ற கேள்வியின் அடிப்படையில் இயங்கினாலும் மனிதம் மகத்தானதுதான் என்பதைத் தொட்டே பேசியுள்ளது.” என்றார் ரேவின்.

“ஓர் ஆண் அத்து மீறும் போது அவனை அடக்குவதற்கு தாய் தெய்வங்கள் தொன்ம மரபில் உருவாக்கப்பட்டுள்ளது.  அறத்திற்கு எதிரான செயல்களில் ஆண்கள் இருப்பதைக் காட்டிலும் பெண்கள் அவர்களது செயல்களை ஞாயப்படுத்துவது இயல்புக்கு அப்பால் நாவலில் கவனிக்க வேண்டிய முக்கிய மையம். கிச்சியின் கேள்விக்குத் அந்தராவின் சிரிப்பு தேவையில்லாமல் திணிக்கப்பட்டது போலில்லாமல் மிகு புனைவு மிக இயல்பாகவே கதையோடு/காட்சியோடு ஒத்திசைந்து அமைந்துள்ளது. இந்த நாவலை வாசித்து முடித்ததும், அந்தராவைவிட கிச்சியே மிக நெருக்கமாகி விட்டாள். நாவலின் மிகப் பெரிய பலமே குழந்தைகளின் உலகம் ‘so cute’ என சொல்லப்படும் வகையில் அமைந்ததுள்ளதுதான்.” என்றபோது அரங்கில் அமைதி நிலவியது.

ரேவின் நாவலை ஒட்டி சில விமர்சனங்களையும் முன்வைத்தார்.

“உரையாடல் ரீதியாக ஆசிரியரின் முந்தைய நாவல்களோடு ஒப்பிடும்போது என்னதான் எதார்த்தமாக இருந்தாலும் மிகக் கவனமாக தணிக்கைச் செய்யப்பட்டது போலவே அமைந்துள்ளது. முத்தையா பாட்டன் பாத்திரம் முக்கியத்துவம் குறைவில்லாத போதும் கடந்தக் கால நிகழ்வுகளைச் சொல்ல அமைக்கப்பட்ட கதாபாத்திரமாகத் தோன்றியது. புலம் பெயர்ந்த வாழ்வின் இருத்தலியல் சார்ந்தப் பிரச்சினைகள் பின்னணியில் மட்டுமே நாவலில்  தொட்டுப் பேசப்பட்டுள்ளது. ஆனால், இருத்தலியல் பிரச்சினை பல தலைமுறையினர்களுக்கு முன்பு வந்த தமிழர்களுக்கு அண்மையில் புலம் பெயர்ந்த நேப்பாளிகளைப் பார்த்து ஒரு வித பயத்தையும் அதன் வழியாகப் பொறாமையையும் தூண்டி பல இரத்த பலிகள் அரங்கேறிய நாவல் ‘தாரா’.  சின்ன சின்ன குறைபாடுகள் இருந்தாலும் இதில் ஒண்ணுமில்லை என்று சொல்லி ஒதுக்க முடியாத நாவல் ‘தாரா’.” எனக் கூறி நிறைவு செய்தார் ரேவின்.  

புஷ்பவள்ளி

தொடர்ந்து, புஷ்பவள்ளி உரையாற்றினார். நாவலில் காணப்படும் கதாபாத்திரத்தை ஒட்டியே தன் புரிதலைத் தொடங்கினார் புஷ்பவள்ளி.

“சுங்கை கம்பம் இந்தியர்களுக்கும், அண்மையில் புலம் பெயர்ந்த தெலுக் கம்பம் நேப்பாளிகளுக்கும் நடக்கும் வாழ்க்கை போரில் நாவல் எழுதப்பட்டுள்ளது. முந்தைய காலகட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள் காரணங்களைத் தாமே உருவாக்கிக்கொண்டு அண்மையில் புலம்பெயர்ந்தவர்களை ஓட ஓட அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்,” என்றார்.

ஐந்து முதன்மை கதாபாத்திரங்களின் உணர்வுகளிலிருந்து அவர் தன் உணர்வுகளைக் குறிப்பிட்டார் புஷ்பவள்ளி. “குகனின் மரணத்திலிருந்து சிறுவர்களின் வழியாகத் தொடங்கும் கதையில் குகனின் அச்சுறுத்தல் தொடங்கி ஒவ்வொரு அத்தியாயமாகக் காட்சிகள் தாவுகின்றன. திமிலாவின் மீதிருந்த பழைய வன்மத்தைத் தீர்த்து கொள்ள ராக்காயியின் மகள் நேப்பாள தொழிலாளியோடு ஓடி போனது காரணமாக உருவாக்கப்பட்டுள்ளது. குகனின் கொடூரமான வன்மம் அவன் பழி வாங்கும் முறையின் கொடூரத்திலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.” என்றார்.

“தெலுக் கம்பம் நேப்பாளிகளிடம் அவர்கள் காட்டும் வன்மம், பணம் பிடுங்குதல், அடித்து விரட்டுதல் போன்றவை அவர்களின் போலி இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதாகவே நாவல் முழுவதுமாகச் சொல்லப்பட்டுள்ளது. அடுத்து,  மருதுவின் பதவி ஆசையால், சூழ்ச்சியால் அங்குள்ள மக்களை வசியம் செய்வது போலவே வன்மத்தை வளர்த்தும் விடுகிறான்.” எனத் தன் பார்வையை மேலும் கூர்மையாக முன்வைத்தார்.

“தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த இந்தியர்களின் வருகையைப் போல நேப்பாள மக்கள் மனிதம் அற்ற மக்களிடம் மாட்டிக் கொண்டதை உணர முடிந்தது. அதோடு இளம் தலைமுறையினரிடம் நேப்பாள மக்களைக் குறித்து ஒரு வெறுப்புணர்வும் கடத்துவதன் பாதிப்புகளையும் காண முடிந்தது. குகன் தன் கையை வாயில் விட்டு வாந்தி எடுத்து, அதை நேப்பாளிகளிடம் உண்ண சொல்லும் காட்சியை மனதில் கஷ்டமில்லாமல் கடக்க இயலவில்லை. தொடர்ந்து, சனில் நான் மிகவும் போற்றப்படும் கதாபாத்திரமாகப் படுகிறான். இவ்வளவு அவமானத்தையும் தன்னைச் சார்ந்த மக்களுக்காகச் சனில் பொருத்து நிதானமாக இருந்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.” என புஷ்பவள்ளி உணர்வு பூர்வமாக தன் உரையை ஆற்றினார்.

சுதாகர்

“பெண்கள் அறத்தை மீறும் போது இயற்கைப் பேரிடர் நிகழும் காட்சிகள் அச்சுறுத்தலை உணரும் வகையில் ஆசிரியர் பதிந்திருக்கிறார். மருது பல சூழ்ச்சிகள் செய்தாலும் எங்கேயும் அடிவாங்குவதாகக் காட்டப்படவில்லை. ஆசிரியர் மையப்பாத்திரமாக மூவரை நேப்பாள குழுவில் இருந்து அறிமுகப்படுத்துகிறார். அந்த மூவரையும் மிகக் கொடூரமான முறையில் கொன்று விட்டார்.  கதாசிரியரும் நேப்பாள எதிர்ப்பைக் கதையில் காட்டிவிட்டாரோ? தாராவை இன்னும் கொஞ்சம் ஆழமாகக் காட்டி இருக்கலாமோ? எனும் விமர்சனங்கள் எழுந்தாலும் தாரா அகத்தைத் தொட்டு செல்கிறாள்.” எனத் தன் கருத்தை நிறைவு செய்தார்.

இறுதிப் பேச்சாளர் சுதாகர். அவரும் ‘தாரா’ நாவலை விரிவாக ஆராய்ந்திருந்தார். ” அறம் மீறப்பட்டதால், குலதெய்வம் கோபம் இரண்டு தலைமுறையினரை இணைக்கும் வகையில் நாவல் பயணித்துள்ளது.  இன ரீதியாகப் பகையில்லாமல் போனாலும் வாழ்வாதாரம் சார்ந்த பகை‘தாரா’வில் வெளிபட்டுள்ளது. அவர்களது முன்னோர்கள் பழங்குடியினர்களை விரட்டி, அங்கே குடியமர்ந்தனர். அந்தப் பயம் ஆழ் மனதில் மெல்லிய இசையாகக் கேட்டுக் கொண்டே, அண்மையில் குடியேறிய நேப்பாளிகளால் தாம் விரட்டப்படுவோம் என்ற உள்ளூர பயமே உள்ளூர் வாசிகளின் இத்தனை வன்முறைக்கும் காரண கர்த்தாவாக அமைந்து விட்டது.” என்றது ஆழமான பார்வையாக இருந்தது.

“சாதியை வைத்து அரசியல் லாபம் தேட இளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.  தன்னை அற நெறியாளனாகக் காட்டிக்கொள்ள சாமி, பக்தி என்று அரசியலும் அரசியல்வாதியின் வழியாகவும் நாவல் காட்டப்பட்டுள்ளது.” என்றார் சுதாகர். 

“எல்லா கதாபாத்திரங்களும் நிபந்தனை இன்றி மன்னித்து இருந்தால் எந்தப் பிரச்சினையும் கதையில் நடந்திருக்காது. திறக்கப்பட்டிருக்கும் நுழைவாயிலில் இலகுவாக நுழைவது போலவே இந்த நாவலின் நுழைவாயில் குழந்தைகளின் மொழியின் வழியாகத் திறக்கப்படுகிறது. குழந்தைகளின் உலகத்தில் சண்டைகள் போட்டு மீண்டும் சேர்ந்துகொள்வது போல பெரியவர்கள் இல்லை.” என நாவலின் பலத்தைச் சொன்னவர், “கோயில் கட்டுதல், அரசியல் சூழல் சார்ந்த காட்சிகளைக் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம். காரணம் அவர்களைக் குறித்த விவரனைகள் கட்டுரைக்கானத் தன்மையில் அமைந்து ஆசிரியர் கதையைச் சொன்னது போல தெரிந்தது.” எனப் பலவீனத்தையும் முன்வைத்தார் சுதாகர்.

“தோற்றுப்போன அறம் இறுதியில் நிலைநாட்டப்படுவதாக காட்டப்பட்டுள்ளது. நாவலில் காட்டப்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகளை நம்முள் கடத்துவதில் ஆசிரியர் வெற்றிப் பெற்றிருக்கிறார். அதனால் ஒட்டுமொத்தமாக இது ஒரு சிறந்த நாவல்.” என நிறைவு செய்தார்.

தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்த அம்மூவரின் கருத்துகள் குறித்து விவாதம் எழுந்தது.  

“நிபந்தனை இல்லாத மன்னிப்பை நாவலில் எங்கே பார்க்கிறீர்கள்?” என தயாஜி முன்வைத்த கேள்வி கலந்துரையாடலின் விவாதப் பொருளானது. நாவலில் எல்லோரும் பலிவாங்கும்போது நிபந்தனைகள் இன்றி மன்னிப்பு எங்கே வெளிப்பட்டது என்ற கேள்வியே திரும்பத் திரும்ப சர்ச்சையாகி தேடப்பட்டது. தாரா மன்னித்த குற்றவாளிகள்கூட அவர்களுடைய தாயார்களால் தண்டனை பெறுகிறார்கள். அவ்வாறு இருக்க எங்கே நிபந்தனை அற்ற மன்னிப்பு என்ற கேள்வியும் அதற்குப் பலரின் மாற்று கோணத்திலான பதிலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இறுதியில் பேசிய நவீன், “ஒரு வாசகனாக நானிருந்து இக்கேள்விக்குப் பதில் கொடுத்தால், மூன்று பேர் வெட்டப்படுகிறார்கள் ஆனால், அவர்கள் குற்றவாளிகள் அல்ல. சமூகம் தான் உண்மையாகவே குற்றவாளி. இவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் எனத் தெரிந்தும் அங்கே ஒட்டுமொத்த சமூகம் தான் அவர்களைக் காப்பாற்றியது.  மூன்று தலைமுறையினர்களுக்கு முன்பு ஒரு சமூகம் எவ்வாறு குற்றவாளிகளைக் காப்பாற்றியதோ அதே போல இன்றும் அந்தச் சமூகம் குற்றவாளிகளைக் காப்பாற்ற முன் வந்தது. அங்கே மீண்டும் அறப் பிறழ்வு ஏற்பட போகும் அறிகுறிகளோடு வெள்ளம் ஒட்டு மொத்த ஊரையும் அழிக்க காத்திருக்கும் போது ‘பல் பாலத்தை’ தாராவின் உடல் தகர்த்து,  வெள்ளத்தினால் ஏற்படும் பேரழிவிலிருந்து ஊர் மக்கள் தாராவினால் காப்பாற்றப்படுவதில் நிபந்தனையற்ற மன்னிப்பு வெளிப்படுகின்றது” எனக் குறிப்பிட்டார். அரங்கு கைத்தட்டி அந்த பதிலை ஏற்றுக்கொண்டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...