கடந்த மார்ச் 2,3 ஆகிய தினங்களிள் வல்லினத்தின் ஏற்பாட்டில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடந்து முடிந்த விமர்சன முகாமில் எழுத்தாளர் அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் குறித்த விமர்சன அரங்கும் இடம்பெற்றது. முகாமின் ஐந்தாவது அமர்வில் மூவர் அந்நாவல் தொடர்பான விமர்சனத்தை முன்வைத்ததோடு அதையொட்டிய கேள்விகளும் விவாதங்களும் என இரண்டு மணி நேரம் அவ்வமர்வு தொடர்ந்தன.
முதல் விமர்சனத்தை முன்வைத்த எழுத்தாளர் சல்மா தினேசுவரி இந்நாவலை அனுபவம், தரிசனம், தத்துவம் ஆகிய கூறுகளோடு அணுகினார். நாவல் கொடுக்கும் நிகர் அனுபவம் தன்னைக் கவர்ந்ததாகவும் அது நாவலின் பலமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். பினாங்கு பாலக் கட்டுமானத்தின் காலப் பின்னணியில் கதை பின்னப்பட்டிருந்தாலும் அது மையப்படுத்தும் சமூக நோக்கின் காரணமாக அதனை வரலாற்று நாவலென அடையாளப்படுத்த முடியாதென்பதைத் தெரிவித்தார். சம்பவத்தின் தீவிரம் நேர்க்கோட்டில் சொல்லப்படாததும் நாவலின் மர்மம் பிந்தைய பகுதிகளில் முடிச்சவிழ்க்கப்படுவது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.
மொழி, கதையின் வெளிப்பாடு, கதாபாத்திரங்களின் உருவாக்கம், கதைகளத்தில் இழைகொண்ட நிஜ நடப்புகள், வாசகனைப் பரவசப்படுத்தும் மீட்சிவேட்கை ஆகியவைக் கதைக்கு வலு சேர்ப்பதாக அவர் குறிப்பிட்டார். சம்பவங்கள், கிளைக்கதைகள், உரையாடல், வருணனை என ஒவ்வொன்றும் கோர்க்கப்பட்டிருக்கும் விதம் நாவலில் செறிவாக இருப்பதாகவும் ஐயாவுவின் கதாபாத்திரம் கணிக்க முடிந்ததாக இருக்கும் வேளையில் கணிக்க முடிந்ததால் தேவா போன்ற சிலரின் பாத்திர வார்ப்புகள் தவிர்த்திருந்தாலும் நாவலின் சீரைக் குலைத்திருக்காது என்றார். அகூபாரா தோன்றும் காட்சி, பாலக் கட்டுமானம், பொம்மை செய்யும் தொழிற்சாலை ஆகியவற்றின் சித்தரிப்புகள் செம்மையுடன் எழுதப்பட்டிருப்பது அவரைக் கவர்ந்த அம்சங்கள் எனப் புரிந்தது.
தொடர்ந்து, தரிசனம் தொடர்பாகக் கருத்துரைத்த சல்மா, தான் துரைசாமியின் மனைவியான சாந்தியின் மூலம் உயரிய விழுமியமான தாய்மையைக் கண்டுகொண்டதாகவும் வள்ளியின் மகளான தனலட்சுமியின் மூலம் ஆதி இச்சையின் முளைப்பினையும் கண்டுகொண்டதாகவும் கூறினார்.தாய்மைக்கு முந்தைய, பிந்தைய நிலையில் இருக்கும் பெண்ணின் உளவியலும் கன்னிநிலையிலுள்ள பெண்ணிற்கு இருக்கும் உடல் தேவையையும் அவர் நாவலில் கண்டுகொண்ட தரிசனங்கள். பேராசையின் விளைவால் எதிர்கொள்ளும் அழிவும் குற்றவுணர்ச்சியால் ஒவ்வொரு நொடியும் பிரக்ஞைப்பூர்வ மரணத்தை உணர்வதுமான சூழமைவில் ஆதி சக்தியின் முன்னிலையில் மீண்டும் ஆதி அணுவாக உருக்கொண்டு சரணடைவதைத் தவிர மேலானது எதுவென்ற கேள்வியை வாசகன் முன் வைத்து நாவல் நிறைந்தும் நீள்வதாகத் தன் விமர்சனத்தை முடித்துக் கொண்டார்.
அடுத்த விமர்சனத்தை எழுத்தாளர் தயாஜி முன்வைத்தார். சமீபத்தில் அவர் வாசித்த ‘கரிப்புத் துளிகள்’ மற்றும் ம. நவீனின் ‘தாரா’ ஆகிய இரு நாவல்களிலும் காணப்பட்ட ஒற்றுமைகள் தொடர்பாகப் பகிர்ந்து கொண்டார். தொன்மப் பயன்பாடு, அந்நியர்களின் இருப்பு, துர்மரண நடந்தேறல் ஆகியன அவரின் ஒப்பீடாக இருந்தன. உருப்பெற்ற, உருக்குலைந்த தமிழர்களின் பட்டியலை எடுத்து எவ்வாறான சிக்கலினால் சிதைவுக்குட்பட்டனர் என்பதில் நேர்க்கோடொன்றை அமைத்து, அக்கோட்டின் இடையே விண்மீன்களைப் பொருத்தி அதற்கேற்ற சம்பவங்களைப் புகுத்திடும்போது எழும் சித்திரத்தினைக் ‘கரிப்புத் துளி’களில் பொருத்திப் பார்த்தார்.
நாவலிலுள்ள பாத்திர வார்ப்புகள் நிறைவடையாத நிலையில் இருப்பதாகக் கருத்தை முன்வைத்தவர் தீபாவளியின்போது மருதாணி வரையும் பெண் தன்னிடம் கூறியதை ஒப்பிட்டு ‘கரிப்புத் துளி’களின் பாத்திர வார்ப்பு அம்சத்தை அணுகினார். மருதாணியை வரையும்போது தவறு நிகழ்ந்துவிட்டால் என்னவாகும் என்ற கேள்வியைக் கேட்ட அவரிடம் அந்தப் பெண், விரும்பியேற்று செய்யும் எதிலும் தவறு நேர்ந்தாலும் அது கலையாகவே நிலைக்கும் என்று கூறிய பதிலைக் கொண்டு அவர் நாவலில் முழுமையடையாத பாத்திரங்களுக்கு வழுவமைதியைக் கொடுத்து அதுவே அதனை முழுமைப்படுத்துவதாகக் கூறினார். சிதைந்து, சிதறிப் போன மனிதர்களின் வாழ்வு முழுமையற்ற ஒன்றென்பதால் நாவலின் நிறைவடையாத பாத்திரப் படைப்பு நாவலுக்கு நியாயம் சேர்ப்பதாக அமைகின்றது எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழர்களுக்குத் தலைவர்கள் மீது எழும் பற்றும் அதன் அடித்தளத்தில் உள்ள உளவியலும் நாவலுள் இருப்பதைச் சுட்டிக் காட்டினார் தயாஜி. நாவலில் வரும் கோயிலின் வளர்ச்சியையும் பக்தனின் வீழ்ச்சியையும் ஒப்பீடு செய்யும் சாத்தியத்தையும் நாவல் வழங்கியிருப்பதாகக் கூறினார். அதோடு நடைமுறையில் சாட்சியமில்லாத, தனி மனிதனின் மன ஏடுகளில் மட்டும் தன்னை நிறுவிக்கொள்ளும் தொன்மக் கூறுகளை நாவலின் முக்கிய அம்சமாக எழுத்தாளர் பயன்படுத்தியிருப்பது அவரைக் குதூகலப்படுத்தியுள்ளது. ஒரு நாவலில் நேரடியாகச் சொல்லப்படும் அமானுஷ்யம் ஏற்படுத்தும் ஆர்வத்திற்கு நிகராக அதன் நிழலில் அசையும் சொல்லப்படாத அமானுஷ்யமும் ஈவதாகச் சொன்னார். துரைசாமிக்கும் நீருக்குமான பந்தத்தின் மர்மம் அதன் சாட்சியமாக இருப்பதை முன்வைத்தார். லௌகீக வெளியில் நிகழ்ந்த சம்பவங்கள் பத்திரிக்கைகளைக் காட்டிலும் புனைவில் அதற்கான விவரிப்புகளோடு இருப்பதனால் அவை உயிர்ப்போடு இருப்பதையும் பதிவு செய்தார்.
தொடர்ந்து, தனலட்சுமியின் கதாபாத்திரம் பெண்ணின் உளவியல் மாற்றத்திற்கு சான்றாக அமைந்துள்ளதாகவும் அவளின் ஆணவமும் அதை கொண்டு அவள் கடந்து நிற்கும் எல்லையும் எல்லைக்கடப்பின் விளைவையும் விளக்குவதாக அப்பாத்திரம் அமைந்துள்ளதாகக் கூறினார். நாவலில் நகைச்சுவைத் தன்மை இயல்பாக வந்திருக்கும் அதே வேளையில் நாவலின் மொழி தன்னளவில் நாவலுக்குப் பலமாகவும் பலவீனமாகவும் இருப்பதையும் விமர்சனமாக முன்வைத்தார். பேச்சு வழக்குச் சொற்கள் ஆசிரியர் கூற்றில் வரும்போது ஆசிரியரும் நாவலில் ஒரு கதாபாத்திரமா என்று எழுந்த குழப்பத்தைக் குவியப்படுத்தினார். நாவலின் முடிவில் துரைசாமி மீண்டும் அகூபாராவை அணுகியது ஏனென்ற கேள்வி அவரைச் சிந்தனைக்குள் ஆழ்த்தியது. புனைவு சார்ந்த வரலாற்றினை வாசிப்புக்குட்படுத்தி, அதிலிருந்து மெய் வரலாற்றினை நோக்கி உந்தித்தள்ளும் கருவியாக இந்நாவல் இருப்பதும் உதிரி மனிதர்களின் வாழ்வு உதிரித்தனமாகக் கையாண்டதும் நாவலின் செழுமை என்ற கருத்தோடு தனது விமர்சனத்தை நிறைவு செய்தார்.
மூன்றாவதாக விமர்சனத்தை மொழிந்த ஆசிரியர் இளம்பூரணன், எழுத்தாளரின் முந்தைய குறுநாவலான ‘ரிங்கிட்’டிலிருந்து கண்கூடாகும் பரிணாமத்தோடு ‘கரிப்புத் துளிகள்’ புனைவில் அடுத்த படிநிலையை எட்டியுள்ளது என்ற கருத்தோடு தொடங்கினார். மலேசியப் புனைவு வரலாற்றில் இதுவரை கவனப்படுத்தாதப் பகுதியினை எடுத்துக் கொண்டது புதுமையானதாக உணர்ந்தார். ‘கரிப்புத் துளிகள்’ என்ற தலைப்பினால் வாசகன் தன்னுள் கட்டுமானித்த பிம்பம் நாவலில் பூரணத்துவமடைந்ததா என்ற அடிப்படை கேள்வியால் இந்நாவலை நெருங்கினார்.
கதையினைக் காட்சிப்படுத்துவதற்கான கள ஆய்வினையும் அதற்காக நிகழ்த்திய தேடலையும் பாராட்டினார் இளம்பூரணன். இட விவரணை, செயல் விவரணை என நிகர் அனுபவங்களை வழங்கியிருப்பதில் நாவல் கோலோச்சிருப்பதாகத் தெரிவித்தார். நாவலின் செழிப்பான நுண்சித்தரிப்புகள் நிறைவாக அமைந்திருப்பதோடு நாவலின் தொடக்கத்திலிருந்து புதிர்த்தன்மையினைத் தன்னுள் மெழுகியிருந்த பாங்கு ஈர்ப்பதாகவும் கூறினார்.
பாலக் கட்டுமானத்தின் பின்னணியில் இயங்கும் உதிரி மனிதர்களின் வாழ்வியலின் அழுத்தம் சிறு போதாமையை எட்டியிருப்பதைக் குறிப்பிட்டவர் அதற்குக் காரணமாக அவர்களிடம் உள்ள பொதுத்தன்மையான சிக்கல்களை மட்டுமே தொட்டுப் பேசியதைக் குறிப்பிட்டார். வெவ்வேறு புறநகர்ப்பகுதியிலுள்ள, தோட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கையைப் போல நகரமயமாகும் பகுதியில் உலாவும் மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் சித்தரிப்புகள் ‘கரிப்புத் துளிகள்’ நாவலில் இல்லாதது தன்னை ஏமாற்றமடையச் செய்தது என்றார். ‘கரிப்புத் துளிகள்’ எனும் பெயரைப் பொருத்திய நாவல் கொண்டிருக்க வேண்டிய காட்டமான, கரிப்பான தருணங்கள் காணக்கிடைக்காததன் உணருதலோடு பெரும்பால பாத்திர வார்ப்புகளின் நிறைவடையாத தன்மை ஒருவித உவப்பின்மையினை ஏற்படுத்துவதாக இளம்பூரணன் தன் உரையில் பதிவு செய்தார்.
இளம்பூரணன் நாவலைப் பல்வேறு கோணங்களில் அணுகியிருந்தார். குறிப்பாகக் கதை நகர்வின் துரிதம் அதீத காட்சி விவரணையினால் தடைபட்டுள்ளது என்றும் கதையின் முக்கிய சம்பவங்களான ஜெகாவின் மரணமும் துரைசாமியின் பிறழ்வுநிலைக்கான காரணமும் இருபதாம் அத்தியாயத்திற்கு மேல்தான் திறக்கப்படுகிறதெனும் சூழலில், இடையிடையில் பிற உதிரிக் கதைகளின் தோற்றத்தினாலும் மந்தயியல்போடு திடீரென அவசரப் போக்கினை அணிந்த விதத்தில் நாவலின் மையம் சிதறடிக்கப்பட்டுள்ளதாகக் கருத்துரைத்தார். “மிகக் காத்திரமாகக் கையாளப்பட வேண்டிய தருணங்களான ஜெகாவின் மரணம், டானுவின் தற்கொலை ஆகியன மேலோட்டமாக இருப்பதாகவும் வாசகனைக் கவரக்கூடிய மர்மங்கள் நிரம்பியிருந்தாலும் அது நாவலுக்கு வலுவூட்டியதா?” என்ற கேள்வியை இளம்பூரணன் முன்வைத்தார்.
நாவலின் தொன்மக் கூறான அகூபாராவின் தோற்றம் சமரசத்தையும் நெருடலையும் ஒருசேர ஏற்படுத்தியதன் பின்புலத்தினை அதன் தேவையின் அடிப்படையிலும் தரிசன நிறுவுதலின் அடிப்படையிலும் அலசிப் பார்த்தார் இளம்பூரணன். மேலும், உக்கிரமான தருணமொன்றில் வள்ளி பருகும் பானத்தின் குளிர்ச்சியை விவரித்தது தகிக்கும் சூழலுக்கு முரணாகக் காட்சியளிப்பதைத் தெரிவித்தார். இப்புனைவு நாவலுக்கான தன்மையில் அமையாமல் ஆவணத்தன்மையில் அமைந்துள்ளது என விமர்சனத்தை முன்வைத்தார். அதீத விவரணைகளும் சித்தரிப்புகளும் கதைப்போக்கினை மழுங்கலுக்குத் தள்ளுயிருக்கிறது என்றார் இளம்பூரணன். ஒரு புனைவினை வெறும் தர்க்க ரீதியிலும் அறிவு ரீதியிலும் அணுகும்போது ஏற்படும் மனத் தடையினை அதன் இலக்கியத் தன்மை மட்டுமே உணர்த்தக்கூடிய மெய்யியலை நோக்கிப் பயணிக்கும்போது நிவர்த்தியாகிறது. அசாதாரண நிதர்சனத்தை மொழியால் புனைதலென்பது சவால் நிறைந்தது. அவ்வாறு தொன்மக் கூறின் மேல் எழுந்த தர்க்க மோதலைக் களைந்ததாகக் கூறினார் இளம்பூரணன். நாவலிலுள்ள தொன்மக் கூறான அகூபாரா, நாவல் வாசிப்பிற்கு மேலும் திறப்புகள் கொடுப்பதனால் அதனை ஏற்றுக்கொள்வதாகக் கூறி தன் விமர்சனத்தை நிறைவு செய்தார்.
விமர்சன அரங்கிற்குப் பிறகு எறியப்பட்ட கேள்விகளில் துரைசாமிக்கும் நீருக்குமான தொடர்பின் இறுக்கம் இறுதியில் அவன் கடல் நோக்கி சரணடைய ஓடும்போது தளர்வதாக எழுத்தாளர் கோ.புண்ணியவான் எடுத்துரைக்க, திறந்த முடிவின் காரணமாக அது வாசகத் தரப்பின் வாசிப்பினைச் சார்ந்ததெனத் தயாஜி விளக்கினார். தொடர்ந்து, நாவலில் மாந்தர்களின் தனி மொழியை ஆசிரியர் கூற்றில் வெளிப்படுத்தியதைத் தவிர்த்திருக்கலாமென ஆதித்தன் பதிவு செய்தார். “யதார்த்தவாத நாவலில் மனிதர்களின் வாழ்க்கை சித்திரத்தைக் காட்சிப்படுத்தும்போது அதில் வனையப் பெறும் வரலாற்றின் காரணமாகத் தன்னியல்பாக வரும் ஆவணத் தன்மை எவ்வாறு குறைபாடாகிறது?” என்று எழுத்தாளர் அரவின் குமார் வினவினார். ஆவணத் தன்மை இருப்பதில் சிக்கலில்லையெனினும் மிகுதியான சித்தரிப்புகள் புனைவின் கலையமைதியைக் கலைக்க நேரிடும் என இளம்பூரணன் விளக்கினார். தயாஜி அந்த ஆவணத் தன்மையே நாவலின் ஈர்ப்பாகவும் நம்பகத்தன்மையாகவும் இருக்கிறதென்பதைக் கூறினார். சல்மாவின் கருத்து தயாஜியை ஒத்திருந்தாலும் ஆங்காங்கு இளம்பூரணனின் கருத்தையும் ஏற்றுக் கொண்டார்.
“நாவல் நெடுக மரணங்கள் நிகழ, புனைவில் காட்சி ரீதியாக அவை மனதினை அசைத்துப் பார்த்ததா?” என லாவண்யா வினவினார். புனைவின் உக்கிரமான அல்லது துயர் அளிக்கும் தருணங்கள் நேரடியாக வாசகனைப் பாதிப்பதற்கு மொழி வழி கட்டமைக்கக்கூடிய காட்சியமைப்பு அத்தியாவசியமானதெனவும் கூறினார்.
இடையில் சல்மா நாவலுக்குக் ‘கரிப்புத் துளிகள்’ எனும் தலைப்பைக் காட்டிலும் அகூபாரா எனும் தலைப்பே பொருத்தமாக இருந்திருக்கும் என்பதைப் பதிவு செய்தார். நாவலின் வடிவ ரீதியிலான விமர்சனமாகப் பினாங்கு பாலம் கட்டத் தொடங்கிய காலக்கட்டத்தை மையமாக்குவதா அல்லது அகூபாரா எனும் மாயக்கதைக்குள் நுழைவதா என்ற குழப்பம் வாசகனுக்கு எழுகிறது. பிரம்மாண்டமான நாட்டின் வளர்ச்சித் திட்டம் நடந்தேறுவதன் இருளில் நசுக்கப்படும் மனிதர்கள் நசுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் துயரும், அப்படி நசுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விலும்கூட மாயத்தன்மையும் மாந்திரீகயியல்பும் அவலமும் ஒருங்கே இருப்பதை நாவல் காட்சிப்படுத்துகிறது. ஆதலால், அதன் நிகழ்வியலைப் பினாங்கு பாலக் கட்டுமானத்தினை அடித்தளமாகக் கொண்டு அதற்குள் அகூபாரா உட்பட அனைவரும் அடங்கும் முறைமையை வாசிப்பாகக்கொள்ளும்போது அதன் குழப்பங்கள் களையப்படுமென ம. நவீன் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்து, “மிகப் பெரும் இரகசியம் பொருந்திய டானுவின் கதாபாத்திரம் ஐயாவு மேல் கொள்ளும் அளப்பரிய நம்பிக்கையும் ஐயாவு துரையை நம்பி இரகசியங்களைப் பகிர்வதும் டானுவின் குலதெய்வத்தைக் காணும்போது ஐயாவு துரைசாமியையும் உடன் அழைத்து வந்ததில் டானுவுக்கு ஏற்படாத சலனமும் நாவலில் நியாயப்படுத்தப்பட்டுள்ளதா?” என நவீன் வினவினார். துரைசாமியை ஏமாளியெனும் பகடைக்காயாக ஐயாவு உடனிணைப்பதும் போதைப்பொருளினை டானுவுக்கு வழங்குவதால் டானு ஐயாவுவுடன் நெருங்கியிருப்பதும் நாவலில் இடம்பெற்றுள்ளதாகச் சல்மா நவீனுக்கு விளக்கினார். சல்மாவின் கருத்தை ஏற்ற நவீன், நாவலில் ஊடாடும் இந்தச் சூழ்ச்சித்தன்மை அவதானத்திற்குரியது என்றும் கதையின் மையச்சரடு இதில் நீள்வதாகவும் பிறிதொரு திறப்பிற்கு வடிகால் இடுவதாக நவீன் விளக்கினார். டானு பின்னிய சூழ்ச்சி நிறைந்த வலையில் துரைசாமி இயல்பாகச் சிக்கிவிடுகிறான். ஆதலால், வஞ்சகச் சூழ்ச்சியை நாவல் எல்லையாகக் கொண்டிருக்கலாமென லாவண்யா சிந்தித்ததைப் பகிர்ந்தார். பேராசையினை இறுகப்பற்றும்போது அதன் மறுபுறத்தில் இயக்கப்பெறும் சூழ்ச்சிதனை உணராமையால் மிக எளிதில் பலியாவதன் அபத்தத்தினை நாவல் தன்னுள் கொண்டுள்ளதெனும் கருத்திற்கு மறுப்பில்லாதிருந்தது.
இவ்வாறான இழையோடல் நாவலுள் நிகழும்போது அகூபாராவும் சூழ்ச்சியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதா எனும் லாவண்யாவின் ஐயத்திற்கு, தொன்மங்களைத் தர்க்கப்பூர்வமாக நிறுவ முடியாத நிலையில் அனைத்தும் சூழ்ச்சியென அடையாளப்படுத்தும் ஆபத்தினைத் தவிர்க்க அதனை அழகியல் ரீதியில் அணுகுவது நாவலுக்கு நியாயம் செய்யுமென அரவின் குமார் கூறினார். ஐயாவுவின் பணத் தேவைக்காக அவன் குறிவைக்கும் இரை துரைசாமியாகயிருக்க, பணத்தை அவனிடமிருந்து பெறுவதை நிச்சயப்படுத்த முதலில் சில வித்தைகளைத் துரைசாமியிடம் நிகழ்த்தி அவனை வசியத்திற்குள் கொண்டு வந்த பின்னர் மிக எளிதாக அதனைச் சாதிப்பதான கதையமைப்பினை ம. நவீன் குறிப்பிட்டார். மற்றொரு கருத்தாக, நாவலில் அகூபாராவின் உடனிருப்பு இல்லாதிருந்தாலும் நாவலில் மிகப் பெரும் மாற்றம் ஏதும் இருந்திருக்காதென்பதைக் கோ. புண்ணியவான் சொன்னார். ஒரு மனம் பிறழ்வதற்கும் பிறழாதிருப்பதற்கும் இடையில் நடந்தேறும் நிகழ்வுகளில் ஊடாடும் எதிர்வினைகளும் யதார்த்தமும் மாயாவாதமும் முரண்பட்டு மோதிக்கொள்ளும் தருணங்களும் நாவலில் நேர்மையாக வெளிப்பட்டிருப்பதனால் லாவண்யா ‘கரிப்புத் துளிகளை’ நல்ல நாவலென அடையாளப்படுத்தினார்.
அகூபாராவின் வெளிப்பாடு நாவல் முழுவதையும் திருப்திகரமாக நிறைக்காததால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுவதாகச் சாலினி கூறினார். அதே வேளையில் இயற்கையிடம் சரணடைவதற்கான குறியீடாக அகூபாரா இருப்பது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் எடுத்துரைத்தார். வள்ளி, தனலட்சுமி ஆகியோரின் வருகை நாவலில் பெரிதாக உதவவில்லையென்பதையும் இளம்பூரணனின் கருத்தோடு உடன்பட்டார். ஏற்கனவே பதிவான பாத்திரத்தின் மனநிலையை மீள மீளச் சொல்வது சோர்வை அளித்ததாகவும் அத்தியாத்தை வெறுமனே நீட்டிப்பதற்கான உத்தியாகவும் இருப்பதாக கூறினார்.
சூழ்ச்சியே நாவலின் மையமென்ற நிலையில் அதன் பிரதான வஞ்சகனாக வலம் வருவது ஐயாவுதான் என்றார் மோகனா. டானுவைப் பிறர் அந்நிய நிலையிலிருந்து நோக்கும்போது அவனை நெருங்கும் ஐயாவு வசீகரிப்பதனால் அவன் அழைத்து வரும் துரைசாமியின் வருகை டானுவைப் பாதிக்காதது டானுவின் வெள்ளந்தி நிலையைக் குறிப்பதாகவும் கூறினார். நிகழ்த்தப்படும் சூழ்ச்சிக்கும் டானுவுக்கும் தொடர்பில்லாத பட்சத்தில் அதன் இயக்கியாக இருப்பது ஐயாவுவென்றும் இயக்கப்படுபவனாகத் துரைசாமி இருக்கிறானென்றும் சொன்னார். சூழ்ச்சியை மையமிட்டே நிறைய திறப்புகளை முன்வைத்த மோகனாவிடம் வெறும் சூழ்ச்சியையே மையமிடும் பாங்கு நாவலின் தரத்தை இறக்குவதாக இளம்பூரணன் கூறினார்.
துன்பம் நிறைந்த வாழ்க்கை, உப்பு நீர் கூடிய கடலின் அருகில் நிகழ்வதாகச் சண்முகா நாவல் குறித்து தன் பார்வையை முன்வைத்தார். ஜெகாவிடம் தங்க நாணயங்கள் இருந்ததற்கான சான்று போலிஸ் விசாரிப்பு பகுதியில் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டிய சண்முகா அதன் காரணமாக ஜெகாவின் மரணம் தன்னால் நிகழ்ந்துள்ளது என்பதன் குற்றவுணர்வு துரைசாமியின் நிம்மதியினைச் சூரையாடியது என்ற நிகழ்வோடு கதையில் வரும் சர்வ பாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் எதிர்நோக்கும் துன்பத்தையே நாவல் மீண்டும் மீண்டும் அடிக்கோடிடுவதாகக் கூறினார்.
தகவல் கடத்தல், மீள்நினைவுகள் என்பதனைத் தாண்டி புனைவானது நிகர் வாழ்க்கை அனுபவமொன்றினை ஏற்படுத்தி, ஆழ்மனதினுள் உணர்வுகளுக்குள் நிகழ்த்தும் சமராக, அந்தக் சமர்க்களத்தின் முடிவில் புதிய வாழ்க்கையையும் தரிசனத்தையும் அடைய வைப்பதுதான் புனைவு என்பதை ம. நவீன் கூறினார். அதையொட்டி, இந்நாவலின் குவியத்தில் சுழல்வது அழிவென்ற நிலையில், இதில் நிகழ்ந்த மரணமும் துயரும் அழிவும் அந்தரங்கமாக ஒருவரின் அகவுணர்வினைச் சீண்டியுள்ளதா என்ற வினாவை எய்தார் நவீன். தன்னளவில் இரு இடங்களைத் தவிர நாவலில் வேறெங்கும் அதனைக் காண முடியாதது நாவலைப் பலவீனமாக்குகிறதெனக் குறிப்பிட்டார்.
அழிவுகள் சார்ந்த படைப்புகளை வாசிக்கும்போது ஏற்படும் வெறுமையான உணர்வினை ஒரு நல்ல நாவல் தருமென்பதைக் கோடிட்ட ம. நவீன், அதற்குச் தான் வாசித்த ‘அக்னி நதி’ என்ற நாவலைச் சான்றாகத் முன்வைத்தார். ஒருவருக்கு நடைமுறையில் முன்னமே நிகழ்ந்திருக்கும் கசப்பான அனுபவத் தருணங்கள் புனைவில் பிரதிபலிக்கும்போது அது அணுக்கமாவதும் நிகழாதிருக்கும்போது அந்நியமாவதும் இயல்பு. நிகழாதவற்றை நிகர் அனுபவமாக வழங்க முற்படுதலில் அதனை அணுக்கமாக்கும் சூட்சமம் புனைவு மொழியின் நிரலைப் பொருத்தது. இந்நாவல் அவ்வாறான துயர் தோய்ந்த நிகர் அனுபவத்தை உருவாக்குவதில் அந்தியத்தன்மையான உணர்வினையே வாசகன் பெரும்பாலும் பெறுகிறான் என லாவண்யா கூறினார். மேலும், பொதுவாகப் புனைவை அணுகும் விமர்சனங்கள் அதன் வடிவ ரீதியினை முதன்மைபடுத்திப் பேசுவது இருந்தாலுமே அந்தரங்கமான நிலையில் அது வாசகனுள் நிகழ்த்தும் இரசவாதமே அதை காட்டிலும் முதன்மையாக இருக்குமென ம. நவீன் குறிப்பிட்டார். ஒரு நல்ல புனைவானது அது ‘ஏன் நல்ல புனைவு?’ எனும் வினாவிற்கான பெரும் விளக்கங்களுக்கு முன்னமே தன்னை வலிமையாக நிறுவிக்கொள்ளும் அரூபநிலை ஆழ்ப்பிரக்ஞைக்குள் நிகழ்ந்துவிடுகிறது என்ற அரங்கின் கருத்தியல் நிறைவோடு கரிப்புத் துளிகள் நாவல் உருவாக்கம் தொடர்பான குறுவிளக்கமொன்றை நாவலாசிரியர் அ. பாண்டியன் பகிர்ந்தார்.
புனைவின் வடிவம்(craft) மீதான விமர்சனம் எழுவது வாசகரின் வாசிப்புச் சுதந்திரத்தைப் பொருத்தது என்பதால் அதில் எழுத்தாளனின் தலையிடல் உவப்பாதல்ல என்று பாண்டியன் கூறினார். பாலகுமாரனின் ‘உடையார்’ நாவல் எழுப்பும் மாபெரும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் எழுச்சியின் சித்திரத்தை, அதன் கால வளர்ச்சியைப் போல ‘கரிப்புத் துளிகளில்’ எழுந்திருக்கும் பினாங்கு பாலக் கட்டுமானத்தின் காலவரையறையினைக் கொண்டு அதன் கட்டுமானத்தை மட்டுமே மையமிட்டு புனைவது தமது எண்ணமில்லை என அ. பாண்டியன் சொன்னார். பினாங்கு பாலக் கட்டுமானத்தின் காலக்கட்டத்தை மீண்டும் உயிர்ப்பாக்கி அதனைப் பதிவு செய்வதே அவரின் அடிப்படை நோக்கமாக இருந்ததாகத் தெரிவித்தார். அதோடு, இந்நாவல் பன்மை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்திப் புனைந்ததாகக் கூறினார் அ. பாண்டியன். பாத்திரப்படைப்பு, காட்சியமைப்பு எனப் பன்மை தன்மையினை வரையறுத்துக் கொண்ட அவர், அதன் நீட்சியாக உதிரிப்பாத்திரங்களின் முழுமையற்ற வாழ்வைப் பதிவு செய்வதில் முனைப்பாக இருந்ததையும் முயற்சி செய்திருப்பதையும் பதிவு செய்தார். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவலில் இடம்பெற்ற விவரிப்புகள் போல இந்நாவலிலும் விவரணை ரீதியில் மேலும் மெருகூட்டியிருக்க வேண்டுமெனத் தற்போது நினைப்பதாகப் பகிர்ந்தார் அ. பாண்டியன். சமரசமற்ற விமர்சனத்தை முன்வைத்த அனைவருக்கும் நன்றி நவில்ந்தார்.
அத்துடன் ஐந்தாவது அரங்கம் முடிவுற்றது.