மலேசியாவில் எழுதப்படும் புனைவுகளைப் பரந்த வாசிப்புக்குக் கொண்டு செல்லவும் அவை குறித்து அரோக்கியமான திறனாய்வு போக்கை உண்டாக்கவும் மார்ச் 2 முதல் மார்ச் 3 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய முகாம் உற்சாகமாக நடந்து முடிந்தது. இம்முகாமின் நான்காவது அங்கத்தில் சீ. முத்துசாமி எழுதிய ‘ஆழம்’ நாவல் குறித்து விமர்சன உரையும் பின்னர் அது பற்றிய கலந்துரையாடலும் நிகழ்ந்தன. அப்பகுதியில் சண்முகா, இராஜேஸ் ஆகியோர் நாவலின்பால் தங்களது பார்வையினை முகாமில் முன்வைத்தனர்.
முதல் பேச்சாளரான சண்முகா, மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய அளவிற்குச் சம்பவங்களும் சுவாரஸ்யங்களும் கொண்ட தோட்டப்புறக் கதைக்களத்தையே இந்நாவலும் கொண்டுள்ளது என்று கூறினார். ஆனால், இந்த நாவல் ஒட்டு மொத்தத் தோட்ட வாழ்வினையும் புகுத்திவிடும் முயற்சியாக அமைந்துவிட்டது என்றார்.
நாவலின் மையக் கதையின் மீது குவியமற்ற நிலையும் அவசியமற்ற கிளைக்கதைகளும் நாவலை மிகவும் பலவினமாக்குகின்றன என்றவர் கிளைக்கதைகள் எந்த வகையிலும் நாவலின் மையச் சரடுக்குத் தொடர்புடையதாக அமையவில்லை என்றார்.
ஒரு நாவலின் வளர்ச்சிக்குக் கதாபாத்திரங்களின் அமைப்பு அடிநாதமானது. ‘ஆழம்’ நாவலில் அதுவும் சருக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாவலுக்குச் சம்பந்தம் இல்லாத பாத்திரங்களை உருவாக்கியதோடு முக்கியப் பாத்திரங்களுக்குக், குறிப்பாக வேடியின் மனைவி போன்ற பாத்திரங்களை விவரிக்க அவர் தவறியிருக்கிறார் என்பதும் அவர் கருத்தாக இருந்தது.
“வேடி கைது செய்யப்பட்டுப் பல காலம் வாடிய தனது நிலையையும் பிரிவின் துயரையும் சீ. முத்துசாமி சரிவரச் சொல்லவில்லை. நெடுங்காலம் கண்டிராதப் பெருந்துயர், கணவனைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும்போது வெடித்தெழுகிறது. கைதிகளின் முகாமில் கணவன் இருந்த பொழுது இருந்திருக்க வேண்டிய இவ்வுணர்ச்சிப் பெருக்கம் பாதுகாப்பு நிறைந்த மருத்துவமனைச் சூழலில் கூறப்பட்டுள்ளது ஏற்க இயலாததாய் உள்ளது” என தன் கருத்தை உதாரணத்தோடு சண்முகா முன்வைத்தார்.
நாவலின் கூறுமுறையில் குழப்பம் உள்ளதாகவும் சண்முகாவின் பார்வை அமைந்திருந்தது. கதைச்சொல்லிகள் மாறி மாறி வருவதையும் எழுத்தாளரின் குரலே பல இடங்களில் நேரடியாக ஒலிப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கதையில் மாரி, வரதராஜூ போன்ற கதாபாத்திரங்கள் தாங்கியக் காட்சிகள் மறுபடி மறுபடி கூறப்பட்ட இடங்களும் இதில் காண முடிகிறது. நாவலின் மொத்த வடிவம் பல சிறுகதைகளின் தொகுப்பு போல அமைந்திருக்கிறது. நாவலை மீள்பார்வைக்கு ஆட்படுத்தி மறுசீரமைப்புச் செய்திருந்தால் இது போன்ற தவறுகளைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாவல் என்பது மரமென்றால் அதன் கதாபாத்திர அமைப்புகளும் காட்சிகளும் வேராகும். அவ்விதம் ‘ஆழம்’ என்ற மரம் தனது சரியான விரிதலைத் தரவில்லை என்பதே சண்முகாவின் முதன்மை வாதமாக அமைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நாவல் குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்தார் இரண்டாவது பேச்சாளர் இராஜேஸ் இராமசாமி. நாவலைப் பற்றிய வேறு கோணத்தில் அமைந்த அவர் பார்வைப் பாரட்டத்தக்கதாக அமைந்தது.
முதலில் நாவலின் கதைகளத்தையும் சீ. முத்துசாமியின் மொழியாளுமையினையும் அவர் வரவேற்றார். ஆயினும், கதையின் துவக்கக்களமானது எங்கும் நாவலின் வளர்ச்சிக்கும் முடிவிற்கும் உதவுவதாக அமையவில்லை என்றார். இது அவர் தன்னை புனைவு ரீதியாகப் புதுப்பித்துக்கொள்ளப் படாததினைக் காட்டுவதாக அவர் கூறினார்.
“கதையில் பரவலாக ஆணாதிக்கப் புனிதத்தையும் தவறான முறையில் வாழ்க்கையை மேற்கொள்ளும் பெண்களையும் சீ. முத்துசாமி பேசுவது நன்கு தெரிகிறது. தன்னை ஏமாற்றி ஓடிப்போய் நோயுடன் திரும்பும் மனைவினை ஏற்று அவளுக்குப் பணிவிடைகள் செய்யும் கதாபாத்திரம், இளமரத்துக்காகத் தண்டலுடன் உறவுகொள்ளும் பெண், தனக்குத் கள்ளத் தொடர்பு இருப்பதாகப் பகிரங்கம் செய்கிற தண்டல் மனைவி போன்றவர்களை இங்கே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
பெண்ணிய மாண்புகளுக்கு ஊறாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இவர்கள் சரிவர ஒரு வில்லித் தன்மையுடன் நாவலில் காட்டப்படவில்லை என்பது ஏற்புடையதாக இல்லை. ஆண்களைப் புனிதர்களாகவும் பெண்களைப் பாவிகளாகவும் காட்டும் இந்நாவலில் அதற்கான ஏற்புகள் இல்லை” என்பதை இராஜேஸ் இராமசாமி முன்வைத்தார்.
மேலும் அவர், கதையின் மையச் சரடாக அமையும் தலைமுறை தாண்டிய சாதிய வன்மமும் அதனூடே தொடரும் பகை உணர்ச்சியும் ஒரு சரியான புள்ளியாக அமையவில்லை என்றார். மாறாக அது இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் வாய்க்கால் தகராறு போலதான் புனையப்பட்டுள்ளது என்றார். மேல் சாதி, கீழ் சாதி பாகுபாட்டின் அடிப்படையில் நேரும் சண்டை கதை நகர்ச்சியின் கருவியாகக் கையாளப்பட்டுள்ளது. ஆனால், சண்டையிட்டுக்கொள்ளும் இரு சாரார்களும் சாதி அடிப்படையில் சமநிலையில் இருப்பதுதான் பெரிய கேள்வியாக எழுகின்றது என்பதனை அவர் சுட்டிக் காட்டினார்.
நாவல் எத்துணை வேகத்தில் உச்சத்தைத் தொட்டதோ அதே வேகத்தில் வீழ்ச்சியையும் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். கதையின் அப்பட்டமான அவசர முடிவு இதனை உறுதிபடுத்துகிறது என்றார் அவர்.
கதையோடு ஒட்டி வராத கிளைக்கதைகளையும் கதாபாத்திரங்களின் திணிப்புகளையும் பெருங்குறையாக இராஜேஸும் முன்வைத்தார். ‘ஆழம்’ எனும் இந்நாவல் பல இடங்களில் பல விடங்களை மிக அகலமாகக் கூறுகின்றதே அன்றி ஆழமாக அல்ல என்பது அவரின் பிரதானக் கூற்றாக இருந்தது.
ஒரு கதையில் எழுத்தாளன் தன்னிச்சையாக ஏதோ ஓர் இடத்தில் வெளிப்பட்டு விடுவது உண்டு. விலங்குகளின் மீது தனிப்பட்ட முறையில் அதிக அன்பு கொண்டுள்ளவரான சீ. முத்துசாமி நாவலில் வெளிப்பட்டுள்ளார். நிற்க, தனக்கே உரிய நவீனத்துவக் கதை கூறுமுறையில் நாவல் சிறந்து வந்திருப்பது கலந்துரையாடலின் இறுதியில் பங்கேற்பாளர் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
yenathu aalam navalin aathaara suruthi 50Galin thottappuram .
Manitha naagarigaththin uraikallaana vilumiyanggal theendatha oru irunda ulagam.
Avargalai iyakkiyathu andraada vayitruppadu mattume.
Antha soolal eevirakkamatru oru kodoora vilanggaipphol avargalai thuraththi vhettaiyaadiyathu.
Athan khorap pidiyil avargal manitha menmai yena sollappadum anaiththaiyum palikoduththanar,
Athan neetchiyai avargalin aalaththil uranggikkkondiruntha aathi manithan vilipputru yelunthu aadath thodanggiyirunthaan!
Kaamam kurotham thurogam yengira malnggalil moolgi sithainthaan!
C.muthusamy.