யானும் அவ்வண்ணமே கோரும்

“என்னைவிட நல்லவன் யாருமில்லை,” என்றேன்.

இதை ஏன் நானே சொல்கிறேன்? என்னைவிட்டால் வேறு யார் என்னை நல்லவன் என்று சொல்லமுடியும்? அண்ணனைத் தவிர.

எனக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயத்தை மூன்று முறைக்கு மேல் கேட்டால் நானே உண்மையைச் சொல்லி விடுவேன். ஆழ்மனதில் சென்றோ அல்லது அடித்தோ கேட்க வேண்டிய அவசியமில்லை.

இவள் ஏன் இதை இந்த நேரத்தில் கேட்கிறாள்? ஒவ்வொருவருக்கும் கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இனி வாழப்போகும் காலம் இவளுக்கு உண்மையாக இருப்பேனா என்று வேண்டுமானால் கேட்கலாம்.

திருமணத்திற்கு முன் எது நடந்தாலும் அது பயிற்சி தானே!

இருப்பதிலேயே கொடுமையான விஷயம் என்னவென்றால், முதலிரவன்று முந்தைய வாழ்க்கை பற்றிப் பேசுவதுதான்.

இவள் பிடிவாதமாக இருக்கிறாள். இரண்டு முறை கேட்டுவிட்டாள். இதற்கு மேல் முதலிரவுக்கு மனம் ஒத்துழைக்காது. இதை திருமணத்திற்கு முன்பே கேட்டிருக்கலாம்.

நான் முன்பே இதைப் பற்றியெல்லாம் சில கனவுகள் வைத்திருந்தேன். என்னைக் கேட்காமல், என்னை எடுத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும். அது மட்டுமல்ல, வழக்கம் போல் முறைப்படி நடக்க வேண்டும் என்றில்லை. வழக்கத்திற்கு மாறான தொடக்கமும் இன்பம்தானே.

இது போன்ற கனவுகளோடுதானே இவளும் வந்திருப்பாள். பிறகு ஏன் இந்தக் கேள்விகள் எல்லாம். அதுவும் இந்த நேரத்தில்.

மூன்றாவது முறை கேட்கும் முன் நானே அனைத்தையும் சொல்லிவிட முயன்றேன். நான் என் கல்லூரியில் இருந்து ஆரம்பித்தேன். கல்லூரி ஹாஸ்டலில் தங்கப் பிடிக்காமல் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து நானும், என் நண்பனும் தங்கியிருந்தோம். நாங்கள் ஏறும் அதே பஸ் ஸ்டாப்பில்தான் எங்கள் கல்லூரி லேப் அசிஸ்டன்ட்டும் ஏறுவார்.

அந்த அண்ணனுக்கு ஒரு கால் நடக்க உதவ மறுத்ததால், முந்திச் சென்று அவருக்குச் சீட் பிடித்துக்கொடுப்பது எங்களின் பொறுப்பு. இப்படித் தான் எங்களுக்கு அண்ணன் பழக்கம்.

ஏனோ எந்த ஆசிரியரும் அவரிடம் பழகுவதில்லை. அவரும் யாரிடமும் பெரிதாகப் பேசுவதில்லை. அவர் இயக்கம் முழுவதும் மாணவர்களிடம்தான். அவரிடம் அறிவுரைக்குப் பஞ்சமே இருக்காது. தேர்வில் தேர்ச்சியடைவதைப் பற்றி, வேலைக்குச் சென்று வாழ்க்கையில் முன்னேறுவது பற்றி, குறிப்பாக மாணவர்கள் சக மாணவிகளிடம் பேசிவிட்டால் போதும், அப்பப்பா… சொல்லவே வேண்டாம்.

ஆனால் இதெல்லாம் கல்லூரியில் மட்டும்தான். நாங்கள் தனியே தங்கியிருப்பது வாரக் கடைசியில் அவர் மது அருந்தத் தேர்ந்த இடமாய் இருந்தது. என் நண்பன் அவருக்கு எந்த விதத்திலும் குறைந்தவனே இல்லை. அவர் மீதத்தை விட்டுச் செல்லும் வரை அவரின் அறிவுரைக்குப் பயந்து காத்திருப்பான். ஆனால், அதைக் குடித்தப் பின் இவன் அறிவுரையிலிருந்து என்னால் தப்ப முடியாது.

நாட்கள் செல்லச் செல்ல, அவர் வீட்டிற்குப் போவதேயில்லை. எங்கள் அறையிலே தங்கிவிட்டார். ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரியும். நாங்கள் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.

ஆனால், எங்கள் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை அவரே போக்கினார். அவர் வாங்கிய சிறு சம்பளத் தொகையில் பல நாட்கள் உதவியிருக்கிறார். எங்கள் கல்லூரிக் காலம் முடியும் நேரத்தில் அவர் மெட்ராஸுக்கு வேலை தேடிச் சென்றுவிட்டார். சில நாட்களில் எங்களுக்கும் வேலை பார்த்து வைத்திருப்பதாகச் சொல்லி அழைத்தார்.

அவருக்கு மெட்ராஸில் அக்கா வீடு இருப்பது எங்களுக்குத் தெரியும். அவள் மகளைத்தான் காதலிக்கிறார். விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பதை அவர் பேசிக் கேட்டிருக்கிறோம். அவர் எப்பொழுது மெட்ராஸுக்குச் சென்றாலும் அங்கேதான் தங்குவார்.

நானும் என் நண்பனும் மெட்ராஸில் இறங்கியபோது எங்களை அழைத்துவர அம்பாசடர் கார் அனுப்பி இருந்தார். நாங்கள் திகைத்துப் போனோம். நாங்கள் அவருடைய அக்கா வீட்டிற்குத்தான் போகிறோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அது ஒரு லாட்ஜ்க்குச் சென்றது. அவர் அக்கா வீட்டில் ஏதோ பிரச்சனை. அதனால் இங்குத் தங்கியிருப்பதாகச் சொன்னார்.

அது மெட்ராஸில் எந்த இடம் என்று தெரியவில்லை. அந்த வழியே நிறைய லாரிகள் சென்றது, பைபாஸ் அருகில் இருந்ததே அதற்குக் காரணமாக இருக்கலாம்.

பொதுவாக மூன்று இட்லிக்கே நாங்கள் போராடுவோம். அன்று அவர் வரவழைத்த காலை உணவு விருந்தாகத் தெரிந்தது. அவர் வேலைக்குக் கிளம்பும்போது எங்களையும் அழைத்தார். அவர் அலுவலகத்தில் இறங்கிக் கொண்டு, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து சினிமா, பீச் என்று சுற்றிக்காட்டி வேலை முடியும் நேரத்தில் தன்னை அழைத்துச் செல்ல வரும்படிச் சொன்னார். அண்ணன் இருந்தாலும் இல்லையென்றாலும், அவர் அமரும் முன் சீட்டில் நாங்கள் மரியாதை நிமித்தமாக அமர்வதில்லை.

ஒரு மனிதன் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வளர்ச்சி அடைந்திருப்பது ஆச்சரியம் ஏற்படுத்தியது.

நாங்கள் அனைத்தையும் முடித்துக்கொண்டு அன்று அவரை அழைத்துவரச் சென்றபோது ஒரு பெண்ணும் இணைந்து கொண்டாள். பின் சீட்டில் நெருங்கி அமர்ந்துகொண்டோம். எங்களின் குழப்பத்தைப் புரிந்து கொண்ட அவர், “நா அப்புறம் சொல்றேன், உங்களுக்குப் பக்கத்து ரூம் புக் பண்ண சொல்லியிருக்கேன். நைட் மட்டும் அங்க இருங்க” என்றார்.

என் நண்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை, மனதில் எந்த இடத்தில் வைத்திருந்தோம், பணம் வந்தவுடன் என்னவெல்லாம் செய்கிறார் என்று நொந்து கொண்டான். சற்று நேரத்தில் விலையுயர்ந்த மது பாட்டிலை டிரைவர் எங்கள் அறையில் வைத்துவிட்டுச் செல்ல, பின்னே அண்ணன் வந்தார். அவருடன் வந்தது அவரது அக்கா மகள் என்றும் அவள் சமாதானம் பேச வந்திருப்பதாகவும் சொன்னார்.

அவர் சென்றவுடன், “இதெல்லாம் நம்புர மாதிரியா இருக்கு?” என்றவன். பாட்டிலில் இருந்து ஒரு வாய் குடித்தவுடன் “அவர போய் தப்பா நினச்சிட்டோமேடா” என்றான்.

அவன்தான் அப்படி, ஆனால் நான் அப்பொழுதும் அவரை முழுமையாக நம்பினேன்.

அண்ணன் சில நாட்களுக்கு எதுவும் கேட்க வேண்டாம் என்றார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அக்கா மகள் எங்களோடு இணைந்து கொண்டாள். அக்காவுக்கும் அவருக்கும் பெரிய பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் சமாதானம் செய்ய தினம் ஒரு அக்கா மகள் வருகிறாள் என்று நினைத்துக்கொண்டேன்.

நம்புங்கள்! நான் அப்பொழுதும் அதை நம்பும் அளவிற்கு வெகுளியாக இருந்தேன். அவர்கள் அண்ணனுக்கு எந்த முறையாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் அவர்களை அக்கா என்றுதான் அழைத்தோம் .

ஒரு நாள் ஒருத்தி காரில் ஏறியபோது பின்னே அமர்ந்திருந்த என் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் கரு விழி, வெள்ளையில் இருந்து சற்று வெளி வந்து இமைகளைத் தாங்கியபடி அரைக்கண்ணில் போதையில் இருப்பது போல் இருந்தது. பார்ப்பவருக்கும் அது போதையைத் தந்தது. அவள் கட்டியிருந்த புடவையைப் பார்த்தவுடன், உலகிலேயே மிகக் கவர்ச்சியான ஆடை புடவை என்று யாரோ சொன்னது நினைவிற்கு வந்தது. அவள், வெளியே தொங்கிக் கொண்டிருந்த என் வெள்ளி அரணைக் கொடியைப் பிடித்து “இது ஆணும், பெண்ணும் பொதுவா போடுற மாதிரி உருட்டா இருக்கு” என்றாள். அது லூசாக இருப்பதாகச் சொல்லி, தொங்கிக் கொண்டிருந்த தளர்வை மடித்துக் காட்டி “இந்த அளவுக்கு இருந்தா கரெக்டா இருக்கும்” என்றாள். “நா போட்டுருக்கேன் இங்க பாரு” என்று அவள் இடுப்பில் புதைந்திருந்த அரணாக்கயிற்றைக் காட்டினாள். “இரண்டு விரல் போற அளவுக்கு கேப் இருந்தா போதும்” என்று சொல்லியபடி என் விரலைப் பிடித்து இடுப்பிற்கும், அரணைக்கயிற்றுக்கும் உள்ள இடைவெளியைக் காட்டினாள். என் விரல் லேசாக அவள் இடுப்பில் உராய்ந்தது. நான் வெடுக்கென்று கையை எடுத்து யாருக்கும் தெரியாமல் சட்டையில் துடைத்தபடி “நீங்க அண்ணனுக்கு எத்தனாவது அக்கா பொண்ணு?” என்றேன். அவள் முறைத்தாள், அண்ணனும். அனைவரும் பேரமைதியோடு சென்றடைந்தோம்.

இதற்கு முன் வந்த மற்றவர்கள் போல் இல்லாமல் அவளுக்கு அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எங்களைப் பற்றி, எங்கள் ஊர், குடும்பம், வீட்டின் நிலை, அனைத்தையும்… அவள் குறித்து வைத்திருந்த அலைபேசி எண்ணை என் நண்பனிடம் கொடுத்து வேலை விஷயமாக அவள் பெயர் சொல்லிப் பேசச் சொன்னாள். அவனும் “அக்கா… அக்கா…” என்று அவளோடு ஒட்டிக்கொண்டான். எங்களுக்கு, இதற்கு முன்னால் வந்தவர்களிடம் இது போன்ற உரையாடல் இல்லை. 

அவர்களது உரையாடல் மொத்தமும் அண்ணனிடம் மட்டும்தான். அண்ணன் இது போன்றவர்களோடு பேசும்போது எதார்த்தமாக என் நண்பனின் காதில் விழுந்திருக்கிறது. அது அவர்களின் வேலையும் அதற்கான பணமுமாக இருக்கும். பொதுவாக அவர் ஒரு போன் செய்வார். அதில் யாரை எங்கிருந்து அழைத்துவர வேண்டும் என்ற விவரங்கள் கிடைத்துவிடும். அது ஓர் இரவுக்கானது. அப்படி இல்லாத போது தற்காலிகத் தேவைக்காக நேரடியாகவும் அணுகுவார். அது ஒரு முறைக்கு இவ்வளவு என்றே இருக்கும். சில நேரங்களில் கை குலுக்கலோடு முடித்துக் கொள்வார் என்று அவன் தெரிந்து கொண்டதாகச் சொன்னான். ஆனால் நான் அதை நம்பவில்லை.

இம்முறை வந்தவள், இங்கேயே ஒரு வாரம் தங்கிவிட்டாள். எங்களிடம் நன்றாகப் பேசினாலும், இரவுதோரும் அண்ணனுடன் சண்டைதான். ஒரு நாள் இரவு சண்டை சற்று உச்சத்தில் இருந்தது. வசைபாடுகள் பக்கத்து அறையில் இருக்கும் எங்களுக்கும் கேட்டது.

பிரச்சினை பெரிதாகி ரிசெப்சனில் இருந்து ஆட்கள் வரும் முன் நானே சென்று தடுக்க நினைத்து, ரூம் கதவைத் தட்டினேன். அண்ணன் கதவைத் திறந்து போதையில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவரைக் கடந்து அவளைப் பார்த்தேன். அவள் மெத்த மயக்கத்தில் “என்னடா சொல்லிட்டு என்னை வீட்டுல விட்டுட்டுப் போன? புள்ளைன்றது வரம் டா…” என்று பினாத்தியபடியே அவள் குரல் மெல்ல அடங்கியது. அண்ணன் அவளுக்கு எதைக் கொடுத்தார் என்று தெரியவில்லை. அவள் வயிற்றை மட்டும் இறுக்கிப் பிடித்தபடி சுருண்டு கிடந்தாள் .

நான் “பிரச்சன ஏதும் இல்லலண்னே?” என்றேன். அவர் தல்லாடியபடி தலையை ஆட்டிவிட்டுக் கதவைச் சாற்றினார்.

நான் அறைக்கு வந்தபோது நண்பன் புலம்பிக் கொண்டிருந்தான், இம்முறை குடிக்கவில்லை. அவன் வாழ்க்கையை நினைத்துப் பயப்படுவதாகச் சொன்னான். வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு முயற்சியும் எடுக்காமல் தினம் ஒரு பெண், மது என்று அவர் கவனம் சென்றுவிட்டதாகப் புலம்பினான். பெண்ணாசையால் அழிந்தவர்களின் வரலாற்றையெல்லாம் சொல்லி “குடியோட நிப்பாட்டிக்கனும், ஒரு நாளும் அவர மாதிரி பொண்ணு கின்னுன்னு போய்டக் கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்டான். அன்று நள்ளிரவானபோதும் அவன் அறிவுரையை நிறுத்தவில்லை, அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே அண்ணன் எங்கள் கதவைத் தட்டினார்.

கதவைத் திறந்த அடுத்த கணம் அவர் என் தோளில் விழுந்தார். என் மீது சாய்ந்தபடியே, “யாருன்னா போயிட்டு வாங்கடா…” என்றார். நான் என் நண்பனைப் பார்த்தேன். அவன், இந்த வார்த்தைக்குத் தான் காத்திருந்தது போல மறுசொல் பேசாமல் வேகமாகச் சென்றான். அவர் சொன்ன விதம், அதுதான் அவளை அவர் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்பது போலிருந்தது.

விடிந்தவுடன் என்னைப் பார்க்கும் சக்தி அவனிடமில்லை. தலையைக் குனிந்தபடியே “ஐயிட்டமா இருந்தாலும் டைட்டா இருந்துச்சுடா…” என்றான்.

அவளைத்தான் முன்னிரவு வரை அக்கா என்று அழைத்து வந்தான்.

என் நண்பனைச் சகித்துக் கொண்டு என்னால் அங்கிருக்க முடியவில்லை, நான் கிளம்பியபோது வழி நெடுகிலும் தான் செய்த தவறை நொந்து கொண்டு, சில நாட்களில் தீவிரமாக வேலை தேடி சீக்கிரமே தனி அறையை எடுத்துவிடலாம் என்று சமாதானம் செய்து என்னை மீண்டும் அழைத்துச் செல்ல அவனுக்கு ஒரு நாள் ஆனது.

அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவே இல்லை. ஆனால் ஏனோ பார்க்க வேண்டும் போல் இருந்தது.

அவள் சென்ற பின் என் மனம் என்னை மறந்து அவளைத் தேடியது. நான் அவளைப் போலவே மற்றவர்களையும் தெரிந்துகொள்ள நினைத்தேன். அழைத்துவரச் செல்லும்போது நானும் டிரைவருடன் சேர்ந்து கொள்வேன். பின்னே அமர்ந்துகொண்டு வலியச் சென்று பேசுவேன்.

ஒரு சிலர் மனம் திறந்தனர். பெரும்பாலானோர் மறுத்துவிட்டனர்.

ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் ஈர்த்தனர். சிலர் பேச்சால், சிலர் செயலால்.

சிலர் இந்தத் தொழில் பிடித்தே செய்வது போல ஆசையாய் பேசுவார்கள். அப்பொழுதுதான் அடுத்த முறை கூப்பிடுவார்கள் என்பதற்காக.

ஒருத்தி தன் குடும்பத்தை நேசிப்பதாகவும் ஆனால், பார்க்க மனம் வராது, ஒரு நாளும் அவர்களைச் சந்திக்கவே மாட்டேன் என்றாள்.“அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை இப்போது போல தள்ளியிருந்தே செய்து கொண்டிருப்பேன்…” என்றாள்.

இன்னொருத்தி தன் அக்கா இறந்துவிட்டதால் அதே மாப்பிள்ளைக்கு 16 வயதில் கல்யாணம் செய்து கொடுத்து இப்பொழுது 2 குழந்தைகளோடும், தங்கமான கணவனோடும் இருப்பதாகச் சொன்னாள். ஆனால் அவள் கணவன், அவளது அக்கா படத்திற்குப் பூ வைத்து முத்தம் கொடுக்கும்போது மட்டும் உடமைத்தன்மையால் கோபமடைவதாகச் சொன்னாள். அவளின் வருமானத்தில்தான், குடும்பம் நடக்கிறது என்று தெரிந்தபோது அவளின் தங்கமான கணவனை நினைத்துக் கொண்டேன்.

இன்னொருத்தி நாங்கள் காத்திருக்கும்போது, வாசலில் அவளுக்குத் தலைவாரிக் கொண்டிருக்க, கையில் வைத்திருந்த தோசையை அவசர அவசரமாக விழுங்கி ஒரு டம்பளர் தண்ணீரை மடக்கென்று குடித்துவிட்டு பேக்கை எடுத்துக்கொண்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவி போல காரில் ஏறினாள்.

இன்னொருத்தி டிரைவர் குடித்துவிட்டு இருந்ததால் அவளே கார் ஓட்டிக்கொண்டு வந்தாள். எனக்கு கார் ஓட்டத் தெரிந்திருந்தால் அந்த நேர்த்தியான சவாரியை நழுவவிட்டிருப்பேன். அவளது குடித்துவிட்டு கார் ஓட்ட கூடாது என்ற கொள்கை என்னைக் கவர்ந்தது.

ஒருத்தி, நான் எப்பொழுது அண்ணனின் அறைக்குச் சென்றாலும் சத்தமாகப் பாட்டு போட்டபடி இருந்தாள். நான் ஒருமுறை சென்றபோது ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ என்ற பாடலும், மறுமுறை சென்றபோது ‘தங்கத் தாமரை மகளே’ என்ற பாடலும் ஓடிக்கொண்டிருந்தது. அவளது ரசனையே தனி.

இன்னொருத்தி பளிச்சிடும் ஆடையை அணிந்துகொண்டு வந்தாள். அவள் திருமணதிற்குச் சென்றுவிட்டு வருவதாகச் சொல்லி, கைக்குட்டையில் மூடி வைத்திருந்த டைமென்ட் பால்கோவாவைக் கொடுத்தாள்.

உதவி கேட்டுச் சென்றால் அனைவரின் தேவையும் உடலாகதான் இருக்கிறது. தெரிந்தவரிடத்தில் இப்படிப் பொருள் பெற்று காலத்திற்கும் உடல் உதவி செய்து கிடப்பதைவிட முன்பின் தெரியாதவரிடத்தில் இப்படி இருந்து நிலைமையைச் சரி செய்து கொண்டு சீக்கிரமே வேறு வாழ்க்கைக்கு மாறுவது சிறந்தது என்றாள் ஒருத்தி.

ஒருத்தியை அழைத்து வந்தவன், அவள் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல இருப்பாள் என்று சொல்லி கொஞ்சம் சேர்த்துக் கேட்டான். இதை அவளிடம் சொன்னபோது, “எப்படி எல்லாம் உங்கள ஏமாத்துறாங்க பாருங்க…” என்று அவளே சொல்லி அசட்டுச் சிரிப்பு சிரித்தாள். நான் அவன் சொன்னது உண்மைதான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். நல்ல நிறம் என்பதால் வெள்ளை புடைவையும், சந்தனப் பொட்டும் வைக்க சொல்லி வற்புறுத்துவானாம், ஆனால் அவள் தமிழ்தான் என்று சொன்னாள்.

ஒருத்தி, அவள் படித்த படிப்பையும், செய்துகொண்டிருந்த வேலையையும், மாதச் சம்பளத்தையும் சொன்னாள். மிரண்டு போனேன். ஆனால் அவளுக்கு அந்த மாத பெருந்தொகையே ஒரு நாளின் தேவையாக இருந்தது. அவள் பேசும் ஆங்கிலத்தின் உச்சரிப்பை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அவள் இதற்குப் புதிது, முன் அனுபவம் கிடையாது என்றாள். இது போல் தொழில்முறை வார்த்தைகளை நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் அவள் சொன்னது உண்மை என்பது அண்ணன் அடித்து வெளியே தள்ளிய போதுதான் தெரிந்தது. அவள் கழண்ட ஆடையை சரிசெய்தபடி கண்கள் கலங்க சென்றது இன்னும் என் கண்ணில் நிற்கிறது.

ஒருத்திக்கு என் தாய் வயது இருக்கும். என் நண்பனுக்குப் பிறந்தநாள் என்று தெரிந்ததும் இரு கையையும் அவன் தலைமேல் வைத்து ஆசிர்வதித்தாள். நான் என் விழி ஆடாமல் அவளைப் பார்த்தேன். அவள் “நீ ஏன் ஏங்கிப் போற?  வா…” என்று என் தலையிலும் கை வைத்து ஆசிர்வதித்தாள். நான் என்னை மறந்து அவள் காலில் விழுந்தேன்.

இப்படியே மாதங்கள் சென்றுக்கொண்டிருக்க அவள் மீண்டும் வந்திருந்தாள். அவள் கீழேயிட்ட கூச்சல் மேலேயிருந்த எங்களுக்குக் கேட்டது. அந்த லாட்ஜில் இது போன்ற செயல்கள் சத்தமின்றி நடந்து கொண்டிருந்தது. அவளின் சத்தம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அண்ணன் அப்பொழுது இல்லை, என் நண்பன் அவள் குரலைக் கேட்டதும் வியர்த்துப் போனான். நிலைமை தீவிரமடையும் முன் என்னை அனுப்பி சமாதானம் செய்து திருப்பி அனுப்ப சொன்னான். அதற்குள் அவள் மேலே வந்துவிட்டாள்.

அதற்கு முன் நான் அவளை அப்படிப் பார்த்ததில்லை. அவள் யார் எதிரில் பட்டாலும் தின்றுவிடுவது போலிருந்தாள். அவளின் உடல் உருகி வயிறு புடைத்திருந்தது அண்ணனின் முன்னேற்பாடு பலனளிக்காததைப் போல் தெரிந்தது. அவளிடம் முன்பிருந்த அலங்காரமில்லை. அவளைப் பார்த்ததும் பயம் தொற்றிக்கொண்டது.

என் நண்பன், என் பின்னே ஒளிந்துகொண்டான்.

நான், “அண்ண இங்க இல்ல, உங்கள வீட்டுல இருக்க சொன்னாரு” என்று தயக்கத்தோடு சொல்லி முடிப்பதற்குள்.

“அது என்ன, அவனுக்கு நீ பேசுறது. அவனுக்கு நீ வாயா?” என்றாள்.

அவளின் இந்த மறுபக்கத்தை நான் பார்த்ததில்லை. பழகிய வரை முகம் பார்க்காமல் இப்படிப் பேசுவாள் என்று தெரியாது. அனைவரின் முன்னாள் எனக்கு அசிங்கம் அப்பிக்கொண்டது.

என் நண்பன் எட்டிப் பார்த்தான். அவள் நினைவில் அவன் இல்லை என்று தெரிந்து நிம்மதியடைந்தான்.

என்னைப் பேசவிடாமல் அவள் படபடவென சொற்களை எரிந்து மயக்கமடைந்தாள்.

என் நண்பன் என் கையைப் பிடித்துக்கொண்டு எப்படியாவது திருப்பி அனுப்பும்படி கெஞ்சினான்.

மயக்கம் தெளிந்ததும் நான் என்னால் முடிந்த வரை பேசி சமாதானம் செய்தேன். அண்ணன் மாலை வரும் வரை நான் அவளுடன் இருக்கிறேன் என்று உறுதியளித்தேன். பெரும் போராட்டத்திற்குப் பின் சொன்னதை ஏற்றுக்கொண்டது போல் “சேங்காலம் வரட்டும் அவனுக்கு இருக்கு”என்று புறப்பட்டாள்.

நான் அவளுடன் துணைக்குச் சென்றேன்.

என் நண்பனின் விருப்பமும் அதுவே…

அவள் இருந்த வீட்டைப் பார்த்ததும் எனக்கு அண்ணனின் மேல் மரியாதை அதிகரித்தது. அவர் மற்ற ஆண்களைப் போல் வெறும் வாக்குறுதியை மட்டும் கொடுக்காமல் வீடு எடுத்துக் கொடுத்து தனித்து நின்றார்.

ஆனால் வெறும் வீடு மட்டுமே போதாது என்பது அவள் பேசுகையில் புரிந்தது. லேசான வாந்தியும் மயக்கமும், பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாத விரக்தியும் அவளிடம் தென்பட்டது. பேசும்போதே அண்ணனைத் திட்டத் தொடங்கி அவளை மறந்து மெல்ல அவரின் தனித்துவமான குணாதிசயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவரை முழுதாக விட்டுவிட நினைத்தாலும் முடியவில்லை என்றாள்.

என்னால், அவளை என்னவென்று புரிந்துகொள்ள முடியவேயில்லை. நான் “சாப்டிங்களா” என்றேன். வெடுக்கென்று ஒரு சொட்டுக் கண்ணீர் கண்ணை விட்டு கண்ணத்தில் விழுந்தது. இருவரும் ஒரு தெருக் கடைக்குச் சென்றோம். அங்கு அவளுக்குக் கணக்கு உண்டு. அங்கிருக்கும் அசைவ உணவின் மனம் தெருவில் நடப்பவர்களைக் கையைப் பிடித்து இழுத்தது. அவள் எனக்கும் சேர்த்து இரண்டு பிளேட் வாங்கி வந்தாள். என் தட்டு மேற்புற ஒரமும், பின்புறமும் சுத்தமாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டேன்.

தெருவோரம் நின்று உண்பவர்களைப் பார்த்திருக்கிறேன் அவள் அமர்ந்தேவிட்டாள். என் கையையும் இழுத்து “உட்கார்ரத்துக்கு பால்மாரிக்குனு” என்று அமர்த்தினாள். நான் அவளருகில் பிளாட்பாரத்தில் அமர்ந்து கால்களை ரோட்டில் வைத்தவுடன் ஊருக்குப் புதிது என்றாலும் எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இங்கிருக்கிறார்களா என்று பார்த்து பெருமூச்சுவிட்டேன். எழுந்தவுடன் பின்புறத்தையும், கால் பாதங்களையும் தட்டிவிட்டு நடந்தேன்.

அண்ணன் மாலை வந்ததும் என் நண்பன் விஷத்தைச் சொல்லி அனுப்புவான் என்று நினைத்தேன். அவரைக் காணவில்லை. அவளிடம் அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு நான் தங்கியிருந்த லாட்ஜ்க்குச் சென்றேன். அங்கிருந்த அனைவரும் எப்பொழுதோ கிளம்பிவிட்டிருந்தனர். நான் அண்ணனைக் கூட்டி வருவதாகச் சொல்லியிருக்கிறேன். இவ்வுளவு பெரிய ஊரில் நான் எங்கு சென்று அவர்களைத் தேடுவேன். ஏற்கனவே தெரிந்த வழியை நினைவில் வைத்துக்கொள்வதே சிரமமாக இருகிறது. எனக்குக் கண்ணைக் கட்டிவிட்டது போல் இருந்தது. ரிசப்ஷனில் கேட்டபோது  “அவங்க ஓடிட்டாங்க… நீயாவது போய் உறுப்புட்ர வழிய பாரு” என்றனர். எனக்கு அதற்கும் வழி தெரியாது என்பதுதான் உண்மை.

அண்ணன் இல்லாமல் மறுபடியும் அவள் வீட்டிற்குச் செல்வதற்கே கால் வரவில்லை. தட்டுத்தடுமாறி வீட்டை அடைந்தேன். அண்ணன் இல்லாதது அவளுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. நான் தலைகுனிந்தவனாய் அவள் முன் நின்றேன். அவரை விரைவில் அழைத்து வருவதாக வாக்குக் கொடுத்தேன். அவள் “பிள்ள பிறக்கறதுக்கு முன்னாடியாவது கூட்டிவந்துருவியா?” என்று சிரித்தாள். “இங்க ஒத்தையில இருந்து பாரு பைத்தியமே பிடிக்குது” என்றாள். நான் துணைக்கு இருப்பதில் பிரச்சனை ஏதுமில்லை ஆனால் நானே பாரமாக மாறிவிடக்கூடாது என்று கிளம்பினேன்.

அவள் “நீ என்ன, இன்னும் பத்து பேர்னாலும் நா வெட்சு பாத்துப்பேன். எனக்கு அவன் வேணும், நீ அவன மட்டும் தேடிக் குடு அது போதும்” என்றாள்.

என்னால் அங்குத் தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை, சொம்பை எட்டிப்பார்த்து பத்து முறை ஆராச்சி செய்த பின் குடித்தேன்.  எனக்கென ஒரு தட்டும் வைத்துக் கொண்டேன். சில நாட்களில் ஒரு வழியாக அவர் வேலை செய்த அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தேன். அவர் சரியாக வேலைக்கு வருவதில்லை என்றதால் வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகச் சொன்னார்கள். அதுமட்டுமில்லை அவர் செய்தது ஒரு அடிப்படை நிலை வேலை என்றும் அதன் சம்பளம் குறைவிலும் குறைவு என்றும் தெரிந்தது. அவர் வீட்டின் விலாசம் தெரிந்துகொள்ள நான் கல்லூரிக்குச் சென்று விசாரித்தபோது அவர் மெட்ராஸில் வாழ்ந்த வாழ்க்கைகான விடை விளங்கியது. அங்கு என்னைப் போலவே பல மாணவர்கள் அவரைத் தேடிக் கொண்டிருந்தனர். பரிட்சையில் தேர்ச்சி பெற வைப்பதாகச் சொல்லி பலரிடம் வசூலித்துக்கொண்டு மெட்ராஸ் கிளம்பியிருக்கிறார் .

எனக்கு அவளிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரை எங்குத் தேடுவதென்றும் யூகமில்லை, அவளுக்குப் பாரமாக இல்லாமல் ஏதோ ஒரு வேலை சிறிது காலம் செய்யலாம் என்று சுற்றியிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயன்றேன்.

அவளும், கடமைகென்று பக்கம் இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று வேலை கேட்பது போல் விசாரித்தாள். ஒருவர் வாட்ச் மிட்டாய்க்காரர். அவரிடம் விவரங்களைக் கேட்டுக் கொண்டு “இதெல்லாம் நீ கையில தூக்கினு சுத்தமாட்ட…” என்று அவளே முடிவு செய்துவிட்டாள். அங்கிருந்து கிளம்பும்போது மிட்டாய் மேல் இருந்த சின்னி பொம்மை ஜல்-ஜல் எனக் கைத் தட்டியது. “எனக்கு ஒண்ணு குடேன்” என்றாள். அவன் அதை வட்டமாகச் சுற்றி கடிகாரம் செய்து அவள் கையில் கட்டி, சிறிது அவள் கண்ணத்தில் ஒட்டினான். அவள் கையில் இருந்து கழட்ட மனமின்றி, கண்ணத்தில் ஒட்டிய கொசுரை வீடு வரை வாயில் போட்டுக் குழப்பிக் கொண்டே வந்தது சிறுவயதை நினைவுப்படுத்தியது.

ஒரு நாள் ரோட்டோர சூப் கடைக்கு வேலைகேட்டு அழைத்துச் சென்றாள். “நீயெல்லாம் வண்டி தள்ள மாட்ட…” என்று, ஆட்டுக்கால் சூப் வாங்கிக் கொடுத்தாள். அவள் குடிக்கும் பொழுது பயம் முறுத்தத் தயாராக இருக்கச் சொன்னாள். ஏனென்றால் சூடாக சூப் குடிக்கும் பொழுது அவளுக்கு விக்கல் வருமாம்.

மறுநாள் மீன் மார்க்கெட் முன், மீன் வெட்டுபவரிடம் அழைத்துச் சென்றாள். எனக்குக் கடலில் உள்ள மொத்த மீனும் அங்குதான் இருப்பது போல தோன்றியது. மக்களும் இதற்குப் பிறகு மீனே கிடைக்காது என்பது போல முந்திக் கொண்டு வாங்கினர். நான் பார்க்கச் சென்றவர், அவரிடம் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரைச் ‘சப்’ என்று அறைந்து கத்தியைப் பிடிங்கிக் கொண்டு வெளியே தள்ளி, “மயிறு மாரி வெட்டுற… வெட்டுனா கஸ்டமர் ரசிக்கனும்டா… அவங்க கண்ண இங்க இருந்து எடுக்கக் கூடாது. அப்போதான் அம்மாம் நேரம் நிக்குறவனுக்குக் கால் வலி தெரியாது. அவங்க சொன்ன கவுண்ட்ல பீஸ் போட முடியாதவன் இங்க ஏன் வர” என்றார். அந்த மகா கலைஞரிடம் வேலை செய்யும் தகுதி எனக்கில்லை என்றதால் நானே விலகிக் கொண்டேன். அதுமட்டும்மில்லை அந்த  இடத்தில் வேலை செய்தால் என் பாதங்களைத் துடைத்தே கால்கள் கரைந்துவிடும்.

அவள் “மீன் மார்க்கெட் வந்துட்டு யாராவது வெறும் கையோட போவாங்களா” என்று மீன் வாங்கினாள். “நா மீன் கொழம்பு செஞ்சா தேன் மாதிரி இருக்கும்… தெரியுமா… ” என்றாள். “தேன் மாதிரி குழம்பா” என்று சிரித்தேன். அவள் செய்த குழம்பைச் சாப்பிடும் வரை.

ஒவ்வொருவரிடம் போகும் போதும் அவர்களைப் பற்றி ஏதோ ஒரு கதை சொல்லிக் கொண்டே வந்தாள். “அவங்க அப்பா அவுட் ஆயிட்டாங்க… அவங்க ஒயிப் ரன் ஆயிட்டாங்க…” என்று ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தாள்.

இறுதியாக அவள் “நா வேல செய்யுற இடத்துக்கு வந்துடுறியா?” என்றாள். அவள் வயிற்றைத் தள்ளிக் கொண்டு எங்கோ செல்கிறாள் என்று தெரியும், ஆனால் எங்கு என்று கேட்க மனமில்லை. ஏனென்றால் “எப்படி வெவ்வேற அம்சத்த தேடி வருவாங்களோ, அதே மாதிரி லோடா இருக்குற பொண்ணுங்கள தேடி வர ஆளும் அதிகம்” என்று ஒரு நாள் அவள் சொன்னது நினைவில் இருந்தது.

இத்தனை நாள் எப்படிக் காசு கொண்டு வருகிறாள் என்று தெரியாமல் அவள் போடும் சோற்றில் விரலால் கோலமிடுவேன். இனி உணவு உண்ணும்போது உறுத்தலின்றி ஒரு பிடி அதிகமாகவே உண்ணுவேன். அவள் நினைத்தால் முன்னால் வாடிக்கையாளர்களிடம் பல பெரிய இடங்களில் எனக்கு வேலை வாங்கித் தர முடியும். அவள் அந்த வாழ்க்கையைத் திரும்பிக் கூட பார்க்கத் தயாராக இல்லை என்பது மகிழ்ச்சி தந்தது. 

நான் ஆர்வம் கொள்ளாதவனைப் போல் முகப்பாவனையுடன் “ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு… அது என்ன வேல” என்றேன். அவள் “வேணா… அதுல ரிஸ்க் அதிகம், நீ தேடுற வேலைய மட்டும் பாரு…” என்றாள்.

அந்தக் கம்பெனியில் சட்டை மட்டும் தான் போட வேண்டுமாம், முடியைக் கட்டிக்கொண்டு ரப்பர்பேண்ட் போட வேண்டுமாம். ஏனென்றால் முன் பக்கம் போட்டிருந்த துப்பட்டா முனைகள் மெஷினில் சிக்கி இழுத்து ஒருத்திக்கு இடது கை நஞ்சி போனது. இனோருத்திக்குத் தொங்கிய மயிர் சிக்கி தலையின் ஒரு பக்கம் வலுட்டிக் கொண்டு போனது. வரும் காலங்களில் ஏதேனுமானால் அதற்கும் இது போன்ற விதிமுறைகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று நினைக்கிறேன் என்றாள்.

அவள் நூல் மற்றும் பாபின் இரண்டும் சேர்ந்து டைமென்ட் வடிவில் நாட் போட்டுக்கொண்டே வலையாக உருவாகும் அழகை விவரித்தாள்.

நான் “மெஷின் சத்தத்த தாங்க முடியுமா?” என்றேன். அவள் “அத சத்தமா பாத்தா பத்து மணி நேரம் வேல செய்ய முடியுமா? அது நம்மகிட்ட பேசுது… என்ன கொஞ்சம் சத்தமா பேசுது. எல்லாம் கேக்குற காது கெடைக்காதான்னுதான இருக்கோம். சில சமயம் குரல் இறங்கிடும். நாம தட்டிக்கொடுத்து சரி பண்ணனும்,” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“என்ன… எப்படா கட்டைய சாத்துவோம்னு இருக்கும். கை, கால்லாம் முட்டிக்கு முட்டி உட்டுப்போவுது” என்றாள். நான் இதே வசனத்தைப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் வேறு மொழியில் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு அந்த மொழி தெரியாது. ஆனால் புரிந்துகொள்ள முடியும்.

நான் அண்ணனைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தாள். அதற்கு நான்தான் காரணமோ என்று முள் குத்தியது. இப்போதெல்லாம் சிறிது நெருக்கம் அதிகரித்தது போல் உணர்ந்தேன்.

அவள் எழுந்து நடக்கும்போதெல்லாம் தவறாமல் செய்வது இரண்டு. ஒன்று கலைந்து இருக்கும் என் தலையை விரலால் கோதிவிடுவது. மற்றொன்று ஊறுகாய் பாட்டிலைத் திறந்து கண்களை மூடி முகர்ந்து பார்ப்பது. அவளுக்கும் ஊறுகாய்க்கும் ஏதோ ஒரு பிணைப்பு இருக்கிறது. ஒரு நாள் விசேஷத் தினங்களில் இனிப்பு செய்ததன் மீதியாக இருந்த நெய்யை, வடித்த சோற்றில் விட்டு ஊறுகாயுடன் பிசைந்து கொடுத்தாள். அந்தச் சோற்றை யார் சாப்பிட்டாலும் சாகும் வரை அவர்கள் நாக்கு அதை மறக்காது. “சிறு வயதில் கல்யாணப் பந்தியில் சாப்பிடும்போதெல்லாம் ஊறுகாயில் இருக்கும் மாங்காவின் காரத்தை வழித்து எடுத்து மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு, தண்ணீர் குடித்த பின் அந்த மாங்காவை வாயில் போட்டு மேல் வாயில் ஒட்டி, சொட் என்று நக்கினால் சத்தமிட்டு சுவைத்தபடி வீடு வரை வருவேன்” என்று அவள் சொல்லியிருக்கிறாள்.

இது நான் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றா என்று தெரியவில்லை. அவள் என்னை மனசாட்சி என்று நினைத்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். மனதில் ஓடுவதை வார்த்தையால் சொல்லிக் கொண்டே இருந்தாள். ஒரு முறை, தும்மும் போதும், இருமும் போதும் ஒரு சொட்டு சிறுநீர் வெளியேறி சங்கடப்படுத்துவதாகச் சொன்னாள். இதற்கு நான் என்ன பதில் கூறுவது? நான் அந்த மொழி தெரியாத பக்கத்து வீட்டுப் பெண் பேசும்போது என்ன முகப்பாவனை செய்வேனோ அதையே செய்தேன்.

ஒரு நாள் ஊறுகாய் பாட்டிலை முகர்ந்தபடி “ஒருத்தரோட வாசனைய இந்த மாதிரி பாட்டில்ல சேமிச்சு வைக்க முடியுமா” என்றாள். நான் “ஒவ்வொருத்தருக்கும் தனி வாசனை இருக்கா?” என்றேன். ஆனால் அவளைப் பற்றிப் பேசும் போது இப்பொழுது அவளின் வாசனை வருகிறது.

நாட்கள் ஓட, அவளைக் காட்டிலும் எனக்குத் தான் அண்ணனைப் பார்க்க ஆர்வம் அதிகரித்தது. அவரை மட்டுமல்ல என் நண்பனையும் தான். அவன் என்னை ஏமாற்றிவிட்டானோ என்று நினைக்கிறேன்.

இது போன்று சிறு வயதில் பல முறை அவன் என்னை ஏமாற்றியிருக்கிறான். ஆனால் அதெல்லாம் சிறு வயது. எங்கள் பள்ளிக்கு வெளிநாட்டில் இருந்து ஸ்பான்சர்ஸ் ஒவ்வொரு வருடமும் வருவார்கள். என் நினைவு சரியாக இருந்தால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்திருக்க வேண்டும். அவர்களை மகிழ்விக்க பத்து நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

எனக்கு அப்பொழுதே அதில் ஆர்வம் இருந்தது. ஆசிரியர்கள் மற்றும் தெரிந்தவர்களின் உதவி பெற்று கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் கலந்து கைகளை ஆட்டி உறுதியாகப் பேசுவேன்.

ஆனால் எவ்வளவு செய்தும் எனக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவேயில்லை.

மாணவர்கள் வருடம் முழுவதும் இந்த நாட்களுக்காகக் காத்திருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து குடும்பத்தோடு வந்து சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து முழுச் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். ஏற்கனவே இது போன்ற ஒருத்தனுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்திருக்கிறது. அவனை அவர்கள் சொந்த மகனைப் போல் பார்த்துக் கொண்டு அனைத்தையும் செய்தனர். துணி, யூனிபார்ம், பி.எஸ்.எ சைக்கிள் என்று அவன் விரும்பிய அனைத்தும் அவனுக்குக் கிடைத்தது. இந்த முறை எப்படியாவது நான் அவர்களைக் கவர்ந்து இதனைப் பெறவேண்டுமென முடிவு செய்து என் நண்பனிடம் சொன்னேன். அந்த நாட்களில் சிறிது நேரம் அவர்கள் தனியே இருப்பது கடினம். ஆசிரியர்கள் அவர்களுடனே இருப்பார்கள். ஆனால் நான் அவர்களைத் தீவிரமாக கண்காணித்துத் தனியே இருக்கும் நேரத்தைத் தெரிந்து கொண்டு பேச சென்றபோது என் நண்பன் இடைமறித்து அவரிடம் பேசுவது வீண் என்று சொல்லி, அவர்களுடன் வந்த வேறு ஒரு பெண்ணைக் காட்டி பேச சொன்னான். நானும் அந்தப் பெண்ணிடம்  அடி மனதில் இருந்த ஆசைகளைக் கொட்டித் தீர்த்து, திறம்பட பேசி, அதாவது உடல் பாவனையால் என்னைத் தேர்ந்தெடுக்கும்படி மன்றாடினேன். ஆனால் என் நண்பனுக்குத் தான் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது. அவன் அனைத்தும் பெற்றான். இறுதியில்தான் தெரிந்தது நான் பேசியது என்னைவிட ஒரு வயது சிறிய சிறுமி என்று. அவளின் வளர்ச்சியும் என் நண்பனின் வாயும் என்னை ஏமாற்றிவிட்டது. நான் பேசப் போன நபரிடம் அவன் பேசி ஸ்பான்சர்ஷிப் பெற்றுக் கொண்டான். ஒரு முறை எனக்கு மை தீர்ந்த போது இங்க்கை பெஞ்சில் தெளித்து “இந்தா உரிஞ்சிக்கோ” என்றான். நம்பிக்கை துரோகம் செய்து பெற்ற ஹீரோ பென்னில் இருந்து சிதறிய மையை உரிஞ்சிக்கொள்ள மனம் வரவில்லை. அன்றிலிருந்து இன்று வரை அவன் ஏதோ ஒரு விதத்தில் என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறானோ என்று தோன்றியது.

நாட்கள் கடந்து கொண்டிருந்தது. நான் அவளுடன் நேரத்தைச் செலவிட்டு அண்ணனைத் தேட மறந்தேவிட்டேன். ஏனோ சில நாட்களாய் என்னை மறந்து அவள் முன் நான் மேதாவி போல காட்டிக்கொள்கிறேன். அவ்வப்போது சில எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி வந்து படித்துக் காட்டுவேன். பிரபல எழுத்தாளர்களின் பெயரையும் அவர்களின் கதையையும் சொல்லி நான் அவரைத் தொடர்ந்து முழுதாகப் படிப்பதாகவும். அவர் கதைகள் அப்படி ஒன்றும் சிறந்ததில்லை என்று விமர்சனமும் செய்தேன். அவள் புத்தகத்தைத் திறந்து ஆர்வத்துடன் எழுத்துக்களை விரல்களால் தடவிப் பார்ப்பாள்,  வார்த்தைகளை எழுத்துக்கூட்டிப் படிப்பாள். எழுதவும் செய்வாள் வரைவது போல.

இப்போதெல்லாம், நானே அண்ணனை அவளுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. தொடக்கத்தில் அண்ணனின் நிறைகளைப் பேசிக் கொண்டிருந்தவள், இப்பொழுது குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

“போறதுக்கு முன்னாடி, எத பேசுனாலும் ஒன்னு தலைய பிடிச்சுக்குவான் இல்ல வால பிடிச்சுக்குவான். தொட்டதுக்கெல்லாம் சண்ட தான்,” என்றாள். சாற்றியே கிடந்த ஜன்னலைக் காட்டி “வர்ரவன் நேரா வர வேண்டியது தான, அது என்ன ஜன்னல் வழியா எட்டி பாக்குறது. அவன் இல்லாதப்போ கூட ஜன்னல் வழியா பாக்குற மாதிரியே இருக்கும், அது தூங்கவே விடாது. அதான் சாத்தியே வெச்சிருக்கேன்” என்றாள்.

நான் அவளைப் பார்த்தேன்.

“அது என்னவோ எனக்கு அப்படித் தான் ஆகும்” என்றாள். “15 வயசுல இருட்டுன அப்புறம் தனியா வீட்டுக்கு வரப்போ பின்னாடி தட்டிட்டு, திரும்புற நேரத்துல மறஞ்சு போற மாயாவி ஒருத்தன் இருந்தான். அவனால, இன்னைக்கு வர என் பின்னாடி யார் தொட்டாலும் திடுக்குன்னுது. எங்கம்மா சொல்லியிருக்கு அந்த ரோட்டுப் பக்கமா வராதன்னு. அப்பதான் புரிஞ்சுது அவளுக்கு என்ன நடந்துருக்கும்னு” என்றாள்.

“அவன் அப்படினா, இன்னொரு கிழட்டு மூதேவி இருக்கும். அதுக்கு குடும்பம்லாம் கிடையாது, பாவமா தனியா இருக்கும். என்ன பாத்தாலே கூப்புட்டு மடியில உட்கார வச்சு கன்னத்துல முத்தம் குடுத்து 1 ரூபாய் தரும். இப்ப நினைச்சுப் பாக்கும் போதுதான் தெரியுது அது அப்போ என்ன பண்ணுச்சின்னு. வயசு ஆனா உடல் சோர்வு மூட்டு வலி எல்லாம் வரும் ஆனா, எவனுக்கும் அது இந்த விசயத்த பாதிக்கறது இல்ல.”

“இன்னோருத்தன் இருக்கான் ஸ்கூல் வாசல்ல நின்னுகிட்டு கலர் ட்ரஸ்ல வர பொண்ணுங்களுக்கு பொருள் வாங்கித்தருவான். ஒரு பொண்ணுக்கு பிறந்த நாள ஞாபகம் வச்சுகிட்டா போதும் அவன் தான் உலகமே …” என்று எங்கோ தொடங்கி எங்கோ போய்க் கொண்டிருந்தாள்.

அவள் மனநிலை போல உடலும் மாறியது. ஜாக்கெட்டில் தையல் பிரித்துப் போட்டதால் பொத்தல்கள் தெரிந்தது. அவள் பெருத்திருக்க வேண்டும்.

நான் வளர்க்கும் மீன்களைப் பார்த்திருக்கிறேன் அது குட்டிபோடும்போது அதன் வயிறு பெருத்து அதை மேலே நீந்த விடாமல் கீழ் இழுப்பதைப் போல தோன்றும். குறைந்தது ஒரு டஜன் குட்டியாவது போடும். அவள் வயிறும் அப்படிதான் இருந்தது. ஆனால் மொத்த குட்டியாக ஒன்றே ஒன்று எதிர்பாராத நேரத்தில் ஆண் குட்டியாகப் போட்டாள். இது ஒரு மோசமான உதாரணம் என்று தெரியும் ஆனால் நினைவில் வந்தது இதுவே.

அவள் வேலைக்குச் செல்வதை 8ஆம் மாதமே நிறுத்தியிருந்தபோதும் தாக்குப்பிடிக்கும் அளவிற்குச் சேமிப்பு இருந்தது. ஆனால், சும்மா சொல்லிவிடக் கூடாது. அந்த மொழி தெரியாத பெண் அவ்வவளவு உதவியாக இருந்தாள். மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களும் அவள்தான் இடது கையாக இருந்தாள். என்னால் அந்த இரத்தம் கலந்த சிறுநீரக குழாயைப் பார்க்கவே முடியவில்லை. மருத்துவமனையின் வாடையே எனக்கு ஆகாது, குமட்டிக் கொண்டு வந்தது. அதாவது பினாயல், இந்த வாடை இனி எப்போதும் எனக்கு மருத்துவமனையை ஞாபகபடுத்தும்.

வீட்டிலே காலையிலும், இரவிலும் மொழிதெரியாத பெண் பார்த்துக்கொள்வாள். அவள் வேலைக்குச் செல்லும் பகல் பொழுதில் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன். அது என் வயதுக்கு மீறிய அனுபவமாகத் தெரிந்தது. அவள் மொத்த சக்தியும் இழந்தவளாய் கண்கள் மேலே சொருகியபடியே ஒரு வாரம் கிடந்தாள்.

நான்தான் குழந்தையை அவளிடம் தூக்கி காம்பூட்டுவேன். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நிரம்பிய காட்டன் துணியை இடுப்பில் கட்டிய நாடா கயிற்றிலிருந்து கழற்றி புதிதாகக் கட்ட வேண்டும். இதை அந்த மொழி தெரியாத பெண் எப்படிச் செய்வாள் என்று தெரியாது. நான் உள்ளங்கை அளவிலான சதுரங்க வடிவ துணியை மடித்து, அதன் மேல் செவ்வக வடிவில் ஆறு சுற்று, இதை சேர்த்துக் கட்டும் துணியின் நடுவில் வைத்து இரு புறமும் நாடா கயிற்றில் கட்டி, மூன்று கட்டப் பாதுகாப்புடன் செய்வேன்.

நிரம்பிய துணியைத் துவைத்து பின்புறம் காய வைப்பேன். அனைத்தும் முடிந்த பின் கையை நன்றாகக் கழுவுவேன்.  ஆனாலும் மனம் ஒரு முறை முகர்ந்து பார்த்து மீண்டும் கையைக் கழுவச் சொல்லும்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் சில நாட்கள்  என்னை  உண்ணவிடாமல்,  தூங்கவிடாமல் செய்தது.

அவள் படும் துயரத்தை என்னால் பார்க்க முடியவில்லை. இப்படி ஒரு நிலைக்கு அவளைத் தள்ளிவிட்டு அண்ணன் எங்கோ உல்லாசமாக இருந்துகொண்டிருப்பார். அவரை எங்கும் பிடிக்க முடியவில்லை.

அவளுக்குப் பிறந்த குழந்தையைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை, அது அவள் உண்ணும் போதெல்லாம் உண்ண விடாமல் பசித்துக் கத்தியது. அல்லது மலம் கழித்தது. அதை யார் தொட்டாலும் சினுங்கியது. அவளை யார் தொட்டாலும் சினுங்கியது.

சேமிப்பு கரைந்தது. நான் மனம் தளர்ந்து வேலை தேடத் தொடங்கினேன். வழக்கம் போல் எல்லா இடங்களிலும் நிராகரிக்கப்பட்டேன். அப்படி வேலை தேடிச் சென்ற ஒரு இடத்தில் என் நண்பனைப் பார்த்தேன். அவன் அங்கு வேலை செய்துகொண்டிருந்தான். அவனைக் கண்டதும் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. நான் அவனைச் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றேன். அவன் என்னை அண்ணனிடம் இழுத்துச் சென்றான்.

கட்டியணைக்க வந்த அவனை, நான்தான் விரல்கள் சிவக்க அடித்துவிட்டேன். அண்ணனுக்கும் அதுவே. ஒரு கட்டத்திற்கு மேல் விசாரிக்காமல் அடித்துவிட்டேனோ என்று எனக்கே உறுத்தியது. என் நண்பன் குறுக்கே விழுந்து தடுத்தான். அவன் மட்டும் அழைத்துச் செல்லாவிட்டால் இந்த ஜென்மத்தில் அண்ணனை என்னால் கண்டுபிடித்திருக்கவே முடியாது. அப்படியாப்பட்ட இடம்.

அன்று நான் அவளை அழைத்துச் சென்ற உடனே கல்லூரியில் இருந்து வந்து அண்ணனைப் பிடித்துவிட்டனர். பெற்றதன் மிச்சத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கிக்கொண்டு சில மாதங்கள் எழுந்துகொள்ள முடியாமல்  இருந்திருக்கிறார். அதன்பின், என் நண்பன்தான் வேலை செய்து உதவியிருக்கிறான்.

நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, சந்தோஷமான விஷயத்தைத் திறந்தேன். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பதைச் சொல்லி, அவரைக் காண அவள் காத்திருப்பதைச் சொன்னேன்.

அவர் வெடவெடத்துப் போனார். ஆத்திரத்தோடு என் அருகில் வந்து “நீ இன்னும் அங்கதான் இருக்கியா… தேவுடியா வீட்லயே தங்குற அளவுக்கு சுகம் கண்டுட்டியா? அது எவனுக்குப் பொறந்துதோ…” என்று அவர் வார்த்தைகளை எரிந்து கொண்டிருக்கும்போதே, என் கால் அவர் மார்பில் பாய்ந்தது. பொருட்களில் புதைந்து போனார். நாங்கள் மூவரும் எதிர்பாராத நேரத்தில், ஒரு பெண் சிறுமியுடன் உள்ளே நுழைந்து அமைதியாக நின்றாள். அண்ணன், “இந்தத் தல சுத்தல்தான் நிக்கல, அடிக்கடி சுழட்டி அடிக்குது… கைய கொடுறா…” என்று என் கையைப் பிடித்து எழுந்தார். அந்தப் பெண்ணைப் பார்த்து “என்ன பாக்குற, என் இன்னொரு தம்பி, ஒரு வழிய தேடி வந்துட்டான். போய் டீ போடு…” என்று சொல்லி வெளியே அழைத்து வந்தார்.

நான் ஒன்றும் புரியாதவனாய் “யார் அது?” என்றேன். “உங்க அண்ணி, அது உன் பொண்ணு” என்றார். எனக்கு ஐயோ என்று போனது. என்னை மீறி ஈரம் கண் வழியே வெளியேறியது. நான் உடைந்து அவர் முன் மண்டியிட்டு “அண்ணே… அதுக்கு யாரும் இல்லணே… இப்போ புள்ளைய பெத்துட்டு ரொம்ப கஷ்டப்படுதுணே… நா எப்படியாவது உன்ன கூட்டி வந்து சேர்த்துறேன்னு சொல்லிருக்கேணே…” என்றேன். எனது குரல் கரைந்துகொண்டே போனது. என்னை மீறி அவர் கால்களைப் பிடித்துக்கொண்டு அழத்தொடங்கிவிட்டேன்.

என் நண்பன் என்னை எழுப்பி கை, கால்களை துடைத்தபடி “அண்ணிக்கு, அண்ணன தவிர வேற ஏதும் தெரியாதுடா… அண்ணன பிரிஞ்சு இருந்த கொஞ்ச நாளே ஆள் பாதியா போயிருந்துச்சு. இப்பதான் கொஞ்சம் சிரிக்க ஆரம்பிச்சுருக்கு… கெடுத்துராத.” என்று என் கையைப் பிடித்தான். “ஏற்கனவே கஷ்டம், நா வேலைக்கு போய்தான் இப்போ ஏதோ பரவால்ல… பொண்ண மறுபடியும் ஸ்கூல்ல இப்போதான் சேர்த்தோம்” என்றான். நான் “எப்படி அவளோ பெரிய இடத்துல வேலை கிடச்சுது” என்றேன்.

அவன் “சிபாரிசு” என்றான்.

நான் “யார்” என்றேன்.

“அக்கா” என்றான். என்னக்குக் கீழ் இருந்து மேல் வெறியேறி  அவன் முகத்தைப் பேர்த்தேன். அண்ணன் இடைமறித்து என்னைத் தனியே இழுத்துச் சென்றார். அவர் இரு கையாளும் பிடித்து கொண்டதால் நானும் ஏத்த இரக்கமாய் நடந்தேன்.

“நீ ரொம்ப நல்லவன் டா …” என்றார். இதை சொல்லும் முதல் ஆள் அண்ணன், இரண்டாவது நான்.

“இரக்கம், கருணை எல்லாம் காட்டு ஆனா அதுக்கு ஒரு இடம் இருக்கு, உனக்குள்ள இருக்குற அந்த கொஞ்சம் பச்சாதாபத்தை எரிச்சுரு. உனக்குன்னு ஒரு பொண்டாட்டி, குழந்த இப்படி வாழ்ந்து பார். அதெல்லாம் சொர்கம் டா…” என்றார். நாங்கள் வெகு நேரம் பேசினோம். நான் என்னால் முடிந்த வரை அவளுக்காகப் பேசினேன். “வேணும்னா உனக்காக நா இத மட்டும் செய்யுறேன்” என்று முடித்தார்.

நான் மனக் குழப்பத்தோடு அவளை நோக்கி நடந்தேன். என்ன சொல்வது? அண்ணனைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதையா? அல்லது அவருக்கு முன்பே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதையா? திருமணம் ஆனது எதற்கு, இப்பொழுது அவளுக்குக் கிடைக்கப் போகும் வாழ்க்கையைப் பற்றி மட்டும் சொல்வோம்.

நான் அவளிடம் அண்ணனைப் பார்த்ததாகச் சொன்னேன். அவள் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டாள். அவளிடம் எங்கே… எப்போது என்றெல்லாம் கேள்வியில்லை. கண்களில் கலங்கிய நீரை கீழேவிடாமல் மூக்கை உரிந்தபடி முந்தானையால் ஒற்றி உதறி இடுப்பில் சொருகினாள். குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியே நடந்தாள். “வா.. முதல்ல புள்ளைய காட்டணும் ” என்றாள்.

நான் “இப்ப வேணா… 2 நாள்ல அங்கயே போய்டலாம்” என்றேன். “மறுபடியும் விட முடியாது. நீ வரலைனா இடத்த சொல்லு நா போய்க்குறேன்” என்றாள்.

அவர் இங்கிருக்கும் சூழ்நிலை அனுமதிக்கவில்லை என்பதைப் புரியவைத்து, அவளை வடக்கு பக்கம் அழைத்து வரச் சொல்லி தந்த பணத்தைக் காட்டினேன். அவள் சற்றே ஆறுதல் அடைந்தாள். அவள் என் வார்த்தையை நம்பியது கண்களில் தெரிந்தது. என் நண்பனுக்கு அவளின் சிபாரிசில் வேலை கிடைத்ததைச் சொன்னேன். அவள் ஒரு பதிலும் சொல்லவில்லை, தேவையான பொருட்களையும் துணிகளையும் எடுத்து வைக்க தொடங்கிவிட்டாள். நான் சொன்ன படி அண்ணனிடம் அவளைச் சேர்த்தவுடன் எனது கடமை முடிந்துவிடும் என்பது தெரிந்தவுடன் அவள் முகத்தில் ஈ ஆடவில்லை. “நீ போகாத, உன்ன குட்டியாக்கி என் கூடவே வெச்சிக்கணும் போல இருக்கு” என்றாள். எனக்கும் அவளைப் பிரிந்து இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவளோடு இருந்த நாட்கள் ஒரு போதும் என் நினைவை விட்டு அகலாது. அவளுடைய லொடலொட பேச்சுக்கள் எப்பொழுதும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கும். ஒவ்வொரு முறை குளிக்கும்போதும், துடைத்துக்கொள்ள அவள் குடுத்த உள்பாவாடை என் நினைவுக்கு வரும்.

ஒரு முறை தொடர் மழையால் சில நாட்கள் மின்வெட்டிலும், உணவு பொருட்கள் பற்றாக்குறையிலும் வீதியே கிடந்தது. அப்பொழுதெல்லாம் மாவுதான் எல்லாம். மழைச் சாரல் உள்ளே வராமல் பலகையை வாசலில் வைத்து சற்றுப் பின்னே மண்ணெண்ணை திரி அடுப்பை வைத்து மழையைப் பார்த்தபடியே தோசை சுட்டுத் தருவாள். அதையும் ஊறுகாயோடு தொட்டு மூன்று வேளையும் தின்றோம். அது சலிக்கவேயில்லை. அதன் பின் மழையைப் பார்க்கும்போதெல்லாம் அவளை எப்படி மறக்க முடியும். அதற்கு முன்பு வரை கடற்கரை மணலில் காதலியுடன் படுத்துக் கொண்டு கடல் பார்த்தபடி குளிர்பானம் குடிப்பதுதான் மகிழ்ச்சி தரும் என்று நினைத்திருந்தேன்.

அந்த மழை இரவுகளில் சிறு வயதில் அவள் கேட்ட கதைகளை ஒவ்வொறு நாளும் சொன்னாள், ஒவ்வொன்றும் ஒரு வினோதம்.

மழையின் சத்தத்தைக் கேட்டு “இப்படியே மழை பெஞ்சா அவ்வளவுதான் பூமி அழிஞ்சிரும். பூமாதேவி பூமிய கடல்ல போட்ற போறா” என்றாள். பூமாதேவி பூமியைத் தனது தோளில் வைத்து தாங்கிக் கொண்டு பெருகும் ஜனத் தொகையால் எடையதிகரித்து, மிகுந்த தோள் வலியால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாளாம். ஒவ்வொரு வருடமும் பூமாதேவியின் அண்ணன் அவள் படும் கஷ்டத்தைப் பார்த்து பூமியைக் கடலில் போட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடச் சொல்லி அழைப்பாராம். ஆனால், கருணை உள்ளம் கொண்ட பூமாதேவி அதை மறுத்து அவரைத் திருப்பி அனுப்பிவிடுவாளாம். இதில் மழை இப்படி ஓயாமல் பெய்து தொல்லை செய்தால் கடலில் போடாமல் என்ன செய்வாள் என்றாள். இந்தக் கதை எப்படி பிறந்து எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தெரியாது. ஆனால் என்னால் சிரிப்பை மட்டும் அடக்க முடியவில்லை. அவள் “ஒருத்தி படர கஷ்டம் உனக்கு சிரிப்பு வருதா?” என்று முறைத்தாள்.

என்னதான் பொழுது போகவில்லை என்றாலும் இப்படியா என்று கேட்கலாம். ஆனால் இதை மிஞ்சும் அளவிற்கு அவள் மேலும் இரண்டு கதைகளைச் சொன்னாள்.

சகோதர்களான சூரியனும், சந்திரனும் ஒருமுறை கல்யாண விருந்திற்குச் சென்றிருக்கிறார்கள். விருந்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, தனக்காக என்ன கொண்டு வந்தீர்கள் என்று அம்மா கேட்டிருக்கிறாள். தம்பியான சந்திரனோ தனது பத்து பெரிய நகங்களுக்குள் பத்து வகையான உணவை எடுத்து வந்து, ஒரு தட்டு கொண்டுவர சொல்லி அதில் கொட்டியிருக்கிறான். ஆனால், சூரியனோ எதுவும் தரவில்லை. கடும் கோபம் கொண்ட அம்மா “எனது வயிறு எறிவது போல் நீ எரிந்துகொண்டே இருப்பாயாக…” என்று சபித்திருக்கிறாள். சந்திரனோ அன்னையின் அன்பால் குளிர்ந்திருக்கிறான். அதனால்தான் சூரியனால் இன்றும் வெயில் கொளுத்துகிறது என்றாள். அது சுகாதாரமோ இல்லையோ நானும் பத்து விரல்களில் நகம் வளர்ப்பதென்று முடிவு செய்தேன். சாப்பிட்டபின் கை கழுவுவதைப் பிறகு யோசிக்கலாம்.

மற்றொரு கதையில், முன்பொரு காலத்தில் மேகக் கூட்டங்கள் அனைத்தும் கீழேயே இருந்திருக்கிறது. வறுமையில் இருந்த பூக்காரி ஒருத்தி பூ விற்றுக்கொண்டு போகும்போது தலையில் இருந்த கூடை மேகம் தட்டி கீழே விழுந்து பூக்கள் அனைத்தும் வீணாகிப் போயின. அந்தப் பூக்காரிக்கு அருள் வந்து  “எட்டு மொழம் பூ போட்டாலும் எட்டாம போ, பத்து மொழம் பூ போட்டாலும் பத்தமா போ…” என்று சபித்ததால் மேகங்கள் வானத்தோடு சென்றுவிட்டதாகச் சொன்னாள். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“அட ஏன் சிரிக்குற… சாமி  வந்ததுக்கா?  எங்க தாத்தாக்கும் சாமி வரும். வந்து ஆடலாம் செய்யாது. ஒரு வார்த்தை இல்லனா ஒரு வரி. எப்பயாச்சும் உசுருக்கு எதாவுதுன்னா வரும். வந்தா உசுரு இருக்கும் இல்ல இருக்காது. அவ்ளோதான் பேசும். அவருக்கு அப்பறம் எனக்கு ஒரு முறை வந்துச்சு. என் தாத்தா செத்த அப்போ. அதுக்கு அப்புறம் வரல.” என்றாள். எது எப்படியோ அவளது வாய் மட்டும் இல்லை என்றால் அந்த நாட்களைக் கடத்தியிருக்கவே முடியாது.

என்னைப் போலவே அவள் மனதிலும் நினைவுகள் ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அவள் வெளியூருக்குச் செல்வதற்கு முனகியபடி கொஞ்சம் கொஞ்சமாக மனதைப் பழக்கிக் கொண்டிருந்தாள்.

“இந்த ஃபேன் சத்ததிலேயே தூங்கி பழகிட்டேன். அங்க அந்தச் சத்தம் இல்லனா தூக்கமே வராது,”

“உடம்புக்கு ஏதாவதுனா அந்த மரத்து பக்கத்துல இருக்குற டாக்டர் கிட்ட காசு கொடுத்துட்டு வந்தாலே போதும் நோய் சரி ஆகிடும். வியாதிய பேசியே விரட்டிருவான். அங்க எப்படியோ”

“அங்க மசூதி இருக்குமா? குழந்தைக்கு ஓதனும்”

“அந்த ஊர்ல இராத்திரில வாசல்ல கற்பூரம் ஏத்துனா ஏதாவது சொல்லுவாங்களா” என்று புலம்பியபடியே இருந்தாள்.

அதற்கு ஏதாவது சொல்வார்களா என்று தெரியாது. ஆனால் அவள் துவைத்த உள்ளாடைகளை வெளிப்படையாகக் காய வைப்பாள், மற்ற துணிக்குப் பின் மறைத்துக் கொடியில் காயா வைக்கமாட்டாள். இதை கேட்டால் “அது என்ன தீண்ட தகாததா? இல்ல யாரும் போடாததா?” என்று திருப்பிக் கேட்பாள். கண்டிப்பாக எங்கிருந்தாலும் இதற்கு ஏதாவது சொல்வார்கள்.

சட்டென்று “நீ கூட இருந்து எல்லாம் பழகுனதுக்கு அப்புறம் போயேன்” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“நான் இருப்பேன்…” என்றேன்.

அவள் வீதியெங்கும் சென்று, தான் வெளியூருக்குச் செல்வதைச் சொல்லிவிட்டு வந்தாலும், அவள் அதில் தெளிவாகயில்லை என்று மட்டும் தெரிந்தது. அவள் படுக்கையைச் சரி செய்து கொண்டேயிருப்பாள். அது கலைந்திருந்தால் மன நிலை குழுப்பமாகவே இருக்கும் என்பது அவள் எண்ணம். நான் விஷயத்தைச் சொன்னதிலிருந்து அது கலைந்தே கிடந்தது…

எல்லாவற்றிற்கும் மேல் அவள் சுவைத்த தண்ணிரை விட்டுவிட்டு போவதர்க்கு தயாராகாதது போல் குடம் தீர நடைக்கு ஒரு முறை மொண்டு மடமடவென குடித்தாள்.

ஆனால் முழுதாகத் தயாரானது போல் வார்த்தைகள். அவளே இது போன்ற ஒரு இட மாற்றத்தை எதிர்பார்த்ததாகவும், அங்கு எப்படி இருந்தாலும் குழந்தையை மட்டும் நன்றாக வளர்ப்பேன் என்றும், அவளைப் பற்றி தெரிந்த எவரையும் குழந்தைக்குக் காட்ட மாட்டேன் என்றும், முக்கியமாக மறுபடியும் இந்த ஊர் பக்கமே திரும்பக்கூடாது என்றாள்.

எழுதப் படிக்க தெரியாவிட்டாலும், பாரதி படத்தை மட்டும் பெரியதாக வீட்டில் மாட்ட வேண்டும் என்றாள். அதைப் பார்த்து வளர்ந்தால் குழந்தை வீரமாக இருக்குமாம். வாசலில் பல வண்ணப் பூச்செடிகள் வளர்க்க வேண்டுமாம்.

“ஆனா ஒன்னு மட்டும், அவன பாத்து எப்படி இத்தன மாசம் பிரிஞ்சு இருக்க முடிஞ்சுதுனு கேட்கணும்” என்றாள்.

“அண்ணனுக்கு ஏகப்பட்ட பிரச்சன… வேல வேற… அதான் நாள் போனதே அவருக்குத் தெரியல… இப்போதான் வந்துட்டாரே” என்றேன்.

“செத்தவங்களுக்குத் தான் நாள் சீக்கிரம் ஓடும்முனு சொல்லுவாங்க, மெய்யா போச்சு பாத்தியா? நான் செத்துட்டேன் அவனப் பொறுத்தவர, அதான் இவ்வளவு நாள்” என்று புலம்பினாள்.

ஆனால், அண்ணன் அவளை விட்டுப் பிரியப் போகிறார் என்று அவளுக்கு முன்பே தெரியும் என்றாள். நான் எப்படி என்று கேட்டதற்கு, உடலுறவிற்குப் பின் முத்தம் கொடுப்பதை அவர் நிறுத்திவிட்டதாகச் சொன்னாள். எனக்கு, அவர்கள் ஒன்றாக இருந்தது பற்றிச் சொன்னது லேசாக வெறுப்பை ஏற்படுத்தியது. நான், “முத்தம் தானே.. காசு கொடுத்தால் கிடைக்காததா… இல்லை கொடுக்காததா…” என்று பழிதீர்த்துக் கொண்டேன். அவள் என்னை முறைத்தபடி, “கிடைக்கும் ஆனால் அதெல்லாம் உயிரில்லாத முத்தங்கள்” என்றாள். நான் “உயிர் உள்ள முத்தங்களுக்கு விலை என்ன?” என்று பதிலடி கொடுத்தேன். அவள் எனக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். புரிந்துகொண்டேன் அதை காசு கொடுத்து வாங்க முடியாது என்று. என்னால் அந்த முத்தத்திலிருந்து மீள முடியவில்லை.

எனக்கு அவளிடம் பெற வேண்டிய ஏதோ ஒன்று இருப்பது போலவும் முடியப் போகும் இந்த உறவு முழுமை பெற இன்னும் மிச்சம் இருப்பது போலவும் தோன்றியது. இது அங்கிருந்து கிளம்பும் முன்நாள் வரைதான். ஏனென்றால் அன்றிரவு குழந்தை தூங்கியவுடன் என்னுள் ஏதோ அவசரம் தெரிந்தது. அவளுக்கும் பிரியப்போகும் எனக்கும், குடுத்துவிட என்ன இருந்துவிட முடியும்? எனக்கு இது வரை கிடைத்திடாத ஒன்று, மற்றவர்கள் சொல்லி காதில் கேட்டே கனவு கண்ட ஒன்று. நான் தொடங்கினேன் அவளிடம் மறுப்பு ஏதுமில்லை. வார்த்தைக்கு ருசி அதிகம் என்பதை அவள் உதடு என் உதடோடு உராய்ந்தபடி பேசும்போது உணர்ந்தேன்.

ஏன் இத்தனை நாள் இல்லாதது இப்பொழுது? சரி ஒரு நல்ல நாள் பார்த்து, குறித்த நல்ல நேரத்தில் முழுதாகத் தெரியாத ஆணும், பெண்ணும் நிர்பந்தத்தின் பெயரில் இணைந்து கொண்டால் மட்டும் வாழ்க்கை பிரகாசமாக இருக்குமா என்ன ?

அப்படிப் பிரகாசமான வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் சிலர் ஏதோ ஒரு திருட்டுத்தனத்துடன் இருளில் யாரையோ நினைத்துக் கொண்டு யார் கூடவோ, சினிமா கதாநாயகியை நினைத்துக் கொண்டு, வலியின் சத்தத்தைக் கேட்டுச் சந்தோஷப்பட்டுக் கொண்டு, உறவினர்களின் பெயரைச் சொல்லியும், உறவுமுறைகளின் பாத்திரங்கள்படி நடந்துகொள்ள சொல்லியும் ஆழ்மனக் கொடூரத்தைத் தீர்த்துக்கொள்ளப் போகிறார்கள்.

ஆனால் சந்தோஷத்திற்காக என்ன செய்தாலும், குறைந்தபட்ச காதல் இல்லாமல் எந்த ஒரு ஆண்களாலும், பெண்ணைத் திருப்திப்படுத்திவிட முடியாது என்பதை முதல் முறையே தெரிந்துகொண்டேன்.

அவள் பிள்ளை பெற்ற பின்னும் அள்ளிக்கொள்ள முடியாத அழகாய் இருந்தாள்.

நான் அன்றிரவுதான் அவளை முழுதாகப் பார்த்தேன். கண்களால் கொள்ள முடியாத அழகு. அவளுக்கு உடல் முழுவதும் கன்னம் இருப்பது போல தோன்றியது. நான் எங்கு என் கன்னத்தை அவள் உடலில் வைத்தாலும், அவள் கன்னத்தின் குளுமையைப் பெற முடிந்தது. அவளை எப்படி எடுத்தாலும் கை நிறைய இருந்தாள். நான் அவளுள் புதைந்து, கரைந்து, எஞ்சி இருக்கும் நாட்களை அவளுடன் கலந்தே கழித்து விடவேண்டும் போல் இருந்தது.

அவள் உடல் முழுவதையும் நாவினால் சுவைத்தேன். என்னுடைய தயக்ககங்களை நேரமின்மையின் அவசரம் உடைத்தது. எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் அங்கொன்னும் இங்கொன்னுமாய் பரபரத்தேன்.

இன்னும் சற்று நேரம் நீடித்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தாக்குப் பிடிக்க முடியாமல் தோற்றுவிட்டேன். நான் சொல்வதைப் பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால் இதற்கு முன் அனுபவம் தேவை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.

அதற்குப் பின் அவளைப் பார்க்கும் சக்தியே எனக்கு இல்லை. நான் கண்களை மூடிக் கொண்டேன். இரவில் எத்தனை முறை குழந்தையின் பசியைப் போக்க எழுந்திருந்தாள் என்று தெரியாது. நான் எழுகையில், அவள் வெளியே நின்று குழந்தையை இள வெயிலில் காட்டிக் கொண்டிருந்தாள். சினுங்கியபடி இருந்த குழந்தைக்கு அந்த மொழி தெரியாத பெண் பாடல் ஒன்று பாடிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பாடலின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

‘என் சிறிய செல்லம், அம்மா உன்னை அடித்தாளா?

தோட்டத்துக்குப் போனாயா? பழம் எடுத்துவந்தாயா?

கூட்டில் வைத்தாயா? இல்லை முழுதாக விழுங்கி விட்டாயா?’

இது ஒரு குட்டிக் கிளியைப் பார்த்துப் பாடுவதாக இருந்தது. இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். திருத்தம் இருக்கலாம்.

அதில் ‘கூட்டில் வைத்தாயா…’ என்ற வரி எனக்கென்று ஒரு கூடு இருப்பதை நான் மறந்துவிட்டேன் என்று நினைவு படுத்தியது. நான் என் அம்மாவையும் வீட்டையும் நினைத்தபடி அமர்ந்திருந்தேன். அந்த மொழி தெரியாத பெண் சட்டென்று உள்ளே வந்துவிட்டாள். நான் பதட்டத்தில் கால்களால் உறுப்புகளை மறைத்தபடி அமர்ந்தேன். ஆடை எதுவும் எட்டும் அருகில் இல்லை. அந்தப் பெண் “என்ன ‘வேமணா’ மாதிரி உட்காந்து இருக்க” என்று சிரித்துக் கொண்டே வெளியே சென்றாள்.

அடுத்த வினாடியே கிடைத்ததை மாட்டிக்கொண்டு, துட்டு டப்பா (இது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவள் காலியான கோபுரம் மஞ்சள் தூள் டப்பாவை உபயோகித்தாள்). அதன் அடி ஓரங்கள் துருப்பிடித்து அங்கங்கே பச்சை, வெள்ளை நிறங்கள் உரிந்துவிட்டிருந்தது. நான் அதிலிருந்த சில்லறையை எடுத்துக்கொண்டு பி.சி.ஓ-க்கு ஓடி எங்கள் பக்கத்து வீட்டாருக்கு ஃபோன் செய்து அம்மாவிடம் பேசினேன். அம்மாவும் எங்கெங்கோ சுற்றி எனக்கென ஒரு கூடு அமைப்பதைப் பற்றிப் பேசினாள். எனக்காகவே ஒரு மனைவி, குழந்தை இதெல்லாம் இன்பம்தானோ. பேசி முடித்து கடைக்காரனுக்குக் கொடுத்த சில்லறையிலும் மஞ்சள் வாசனை வீசியது. எனக்கென்று ஒரு பெண்  “இவள்  எனது…” என்று நாற்புறமும் அணைத்துக்கொள்ளும் கனவுகளோடு நடந்தேன்.

நாங்கள் புறப்பட்டோம்… மிகப் பெரியதும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாத மூட்டைகள். அந்த மொழி தெரியாத பெண் அவளுக்குப் பிடித்த மீன் குழம்பும் சாதமும் கட்டித் தந்தாள். அந்தக் கூடையில் ஒரு மர கரித்துண்டும், ஒரு பெரிய ஆணியும் இருந்தது.

நாங்கள் ஒரு அமைதியான அகலமான சாலையில் லாரிக்குக் காத்திருந்தோம். நான் சற்றே தள்ளி அவள் முகத்தை நேரே பாராதவனாய் இருந்தேன். இவளோடுதானே இத்தனை காலம் இருந்தேன். உடல் இன்பத்திற்கு முன்னும், பின்னும் ஏன் இவ்வளவு மாற்றங்கள்.

அங்கிருந்த பள்ளி மைதானத்தில் குழந்தைகள் வரிசையாக நின்று கடவுள் வாழ்த்து பாடிக் கொண்டிருந்தனர்.   அவள் அதைக் காட்டி “நீ கும்புடு… நீ சாமி கும்புடு…” என்று குழந்தையின் தொப்பைக் கைகளை ஒன்று சேர்த்து வேடிக்கை காட்டினாள். லாரி வந்ததும் குழந்தையும், அதற்கு அவசியமான ஒரு மூட்டையுடன் அவள் முன்னே ஏற, நான் சில மூட்டைகளுடன் பின்னே இருந்த பொருட்களோடு அமர்ந்து கொண்டேன். வண்டி ஒரு மலை கோவிலில் சிறிது நேரம் சாப்பிட நின்றது.

நான் ஓட்டுனரிடம் மீதிப் பணத்தைக் கொடுத்தேன். நின்று கொண்டிருந்த நேரத்தில் லாரியின் கண்ணாடியில் வண்ணங்களால் விரல்களைக் கொண்டே ஒருவன் கடவுளைப் படைத்துவிட்டான். அதை கண் ஆடாமல் அவள் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்க்கும்போது எனக்கு அவள் வரைந்தவற்றைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. நான் முன்னே ஏறி அவள் பையில் இருந்த தொலைபேசி எண் அடங்கிய சின்னப் புத்தகத்தை எடுத்தேன். பின்னே அமர்ந்தபடி நிதானமாக விரல்களால் அவள் வரைந்த எழுத்துக்களைத் தடவிப்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்து.

லாரி புறப்பட்ட போது அவள் ஏற உதவி செய்து, தின்பண்டங்களை வாங்கி முன்னே கொடுத்துவிட்டு பின்னே ஏற கால் எடுத்தேன். காலில் எறும்பு கடித்துவிட்டது. எந்தப் புறாவைக் காப்பாற்ற என்று தெரியவில்லை. நான் அந்த எறும்புக்கு எதுவும் ஆகாமல் பக்குவமாய் பிடித்தேன். அதை நசுக்கிக் கொல்ல மனமில்லை. ஒரு கணம் அதைப் பார்க்கும்போது, அது எப்படிக் குடும்பத்தை விட்டு இங்கே வந்தது என்று மனம் பரிதாபம் கொண்டது. அதை எப்படியாவது அதன் குடும்பத்தோடு சேர்க்க வேண்டும் என்று மனம் நினைத்தது. ஆனால், அதெற்கெல்லாம் நேரமில்லை, அதை மரத்தோரம் விட்டுவிட்டு கால் பாதங்களைத் தட்டிவிட்டுத் திரும்பினேன். அதற்குள் லாரி போய் விட்டது…

பிறகு என்ன, சில மாதங்களிலே அண்ணன் காட்டிய வழியில், அவரின் ஆசிர்வாதத்தோடு என் கல்யாணம் இனிதே நடந்தது.

நான் என் நண்பன் சிந்திய இரண்டு சொட்டு மையை உரிந்து இதை எழுதி எரித்துவிட்டு மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். என் நண்பன் வேலை செய்கிற அதே அலுவலகத்தில் மீண்டும் அவள் பெயரை உபயோகித்து எனக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தான்.

முதலிரவில் என் மனைவி கேட்ட கேள்விக்கு, நான் இதற்கு முன் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை, எப்பொழுதோ பழகிய ஒரு பெண்ணையும் அக்காவாகத்தான் பார்த்தேன் என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்து வாழ்க்கையை இனிதே தொடங்கினேன்.

5 comments for “யானும் அவ்வண்ணமே கோரும்

  1. Allen
    May 1, 2024 at 1:34 am

    After a long time. The best story I read is yaanum avvanamai korum. It has all the weightage to be made as wonderful novel. Congrats pirana…

  2. Allen
    May 1, 2024 at 1:44 am

    It is the best story I read in recent times. It has all the quality to be developed as novel. Everyone should understand what is the dark side is hidden behind our fake appearance. Congratulations pirana for the amazing story.

  3. மதன்
    May 9, 2024 at 1:03 am

    ஓரு மனிதனின் மறுபக்கத்தை அருமயையாக எடுத்துச் சொன்ன கதை
    நண்பர்கள் பல விதம் அதில் ஒருவன் இவ்விதம்
    கொச்சையாக இல்லாமல் இலை மறைவு காய் மறைவாக எழுதியுள்ளார்…. எழுத்தாளர் பிரானாவில் படைப்பு அருமை

  4. Gowtham Veeramuthu
    June 10, 2024 at 3:33 pm

    கதைகள் ஆரமித்து முடிப்பதற்குள் இடையில் அதன் முடிவை கூறிவிடலாம். சில கதைகள் நாம் நினைப்பதையெல்லாம் உடைத்தெறிந்து செல்லும். இக்கதையும் என் எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கியது. இக்கதையில் அவள் வேசியாக இருந்தாலும் அவளுக்கென சில ஏக்கங்கள் இருக்கிறது, பலரும் அவளிடம் உடல் தேவைக்கு அணுகியிருக்கும் தருணங்களில், அவள் மட்டும் எப்படி வேசி ஆனாள்?,அவளின் அதிகபட்ச எதிர்பார்ப்பே ஒரு ஆறுதல் மட்டுமே! உயிரற்ற எத்தனையோ உடல் (விருப்பமில்லாத உடலுறவு) அவளிடம் உல்லாசம் கொண்டிருந்தாலும், அவள் உயிர் உள்ள ஒரு முத்தத்திற்காக ஏங்கினாள். அவளை வேசி என்று என்னால் கூறமுடியவில்லை. தான் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் காத்து முன்னிலையில் தனித்து நிர்கிறாள். அவன் அவளுக்கு துணையாய் இருந்ததன் கூலியாக கடைசி நல்ல இரவு அவளின் உடலை கேட்க! எவன் எவனுக்கோ தந்த அவ்வுடலை இவனுக்கு எப்படி தர மறுப்பாள்?

    இது கதையாக இருந்தாலும் அவளின் இயல்புகளும், அவள் எங்கே போயிருப்பாள் என்னும் கேள்வியும், ஆழ்ந்த எண்ணமும் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. ஒரு கதை படித்து முடித்தவுடன், அதை பற்றிய எண்ணங்கள் வாசித்தவனிடத்தில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த விதத்தில் இக்கதை உயிர் பெற்றது. கதைக்கும், அவளுக்கும், அவர்களுக்கும் எழுத்து வடிவில் உயிர் தந்த பி.ரானாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  5. Gowtham Veeramuthu
    June 10, 2024 at 4:42 pm

    கதைகள் ஆரம்பித்து முடிப்பதற்குள் இடையில் அதன் முடிவை கூறிவிடலாம். சில கதைகள் நாம் நினைப்பதையெல்லாம் உடைத்தெறிந்து செல்லும். இக்கதையும் என் எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கியது. இக்கதையில் அவள் வேசியாக இருந்தாலும், அவளுக்கென சில ஏக்கங்கள் இருக்கின்றன. பலரும் அவளிடம் உடல் தேவைக்கு அணுகியிருக்கும் தருணங்களில், அவள் மட்டும் எப்படி வேசி ஆனாள்? அவளின் அதிகபட்ச எதிர்பார்ப்பே ஒரு ஆறுதல் மட்டுமே!

    உயிரற்ற எத்தனையோ உடல்கள் (விருப்பமில்லாத உடலுறவு) அவளிடம் உல்லாசம் கொண்டிருந்தாலும், அவள் உயிருள்ள ஒரு முத்தத்திற்காக ஏங்கினாள். அவளை வேசி என்று என்னால் கூற முடியவில்லை. தான் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் காத்து முன்னிலையில் தனித்து நிற்கிறாள். அவன் அவளுக்கு துணையாக இருந்ததன், கூலியாக கடைசி நாள் இரவில் அவளின் உடலை கேட்கின்றான்! எவன் எவனுக்கோ தந்த அவ்வுடலை இவனுக்கு எப்படி தர மறுப்பாள்?

    இது கதையாக இருந்தாலும், அவளின் இயல்புகளும், அவள் எங்கே போயிருப்பாள் என்பதான கேள்வியும், ஆழ்ந்த எண்ணமும் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கதை படித்து முடித்தவுடன், அதை பற்றிய எண்ணங்கள் வாசித்தவனிடத்தில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த விதத்தில் இக்கதை உயிர் பெற்றது. கதைக்கும், அவளுக்கும், அவர்களுக்கும் எழுத்து வடிவில் உயிர் தந்த பி.ரானாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...