தமிழ்ப் புனைவிலக்கியத்தில் தன்னுடைய தனித்துவமான நடைக்காகவும் மீபொருண்மை சித்திரிப்புக்காகவும் முக்கியமான எழுத்தாளராக லா.ச.ராமமிருதம் கருதப்படுகிறார். மலேசியச் சூழலில் லா.ச.ராமமிருதத்தின் மனமொழியும் சிந்தனையும் முயங்கும் எழுத்துநடை சார்ந்த பாதிப்பை எழுத்தாளர் சீ.முத்துசாமியின் எழுத்துகளில் காணலாம். அதைத் தவிர, லா.ச.ராமமிருதத்தின் எழுத்துகள் குறித்த வாசிப்பும், கலந்துரையாடலும் மலேசிய வாசகச்சூழலில் அதிகமும் இடம்பெறவில்லை.
தமிழாசியா மாதந்தோறும் நடத்தி வரும் சிறுகதை கலந்துரையாடல் சந்திப்பில் லா.ச.ராமமிருதத்தின் கதைகள் குறித்த உரையாடல் அறிவிக்கப்பட்டவுடனே, தான் எதிர்கொண்ட வாசகரொருவரின் கேள்வியை எழுத்தாளர் ம. நவீன் குறிப்பிட்டார். ”ஏன் பழைய எழுத்தாளர்களையே அதிகம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறீர்கள்?” என்ற கேள்வியை அவ்வாசகர் எழுப்பியிருக்கிறார். அதற்கு லா.ச.ராமமிருதத்துடைய எழுத்துகளை வாசித்திருக்கிறீர்களா எனக் கேட்டு அவருக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் மூவரிடமும் இதே கேள்வியைக் கேட்டுப் பார்க்கச் சொன்னதாகவும் ம. நவீன் குறிப்பிட்டார். அந்தச் சுவாரசியமான பரிசோதனையில் அவ்வாசகர் உட்பட அவரின் எழுத்தாளர் நண்பர்களும் லா.ச.ராவை வாசித்திருக்காததைக் குறிப்பிட்டதாகச் சொன்னார். அதன் மூலமாகவே, லா.ச.ராமமிருதத்தின் படைப்புகள் குறித்த வாசிப்பும் உரையாடலும் எந்தளவு இருக்கிறதென்பதை அறியலாம்.
நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான லா.ச.ராவின் எழுத்துகளையொட்டி விதந்தோதல்களும் முற்றான புறக்கணிப்புகளும் இன்னொரு விவாதத்தளத்தில் நடந்து கொண்டிருப்பதையும் ம. நவீன் கலந்துரையாடலின் தொடக்கத்திலே குறிப்பிட்டார். அவருடைய முக்கியமான படைப்புகளை ஒட்டிய வாசிப்பும் கலந்துரையாடலும் ஒரு நவீனத் தமிழிலக்கிய வாசகனக்கு முக்கியமானது. அவருடைய ‘பச்சைக் கனவு’, ‘ஜனனி’, ‘பாற்கடல்’, ‘ராஜகுமாரி’ ஆகிய நான்கு சிறுகதைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
‘பச்சைக் கனவு’ சிறுகதையில் பத்து வயதுடன் புறவுலகத் தொடர்பான பார்வையை இழந்தவன் தான் கடைசியாகக் கண்ட பச்சை நிறத்துடன் தன் அந்தரங்கமான உலகில் உணரப்படும் எல்லாவற்றையும் தொடர்புபடுத்திக் கொள்வதோடு கதை தொடங்குகிறது. வெய்யில், நிலவு என எல்லாவற்றையும் பச்சை நிறத்துடன் பொருத்திப் பார்க்கும் அசட்டுத்தனமான பிடிவாதத்துடன் இருப்பவனை மனைவி எரிச்சலுடன் பொறுத்துக் கொள்கிறாள். அவனுடைய வாழ்வின் முற்பகுதியில் முதல் மனைவியின் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போன குற்றவுணர்வின் வெளிப்பாடாகவே எல்லாவற்றையும் பச்சை நிறத்துடன் தொடர்பு படுத்திக் கொள்கிறான் என அறிய முடிந்தது. ஆனால், சிறுகதை முழுக்கவே பச்சை நிறம் குறிக்கும் மையமான உணர்வுநிலை அல்லது உருவகம் என ஒன்றை அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் மகிழ்ச்சி, தனிமை, காமம், குற்றவுணர்வு என மாறி உருவகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. விவாதத்தில் பங்கேற்ற சுதாகர், சல்மா ஆகியோரும் பச்சை நிறம் இயலாமையினால் எழுந்த குற்றவுணர்வின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டனர். கதைசொல்லியின் புறவுலகத் தொடர்பென்பது விழியிழந்த பத்து வயதுடன் நின்றுவிடுகிறது. அதனால், அவனுடைய குறுகிய அனுபவத்துக்குள் எஞ்சியவற்றையே அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடரச் செய்து வாழ்க்கையைக் கடக்க முயல்கிறான் என லாவண்யா, மோகனா, புஷ்பா குறிப்பிட்டனர். லா.ச.ராவின் மொழியில் இருக்கும் இறுக்கமான நடையும் படிமங்களும் சேர்ந்து அதனை வாசித்து உள்வாங்குவதில் இருந்த சிக்கலை ரேவின் குறிப்பிட்டார். ‘பச்சைக் கனவு’ உட்பட லா.ச.ராமமிருதத்தின் பல கதைகளில் ஆற்றலிலும் உணர்வுநிலையாலும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் தீவிரமிகுந்தவளாகக் காட்டப்படுவதை ம. நவீன் குறிப்பிட்டார். விழியிழந்த பத்து வயது சிறுவனுக்கே உரிய அசட்டுத்தனத்துடனே தன்னுடைய இருண்ட வாழ்நாளைப் பச்சை வண்ணத்துடன் பொருள்படுத்திக் கொள்ள முயன்று தோற்றுப் போகும் ஒருவனின் கதையாக இக்கதையைத் தான் உள்வாங்கி கொண்டதைக் குறிப்பிட்டார். மெய்யான உலகத்தின் எந்தச் சவாலை எதிர்கொள்ளவோ தன்னைச் சுற்றி இருக்கும் மனைவி உட்பட பலரின் அணுக்கத்தையும் உணர முடியாதவனாகவே கதைசொல்லி இருக்கிறான் என்பதைக் குறிப்பிட்டார்.
அடுத்தக் கதையான, ‘ஜனனி’ சிறுகதை குறித்த விவாதத்தில், உலகத்தைப் படைத்து அருள்வதாகச் சொல்லப்படும் பராசக்தி மனித உடலில் பிறப்பெடுக்கும் மாயயதார்த்தவாதச் சித்திரிப்புடனே கதை தொடங்குகிறது. இந்து சமயப் புராணங்களில் நீதியை நிலைநாட்டவும் சாபத்தின் கழுவாய் தேடவும் பூமியில் தேவர்களும், தெய்வங்களும் அவதரிக்கும் கதையாடல்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், எவ்விதக் காரணமுமற்று மனித உடலின் வாயிலாகப் பிறப்பெடுக்கும் விருப்பம் மட்டுமே கொண்டு ஜனனியாகப் பிறப்பெடுக்கும் பராசக்தியை உண்மைக்கு நெருக்கமாக லா.ச.ரா படைத்திருக்கிறார். பிறப்பின் போதே ,கணவனைப் பிரிந்திருக்க நேர்ந்த பெண் தன் கள்ள உறவினால் பிறந்த குழந்தையைக் கொல்லவும் துணிகிறாள் என்பது காமம் என்னும் பசியின் கொடூரத்தைக் காட்டுகிறது. பின்னர், ஜனனியைத் தத்தெடுக்கும் ஐயரின் மனைவி முதியவரொருவருக்கு நான்காம் மனைவியாக வேறுவழியின்றி வாழ்க்கைப்பட்டவளாக இருக்கிறாள். அந்த நிலையே அவளுள் கசப்புணர்வாக மாறி எரிச்சலாக வெளிப்படச் செய்கிறது. இந்த இரண்டு பாத்திரங்களின் வாயிலாக, மனித உடல் கொள்ளும் காமத்தின் வெவ்வேறு முகங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பின்னர், ஜனனி உணரும் காமம் என்கிற அந்தரங்கப்பசி உடலில் விளைவிக்கின்ற வன்முறையுடன் இந்த உணர்வுநிலைகளும் சேர்ந்தே அவளைக் கணவனைக் கொல்லவும் செய்கிற மனத்திரிபுக்கு ஆளாக்குகின்றதெனலாம். இந்தக் கதையைப் பற்றி சொல்லும் போது தெய்வமே பெண்ணாகப் பிறப்பெடுத்தாலும் அடையக்கூடிய பாடுகளை மிக அழகான மொழியில் வெளிப்படுத்தப்பட்டிருந்தததாகச் சண்முகா குறிப்பிட்டார். மனிதப் பிறவியெடுத்த தேவியின் திருவிளையாடல்களைக் காட்டுகின்ற வகையில் தன்னைச் சார்ந்தோர்க்கு நன்மையளித்தல், சித்தர் பாணியுடனான நிறைவென கதைக்கு ஒவ்வாதப்பகுதிகள் இருப்பதை மோகனா சுட்டிக்காட்டினார். புனிதம் ஏற்றப்பட்ட தெய்வ உருவகத்தைத் திருமண உறவை மீறி பிறக்கும் குழந்தையின் பிறப்பில் அவதரிக்கச் செய்யும் துணிச்சலான சித்திரிப்பை லா.ச.ரா செய்திருக்கிறார் என ரேவின் குறிப்பிட்டார். ‘காதுகள்’ நாவலின் மையப்பாத்திரமான மகாலிங்கம் தன் காதுகளில் கேட்கும் அந்தரங்கமான உளவியல் பாதிப்புடன் கூடிய குரலைப் போலவே ஜனனி தன் உடல் விழைவை அறிந்து கொண்ட பிறகான சித்திரிப்புகளைக் காண முடிந்ததாக லாவண்யா குறிப்பிட்டார். தெய்வத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் இறைப்புனிதத்தன்மையைப் பெண்ணாகப் பிறப்பெடுக்கச் செய்து அவள் உணரும் அந்தரங்கமான விழைவுடன் சித்திரித்துத் தகர்க்க செய்த முயற்சியாக இக்கதையைக் கண்டதாக இளம்பூரணன் குறிப்பிட்டார். ஜனனி சிறுகதையைப் பற்றி ம. நவீன் குறிப்பிடும் போது, லா.ச.ராமமிருதத்தின் புனைவுகளில் தன் சமூகம் மீதான விமர்சனக் கருத்துகள் இல்லையென்பதைக் குறிப்பிட்டார். அவர் சார்ந்த சமூகத்தின் மதிப்பீடுகளை எந்தவிதத்தில் கேள்வியெழுப்ப அவர் முயன்றதே இல்லை. ஆனால், அதே சமயம் இந்தக் கருத்தைத் தீவிரமாய்ப் பற்றிக் கொண்டு அவரை முடிவு செய்ய வேண்டியதில்லை.
தாய்ப்பால் அருந்தவே பிறப்பெடுக்கும் ஜனனி பிறப்பிலே தாயின் குரூரத்தைக் காண்கிறாள். அவள் தத்தெடுக்கப்படும் வீட்டிலும் அவளின் விழைவு நிறைவேறாமல் போகிறது. அவள் உணரக்கூடிய பாலியல் விழைவு நஞ்சான ஆசையாக மாறக்கூடிய சாத்தியத்தையும் உணர்திருப்பதால் மனக்கொந்தளிப்பு அடைகிறாள். அதை போல, ஜனனி அடையக்கூடிய உக்கிரமான மனவெழுச்சியுடன் கதை நிறைவடைந்துவிட்டதாகத் தானுமெண்ணியதாகவும் அதன் பின்னாலிருக்கும் சித்திரிப்புகள் தேவையற்றிருந்ததைக் குறிப்பிட்டார்.
அடுத்த கதையான ‘பாற்கடல்’ சிறுகதையில் கூட்டுக் குடும்பமொன்றில் வாழ்க்கைப்படும் பெண்ணொருத்தியின் அந்தரங்கமான வெளி பறிக்கப்பட்டுக் குடும்பமென்னும் அதிகார அமைப்பில் ஓராளாக மாற்றப்படுவதைப் பேசுகிறது. அந்தக் குடும்ப அமைப்பில், மேல்நிலையில் நைவேத்தியங்கள் பெறும் தெய்வத்துக்கு நிகர் வைத்துப் பேசப்படும் பாட்டியின் நிலையை உயர் நிலையாக வைப்போமேயானால் அதனை அடையும் பழகிப்போன வெவ்வேறு நிலையிலான அதிகார அடுக்கைச் சென்றடையும் சூழலையே கதை பேசுவதாகச் சண்முகா குறிப்பிட்டார். எவ்வகையிலும் தேவையற்றதாகக் எண்ணப்படும் அதிகார அமைப்புக்குள் மற்றவர்களையும் ஓரங்கமாக ஆக்கும் பொருட்டுச் செய்யப்படும் வன்முறையைக் கதை பேசுவதையும் குறிப்பிட்டார். அதே சமயத்தில், இந்தக் குடும்ப அமைப்பு மீதான எவ்வித விமர்சனத்தையும் கதைக்குள் நேரடியாக வைக்காமல் அதனைப் பெண் பாத்திரங்கள் பொறுத்துப் போவதாக வரும் சித்திரிப்புகளை விமர்சனத்துடன் அணுக வேண்டியிருந்ததை மோகனா, சாலினி ஆகியோர் குறிப்பிட்டனர். ம. நவீனும் தன்னுடைய பார்வையை முன்வைக்குமிடத்தில் விமர்சனத்துக்குரிய குடும்ப அமைப்பைக் கேள்வி கேட்காமல் லா.ச.ரா கடந்துவிட்டதைக் குறிப்பிட்டார். கதையின் அதிகார அடுக்கின் உயர்பீடத்தில் அமர்ந்திருப்பவள் கணவனின் தாய் என்பதால் ஒரு ஆணாதிக்க அமைப்பாகவே அதனைக் காண முடிகிறது. அந்தச் சூழலில், குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரின் துயரையும் இழப்பையும் உணர்ந்தவளாகவே கதையில் வரும் மாமியார் படைக்கப்பட்டிருக்கிறாள். இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளவும் பழகிக்கொள்ளவுமே மற்றவர்களை வெவ்வேறு வழிகளில் நம்ப வைக்க முயல்கிறாள். பெண்பாத்திரங்களின் வாயிலாக ஆணாதிக்க அமைப்பை நியாயப்படுத்த முயலுவதாகவே கதையைக் காண முடிகிறதென்றும் குறிப்பிட்டார்.
இறுதி கதையான, ‘ராஜகுமாரி’ சிறுகதை சிதறடிக்கப்பட்ட வடிவத்தில் உக்கிரமான மனமொழியோட்டத்தாலும் புரிந்து கொள்வதற்குச் சிரமப்பட்டதைப் பலரும் குறிப்பிட்டனர். ‘ராஜகுமாரி’ கதையில் ஒரு நடுத்தர வயது பெண் தன் கணவனுக்காகக் கிணற்றருகே அந்தி சாயும் பொழுதில் காத்திருக்கிறாள். வீடு திரும்ப உத்தேசம் ஏதுமின்றி அல்லது தொலைந்துவிட்டவனையோ அல்லது திரும்ப வராதவனுக்காகத்தான் அவள் காத்திருக்கிறாள் எனத் தெரிகிறது. அந்தி மயங்கி இருள் பரவும் வேளையில் தன்னுள் எழும் காமம் எழுப்பும் மனத் தவிப்பைப் பலவாறாக எண்ணி மருகுகின்றாள்.
அந்த மனத்தவிப்பைக் கவித்துவமான மொழியில் உயர் மனவெழுச்சியாக லா.ச.ரா எழுதியிருக்கிறார் எனலாம். தனக்குள் எழும் அந்தத் தவிப்பைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள், இயற்கை நிகழ்வுகள் மேலேற்றி உருவகப்படுத்தி அவளது துயரைக் காட்டுகிறார். சங்கக்காலக் கவிதையில் தலைவனைப் பிரிந்த தலைவி இரவு வேளையில் தனக்குள் கேட்கும் மெல்லோசையாக அவளுக்குள் சொட்டும் ஓசை கேட்கிறது. கிணற்றருகே காத்திருந்தவளின் மனத்தை இன்னுமே கவித்துமாக்குகின்ற வகையில் படிமக்கதையொன்றைக் கதையின் உள்ளிழையாக இணைத்திருக்கிறார். அந்த ஊர் கொடும் வறட்சிக் காலக்கட்டத்தில் சிக்கியிருந்த பொழுதில் பாலியல் தொழில் புரிந்த பெண்ணொருத்தி ஊர் ஆண்களின் கல்லடிகளிலிருந்து தப்பியோடும் போது அவளை இவ்வீட்டுக்குள் இழுத்துச் சென்று அடைக்கலமளிக்கிறாள் இவ்வீட்டு எசமானி. அவள் செய்து கொண்டிருக்கும் பாலியல் தொழிலால் அசூயை அடைகின்றவள் கேட்கின்ற கேள்விகளுக்குக் காமத்தை நீருடன் இணைத்து மெய்ம்மை போன்ற மொழியில் பதில் தருகிறாள். காமம் நீருடன் தொடர்புபடுத்தப்படுகிறது. முற்றிலும் துணிந்தவர்களுக்குக் கடல் முழங்கால் ஆவதைப் போல காமமும் வசப்படுமென்கிற மாதிரியான மொழியில் பதில் சொல்கிறாள். அப்பகுதியை உருவகமான கதையாகவே எண்ண முடிகிறது. அவளின் பதில்களைக் கேட்டு அரைமயக்கத்திற்கு எசமானி செல்கிறாள். தன் சேலையைக் களைந்து வீட்டுக் கிணற்றில் குதித்து நீராக மாறி ஊரெல்லாம் நிரம்புகிறாள். நீராக மாறியவள் காவேரியன்னையாக ஊராரால் வணங்கப்படுகிறார்கள். ஆழத்தில் உறைந்துவிட்ட கிணற்று நீரைக் காண்பவளின் வாயிலாக அவள் உள்ளுக்குள் உறைந்திருக்கும் காமம் என்னும் உணர்வின் வாதையையும் கதை பேசுகிறது.
அவளின் மீதான வெறுப்பு தந்தையான கிழவருக்கு இருந்திருக்க வேண்டும். அந்த வெறுப்பையே பிள்ளைகளிடம் காட்டுகிறார். அவளுடைய மகளை அறைகிறார். அன்றாடம் கேட்டு அலுத்த வசையும் வெறுப்பும் இன்று பொருளற்றுப் போகிறது. அவரும் அந்த இறுக்கத்தை மகளிடம் வெண்புறா விளையாட்டின் மூலம் கடக்கிறார். இந்த விளையாட்டையும் அவள் கண்டு புன்னகைக்கத்தான் செய்கிறாள். அவளின் மனத்தவிப்புத்தான் ஒலியாக, இசையாக, இருளாக, ஒளியாக மாறி மாறி அவள் அலைகழிவதையும் இருளுக்குள் தஞ்சம் புகுவதையும் கதை மிக மிகையுணர்ச்சியான மொழியில் சொல்கிறது. இந்தக் கதையையொட்டிக் கூடுதலாக ம.நவீன் குறிப்பிடும் போது கதையில் அமைந்திருக்கும் நாட்டார் தொன்மத்தைப் பற்றி சொன்னார். நாட்டார் தொன்மங்களில் அநீதிக்குள்ளாகும் பெண்கள் தெய்வங்களாகும் சித்திரம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ‘ராஜகுமாரி’ கதையிலும் அப்படி தானே கிணற்றில் விழுந்து தெய்வமாகும் காவேரி அன்னையின் சித்திரமிருப்பதைச் சொன்னார்.
லா.ச.ராமமிருதத்தின் நான்கு கதைகளும் சிந்தனையும் எண்ணமும் பயணிக்கும் தாவல் மொழியினையே நடையாகக் கொண்டிருக்கின்றன. அத்துடன் புறவுலகச் சித்திரிப்புகள், உரையாடல்கள் ஆகியவற்றையும் சற்றே மங்கலாகவே சித்திரிக்கின்றன. நவீனத்துவத்தின் கச்சிதமும் வடிவத்துக்கும் பழகிப்போன வாசகரின் வாசிப்பு இந்த வடிவம் திகைப்பை அளிக்கிறது. அக்கதைகள் அளிக்கும் மனவெழுச்சியையும் கதையாடலையும் பொருத்திப் பார்த்து வாசிக்கும் போதுதான் அவற்றுக்கான நுழைவு சாத்தியப்படுகிறது. மேலும், வெவ்வேறு பார்வைகள் கொண்ட வாசகர்களுடனான கலந்துரையாடலுமே இம்மாதிரியான சிறுகதைகளை வாசித்துப் புரிந்து கொள்வதற்கான வாயில்களை அளிக்கிறது.
லா.ச.ராமமிருதத்தின் படைப்புகளை வாசிக்கும் பயிற்சி, என்பது நவீனத் தமிழிலக்கியத்தின் சாரமான பகுதியொன்றை அறிந்துகொண்ட உணர்வைத் தரக்கூடியது எனலாம்.