ஒலியென எழுவது ஞானமே

மொழியைச் சுருதி எனச் சொல்லும் வழக்கம் நம் மரபில் உண்டு. கம்பராமாயணத்தில் சுருதி என்ற சொல் வேதத்தைச் சுட்டவும், மொழியைச் சுட்டவும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமூலர் ‘சுருதிச் சுடர்கண்டு சீற்ற மொழிந்து’ எனச் சுருதியைச் சொல் அல்லது ஒலி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறார். சமஸ்கிருத அகராதியை உருவாக்கிய மேக்ஸ் முல்லர் சுருதி (Shruti) என்ற சொல்லுக்குக் ‘காதால் கேட்கப்படக்கூடியவை, கவனிக்கப்படக்கூடியவை’ (hearing, listening) எனப் பொருள் தருகிறார். கேட்கப்படக்கூடிய அனைத்தும் சுருதி என்ற சொல்லிலேயே குறிப்பிடப்படுகின்றன. பரதநாட்டியத்தில் சிருங்காரத்திற்கு (காதில் அன்பின் மொழியில் கூறுவதால்) சுருதி என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இசையில் அதன் அளவைச் சுட்ட சுருதி என்கின்றனர். சமஸ்கிருதத்தில் வம்பு பேசுவதற்கும் (வாயால் பேசப்படும் அலர்) சுருதி என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர்.

சுருதி என்ற சொல்லை மொழியென்றும், ஒலியென்றும், இசையென்றும், நாட்டியமென்றும் இத்தனை அர்த்தத்தில் விளக்கியவர்கள் கவிஞர்கள். தத்துவவாதிகள் அதனை முன்னறிவு என்கின்றனர்.

தத்துவத்தில் சுருதி என்ற சொல் காதால் கேட்கப்படக்கூடிய, காது வழியாக நீடிக்கப்படக்கூடிய ஒன்று என்ற அர்த்தத்திலிருந்து முன்னறிவு/மூல நூல்/ மூலஞானம் (Original Thought) என அர்த்தம் கொள்கிறது. ப்ரத்யக்‌ஷத்தை (அக்‌ஷம் – கண், ப்ரத்யக்‌ஷம் – கண் முன்) சுருதி என்னும் முன்னறிவு மூலமே அறிய முடியும். நம் ஒவ்வொரு சிந்தனை சரடும் அதற்கு முந்தய சிந்தனையின் தொடர்ச்சியே அல்லது நாம் முன்னறிந்த சிந்தனையிலிருந்து உருவாக்கப்படக்கூடியதே எனத் தத்துவம் சொல்கிறது.

சுருதி என்ற சொல்லுக்கு உரிய இத்தனை பொருளையும் நம்மிடம் குழந்தைகள் விளக்குவதைக் காணலாம். குழந்தையின் வழியே கவிஞனும் அதனை அடைந்திருக்கக் கூடும்.

சரி, அப்போது குழந்தைக்கு எது முன்னறிவு? மண்ணில் புதிதாய் பிறக்கும் குழந்தை எந்த முன் ஞானத்துடன் பிறக்கிறது என்ற கேள்வியை வகுப்பில் எழுப்பி ஜெயமோகனே பதிலையும் சொன்னார். ‘பிறந்த குழ்ந்தைக்கு மொழியே முன்னறிவு’. ஒரு குழந்தை மொழி வழியே உலகை முதலில் அறிகிறது. குழவி பிறந்து மண்ணை அறியும் முன்னரே மொழியை அறிந்துவிடுகிறது. அது கருவில் வளர்ச்சிக் கொள்ளும் போதே மொழியை அறிந்ததாகிறது. அம்மா, அப்பா, உறவு, சுற்றம் என்பதை ஒரு குழந்தை அறிய இன்னும் பல நாட்கள் ஆகிறது. மேல் சொன்ன அனைத்துப் பொருள் சுருதி என்ற ஒற்றைச் சொல்லே எனக் குழந்தையின் மூலம்தான் அறிய முடியும்.

ஏப்ரல் 12, 2024 இரவு 8:53 மணிக்குக் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் கிருபா பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை கருப்பையை விட்டு வெளியே வந்ததும் முதலில் அவளிடம் எழுந்தது அழுகை என்னும் ஒலியே. அந்த ஒலியைக் கருவில் வளர்ந்த குழவியே முன்னறிந்திருக்கிறது.

நான் கதவு இடுக்கு வழியாக அதனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீலம் ஏறிய ஒரு சிற்றுடலை நர்ஸ் தூக்கி வந்து அதற்கான ஒரு சிறு படுக்கையில் வைத்தார். கீழே வைத்ததும் ‘ப்ர்ரீ…’ என வீரிடல். அன்னையின் பனிக்குடம் என அமைந்திருந்த இறகு மெத்தையிலிருந்து தன்னை இறக்கி வைத்ததாகச் சோகம். இத்தனை நாள் தாயின் பனிக்குடத்தில் நீட்டி நெளித்து உறங்கிய வெம்மைக்கான ஏக்கம். வெளியில் குளிர்சாதன அறையில் குளுமை வேறு எரிச்சலைக் கூட்டியது. அத்தனையும் சேர்ந்து ஒற்றை வீரிடல் மட்டுமே சாத்தியம் என அதன் ஞானம் உணர்ந்திருந்தது. அதனால் அதனைத் தன் பலம் கொண்ட மட்டும் செய்தது.

நீல தவளைக் குஞ்சு போலிருந்த ஓருடல் ‘இயேன்… இயேன்…’ என இடைவிடாது கூவிக் கொண்டே இருந்தது. காற்றில் எழுந்த தன் குரலைத் தானே கேட்டு மனம் மகிழ்ந்து மீண்டும் அலையெழுப்பி விளையாடிக் கொண்டிருந்தது. அதற்குள் குழந்தைக்கான மருத்துவர் வந்து குழந்தையைப் பரிசோதித்து வெளியே எடுத்து வந்து என் கைகளில் கொடுத்தார். என்னிடம் கொடுக்கும் போதே வீரிடல் தணிந்து என் கைகளில் தவழ்ந்தாள். இவளை யாரென என் விழிகள் துழாவிக் கொண்டிருந்தன.

குழந்தையைப் பின்னந்தலையில் ஒரு கை வைத்தும், இடுப்பு பகுதியில் ஒரு கை வைத்தும் பிடிக்க வேண்டும். அதை நான் முன்னரே என் தங்கை குழந்தையின் வழி பழகியிருந்தேன். மேலும் டி. வெங்கட்ராவ் பாலு, திருமதி சூர்யகுமாரி எழுதிய ’குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை’ புத்தகத்தில் இதனை விளக்கப் படங்களுடன் குறிப்பிட்டிருந்தனர். அவையணைத்தையும் மீறி அக்கணத்தில் வந்த தன்னியல்பான ஒரு பாதுக்காப்பு அணைப்பே என்னை வழிநடத்தியது. கைகளில் ஏந்தி அந்தப் பிஞ்சு உடலையே கண்களால் கொஞ்சிக் கொண்டிருந்தேன். ஒருமையில்லாத ஓருடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கும் வலையும் ரப்பர் போன்றது. எலும்புகள் அனைத்தும் கொண்டு கூட்டி எண்ணி விடலாம் என்றே என் கைகளில் தனித்தனியாகப் பட்டுக் கொண்டிருந்தன. மொத்த உடலிலும் நிலைத்திருந்தது அதன் விழிகள் மட்டும் தான். காட்சி அதனுள் முழுமையாக உருபெற ஒரு மாத காலம் ஆகும் எனப் படித்திருந்தேன். அதன் கண்கள் அறிவது சில வண்ண வேறுபாடுகளை மட்டும் தான். ஆனாலும் அதன் கண்கள் பிறந்ததும் வெறிக்கத் தொடங்கிவிடுகின்றன. அந்தக் கருமணி முத்துகள் எதை நம்மிடம் நோக்குகிறது எனப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். புவியில் மழலை உடலன்றி அற்புதங்கள் வேறில்லையென நம் குழந்தையை அவை உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கிருபாவையும் குழந்தையையும் இரவு பதினொரு மணிக்கெல்லாம் அறைக்கு மாற்றி விட்டனர். நர்ஸ் என்னிடம் வந்து, “சார், குழந்த ராத்திரிலாம் தூங்காது. இரண்டு மணிக்கு ஒருக்கா பால் குடுக்கணும் நீங்க பாத்துக்கோங்க” என்றார்.

இரவு கிருபாவுடன் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்பதால் நான் இருக்கிறேன் எனக் கூறிவிட்டேன். பெரியவர்கள் எல்லோரும் வீடு திரும்பிவிட்டனர். ஓர் அசட்டு நம்பிக்கைதான் நான் பார்த்துக் கொள்வேன் என. ஆனால் பக்கத்தரையில் தூங்கிக் கொண்டிருந்த நர்ஸை எழுப்பி “பாப்பாவுக்கு ஏசி ரொம்ப குளிருது, நீங்க நல்லா கதகதப்பா இருக்க மாதிரி அவளைச் சுற்றி துணியால போர்த்திவிட்டீங்கல்ல அதை மாறி பண்ணுங்க” என்றேன். “பாப்பா பால உறிஞ்ச மாட்டீங்கிறா, நீங்க சொன்ன மாறி தான் குடுக்க வச்சேன். ஆனாலும் குடிக்க மாட்டீங்கிறா வந்து பாருங்க” இப்படி மணிக்கு ஒரு முறை ஒரு பிரச்சனை என அவரைத் தொந்திரவு செய்தேன். அவர் எதற்கும் சலிக்காமல் வந்து உதவினார்.

இரவெல்லாம் குழந்தையைத் தோளிலும் மடியிலும் எனக் கிடத்திக் கொஞ்சிக் கொண்டேயிருந்தேன். ஆண், குழந்தையை அறிவது அப்படி கொஞ்சல் மூலமாகத்தான் என ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அது எத்தனை உண்மை என மருத்துவமனையிலிருந்த மூன்று நாட்களில் அறிந்தேன். மூன்று இரவு நான் தூங்கவில்லை. பகலில் பார்த்துக்கொள்ள எல்லோரும் வந்தாலும் தூங்க இயலாது. மூன்று இரவும் பகலும் பித்தெனும் தீவிரம் நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் குழந்தையை என் உடலோடு வைத்து அறிந்துகொண்டே இருந்தேன்.

குழந்தையை மார்போடு அணைத்த கணம் முழுவுடலாலும் அதன் இதய துடிப்பை நம்மால் அறிய முடியும். நம் இடது தோளில் இடும்போது தலையைத் திருப்பி ஒரு சாய்த்து செவிக் கொண்டு அது நம் இதயத் துடிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும். நான் படுத்து என் மேல் குழந்தையை இட்டுக் கொள்வேன். இரவும் பகலும் குழந்தைக்கு இதுவே விளையாட்டு. நாளாக ஆக அவள் என் மேல் ஏற முற்பட்டாள். அது இயலாத போது கூச்சல் மொழியில் அழுகை. பிடிவாதம் என்றால் தூயப் பிடிவாதம் மட்டும் தான். காற்றை அளப்பதன்றி வேறு பணியில்லை. நான் என் வலது கையை அதன் பாதத்திற்குக் கொடுப்பேன். அதனை உந்தி தள்ளி மேலெழும் முயற்சி. என் நாடி வரை எழுந்து வந்தது மேலெழ முடியாமைக் கண்டு கோபம்.

தேவதேவனின் இரவு பகலென கவிதையை நினைத்துக்கொள்வேன்,
காண்பானைக் கவர்ந்து
தன்னோடே இழுத்துக்கொண்டு செல்கிறது
இரவு பகலெனத்
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
செல்லும் ஒரு நடை…
அவன் இதயத்தில் கேட்கிறது
வெல்லும் அதன் தாளம்.

என் மகள் என்னை வெல்வதை அதன் தாளம் வழியாகவே அறிந்து கொண்டேன். ஆனால், பெண்களுக்குத் தங்கள் உயிரியில்பிலேயே குழந்தைகளுடன் ஓர் அணுக்கம் வந்துவிடுகிறது. ஆண்கள் சற்று சிரத்தை எடுத்து அதனைத் தங்களோடு சேர்க்க வேண்டும். குழந்தை கருவிலிருந்த ஐந்தாவது மாதத்திலேயே கிருபா அதனுடன் அணுக்கமாகத் தொடங்கியிருந்தாள். அவள் வாயிலிருந்து எழுவதெல்லாம் குழந்தை பற்றிய பேச்சு மட்டும் தான். வெண்முரசில் ‘வண்ணக்கடல்’ முடித்து சில நாட்கள் ‘நீலம்’ தொடங்காமல் சுற்றிக் கொண்டிருந்தவள் திரும்ப அதனைப் படிக்கத் தொடங்கினாள். மூன்றாவது மாதத்திலிருந்து ஐந்தாவது மாதத்திற்குள் ‘நீலம்’ நாவலை மூன்று முறை வாசித்தாள். “போதும்டி அடுத்த நாவல எப்போ வாசிப்ப?” என நான் கேட்டதற்கு “இதை மட்டும் தான் இன்னும் ஐஞ்சாறு மாசமும் வாசிக்க போறேன்” என்றாள். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு புதிய கண்டடைதல்கள். ஒரு நாள் நடு இரவில் என்னை எழுப்பி, “நவின் நம்ம கொழந்தைய நீ திட்டக் கூடாது பாத்துக்க” என்றாள்.

அரை தூக்கத்தில் “செரி” என்றேன்.

“என்ன தப்பு பண்ணாலும் திட்டக் கூடாது சத்தியம் பண்ணு” என்றாள். எழுந்து பார்த்தாள் ‘நீலம்’ படித்து அழுது கொண்டிருந்தாள். மணி நடு இரவு மூன்றைத் தாண்டியிருந்தது.

கவலையுடன் “தூக்கம் வரலையா?” என்றேன்.

“இல்ல இந்த கிருஷ்ணன் பண்ற தப்பெல்லாம் எவ்ளோ க்யூட்டா இருக்குல்லா. தப்புல தான் கிருஷ்ணன் வளர்ரதே. தப்போட மொத்த உருவமும் தான் குட்டி கிருஷ்ணன். நம்ம குழந்தையும் அப்படி தான். எல்லா குழந்தையும் அப்படி தான். அத நீ கண்டிக்கக் கூடாது” என்றாள். நான் அவளைச் சமாதானம் செய்து மீண்டும் தூங்க முயற்சித்தேன். இப்படி பல இரவுகள். ஒரு வழியாகப் ‘பிரயாகை’ தொடங்கினாள். ஆனால் எட்டாவது மாதத்திற்கு மேல் ‘இந்திர நீலம்’ வாசிக்கத் தொடங்கினாள். இன்று வரை ‘இந்திர நீலத்திலேயே’ மகிழ்ந்திருக்கிறாள். பாப்பா மீன மாதம் ரோஹினி நட்சத்திரத்தில (கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம்) பிறந்திருக்கா என விஷ்ணுபுரத்தின் ஆஸ்தான ஐயங்கார் அனங்கன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். கிருபாவிடம் சொன்னபோது அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டேயிருந்தது. “எனக்குத் தெரியும் இவ நான் படிச்ச நீலம் நாவல் மூலமா பிறந்தவ” என இரவு முழுக்க திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். ‘குட்டி கிருஷ்ணை’ எனச் சொல்லி உச்சி முகர்ந்துக் கொண்டாள்.

ஒவ்வொரு இரவு வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைக் கொஞ்சுவது கிருபாவின் அன்றாடங்களில் ஒன்றானது. நான் கொஞ்சவில்லை எனக் கோவித்துக் கொள்வதும்.

உண்மையில் குழந்தை வயிற்றுக்குள் இருக்கும்போது அதனோடு ஆண்களுக்கு அணுக வருவதே இல்லையோ எனப்படுகிறது. எனக்குக் கிருபாவின் முதுகு வலியும் கால் வலியும் பிரதான கவலையாக இருந்தது. தினமும் இரவு இரண்டு மணி நேரம் யூடியூப் பார்த்து புதிய புதிய மசாஜ் செய்துவிடுவேன். நான் இல்லாத நாட்களில் சைதன்யா வந்திருந்து பார்த்துக் கொண்டாள். கிருபாவின் கர்ப்ப காலங்களில் அவள் என்னைவிட சைதுவிடமே அணுக்கமாக இருந்தாள். சைது திருவண்ணாமலையில் வேலைக்குச் சேர்ந்தபோது இவளுக்குச் சோகம். “போகாதேடி” எனக் குமுறல். “போகதான் வேணுமா?” என ஆதங்கம். அதனால் சைது வேலைக்குச் சென்றதும் தினமும் ஒரு மணி நேரம் கைப்பேசியில் பேசியாக வேண்டும். “என்னடி தினமும் பேசுவீங்க?” எனக் கேட்பேன். “போடா! நாங்க என்னமோ பேசுவோம் உனக்கேன்” என என்னை விலக்கிவிடுவாள்.

எனக்குக் குழந்தை பிறந்த கணத்தில் ஒரு மாண்டூக்யம் (தவளை) வந்து கத்திக் கொண்டிருக்கிறது என்ற எண்ணமே என்னுள் எழுந்தது. உள்ளறையில் கிருபாவின் அலறல் வேறு. ஆனால், மருத்துவமனையிலிருந்த மூன்று நாட்களில் நான் வேறொருவனாக மாறியிருந்தேன். கொஞ்சல் மொழியும் சங்கீதமும் என்னுளிருந்து வரும் என நான் அதற்கு முன் கற்பனை செய்ததில்லை. என்னை நான் முற்றிலும் வேறொருவனாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், அவனை நான் முன்னரே கண்டிருக்கிறேன் அல்லது கண்டடையப்பட்டுச் சொல்லப்பட்டிருக்கிறேன். வீட்டில் சிம்பா வாங்கிய நாட்கள் அவை. நிக்கிதா வீட்டிற்கு வந்திருந்தாள். உள்ளறையில் கிருபாவுக்கும் நிக்கிதாவுக்கும் வெண்முரசு பற்றிய தீவிர விவாதம். நான் வெளியே சிம்பாவுடன் இருந்தேன். நிக்கிதா கோவித்துக் கொண்டாள். நான் அந்நாட்களில் முழுக்க சிம்பாவுடனே இருந்தேன். சிம்பாவிற்குக் கொஞ்சல் வேண்டுமென்றால் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இன்று வரை அப்படி தான். நமக்குச் சலித்தாலும் அவனுக்குச் சலிக்காது, மல்லாக்கப் படுத்து முன்னங்கால்களை மடக்கி கொடுத்துக் கொண்டேயிருப்பான். அதை முடித்து நாம் நிறுத்திக் கொண்டால் நம் முகத்தை நக்கி அவன் அன்பைத் தெரிவித்துக் கொண்டேயிருப்பான். அந்தக் கொஞ்சல் மொழியை நம் கால நேரம் என்னும் சட்டகத்துக்குள் அடக்க முடியாது. சிம்பா இங்கே வந்த நாட்களில் அதிகாலை இரண்டு, மூன்றென எழுந்து நம்மருகே வந்து முகத்தை நக்கத் தொடங்குவான். யோசித்துப் பாருங்கள் பந்து விளையாட்டை, ‘போதும்டே மடியாகிவிட்டது’ எனச் சொல்லும் நாய்கள் உலகில் உண்டா என்ன? அவை நம்மிடம் கோருவது நிபந்தனையற்ற கொஞ்சலை மட்டும் தான். அதையே அவை நமக்குத் திரும்பத் தரும்.

நிக்கிதா என்னைப் பார்த்து, “நவின் நீங்க இப்படிலாம் இருப்பீங்களா?” என்றாள். ஆச்சரியத்துடன் நான் பேசியதை, அவனைக் கொஞ்சியதை மீண்டும் எனக்குச் சொல்லிக் காட்டினாள். என்னிடம் அதனை விளக்கி சொன்னபோது அவன் எனக்கு அயலவனாகவே இருந்தான். ஆனால், அந்த அயலவனை மனம் விரும்பியது. அது எந்த உலகியல் கணக்குகளும், சரி தவறுகளும் தெரியாத தூய ஆவி. அவன் மகிழ்ச்சி குழந்தைகளின், மிருகங்களின் மகிழ்ச்சி போலவே தூயது. அன்று அதை பற்றிக் கொண்டேன். நம்முள் எழும் குழந்தை அது. நமக்கே அயலவனான ஒருவன். ஆனால் அவன் மட்டுமே குழந்தைமை என்னும் இனிய மதுரத்தை அறிந்தவன். குழந்தை பிறந்ததும் விடாபிடியாக இப்படி தான் இருக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

பாப்பாவைக் கையில் தூக்கியபோது ஒரு கைக்குப் பாதியே இருந்தாள். அப்போது சிம்பாவை நான் முதல் நாள் தூக்கி வந்த ஞாபகம். அவன் தாயின் கதகதப்பை மறக்காத முப்பது நாள் பையன் காரில் என் கையின் மேலேயே ஏறி அமர்ந்து கொண்டான். அவன் அரை கை அளவு தான் இருந்தான். இந்த ஆறேழு மாதத்தில் அவன் பத்து மடங்கிற்கு மேல் வளர்ந்து விட்டான். நாயும், குழந்தையும் நம் கண் முன்னே வேகமாகவே வளர்கின்றனர். என் மகளின் முகம் ஒவ்வொரு நாளுமென மாறிக் கொண்டிருக்கிறது. நேற்று பார்த்த ஒருத்தியை இன்று காண வாய்ப்பதில்லை. ஒரு நாள் அதனைத் தவற விட்டால், நம் வாழ்வில் இழந்த ஒரு நாளாகிவிடுகிறது.

கிருபா அம்மா என்னிடம், “நீங்க போங்க நான் பாத்துக்கிறேன்” என்றார். நான் மறுத்துவிட்டேன். நான் கிருபாவிடம் கூட பால் குடிக்க மட்டும் தான் குழந்தையைக் கொடுப்பேன் என விடாப்பிடியாக இருந்தேன்.

குழந்தை பிறக்க போகும் செய்தி அறிந்தததும் அஜியும் தன்யாவும் சென்னையிலிருந்து கிளம்பிவிட்டனர். மறுநாள் காலையிலேயே பாப்பாவைப் பார்க்க வந்துவிட்டனர். அஜி முதலில் பாப்பாவை வாங்க பயந்தான். தன்யா தைரியமாகத் தன் மடியில் இருத்தியதும் அவனும் வாங்கிக் கொண்டான். அவன் என்ன செய்கிறான் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனும் அந்தப் பிஞ்சு உடலையே கொஞ்சிக் கொண்டிருந்தான். “இவ காத பாறேன் பிரிஞ்ச காது… சிலவங்களுக்கு ஒட்டின காதா இருக்கும்” எனக் காட்டினான். “மூக்கு ரெண்டையும் பாரு சின்ன துவாரம்”, “கைய பாரு இவ்ளோ சாஃப்டா” என ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டு தேடிக் கொண்டிருந்தான். மறுநாளே அருண்மொழி அம்மாவும் பார்க்க வந்தார்கள். அம்மாவிற்கு பேத்தியென அவளை காண்பதில் சிறு வருத்தம். தனக்கு வயது கூடிவிட்டதோ என உள்ளுக்குள் பயம் எழுந்திருக்க கூடும். “இவ வளந்து என்னை அத்தைன்னு தான் கூப்பிடணும்” என கிருபாவிடம் உத்தரவிட்டார். பின் யோசித்து, “நல்ல வயசானதும் வேணும்னா பாட்டின்னு கூப்பிடட்டும். இப்ப வேணாம்,” என பள்ளி மாணவர்களுக்கு கட்டளையிடம் ஆசிரியைப் போல் சொன்னார்.

கிருபாவின் வளைகாப்பு மார்ச் 20ஆம் தேதி முடிந்தது. அதற்கு ஒரு வாரம் அடுத்து தேவதேவன் வீட்டில் வந்து தங்கியிருந்தார். ஒரு வாரம் தேவதேவன் கவிதைகளால் மட்டுமே வீடு நிறைந்திருந்தது. அது ஒரு நிறை சகுனம் என எண்ணிக் கொண்டேன். தேவதேவன் வரவிருப்பவளைத் தன் கவிதைகளால் வாழ்த்திக் கொண்டேயிருந்தார்.

கிருபாவின் கர்ப்ப காலத்தோடு நினைவுக்கூறப்பட ஒருவர் இருக்குமானால் அது விஷ்ணுபுரம் வட்டத்தின் ஆஸ்தான மருத்துவர் மாரிராஜ்தான். கர்ப்பம் உறுதியான ஏழாவது நாளே அவளுக்கு பிரசவ கால உபாதைகள் அனைத்தும் நின்றது (தினமும் இருந்த வாந்தி, மயக்கம் அன்று காலையிருந்து எதுவும் இல்லாமல் இயல்பானாள்). நடுஇரவு மூன்று மணிக்கு மாரிராஜை அழைத்துக் கேட்டேன். அவர் அதுவும் பிரசவத்தின் பகுதிதான் கவலை கொள்ள வேண்டாம் என்றார். மறுநாளே தலைச்சுற்றலும், வாந்தியும் தொடங்கியது. இப்படி மொத்த பிரசவ காலத்திலும் அவளுடன் அண்ணனென மருத்துவரென உடன் இருந்தார். மற்றொரு மருத்துவர் ராவ் மருத்துவமனையிலுள்ள ப்ரீத்தி டாக்டர். ராவ் மருத்துவமனைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் விரும்புவது அவரைத்தான் எனக் கண்டிருக்கிறேன். ப்ரீத்தி டாக்டரிடம் கொங்கு மண்டலத்திற்கே உரிய அன்பு மொழி உண்டு. அதே நேரத்தில் மருத்துவரிடம் வருபவர் மேல் கொள்ளும் அதீத அக்கறையும். கிருபா இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்ததுமே “நான் பேர்காலத்தை ப்ரீத்தி டாக்டரிடம் தான் பார்ப்பேன்” என்று சொல்லிவிட்டாள். அவள் வீட்டில் பல முறை சென்னை வரச்சொல்லி கேட்டும் மறுத்துவிட்டாள். கிருபாவின் மேல் அவர்களுக்கும் இஷ்டம். சொல்பேச்சு கேட்டு முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தையிடம் ஆசிரியர் கொள்ளும் அக்கறை அது.

ஏப்ரல் 12 காலையிலேயே மலேசியாவிலிருந்து ம. நவீன் அழைத்து, “என்ன நவின் கொழந்த பொறந்திருச்சா?” என்றார். அப்போது தான் நாங்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தோம். “அண்ணா இப்போ தான் ணா வந்தோம், இன்னைக்கி இல்ல நாளைக்கு பிறப்பா ணா” என்றேன். “இன்னைக்கி தான் பிறப்பா. இன்னைக்கி தான் நான் கூப்டேன்ல” எனச் சொல்லி வாழ்த்தினார். அதற்கு இரு தினங்களுக்கு முன்னே சுனில் கிருஷ்ணன் அழைத்து “உனக்கு பெண் குழந்தை பிறக்குற மாதிரி கனவு கண்டேன். அப்பறம் அது கனவில்ல நீ ஃபோன் பண்ணி சொன்னதா தான் நினைவு. உண்மையா?” என்றார். “இருக்கலாம் அண்ணா எழுத்தாளர்கள் அறிவது எதிர்காலத்தையே” என்றேன்.

பாப்பா பிறந்த பின் அவளைப் பார்க்க குவிஸ் செந்தில், கவிஞர் ஆனந்த்குமார், ஜெயஸ்ரீ, ஆனந்த் சீனிவாசன் மாமா, சுதா மாமீ, மீனாம்பிகை, பிரபு, பவித்ரா, தாமரைக்கண்ணன், அவரது மனைவி தேவா, செல்வேந்திரனின் மனைவி திருக்குறள் அரசி, மகள் இளம்பிறை, ஓசூர் நரேந்திரன் என வந்துகொண்டேயிருந்தனர். தத்துவ வகுப்பை முடித்த கையோடு நித்யவனத்திலிருந்து விக்னேஷ் ஹரிஹரன் பாப்பாவைப் பார்க்க வந்தான்.

அந்த நர்ஸ் வந்து என்னிடம் “இத்தனை பேரா பாப்பாவை பார்க்க” என பொய் கோபம் காட்டினார். “இதுவே கம்மி இன்னும் வந்துட்டே இருப்பாங்க.” என்றேன். “இன்னுமா?” என வாயடைத்து திரும்ப போய்விட்டார்.

மூன்றாம் நாள் வீட்டிற்கு வந்ததும் மேலே என்னறையிலேயே நான் பாப்பாவுடன் தனித்துவிட்டேன். அவளுக்கு நானே ஒவ்வொன்றையும் செய்ய வேண்டுமென எனக்குக் கட்டளையிட்டுக் கொண்டேன்.

பாப்பாவிற்கு எல்லாம் ஒரு சொல் தான். ஒலியென எழும் அது. அதன் அர்த்த தாளங்களைப் பாப்பாவின் ஒலி மாறுபாடுகள் இருப்பிற்கு ஏற்ப நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆய் போய்விட்டேன் என்றாள் “இயேன்…” என மெல்ல ஒலியில் தொடங்கும் கீதம். “இயேன்… இயேங்… ர்ர்ர்ர்… இயேங்…” என எழுந்து விண்ணை நிறைக்கும் ஓசை எழும் வரை ஆய் போகும் வேலை நிகழ்ந்து கொண்டிருக்கும். அவளுக்கு என்னைப் போல் அடிக்குரல் என நினைக்கிறேன். சிவந்த உதடும் நாக்கும் அதன் ஓசையை மேலும் ஏற்றி விடுகிறது. டாக்டர் இவள் பிறந்ததும் முதுகை தட்டி அடிக்குரலில் இவள் அழுததால் நன்றாக இருக்கிறாள் எனச் சொன்னார். அதை அவர் அடிக்காமல் சொல்லியிருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால், அவளை அழ வைக்காமல் நம்மால் இருக்கவே முடியாது. அது அவள் இயல்பின் ஒரு பகுதி.

அவள் குரல் எழுந்ததும் நாம் என்ன வேலையிலிருந்தாலும் உடனே அவளது டயப்பரை மாற்ற வேண்டும். ஒன்னுக்கு இருந்தாலும் இதே தான். பசித்தால் அழுகையின் முதல் ஒலியே உச்ச ஸ்தாயியில் எழும். மதுரை சோமு இருந்திருந்தால் இவள் குரலுக்கு ஈடு கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால், அவரைப் போல் முரட்டுத் தனமான உருகும் பாவம் இருக்கிறதா எனப் பார்த்தேன். முரட்டுத் தனமான பிடிவாதம் மட்டும் தான் உருகல், கனிதல், இறைஞ்சுதல் எல்லாம் இன்னும் உருவாகவில்லை.

’என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்னும் இரங்கல் தொனியை என்னிடம் எதிர்பார்க்காதே எனச் சொல்லிவிட்டாள்.

“மருதமலைய்ய்ய்ய்ய்ய்ய்ய்… மருதமலை…” என்றே ஆரம்பம் ஆகும். உடனே முலையின் காம்பு அவள் வாய்க்குள் சென்றாக வேண்டும். கிருபா கால தாமதம் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும். சில சமயம் பால் குடித்துக் கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவது. சில சமயம் கடித்துச் சப்பி புண்ணாக்கி விடுவது. சில சமயம் முலைக்காம்பைப் பற்றிக் கொண்டு விடாமல் உறங்குவது. பாப்பாவிற்கு முதல் மூன்று நாள் பால் குடிக்க பழக்க வேண்டியதாய் இருந்தது.

சத்தமே இல்லாமல் அப்போது மட்டும் மௌனமாகிக் கொண்டிருந்தாள். தன்னை மறந்து அன்னையின் மடியில் கொள்ளும் அனந்தசயனம் அது. யோகத்தில் என அவள் முகம் மாறி அதை நிகழ்த்திக் கொண்டிருக்கும். பேரமைதியின் உள்ளிருந்து எழும் ஆழ்ந்த மோனம். உறக்கம் என்றும் சொல்லலாம் எனப் பின்னாளில் அவள் அறிந்துகொள்ளக் கூடும். அப்போது அவள் கன்னத்தில் மெல்ல தடவிக் கொடுக்க வேண்டும். பாலைப் பீய்ச்சி அவள் நாக்கு நுனியில் படும்படி செய்ய வேண்டும். பாலின் மணம் நாவு அறிந்ததும் உயிரின் விசை அதனைப் பற்றிக் கொள்ளும். அவள் எத்தனை எளிதாக அதனைப் பழகிக் கொண்டாள் எனப் பார்த்தேன். அதன்பின் பிடிவாதத்திற்கு மட்டுமே குடிக்காமல் இருப்பது பசித்தால் புசிக்க மறவேன் என்பதை உறுதி செய்தாள்.

கொசு கடித்தாலோ, பிற சிறு உபாதைகள் ஏற்பட்டாலோ சிறிய ஆலாபனை மட்டுமே. அவை உடனே கண்டு கேட்டு சரி செய்யப்பட்டிருக்கும். இரவுகளில் அவளே பாடும் வழக்கமும் உள்ளது. நானும் கிருபாவும் உறங்கியிருப்போம். திடீரென்று குழந்தையின் சத்தம் கேட்டு விழிப்பேன். மேலே சுவற்றை நோக்கி அவளுக்கு அவளே தனியாகப் பாடிக் கொண்டிருப்பாள்.

தொப்புள் கொடி விழுந்ததும் பாப்பாவைத் தலைக்குக் குளிப்பாட்ட வேண்டும். “நானே குளிப்பாட்டுகிறேன். யாரும் வேண்டாம் கிருபா மட்டும் உடனிருக்கட்டும்” எனச் சொல்லிவிட்டேன். அதற்கு டி. வெங்கட்ராவ் பாலு தன் புத்தகத்தில் வழி சொல்லியிருந்தார். தண்ணீர் அதிக சூட்டுடன் இருக்க கூடாது, மிதமான வெதுவெதுப்பு குழந்தைகளுக்குப் போதும். பாப்பாவை இரு கால்களுக்கு நடுவே தொடைகளுக்கு மேல் படுக்க வைத்து ஒரு கையில் பிடித்து மறு கையால் தண்ணீர் எடுத்து ஊற்ற வேண்டும். வாய், மூக்குக்குள் தண்ணீர் செல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். அதே போல் புரண்டு படுக்க வைத்து முதுகுக்கு ஊற்ற வேண்டும். முதல் தண்ணீருக்கும், திரும்பி படுக்கவும் மட்டுமே குழந்தைகள் அழும். மல்லாக்கப் படுத்திருக்கும் விஷ்ணுவைத் திருப்புவது மட்டும் எளிய காரியமாகயில்லை. புரண்டால் அடுத்த யுகம் தொடங்கிவிடும். நீர் முதுகில் பட்டதும் அழுகை மெல்ல மறையத் தொடங்கும். அதற்குப் பின் பகல் முழுவதும் துயில்வதன்றி வேறென்ன வேலை.

முதல் மூன்று மாதங்களுக்குக் குழந்தை விளையாட்டுப் பொம்மைகள் எதையும் விரும்புவதில்லை. ஸ்பாஞ்ச் பொம்மையோ, பிளாஸ்டிக் பொம்மையோ அவை சீண்டுவதில்லை. இந்தப் பருவத்தில் குழந்தையின் விருப்பமான விளையாட்டு பொருள் என்பது அப்பா, அம்மா தான் என வெங்கட்ராவ் பாலு குறிப்பிட்டிருந்தார்.

குழந்தை அசைக்காத விழிக்கொண்டு திரும்ப திரும்ப நம் கண்களையே நோக்க முயலும். தோளில் போட்டிருந்தால் நம் உடலை வருடி மகிழும். குழந்தைக்குச் சிறந்த விளையாட்டு என்பது மார்புடன் அனைத்துக் கொண்டு உலகைச் சுற்றிக் காட்டுவது தான். அப்போது குழந்தை வெறித்து வெறித்து வேடிக்கை பார்க்கும். இசையும், நாம் பாடும் மெல்லிய கீதமும் அதற்கு தாலாட்டே.

விழித்திருக்கும்போதும் உறங்கும்போதும் அவள் முகத்தில்தான் எத்தனை எத்தனை பாவங்கள். தூக்கத்தில் கூட சிணுங்கலுக்கான முகம் சுளிப்பு நிகழும். பின் அது வேண்டாமென தீர்மானத்து அமைதி கொள்ளும். இதழ் வளைத்து விரியும்போது எழும் புன்னகை. அதுவே ஒருபுறம் எழுந்தால் இன்னும் தெய்வீகம். தசைகளில் மாறுபாட்டாலே குழந்தைகள் சிரிக்கின்றனர். ஆனால், நம் முன் தெரிவது கல் சிலையில் எழுந்து வரும் புன்னகையின் மண் வடிவமே.

உறங்கும்போது அவளைக் கவனித்தேன். போர்வைக்கு வெளியே வலது கையைக் கொண்டு வந்து மடக்கி சூப்பர்மேன் போல் நீட்டியிருப்பாள். இடது கை வெளியே வராமல் முழுவதும் பறக்க முடியாமல் போனதில் அவளுக்கு அத்தருணங்களில் கவலையிருக்கும். அதற்கான முட்டி மோதல்கள் நிகழும். அது இயலாது எனத் தெரிந்தால் ஒரு கணைப்பு. வெளி வந்ததும் ஆசுவாசம். அதன் பின் கை கால்கள் வானெனும் விசும்பையே துழாவி அறிந்து கொண்டிருக்கும். தூக்கத்திலும் கூட இடைவிடாத அறிதல்.

விசும்பெனும் இனிமையை அவள் உடல் முழுவதும் தேடிக் கொண்டிருக்கும். விசும்பு இங்கில்லாத ஒன்று ஆனால் எங்கும் நிறைந்திருப்பது. இங்கு நாம் நமக்கு என நாம் அடைந்திருக்கும் எல்லைகளுக்கு அப்பால் வெளியெங்கும் திகழ்வது. கௌஷிதகி உபநிடதத்தில் பாஞ்சால அரசர் பிரவாகணன் உத்தாலகரான ஆருணிக்கு அவரது மகன் ஸ்வேதகேதுவிற்குச் சொல்லும் வரி ஒன்றுள்ளது. “விரிந்து விரிந்து அனைத்தையும் தன்னுள் அடக்கி அதுவாகட்டும். இளையோனே, முடிவிலாது அருந்தும் இனிய தேன் ஒன்றுள்ளது. வானிலிருந்து வானுக்கு வழிந்தோடும் இனிமை அது,” என்பார். வெண்முரசில் ‘சொல்வளர்காடு’ நாவலில் வரும் வரிகள் இவை.

மண்ணில் பிறந்து புவியைக் குழவி அறிந்ததும் முதலில் அறிய நினைப்பது அந்த விசும்பென்னும் பெரும் ஞானத்தை தான். நம்மால் அறிய முடியாத தேனென்னும் பெரும் இனிமையை. அதனை அனுதினமும் ஓயாது அறிய விழைகின்றது அந்தத் தூய அறிவு.

அதன் குமிழ் சிறு வாயிலிருந்து ஒலியென எழுவது வெறும் அழுகையல்ல. அங்கே ஒலியென எழுவது ஞானமென்னும் பிரம்மமே. “ஆம், அது அவளே!” என எண்ணிக் கொண்டேன்.

2 comments for “ஒலியென எழுவது ஞானமே

  1. May 2, 2024 at 1:39 am

    நவீன் தந்தையான பின்னர் உண்டாகும் அறிதல், அன்பு, பாசம், அரவணைப்பு, கரிசனம் எல்லாம் முழுமையாக வந்திருக்கிறது இப்பத்தியில். குறிப்பாக அவன் கண்டறிய முயலும் சுருதி என்ற சொல்லின் பொருளிலிருந்து பத்தி விரிவடைந்து கொண்டே போகிறது. சுருதி என்ற சொல்லுக்கு அவர் சொல்லும் பொருள் அப்பாவான பிறகு அவருக்குண்டான ஞானம் என்று சொல்லலாமா?அப்பாவான பின்னர் அவரின் தேடல் புனைவுக்குப் பதிலாக வேறு ஒரு திசையை நோக்கிப் பயணிப்பது எல்லாப் அப்பாக்களுக்கும் வாய்க்கக் கூடியதா என்ன? அருமை.

  2. Selvan
    May 2, 2024 at 11:25 am

    The article adeptly intertwines deep understanding with philosophical insights, highlighted by the author’s experiences as embracing ‘Papa’. It explores how “Shruti” goes beyond mere auditory perception to represent a deeper, primordial intuition that exists before conscious thought. It acts as a delightful bridge connecting the known, the unknown, and the ever known.

    Thanks for the great read, Navin.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...