பாபியின் தொழில் தர்மம்

“நம்மளாவது வாரத்துக்கு ஒரு வாட்டியாவது அவனுகளைப் பாக்குறோம். இந்த அர்த்தராத்திரில இப்பிடி ஒரு கூட்டம் முழிச்சுக்கிட்டு இருக்குறது அவனுகளுக்கு என்னைக்காவது தெரியுமா?”

இப்போதுதான் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் அவனுகளைப் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள் செந்திலும் பாபியும். அவனுகள் என்பது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள மனிதர்கள்.

“அவனுகளுக்கு ஏண்டா தெரியணும்? நம்ம தலையெழுத்து இங்க கிடந்து சாகணும்னு…”  என்றான் கொட்டாவியை முழுங்கிக் கொண்டே பாபி.

“க்காளி… என்ன வீச்சம் அடிக்குது பாரு… இதுக்குள்ளயாடா வேலை செய்யிறோம்…ச்சை… இருக்கறதுல நம்ம கடை பரவால்ல போல”

“ஆமாமாம்… சுத்தமானவனுக… ரெண்டுக்கிருந்தாலும் ஒண்ணுக்கிருந்தாலும் கழுவி விட்ருவானுக… இதெல்லாம் என்னடா… மழை பெய்யும்போது அடிக்கும்பாரு… ” என்றான் பாபி.

“இந்த வாட்டியாவது பொங்கல் போனஸ் உண்டா?”

“மயிரக் குடுப்பாரு…”

“அதான் மயிராவது உண்டான்னேன்”

“எப்பயும் கெடைக்கிற மயிரு கெடைக்கும்… ” 

வண்டிகள் ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. எங்கும் சரக்கு லாரிகளின் உறுமல் சத்தம். 

“எஸ்.ஆர்.பி லாரி வந்திருக்கு… நிலக்கோட்டை போறயா?” என்றான் பாபி.

“ஊருக்குப் போகலாம்… முனியாண்டிவிலாசுல மட்டன் சுக்கா, கோலா உருண்டை சாப்பிடலாம். நல்லாத்தான் இருக்கும். அதுக்குப் பிறகு… நமக்கு இந்த வேலையத் தவிர எதுவும் தெரியாது. ஊர்லதான் காய்கறி கடை போடணும். அது ரொம்பக் கஷ்டம். பக்கத்துல ஒட்டன்சத்திரம்தான் பெரிய மார்க்கெட்டு. அங்கபோனா திரும்ப மூடை தூக்கிப் போடறதுலேர்ந்துதான் ஆரம்பிக்கணும்”

“நாளைக்கி ஒனக்கு முனியாண்டிவிலாசுல சாப்பாடுறா?”

“ஏன் அண்ணாச்சிட்ட ஒண்ணுக்கு ரெண்டா போட்டுக்குடுத்திட்டயா… என்ன?”

‘கிக்கிக்கிக்கி’ என்று சத்தமாகச் சிரித்தான் பாபி.

“சொல்றா… எதுனாச்சும் இருந்தா பேசித் தீத்துக்கிருவோம்”

“அட… ஒண்ணுமில்லடா… சரி, ரெண்டு மணிக்கி எந்திரிக்கலேன்னா எழுப்பிவிட்டிரு” என்று மேலே படுக்கச் சென்றுவிட்டான் பாபி. அப்போதே மணி ஒன்றாகியிருந்தது.

சென்னைப் பெருநகரம் முழுமைக்கும் அதுபோக பாக்கங்களும் வாக்கங்களும் பேட்டைகளுமாகச் சுற்றியிருக்கும் எண்ணிறந்த ஊர்களுக்கும் காய்கறிகளை அனுப்பி ஆடு, மாடுகள் ஆயுளைக் கூடிய மட்டும் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கும் கோயம்பேடு மார்க்கெட். நூறு லாரிகள் நிறுத்த இடம் கொண்ட காய் ,கனி, பூ இவற்றுக்கான தனித்தனியான மூன்று பெரிய அங்காடிகள். அதற்குள் வரிசை வரிசையாய் கடைகள். காலை மூன்று மணியிலிருந்து பத்து மணி வரை மொத்த விற்பனை. பாபி காலை மூன்று மணிக்கு முன்னாலேயே போய் எந்தெந்தக் கடையில் என்னென்ன சரக்கு, எத்தனை லாரி வந்திருக்கிறது என்று பார்த்துவிட்டு வந்து அண்ணாச்சியிடம் சொல்லிவிடுவான். வரத்தைப் பொறுத்து விலை வைப்பார் அண்ணாச்சி. முதல் நாள் பொழுது சாய பறிக்கப்படும் காய்கறிகள் தோட்டங்களிலேயே மூட்டையாகி லோடேறி இரவு இரண்டு மணிக்குள் வந்து இறங்கிவிடும். காலை எட்டு மணிக்கெல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும்.

விவசாயி பயிர் செய்து விளைவிக்கும் காய்கறியை அவனிடம் மொத்தமாக வாங்கி கொண்டு வந்து கோயம்பேட்டில் போடுகிறான் சம்சாரி. கிராக்கிகளிடம் அதாவது மொத்த வியாபாரிகளிடம் காய்கறியை விற்று, அதில் வருகிற பணத்தில் பத்து சதவீதம் கமிஷனாக எடுத்துக் கொண்டு,  பட்டி போட்டு, மீதப்பணம் சம்சாரிகளுக்குத் தினப்படி பட்டுவாடா செய்வார் அண்ணாச்சி. காய்கறியின் அடுத்தடுத்த நாளைய டிமாண்டைப் பொறுத்து, கெட்டுப் போகாமல் தாங்கும் திறனைப் பொறுத்து, விற்காவிட்டாலும் பட்டி போட்டுக் கொடுப்பதும் உண்டு. இதற்கெல்லாம் ஆலோசனை பாபிதான். எந்தெந்தக் கடையில் எவ்வளவு இருப்பு உள்ளது என்று பார்த்து வேவு சொல்வதும் பாபியின் முக்கியமான வேலை.      

கொத்தவால் சாவடியிலிருந்து கோயம்பேடுக்குக் கடை மாறியதிலிருந்தே பாபி அண்ணாச்சியோடு இருக்கிறான். பத்து வயது பையனாக டீ, காப்பி வாங்கி வர கடையில் சேர்ந்தவன், இன்றைக்குச் சுயம்புலிங்கம் அண்ணாச்சியின் வலது கை.  அவ்வப்போது இவன் பேசுகிற உடன்குடித் தமிழைக் கேட்டால் பாபியின் பூர்வீகம் ஆந்திரா நெல்லூர்பக்கம் என்று சொன்னால் நம்ப முடியாதுதான். அவனுடைய அப்பா இவன் பிறந்த நேரத்தில் ‘பாபி’ இந்திப்படம் பார்த்துக் கொண்டிருந்ததால் அந்தப் பெயரையே வைத்துவிட்டார். அவனுடைய அம்மா குலத்தெய்வம் பென்சிலைய்யா பெயரைத்தான் வைப்பேன் என்று அடம்பிடித்தாள். அந்தப் பெயரைத்தான் சாகும் வரை கூப்பிட்டுக்கொண்டிருந்தாள்.


“பாபி டிம்பிள் கபாடியாவோட பேர்ன்னா, நல்ல வேளை ஒங்க அப்பா பாவம் கொடூரன் படத்த பாக்கும்போது பொறக்காமப் போனயே… ஆனா அப்பக்கூட நீங்க கூப்டறமாரி கூப்டலாம்” என்று காய்கறி வாங்க வரும் ஆனந்தபவன் சாமி சொல்ல சொல்ல தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த அண்ணாச்சிக்குச் சிரிப்பு  பொத்துக்கொண்டுவந்து பொறை ஏறிவிட்டது. சுயம்பு எப்போதும் இவனைப் பாவி என்று கூப்பிடுவதுதான் வழக்கம்.

விடிகாலை இரண்டு மணிக்கே எல்லாக் கடைகளிலும் ‘லைட்’ போட்டு ஒளிவெள்ளத்தில் பச்சையின் பல்வேறு நிறபேதங்களில் காய்கறிகள் மினிக்கிக் கிடந்தன. காய்களின் பசியவாடை காற்றில் நிறைந்து கிடந்தது. தூக்கக்கலக்கத்தோடு சம்சாரிகளெல்லாம் கூடத் தொடங்கியிருந்தார்கள். முதலாளிகளெல்லாம் மூன்று மணியிலிருந்து வர ஆரம்பிப்பார்கள்.  அதற்குள் தூக்கிக்கட்டிய கைலியோடு ‘சீத் சீத்…’ என்று அவ்வப்போது எச்சிலைப் பீய்ச்சிக் கொண்டு மார்க்கெட்டை ஒரு ரவுண்டு வந்து கொண்டிருந்தான் பாபி. எந்தெந்த லாரியில் எந்தெந்த காய்கறி எத்தனை மூட்டை வந்திருக்கிறது எந்தெந்தக் கடையில் இறங்கியிருக்கிறது என்பதெல்லாம் ஒரே பார்வையில் அளந்துவிடுவான். 

“இருட்டுக்குள்ளிருந்து என்ன பாபி…ரோந்தா?” என்று டி.எம்.பி மேஸ்திரி பாபியின்  ‘தண்ணி தோஸ்து’ கிளெமென்ட் சவுண்டு விட்டான். 

“வெண்டக்கா எத்தனை மூட்டைடா வந்திருக்கு, கெளமண்டு”

“இன்னைக்கி வரத்தில்ல பாபி”

 “டே… டாபரு…. யார்ட்ட ஓல் விட்ற …”

கொஞ்சம் முன்னால்தான் டிரைவரிடம் விசாரித்திருந்தான்.  எந்த வண்டியில் என்னென்ன காய்கறி வரும் என்று பாபிக்குத் தெரியும். எல்லா டிரைவர்களும் நல்ல பழக்கம். திருநெல்வேலி அல்வாவோ, மணப்பாறை முறுக்கோ அவ்வப்போது டிரைவர்களிடம் வாங்கி வரச்செய்து கங்கம்மாவுக்குக் கொடுப்பது உண்டு. “வி.கோட்டா பீன்ஸ் வந்திருக்காடா பாபி” எஸ்.ஆர்.பி அண்ணாச்சி விசாரித்தார். “ஆமா அண்ணாச்சி நாலு மூட வந்திருக்கு” பாபிக்கு எந்த விஷயத்தை மறைக்க வேண்டுமென்று தெரியும். இதையே சேம்பைக் கேட்டிருந்தால் மாற்றிச் சொல்லியிருப்பான். ‘ப்ரைவேட்டாக’ எழுதி சமீபத்தில் பன்னிரெண்டாம்  வகுப்பு ‘பாஸ்’ பண்ணியதிலிருந்து முதலாளிகள் கூட பாபியைக் கண்டுகொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.  

அந்தக் காலத்து நடிகர் சுதாகர் சாயல் கொஞ்சம் பாபிக்கு. இழுத்துக்கட்டிய உடம்பு. அங்கு நடக்கும் பொங்கல் விழா ஓட்டப்போட்டியில் வருடா வருடம் ஒரு பரிசு வாங்கிவிடுவான். “இந்தவாட்டி நம்ம பயதான் ரன்னிங்ல பர்ஸ்ட்டு” என்று கடைக்கு வரும் எல்லோரிடமும் சொல்லி பெருமைப்படுவார் அண்ணாச்சி.  “அள்ளிக்க… வாரிக்க… போனா வராது பொழுதுபோனா கிடைக்காது… மைக்கேல்பாளையம் பட்…வர….” பாபி சவுண்டு விட ஆரம்பித்தால் மணி மூன்று. இவன் கத்தாவிட்டாலும் மாமூல் கிராக்கிகள் வாரிக் கொண்டு போய்விடுவார்கள்தான். தூக்கம் வராமலிருக்க ஏதாவது செய்ய வேண்டுமே? “பவுன் சரக்கு… பவுன் சரக்கு… பவுனு பவுனு” எதிர்க்குரல் விடுவார் அண்ணாச்சி.

“டே… பாவி…”

“என்னங்கண்ணாச்சி…”

“சேம்பு எத்தனை மூடடா வந்திருக்கு…”

“நூறுங்கண்ணாச்சி… நாப்பத்தெட்டு எஸ்.ஆர்.பி-க்கு குடுக்கணும்”.

“அம்பதுல்லடா?”

“இல்லைங்கண்ணாச்சி… ரெண்டு மூடை கழிவுங்கண்ணாச்சி… குப்பைக்குப் போயிருச்சு…”

“கழிவுன்னா எங்கிட்ட காட்டாம போடக்கூடாதுன்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்…”

“பாத்தீங்களேண்ணாச்சி… அன்னைக்கி ஆடிட்டர் சார் கூட பேசிக்கிட்டிருந்தப்ப சுப்புரமணி  காமிச்சானே…”

“ஆம்…ம்மாம்… கவனம் இல்ல… இந்த வாட்டி கழிக்காத… புல்லா குடுத்துரு… அவன் ஒருத்தன்தான் கேக்குறப்ப இல்லைங்காம குடுக்குறான். சரி… பாய்ட்ட குடுத்து அனுப்பு, லோடு அடிச்சிட்டு அவன்கிட்ட விரளி, பிடிகரணை வாங்கிட்டு வரட்டும்”

“பாய நிலக்கோட்டைக்கு அனுப்பணும்னு சொன்னீங்களேண்ணாச்சி. மைக்கேல்பாளையம் அவரை இந்த வாட்டி அட்வான்சு குடுக்காட்டி நமக்கு இல்ல… பாத்துக்கிடுங்க”

“எங்க பாய?” என்றார் சுயம்பு. குடுகுடுவென்று எங்கிருந்தோ ஓடி வந்தார் ரஹீம் பாய். ரஹீம் பாய்தான் லிங்கம் அக்ரோவின் கொள்முதல் நிர்வாக அதிகாரி. எப்போதும் சம்சாரிகளோடு நிரந்தரத் தொடர்பிலிருப்பவர். அந்தக் காலத்து நடிகர் டி எஸ் பாலையா போல இருப்பார். வெள்ளை வேட்டி, முழங்கை வரை மடித்த வெள்ளை சட்டை. தூங்கும்போதும் இதே உடைதான். பாய்க்கு ஊர் ஒட்டன்சத்திரம் பக்கம் அம்பிளிக்கை. ஊரில் பீவியும் சரக்கு கொள்முதலுக்குப் போகும் இடங்களில் சில தொடுப்புகளும் உண்டு.    

பாய் வேலையில் கெட்டிதான். ஒரு காய்கறியின் பெயரைச் சொன்னால் அதை விளைவிக்கிற விவசாயிகளின் பெயர்களை ஊர் வாரியாக வரிசையாகச் சொல்லுவார். எல்லோருடைய செல்பேசி எண்ணும் வைத்திருப்பார். வடக்கே இவருடைய தம்பி ஒருவன் இதே வேலை செய்து கொண்டிருப்பதால் நாசிக் வெங்காயமா, பஞ்சாப் பூண்டா எதையும் விரைவாகக் கொள்முதல் செய்யும் தெம்பிருந்தது. மொத்தத்தில் தகவலே அண்ணாச்சியின் சொத்து என்பதற்கு உதாரணம்.    


“பாய்… மார்கழி வந்திருச்சு… சிறு கிழங்கு இன்னும் வரலியே? என்னா ‘லைன்’ பாக்குறீங்க?”

“கொஞ்சம் அறுவடை பிந்துது… இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வந்துரும்…”என்றார் பாய்.

“என்ன பிந்துது… சொடலைமாடன்ல பத்து மூடை வந்து எறங்கியிருக்குது… என்னடா?” என்றார் பாபியைப் பார்த்து. சிரித்துக் கொண்டே தலையாட்டினான் பாபி. அவன் இரண்டு மூடைதான் சொல்லியிருந்தான்.   

கடைக்கு வருகிற ஊட்டி காரட்டில் இண்டைத் தின்று தண்ணியைக் குடித்தாலே வயிறு நிறைந்து விடும். அவ்வப்போது காப்பி. பன்னிரண்டு மணிக்குக் குளித்துவிட்டு, கங்கம்மா கொண்டுவருகிற சாப்பாட்டை சாப்பிட்டுப் படுத்தால் ஏழெட்டுமணிநேரம்  பெருந்தூக்கம். பாபிக்கு தெலுங்கு மறக்காமலிருப்பது கங்கம்மாவால்தான். இவள் பாபியோட ஆள் என்றொரு பேச்சும் உண்டு. பின் ஏதாவது வண்டி ஹோட்டலில் இட்டிலி, பரோட்டா இப்படி. மற்ற கூலிக்காரர்களோடு அரட்டையடித்து விட்டு -பெண் அனுபவங்கள், காதல் வெற்றி தோல்விகள், விஜய்யா,அஜீத்தா, போன முறை எப்போது ஊருக்குப் போனார்கள் அல்லது அடுத்த முறை எப்போது போவார்கள் என்பதே முக்கியமான பேச்சு. பத்து மணிக்குப் படுத்தால் இரண்டு மணிக்குத் தவறாமல் முழிப்பு வந்துவிடும். வாரம் தவறாமல் இரண்டாம் ஆட்டம் சினிமா, சுக்கு பாய் அல்லது தலப்பாக்கட்டியில் பிரியாணி. க்ளெமென்ட், செந்திலோடு பீர் உண்டு. ‘அக்கடதேசத்துப்’ படங்களை மொபைலில் பார்த்துவிடுவான். தமிழ்ப்படங்கள் மட்டும் தியேட்டரில். இதுதான் கடந்த பல வருடங்களாகப் பாபியின் வழமை. 

இருபதடி அகலம் அறுபதடி நீளமான கடை. அதே அளவில் மேல்தளம். கீழ் தளத்தில் வியாபாரம். மேல் தளத்தில் கூலியாட்கள், வியாபாரிகள், லாரி ஓட்டுனர்கள் தங்க இடம். எல்லோருக்குமான கழிப்பறை, குளியலறை. ஒரு சிறிய அலுவலகம். இதுதான் ‘லிங்கம் அக்ரோ’. சுயம்புலிங்கம் காலை மூன்று மணிக்கு வந்தால் பத்து அல்லது பதினோரு மணிக்குத்தான் வீட்டுக்குச் செல்வார். சுந்தரலிங்கமும் ராமலிங்கமும் இரவு ஏழு மணிக்குள் ஆளுக்கு மூன்று மணிநேரம் இருந்துவிட்டுச் செல்வார்கள். யாரும் இல்லாதபோது பாபிதான் அண்ணாச்சி. கூலியாட்கள் யாருக்காவது அவசரமாக ஊருக்குப் போக வேண்டும் என்றால் பாபிதான் பேசுவான் அண்ணாச்சியிடம். அண்ணாச்சிகள் பேசுவதும் பாபி ஒருவனிடம்தான்.

“சுப்புரமணி காப்பிக்கி போனானா இல்லையா… எத்தனைவாட்டிடா சொல்லுறது?”


“டே… சுப்புரமணி கிளம்புடா… காப்பி வாங்கிட்டு வந்து கழுவு…” என்று விரட்டிவிட்டான் பாபி. 

கருணைக்கிழங்கை கழுவி ‘கை பார்த்துக்’ கொண்டிருந்த சுப்புரமணி ‘பிளாஸ்க்’கை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான். எட்டு மணி வாக்கில்தான் காப்பி கேட்பார் அண்ணாச்சி. அதற்கு முன்னால் கேட்டால் ‘அந்தா இந்தா’வென்று வேறேதாவது வேலை இருப்பது போல காட்டிக்கொள்வது சுப்புரமணியின்  வழக்கம். ஒரே காரணம் ‘வடக்கன்’ ரிக்கு எட்டு மணிக்குத்தான் கல்லாவில் வந்து உட்காருவான். ரிக்குவுக்கு கணக்கு வராது. ஒவ்வொரு முறை காப்பி வாங்கும்போதும் சுப்புவின் கையில் ஒரு அஞ்சு பத்து ‘எச்சா’ கிடைப்பது வழக்கம். காலையில் ‘பிளாஸ்க்’கில் கொதிக்கக் கொதிக்க பத்து காப்பி வாங்கி வருவான். அண்ணாச்சி போவதற்குள் ஒரு நாலு காப்பியாவது குடித்துவிடுவார். மீத காப்பியைப் பாபி குடித்தது போக சுப்பு கூலியாட்களோடு பகிர்ந்து கொள்வான். அதுபோக கணக்குப்பிள்ளைகளுக்குப் பதினோரு மணிக்குத் தனியாகக் காப்பி வாங்கப் போவான். 

 சுயம்பு சுவாரசியமாக மூக்கை நோண்டிக் கொண்டிருந்ததைக் கவனித்த பாபி சற்று நேரம் பொறுத்திருந்து அவர் முடித்த பின்பு மெதுவாக ஆரம்பித்தான்.   

“அண்ணாச்சி… இந்த வாட்டி பொங்கப்படி எப்ப கெடைக்குங்கண்ணாச்சி… ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு செலவு வெச்சுருக்கானுக…”

“குடுப்பம்டா… நீ என்ன தொழிலாளர் தலைவனா?” என்று மீசையை முறுக்கினார் சுயம்பு.

“அய்யய்யோ… அப்பிடியில்லைங்ண்ணாச்சி… பசங்க கஷ்டத்துல இருக்கானுக… அதான்…”


“குடுக்கலேன்னா வேலய விட்டுப்போயிருவானுகளா… இன்னைக்கே ஊர்லேர்ந்து பத்துப் பேர கொண்டாந்து எறக்கவா…”

“அய்யய்யோ… அப்படியில்லைங்கண்ணாச்சி …நாங்களும் வேற யார்ட்ட கேப்போம்”

“தருவோம் தருவோம்… எஸ்.ஆர்.பிக்கி யாரு போறது?”    

கொடுக்க வேண்டுமென்றால் இந்த மொதலாளிகளுக்கு என்னமாய்த்தான் வருகிறது. இத்தனைக்கும் காசு கொட்டத்தான் செய்கிறது, என்று நினைத்துக் கொண்டான் பாபி. “சுப்புரமணி வந்தோன்ன அனுப்புறேங்கண்ணாச்சி”


கொடுக்காவிட்டால் வேலையை விட்டுப் போய்விடுவார்கள் என்றும்  ஊரிலிருந்து இங்கு வேலைக்கு வர யாரும் காத்துக் கொண்டிருக்கவில்லை என்றும் பாபி, சுயம்பு இருவருக்குமே தெரியும். 

“டே… பாவி… கேஷியரைச் சுத்தி ஏன் இவ்வளவு கூட்டம்? உன்னி ரொம்ப நேரமா நிக்கிறாரு பாரு…”   

“முத்து… உன்னிக்கி பட்டி போட்டாச்சா? ரொம்ப நேரமா நிக்கிறாரு… பாரு. கொஞ்சம் எஸ் சை பின்னால போடு. புள்ளி வேற ஒழுங்கா வைக்கமாட்ட… படிச்சா அசிங்கமா வருதுன்னு போனவாட்டியே சொன்னாரா இல்லியா?” என்ற பாபி ஒட்டப்பாலத்திலிருந்து மாங்காய் கொண்டுவரும் உன்னியிடம் திரும்பி “சொல்லிட்டேன் சுண்ணி” என்று சொல்ல “அது மதி” என்று சிரித்தான் உன்னி.

பாபி சொன்னதையும் உன்னி கவனிக்காததையும்  முத்து கவனித்து விட்டான். சிரிப்பை அடக்க முடியாமல் மாடிக்கு ஒன்னுக்குப் போவதுபோல ஓடிச் சென்றான். சுயம்பு என்ன? என்பது போல நெற்றியைச் சுருக்க, சிரிப்பை அடக்கிக்கொண்டே ஒரு விரலைக் காண்பித்தான் பாபி. 

“மயிராண்டிகளுக்குச் சிரிப்புதான் கேடு. அவன் வர்றவரைக்கும் போய் பட்டி போடுறா…” என்று பாபியை விரட்டினார் சுயம்பு. பாபியும் பட்டி போடுவான் அவ்வப்போது. ஆந்திராவிலிருந்து சம்சாரிகள் வந்தால் இவன்தான் தெலுங்கில் பட்டி போடுவது.  மற்றவர்களுக்கெல்லாம் ஆங்கிலத்தில். இவன் கையெழுத்துதான் சகிக்காது. நல்ல வேளையாக உடனே வந்துவிட்டான் முத்து. 

“சத்தியமாத் தெரியாமத்தாண்டா சொன்னேன். நல்ல வேளை அவன் கவனிக்கல” என்றான் பாபி. பின்னும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள் இருவரும். “கணக்குப்பிள்ளை காலைலயே சந்தோசமா இருக்காரு” என்றார் ஒரு வயதான சம்சாரி.   

கடைசி காப்பியைக் குடித்துவிட்டு அன்றைக்கு முடிக்க வேண்டிய வேலைகளையெல்லாம் பாபியிடம் பட்டியலிட்டுவிட்டு ‘புல்லட்’ டில் கிளம்பிச் சென்றார் சுயம்பு.  

‘திண்டுக் கல்லு… திண்டுக்கல்லு… பெரிய பூட்டு எனக்கு… போட்டுப் பாக்க ஒன்கிட்டத்தான் கள்ளச்சாவி இருக்கு…’ என்று ஒலிபெருக்கியிலிருந்து ஒலித்த பாடலுக்கு ஒரு தளதளப்பான வட இந்தியப்பெண் வளைந்து நெளிந்து ஆடிக் கொண்டிருந்தாள். அவள் கூட ஆடும் சின்னப்பெண் கொஞ்ச நேரத்தில் தட்டோடு கடைகடையாக வருவாள். அண்ணாச்சி தலைமறைவதற்குக் காத்துக்கொண்டிருந்தாற்போல எல்லாக் கூலியாட்களும் ஆட்டம் பார்க்கப் போய்விட்டிருந்தார்கள். பாபி கடையிலிருந்தே  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் சாப்பாடு கொண்டு வரும் கங்கம்மாவுக்கு இந்தப் பாட்டை விளக்கிச் சொல்லுவதையும், அதற்கு அவள் முகச்சுளிப்போடு ஸ்ரீகாகுளம் தெலுங்கில் அசிங்கமாகத் திட்டுவதையும்  மனதில் கண்டு சிரித்துக்கொண்டான். “என்ன பாபி?” என்று காவிப்பல் தெரியச் சிரித்துக் கொண்டு கண்ணடித்தார் பாய். ‘யோவ்…நீ வேற…’ என்று நினைத்துக் கொண்டு “பாய்…சுப்புரமணிய எங்க?” என்றான் பேச்சை மாற்றும் விதமாக. “அந்தா… சாவியைப் போட்டுத் தெறக்க ரெடியா மொத ஆளா நிக்குறான் பாரு” என்றார். அவர் சொல்வது சரிதான் என்பது போல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் சுப்பிரமணி. பாபிக்குச் சிரிப்பு தாங்கவில்லை.

சுப்பிரமணி வரும் வரை காத்திருந்தான். “என்ன, விட்டா வாயைப் பிளந்துட்டே உள்ள போயிருவ போல… எம்பூட்டுவேலை சொல்லிட்டுப் போயிருக்காரு அண்ணாச்சி… மேல வா” என்றுவிட்டு மாடிக்கு ஏறிச் சென்றான்.

“என்ன பாபி, எஸ்.ஆர்.பிக்கி அம்பது மூடை சேம்பு குடுக்கச் சொல்ற…’நம்ம கணக்குப்படி’ நாப்பத்தெட்டு தான…” என்றான் சுப்பிரமணி.  


“இல்ல அண்ணாச்சி ஐம்பதும் குடுக்கச் சொல்லிட்டாரு… கலந்துரு… அண்ணாச்சி கரெக்ட்டா கேக்குறாருடா… அன்னக்கி கழிவுக்குப் போனது கருணைக்கிழங்கு தானன்னு. நல்ல வேளை நான் அவர் சரியா கவனிக்காதத கவனிச்சதுனால.… ஓங்கியடிச்சேன் சேம்புன்னு…”

“ப்ச்… வேலையத்த வேலை… எல்லாத்தையும் கலந்து…” என்று அலுத்துக் கொண்டான் சுப்பிரமணி. 

“ங்கோத்தா… நோகாம துட்டு வருமா… நாலுவாட்டி லட்டு  துன்னா… ஒருவாட்டி லவடா துன்னுதான் ஆவணும்… இங்க பாரு… ரெண்டு மூட கழிவு சேம்பு இன்னும் கொஞ்ச நேரத்துல மாரி கொண்டாருவான். எட்டு மூட்டைல கலந்து பத்து மூட்டையா தெச்சிரு… தெச்சிட்டு எப்பயும் போல நடுவுல ‘பச்சை’ல மார்க் பண்ணிரு. வண்டில ஏத்துறதுக்கு முன்னால என்னைய கூப்பிட்டு காமி… ஏதாவுது தப்பாச்சுன்னு வைய்யி…”என்று நாக்கைத் துருத்தி விரலை ஆட்டினான். ஒரு முறை சேம்புக்குப் பதிலாகக் கருணைக்கிழங்கு சரக்கு மாறி ‘லோட்’ செய்துவிட்டானென்று சுப்புரமணியை அண்ணாச்சி முன்னாலேயே அறைந்துவிட்டான் பாபி. இத்தனைக்கும் சுப்புரமணி பாபியைவிட ஐந்து வயது மூத்தவன்.


“கோவிக்காத… எஸ்போட் ஆடரு பாபி…”

“எனக்குத் தெரியாதா… அம்பதுல நாப்பதுதான் எஸ்போர்ட்… நான் ஏழுமலைட்ட பேசிட்டேன்…”

 “மாரி வர்றப்ப…”

“அண்ணாச்சிங்க யாரும் இருக்க மாட்டாங்க… குடும்பத்தோட திருப்பதி போயிருக்காங்க…”

“திருடனுக்குத்தான் எவ்வளோ விஷயம் தெரிய வேண்டியிருக்கு”என்று பொருள்பட  இருவரும் ஒரே சமயத்தில் சிரித்தார்கள்.

“அதான் புல்லட்டுல வந்தாரா, சேரி… சேரி… நீ தூங்கி எந்திரிக்கும்போது எல்லாம் ரெடியா இருக்கும் பாபி”

பாபி தூங்கி எழுந்திருக்கும்போது இரவு எட்டு மணியாகியிருந்தது. கூலிக்காரர்களெல்லாம் சினிமாவிற்குச் சென்றிருந்தனர். கடையில் பாய், சுப்புரமணி, பாபி மூன்று பேர்தான். சுப்புரமணி  எஸ்.ஆர்.பிக்கிப் போக சேம்பு மூடைகள் ரெடி என்று சைகை செய்தான். பாபி மூடைகளைச் சரிபார்த்துவிட்டு “சுப்புரமணி இங்க வா” என்று அழைத்தான். 

“இன்னொரு முக்கியமான விஷயம். இந்தத் திருட்டு வேலை இதோட முடிஞ்சது. இனிமே கெடையாது. நீ ஏதாவது செஞ்சன்னு வையி, கொலை பண்ணிருவேன். இது வரைக்கும் திருடினத்துக்குக் காரணம் இருக்கு. பொங்கல் போனஸ் இது வரைக்கும் குடுக்காம ஏமாத்திருக்காரு அண்ணாச்சி. கேட்டா இத்துனூண்டு காசை போனசுன்னு குடுக்க வேண்டியது. வெளிய கேட்டா காறித்துப்புவானுக… ஒங்களுக்கு வைத்தியத்துக்குக் காசு குடுக்குறேங்க வேண்டியது… எத்தன வாட்டிடா ஆஸ்பத்திரிக்கி போயிருக்குற… இங்க மூடதூக்கியே செத்தான் கொண்டையா, அவன் நோய்வந்து படுத்தப்ப நம்மதான் பாத்தோம்… கேட்டா… ஒங்க புள்ளைங்களுக்குப் படிப்புச் செலவு நான்தான் பாக்குறேன்ங்க வேண்டியது… நோட்டு, புத்தகத்துக்கு ஆயிரம் ரூபா வருசத்துக்கு. ஒழுங்கா போனசு குடுத்தா, நீ வாங்கித்தர மாட்டியா…”

“பொம்பள ஷோக்கு புடிச்சு ஆட்டுது அவர.  எங்கயோ போனாரே…”   “பாய், அண்ணாச்சி எந்த ஊருக்குப் போனாரு ஆங்காங்கா?” என்று கத்தினான். ஹாலின் இன்னொரு மூலையில் அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து வெத்தலை போட ஆரம்பித்திருந்த பாய் “பேங்காக்…” என்றார்.  “ஆன்… அதான்… நம்ம உயிரை விட்டுருக்கோம் அவருக்காக.   அவரு அங்க விடறாரு நம்ம காசை. யாரோ    ஓசில ஓத்துனு போறதுக்கு நாம துட்டு சம்பாரிக்கல. அவர் அங்கவிட்ட நம்ம காசை இங்க எடுத்தாச்சு. பாய், இங்க வாங்க? முக்கியமான விஷயம்” என்று கத்தினான்.

இவருடைய ரகசிய நடவடிக்கைகள் எல்லாமும் பாபிக்குத் தெரியும் என்பதால் அவனைப் பார்த்தாலே பம்முவார் ரஹீம் பாய். வெற்றிலையை மென்றுகொண்டே “ஷொல்லு பாபி…” என்று எழுந்து வந்தார்.  

“என்ன பாய்… பேசாம ஊருக்குப் போயி பொண்டாட்டி பிள்ளைகளோட செட்டில் ஆயிர்றீங்களா?”


பல முறை வறட்டு இருமலில் அவதிப்படும்போதெல்லாம் இவனிடம் புலம்பியிருக்கிறார்தான் “ஊர்லயிருந்தா இந்நேரம் சுக்குக்கஷாயம் போட்டுக்குடுப்பா” என்று. ஆனால் இவன் கேட்கிறதோரணையைப் பார்த்தால் சம்சாரிகளோடு இவர் போடும் ‘சீக்ரட் டீலிங்கைத்’ தெரிந்து கொண்டு கேட்பது போல இருந்ததால் ஒரு படபடப்போடு மறுபடியும் “ஷொல்லு பாபி?” என்றார் பணிவாக.

“என்ன ஜொள்ளு பாபி? ஊருக்குப் போயிற்றீங்களா மொத்தமா…”

“அப்ப வேலை?” என்றார் நடுங்கும் குரலில்.

“நான் தர்றேன்பாய். ஒட்டன் சத்திரம்  மார்க்கெட்டுல  துர்கா  மண்டி என்  மச்சானோடதுதான். அவனுக்கு இந்த  ‘பிசினெஸ்’ ல  அனுபவம்  பத்தாது.  அவன்  என்னை  நடத்தச்  சொல்றான்.  இப்பவே  நான்  பார்ட்னர்தான்.  பத்திரத்துல  என்  பேர்  இருக்கு.  வர  ஜூன்மாசத்திலேர்ந்து  துர்கா  மண்டி    முழுசா  என்  கைக்கு  வருது.  பாபியும்  முதலாளி  ஆகுறான். மூணுமாச  போனசு,  ரொட்டேசன்ல  வாரம் ஒருநா  லீவு,  மெடிக்கல்  இன்சுரன்சு  எல்லாம்  உண்டு.   உங்க  எல்லாருக்கும்  ஊர்  தினம் போய்வர  தூரம்தான்.  ஒங்க  வேலையைப்  பக்கத்துல  இருந்து  பாத்துருக்கேன்.  அதனால  உங்கள  நம்பிக் கூப்பிடுறேன். நீ அடுத்த மாசம் போ. பாய் ஏப்ரல் மாசம் வரட்டும். அதுவரைக்கும் வெளிய மூச்சுவிடக்கூடாது. நான் ஜூன் மாசம் வருவேன். எனக்கு சம்பள அட்வான்ஸ் இன்னும் நாலு மாசம் கட்ட வேண்டியிருக்குது” 

“காத்துக்கிட்டு கெடந்தோம்… ஊர்ப்பக்கம் போயிரமாட்டமான்னு…” என்றான் சுப்பிரமணி சிரித்துக்கொண்டே. “ரொம்ப சந்தோசம் பாபி” என்றார் பாய்.   

“உங்க ரெண்டு பேருக்கும் ‘சம்பள அட்வான்ஸ்’ எதுவும் கிடையாதுன்னு முத்து சொல்லிட்டான். அதுனால  உங்க ரெண்டு பேருக்கும் ’பொங்கல் போனஸ்’ நான் தர்றேன். அண்ணாச்சி குடுத்தா அதையும் வாங்கிக்குங்க… இது ஸ்பெசல். ஒங்க மூணு மாசச் சம்பளம். அதுக்கு முன்னால நீங்க ஒண்ணே ஒண்ணுதான் செய்யணும்” என்று பெட்டியிலிருந்து ஒரு பத்திரத்தை எடுத்து நீட்டினான் பாபி. அதில் துர்கா மண்டியில் வேலை செய்ய ஒப்பந்தத்தில் ஏற்கனவே நான்கு பேர் கையெழுத்திட்டிருந்தனர். கடைசியாகச் செந்திலின் கையெழுத்தும் இருந்தது. “செந்திலும் கெளம்பிப்போய்ட்டான். மத்தியானம்தான் கையெழுத்துப் போட்டான். இந்நேரம் எஸ்.ஆர்.பிக்கி சரக்கு வந்த லாரில ஊருக்குப் போயிட்ருப்பான்…” மார்க்கெட்டில் நன்றாக வேலை தெரிந்த அனுபவம் மிக்க, ஒட்டஞ்சத்திரம்  சுற்று வட்டாரத்தில் சொந்த ஊர் உள்ள ஆட்களைக் குறிவைத்து ஒருவருடமாகவே வேட்டையாடி ஊருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான் பாபி. மாரியும், ஏழுமலையும்தான் பாக்கி. அப்புறம் கங்கம்மா… அவளுக்கு வேற பத்திரம் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான் பாபி. 

“சரி… ஒங்களுக்குப் படிக்கத் தெரியாது. நானே படிச்சுக்காட்டிர்றேன்…” என்று பத்திரத்தைப் படிக்க ஆரம்பித்தான் பாபி. அவர்களுக்கான சம்பளம், வார விடுமுறை, இன்சூரன்சு, போனசு என்று ஒவ்வொன்றாகப் பாபி படிக்க படிக்க முகம் மலர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இதுதான் கடைசிப் பாயிண்டு… தொழிலாளர்கள் கடையில் பணமாகவோ,பொருளாகவோ கையாடல் செய்தாலோ, வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றாலோ அந்தப் பணமோ அல்லது பொருளின் மதிப்போ அவர்களின் சம்பளப்பணத்திலிருந்து பிடிக்கப்படும். அதே குற்றத்தை மறுபடியும் செய்தால் சம்பளப்பிடித்தம் போக, அவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று படித்துவிட்டு அவர்கள் முகத்தைப் பார்த்தான் பாபி.

“இன்னொருத்தர் காசு நமக்கெதுக்கு பாபி?” என்றான் சுப்புரமணி அரை சிரிப்போடு.

“அப்ப போனசு… பாபி?” என்றார் பாய்.

“புதுக்கடைக்கி போன மொத நா ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்துப் போட்டு வாங்கிக்கிடலாம்” என்றான் பாபி.

‘த்தா… விடாக்கண்டனா இருக்கானே?’ என்று மனதுக்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டே ‘அதுதானே நியாயம்’ என்பது போல தலையை ஆட்டிக்கொண்டார் பாய்.  


சுப்புரமணி கையெழுத்துப்போடவும் ‘மச்சான் எப்பவரப்போற மச்சான் எப்பவரப்போற’ என்று அவனுடைய ‘செல்லில்’ ’கால்’ வரவும் சரியாக இருந்தது. “இந்த பாட்டுக்கெல்லாம் இனிமே வேலையில்ல. இனிமே எப்ப வேண்ணாலும் போய் ‘சார்ஜ்’ போட்டுக்கிறலாம், என்ன சுப்புரமணி?” என்றார் பாய் கையெழுத்துப்போட்டுக்கொண்டே. “நான் என்ன, ஒங்களை மாரி ஊர் ஊராப் போயி சார்ஜ் போட்டுக்கிட்டு இருக்குறவனா?என்ன பாபி?” என்றான் சுப்புரமணி. “காலைல கள்ளச்சாவி போட மொத ஆளா நின்னதப் பாத்தமே, என்ன பாபி?” என்றார் பாய் சத்தமாகச் சிரித்துக் கொண்டே.

பாபியும் சிரித்தான். அவன் படித்த கடைசிப் ‘பாயிண்டு’ மட்டும் அவனுடைய சொந்தச் சரக்கு. பத்திரத்தில் இல்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...