‘பௌத்தம் என்பது மாயமல்ல. அதை உங்கள் வாழ்வில் அனுமதித்த கணமே அற்புதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது. நீங்கள் எந்தளவுக்கு அதன் சாரத்தை உள் வாங்குகிறீர்களோ அதற்கேற்ப உங்களிடம் மாற்றங்கள் நடக்கும். அதற்கு நானே சாட்சி’
ரூப்நாத்தில் கற்பாறையொன்றில் செதுக்கப்பட்டிருந்த கணவர் அசோகரின் செய்தியை வரிவரியாக வாசித்தார் ராணி வேதிதாதேவி. சமஸ்கிருதத்தோடு பாலியிலும் பிராகிருத மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது. சக்ரவர்த்திக்கு ரூப்நாத்தில் மட்டுமல்லாது பேரரசெங்கும் தனது செய்திகளைப் பாறைகள், ஸ்துாபிகள், கம்பங்களில் செதுக்கும் வழக்கமிருந்தது. அது அவர் நாட்டு மக்களுக்கும் நாளைய வரலாறுக்கும் விடுக்கும் செய்தி என்று சொல்லிக்கொண்டனர். உஜ்ஜையினிக்கு அருகிலிருக்கும் ரூப்நாத்துக்கு ராணி அன்று நேரிலேயே சென்றிருந்தார். களிறென மதர்த்து நின்றிருந்த அப்பாறை நேர்த்தியுடன் வடிவாக்கப்பட்டிருக்க, அதில் எழுத்துகள் புத்தம்புதியனவாய் செதுக்கப்பட்டிருந்தன. ‘தேவனாம்பிய பியதஸி…’என்று தொடங்கியிருந்த எழுத்துகளின் வரி வடிவின் மீது ராணி வேதிதாதேவி தன் விரல்களைக் கொண்டு வருடினார். “தேவனாம்பிய பியதஸி…(கடவுளுக்கு பிரியமானவர்)”வாய்விட்டுச் சொல்லிக் கொண்டார். இப்போதெல்லாம் அவர் கணவர் தனக்குத் தானே அப்படித்தான் விளித்துக் கொள்கிறாராம். “அவர் கடவுளுக்கு மட்டும் பிரியமானவர் அல்ல. எனக்குமே… அவருக்குமே நான் பிரியமானவள்தான். ஆம்… அதைதான் அவர் குறிப்பிடுகிறார். இவை எழுத்துகளல்ல. என் கணவரி்ன் மனம்… அவரின் குரல்… அவரின் உணர்வு… அவர் என்னிடம் தன்னை அறிவிக்கிறார். அவர் என்னுடன் உரையாடுகிறார். ஆம்… இவையெல்லாம் எனக்கான செய்தியே…”துள்ளிய மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்து வாசித்தார்.
‘தொடக்கத்தில் பௌத்தத்தைப் பெயரளவில் மட்டுமே ஏற்றேன் என்பதால் என் வாழ்வில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மெல்ல மெல்ல என் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் பிறகுதான் நான் மாற ஆரம்பித்தேன்’
“ஆம்… இவ்வரிகளுக்கு நான் சாட்சி. நானே சாட்சி…” தேவியின் விரல்களும் மனமும் வார்த்தைகளின் பள்ளங்களில் சிக்கிக் கொண்டன.
ராணி வேதிதாதேவி பரிவாரங்களை விலக்கிவிட்டு எண்ணங்களைத் துணைக்கழைத்துக் கொண்டு மாளிகையின் பிரத்யேக பாதை வழியே நதிக்கரைக்கு வந்திருந்தார். பொழுது நள்ளிரவுக்கும் விடியலுக்கும் இடைப்பட்டிருந்தது. நிலவற்ற வானம் பிள்ளைகளற்ற வாழ்வைப் போல வெறிச்சிட்டிருந்தது. கால்கள் அனிச்சையாகப் பொதுப்படித்துறையை நோக்கி நடந்தன. ராணி என்ற பிம்பத்தின் பொருளை அவர் விரும்பியதுமில்லை, ஒட்டிக்கொண்டு விட்ட அதனை அவர் பொருட்படுத்திக் கொண்டதுமில்லை. தொலைவுப் பார்வைக்கு இருளென தோன்றிய அப்பரப்பு அருகாமைக்கு வந்ததும் நெளியும் நதியாக மாறியபோது அதன் சலசலப்புகளும் கேட்கத் தொடங்கின. படித்துறை ஆளரவமற்றிருந்தது. அவள் அங்கேயே அமர்ந்துக் கொண்டாள். வெளியில் பரவியிருந்த இருளைக் கண்களுக்குள் செலுத்திக் கொள்வதுபோல விழிகளை மூடிக் கொண்டாள். உஜ்ஜையினியின் உயர் கோபுர விளக்குகளின் ஒளி அவளைக் குறுக்குவெட்டாக வகுந்து வெளிச்சமும் இருளுமாகக் காட்டியது. நடுத்தர வயது. மாநிறத்தில் ஒடிசலான தேகம். நேர்த்தியான முகத்தில் அலையாடும் பெரிய கரிய விழிகளென அவளைச் செதுக்கியது போக மீதமிருந்த ஒளி ஸ்தூப கம்பம் போன்று நதியில் விழுந்து சிதறல்களாகப் பரவியிருந்தது. விதிஷாவிலிருக்கும் அவளுடைய மாளிகையின் உயர்மாட விளக்கின் ஒளிகூட அவ்வாறே பரத்வாஜரின் புத்திரியான ராத்திரிதேவி தேஜஸ்வினியான சாவித்திரியிடம் வானை ஒப்படைக்கும் வரை அச்சிறுநகரின் அடையாளமென ஒளிரும். அவள் உஜ்ஜைனிக்கும் சாஞ்சிக்கும் இடையிலிருக்கும் விதிஷாவைச் சேர்ந்த பெருவணிகரின் மகள். அது மட்டுமே அவள் அடையாளமாக இருந்திருக்கலாமோ… ஆம் என்றோ இல்லை என்றோ எதையும் எண்ணுவதற்கில்லை. ஆனால் ரூப்நாத்துக்கு சென்று வந்ததிலிருந்து அவளுக்குக் கணவரைப் பற்றிய எண்ணங்கள் வந்து கொண்டேயிருந்தன.
அவரை அவள் முதன்முதலில் சந்தித்ததும் இம்மாதிரியான பாதி இரவைக் கடந்த பொழுதொன்றில்தான். அப்போது அவர் உஜ்ஜைனியிலிருக்கும் அவளுடைய தந்தையாருக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.உஜ்ஜைனிக்கு வரும் அரசக் குடும்பத்தவரோ அயல்தேசத்து வணிகர்களோ பெருஞ்செல்வந்தர்களோ எவரெனினும் அவளுடைய தந்தையாரின் விருந்து உபசரிப்பிலிருந்து தப்ப முடியாது. அதில் அவருக்குப் புகழும் வணிக இலாபமும் இருந்தது. அதற்காகவே அவர் அலங்காரமான பெருமுகப்புகளும் தூண்களும் ஆரவார மண்டபங்களும் ஆடம்பர அறைகளையும் கொண்ட விருந்தினர் மாளிகையை உஜ்ஜையினியில் அமைத்திருந்தார். அதுவும் அவருடைய தற்போதைய விருந்தினர் சாமானியர் அல்ல… மகத ராஜ்ஜியத்தின் இளவரசர் அசோகர். பேரரசர் பிந்துசாரரின் மகன். பரந்து விரிந்துகிடக்கும் மகதத்தின் ஒரு பகுதியான அவந்தியைக் கண்காணிக்க வேண்டி பேரரசர் பிந்துசாரர் மகனை அப்பகுதியின் ஆளுநராக நியமித்துப் படை பரிவாரங்களோடு அங்கு அனுப்பி வைத்திருந்தார். இவரே மகதத்தின் வருங்கால சக்ரவர்த்தி என்றனர் சிலர். சிலரோ சக்ரவர்த்தி பிந்துசாரருக்கு இந்த மைந்தன் மீது அத்தனை பிரியமில்லை. மூத்தவனான சுகிமாவையே அவர் மன்னராக்க விரும்புவார் என்றனர். அசோகர் இருக்கையில் அது அத்தனை சுலபமில்லை என்றனர் சிலர். எதுவாக இருப்பினும் இளவரசர் அசோகர் மகாஜனபதங்களை விழுங்கி பெரும் பேரரசென நிமிர்ந்து நிற்கும் மகத பேரரசரின் பெருமைமிகு மைந்தர் என்பதில் மாற்றில்லை.
அன்று உஜ்ஜையினி நகரமே இளவரசரின் வருகைக்கான கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. இளவரசர் மரியாதை நிமித்தங்களை முடித்துவிட்டு விருந்தினர் மாளிகையிலிருந்தார். மாளிகை பாதுகாவலர்வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பெருந்தலைவர்கள், காவலதிகாரிகள், கருவூல உயரதிகாரிகள், படைத்தலைவர்கள், ஊர் மன்றங்களின் தலைவர்கள், பெருவணிகர்களென நிரம்பி வழிந்த அம்மாளிகை தன்னியல்புக்குத் திரும்பியபோது நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. அன்றைய நாளுக்கான அலுவல் திட்டத்தில் மாளிகைக்குச் சொந்தக்காரர்களான தேவியின் குடும்பத்தாருடனான சம்பிரதாய சந்திப்பு மட்டும் மீதமிருக்க, இளவரசரிடமிருந்து வந்த அழைப்பு தங்கள் வாழ்க்கைக்கானது என்பதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை. அரச குடும்பத்தாரைச் சந்திப்பது அவளுக்கு இதுவே முதன்முறை. இளவரசர் அணிகளையும் ஆடம்பர உடைகளையும் கழற்றியதில் இளைஞராகியிருந்தார். சராசரிக்கும் சற்று குறைவான உயரம். படர்ந்த முகமும் அகன்ற தோள்களும் அதற்கேற்ப நீண்ட கைகளும் கொண்டிருந்தார். அவருக்குப் பௌத்தத்தின் மீது லேசான பற்றுதல் உண்டு என்று கேள்விப்பட்டிருந்த வணிகர் அதை பற்றி பேச்செடுத்தார். வாடிக்கையாளரின் திருப்தி என்பதன் முழுப்பொருளையும் உணர்ந்தவர் அவர்.
ஆனால் இளவரசரின் பதில் நேருக்குமாறாக இருந்தது.
“ஏற்கனவே அறுபத்திரண்டு கொள்கை… ஆளுக்கு ஆள் ஒரு சமயநோக்கு… சமணமும் ஆசீவகமும் கொடிக்கட்டுகிறது. போதாக்குறைக்கு இந்தச் சாக்கிய இளவரசர் உடலை வருத்திக் கொண்டு ஏதோ ஒரு நெறியைக் கண்டுப்பிடித்து வைத்து விட்டார்… பாடலிப்புத்திரத்திலிருந்து உஜ்ஜயினி வரை நான் பயணித்த வழியெங்கும் இளைஞர்கள் மொட்டைத்தலையும் காஷாய உடுப்புமாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்” அவருக்கு ஆண்மை மிகுந்த கம்பீரமான குரல்.
வேதமரபினர் அதிகமிருந்த அப்பகுதியில் தேவியின் மனமோ புத்தரிடம் நிலைக்கொண்டிருந்தது. எதிர்மறையாகப் பேசிய இளவரசரிடம் வெடுக்கென்று எதையோ சொல்ல வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
“இளவரசரே… தாங்கள் பல்வேறு சமயப்போக்குகளையும் அதன் போதனைகளையும் முறையாகப் பயின்றவர் என்கிறார்கள். எல்லாவற்றிலும் உயர்ந்த நெறி புத்தநெறி என்பதை உணரவில்லையா தாங்கள்?” இளைஞரின் பார்வைத் தேவியைத் தொட்டெழுந்தது. அவளுடைய தந்தையும் மற்றவர்களும் பதறினர். இளவரசரிடம் குடிகள் கோபமுற முடியுமோ?
”உங்கள் கௌதமரின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட சமயக் கோட்பாடும் அதற்கு நீங்கள் தரும் இலக்கண விளக்கமும் உபநிடதங்களில் உள்ளவைதானே? அவர் கபிலரின் சாங்கிய மதக் கோட்பாடுகளிலிருந்து செல்வாக்குப் பெற்றவர் என்றும் சொல்லலாம் அல்லவா? சாங்கிய காரிகையில் உள்ள முதல் சுலோகமே மானுட துக்கத்தைத் தீர்ப்பதே சிந்தனையின் நோக்கம் என்றல்லவா சொல்கிறது?” இளவரசரின் வார்த்தைகளில் செல்லமான சீண்டலிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்த கணமே மனம் பற்றிக் கொண்டதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
“உலகத்தில் உள்ள எந்தக் கருத்தும் எப்போதும் சமமாகவோ தொடர்பற்றோ இருப்பதில்லை. கருத்துகளுக்குத் துாய உருவம் ஏதுமில்லை என்பதை அறியாதவரா தாங்கள்?” அவள் இளவரசரின் சீண்டலை உணரவில்லை.
“அப்படியானால் புத்தர் எதையுமே புதிதாகக் கூறவில்லை… அப்படிதானே?”
“மகத இளவரசே… துக்கம் அறியாமையிலிருந்து உருவாகிறது. துக்கமில்லாத வாழ்வே விடுதலை. காமம், குரோதம், மோகம் போன்ற அகத்துயரங்களோ சமூகத்தாலோ மற்றவைகளாலோ நிகழும் புறத்துயரங்களோ பிரபஞ்ச இயக்கம், இயற்கை விதிகள் போன்ற மனிதச் சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களால் விளையும் இயற்கைத் துயரங்களோ எதுவாகிலும் அவற்றை காரண காரிய ரீதியாகப் புரிந்துகொள்ளும் அறிவே விடுதலை என்கிறது சாங்கியம். கௌதமர் ஆசையே துன்பத்திற்கெல்லாம் காரணம் என்கிறார். சமணம் வன்முறையே கூடாது என்கிறது. என்னை இறப்பிலிருந்து விடுதலை செய்து விடு என்கிறார்கள் ரிக் வேத ரிஷிகள். வாழ்க்கையெனும் கொடிய பயணத்தில் இறுதியாக நிகழும் மரணம் அனைத்தையும் மறக்கடிக்கும் பெரும் விடுதலையல்லவா என்கிறார் கௌதமர்”
“நீ என்ன சொல்ல வருகிறாய்? நடப்பவையனைத்தும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. என்ன முயன்றாலும் அதை மாற்ற முடியாது என்கிறாயோ பெண்ணே?”
“ஓ… நீங்கள் ஆசீவகக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவரோ?”
அவர் அவள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இயல்பிலேயே பெரிய அழகிய விழிகள் அவளுக்கு. இமைகளின் மயிர் லேசாகத் தழைந்து நிமிர்ந்திருந்தது விழிகளை மேலும் அழகாக்கிக் காட்டியது.
“இளவரசே… இவ்வுலகு நிலையற்றது. இங்கு நிலவும் எவையும் துன்மமயமானவையே. அழிவுக்குட்பட்ட சரீரமும் ஆத்மாவும் இணைவதால் சாஸ்வதமான எதையும் ஏற்படுத்தி விட முடியாது. சிறிது காலம் சேர்ந்திருப்பதாலேயே ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டு விடவும் முடியாது. இங்கு எரிந்துக் கொண்டிருக்கும் விளக்குகளால் தொடர்ந்து ஒளியைக் கொடுக்க முடியுமா என்ன? எதுவும் நிரந்தரம் இல்லை. அதனை சாக்கியமுனியே உணர்ந்திருந்தார்” இளவரசரின் கண்கள் தன் விழிகளுக்குள் ஊடுருவதை அவளும் கவனிக்கத் தொடங்கினாள்.
“அப்படியானால் மகதமெங்கும் துறவு நிலைகளில் அலைபவர்களைப் பொருளற்று திரிபவர்கள் என்கிறாயோ நீ?”
“இளவரசே… அதுவல்ல நான் கூறுவது. பலிக் கொடுப்பது என்ற பெயரில் மிருகங்களை வதைத்துக் கொல்வதும் மனிதன் மனிதனாக இருப்பதையே எதிர்ப்பது போல உடலை வருத்திக் கொள்ளும் வினோத துறவு நிலைகளும் தீர்வென்று எதை முன் வைக்கிறது?” கருத்திலிருந்த தெளிவு வார்த்தைகளில் இல்லாது கோலமிடத் தொடங்கின.
“இம்மண்ணின் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவர்களைத் துறவை நோக்கி செலுத்துகிறது அல்லவா?” மாரன் இருவர் மீதும் பூ அம்புகளைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
பலவீனப்பட்டுப் போன வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்ததில் அவளையும் அறியாது குரலின் ஒலி சற்றே கூடியிருந்தது. “இளவரசரே… அத்தகைய துறவினால் என்ன பிரயோசனம்? அனைத்துக் கேள்விகளுக்குமான தீர்வையும் வழிகாட்டுதலையும் புத்தரின் நுண்ணறிவுதானே தேடிக் கொண்டு வந்தது”
“அப்படியானால் உபநிடதங்கள் பொருளற்றவை என்கிறாயா? அவையென்ன திடீரென்று வெடித்து முளைத்தா வந்தன? மலைகளிலுள்ள ஏரிகள் பல சேர்ந்து வளர்த்த நதி போன்றவை அவை. வேத சத்தியம் கை நழுவும் கட்டத்தில் அவதாரம் நிகழும் என்ற கீதையின் வாக்கை நம்பலாமெனில் முதலாவது அவதாரம் மீனல்ல… உபநிடதம்தான். மக்களின் அறியாமையெனனும் மகாசமுத்திரத்திலிருந்து வேதத்தை முதன்முதலாக எடுத்தாண்டது உபநிடதமே…”
“ஆமாம்.. ஆமாம்… யக்ஞத்திற்கெதிரான போராட்டக் களத்தில் உபநிடதமும் புத்தரும் கைகோத்து நிற்கின்றனரே…” அவளுக்கு மேற்கொண்டு பேசவியலும் எனத் தோன்றவில்லை. ‘இருவரும் ஓரணியில் இணைந்து விட்டோமோ… மனதிற்குள் எதுவோ நிறைவதை உணர முடிந்தது. பௌதீக நெறிகளுக்கு முன் பௌத்த நெறி தோற்று நின்று விடுமா? கற்றறிந்த ஞானமெல்லாம் கை நழுவிப் போய் விடுமோ?’ அவளுக்கெதுவும் விளங்கவில்லை. ‘அவர்தான்.. அவரேதான்…’எனப் பதறும் உள்ளத்தை அடக்கவும் இயலவில்லை. இப்போதும் அதுதானே நிலைமை? நினைவுகள் துல்லியமானவை. நேற்று நடந்தவைப் போல அனைத்தையும் இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது. மறப்பதற்கு வழியிருப்பின் வலிகளுக்கு வேலையில்லை. அவள் வெற்றுச் சிரிப்போடு எங்கோ துழாவும் பார்வையை நகர்த்திக் கொண்டாள்.
நதிக்கரை விடியலுக்கு முந்தைய தயார் நிலையிலிருந்தது. எளிய உடைகளும் இருளின் கருமையும் அவளை இனங்காட்ட போவதில்லை. அந்தணர்கள் அதிகாலையின் அனுட்டானங்களை நிறைவேற்ற ஆயத்தமாகியிருந்தனர். பௌத்தம் ஆட்சியாளர்களின் மதமாக இருந்தாலும் அங்கு பிராமணர்களின் மதிப்புக்குக் குறையேதும் வந்து விடவில்லை.
‘சோதியின் மகளான உஷையே.. நீ தினந்தோறும் உன்னுடைய இன்புறச் செய்யும் நகையால் இருளை விலக்கி எங்களுக்குச் செளபாக்கியத்தை அளிப்பவளாகப் பிரகாசிக்கிறாய்.
உத்தமத் தலைவியே… எங்கும் புலப்படுபவையும் பிரகாசிப்பவையும் மங்களமாகவும் இருக்கும் உஷையே… விருப்பந்தகுந்தவையும் வண்ணமுள்ளவையுமான செல்வங்களைச் சுலபமாய் பெறுவதற்குரிய வழிகளை எங்களுக்கு அளிப்பாயாக…’
அவர்கள் நதியின் நீரை இரு கைகளாலும் முகர்ந்தெடுத்து நதிக்கே அர்ப்பணித்தனர். அந்தண இளம் பெண்ணொருத்தி சண்டீதேவிக் கோவில் பூசனைக்கு மங்களக்குடத்தில் நீரள்ளிச் சென்றாள். நிச்சயம் அவளுடைய கணவன் காசியிலோ ஸ்ராவஸ்தியேிலோ தட்சசீலத்திலோ ஏதாவதொரு கல்விக்கூடத்தில் பயின்றுக் கொண்டிருப்பான். படிப்பு முடிந்ததும் ஆசார்யபாதரோ குருவோ அவர்களை ‘ஸத்யம் வத… தர்மம் சர…’என்று ஆசிர்வதித்துத் தலையில் பரிவட்டம் கட்டி அனுப்பி வைத்து விடுவர். பண்டிதர்களாகி விட்ட இவர்கள் இனி மைதீட்டிய கண்களும் மணி குண்டலம் அணிந்த காதுகளுமாகக் காவிக்கரையிட்ட சாதராவைத் தோளில் போட்டபடி குடை சகிதம் உயர்த்திக் கட்டிய குடுமியும் பாதரட்சையுமாக நகர வீதிகளில் உலா வரலாம். அயோத்தி, பாடலிபுத்திரம், ஸ்ராவஸ்தி, காசி என எங்கு வேண்டுமானாலும் சென்று அரச சபைகளில் சன்மானம் பெறலாம். புரோகிதர்களாகப் பதவியேற்று அரசரின் மந்திரி சபைகளில் இடம் பெறலாம். அவர்களின் விருப்பமும் விடைகளும் அதற்குள் அடங்கி விடுவதால் வாழ்க்கையும் நிறைந்து விடுகிறது. ஆனால் ததாகதரும் வர்த்தமானவரும் தேடல்களுக்காகக் கிரீடங்களைத் துறந்தவர்கள்.
பௌத்த சங்கத்தைச் சேர்ந்த பிக்குகளின் கூட்டம் மொட்டைத்தலையும் துவராடையுமாக நதியை நோக்கி வரத் தொடங்கியது. இளைஞர்களைக் கெடுத்து பிக்குகளாகவும் பிக்குணிகளாகவும் அலைய விடுகிறார் என்ற பழிக்குச் சாக்கியமுனி அஞ்சுவதேயில்லை. இளவரசனாகப் பிறப்பெடுத்திருந்தாலும் நிலையாமையின் நிச்சயத்தன்மையும், ஆசைக்கும் துன்பத்துக்குமிருக்கும் தொடர்பும் அவரை நிலைக்கொள்ளவிடாது அரண்மனையிலிருந்து வெளியேற்றியபோது தான் மட்டுமே வகிக்கக்கூடிய கணவன் என்ற உறவையும் தகப்பன் என்ற உரிமையையும் பொறுப்பேயின்றி துறக்க முடிந்த அவரால் தன் மீது விழும் பழிச்சொற்களை அமைதி ததும்பும் அதரங்களில் வழியும் புன்னகையின் வழியே கடக்கவும் முடியும். மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்யவும் முடியும்.
நதியையொட்டி அமைந்த விஹாரையிலிருந்து அகிலும் அத்தரும் கமழ்ந்தன. அவளுக்குப் பிடித்தமான மணங்களின் இணைவு. அவளையும் அவரையும் போல. அந்நாளில் உஜ்ஜைனிக்கும் விதிஷாவுக்கும் இடையிலிருக்கும் சிறு தொலைவைக் கூட அவர்களின் காதல் தொலைக்க வைத்திருந்தது. அவர் பாடலிபுத்திரத்திலிருந்து அத்தனை தொலைவைக் கடந்து உஜ்ஜைனிக்கு வந்ததன் காரணம் அவளில்லையென்றாலும் அங்கு அவர் பத்தாண்டுகள் செலவிட்டதற்கு அவள் மட்டுமே காரணம் என்பதை அவளால் நம்ப முடியும். குறுங்காடுகள், சிற்றோடைகள், காட்டாறுகள், நெருக்கமான வனங்கள், சிற்றோடைகள், நதிகள், அதன் கரைகளில் அமர்ந்து தியானிக்கும் துறவிகள், ஆசிரமங்கள், நகரங்கள் என அத்தனையும் கடந்து வந்தது அவளுக்காக மட்டுமே. ஆனால், எல்லாமே மாறியிருந்தது. மாற்றம் மட்டுமே நிலையானது. ஆரவாரங்களோடிருந்த கிரிவிரஜம், ராஜக்ருஹம் எல்லாம் இன்று முக்கியமிழந்து விட்டன. பாடலிபுத்திரம் பெருநகராகி விட்டது. அவந்தியின் தலைநகராகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உஜ்ஜையினி கூட நாளை புல்பூண்டுகளற்று போய் விடலாம். அதிகார வெறியோடும் ஆணவத்தோடும் ஆண்டு கொண்டிருந்த நந்தரின் ராஜ்ஜியத்தை எங்கிருந்தோ வந்த சந்திரகுப்தர் கௌடில்யரின் துணையோடு நிர்மூலப்படுத்தி விடவில்லையா? உறவுகளால் நிறைந்திருக்கும் உள்ளத்தின் உறைவிடங்களும் இப்படித்தான் வெற்றிடங்களாகின்றன போலும். இப்போது அவருக்குத் தேவிகள் பெருகிவிட்டபிறகு வேதிசாதேவி என்ற பெயர் கொண்ட தனது இடம் என்னவாக இருக்கும்? அவளுக்கு வியப்பாக இருந்தது. காலத்தால் விழுங்கப்பட்டு எடையற்று போன கேள்விகள் இப்போது மீண்டும் உயிர் பெறுகின்றனவா என்ன?
ஆனால் அவர்கள் வாழ்ந்தது பொய்யல்லவே… “ப்ரிய… தேவி” வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள். அவள் அப்படி அழைப்பதையே அவள் கணவர் விரும்புவார். சொரசொரப்பான தடித்த தோலாளான தன்னுடல் குறித்து முன்பு தனக்குத் தாழ்வுணர்ச்சி இருந்ததாகவும் இப்போது தன்னுடைய வீரமும் விவேகமும் மற்றவர்களால் அணுகவும் இயலாது என்று தன் மீது தான் கொண்ட நம்பிக்கை அதனை வென்று விட்டதாகவும் அவளிடம் கூறியபோது அவள் அவர் கண்களை உற்று நோக்கினாள். அவரால் கண்களால் ஒளியையும் காதுகளால் ஒலியையும் உணர முடியும் என்பார்கள். அதிகாரமும் கண்டிப்பும்மிக்க கூரிய அச்சிறுக்கண்கள் அவளைப் பொறுத்தவரை காதலாலானவை. அன்னையைப் பற்றி கூறுகையில் அவை கனிந்து விடும். சம்பாவில் பிறந்த பிராமணப் பெண்ணான அவருடைய தாயாருக்கு அவரும் இளவளலுமாக இரு மகன்களாம். பிந்துசாரருக்கு எண்ணற்ற ராணியர்களின் வழியே கணக்கற்ற புதல்வர்கள் இருப்பினும் தாயார் அவரிடம், “நீயே மகதத்தின் வருங்கால சக்ரவர்த்தி… அசோக சக்ரவர்த்தி…” என்பாராம். அப்போது அவர் கண்கள் கனவிலாழ்ந்து விடும். கனவிலாழும் கண்கள் ஆழமானவை.
”ஒ… உங்கள் தாயாருக்கிருந்த அதே நம்பிக்கை உங்கள் தந்தையாருக்கும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் கலகத்தை அடக்க உங்களைத் தட்சசீலத்துக்கு அனுப்பி வைத்த கையோடு இப்போது அவந்திக்கும் அனுப்பியிருக்கிறார்”
“தேவி…உன் கணிப்பு தவறு. என் தமையன் சுசிமாவை அரசனாக்குவதற்கு நான் தடையாக இருக்கலாம் என்றெண்ணி பாடலிபுத்திரத்திலிருந்து அவர் என்னை நகர்த்தி வைக்க எண்ணியிருக்கலாம் அல்லவா?”
“அய்யோ… இந்த அரசியலெல்லாம் எனக்குப் புரியாது. பிக்குணியாகத் தட்டை ஏந்திக் கொண்டு சென்று விட்டால் இவையெல்லாம் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை”
“என்னை விட்டுவிட்டு பிக்குணியாகச் சென்று விடுவாயோ நீ…?” அசோகர் அவளைப் பிடித்திழுத்து அணைத்துக் கொண்டபோது தான் ஒரு காலத்தில் பிக்குணியாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டதெல்லாம் எங்கோ பறந்து போனதாக உணர்ந்தாள்.
“மன்னராகி விட்டால் நீங்களும் வாளெடுத்து விடுவீர்களோ?” படபடத்த அவள் கண்ணிமைகளில் முத்தமிட்டவர், “பெண்ணே… வெட்டுவதற்குதானே வாட்கள் செய்யப்படுகின்றன. போர் இல்லையேல் கொல்லருக்கும் தச்சருக்கும் பிறப்பெதற்கு?” என்றார்.
“அவர்கள் வாழ்வதற்காக ஏதுமறியா குடிகள் இறக்க வேண்டுமா?”
“ஊனுண்ணுவதற்காக நாமும் அதைதானே செய்கிறோம். பெண்ணே… போர் ஷத்திரியர்களின் குலஅறம். வன்முறை ஷத்திரியத்தோடு ஒன்று கலந்தது. ஒரு ஷத்திரியர் தன் கடமையை நிறைவேற்றும்போது வன்முறையைத் தடுக்கவியலாது என்கிறது மகாபாரதம். போர்க்களத்தில் அர்ஜுனன் தயங்கி நின்றதற்குக் காரணம் வன்முறை கூடாது என்பதல்ல, உறவுகளுக்கெதிராக வன்முறையைப் பிரயோகிக்கலாமா என்ற மனக்கலக்கமே. கையில் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல. என்ன இல்லை என்று ஏங்குவதும் ஏங்கியது கிடைத்ததும் அடுத்தவொன்றை ஆக்கிரமிக்கத் தொடங்குவதும் அரச இயல்பு. நாடுகளுக்குப் போரே உயிர்த்துடிப்பு. அவைதான் அதிகாரத்தையும் செல்வத்தையும் கொண்டு வந்து சேர்ப்பவை”
“ப்ரிய… நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமைக் கொண்டுள்ளோமோ அவையே நம் செல்வம். மற்றவை நம்முடையவையே அல்ல”
“தேவி… இப்பிறவியில் உன்னை துறக்கும் உரிமை எனக்கில்லை. ஆனால், நீ என் செல்வமல்லவா…” அவளை மடக்கி விட்டதுபோல பார்த்தார்.
ஏதோ சரசரப்புக் கேட்டுப் பழைய நினைவுகளை ஒதுக்கி விட்டு திரும்பினாள் அவள். இளைஞனொருவன் பிடரி வரை புரளும் கேசத்தோடும் இழுத்துக் கட்டிய உத்தரீயத் தலைப்போடும் இருளிலிருந்து புறப்பட்டவன் போல அங்கு தோன்றினான். பாதரட்சைகள் இல்லாத அவனது பாதங்கள் மணலில் கூட வேகமாக நடந்தன. உத்தரீயத் தலைப்பில் பிச்சையாக வாங்கிக் கட்டியிருந்த மாவையும் பருப்பையும் சமைத்துண்ணும் வேகம். உபவாசத்தால் பசி எடுத்திருக்கலாம். பசி கொடியதுதான். ஆனால், தேவர்கள் பசியை மரணத்துக்காக ஏற்படுத்தவில்லை. மரணம் புசிப்பவனையும் அல்லவா பற்றுகிறது? அவள் காற்றில் அலைந்த குழல் கற்றைகளைக் காதுகளின் பின்புறம் செருகிக் கொண்டாள். அலையும் மனதைக் கூட அப்படி அடக்கி விட முடிந்தால் நல்லதுதான்.
அவர்களின் பத்தாண்டு வாழ்க்கையில் கிடைத்த மகிந்தனும் சம்யுத்தையும் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வந்த அழைப்போ செய்தியோ ஏதோவொன்று பாடலிபுத்திரத்தில் தந்தையார் பிந்துசாரர் நோய்வாய்பட்டிருப்பதைச் சொன்னது. அசோகர் தேவியிடம் சிக்கிக் கொண்ட தன் விழிகளை இப்போது விடுவித்துக் கொண்டேயாக வேண்டும். இது விடுவித்தலா அல்லது விலகுதலா? தற்காலிகமா அல்லது நிரந்தரமா… அவள் கண்களுக்குள் தேங்கியிருந்த ஓராயிரம் சொற்களுக்கு விடையேதுமில்லை என்பதால் அவர் காற்றைப் போல நழுவிச் சென்று விட்டாரா? உன்னை விட்டு விலகுவதுமில்லை… உன்னை கைவிடுதலுமில்லை என்றதெல்லாம் காமப்பிதற்றல்களா? பிள்ளைகளைக் கைக்கொன்றாகப் பிடித்துக் கொண்டு நிற்குமவளை விட அவருக்கு அவரது கனவுகளே முக்கியமானவை.
அன்று பெருமழைக்கான மேகங்கள் வானில் மிரட்டிக் கொண்டிருந்தன. மண் எழும்பி துகள்களாகப் பறந்தன. கழிகளிலிருந்து அறுபட்ட கொடிகளும் உடைகளும் சிறகு முளைத்துப் படபடத்தன. காற்று உயிர் கொண்டுஓலமிட்டது. கருமேகங்கள் இரவாக்கிய பகலை மின்னல் மீட்டுக் கொண்டு வந்தது. பெருமுரசம் ஒலிப்பது போல மேகங்கள் மோதிக் கொண்டன. பெருந்துளிகள் வானையும் மண்ணையும் இணைக்க தொடங்க, வெளி மங்கிப்போனது. தொடக்கமொன்று இருப்பின் முடிவும் இருக்கதானே வேண்டும்? பெருமழை ஓய்ந்திருந்தது. மரங்கள் சாய்ந்து கிடந்தன. குடியிருப்புகள் நீரில் மிதந்தன. தேகம் உப்பிய விலங்குகள் கரையொதுங்கிக் கிடந்தன. பூமி வெளிறியிருந்தது. இனி அது எல்லாவற்றையும் சரி செய்தாக வேண்டும். அவள் மாளிகையின் பெருமாடத்தில் பெருகியோடிய நதியைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். அவளுக்கெல்லாமே புரிந்திருந்தது. இனி அவர் அவளின் ஆசை கணவரல்ல. மகதத்தின் சக்ரவர்த்தி. பௌத்தத்தைத் தழுவிக் கொள்ளுவார் என்ற அவளின் உறுதியான எண்ணத்தைக் குலைத்தவர். அரியாசனம் முறையாக வந்து சேராத நிலையில் அதை அவர் பலவந்தமாகக் கைப்பற்றியிருந்தார். அதற்காகக் கொலைகளைக் கூட செய்திருக்கிறார், அதுவும் உடன் பிறந்தவரையே. மன்னரான பிறகு கொலை செயல்களெல்லாம் அவருக்கு வேடிக்கை விளையாட்டுகளாகிவிட்டன. மக்களிடமிருந்து ஒதுங்கி வாழும் நிர்கிரந்தா துறவிகளைக் கூட ஒழிக்க முற்பட்டிருக்கிறாராம். தகவல்கள் நிலைகுலைய வைத்தன. இது முறையன்று… முறையேயன்று. தனக்குரிய அரியணையைத் துறந்த சாக்கியர் எங்கே? மூத்தவனைக் கொன்று அரியணை ஏறிய கணவர் எங்கே?
கரையில் சலசலப்புகள் தொடங்கியிருந்தன. குளிர்கால தீ முட்டங்கள் ஆங்காங்கே கனன்று கொண்டிருந்தன. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அரங்கத்தில் நடந்து கொண்டிருந்த மகாபாரதக்கதை முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. கதிரவனைப் பூமிக்கு அனுப்ப ஸாவித்ரி தோது பார்த்துக் கொண்டிருந்தாள். வீதிகள் நடமாட்டத்துக்கு ஆயத்தமாகி கொண்டிருக்க, ஆயர் தெருக்களில் பரபரப்பு தொடங்கியிருந்தது. ஆயர்ப்பெண்கள் பால் குவளைகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். நெய்யுருக்கும் கலயங்கள் வெண்ணைக்காகக் காத்திருந்தன. பசுக்கள் நிறைமடிக்ச் சுமந்து கொண்டிருக்க, கன்றுகளின் உயிர்த்துடிப்பு அதனை அவிழ்த்து விட போகும் கயிற்றின் முடிச்சுக்குள் தவித்துக் கொண்டிருந்தது. மேலைக்காற்று மாந்தோப்பின் கனிகளைத் தொட்டுக் வாசம் பரப்பிக் கொண்டிருக்க, பலாசமரங்களிலும் மூங்கில் அடர்வுகளிலும் தங்கியிருந்த பட்சிகள் அந்நாளைய விடியலின் கூவல்களுக்காகத் தொண்டையைச் செருமிக் கொண்டன. எங்கோ மயில் அகவியது.
அவள் உடையால் உடலை இழுத்து போர்த்திக் கொண்டாள். தந்தைக்கு அவர் மீதிருந்த அவநம்பிக்கையோ கசப்போ அல்லது தனது மூத்தமகன் மீது அவர் கொண்டிருந்த மிகை அன்போ ஏதோவொன்று அவள் கணவரை வருத்திக் கொண்டிருந்த நேரத்திலும் சரி, அரசியலின் மிகைச்சிக்கல்களுக்குள் அவர் மாட்டிக் கொண்ட போதிலும் சரி, அவளின் அன்பும் ஸ்பரிசமுமே மந்திரம் செய்து தன்னை மீட்டன என்று அவள் காதோரம் கிசுகிசுத்திருக்கிறார். ‘ஆனால் ப்ரிய… எந்த மந்திரங்கள் என்னை மீட்கப் போகின்றன, நம் பிள்ளைகளையும் நீங்கள் அழைத்துக் கொண்டு விட்ட பிறகு?’
கௌந்தவனக்குடில்களிலிருந்து வந்த தந்தையும் மகனுமான புரோகிதர்கள் இருவர் நதி தொட்டுவிடாத தொலைவில் யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். நதி எழவிருக்கும் அக்னிக்காகக் கரிய விழிகளுடன் காத்திருந்தது. அசுத்தங்களைத் தன்னுள் ஏற்று துாய்மையற்றுப் போகும் நதி தாயையொத்தவள். ஆனால், அவளால் பெரிய அழிவுகளையும் கொண்டு வர முடியும். சபிக்கப்பட்ட அவ்வாண்டின் தொடக்கம் அப்படிதானிருந்தது. அரண்மனையின் திறந்திருந்தசாளரம்வழியாகப்பாய்ந்து வந்தகாற்று கதவுகளை அறைந்து விளக்குச்சுடர்களை அணைத்துக் கதவைத் தள்ளிக் கொண்டு மறுபக்கம் பாய்ந்தது. நீர்த்துளிகள் கையகலத்திற்கு விரிந்து பூமியை அறைந்தன. அது அவளுக்கான சேதி. அவள் கணவர் கலிங்கத்தைத் துவம்சம் செய்து கொண்டிருக்கிறாராம்.
எப்படி மனம் வந்தது அவருக்கு? களப்பலி லட்சம் தொடும் என்கிறார்கள். அடிப்பட்டு வதைப்பட்டு வலியோடு மரணித்துப் போன உயிர்கள் அதை விட அதிகமாம். பஞ்சமும் பட்டினியும் வலியும் ஓலமும் நோயும் மரணமுமாக மக்கள் நிலைக்குலைந்து கிடக்கின்றராம். இதற்கு முன்பாக அவர்களும் மாளிகைகளிலும் மாட வீடுகளிலும் ஏராளமான பசு செல்வங்களோடும் விளைந்து தலைச்சாய்த்திருக்கும் பயிர்கள் கொண்ட வயல்களோடும் விதவிதமான தின்பண்டங்களை உண்டும் ஒழிந்த நேரங்களில் பெண்டுபிள்ளைகளோடு நாடகங்களையும் நடனங்களையும் கண்டுக்களித்தும் வாழ்ந்தவர்களே. வடக்கிலிருந்து பெருஞ்சாவு வந்து தங்களை ஒருமித்து அணைத்துக் கொள்ளும் என்று அவர்கள் அறிந்திருப்பார்களா? ஆனால் அவள் கணவர் அதை அறிந்திருந்தார். அந்த அழிவை திட்டமிட்டு கொண்டு வந்தவரே அவர்தானே. இத்தனை அழிவும் எதற்கு? கலிங்கத்தை மகதத்துடன் இணைத்த பிறகு பேரரசரான அவர் இன்னும் பெருபேரரசராக ஆகி விடலாம். அதன் பிறகு…? படைகளைத் திரட்டிக் கொண்டு இன்னும் தெற்கே கூட சென்று அங்கிருக்கும் நாடுகளை இம்மாதிரி பேரழிவுக்குள்ளாக்கலாம். அதற்கு பிறகு…?பிறகு? எல்லோரும் சந்திக்கும் முடிவுதானே அவருக்கும் வாய்க்கும்… மண்ணுக்குள் செல்ல போகும் உயிர் ஏன் இத்தனை ஆசை கொள்கிறது? ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் ததாகதர். ஆனால் அவரோ…
ஆனால் அவர் மாறியிருந்தார். அவளுடைய கணவர் அவளைப் போலவே பௌத்தத்தைப் பற்றிக் கொண்டு விட்டார். தலைவி பற்றுவதற்கும் நாட்டின் தலைமகன் பற்றுவதற்கும் வித்தியாசமிருந்தது. ஆரண்ய வாழ்வு மேற்கொள்ளுமொருவர் ப்ரியமான உணவைத் துறப்பது பெரியதல்ல. அவர் அரண்மனை வாழ்வில் இருந்தபடியே சக்ரவர்த்தியென்ற மனநிலையைக் கடந்தவர். அதிகாரத்தை அன்பாக்கியவர். ஞானத்தை நெறியாக்கியவர். பௌத்தத்தை பற்றிக் கொண்டாலும் வேத மதத்துக்கோ அருகநெறிக்கோ ஆசீவகத்துக்கோ அவர் இழிவு செய்து விடவில்லை. உடலைவிட்டு பிரிந்து ஆன்மா தனித்து வாழும் என்பதை லோகாயுதம் ஏற்பதில்லை. எல்லா இன்பங்களையும் அள்ளியள்ளி நுகருங்கள் என்கிறது சார்வாகம். விரத்யர்கள் உடல் வருத்தமுற வினோத சடங்குகளில் ஈடுபடுகின்றனர். மாற்றுப் பார்வைகள், வேறுபட்ட சிந்தனைக் கோணங்கள், கேள்விகள், முரண்கள், மந்திரம், மாயம் இவற்றோடு தத்துவமும் அறிவியலும் வளர்வதற்கு அவள் கணவரின் ஆட்சியில் தடையேதுமில்லை. எவற்றையெல்லாம் துறக்கும் உரிமை கொண்டுள்ளோமோ அவையே நம் செல்வம் என்று சொன்னேன் அப்போது. “இப்போது அவர் செல்வந்தர். ஆம்… அவர் எல்லாவற்றையும் துறந்து செல்வந்தராகி விட்டார். நான் தனிமனித துயரத்தில் மேலோங்கி வறியவளாகி விட்டேன்.”
அவள் கால்களைக் குறுக்கி கைகளால் இறுகக் கட்டிக் கொண்டாள்.
ஆனால் அதற்கு நான் காரணமல்லவே… ததாகதர் ராகுலனை அழைத்துக் கொண்டதுபோல அவள் கணவரும் தன் பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டார். அவர்களனைவரும் ஒன்றிணைந்து கொண்டனர். ஆனால் அவள்… அவளிடமிருக்கும் பொன்னும் பொருளுமா அவள்? யசோதரையிடம் அவை இல்லையா? அன்றைய நாளின் இனிமையான உறக்கத்திற்குப் பிறகான விழிப்பு யசோதரைக்கு வாழ்நாள் முழுமைக்கும் தீராத இருளை அள்ளி சேர்த்ததைப் போல தான் அவளுக்கும் வாய்த்திருக்கிறதா? அவளென்பது என்ன? அவள் மட்டுமா? அல்லது அவர்களும் சேர்ந்ததா? தனியே வந்து தனியே போகும் வாழ்க்கையில் உறவுகளின் இடமென்ன? கற்றறிந்த ஞானநெறிகளை உள்வாங்கவியலாது தடுக்கும் வலைப்பின்னல்களா உறவுகள்? ஞானத்தைத் தேடி சென்ற சித்தார்த்தன் உறவுகளை சுமந்துக் கொள்ளவில்லையே?
ஞானம் பெற்று திரும்பியவர் அதனை உபதேசிக்க இராஜகிருஹம் வந்தபோது சுத்தோதனரின் அரண்மனையிலிருந்து அழைப்பு வருகிறது. பூரண மெய்யறிவு எய்திய அவர் மன்னரின் அழைப்பையேற்று புத்தரென கபிலவஸ்து வருகிறார். பெருமைமிகு தோற்றமும் புகழும் கொண்ட மகனார் முன் சுத்தோதனர் வாய் பொத்தி நிற்கிறார். ஞானவொளி வீசும் இந்த மாபெரும் சாமணர் அவருடைய மகன் அல்ல. மகான். தனது வலிய இரக்கத்தால் ஆட்சியதிகாரத்தைத் துறந்து சமய மேம்பாடெனும் உன்னத நோக்கைக் கண்டு அதனை மனிதக்குல விடுதலைக்குப் போதிப்பவர். தம்மம் தந்தவர். நோக்கம் ஏதுமற்ற தன்னலமின்மை என்றவொன்று இவ்வுலகில் இருக்க முடியாது என்ற கூற்றை மாற்றிக் காட்டியவர், பூரணர், புத்தர். மெய்மையின் தலைமகன். மனிதக் குல போதகர்… ஆனால்… ஆனால்… இவர் என் மகனல்லவா? சுத்தோதனர் தளர்ந்தோடும் இதயத்தை இறுகப் பிடித்துக் கொண்டார். இல்லை… இவர் என் மகனல்ல. கொண்டது யாவும் தனக்கே உரியதென்று எண்ணுதல் தவறானது.
அக்னியின் வெம்மை எட்டியபோது அவள் முட்டிகளின் மீது சாய்த்திருந்த தலையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.
எல்லா இடங்களிலும் எரியும் நெருப்பு ஒன்றே
உலகை ஒளிரச் செய்யும் கதிரவனும் ஒன்று
இவ்விடமனைத்தையும்
இளைஞனும் அறிஞனும் மனையைப் பாலிப்பவனும்
அவிகளை ஏந்திச் செல்பவனும்
ஆகுதிகளை ஏந்திச் செல்பவனுமாயுள்ள அக்கினி
அக்கினியால் மூட்டப்படுகிறான்
சித்தார்த்தர் கயாவில் நிகழ்த்திய தர்மோபதேசத்தின்போது எல்லாப் பொருள்களிலும் தீப்பற்றிக் கொண்டது. கண்களில் தீ கனல்கிறது. உருவம், அமைப்பு, பார்வை புலன்களுடன் தொடர்புள்ள பொருள்கள், தீராத வேட்கை, ஆசை, சொற்கள், வாசனை, நாற்றம், அறிவு, மூளை, எண்ணம், உறுப்புகள், பௌதிக கற்பனைகள் எனச் சகலமும் தீயில் எரிந்துப் போகின்றன. இதற்கான தீக்குண்டத்தை உருவாக்குபவை வெறுப்பு, விருப்பு, பிறவி, முதுமை, சாக்காடு, சோகம், துயரம், நிராசை இவைதாம் என்கிறது அவரது பூரண உள்ளொளி.
“காலம் எத்தனை நீண்டாலும் இணைந்திப்பதென்பது என்றேனும் ஒருநாள் முடியத்தானே செய்யும்?” தன் தந்தையாக இருந்த சுத்தோதனரிடம் புத்தர் கூற எண்ணினார்.
அவளும் தீக்குண்டத்தை ஏந்தியவள்தான். ஆனால், அவள் கணவரோ அக்னியைப் போன்றவர். பூமியில் எல்லாமும் கீழ்நோக்கும்போது அக்னி மட்டுமே வான் நோக்குகிறது. தன்னுள் அவியானவைகளை உண்டு துாய்மையாக்குகிறது. அரசர்களெல்லாம் அதிகார வெறியோடு நாடு பிடிப்பதும் ராஜ்ஜியத்தை வளர்ப்பதுமே பேரரசரின் கொள்கைகள் என்றெண்ணுகையில் அவர் மட்டுமே கடவுளுக்குப் பிரியமானவராக இருக்க முயன்றுக் கொண்டிருக்கிறார்.
ததாகதர் தந்தையிடம் விளக்கினார், “என்னிடமிருந்து பிரிவதற்கு இத்தனை துயருறுவதை உடன் கை விடுங்கள். வெவ்வேறு பிறப்பிற்குரிய, உடல் சார்ந்த உயிர்களுக்கு உருமாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மிகுந்த ஆசையோடும் பிரியத்தோடும் வலியோடும் என்னைத் தன் கருவிலிருந்து ஈன்ற என் தாய் எங்கோ… நான் இங்கே. உயிர்களின் பிணைப்பு தவிர்க்க முடியாத பிரிவில்தான் முடிகிறது. கூடி வரும் மேகங்கள் காற்றால் கலைவதுபோல உயிர் வாழ்பவை அனைத்தும் கூடி பிரிவதாகவே நான் கருதுகிறேன். விளக்கை ஊதி அணைப்பது போன்றதுதான் மனித வாழ்வும். நிகழ்வுகளின் வரிசையும் அனுபவங்களின் தொடர்ச்சியும் மட்டுமே இடையறாது இருந்து வரும். நடிப்பு, நடனம், இசை போன்ற கலைகளில் எங்ஙனம் மெல்ல மெல்லத் தேர்ச்சி பெறுகிறோமோ அதைபோலவே அர்ஹத்தும் (புத்தநிலை) சாதனை மூலம் தான் ஏற்படும்”
மரங்களையொட்டிய ஒற்றையடிப்பாதையில் சிரத்தை முண்டனம் செய்து துறவுக்கோலம் பூண்ட பிக்குணிகள் பிச்சை பாத்திரங்களை ஏந்தியவாறு விடிவிளக்குகள் எரிந்துக் கொண்டிருக்கும் குடில்களுக்குச் சென்றுக் கொண்டிருந்தனர். யாரோ யாரையோ அழைத்தார்கள். யாரோ யாரிடமோ சென்றார்கள். பெயர்களால் காதுகளும் உருவங்களால் கண்களும் எண்ணங்களால் உறவும் உருவாகின்றன.
சோலைகளில் லேசான வெளிச்சம் வந்திருந்தது.
பேரரசரே… நீங்கள் புத்தரைக் கடந்தவர். அவர் பிறவிச்சுழற்சியை வென்றெடுக்க நினைத்தார். அவர் வென்றதன் வழியை நீங்கள் கையிலெடுத்துக் கொண்டீர்கள். இருவருமே அரச நிலையைத் துறந்து அரசராக மட்டுமே எஞ்சுவதை விரும்பவில்லை. அவருக்குக் காண வேண்டியதை விலக்கியதாலும் நீங்கள் காணக்கூடாததைக் கண்டு கொண்டதாலும் ஞானம் பெற்று விட்டீர்கள். ஆம். கலிங்கத்தில் நீங்கள் காணக்கூடாததை கண்டீர்கள். அது உங்களின் போதி மரம். தனி மனிதனுக்கான அறம், மோட்சம், விடுதலை என்பது உங்களின் தம்மம் அல்ல. நீங்கள் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டவர். சமூகத்துக்கான அறத்தை வரையறுக்க விரும்புவர், சமூக மீட்சி குறித்து கனவு காண்பவர். மக்களின் இதயங்களை வென்று அதற்குள் தம்மத்தை நிரப்பி விட எண்ணுபவர். ததாகதர் சுழல விட்ட தர்மசக்கரத்தை நீங்கள் ஒரு சக்ரவர்த்தியாக உயர்த்தி பிடிக்கிறீர்கள் பேரரசே…
“சாக்கிய முனிவ… சித்தார்த்தரே… மாதவரே… எம்மிடத்தில் கருணை கொள்” அவள் முணுமுணுத்துக் கொண்டே எழுந்தாள்.
வீட்டு வாசல்களில் ஏற்றப்பட்டிருந்த அகல்கள் அதன் மீது காற்றுக்காகக் கவிழ்க்கப்பட்டிருந்த கண்ணாடி அடைப்பானுக்குள்ளிருந்து அசைவின்றி மினுங்கிக் கொண்டிருந்தன.