யாத்வஷேம்: மானுட வதையின் உச்சம்

நான் ரப்பர் தோட்டத்தில் வாழ்ந்தபோது, என் அக்காள் வேலை செய்யும் ரப்பர் ஆலைக்குப் போவது வழக்கமாக இருந்தது. அக்காள் அங்கு ரப்பர் பாலை உறைய வைக்கும் பகுதியில் பணியில் இருப்பாள். ரப்பர் பாலில் போர்மிக் திராவகம் கலந்தால்தான் அது பதமாக உறையும். என் பால்ய வயதில் நான் தெரிந்துகொண்ட முதல் ரசாயனப் பொருள் போர்மிக் அமிலம்தான். போர்மிக் அமிலத்தைக் கொண்டு உறைய வைக்கப்பட்ட பால் கட்டிகளை உலர வைத்து பாளம் பாளமாக்கிப் பெரும் பெரும் பெட்டி வடிவங்களில் ஏற்றுமதி செய்வார்கள். போர்மிக் திராவக நெடியைத் தவறாக உள்ளிழுத்துக் கொண்டால் அதன் வாயு கப்பென்று நெஞ்சை அடைத்து மூச்சு விட முடியாமல் செய்துவிடும். உயிர் போய்விட்டுத் திரும்பும். மீண்டும் சீராக மூச்சு விடுவதற்குச் சில நிமிடங்களாகும். நான் பல முறை அந்த இடரை அனுபவித்திருக்கிறேன். இதற்காகவே அக்காள் ‘இப்போது உள்ளே நுழையாதே’ என்று சைகைக் காட்டி எச்சரித்து விடுவாள்.

போர்மிக் ரசாயனத்தோடு புழங்குபவர்கள் பாதுகாப்புக்காக முகமூடி அணிந்திருப்பர். கொஞ்சம் கவனமின்மையாக இருந்துவிட்டால் அது தாக்கிவிடும். நானே சில முறை பாதிக்கப்பட்டு, அது உபயோகிக்கப்படும் இடத்தை அண்டாமல் மிக கவனமாக இருக்க பழகிக்கொண்டேன். அங்கே வேலை செய்பவர்கள் எப்படி தினம்தினம் செத்துச் செத்து பிழைத்திருப்பார்கள் என்று நான் பதறியதுண்டு.

மூச்சை அடைக்கும் அந்த போர்மிக் அமிலத்தின் தீவிரம் ஆயிரம் ஆயிரமாக அதிகரிக்கப்பட்ட அறை ஒன்றினுள் அடைந்து கிடந்த அனுபவத்தைதான் ‘யாத்வஷேம்’ நாவல் வழங்கியது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாஜி படையினர் விஷவாயு வைத்துக் கொன்ற யூதர்களின் எண்ணிக்கை மட்டும் ஆறு லட்சம் என்று சொல்கிறது நாவல். கூகலும் அதே எண்ணிக்கையைக் காட்டுகிறது. அந்த ஆறு மில்லியன் யூதர்களும் போரில் எந்தத் தொடர்பும் இல்லாத பாமர மக்கள். இதனை ஹொலொகோஸ்ட் (holocaust) கொடூரம் என்பார்கள். அவர்களைத் துடிக்கத் துடிக்கச் சாகடித்ததை வரலாறு இன்னும் நெடுங்காலத்துக்குப் பல்வேறு ஊடகங்களின் வழி மீண்டும் மீண்டும் பதிவு செய்துகொண்டே இருக்கப்போகிறது. மானுடக் குலத்துக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்கு ஊடகத்தை விடச் சிறந்த வழி இருக்க முடியாது.

‘யாத்வேஷம்’ கலையமைதி கொண்ட கன்னட நாவல். நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதியதைக் கே. நல்லதம்பி நமக்குத் தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாக இருந்தாலும் ரத்தமும் சதையுமான படைப்பாகத் தமிழில் தந்திருக்கிறார் கே. நல்லதம்பி. மானுட வதையை நம் கண் முன் காட்சிமொழியாக்கிக் காட்டியிருக்கிறார்.

நாவலை இரண்டு வெவ்வேறு மெல்லுணர்ச்சிகளை விவரிக்கும் பகுதிகளைக் கொண்டு சித்திரம் வரைந்திருக்கிறார் நேமிசந்த்ரா. முதல் பாதி மானுடக் கரிசனமும் அன்பும் அனுசரணையும் புரிந்துணர்வையும் உணர்ச்சித் ததும்பச் சொல்கிறது. யூத இன பின்னணியைக் கொண்ட ஹ்யானா என்ற இளம் பெண்ணைப் பெங்களூரில் வாழும் விவேக் குடும்பம் அரவணைத்து அன்பைப் பொழியும் பகுதி அது.

அடுத்த பாதியில், போர்க்காலத்தில் இழந்த தன் உடன் பிறப்புகளைத் தேடும் பயணத்தின்போது ஹ்யானா நேரில் கண்டு கேட்டறிந்த தகவல்களைத் துன்பியல் வார்த்தைகளாக்கி வாசகனை வெகுவாகப் பதற்றமுறச் செய்கிறாள். தொடக்கப்பகுதியில் அவளது பின்புலத்தைச் சொல்லும்போதே வாசகனுக்குப் பீதியைக் கிளப்பிவிடுகிறார் நாவலாசிரியர். ஆயினும் இரண்டாம் பாதியில் துயரத்தை எந்த அளவுக்குத் தொட்டுக் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு உச்சத்தைத் தொட்டு எழுதியிருக்கிறார். இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மனியில் ஹிட்லர் என்ற பிரசித்திப் பெற்ற கொடுங்கோலன் நிகழ்த்திய இரக்கமற்ற மானுடக் கொடுமையைத் விட உலகில் வேறென்ன கொடுமை நடந்திருக்க முடியும்?

இந்த நாவலை முழுமையாக எழுதி முடிக்க 15 ஆண்டு காலக் கள ஆய்வும் உழைப்பும் பயணமும் நாவலாசிரியருக்குத் தேவைப்பட்டிருக்கிறது.

இரண்டே இரண்டு மையப் பாத்திரங்கள் தன்னிலையிலிருந்து கதை சொல்லும் உத்தியைக் கையாள்கிறார் நேமிசந்த்ரா. நாவலின் மையபாத்திரமான ஹ்யானா கதை சொல்லும்போது அதன் நம்பகத்தன்மை குலையாமல் இருக்கிறது. அவள் இரண்டாம் உலக யுத்தச் சிதைவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவள். இளம் வயதில் தன் கண் முன்னால் நிகழ்ந்ததைப் பார்த்துப் பயந்து வெடவெடத்து அதன் உக்கிரங்களை உள்வாங்கிக் கொண்டவள். அந்தப் பாதிப்பே கதைக்கான உயிர் நாடியாக அமைகிறது. அந்த நினைவுகள் ஆயுள் முழுதும் அவளை அலைகழிக்கின்றன.

ஹ்யானாவின் குடும்பம் ஜெர்மனியின் மானுட வதையிலிருந்து தப்பித்து எங்காவது வேறு தேசத்துக்குப் போய்விடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அவர்களின் எந்த உடைமைகளையும் உடன் எடுத்துக்கொள்ள முடியாத அவசரக் காலச்சூழல் நிலவுகிறது. சந்தேகம் வராமல் இருக்க அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து வீட்டைவிட்டு ரகசியமாகக் கிளம்பும் வேளையில் நாஜி படை குறுக்கே மறித்து ஹ்யானாவின் தாய், அக்காள், தம்பி மூவரையும் கைது செய்கிறார்கள். ஹ்யானாவின் அப்பா மோசஸ்தான் அவர்களின் முக்கியக் குறி. ஏனெனில் அவர் ஒரு யூத விஞ்ஞானியான லீ மெண்ட்னரின் உதவியாளர். அவரைக் கைது செய்தால் விஞ்ஞானி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்பது அவர்களின் நோக்கம். ஒரு நாட்டின் அறிவாளிகளை ஒடுக்கிவிட்டால் அதிகாரம் நிரந்தரமாகத் தன் கைக்குள் இருக்கும் என்பது ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் எண்ணம். போட், முசோலினி, இடி அமின் போன்ற சர்வாதிகாரிகள் இதற்கு நல்ல சான்று.

தன் மனைவி பிள்ளைகள் வசமாய் மாட்டிக்கொண்டதை அவரும் ஹ்யானாவும் மறைந்திருந்த வெறுமனே பார்க்கமட்டுமேயான கையறு நிலையில் அவர்களைப் பிரிந்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. அகதியாக அடைக்கலம் தேட பல நாடுகளைச் சீர்தூக்கிப்பார்க்கிறார். அவை எல்லாமே அண்டை ஐரோப்பிய நாடுகள். மெல்ல மெல்ல ஹிட்லர் கையில் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் கொண்டவை. எனவே அவர் அமைதி நிலவும் இந்தியாவைத் தேர்ந்தெடுக்கிறார். இறுதியாகப் பெங்களூரின் கோரிப்பாளையத்தின் சாம்ராஜ் புறநகர்ப்பகுதியை வந்தடைகின்றனர்.

தன் தாயையும் உடன் பிறப்புகளையும் கைது செய்து நாஜிப்படை வாகனத்தில் ஏற்றியதைக் கண்டு கலவரமடைந்த ஹ்யானா, தன் வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் அவர்களின் நினைவாகவே இருக்கிறாள். இந்த மூவரில் யாராவது ஒருவர் நாஜி கேம்பிலிருந்து தப்பித்து உயிரோடு இருக்கக்கூடும் என்று அவள் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. தொப்புள் கொடி உறவல்லவா, வேறு எவ்வாறு சிந்திக்க முடியும்? ஹ்யானா முதிய வயதை எட்டிப்பிடிக்க மகன் விசு பெரியவனாகிச் சம்பாதித்துப் பயணத்துக்குப் பண உதவி செய்கிறான். விவேக்கின் துணையோடு மகனின் தயவில் உடன்பிறப்பைத் தேடி அடைய மீண்டும் ஜெர்மனிக்குப் புறப்படுகிறாள்.

நாஜி முகாமில் என்னென்ன கொடூரங்கள் அரங்கேறின என்ற விபரங்கள் வாசகனைக் கசக்கிப் பிழியச் செய்கிறது. பெரும்பாலும் யூதர்களையே அவர்கள் விஷவாயு அறையில் அடைத்துக் கொன்றிருக்கிறார்கள். ஏன் ஹிட்லர் யூதர்களையே குறிவைத்தான் என்பதற்கான காரணங்கள் அபத்தமானவை. முதல் காரணம், ஹிட்லர் யூத விலைமாதர்களால் பாலியல் நோய்க்கு ஆளானதும், இரண்டாவதாகக் கருத்தியல் ரீதியாக செமெட்டிக்(ஆபிரகாமிய) மதக் கோட்பாடுகளுக்கு எதிரான கொள்கையுடையவன் என்பதாலும் யூதர்களை அடியோடு வெறுக்கிறான். யூதர்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டைப் பின்பற்றுபவர்கள். அவர்களின் மத நூல் தோராஹ். முதல் உலக யுத்ததில் ஹிட்லர் மண்ணைக் கவ்வியப்பின் தன் கோபத்தைத் தணித்துக்கொள்ள யூதர்களைத் தாக்கியிருக்கிறான் என்பதும் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

கார்பன் மோனோக்சைட் விஷ வாயுவும், பூச்சிக்கொல்லி வகைகளும், சைக்லோன் B என்ற சைனைட் விஷ வாயுவும் (சைனைட் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது விடுதலை புலிகள் தப்பிக்க முடியாத தருணங்களில் உபயோகிக்கும் தற்கொலை விஷம்) யூதர்களைப் பூண்டோடு அழிக்கப் பயன்படுத்திய ரசாயன வகைகளாகும். இருண்ட அறைக்குள் ஆயிரமாயிரம் கைதிகளை அடைத்துவிட்டு கார்பன் மொனொக்சைட்டை ஒரு குழாய் வழியாக அறைக்குள் நிரப்பி கொலை புரிந்திருக்கிறார்கள். தெய்வாதீனமாகத் தப்பி வந்த கைதிகள் அதனைப் புகைக்கூண்டு (Gas Chamber) என்று சொல்கிறார்கள். இது போக முகாமிலிருந்து யாரும் தப்பிக்காமல் இருக்க மின்சக்தி பாயும் மின்சார வேலியும் முகாமைச் சுற்றிப் போடப்பட்டிருக்கிறது. ஆனால் நாஜிக்களின் இம்சையைத் தாங்க முடியாமல் பல கைதிகள் அதில் பாய்ந்தும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த விஷ வாயுக்களைக் கைதிகள் நிரம்பிய வாகனத்திலும் புகுத்தி கொலைபாதகச் செயலைப் புரிந்திருக்கிறார்கள். எந்த நேரத்தில் எவ்வாறான கொலை கருவியைப் பயன்படுத்திக் கொல்லப்போகிறார்கள் என்ற எண்ணமே அவர்களைப் பாதி கொன்றுவிடுகிறது. தண்டனைக்காகக் காத்திருப்பவர்களின் உயிரச்சம் நம்மையும் கதிகலங்கச் செய்கிறது. எந்த நேரத்திலும் மரணம் தழுவலாம் என எதிர்நோக்கிய பதற்றத்தில், தண்டனைக்கு முன்னாலேயே செத்துப் போய்விடலாம் எனத் தோன்றியிருக்கிறது. கடுமையான நோய்மையில் சிக்கியிருப்பவர்களுக்கு மரணம் ஒன்றே விமோசனம் என்ற எண்ணத்துக்கு ஈடானது இம்மாதிரியான காத்திருப்புகள்.

இவ்வாறான ஆயிரமாயிரம் கைதிகளை அடைத்துக் கொல்ல விஷ வாயு அறைகள் மொத்தம் ஐந்து இடங்களின் இருந்தன என்று கூகல் சொல்கிறது. நாஜிபடையின் இந்த இரக்கமற்ற செயற்பாடுகளால் சித்த பிரம்மை அடைந்தவர்களையும் குழந்தைகளையும் கர்ப்பிணிகளையும்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

விஷ வாயு தண்டனைகள் போக, கைதிகளை ஆல்ப் மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டும், பலவிதமான நோய்த் தடுப்பு மருந்துளைக் கண்டுபிடிக்கக் கைதிகளைப் பரிசோதனை எலிகளாகவும் பயன்படுத்தியும், அதன் ஒவ்வாமையில் துடிக்கத் துடிக்கச் சாகடித்தும் இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் கைதிகளின் உடலில் இருக்கும் கொழுப்பை எவ்வாறு மின்சக்தியாக மாற்ற முடியும் என்பதையும், ஆய்ந்தாராய்ந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கதறக் கதறக் கொன்றிருக்கிறார்கள். இவ்வளவு துயரங்களும் மரண வரிசையில் காத்திருப்பவரை எவ்வாறு கதிகலங்கச் செய்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே குலை நடுங்குகிறது. இத்தனை பாதகச் செயல்களையும் ஒரு விளையாட்டாகவும், பொழுதுபோக்குக்காகவுமே செய்துமுடித்திருக்கிறார்கள் ஹிட்லரின் அடிமைகள். கொடுமை இழைப்பதில் இன்பம் காணும் இவர்களின் செயல்களைச் சுற்றியிருந்த நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இன்னொரு அவலம்.

கதையைச் சொல்லிச் செல்லும் இன்னொரு பாத்திரம் தன் வீட்டிலேயே வளர்ந்து பெரியவளான ஹ்யானாவைப் பின்னாளில் மணந்த விவேக். முற்றிலும் வேறு பண்பாடு, சமயப் பின்னணியில் வளர்க்கப்பட்டவள் தன் குடும்பத்தில் ஒருத்தியாக இணைந்த விதத்தை விவேக் தன் பார்வையில் சொல்கிறார். ஜெர்மனிய பின்னணியில் வளர்ந்த் யூதப் பெண் இந்திய இந்து குடும்பத்தோடு எவ்வாறு ஐக்கியமாகி இரண்டற கலக்கிறாள் என்பது சுவாரஸ்யம் மிகுந்ததாக இருகிறது. இந்த இந்து யூத இணைவு கதைக்குப் பலமான பின்னணியாக அமைந்துவிடுகிறது. அவள் தன் இளம் பிராயத்தில் இழந்தவற்றை அவதானித்து ஆறுதலளிக்கின்றான். அத்துடன் அவள் மேற்கொள்ளும் தேடல்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்கிறான் என்பதும் நாவலில் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அனிதா என்ற ஹ்யானா சொல்லும் கதையை உடன் இருந்து கேட்டு, அவளின் இழப்பை, துயரத்தை, கண்ணீரை உள்வாங்கி, முகம் கோணாமல் அவளின் தேடலுக்குத் துணை புரிகிறான் விவேக். ஒரு நல்ல கணவனாக இருந்து அனிதா பரிதவிக்கும்போதெல்லாம் எவ்வாறு ஆறுதலாக இருக்கிறான் என்பதும் நாவல் முழுக்க விரவிக்கிடக்கிறது. அனிதாவின் அலைகழிப்பும், தேடலும் எங்கேயும் எக்காரணம் கொண்டும் சுணங்கிவிடக்கூடாது என்பதற்காக உடனிருந்து எல்லாவித உதவிகளையும் செய்கிறான். ஒரு அப்பழுக்கில்லாத தியாக உணர்வுள்ள கணவனாக விவேக் படைக்கப்பட்டிருப்பது நாவலைக் கனம் மிகுந்ததாக ஆக்கிவிடுகிறது. ஓர் ஆண் மனைவிக்குப் பக்கத் துணையாக இருந்து செயல்படும் காட்சிகளைப் பெண்ணியவாதிகள் ஆரத்தழுவிக்கொள்வார்கள்.

ஹ்யானாவும் விவேக்கும் அவளது அக்காள் ரெபெக்காவைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தன் உடன்பிறப்புகளைத் தேடி அலைந்து, இஸ்ரேலின் ஒரு கடற்கரை ஓரத்தில் ரெபேக்காவைக் கண்டடைகிறாள். அவளது தம்பி நாஜி முகாமிலேயா இறந்துவிட்டதாகச் சொல்கிறாள். இரு உடன்பிறப்புகளும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்துக்கொள்ளும் அத்தருணத்தை உணர்ச்சிபொங்க எழுதிச் செல்கிறார் நாவலாசிரியர். அச்சந்திப்பில் ஹ்யானா கேள்விப்பட்டதைவிட மேலும் அதிகத் துயரக் கதைகளைச் சொல்கிறாள் ரெபெக்கா. ரெபெக்காவும் விஷவாயு அறையில் அடைக்கப்படிருந்தவர்களில் ஒருத்திதான். எனவே அவள் நேரடியாக அனுபவித்த இம்சைகளைச் சொல்லி வருகிறாள். இந்த வேதனைக்கெல்லாம் ஒரு பதில் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது நாஜி முகாமில் ஒரு சம்பவம் நடக்கிறது. நாஜி விஷ வாயு முகாமில் பெரும் மானுடத்துயரம் அரங்கேறிக்கொண்டிருக்கும்போது ஒரு நாஜி அதிகாரியின் மகன் மீது லாரி மோதி இறந்துவிடுகிறான். அதனை நேரடியாகப் பார்த்த ரெபெக்காவும் பிற கைதிகளும் அடைந்த மகிழ்ச்சி நாவலில் சொல்லப்படுகிறது. நாஜிக்களால் ஒவ்வொரு நொடியும் கொடுமைக்கு ஆளானவர்களுக்குத் தங்களின் துயரத்துக்கான வடிகாலாகக் கொடுமைக்காரர்களுக்கு இயற்கை தண்டனை கொடுக்காதா என்ற பழியுணர்ச்சி உண்டாவது சகஜம். அதற்கு வடிகாலாக அமைந்த இந்தத் துர்மரணத்தைக் கைதிகள் அந்தரங்கமாகக் கொண்டாடுகிறார்கள். ஏதுமறியா ஒரு குழந்தையின் மரணம் குற்றமற்ற கைதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றால் அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் எத்துணை உச்சத்தைத் தொட்டிருக்கும் என்று உணர வைக்கிறது ‘யாத்வேஷம்’.

கைதிகளை விதம் விதமாகக் கொல்ல எத்தனை மெனக்கெடல்கள், எத்தனை முயற்சிகள் என்று வாசிக்கும்போது சினம் தலைக்கு ஏறுகிறது. இவர்கள் மனிதர்களா அல்லது குருதி விரும்பும் அரக்கர்களா எனக் கேள்வியெழுகிறது.

ரெபெக்கா சொல்லும் உண்மை சம்பவங்கள் நாவலின் மிக முக்கியமான கவன ஈர்ப்பைக் கோருகின்றன. ஏனெனில் இந்த மிருகத்தனமான செயல்கள் தொடர்பாக வாசகனை மேலும் மேலும் தேட வைக்கிறது. ஒரு வரலாற்றைப் புனைவின் வழி முன்வைக்கும்போது வாசகன் அகவழிப் பயணம் விரிவடைந்து வாசிப்பின்பத்தை வழங்கிவிடுகிறது.

கதை மொழியைக் கையாளும் எழுத்தாளர்கள் சம்பவங்களையும் தகவல்களையும் நுட்பமாக்கும்போது நாவல் தொடர்ந்து வாசிப்பதற்கான ஆவலைத் தூண்டும். ‘யாத்வஷேம்’ அதில் எந்தக் குறைபாடும் வைக்கவில்லை. ஹ்யான பூப்படைந்ததை அறிந்து அவள் இந்நேரத்தில் தாயில்லாமல் பரிதவிக்கிறாளே என்ற ஏக்கம் அழுத்த ஒரு நாள் படுக்கையில் மரணமடைகிறார் ஹ்யானாவின் தந்தை மோசஸ்.

ஹ்யானா போக்கிடம் இல்லாமல் தவிப்பதைப் பார்த்த அண்டைவீட்டாரான விவேக் குடும்பம் அவளைத் தங்கள் குடும்பத்தோடு அழைத்துக்கொள்கிறது. அண்டை வீட்டில் வசிக்கும்போது அக்குடும்பத்தோடு அந்நியோன்யம் உண்டானதால் அவள் அவர்களோடு இணைவதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. ஹ்யானாவுக்கும் விவேக் குடும்பத்துக்குமான அன்னியோன்னியம் விவேக் தாயின் அரவணைப்பால் மேலும் வலுவடைவதை நாவல் நுணுக்க விவரணைகளால் சித்தரிக்கிறது.

ஒரு முறை ஹ்யானா தன் பெட்டியில் வைத்திருந்த மெழுகுவர்த்தி தாங்கும் ஏழு கம்பத் தீபத்தை (மோரா) விவேக் வீட்டுச் சாமி மேடையில் வைத்து வணங்க முற்படுகிறாள். அவள் அதனில் மெழுகு தீபத்தை ஏற்றித் தியானித்துக் கொண்டிருக்கும், தருணத்தில் தன்னைப் பெற்ற தாயே தன் கையைப்பற்றி சினாகாவிற்கு (யூதர்களின் வழிபாட்டுத் தளம்) கூட்டிச்செல்வதாகக் கனவு காண்கிறாள். அந்தக் கனவில் முற்றாகத் தன்னிலை மறந்துகொண்டிருக்கும்போது தன் கையை இன்னொரு சொரசொரப்பான கை அழுத்திப் பற்றுவது போல உணர, ஹ்யானா கண் திறந்து பார்க்கிறாள். அது விவேக் அன்னையின் கை. அக்கணம் வாசகன் ஒன்றைக் குறிப்பறிகிறான். ஹ்யானாவின் தாய் தன் மகளை வளர்க்கும் பொறுப்பை விவேக் தாயிடம் ஒப்படைக்கிறாள் என்று வாசக மனம் புரிந்துகொள்ளும்படி நுட்பமாக எழுதப்பட்டுள்ளது. அன்னையற்ற பரிதவிப்பை இனி விவேக்கின் தாய்தான் நிறைவு செய்ய வேண்டும் என்ற இக்குறியீடு நாவலின் மிகுந்த கவித்துவமான இடமாகும்.

“நாங்க முப்பது முக்கோடி தேவர்களை வணக்குபவர்கள், அதுல இன்னும் ஒன்னும் கூடினா என்ன வந்திடப் போவது” என்று அனிதாவிடம் சொல்லும் நாவலின் பகுதி விவேக்கின் தாய் எவ்வளவு புரிந்துணர்வோடு அனிதாவை ஏற்று வளர்க்கிறாள் என்று புலனாகிறது.

தம் பிள்ளைகளிடம் விவேக்கின் தாய் புராணக் கதைகள் சொல்வதுண்டு. அனிதாவும் அக்கதைகளை ஆவல் மிகுந்து செவிமடுப்பாள். பாரதப் போரின்போது கிருஷ்ணன் துரியோதனர்களை அழித்துப் பாண்டவர்களுக்குக் கைகொடுக்கும் தருணத்தில் அனிதா, ஹிட்லரின் கொடுங்கோலை நினைவுகூர்கிறாள். கிருஷ்ணனைப் போன்றே ஹிட்லரை அழித்தொழிக்க அங்கொரு அவதாரப் புருஷன் வராமல் போய்விடுவானா என்று ஏக்கமுறும் கட்டமும் ஒப்பீட்டளவில் பொருந்திவிடுகிறது.

அனிதா ஆர்ம்ஸ்டர்டேமை விட்டு தப்பியோடிவரும்போது ரெபெக்காவுக்கு 15 வயது. தம்பிக்கு இரண்டே வயது. காலம் அனிதாவை அரித்து, எழுபது வயதை எட்டிய பின்னரும், அவர்களை விட்டுவரும்போது இருந்த அதே வயதில் இன்னும் இருக்கிறார்கள் என்று அவள் எண்ணுவதையும் வாசகன் கவித்துவத்தோடு பார்க்கிறான். நினைவு அவ்வாறுதான் இயங்கும். ஏனெனில் அவர்களை ஆகக் கடைசியாகப் பார்த்தது அந்த வயதில்தால். அவள் மனதளவில் அவர்கள் வளரவே இல்லை. அதற்குப் பிறகு பார்க்கின்ற வாய்ப்பே இல்லாதபோது அவர்கள் வயது கூடுவதில்லை என்று எழுதிச் செல்லும் இடம் சுவாரஸ்யமாக இருந்தது.

நாவலின் பல இடங்களில் வரும் தத்துவத் தரிசனம் நாவலை மேலும் சிறப்பாக்குகிறது. விவேக்கின் தாயை மிகுந்த கரிசனமுள்ள பெண்மணியாகப் படைக்கிறார் நேச்மிந்த்ரா. அவள் ராமாயண, பாரதத் தொன்மக் கதைகளைப் பிள்ளைகளிடம் சொல்லி வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வைப்பவளாகவும் வருகிறாள்.

அனிதா வளர்ந்து ஆளாகும் கட்டத்தில் விவேக்கின் தங்கை,“சுமி உனக்கு பசுவல்லாம் கடவுள், புலியும் கடவுள், தென்னை மரமும் கடவுள், துளசி மாடமும் கடவுள், மிருகம் பட்சிகள், செடி, மரங்கள் எல்லாமும் எப்படிக் கடவுள் ஆகும்?” குழப்பத்தால் கேட்கிறாள் அனிதா.

“கடவுள் என்றாள் என்ன பாப்பா, எல்லாம் கடவுளின் அம்சம்தானே. உயிர் இருக்கும் எதையும் துன்பப்படுத்தக் கூடாதில்லையா?” என்று சுமியின் அம்மா பதிலளிக்கிறாள். ஹ்யானா மெல்ல மெல்ல தான் சேரும் இந்துக் குடும்பத்தில் ஒருத்தியாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதற்கு இது போன்ற உரையாடல் உறுதுணையாக அமைகின்றது.

ஹ்யானா ஓரிடத்தில் வேம்பைத் தவறாக மென்றுவிட அதனைத் துப்பிவிடுகிறாள். அவ்வேளையில் “வாழ்க்கையின் வேம்போ வெல்லமோ, எல்லாவற்றையும் முழுங்கிக்க வேணும் அனிதா,” என்கிறாள் விவேக்கின் அன்னையார். அனிதா கடுமையான துயரத்தில் ஆழ்ந்திருக்கும் போது, இந்த உண்மை அவளை அதிலிருந்து மெல்ல விடுபடச் செய்கிறது.

மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஆதரிக்கும் ஒருவனுக்கு இந்த நாவல் வழங்கும் தரிசனம் அபாரமானது. ஜெருசலத்தைப் பார்க்க வந்த ஹ்யானாவுக்கும் டெக்சி ஓட்டிக்கும், சுற்றுப்பயண வழிகாட்டியுமான இஸ்ரேலியன் டெர்ரியுடனுக்கும் இடையிலான உரையாடல் மிக முக்கியமானது. டெர்ரி ஒரு யூத வெறியன். அக்காள் ரெபெக்காவைக் கண்டுபிடித்த பின்னரான காட்சிகள் மானுட அறத்தைத் தூக்கிப் பிடிப்பவை. இதனை நாலாசிரியரின் தலையீடில்லாமல் புனைவின் ஊடாகவே நிகழ்த்தப்படுகிறது. இந்த உரையாடல்களும் கருத்தியல் ரீதியிலான மோதல்களும் இந்த நாவலின் அழகியலுக்கு எந்த ஊறும் விளைவிக்கவில்லை!

எடுத்துக் காட்டாக, “முஸ்லிம் மதம் ஜிஹாதை ஆதரிக்கிறது. ‘ஹோலி வார்’ (புனிதப் போர்’ என்று எத்தனை மனிதர்களை வேண்டுமானாலும் கொல்கிறார்கள்… எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா விவேக். ஒரு நாளைக்குப் பாமர மக்கள் பலர் இந்தத் தீவிரத்தால் இறக்கிறார்கள்.” டெர்ரியின் குரலில் ஜிஹாதியத்தின் மீதான எதிர்ப்பு ஒலிக்கிறது.

அதற்கு ஹ்யானா கேட்கிறாள், “டெர்ரி நீ குர் ஆனைப் படித்திருக்கிறாயா?”

“இல்லை!” என்கிறான் அந்த இஸ்ரேலிய பிரஜை டெர்ரி.

“நான் படித்திருக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு குர் ஆனின் முதல் வாசகத்தைச் சொல்கிறாள். “பெருந்தயாபரனும் கருணை படைத்தவனும் ஆன அல்லாவின் பெயரால்” என்று தொடங்குகிறது குர் ஆன் என்று சொல்லிவிட்டு. “தயையும் கருணையுமாக உருவான கடவுள் கொல்லச் சொல்வானா?” என்று கேட்கிறாள்.

ஆனால் டெர்ரி பிடிவாதமாய் வாதிடுகிறான், “அவர்கள் மதத்தில் சொல்லியிருக்கிறது” என்று மறுவாதம் வைக்கிறான்.

ஹ்யானா அவனுக்குப் புரியும்படி எதிர்வாதம் வைக்கிறாள். “யாராவது மற்றொருவனைக் காரணம் இல்லாமல் கொன்றால் அது மனித இனத்தையே கொன்றது போல என்று குர் ஆன் சொல்கிறது. இது நமது புனித நூலான ‘தால்மாட்’ வாக்கியங்களும்தானே,” என்று இரு வேறு மதங்களின் ஒற்றுமையை விளக்குகிறாள். மேலும்,“ஒரு யுதாஸ் ஒருவனின் துரோகச் செயலால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் யூதர்களை அழித்தது. அந்தத் தவறை நாமும் செய்யலாமா, எந்த மதமும் பாமர மக்களின் கொலையை ஆதரிப்பதில்லை,” என்று ஹ்யானா அறிவுறுத்தும் கட்டம் மத நல்லிணக்கத்தைத் தூக்கிப்பிடிக்கும் அறமாக நிற்கிறது.

ஜெருசலம் இஸ்லாம், கிருத்துவம், தாராஹ் ஆகிய மூன்று மதங்களின் புனித நிலமாகக் கருதப்படுகிறது. இங்கேதான் இன்றைக்கும் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இந்த மூன்று மதங்களின் புனித நூல்கள் மனிதாபிமானத்தைப் போதிக்கின்றன. ஆனாலும் மும்மத மக்களும் ஏன் ரத்தம் சிந்தி உயிர்களைப் பலிவாங்கும் அரக்கத்தனம் நிகழ்கிறது. இந்த மூன்று மதங்களின் புனித நிலத்தில் குருதியின் கறை எதற்கு, என்று ஹ்யானா சொல்லும் போதும் அவளின் மனிதாபிமானம் வெளிபடுகிறது.

ஜெருசலத்தில் நடக்கும் இந்த உரையாடலில் ரெபெக்கா, டெர்ரி, பயண வழிகாட்டி இருவரும் காசா இஸ்ரேலியருக்குச் சொந்தம் என்று வாதிடுகிறார்கள். ஆனால், அனிதா என்ற ஹ்யானா பொதுவுடமை சித்தாந்தத்தை முன் வைத்துக்கொண்டே வருகிறாள். இஸ்ரேல் பாலஸ்த்தீனிய வரலாற்றைத் தெளிவாகச் சொல்லி வருகிறாள். ஹ்யானாவுக்கு மட்டும் ஏன் இந்தப் பொதுவுடமை சிந்தனை வருகிறது என்று பார்க்கும்போது அவள் இந்தியாவில் தன் பதினோரு வயதிலிருந்து எழுபது வயது வரை வளர்ந்தவள். அங்கே, பல மொழி பேசி பல மதங்களைப் பின்பற்றி, பன்முகப் பண்பாடுகளில் உழன்று, மக்கள் புரிந்துணர்வோடு வாழ்வதைப் புரிந்துகொண்டிருக்கிறாள், இந்துக்கள் பல்லாயிரம் கடவுள்களை வணங்கினாலும் மத ஒற்றுமை பேணப்படுவதை அவதனிக்கிறாள். காருண்யத்தை ஆயுதப் போராட்டத்துக்கு எதிராகப் பயன்படுத்திச் சுதந்திரம் பெற்ற காந்தியடிகள் நாட்டில் வசித்தவள். மகாவீரரின் அகிம்சை வழியிலான போதனையைக் கற்றவள். அவளும் அந்தப் பண்பாட்டோடு வாழக் கற்றுக் கொண்டவள்.அதனால்தான் அவள் மானுட நேயத்தைத் தூக்கிப் பிடிக்கிறாள் என ‘யாத்வேஷம்’ நாவலில் ஹ்யானா பாத்திரம் வாயிலாக மானுட அறம் முன்வைக்கப்படுகிறது.

‘நெஞ்சில் நிற்க வேண்டிய நம் கடவுள் ஏன் வீதிக்கு வரவேண்டும்’ என்றும் நாவல் வலியுறுத்துகிறது. இன்னொரு இடத்தில் ஹ்யானாவின் குரலாக, “போர் ஒரு தனி மனித நெஞ்சக் கூட்டில் தொடங்குகிறது” என்றும் “பிறரைத் துரத்தி அடித்துவிட்டு அமைதியாக வாழ முடியாது என்பது எனக்குப் புரிகிறது” என ஒலிக்கிறார்.

காசாவில் இஸ்ரேலிய குண்டுகள் பாலஸ்த்தீனர்களின் மீது ஈவிரக்கமில்லாமல் பாய்ந்துகொண்டிருக்கும் இன்றைய நாளில் இந்த நாவல் எனக்கு வாசிக்க வாய்த்தது. அப்பழுக்கற்ற , போருக்குச் சம்பந்தமே இல்லாத ஆயிரமாயிரம் குழந்தைகளின் சாவில் மனம் பாரமாகிக்கிடந்த தருணத்தில் இந்நாவலால் மனம் மேலும் பாரமானது.

பாலஸ்தீன மக்களின் அமைதிக்காக மட்டுமல்ல பொதுவாகப் போரின் பாதிப்புகளை ஹ்யானா என்ற யூதப் பெண் சொல்லும்போது நாமும் அவளோடு உடன்படுகிறோம்.

நாவலின் இறுதிப் பகுதியில், ஹ்யானா ஜெர்மனியில் எதிர்கொண்ட இனவாதப் போக்கு, அவள் குடும்பத்திலும் தலைகாட்டுகிறது. அதனை தன் படிப்பினைக் கொண்டும் தான் கடந்து வந்த பாதையில் கற்ற விழுமியங்களைக் கொண்டும் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றியடைகிறாள் என்பதையும் அருமையாக நாவலில் காட்டப்படுகிறது.

குஜராத்தின் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் சபீதாவின் பெற்றோர் தீயிற்கு இரையாகிறார்கள். எதிர்பாரா விதமாக ஹ்யானா விவேக் குடும்பத்தில அடைக்கலம் அடைந்த மாதிரியே சபீதாவும் விசு குடும்பத்தில் அடைக்கலமாகிறாள். சபீதா இந்துதான் என்று நம்பியிருந்த விசுவுக்கு அவள் ஒரு முஸ்லிம் என்று தெரியவருகிறது.“மாடு தின்பவளை நம் பூசை அறை வரை விட்டிருக்கிறோமே” என்று சினமுறுகிறான் விசு, அப்போது ஹ்யானா கோபமடைந்து விசுவைக் கண்டிக்கிறாள். விசுவின் தந்தை விவேக் விசுவை அவனது தாத்தாவின் (மோசஸ்) கல்லறைக்கு அழைத்துச் சென்று கடந்த கால வரலாறைச் சொல்கிறார். அதனைப் புரிந்துகொண்ட விசு“அம்மா சபீதா இங்கேயே இருக்கட்டும்” என்கிறான்.

‘யாத்வஷேம்’ நாவலை நேமிசந்த்ரா என்ற எழுத்தாளர் கன்னட இந்து பார்வையில் கொண்டு போகிறார். பன்முக பண்பாட்டுச் சமய மொழிகளின் பின்னணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து ஹ்யானா என்ற முன்னணி கதாப்பத்திரத்தின் வழி கதையைச் சொல்கிறார். இந்நாவலில் அனிதா என்ற ஹ்யானா இந்திய வாழ்க்கை முறைகளை ஆழமாக உள்வாங்கிகொண்ட மையப் பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளை முழுக்க முழுக்க ஒரு இந்தியப் பெண்ணாகவே மாறிவிட்டதைக் காட்டி பிற போர் சூழ்ந்த நாடுகளோடு ஒப்பிட்டு இந்தியாவை விதந்தோத வைக்கிறார். இந்தியா பல மத, இன, மொழி கொண்ட மனிதர்கள் வாழும் நாடாக இருந்தாலும் அங்கே புரிந்துணர்வும், சகிப்புத் தன்மையும் நிலவுகிறது என்ற பிம்பத்தை நாவல் நெடுக முன்வைக்கிறார். இதனை வாசகனால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் இடைவிடாது நடக்கும் இந்து முஸ்லிம் கலவரங்களையும் குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் காஷ்மீரைக் கையகப்படுத்தும் இந்தியாவின் போக்கும் சாதியப் பிரிவினைகளும் கௌரவக் கொலைககள் நித்தமும நடப்பதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. சம்பிரதாயத்துக்காக அல்லது நாவலின் கதையோட்டத்துக்குப் பொருந்தி வர ஓரிடத்தில் குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்தைத் தொட்டுவிட்டுச் செல்கிறார். குஜராத்திய முஸ்லீமான அபீதா என்ற கதாப்பத்திரத்தை உள்நுழைக்கிறார். அபீதாவைத் தொடர்புப்படுத்தி, தன் மகன் விசுவுக்கு உலக நடப்பு புரியும் படி சொல்லவும் மட்டுமே குஜராத் கலவரத்தை உள்ளே கொண்டுவருகிறார். அதனை மிகச் சிறிய சம்பவமாகவே நிறுவ முனைகிறார் நேமிசந்த்ரா. இஸ்ரேல் பாலஸ்த்தீன கலவரத்தையும் ஹிட்லரின் நாஜிப்படைகளின் விஷ வாயு கொன்றழிப்பின் அரக்கத்தனத்தையும் ஒப்பு நோக்குவதற்குத இந்தியாவை அமைதியான சகிப்புத்தன்மைகொண்ட புரிந்துணர்வுமிக்க நாடாக சார்புப்பிழை செய்வதாகப்படுகிறது வாசகனுக்கு. இப்படியான சாய்வு நிலை எடுப்பதால் நாவல் சில இடங்களில் தொய்வைத் தொடுகிறது. இது ஒரு புனைவின் நிஜத் தன்மைக்குப் பல சந்தேகங்களை எழுப்பிவிடுகிறது. இந்தியாவில் தொடர்ந்து நிகழும் சாதி மதக் கலவரங்கள் நாவலுக்குத் தேவையற்றதுதான், ஆனால் இந்தியா ஒரு புனித நாடு என்ற நாவலாசிரியர் கட்டமைக்க முனைவது சற்றே உறுத்துகிறது.

‘யாத்வஷேம்’ என்ற சொல்லின் பொருள் என்னவாக இருக்கும் என்று அவ்வார்த்தையைப் படித்தவுடன் தோன்றுவது இயல்பு. அதற்கு அவசியமே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. நாவலை வாசிக்க வாசிக்க அதன் பொருள் இன்னதாக இருக்கும் என்ற அனுமானமே போதும். வாசிக்கும்போதே உண்டாகும் படிம நீட்சிதான் வாசகன் தேடும் பொருளுக்கு ஆதாரமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன்.


‘யாத்வஷேம்’ என்றால் நினைவுச் சின்னங்கள் என்று பொருள்.

2 comments for “யாத்வஷேம்: மானுட வதையின் உச்சம்

  1. Sriramulu Appalanaidu
    May 11, 2024 at 11:35 pm

    அருமையான பதிவு. மிகவும் சுவாரசியமான எழுத்து நடை. இன்றைய பாலஸ்தீனத்தில் நடைப்பெறும் இன அழிப்பையும் இதனுடன் சம்பந்தப்படுத்தி நீங்க ள் பேசுவீர்களா என்று எண்ணிக்கொண்டே படித்தேன். என் எதிர்ப்பார்ப்பிற்கு நீங்கள் ஞாயம் செய்தீர்கள்.

    ஓர் இன அழிப்பிற்கு ஆளான இனமே இப்போது இன்னொரு இன அழிப்பை இப்போது நடத்துவது கொடுமை. அந்தக் கொடிய அனுபவத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட பாடம்தான் என்ன? ஒருகால், மனிதத்தை அங்கே இழந்துவிட்டனரா?

    இந்த அருமையான பதிவிற்கு நன்றி சார்.

  2. Sebastian
    May 12, 2024 at 1:23 pm

    “யாத்வஷேம்” குறித்த உங்கள் பார்வையை மிக நடுநிலையோடு சொல்லிப் போகிறீர்கள். படைப்பாளியின் மன அந்தரங்கத்தையும் காட்டியிருக்கிறீர்கள். விமர்சன சர்ஜரி செய்வதில் நீங்கள் முதன்மை.

    எதில் மனம் மூழ்கியிருக்கிறதோ அங்கிருந்து தானே பாத்திரங்கள் வழி அவர்தம் சித்தாந்தம் வியாபித்தெழும். அது அவர் படைப்பு. அதனால் தன்‌ சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டார். உலகில் எந்த மதத்தைக் காட்டிலும் கிறிஸ்துவர்கள் பிறரைக் கொன்றார்கள் என்பதைவிட கிறிஸ்துவின் சீடர்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள் என்பதையே நம்புகிறேன் (யாரும் புள்ளிவிவரம் கொடுத்தால் நன்று).

    சரித்திரம் எனக்கு பிடிக்குமாதலால் நாவலை வாசிக்க காத்திருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...