காலச்சக்கரம்

ஒரு நாள், பிரபல ஓவியரான ராஜா ரவிவர்மா சந்தையில் நடந்து சென்றார். ஒரு இளம் வயது பெண்மணி அவர் அருகில் ஓடி வந்து, “நான் உங்களின் மிகப் பெரிய ரசிகை. உங்கள் ஓவியங்களுக்கு நான் அடிமை,” எனச் சொல்கிறாள்.

அதற்கு ரவிவர்மா சிறு புன்னகையுடன் தலையை மட்டும் அசைக்கிறார். சற்றும் தாமதிக்காமல், அந்தப் பெண்மணி அவளின் கைப்பையிலிருந்து ஒரு பேனாவையும் தாளையும் எடுத்து, அவளுக்காக ஒரு படம் வரைந்து தரும்படி மிகத் தாழ்மையாகக் கேட்கிறாள்.

அதற்கு ரவிவர்மா “கண்டிப்பாக வரைந்து கொடுக்கிறேன்,” எனக் கூறி அவளுக்காக ஒரு படம் வரைய ஆரம்பித்தார்.

சுமார் 30 வினாடிக்குள் அவர் ஒரு படத்தை வரைந்து, அந்தப் பெண்மணிக்குக் கொடுத்தார். அந்தப் படத்தை மிகப் பரவசத்துடன் பெற்றுக்கொண்டு, அந்தப் பெண்மணி நடக்க ஆரம்பிக்கிறாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ லேடி! இதன் தொகை 30 லட்சம்,” என ரவிவர்மா சொல்கிறார்.

அதிர்ச்சியில் அகன்ற கண்களுடன் “என்…..ன! 30 லட்சமா?! இதை வரைய 30 வினாடிதானே ஆனாது, அதற்கு ஏன் 30 லட்சம்?, என அந்தப் பெண்மணி கேட்கிறாள்.

“மேடம், இதை 30 வினாடிகளில் வரைய, எனக்கு 30 வருடங்கள் ஆனது,”எனக் கூறுகிறார் ரவிவர்மா.

நேபாளில் நான் சந்தித்த ஓவியர் டிக்‌ஷன், தங்கா ஓவியங்களின் விலையைக் கூறியபோது, அந்தப் பெண்மணிக்கு இருந்த அதே வியப்பும் ஆச்சரியமும் என்னிடமும் இருந்தது. என்னுடைய கண்களும் ஆச்சரியத்தில் அகன்றன.

“சில நேரங்களில் மற்றவர்களுக்கு நம்முடைய மதிப்பு தெரியாது. நாம்தான் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்,” என்று ரவிவர்மா அந்தப் பெண்மணியிடம் கூறி விடைபெற்றுச் செல்வார். டிக்‌ஷனும் அன்று அதைதான் செய்தார்.

டிக்‌ஷன், ‘Heritage Thangka Gallery and Art School’ளின் தோற்றுனரின் இளைய மகன். நான்கு தலைமுறையாகத் தங்கா ஓவியக் கலையில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தங்கா ஓவியக் கலை அவரின் ரத்தத்தில் ஊறிப் போயிருக்கும் என அவரின் தோற்றத்திலேயே தெரிந்தது. இந்தக் கலைக்கூடத்திற்குச் செல்லும் திட்டம் சுமார் 6 மாதத்திற்கு முன்பே முடிவாகியிருந்தது. மிகப் பெரிய ஆவலுடனும் நிறைய எதிர்ப்பார்ப்புகளுடனும் தங்கா கலைக்கூடத்திற்குச் சென்றிருந்தேன். என்னுடன் நவீனும் அரவினும் வந்தது மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. வழக்கமான அறிமுகத்துடன் டிக்‌ஷனுடனான உரையாடல் ஆரம்பித்தது. டிக்‌ஷனின் கனிவான சிரிப்பினால் அவருடன் தொடர்ந்து உரையாட இலகுவாக இருந்தது.

சுமார் 30 நிமிடமாகத் தங்கா ஓவியத்தைப் பற்றியும் அதன் சிறப்பையும் விளக்கியபடி தன்னுடைய ஓவியக் கலைக்கூடத்தில் அமைந்திருக்கும் அனைத்து பகுதியையும் காட்டினார் டிக்‌ஷன். இறுதியாகத் தங்க ஓவியங்களை விற்பனைக்கு வைத்திருக்கும் ஓர் அறைக்குள் எங்களை அழைத்துச் சென்றார். கலைகளைக் கற்பிக்கும் இடங்களில் இருக்கும் நேர்மறை அதிர்வு அங்கும் நிறைந்திருந்தது.

ஒரு தங்கா ஓவியராக இருக்கும் டிக்‌ஷன், அதன் சிறப்பையும் வரலாற்றையும் விளக்கினார். “என் விளக்கத்தினால் பார்வையாளர்களுக்கு அதன் மேல் மதிப்பும் மரியாதையும் கூடலாம். கூடவே ஆச்சரியத்தையும் வர வழைக்கலாம். ஆனால், அவை அந்த ஓவியரின் மேல் படிவதில்லை. தங்கா ஓவியக் கலையில் ஓவியரின் தனித் தன்மை, அடையாளம், அங்கீகாரம் போன்றவற்றிற்கு இடமில்லை. அவற்றை மனதளவில் ஒப்புக்கொண்ட பிறகுதான் ஓவியர்கள் அதில் ஈடுபடுகிறார்கள்.” என்றார் டிக்‌ஷன். தன்னலமற்ற ஓவியர்களின் மதிப்பை உணர்த்தும் வகையில் இருந்தது டிக்‌ஷன் சொன்ன விளக்கம். அந்த அர்ப்பணிப்புக்குதான் அத்தனை விலை என டிக்‌ஷனுடன் உரையாடும்போது தோன்றியது.

டிக்‌ஷன் பயில்முறை ஓவியர்கள், இடை நிலை ஓவியர்கள், உயர் நிலை ஓவியர்கள் என மூன்று வகையான ஓவியர்களை எங்களுக்குக் காட்டினார். ஓவியரின் தரத்துக்கேற்ப ஓவியத்தின் விலையும் வேறுபட்டிருந்தது. எந்தப் பேரமும் பேசாமல், டிக்‌ஷன் சொன்ன விலைக்கே தங்கா ஓவியத்தை வாங்க நினைத்தேன்.

டிக்‌ஷன் அழைத்துச் சென்ற அறையை ஏற்கனவே இணையத்தில் பார்த்திருந்ததால், புதியதாக ஒன்றும் தென்படவில்லை. தன்னுடைய தந்தை மற்றும் அந்தக் கலைக்கூடத்தின் தோற்றுனரான பாபுலல் லாமா (Babulal Lama) வரைந்த சில ஓவியங்களை டிக்‌ஷன் பார்வைக்கு வைத்தார். அற்புதமான ஓவியங்கள் அவை. பாபுலல் லாமாவின் ஓவியங்கள் மெய்சிலிர்க்க வைத்தது.  திபெத்திய மொழியில் ‘லாமா’ என்றால் ‘குரு’. பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் போற்றப்படும் ஒரு சமய பதவியின் அடையாளப் பெயர். தங்கா ஓவியக் கலையின் குருவாகத் திகழும் பாபுலல் லாமாவுக்குச் சுமார் 60 வயதாவது இருக்கும். நாற்பதாண்டுகளாகத் தங்கா ஓவியக் கலையில் ஈடுபட்டு வருகிறார். பெளத்த மதத்தின் மிக உயர்வான சமய பதவியில் இருக்கும் அவர், தரையில் சம்மணமிட்டு, ஒரு பழைய சட்டை அணிந்துகொண்டு தங்கா ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தார். வரைகிறார் எனச் சொல்வதைவிட அவர் புத்தரை நோக்கி தவம் செய்கிறார் எனலாம். சற்று நேரம் அவர் அருகில் அமர்ந்த அவர் வரைவதைப் பார்க்கும்போது அதனை உணர்ந்தேன். பாபுலல் லாமா எங்களிடம் ஒரு சிறிய புன்னகையை மட்டும் காட்டி மீண்டும் வரையத் தொடங்கினார். ஒரு சிறுவனின் புன்னகை போலிருந்தது அது.

ஓவியருடன் கட்டுரையாளர்

டிக்‌ஷன் பாபுலல் லாமாவின் ஓவியங்களைக் காட்டும்போது சற்று முன் அவர் வர்ணம் பூசும் விரல்களைப் பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க கரங்கள் அவை. ஓர் எழுத்தாளரின் பேனா, இசைக் கலைஞரின் கருவியைப் போலவே, ஓவியரின் விரல் ஒரு கலை படைப்பின் செயல்பாட்டில் மிக முக்கியமான கருவியாகும். அது ஓர் ஓவியரின் பார்வைக்கும் ‘கேன்வாஸுக்கும்’ (canvas) இடையிலான வழித்தடம். விரல்கள் ஓர் ஓவியரின் எண்ணத்தையும் கருத்துக்களையும் உயிர்ப்பிக்க வைக்கின்றன.

பாபுலல் லாமா வரையும் ஓவியங்கள் கடவுளாக எண்ணி பலராலும் வணங்கக் கூடியவை. அவர் வரையும் ஓவியம் பிரார்த்தனைக்கும் தியானத்திற்கும் பயன்படுத்தப்பட்டு, உயர்வான நிலையை அவை அடைகிறது. இறைத்தன்மை கொண்ட ஒரு கலை படைப்பை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வெறும் பயிற்சியால் மட்டும் அதனை அடைந்துவிட முடியாது. அதற்கு மிகத் தெளிவான சிந்தனை, மனம், உடல் அமைய வேண்டும். சிந்தனை செயல் ஒன்றோடு கலந்திருந்தால் மட்டுமே இத்தகைய படைப்புகளை உருவாக்க முடியும். அதற்கு நிறைய தியாகங்களும் அர்ப்பணிப்பும் தேவை. எல்லாவற்றையும் மீறி இறைத்தன்மையின் அனுக்கிரகம் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பாபுலல் லாமாவின் கலை படைப்பில் தெரிந்தது.

காலச்சக்கரம்

டிக்‌ஷன் காட்டிய பல தங்கா ஓவியங்களில் என்னை ஈர்த்தது, காலச்சக்கரம்தான். மீண்டும் மீண்டும் கண்கள் அதை நோக்கியே சென்றன. லும்பினி பயணத்தின்போது, எங்களின் பயண வழிகாட்டியான திரு. கணேஷ், புத்தரைப் பற்றியும் பெளத்த சமயத்தைப் பற்றியும் மிக விரிவாக விளக்கிக் கொண்டிருக்கையில் “எல்லோரும் புத்தராகலாம். நீங்களும் புத்தராகலாம் என்று தன்னுடைய உரையில் சொன்னார். அதற்குச் சான்றுதான் காலச்சக்கரா. காலச்சக்கராவைப் பின்பற்றினால் எல்லோரும் புத்தர் தான்,” என்றார்.

தங்கா ஓவியம் பௌத்த மத தெய்வங்கள், புராணக் காட்சிகள் மற்றும் மண்டலாக்களைச் சித்தரிப்பவை. இதனை தவிர்த்து, பெளத்த மதத் தத்துவமும் தங்கா  ஓவியத்தின் வழி வரையப்பட்டு வருகிறது. அதில் மிக முதன்மையானது காலச்சக்கரா (Wheel of Life). எனக்குக் காலச்சக்கராவை வாங்க வேண்டும் என நீண்ட நாள் எண்ணம் இருந்தது. அதற்கு காரணம் எங்கள் வீட்டின் பூஜை அறையில் தாத்தா வைத்திருந்த ஒரு பழைமையான வண்ணங்கள் மங்கிப் போயிருந்த காலச்சக்கர படம்தான். தாத்தா அந்தக் காலச்சக்கர படத்தை வைத்துதான் சொர்க்கம், நரகம், கர்மா, மறுபிறவி, பஞ்சபூதம் என பலக் கதைகளைச் சொல்லி இரவில் தூங்க வைப்பார்.

என்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்குக் காலச்சக்கரத்தை வைத்துதான் அறிவுரை கூறியிருக்கிறார். சிறு வயதில் அதெல்லாம் வெறும் கதை எனத்தான் நினைத்தேன். காலச்சக்கரத்தில் மிகப் பெரிய தத்துவம் அடங்கியிருக்கிறது என நான் வளர்ந்தப் பிறகுதான் உணர்ந்தேன்.

இந்தியாவில் பீகார் என அழைக்கப்படும் ஒரு மாநிலத்தில் ‘கயை’ எனும் ஒரு சிற்றூருக்குப் புத்தர் தன்னுடைய துறவு பயணத்தின்போது கடந்து செல்கிறார். அங்கு ஒரு போதி மரத்தடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை இந்த இடத்தைவிட்டு போகக் கூடாதென முடிவெடுக்கிறார். அங்கு நடக்கும் நிகழ்வுகளை மிக நுண்ணிப்பாகக் கூர்ந்து கவனித்து வருகிறார். சில நாட்களிலேயே ஒரு மனிதன் படும் கவலைக்கும் துன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் காரணத்தைக் கண்டறிகிறார். இந்தப் புரிந்துணர்வே அவரின் ஞானத்தின் அடிக்கல் என எண்ணி அதனை மற்றவர்களுக்கு உபதேசிக்க நினைக்கையில் மொழி ஒரு பெரிய தடையாக ஆகிறது. அதனை நிவர்த்திச் செய்ய புத்தர் காலச்சக்கரத்தை மணலில் வரைகிறார். ஓவியம் ஒரு நிகழ்வைக் காட்சிப்படுத்த உதவும். ஓவியத்தின் வழி சித்தார்த்தர் தான் பெற்ற ஞானத்தைப் பிறருக்குப் போதிக்கிறார். இவ்வாறு வரைந்து காட்டி காலச்சக்கராவை அறிமுகம் செய்து வைத்த இடம் இன்று ‘புத்தகயா’ என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

டிக்‌ஷனுடன் உரையாடிக்கொண்டே அங்குள்ள எல்லா வகையான காலச்சக்கராவை ஒரு கண்ணொட்டம் எடுத்தேன். என்னுடைய கவனம் காலச்சக்கராவை நோக்கி இருந்ததை டிக்‌ஷன் உணர்ந்திருக்கக் கூடும். டிக்‌ஷன் தன்னுடைய தந்தை, பாபுலல் லாமா வரைந்திருந்த ஒரு மிகச் சிறந்த காலச்சக்கரத்தை விரித்துக் காட்டினார். ஓவியத்தின் மஞ்சள் நிறப் பின்புலம் என்னுடைய முழுக் கவனத்தையும் ஈர்த்தது. ஒளி நிரம்பிய ஓவியம் அது. மனதை உருக்கி அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்தது அந்த ஓவியம்.

“இது காலச்சக்கரா. மிகப் பிரபலமான ஓவியம். ‘காலா’ என்றால் நேரம், ‘சக்கரா’ என்றால் சக்கரம்; அது  சுழற்சியைக் குறிக்கிறது. காலச்சக்கரா என்றால் காலத்தின் சக்கரம்,” என்றார் டிக்‌ஷன்.

ஓவியத்தை உற்று கவனித்தேன். பின்புலத்தின் மஞ்சள் நிறம் கவனத்தை ஈர்த்தாலும், மண்டலாவினுள் நான்கு வாசல்கள் இருப்பதுதான் முதலில் கண்களில் தென்பட்டது. நீர், நெருப்பு, தாமரை, சூரியன் என அடுத்தடுத்து பல குறியீடுகள் கண்ணில் தென்பட்டது. ஒரு வட்டத்தில் எப்படி இவையணைத்தையும் அடக்க முடியும் எனத் தோன்றியது. அதுதான் தங்கா ஓவியத்தின் சிறப்பும் கூட. நம் கண்களுக்கு அப்பாற்பட்டவைப் பூதக் கண்ணாடியில் வழியில் அபாரமாகத் தெரியும். பூதக் கண்ணாடியின் வழி தங்காவின் முழு அழகையும் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கையில் தங்கா ஓவியம் எவ்வளவு பிரமிப்பான ஓவியம், அதனை வரையும் ஓவியர்களுக்கு எத்தகைய ஆற்றலும் நுணுக்கங்களும் இருக்க வேண்டும் எனப் நமக்குப் புலப்படும்.

டிக்‌ஷன் கொடுத்தப் பூதக் கண்ணாடியின் வழி பார்க்கையில், எங்களுக்கு வேறோன்றும் புலப்பட்டது. அது எங்களை மிகப் பெரிய பிரமிப்பில் ஆழ்த்தியது. தங்க மாளிகைக்குள் நுழைந்தது போல ஓர் உணர்வு. 24 கேரட் தங்கம் பூதக் கண்ணாடியில் சூரியனின் பொன் ஒளிப் போல தக தகவென ஜொலித்தது. தீ கில்டிங் (fire gilding) மற்றும் நீர் கில்டிங் (water gilding) எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கா ஓவியத்தில் 24K தங்கத்தை மிகக் கவனமாகப் பயன்படுத்துகிறார்கள். அது தங்கா ஓவியத்தின் அழகை மேலும் மெருகூட்டச் செய்கிறது. தங்கம் தூய்மை, ஞானம் மற்றும் தெய்வீக தன்மையைச் சித்தரிக்கிறது. தங்கா ஓவியங்களில் மின்னும் தங்கத்தின் ஒளி பார்வையாளருக்குப் பக்தியையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன எனச் சொல்லி டிக்‌ஷன் சில தங்கத்தால் செய்த வண்ணத் தூள்களைக் காட்டினார்.

சட்டென டிக்‌ஷன் காட்டிய காலச்சக்கராவைப் பார்க்கையில், இந்தியாவில் அமைந்திருக்கும் மதுரை மீனாட்சி கோயிலின் வரைபடம் போல இருந்தது. மதுரை கோயிலின் நான்கு திசை வாசல் போலவே காலச்சக்காராவிலும் இருந்தது. காலச்சக்கரவை முப்பரிமாண வடிவத்தில் கற்பனை செய்து பார்த்தால், ஒரு கோவிலின் அமைப்பு போலவே இருக்கும். அதன் அடிப்படையில்தான் உருவாக்கிருக்கக் கூடும்.   

டிக்‌ஷன் தன்னுடைய ஆள்காட்டி விரலால், காலச்சக்கராவில் இருக்கும் சின்னங்களைச் சுட்டிக் காட்டி விளக்கத் தொடங்கினார். “இந்த வட்டத்தை மண்டலா என்று அழைப்பார்கள். மண்டலம் என்றால் ஒரு வட்ட வடிவம். அது பிரபஞ்சம் அல்லது அண்டம் என்று பொருள்படும். இந்தக் காலாச்சக்கரத்தில் ஆறு வட்டங்கள் உள்ளன. முதலாவது பிரபஞ்சம் அடுத்த ஒவ்வொரு வட்டமும் பஞ்சபூதத்தைக் குறிக்கிறது. வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமியைக் குறிக்கிறது. இந்த மண்டலாவைக் கடந்து உள்ளே நுழைவதற்கு நான்கு வாசல்கள் உள்ளன. அவை நான்கும், நான்கு திசைகளைக் குறிக்கும். ஒவ்வொரு திசையும் வெவ்வேறு வண்ணத்தில் தீட்டப்பட்டிருக்கும். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், காலை, இரவு நேரம் என அதற்கேற்ப வண்ணங்கள் அமைந்திருக்கும். மண்டலத்தின் மையப்பகுதியில் தாமரை மலர் உள்ளது. தாமரை மகிழ்ச்சி அல்லது மனிதக் குலத்தைக் குறிக்கிறது. வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் மோட்சத்தை அடைய நமக்கு மூன்று சிறிய கதவுகளின் சாவிகள் தேவை. முதல் கதவு உணர்வு, இரண்டாவது பேச்சு, மூன்றாவது நமது சிந்தனை. இவை அனைத்தையும் திறக்கும் சாவி நம்மிடம் இருந்தால் மண்டலாவின் மையப் பகுதிக்குச் செல்லலாம். இதனால்தான் நாம் பிராத்தனையின்போது கோவில்களில் நெற்றி, வாய் மற்றும் மனதில் கரங்களைக் குவித்து வழிபடுகிறோம். உணர்வு, பேச்சு மற்றும் சிந்தனையைக் கட்டுப்படுத்தினால் மண்டலாவின் மையப் பகுதியில் இருக்கும் தாமரையைப் பெற முடியும். அது மோட்சத்தின் வழி,” எனச் சிறிய புன்னகையுடன் காலச்சக்கரத்தை விளக்கி முடித்தார்.

டிக்‌ஷன் ஓர் ஓவியர் மட்டுமல்ல, காலச்சக்காரா உணர்த்தும் தத்துவத்தை மற்றவர்களுக்குப் போதிக்கும் ஒரு சமய தூதுவர் போல காட்சியளித்தார். அவரின் முகத்தின் தேஜேஷ் மேலும் பிரகாசித்தது.

“மஹா விஷ்ணு கையில ஒரு சக்கரம் இருக்கு பாத்திருக்கிறியா? அதன் பெயர் சுதர்சன சக்கரம். விஷ்ணுதான் காலச்சக்கரத்தை இயக்குகிறார். அவரின் செயல்களால் மட்டுமே காலம் கடந்து செல்கிறது. நீ என்ன தப்பு செய்தாலும் விஷ்ணுவுக்குத் தெரியும். தப்பு செய்கிறவர்களுக்கு மோட்ஷம் கிடைக்காமல் இந்தச் சக்கரத்தினுள்ளே சுழன்றுகிட்டே இருக்க வேண்டியதுதான்”, என ஒரு புரட்டாசி சனியில் பெருமாளுக்குப் படையல் போடும் போது, தாத்தா சொல்லி மிரட்டியது ஞாபகத்திற்கு வந்தது.

காலசக்கரா பல மத மரபுகள் மற்றும் தத்துவங்களில் காணப்படும் ஒரு கருத்தாகும். குறிப்பாக இந்து மதம், சமணம், சீக்கியம் மற்றும் பௌத்தம் போன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதங்களில் அனைத்திலும் காலச்சக்கராவின் பயன்பாடு உள்ளது.

ஆனால் சிறுவயதில் நான் பார்த்த காலச்சக்கராவுக்கும் டிக்‌ஷன் காட்டியதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அதை டிக்‌ஷனிடம் கேட்டபோது,

“நீங்கள் பார்ப்பது 14-ஆவது பெளத்த மதத் தலைவரான தலாய் லாமா உருவாக்கிய காலச்சக்கரம். ஒவ்வொரு பௌத்த தலைவர்களும் ஒரு புதிய காலச்சக்கரத்தை அறிமுகம் செய்து வைப்பார்கள். அவர்களின் போதனையை அதன்வழி புத்தப் பிக்குகளுக்கும் பக்கதர்களுக்கு உபதேசிப்பார்கள். புதிய பெளத்த தலைவர் தன்னுடைய பதவி ஏற்றத்தின்போது, காலச்சக்கரத்தை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட மணலில் ஒரு பெரிய மண்டபத்தில் மற்ற புத்த பிக்குகளின் உதவியுடன் வரைவார். புதிய தாலாய் லாமா காலச்சக்கரத்தை அறிமுகம் செய்யும் நாளை உலகமே எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும். அந்நாள் ஒரு பெரிய சமய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் காலச்சக்கரத்தை அறிமுகம் செய்யும் முன் புத்தப் பிக்குகள் ஆடி பாடி, மந்திரங்களை ஓதி, பெளத்த மத கோட்பாடுகளுக்கேற்ப சமய சடங்குகளைச் செய்து இவ்விழா பல நாட்களுக்கு நீடிக்கும். ‘காலச்சக்கரா சாம் நடனம்’ எனும் ஒரு சடங்கு சேர்ந்த நடனம் புத்த பிக்குகளால் அவ்விழாவில் ஆடப்படுகிறது. ‘காலச்சக்கர சாம் நடனம்’ தெய்வத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும், நேர்மறையான ஆற்றல்களை உருவாக்குவதற்கும் ஒரு புனிதமான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் புத்தப் பிக்குகளால் நடனமாடப்பட்டு பிறகு, தாலாய் லாமா புதிய காலச்சக்கரத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பார். புதிய காலச்சக்கரத்தைக் காண அனைத்து தங்கா ஓவியர்களும் ஆவலுடன் எதிர்ப்பாத்து காத்திருப்போம். தாலாய் லாமா அறிமுகம் செய்து வைத்த புதிய காலச்சக்கரத்தைப் பின்பற்றிதான் எல்லா தங்கா ஓவியர்களும் வரைய வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றங்களையும் கொண்டு வரக்கூடாது. இது பெளத்த மதத்தின் விதிமுறை.

புதிய தாலாய் லாமாவாகப் பதவி ஏற்பவர் ‘ஷக்யமுனி’ என அழைக்கப்படும் சித்தார்த்த கௌதம புத்தரின் மறு பிறவியாகக் கருதப்படுபவர். ஆகையால், அவர் அறிமுகம் செய்து வைக்கும் காலச்சக்கரத்தின் பொருளை உள்வாங்கிக் கொண்டு, நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுக்க அதனை வரைய முயற்சிக்கிறோம். இங்கு மட்டுமில்லை, உலகில் எங்கும் ஒரே விதிமுறைதான்,” என மிகச் சுவாரசியமானக் கருத்தைப் பகிர்ந்து கொண்டார் டிக்‌ஷன்.

அதைக் கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும், பெளத்த மத்தத்தின் கோட்பாடுகளின் மீதும் அவர்களின் கலாச்சார நம்பிக்கையின் மீதும் மரியாதை கூடியது. காலச்சக்கரா ஒரு சமய போதனைக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய பொருள் இல்லை. அது தியானம், சடங்குகள், மந்திரங்கள், நடனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது என டிக்‌ஷன் விளக்கமளித்தபோது புரிந்தது.

டிக்‌ஷனுடனான உரையாடல் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். ஒரு கலைஞன் அவன் படைப்புக்கான அங்கீகாரம், பதவி, பாராட்டு, விருது என இவை எல்லாவற்றையும்விட அந்தக் கலையைப் பற்றிய உரையாடலைதான் அதிகம் விரும்புவான். அந்தக் கலையின் சிறப்பையும் அதனின் உச்சமும் மற்றவருக்குச் சென்றடைவதை உறுதிச் செய்வான். டிக்‌ஷன் அதை மிக உன்னதமாகச் செய்து வருகிறார் என அவருடான உரையாடலின்போது தெரிய வந்தது.

நடனவகுப்பின்போது கோவில்களில் வரையப்படும் மண்டலா ஓவியத்தில் ஈர்க்கப்பட்டு, பிறகு பொழுது போக்குக்காக மண்டலாவை வரையவதோடு நிற்காமல், ஒரு கலையின் சக்தி என்னை நேபாள் நாட்டில் அமைந்திருக்கும் ஒரு பிரபலமான தங்கா கலைக்கூடத்தில் மிகப் பெரிய ஓவியக் கலைஞர்களைச் சந்திக்கும் பாக்கியத்தைக் கொடுத்தது. சிறு வதியதிலிருந்து நாம் பார்க்கும் கேட்டும் சின்ன சின்ன விஷயங்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பெரிய தாக்கத்தை என் வாழ்வில் இந்தத் தங்கா ஓவியங்களும் அவற்றை வரையும் கலைஞர்களும் கொண்டு வந்துள்ளனர். 

1 comment for “காலச்சக்கரம்

  1. May 6, 2024 at 1:46 am

    பிக்காஸோ எப்படி, எப்போது ராஜா ரவிவர்மாவாக மாறுவேடம் போட்டுக்கொண்டு இந்தியா வந்தார்? கட்டுரையாளர் கட்டுரைத் துவக்கத்தில் சொல்லியிருக்கிற சம்பவம் பிக்காஸோ வாழ்வில் நடந்த பிரபல சம்பவம் ஆகும். நான் ஒரு நவீன ஓவியன் (நவீன தாந்த்ரீக ஓவியன்) என்ற முறையிலும், பிக்காஸோ எனது மானசீக குருநாதர் என்ற முறையிலும், அவரது வாழ்க்கை மற்றும் அவர் தொடர்பான இது போன்ற சில சுவையான சம்பவங்களை முன்பே அறிவேன். அதனால்தான் இக் கட்டுரைத் துவக்கம் தற்செயலாகக் கண்ணில் பட்டதுமே கட்டுரையாளர், பிக்காஸோவை ரவி வர்மாவாக மாற்றிவிட்ட சங்கதி தெரிந்தது. திரித்து எழுதினாரா, மறந்துபோய் எழுதினாரா என்பது தெரியவில்லை. எப்படியாயினும், கட்டுரை எழுதும்போது தகவல் பிழைகள் நேராதபடி பார்த்துக்கொள்வது அவசியம்.

    மேற்படி சம்பவம் பிக்காஸோ வாழ்வில் நடந்தது என்பதற்கு ஆங்கிலத் தளங்களிலிருந்து சான்று இணைப்புகள் இதோ:

    https://www.thellabb.com/pablo-picasso-masterpiece/
    https://www.psychotactics.com/the-picasso-principle/
    https://www.thelittledesigncorner.com/blog/picasso

    – ஷாராஜ், பொள்ளாச்சி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...