இ. ஆ. சி அல்லது ஆ. இ. சி

அந்தக் கதையின் போலிக் கதையை என்னால் எழுத முடியும். ஆனால், என்னதான் இருந்தாலும் போலி போலித்தானே. டேனியல் கிரேக் ‘ஜேம்ஸ் பாண்ட்’ திரையில் கட்டியிருக்கும் ஒமேகா கைக்கடிகாரத்தில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் தொடக்க விலை மலேசிய ரிங்கிட் முப்பதாயிரம். ஆனாலும், அந்த ஒமேகா கைக்கடிக்காரத்தை ‘மூடா டாட் காம்’ என்ற மலேசிய இணையச் சந்தையில் முந்நூறு ரிங்கிட் தொடக்க விலையில் போட்டிருந்தார்கள். கீழே ‘ஒமேகா காப்பி ஒரி’ என்று ‘ஜேம்ஸ் பாண்ட்’ நாயகன் டேனியல் கிரேக்கின் புகைப்படத்துடன் விளம்பரம் போட்டிருந்தார்கள். நானும் வாங்கினேன். பிற்காலத்தில், அந்தக் காப்பி ஒரி ஒமேகா கைக்கடிகாரம் போல நானும் போலியான வாழ்க்கை பாத்திரத்தை ஏந்தி வாழப் போகிறேன் என்பதை அறிந்திருக்கவில்லை.

வாழ்க்கை எப்போதுமே எதிர்காலம் குறித்த ஒரு குறிப்பை நமக்கு உணர்த்திக் கொண்டுதான் போகிறது. நம் மனம்தான் அதை அறிந்துகொள்ளும் ஞான நிலையில் இல்லை. சம்பவங்கள் கடந்து போனப் பிறகுதான் நம் மனதிற்கு ‘அப்போதே தெரியுமே’ என்ற புரிதல் வருகிறது. பலருக்கு வாழ்க்கையைக் கடந்தப் பிறகும் எதையும் புரிந்துகொள்ளும் கொடுப்பினை இல்லாமல் போகின்றது.

பதினேழு வயதில் அந்தத் திரைப்படம் குறித்து தேடத் தொடங்கினேன். அந்தப் திரைப்படத்தின் நிழல் என் வாழ்க்கையில் படரும் என்பதை அறியும் ஞானம் அன்று எனக்கில்லை. தன்னியல்பாக மனம் அந்தத் திரைப்படத்தைத் தேடத் தொடங்கியதை நான் வேடிக்கை மட்டுமே பார்த்தேன். பிறகு அந்தத் திரைப்படம் மாதிரியான போலிக் கதை என் வாழ்வில் நடந்தபோது நானும் குறுக்கீடு எதுவுமின்றி தன்னியல்பாக நடித்த கதாநாயகனாக ஆனேன்.

***

திரைப்படங்களுக்காக நாம் வீட்டில் காத்திருந்தக் காலம் கடந்து, கைபேசியிலேயே நாமே தேடி, சட்ட ரீதியாகப் பதிவிறக்கம் செய்யும் வசதிகளும் வந்து விட்டன. பக்திப் படங்கள் வந்தாலும் அதற்குப் போட்டியாகப் பயம் காட்டும் பேய்ப் படங்களும் வெளிவருவது போலவே, விரல்களின் தாளத்தில், சட்டத்திற்குப் புறம்பான கள்ள இணையச் சந்தைகளிலும் நமக்கானத் திரைப்பட்டத்தைத் திடீர் திடீரென்று அலறல் சத்தத்துடன் இடைஞ்சல் செய்யும் கள்ள விளம்பரத்தைப் புறக்கணித்து தேடிப் பதிவிறக்கம் செய்யலாம்.

தொலைவரி வசதி வந்ததும், பதிவிறக்கம் செய்வது சாமானிய மனிதனுக்கும் எளிமையாகி விட்டது. அதில் அரிதானப் திரைப்படங்கள் என்று ஒரு வட இந்தியன் வழிநடத்தும் ‘தொலைவரி அலைவரிசை’ குழுவில் புதியப் படங்களைத் தவிர, அதாவது 2015 முன்பு வெளிவந்த, உலகின் எந்த நாட்டின், மொழியின் திரைப்படங்களாக இருந்தாலும் இலவசமாகப் பதிவிடுவான். பதிவிறக்கம் செய்து கோப்பில் சேமித்து, நேரம் கிடைக்கும் போது குடும்பத்தோடோ, தனிமையிலோ ரசித்துப் பார்ப்பது மட்டுமே நமது வேலை. அவனிடம் நான் தேடிக் கிடைக்காத அந்தப் படத்தைப் பற்றி கேட்டேன். அவனது தோல்வியை ஒப்புக் கொண்டான். அவனின் தோல்வி எனக்கொன்றும் ஆச்சரியமாகவேயில்லை. இணையத்தில், திரைப்படங்களுக்கான அனைத்து தளத்திலும், 123மூவீஸ் உட்பட்ட தேடிப் பார்த்து தோல்வியடைந்தவன் நான். அந்த வட இந்தியனின் தோல்விக்கு, பிறகு எனக்குத் தொலைவரி வழி முகமறியாத ஒருவன் ஆங்கிலத்தில் தகவல் ஒன்றை அனுப்பினான். முதலில் ‘ஸ்க்கேமர்’ என்று தான் நினைத்தேன். லிங்க் ஒன்றை அனுப்பி, ‘இந்தக் குழுவில் இணையுங்கள் சகோ, நீங்கள் தேடிக் கிடைக்காதத் திரைப்படம் எதுவானாலும் அவர்கள் தேடிப் போடுவார்கள்’ என்றான். நம்மை அறிந்தவர்களே பிரதிபலன் எதிர்பாராமல் உதவ முன் வராத இந்தக் காலத்தில் நமக்கு உதவியவன் உண்மையில் மனிதனா என்று கூட, அற்புதத்தில் நம்பிக்கை வைக்கும், என் மாயாஜால மனம் நினைத்தது.

லிங்கில் இணைந்து, நான் தேடிய அந்தத் திரைப்பட்டதின் பெயர் மற்றும் வெளியான ஆண்டையும் குறிப்பிட்டேன். உலக சினிமாவைத் தேடும்போது, கூடவே ஆண்டையும் குறிப்பிட வேண்டும். அந்தக் குழுவில், ‘நீங்கள் தேடிக் கிடைக்காத சினிமா எதுவாக இருந்தாலும், அதைத் தேடி, பதிவிறக்கம் செய்து உங்களுக்காகக் குழுவில் பதிவிடுவோம்’ என ‘பின்’ செய்திருந்தார்கள்.

***

இந்த வயதில் கூட அவர் மேல் எனக்கு ஈர்ப்பு வரும் என்று நான் நினைத்திருக்கவேவில்லை. அதற்காக எந்தத் திட்டத்தையும் முன் கூட்டியே போடவுமில்லை. இன்று என்னவராகிப் போன அவரும் அதே மாதிரியே நினைத்திருக்க மாட்டார். அவர் ஏன் என்னை ஏற்றுக்கொண்டார் என்பது குறித்து என்னிடமும் இன்னும் பதில் கிடைக்கவில்லை! ஆனால் அவரிடம் ‘நீ வேறு’ என்ற பதில் நான் எந்த வகையில் வேறு எனக் குழப்பியது. ஒரு வேளை அவர்களைப் பற்றி உங்களான ‘உன்னிடம்’ சொல்லி கண்கள் கலங்கியதால் உனக்குக் காதல் வந்திருக்குமாவென்று தெரியவில்லை. அது இரக்கம் தானே. எப்படி காதலாகும். அழகும், பணமும் காதல் குடியிருக்கும் அறையில் நுழைய முன் வாசல்களானால், இரக்கம் பின் வாசலாகும். பின் வாசல் வழிதானே எனக்கும் திறக்கப்பட்டது.

“ஆமா அந்த பொறுக்கிங்கல பத்தி நா எதுக்கு உன்கிட்ட சொன்னேன்னு தெரியல!”

இரண்டு பொறுக்கிகள். ஒருவன் கருப்பன். இன்னொருவன் அவனுக்கு நேர் எதிரான நிறத்தில் இருப்பவன். கருப்பனுக்குக் கிழட்டு நாய் என்று பட்டப் பெயரும் உண்டு. பசிப் பிணியின் கொடுமையால் விசுவாமித்திரர் அலைந்து திரிந்து இறுதியாக நாய்க்கறி தின்றது போலவே, காமப் பிணியால் இவனும் அழைந்து திரிந்து இறுதியில் எந்த நாய்க்கறிக் கிடைத்தாலும் தின்னும் நாய் அவன்.

“அவன் பாக்குற பார்வையே ஒரு பொறுக்கி பார்வை. ஒரு நாளைக்கி என் சப்பாத்தியால அவன் மூஞ்சி கிழியப்போது!”

அவரின் அந்த வார்த்தையை நான் கொஞ்சம் நாகரீகமாகவே பதிந்துள்ளேன். அவனின் பார்வை அவரிடம் ஏற்படுத்திய அருவருப்புக்குப் பதிலடி அவரின் அழுகை மட்டுமே, என்றுதான் என்னிடம் வெளியிட்டார். பல பெண்களுக்கு ஆணின் பார்வை வெளிப்படுத்தும் உள் அர்த்தம் தெரிந்துவிடும். ஆனால், என்னிடமிருந்து அப்படி எதையும் அவர் உணர்ந்திருந்தாரா என்று இருவரும் கொஞ்சமாகக் கைப்பிடித்துக் கொண்டப் பிறகு கேட்டுப் பார்த்தேன். “அப்படி ஒன்றும் தோன்றவில்லை, ஆனால்?” ஆனால் என்னவென்று கேட்கும் முன்பே ‘அவள்’, இல்லை ‘அவர்’. அவரை ‘அவள்’ என்பதா? இல்லை அவளை ‘அவர்’ என்பதா? என்று பல நேரம் தடுமாறி வார்த்தைகளில் இரண்டும் ஒன்றை மாற்றி ஒன்று வரும். குழம்பியது என் மனம். அவர் என்றழைப்பதே சரி.

காலையில் விடியும் நேரம் தான், ஆனால் கரும் மேகங்கள் விடியலைத் தாமதப்படுத்தியது. அவரின் கணவன் ஜாமினில் வந்திருந்தபோது, பழைய யமாஹா ஆர்.சீ மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்கி விட மழையும் ஆரம்பித்தது.

தீப்தி நீல நிறத்தில் செயற்கை பூக்கள் அலங்கரித்தக் குடையைப் பிடித்து வந்தாலும் சாரல் அவரைப் பதமாக நனைத்துப் புதிய கோணத்தில் என் கண்களுக்குக் காட்டியது. எதை நான் அழகென்று குறிப்பிடுகிறேன் என்று எனக்கே புரியாத வேளையில், அவரின் டீசர்டில் இரண்டு பட்டன்களும் விடுப்பட்டிருந்ததின் காரணம் செயற்கையாக இருக்காது என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

நான் குறிப்பிட்டவுடனே அவர் சரி செய்து விட்டார். அந்த நேரத்தில் அவரின் மேல் ஈர்ப்பு சிறிதளவும், எந்த வித தவறான எண்ணமும் தோன்றாமையைக் குறித்து இன்றும் எனக்கு வியப்புதான். மழையில் நனைந்த பெண் ஒருத்தியின் ஓவியத்தைச் சிறுவன் ஒருவன் ரசித்த அளவிலேயே என் மனம் நின்றுவிட்டது.

ஒன்றாக வேளை செய்து மூன்று ஆண்டுகளில் எனக்கு எப்படி வாங்க… போங்க… என அழைத்தவரை வா… போ… என அழைக்க வாய் வந்தது என்றே புரியவில்லை. அவரைப் பார்த்தவுடன் அழகில் மயங்கி சமூகம் போட்டிருக்கும் கலாச்சார மீறல் எதுவும் என்னுள் நிகழவில்லை. ஆனால், பார்த்தவுடன் எந்த உணர்வும் தோன்றாமல் இப்போது தோன்றியது குறித்து எனக்கே வியப்பாகவுள்ளது. அது புரியவே எதையும் எண் கணிதம் போல எழுத்துகளில் எழுதி பார்த்துத் தேடலைத் தீர்த்துக்கொள்ளும் வழக்கம், இன்றைய தேதியின் வயதிலும் மாறாத பழக்கமாகிவிட்டது. கணித விதியை எழுத்துகளில் பல கோணத்தில் எழுத்தில் போட்டுப் பார்க்கிறேன். காதல் எந்த வயதில் வந்தாலும், முதன் முதலில் காதல் வசப்படும் அதே அனுபவ உணர்வே தோன்றுவது ஏன் என்ற கேள்விக்கான விடையில் தேடலைத் தொடங்கினேன்.

“மண்ணு தின்ற உடம்ப, மனுஷன் தின்னா தப்பா. எவ்வளவு வேணும்னு சொல்லு. ரெண்டாயிரம்…” என்று அந்தக் கருப்பன் ஐம்பத்தைந்து வயதில் ‘ஈ.பி.எஃப்’ பணத்தை எடுத்தவுடனேயே அவரைப் படுக்க அழைத்ததை அவர் கண்கள் கலங்கியபடி என்னிடம் சொன்னதும், நானும் நிலைதடுமாறிப் போனேன். இப்படியெல்லாம் கூட கேட்பார்களா என்று கூடத் தோன்றியது. சும்மா அழைத்தவன் ‘ஈ.பி.எஃப்’ பணம் வந்ததும் விலைக்குப் போவார் என்ற நம்பிக்கையில் பணம் கொடுப்பதாகச் சொல்லியும் அழைத்திருக்கிறான்.

அந்த நொடியில் அவரின் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்றே இரவு முழுவதும் வருந்தி, என் பங்குக்கு நானும் அவரின் வேதனையை என் வேதனையாகவே சுமந்தேன்.

அதன் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்து கொண்டோம். அவருக்கு ஆறுதல் கூறியபடியே, “அந்தத் தெருநாயைப் பற்றி வீட்டில் சொல்ல வேண்டியதானே?” என்று கேட்டுவிட்டேன். அதற்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால், என்னவராகி விட்ட போதும் அந்த நாய் தொல்லைக் கொடுத்தபோதும் கேட்டேன்.

“இந்த ஆம்பலைங்க புத்தியே, நனைச்சா பயமாயிருக்கு. அவன் வெளியே போய் என்னையப் பத்தி பச்சப் பச்சையா வாயி கூசாமல் தப்பா சொல்லுவான். ஏற்கனவே அந்த நாய் அப்படிதான், என்கிட்ட மத்தவங்கல பத்தி சொல்லியிருக்கு. இன்னும் ரொம்ப வருஷம் இங்க இருக்கப் போறதில்லை. நல்லபடியா மானத்தோடு போயிடுவோம்…” என்றார்.

அவன் தொல்லை அதிகரித்தபோது, “பேசாம போயி ஒரு வாட்டி பொணமா நனைச்சிட்டு படுத்திடலாம்…” என்று உணர்ச்சிவசப்பட்டு என் தோளில் கை வைத்து அழுதார்.

அந்த நேரம் பார்த்து எனக்கு ஜானி சின் என்ற உலகப் பிரபலமான ஆபாசப்பட நடிகன் சொல்லியிருந்த பொன் மொழி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

‘உனக்கானப் பெண்ணை வேறொருவனின் தோளில் சாய்ந்து கொண்டு கவலைகளைச் சொல்லி அழும் நிலைக்குப் போகவிட்டு விடாதே. ஒரு பெண் சாய்ந்து அழும் தோள், அவள் கட்டி அணைத்து கொள்ளும் தலையணை ஆகும்’

அந்த நேரத்தில் கூட அவரது மேல் எந்தத் தவறான எண்ணமும் எனக்குள் துளிர் விட்டதாக தெரியவில்லை.

கருப்பன் கூட மன ரீதியில் தொல்லைதான் கொடுத்தான். ஆனால், அந்த வெள்ளையன் கொஞ்சம் எல்லை மீறி முதுகை தடவி கீழ் நோக்கி கைவிரல்களை நகர்த்தினான். அவர், கத்தி எல்லோரையும் கூப்பிட்டு விடுவதாக அழுத்தமான குரலில் கண்கள் எரிய கொஞ்சம் சத்தமாகச் சொன்னவுடன் பயந்து கொண்டு மெது ஓட்டம் எடுத்து விட்டான். அந்த வெள்ளை நாய் எப்போதும் முகநூல் மற்றும் ‘டிக் டாக்கில்’ மனைவியோடு ‘கண்ணே மணியே, நீ தான் என் உலகம், நான் கேட்டது ஆனா அவர் கொடுத்தது’ என்று கொஞ்சும் புகைப்படத்தை மட்டுமே பதியும். அந்தப் படத்திற்கு கீழே, அவர்களைப் பார்த்து வாழ்த்தும் நெஞ்சங்கள் நிறையவே இருக்கும். எல்லோரும் போலிகள் தான் போல. அவனைப் போல முகநூல் வழியே பலருக்குப் படம் காட்டியப்படி என் மனைவியோடு கொஞ்சியதும் இல்லை. புகைப்படத்தை முகநூலிலோ அல்லது புலன ஸ்டேட்டஸில் ஃபிரேம் போட்டப்படி மாட்டியதில்லை. இப்படிப்பட்டவர்கள் சுட்டிக் காட்டியபடியே நான் தினமும் மனைவியின் கோபத்திற்கு ஆளாகிறேன். அது பொதுவில் போட்டு உடைக்க முடியாத ரகசியம். இதையெல்லாம் நான், எனக்காகப் வாசிக்க மட்டுமே டைரி குறிப்பாக இணைய டைரியில் எழுதி மறைத்து வைத்துள்ளேன்.

அவரை நான் ஏற்றுக்கொண்ட தருணம் எப்படி அமைந்தது என்பதே புரியவில்லை. நான் தடுமாறிப் பாதை மாறிய வழி தற்போது காணாமல் போயிருந்தது. அந்தக் கருப்பனையும் வெள்ளையனையும் பார்த்து கோபம் கொண்ட நானே , இன்று அவர்களின் நிலைக்குக் கீழாக வந்து விட்டேன். ஆனாலும் அவளின் பதில் எனக்கு ஆறுதல் கூறியது. அவர்களின் மீது ஏற்படாத அந்த அன்பு, ஈர்ப்பு என் மேல் வந்து விட்டிருந்தது. ஆனாலும் நானேதான் முதலில் என் விருப்பத்தைச் சொன்னேன்.

***

சொன்ன சொல்லைக் காப்பாற்றாத அரசியல்வாதிகளைப் போலவே அவனும் கைவிரித்தான். கூடவே மன்னிப்பும் கேட்டான். ‘இட்ஸ் ஓகே! 10q’ என்று பதில் போட்டுவிட்டு நான் பழையபடி என் முயற்சியைத் தொடர்ந்தேன்.

உலகின் எல்லா மூலை முடுக்கிலிருந்தும் கண்ட கண்ட கேடு கெட்ட ‘பி கிரேட்’, மூன்று நட்சத்திரம் , ஐந்து நட்சத்திரம் எனச் சினிமாக்கள் எல்லாம் மலிந்து வந்து சேர்கின்றன. நான் தேடும், வட இந்தியாவில் எடுக்கப்பட்ட அந்த இந்திய ஆங்கிலச் சினி்மா அல்லது ஆங்கில இந்தியச் சினிமா மட்டும் நெட்டில் கூட எப்படிப் பதிவிறக்கம் காணாது போனது. இணையக் காடான அமேசான் காட்டிலும் கூட விற்பனைக்கு வரவில்லையே.

அந்தச் சினிமாவை நான் ஒரே ஒரு முறை உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் திரையிடப் பார்த்தேன். பொதுவாகவே ஆங்கில இந்தியச் சினிமாவோ அல்லது இந்திய ஆங்கிலச் சினிமாவோ எனக்குப் பிடிக்கும். இந்திய இசை. இந்தியக் கலைஞர்கள். வசனங்களும் முத்தங்களும் மட்டும் ஆங்கில பாணி.

புக்கிட் மெர்தாஜாமில், சித்தி வீட்டில் தங்கி படிவம் ஆறில் பயின்று கொண்டிருந்தேன். வழக்கம் போல, நண்பர்களோடு கூலிம் சுங்கை ஊலாரிலுள்ள காட்டுக்குள் ஓடும் ஆற்றில் ஒன்றுமே போடாமல் குளிக்கத் திட்டம் போட்டிருந்தேன். ஆனால், சித்தப்பா கெடுத்து விட்டார். வீட்டிலேயே அன்று ஒரு நாள் இருக்க சொல்லிவிட்டார். ஏன் என்று எனக்கும், அவருக்குமே அன்று தெரிந்திருக்கவில்லை. அதற்காகப் பத்து வருடம் காத்திருக்க வேண்டும் என்பதும், அது என் வருங்காலம் குறித்து ஒலித்த அசரீரி என்பதும் பின்புதான் எனக்குத் தெரிந்தது. அன்று நான் வீட்டிலேயே இருந்திருக்காவிட்டால், அந்த இந்திய ஆங்கிலச் சினிமாவைப் பார்த்திருக்கவே மாட்டேன். அந்த வட இந்தியச் சினிமாவும் என் வருங்காலம் குறித்த முன் அறிவுறுத்தல். அதன் பிறகு ஏனென்று தெரியவில்லை அந்தத் திரைப்படத்தைப் பிறகு என்றுமே அந்தத் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பவே இல்லை. ஒரே ஒரு முறை பார்த்த அந்த வட இந்தியச் சினிமாவின் கதை, காட்சிக்குக் காட்சி என் மனதில் பதிந்து விட்டது.

***

அதற்கு முன்பு எங்களின் முதல் சந்திப்பைச் சொல்லிதானே ஆக வேண்டும்.

வழக்கமாக நான் செல்லும் சீனக் உணவுக் கடையின் மேல் மாடிக்குச் செல்லும் படிகள் இரண்டு கடைகளுக்கும் நடுவிலிருக்கும். அதன் நுழைவாயிலின் சுவற்றில் என் இடது தோளைச் சாய்த்து, வலது காலைப் பின்னிக் கொண்டு ஸ்டைலாக நின்றுக் கொண்டு நண்பர்களோடு கைப்பேசியில் உரையாடுவேன். எனது உரையாடலில் அதிகமாக இடம் பெறுவது நான் தேடும் இந்திய ஆங்கிலச் சினிமா குறித்து எதாவது தகவல் கிடைத்ததா என்பதைப் பற்றியதாகும்.

சாலையையும் அதனைக் கடந்து தெரியும் ஜோக்கரின் அடுக்குமாடிக் குடியிருப்பை இங்கே செட் போட்ட மாதிரியான தோற்றத்திலிருக்கும் குடியிருப்பைப் பார்த்துக் கொண்டிருப்பேன். என் காப்பி ஒரி ஒமேகா கைக்கடிகாரம் போலவே அங்கே தெரிவதும் காப்பி ஒரி ஜோக்கரின் மலிவு விலை அடுக்குமாடிக் குடியிருப்புப் கட்டிடங்கள் தான் போலும்.

பின்னால் திரும்பி அடிவைத்தால் மாடி படி ஏறி விடலாம். நடுவில் இரும்புக் கதவு பழையத் தமிழ்ப் பட சிறை கம்பி போலவே தடுத்திருக்கும். பக்கத்தில் வலையொளி பெல் ஐகோன் மாதிரி பெல் ஒன்றிருக்கும். அவ்வப்போது திரும்பி மேல் நோக்கி பார்ப்பேன். வெள்ளை உருவ மோகினி மாதிரி ஒருத்தி வந்து சிறை கம்பிக்குப் பின்னால் நிற்பாள். முகத்தில் புன்னகையிருக்கும். அவளைப் பார்த்த பயத்தில் நான் கடையின் வெளியே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து விடுவேன். வீடு திரும்பும் முன்பு அந்த நுழைவாயிலை எட்டிப் பார்ப்பேன். யாரும் இருக்க மாட்டார்கள். மேல் மாடியில் எந்தக் கடையின் விற்பனையும் நடப்பதாகத் தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் என் பயத்தை வெல்ல அந்த நுழைவாயிலில் மேல் படிகளில் ஏறி அந்த பெல் ஐக்கோனை கிளிக் செய்து என் பயத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை என்னுள் வேர் விட்டது. சின்னப் பொடிப் பையன்கள் எல்லாம் என்னைக் கடந்து போய் பெல் ஐக்கோனைக் கிளிக் செய்யும்போது நான் பின் தங்கி விடக்கூடாது.

அதோடு அந்தப் போலியான ஜோக்கர் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து வர வேண்டும். அங்குள்ளவர்கள் வித்தியாசமாக இருப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன். எனக்கு அங்கு நண்பர்கள் என்று யாருமில்லாததால் அங்கே செல்வது அந்நிய தோற்றத்தை ஏற்படுத்தி அங்குள்ளவன் எவனாவது எதாவது செய்து விடுவான் என்று பயம். போதைப் பித்தர்களும் கம் இழுப்பவர்களும் வாழும் அந்தக் குடியிருப்பின் பெயரைக் கேட்டாலே பலர் முகம் சுழிப்பார்கள். மற்ற இன நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, அந்தக் குடியிருப்பில் ஒருவன் சொந்த மனைவியைக் காசுக்காக வங்காள தேசக்காரனோடு படுக்க அனுமதித்த கதையைச் சொல்லி சிரித்தார்கள். அதன் உண்மை தன்மை குறித்து எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால், இவ்வாறு வேலை இடங்களில் இது போன்ற கதைகளைப் பேசிக் கொள்வதால் பகல் தூக்கம் வருவதில்லை என்று சொல்லியே என்னையும் சேர்த்து விட்டார்கள். தேசிய ஒருமைப்பாடு கருதி நானும் அவர்கள் குழுவில் இணைந்திருந்தேன். ஆனால், நான் வேலை இடம் மாறிவிட்டவுடன் அந்தக் காலங்கள் கடந்து விட்டன.

நிஜ வாழ்க்கையில் துணிச்சலை வரவைத்தெல்லாம் பயத்தைப் பேய் ஓட்டுவது போல ஓட்ட முடியாது. நாம் பயத்தைத் தரிசித்த மறு கணமே பய தேவதை மறைந்து விடுவாள். பயத்தில் பயணித்துக் கொண்டு அந்த நுழைவாயிலில் நுழைந்து படிகளில் ஏறினேன். சிறை கதவிற்கு அந்தப் பக்கம் மெல்லிய சிவப்பு வர்ண விளக்கு வெளிச்சத்தில் சுவர்கள் ஒரு வகை மயக்கத்தை உண்டு பண்ணியது. இடியோடு கூடிய மழை போலவே, மணி ஓசையோடு கூடிய, பெல் ஐக்கோனை அழுத்தவும் என்று எவனோ வலை ஒளியாளனின் குரல் மண்டைக்குள் ஒலித்தது.

நான் எப்போதும் பார்க்கும் மோகினிக்குப் பதிலாக வேறு ஒருத்தி வந்து “மரி அண்ணே…” என்றப்படியே கதவைத் திறந்தாள். அண்ணே என்பதன் அர்த்தத்தை அவள் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்து புரிந்து வைத்திருப்பாள்.

படி ஏறியதும் வலது புறம் நுழைந்தேன். உள்ளேயும் அதே அந்திச் சந்தி நேரம். போலியாக உருவாக்கி இருக்கிறார்கள்.

அரைக்கால் சட்டை போட்டிருந்த இரண்டு சீனக் கிழவன்கள் அங்கேயுள்ள மேசையில் அமர்ந்திருந்தார்கள். வயது ஐம்பதைத் தொடும் என்று யூகித்தேன். அவர்களின் அருகில் ஏழு பேர் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். எல்லோருக்கும் வியட்நாம் அல்லது தாய்லாந்து முக அமைப்பு. எல்லோருமே கால் முட்டியும், நெஞ்சுக் குழியும் தெரியும் வகையிலேயே உடை அணிந்திருந்தார்கள்.

நான் அவ்வப்போது பார்த்த மோகினியும் கருப்பு நிறக் கவுனில் அடக்கமாக அமர்ந்திருந்தாள். ஆனால், அவளின் கண்களின் மொழி ‘ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். அதனால், என்னை எடு …’ என்று என் மனதில் கேட்டது.

நான் கிளம்பப் பார்த்தேன். அந்த இரண்டு சீனர்களில் சட்டை போடாமலிருந்தவன் அரை குறை மலாய் மொழியில் “காலாவ் தா மௌ செமுஹ… அம்பிக் சயா லா…” என்று எழுந்து கத்தினான். நான் பயந்து விட்டேன். “பணம் பற்றவில்லை. பணத்தை எடுத்து விட்டு வருகிறேன்.” என்றதும் அவன் என்னைப் பார்த்து முறைத்தான். அவனருகில் இருந்தவன் “லு… லாய்… சீ…ஓய்….” என்றவாரு எதோ அவனிடம் தொடர்ந்து பேசினான். எனக்கு அவன் சொன்னதில் ‘போலீஸ்’ என்ற வார்த்தை மட்டுமே புரிந்தது. மற்ற ‘லாய்களை’ என் மனம் உள் வாங்கவில்லை.

சட்டை போடாதவன் வேகமாக என்னை அடிக்க எழுந்து வந்தான். நான் கண்களை மூடிக் கொண்டேன். இரும்பைத் தட்டும் சத்தம் கேட்டது. அவன் மேலிருந்த கதவைத் திறந்து, கீழே இறங்கினான். நானும் அவனைப் பின் தொடர்ந்து பெல் ஐக்கோன் சிறை கதவை அவன் திறக்கவும் , நான் திரும்பிக்கூட பார்க்காமல் இறங்கி விட்டேன். ‘லாய், லூய், ஓய்’ என, புரூஸ் லீ பட வில்லன் மாதிரியே நான் கீழே இறங்கும் வேகத்திற்கு ஏற்ப அவன் வாயிலிருந்து அதிரடியாகப் பின்னணி இசையும் கொடுத்தான்.

கீழே இறங்கியதும் வலது பக்கம் பார்த்தேன். வெகு நாட்களாக, காலியாக இருந்த ஸ்டோலை ஒருவர் கழுவிக் கொண்டிருந்தார். என்னை நேருக்கு நேராக எழுந்து நின்று நோக்கினார். சாயம் வெளுத்து, நைந்துப் போன ஜோக்கர் முகம் பொறித்திருந்த டீசர்ட் மழையில் நனைந்து தோற்றத்தில் உடலோடு ஒட்டிப் இறுக்கி இருந்தது.

எனக்கு அவரைத் தொடர்ந்து பார்க்க இயலாமல் குனிந்து கொண்டே சென்று விட்டேன்.

அவர் என்னவராகிப் போனப் பிறகு அதைப் பற்றி பிறகு ஒரு முறை அவர் கேட்டபோது நான் நடந்ததைச் சொன்னேன். அவர் எதையும் நம்ம மாட்டார் என்றே நினைத்தேன். ஆனால், அவர் சிரித்தார். மேலேயிருந்த பெண்களிடம் எனக்கு எந்த ஈர்ப்பும் வரவில்லை. காரணம் விபச்சாரத்தை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்பவன் அல்ல. தீப்தியிடம் எனக்கு ஏற்பட்ட உறவு வேறு வகையானது. பார்த்ததும் வரும் ஈர்ப்புதான் விபச்சார விடுதியிலும் நடந்தேறுவது. தீப்தியைப் பார்த்தவுடன் எனக்குதான் எந்த ஈர்ப்பும் வரவில்லையே. ஆனால், பழகியப் பிறகு வந்ததன் ரகசியத்தை நான் உணராமல் விட்டாலும் அவரோடு என் அன்பின் ஆழத்தை என்னால் உணர முடியும்.

அவரின் கணவர் அடிக்கடி சிறை செல்பவர். காரணங்களை நான் கேட்டதில்லை. அவரிடம் பொதுவாக நான் வியாபாரம் குறித்துப் பேசுவேன். சாயம் வெளுத்து, துணி நஞ்சுப் போன டீசர்டைதான் எப்போதுமே போட்டிருப்பார். அவரின் கணவர் எந்த வேலையும் செய்யாமல் அங்கும் சும்மாதான் உட்கார்ந்திருப்பார். நான் பேசியதில்லை. ஒரு முறை என்னிடம் ஐம்பது வெள்ளி கடன் கேட்டார். உணவில் கழித்து விடவும் சொன்னார்.

“மத்தவனுங்க கிட்ட கேட்டா, என்னையே கேட்கறானுங்க!”

அவரின் நெஞ்சில் கண் வைத்து, வாயால் முகத்தைப் பார்த்து சொன்னதாகச் சொன்னார். வியாபாரம் சரியில்லை என்று சொன்ன போதுதான், எங்கள் இடத்தில் கிளீனர் வேலைக்கு ஆள் தேவை என்று சொன்னேன். உங்களால் முடியுமா என்று தயங்கியப்படி கேட்டேன். காரணம் கழிவறை கழுவும் வேலையும் செய்ய வேண்டும்.

***

புக்கிட் மெர்தாஜாமில் திருட்டு டிவிடி விற்கும் கடைக்கு நண்பர்கள் அழைத்தவுடன் சென்றேன். அவர்கள் அங்குச் சென்ற நோக்கம், அங்குச் செல்லும் முன்பு எனக்குத் தெரியாது. கடையின் முன் வாசல் கதவு கருப்பு நிறத்தில் கண்ணாடி இல்லாமல் , வெறும் அட்டையால் ஒட்டப்பட்டிருந்து. டிஸ்கோ கிளப் மாதிரி உள்ளே சென்றவுடன் தோன்றியது. வலது, இடது பக்கம் சீடி, டிவிடி கண் காட்சி பாணியில் தொங்க விடப்பட்டிருந்தன. ஆக்க்‌ஷன், ரோமன்ஸ் என்று வகைவாரியாகவும் ரசனை வாரியாகவும் அடுக்கி தொங்க விடப்பட்ட பிளாஸ்டிக் கவரினுள் வெள்ளி மற்றும் தங்கத் தட்டுகள்.

‘யாமினி’ என்ற ஒரு படத்தின் முன் அட்டையைப் பார்த்தேன். என் நண்பர்களில் ஒருவன், குரங்கு மரத்தில் பழம் பறிப்பது போல அந்த யாமினியைப் பாய்ந்து பறித்தான்.

“ஷக்கிலா படம் மச்சான். போனா கெடைக்காது…” என்றவனைக் கடந்து சுற்றிப் பார்த்தேன். பாலிவுட் படம் தொங்கிய சுவர், அதன் கீழே மேசையில் பழைய போட்டோ ஆல்பம் மாதிரியே அடுக்கி வைத்திருந்ததிலும் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. கடையின் ஒதுக்குப் புறத்தில் இருட்டறையின் வாசல் தென்பட்டது. அங்கு சென்று தேடலாம் என்று உள் நுழைந்தேன். என் நண்பனில் ஒருவன் அதற்குள்ளே தூர் வாருவது போலவே தேடிக் கொண்டிருந்தான்.

“கடச்சிருச்சி மச்சி… நீயும் தேடு கிடைக்கும்!”

மகிழ்ச்சியில் பல்லைக் காட்டி இளித்துக் கொண்டே, துள்ளிக் குதித்தான். என்னிடம் அதன் அட்டையைக் காட்டினான். ‘காமசூத்தரா’ என்று ஆங்கிலத்தில் தலைப்பு போடப்பட்டிருந்தது.

இதுவும் ஆங்கில இந்தியச் சினிமாவானாலும், நான் தேடும் ஆங்கில இந்தியச் சினிமா இதுவல்ல…

உண்மையிலேயே அப்படி ஒரு படத்தை நான் பார்த்தேனா, அல்லது கனவு எதாவது கண்டிருப்பேனா? வயது ஏற ஏற தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும், அந்ததந்தக் காலகட்டத்தில், இரண்டு மணி நேரத் திரைப்படத்தை எட்டு மணி நேரம் பதிவிறக்கம் செய்யும் காலகட்டத்தில் தொடங்கி, இன்று ஐந்து நிமிடங்களில் இரண்டு மணி நேரத் திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்யும் காலத்திற்குள் நான் நுழைந்து விட்டேன்.

அந்த ஆங்கில இந்தியச் சினிமாவின் ‘மாதிரிக் கதை’, அதாவது காப்பி ஒரி என் வாழ்க்கையின் கதையில் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்து நடக்க தொடங்கியவுடன் கள்ள மற்றும் நல்ல இணையச் சந்தையிலும் தேடுவதைத் தற்காலிகமாகக் கைவிட்டு விட்டேன்.

***

எந்த அருவருப்பும் கொள்ளாமல் என்னிடம் பேசுவதைத் தொடர்ந்தார். நானும் மீண்டும் சகஜமாக அவரிடம் பேசத் தொடங்கினேன். பல விசயங்களில் அவருக்கு இருந்த தெளிவான அறிவால் என்னை உலுக்கி விட்டிருந்தார். இத்தனைக்கும் அவருக்குக் கல்வி அறிவு குறைவுதான். ஆனால், எதையும் கேட்டவுடன் புரிந்துகொள்ளும் செவி அறிவு அதிகம்.

“என்னை நீங்கள் தவறாக நினைத்து கொண்டீர்களா?” என்று பல முறை கேட்டிருக்கிறேன். அவர் கூறும் பதிலில் என்னவராகும் சாத்தியம் உள்ளதாக நம்பிக்கை கொண்டிருந்தேன். நான் செய்வது தவறு என்று தெரிந்தும், செய்யத் தூண்டியது இயற்கையின் விதியாக இருந்திருக்கும். தன்னோடு இருப்பது தன் கணவனல்ல! இந்திரன் என்று தெரிந்தும் அகலிகை அவனோடு கூடி சல்லாபித்தாள். அதுவே அவளின் ஒரே தவறாகும். அந்தக் கருத்துதான் கதையில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து. அந்தக் கருத்தைத் தவறவிட்டால் புள்ளிகள் கிடையாது. தமிழ் ஆசிரியரின் குரல் இன்னும் அந்தக் கருத்தை மனதிலிருந்து நீக்கவிடாமல் செய்கின்றது. இராமாயனத்தில் எவ்வளவு இருந்தாலும் அகலிகை படலத்தை ஏன் பாடத் திட்டத்தில் வைத்தார்கள் என்று அவ்வப்போது அவரின் புலம்பலின் நினைவு இன்றும் என் தவறு குறித்து குற்றவுணர்வு கொள்ளும்போது தோன்றாமல் இருக்காது. எல்லாமும் முன்பே கணிக்கப்பட்ட வினையின் தொடர்ச்சியாகவே நினைத்து அவ்வப்போது என் குற்ற உணர்வு நீங்கி சாப விமோசனம் பெற்றவுணர்வு தோன்றும். என் குற்றத்தை ஞாயப்படுத்த இயற்கை மற்றும் இதிகாச புராணக் கதைகள் உதவினாலும் என்னவரை எந்த இதிகாசக் கதையும் சமாதானம் செய்ய உதவும் வலுவான நிலையில் இல்லை. காதலில், கை விரல்களை இயல்பாக ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைக்கும் சமயத்தில், மழை நேரத்தில் காரில் அவரின் நெற்றியில் முத்தப் பரிமாற்றம் மட்டும் நடந்தது. மழை நின்று மேகத்திற்குப் பின்னால் சூரியன் ஒளிந்து கொண்டு பார்த்த அதே நேரத்தில் அவரின் குற்றவுணர்வும் எட்டிப் பார்த்ததை உணர்ந்தேன். அவரின் தோள் மீது கை வைத்து பக்கவாட்டில் அணைத்தப்படி நான் கூறிய ஆறுதல் அவருக்கு ஆறுதல் அளித்ததோ இல்லையோ, அவரின் அந்த நொடி சிரிப்பு எனக்கு ஆறுதலானது.

அது ஓர் இந்திய ஆங்கிலச் சினிமா. அந்தப் படத்தின் நாயகனுக்கும் எனக்கும் ஒரே வயது. அதில் வேடிக்கை என்னவென்றால் அவனின் நாயகிக்கும் அவளுக்கும் அதே வயது. நோக்கியா கருப்பு வெள்ளை திரைக் கைப்பேசியின் வரவு உலகத்தை அழுத்தியக் காலங்களின் தொடக்கம். நான் அந்தக் கைப்பேசியில்தான் பாம்பு பழம் தின்னும் கேம் விளையாடிக் கொண்டிருப்பேன். நல்ல வேளையாக இன்று அந்தக் கைப்பேசிகள் பரிணாம வளர்ச்சி பெற்று விட்டன. இல்லாவிட்டால் அதே பாம்பு பழம் தின்னும் கேமை இன்று, கோவிட்-19 ஊரடங்கு உத்தரவு காலத்தில் விளையாடி சலிப்படைந்து போயிருப்பேன்.

அந்தத் திரைப்படத்தின் கதையை நான் அவரிடம் சொல்லி முடித்தேன். என்னதான் இருந்தாலும் அது படம்தானே என்ற அவரது கேள்வி என்னை மடக்கி விட்டது. ஆமாம் அது படம்தான். அதில் நடித்த நாயகனுக்கும் அவளுக்கும் நிஜ உலகின் பார்வையில் எந்த உறவுமில்லை. அவளுக்கும் கணவன் குழந்தைகள் உண்டு. அவனும் திருமணமாகி இந்நேரம் ஆறு ஏழு வயதில் குழந்தை இருக்கும். ஆனாலும் அந்தச் சினிமா படத்துக்கும், அவர்களின் நிஜக் குடும்ப வாழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தச் சினிமாவுக்குள் அவர்களுக்கு உள்ள உறவைக் குறித்து நிஜத்தில் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அந்தச் சினிமாவுக்குள் அவர்களின் காதல் முற்றிலும் போலியானது. அந்தச் சினிமாவில் நாம் நடிப்பதாக வைத்து கொள்ளலாமே. நம் காதலும் அந்தச் சினிமா போன்றது. ஒரே வித்தியாசம் அந்தச் சினிமா, வலை தொடராக மீண்டும் இன்றைய நம் வயதில் புதுப் பொலிவுடன் தொடர்வதாகவும், அதில் நடிப்பதே நாம் இருவரும்தான். சந்திக்கும் ஒவ்வொரு நேரமும், இயற்கை நம்மை வைத்து இயக்கும் சினிமாவின் காட்சிகளேயாகும். வலை தொடராக நீண்ட அந்தச் சினிமாவின் நடிகனும் நடிகையும் நாமிருவர். முடிவை இயக்குனர் இயற்கையின் விருப்பத்துக்கே விட்டு விடலாம்.

நடிகர்கள் நடிக்க பல காட்சிகளில் பல முறை நடித்தே தங்களின் நடிப்பை உணர்வுகளோடு ஒத்திசைக்க முடியும். நான் குறிப்பிட்டது அவருக்குப் புரிந்தது போல பாவனை காட்டினாலும், காதலிக்கும் முன்பு வராத பயம், இப்போது காதலித்தப் பிறகு வருவது குறித்து அவருக்குப் புரியவில்லை என்றாள். அது தானே எனக்கும் புரியவில்லை. ஆனாலும், நாம் சேர்வதற்குக் காலம் நேரம் எல்லாமே துணை நின்றது. வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நம்மோடு எதையோ பகிர வருகிறார்கள். அதே போல நாம் இணைந்தது காலத்தினால். தற்போது பிரிய ஏன் மனம் வலிக்கிறது என்றவரிடம் நானும் அதையே தான் உணர்கிறேன் என்று குறிப்பிட்டேன். என் கன்னத்தில் லேசாக அறைந்தார். நானும், பதிலுக்கு அவரின் லேசான தங்க நிற, மெல்லிய கூந்தலில் கட்டப்படிருந்த இளஞ்சிவப்பு ஏர் பேண்டின் கட்டை விடுவித்தேன். லேசான கூந்தல் என்பதால் விரைவிலேயே இழுத்து கட்டினார்.

எங்களின் இந்தப் போலி வாழ்க்கையைச் சினிமா நடிப்பாகவே உருவகப்டுத்தினாலும், இந்தச் சினிமாவை வெளியே யாராவது ரசிகர்கள் பார்க்க நேர்ந்தால் என்னவாகும். நடிகனுக்குச் சினிமா, போலிதானே தவிர ரசிகனுக்கு அப்படியிருக்காதே. ரசிகர்கள் நடிகைக்குக் கோவிலும் கட்டி சிலை எடுத்து, பால் அமிஷேகம் செய்து உயிர் கொடுக்கிறார்கள். அதனாலோ, அந்த நடிகை, நடிகனுக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் உயிரையும் கொடுக்கிறார்கள் அவர்களின் தீவிர ரசிகர்கள். எங்களின் சினிமாவில் நாங்களே நடிக்கின்றோம், நாங்களே ரசிக்கின்றோம். வெளியேயிருந்து எந்த ரசிகனும் பார்த்திடக் கூடாது. எங்கள் இருவருக்கான உலகத்தில் ரசிகர்களாகவும், சமூகத்தின் முன்பு நட்சத்திரமாகவும் இருப்பது வரை எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு.

புற மனதில் குற்றவுணர்வு தோன்றும் போதெல்லாம் அவரையும், என்னை நானேயும் சினிமாவையும், நடிகர்களையும் சுட்டிக் காட்டி எங்களின் பெறும் குற்றத்திற்கு அக மனதில் விமோசனம் பெருவோம். திரும்பப் புற மனதிடம் கைதாகினால், அக மனத்திடமிருந்து மீண்டும் விடுதலைப் பெறுவோம்.

நான் இந்தக் கதையை எடுத்த எடுப்பில் அவரிடம் சரளமாகச் சொல்லவில்லை. நடந்ததைப் பதியும்போது வரும் துணிவு அவரை ஆறுதல் படுத்தும்போது இல்லை. காரணமும் தெரியவில்லை. அது கூட இயக்குனர் இயற்கை எழுதிய மர்மமானத் திரைக்கதை அமைப்பாகும். சில நேரம் எங்களுக்கு மரணப் பயத்தைக் கண்ணில் காட்டும் புயலாகவும், அதற்கு அடுத்தக் காட்சிகளில் உடலில் உரசி மனதைக் குளிர வைக்கும் தென்றலாகவும் இயற்கையின் எதிர்பாராத திரைக்கதையின் திருப்பம் விறுவிறுப்பாக செல்கிறது.

அவரை விட்டு விலகி இருக்க முடிவெடுத்தேன். ஏதும் முகம் கொடுத்து பேசாதவனாக அவரைத் தவிர்ப்பதை அவருக்கு உணர்த்தினேன். அந்த நேரங்களில் அவரின் மனதின் படபடப்பை என் மனதில் உணர முடிந்தது. அவரின் அகங்காரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ் நோக்கி இறங்கியது. என் கர்வமும் அதே எண்ணிக்கையில் குறைந்தது.

அவரை மறந்து புறக்கணிக்க, விடா முயற்சியில் இறங்கியிருந்தேன். என்னதான் காரணத்தைச் சொல்லி அவரைக் காதலித்தாலும், ஏதோ தன்னியல்பான ஒன்று என்னை உறுத்தி தின்றது. இந்தச் சமூக கட்டமைப்புக்கு உட்பட்டப் பகுதியில் சேர்ந்து வாழ முடியாத நாங்கள், ஏன் இயற்கை கட்டமைத்தத் திரைக்குப் பின்னால் வாழ்ந்து என்னையும் அவளையும் சமூகத்தையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணமே என் விடா முயற்சிக்குத் துணை நின்றது.

கோவிட்-19 ஊரடங்குக் காலத்தில் தொலைக்காட்சியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சீரியல்கள் போல எங்களின் நடிப்பும் சமூகக் கட்டமைப்புக்குப் பயந்து நிறுத்தப்பட்டது. என் முயற்சியில் நான் பின்வாங்கும் போதெல்லாம், பின்னிருந்து என்னைத் தாங்கி முன் தள்ளும். நீருக்குள் தலையைப் பிடித்து யாரோ என்னை அமுக்குவது போல உணர்ந்தேன். நீருக்குள்ளிருந்து, மூழ்கிய என் தலையை விரைந்து வெளியேயெடுத்து விட்டேன்.

என் பதின்ம வயதில் பள்ளிக்கு மட்டம் போடுவது போலவே ஒரு நாள் அவரோடு வேலைக்கும் மட்டம் போட்டேன். பல முறை பயந்தாலும் பிறகு சம்மதித்து விட்டார். எங்காவது மலை உச்சிக்குப் போகலாம் என்றிருந்தேன். ஆனால் இயற்கை ஒத்து கொள்ளாததால் திட்டத்தை மாற்றினோம். நான் மாற்றினேன் என்பதே உண்மை. அவர் விஷயத்தில் எல்லா தவறும் என்னுடையதுதான். அவரை என்றுமே நான் குறைச் சொல்ல மாட்டேன்.

பந்தாய் மெர்டேகா கடற்கரை ஓரம் பேசாமல் நடந்து கொண்டிருந்தோம். ஆனால் என் மனம் அவரிடம் பேசிக் கொண்டுதான் நடந்து சென்றது. என் கேள்விகள் அவருக்குக் கேட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவரின் பதில் எனக்குக் கேட்டது. தொலையுணர்வு தொலைவில் மட்டுமா வேலை செய்யும். அருகருகே கூடதான். அவரின் கைவிரல்களில் என் விரல்களைக் கொக்கிப் போட்டு பிடித்துக் கொண்டது போன்ற உணர்வு மனதிலே. பிறகு அருகருகே ஒரு சொரசொரப்பான கல் நாற்காலியில் உட்கார்ந்த போதுதான் நிஜமாகக் கைகள் சேர்ந்தன.

முதல் காதல் அனுபவம் போல அவருக்கும் இருந்ததா என்று கேட்டேன். தனக்குள் எதோ ஒர் உணர்வு ஏற்படுவதாகவும் அதுதான் காதல் என்பதா என்று என்னிடம் திரும்ப கேட்டார். எனக்கு முதல் காதல் அனுபவமாகவேதான் இருந்தது. ஆண்களுக்கு எப்போதும் வெவ்வேறு பெண்களிடம் ஏற்படும் காதல் முதல் காதல் அனுபவமாக தான் பார்க்க படுமோ? இருக்கலாம். ஆனால், எனக்குப் பதினாறு வயதில் தோன்றிய அதே முதல் காதல் உணர்வே மேலோங்கியிருந்தது. காதல் என்ற அர்த்தம் புரியாமலேயே காமத்தைக் காதல் என்றே நாங்கள் இருவரும் எங்களையே ஏமாற்றி இருக்கிறோமா என்ற கேள்விக்கு இல்லை என்றே என் பதில் பாய்ந்து வரும்.

பேசிக்கொண்டே போகையில் இடையில் தன் கணவன் அழைத்து தான் போகாமல் இருந்ததில்லை என்று என்னிடம் சொன்னார். ஆனால் அதன் கொடுமையையும் என்னிடம் மேலோட்டமாக விளக்கினார்.

கடற்கரைக்கு அந்தப் பக்கம் படகில் போகலாமா என்று கேட்டேன். முதலில் பயந்தார். நான் வற்புறுத்தி அழைத்ததின் இறுதியில் ஒத்துக்கொண்டார். என் மேலுள்ள அன்பினாலோ அல்லது நான் அவர் மேல் வைத்திருக்கும் அன்பினாலோ என்று தெரியவில்லை. இரண்டும் இருக்கலாம் என்பதே என் யூகம். படகின் அசைவில் கண்களில் பயத்தோடு என் கைவிரல்களைப் பிடித்து கொண்டிருந்தார். படகின் குலுங்களில், அதிகரித்த பயத்தின் வேகத்திற்கு ஏற்ப என் கைவிரல்களில் அவரின் பிடிப்பு இறுக்கமானது. உலகச் சினிமாவின் பாதிப்பால் இப்படியே ஓடி அருகில் ஏதாவது ஒரு தீவில் காட்டுவாசி போல அவளோடு வாழ்ந்து விடலாமா என்று கூட தோன்றியது.

அவரை முழுவதும் கைவிட்டப் பிறகு, பழையக் காதலை விட பல மடங்கு மேலும் அவர் மீதான காதல் பாய்ந்து வெளிப்பட்டது. போலி ஜோக்கர் குடியிருப்புக்குள் நுழையும் எனது கனவு தீப்தியினால் நிறைவேறியது. தீப்தி வசிப்பதே அந்தக் குடியிருப்பில் தான். அவரை விட்டு விலகியப் பிறகு மீண்டும் உறவைப் புதுப்பிக்க அவரின் வீட்டிற்குச் சென்றேன். யார் மீது குற்றம் சொல்வது என்றே தெரியாத நிலையில் எங்கள் இருவருக்குள் ஏதேதோ முழுச் சுதந்திரமாக நடந்தது. யாரை யார் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை விட இருவரும் சரிசமமாக பயன் படுத்திக்கொண்டோம் என்பதே உண்மை.

அன்றும் கூட உறவிற்குப் பிறகு, எனக்குத் தேநீர் கலக்கி கொடுத்ததும், அந்தப் பொறுக்கிகள் போல நீயில்லை என்றார். அந்த வார்த்தைகள் மீண்டும் என்னுள் கர்வத்தின் எண்ணிக்கையைக் கூட்டியது. அவரின் அகங்காரதின் எண்ணிக்கையிலேயே என் கர்வமும் ஏற்றம் கண்டது.

***

பத்தாண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமான இந்தப் பேரங்காடி, நாளடைவில் நொடித்துப் போனது. முன்றாவது மாடியில் துணிக் கடையை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாமும் மூடப்பட்டது. அதனால் என் சூப்பர்வைசர் வேலை தப்பித்தது. மின்சாரத்தை மிச்சப்படுத்த மாடிப் படியைப் பயன்படுத்தும் அவஸ்தையிலும் ஒரு உடற்பயிற்சி இருந்ததை உடல் உணர்த்தியது.

என்னதான் சுத்தமாக வேலை செய்தாலும் அவரை கிளீனராக பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. இனப்பற்றா, இல்லை அவர் மேலுள்ள பற்றா என்று தெரியவில்லை. அந்த நேரம் பார்த்துப் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்கும் இடத்தில் வேலை செய்த இளம் பெண் சொல்லாமலே ஓடி விட்டாள். இவருக்கு அந்த வேலையைத் தரலாமா என்று என் சீன முதலாளியைக் கேட்டேன். முதலில் தயங்கினார். வரச் சொல்லி நேர்முகத் தேர்வு ஏதுமில்லாமல் மேலும் கீழும் பார்த்தார்.

பிறகு என் மேலுல்ல நம்பிக்கையில் சம்மதித்தார். இடத்திற்கு ஏற்ற மாற்றம் அடைவது இயற்கை போல. அவரின் தோற்றம் மாறியிருந்தது. ஏற்கனவே அவரைத் தொந்தரவு செய்தவர்களைப் போல ‘பெண்கள் செக்‌ஷன்’ என்று பெரிதாக போஸ்டர் மாட்டியிருந்தாலும் பலருக்கு இவரைத் தவிர எதுவும் தெரியவில்லை. மனைவியோடு வரும் கணவர்கள் தூறமாகவே நின்றாலும் தங்கள் கண்களைப் பூதக்கண்ணாடியாக்கிக் கொள்வார்கள்.

அந்தக் கருப்பும் வெள்ளையும் போட்டிப் போட்டுக் கொண்டே இவரைத் தொந்தரவு செய்தார்கள். நான் அவரைத் தனியாகக் கருப்பும் வெள்ளையும் இருக்கும்போது விடமாட்டேன். அருகில் சென்று ஏதாவது உதவி செய்து கொண்டிருப்பேன். அப்படிப் பேசும் போதுதான் ஒருமுறை ஓடிப்போன தன் மகளைப் பற்றியும் சொன்னார். தான் ஓடிப்போனது போலவே தன் மகளும் ஓடி போய் கஷ்டம்தான் படுவாள் என்பார். அந்தக் கருப்பும் வெள்ளையும் நான் அவரோடு பேசும் போது வயிறு எறிவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னார்.

பணியாளர்கள் ஓய்வு எடுக்க ஒரு பழைய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அங்குதான் மதிய நேரம் ஓய்வாகத் தூங்குவார். அன்று உடல் நலமில்லாமல் நான் வேலைக்குப் போகவில்லை. அந்த வெள்ளை நாய், உள்ளே நுழைந்து கைகளை இருக்கி பின் பக்கம் மடக்கி முத்தம் கேட்டிருக்கிறான். மறுத்ததால் கட்டாயப்படுத்தி உதட்டை வீங்க வைத்து விட்டான். அதைப் பற்றி புகார் கொடுக்க சொன்னேன். ஆனால், அவர் மறுத்து விட்டார். தன் மேல் பழியைப் போட்டு விடுவான் என்றார்.

“இந்த ஆம்பலிங்கே புத்தியே அதானே! கூப்பிட்டு படுக்க போலைனா ஊர் பூரா பத்தினி வேசம் போடறா பாருன்னு பின்னாடி பேசுவானுங்கே…”

அவர் இதை சொல்லும் போது கண்களில் வந்த கண்ணீரை விட , அவரின் வீங்கிய உதட்டையே கவனித்தேன். இனி நான் சொல்லாமால் எங்கும் போக வேண்டாம் என்றேன். தனக்கு இந்த அனுபவம் ஒன்றும் புதிதல்ல, என்றார். சீன உணவு கடையில் கானர் அங்காடியில் அவர் மதியமும் இரவும் ‘இந்திய உணவு’ என்று தன் கையெழுத்தில் நீல கலர் அட்டையில் தொங்க விட்டிருப்பார். அங்கு கூட தன்னைப் பல பேர் அசிங்கமாகப் பேசி அழைத்ததாக ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

நான் அவரைப் பக்கத்தில் இருந்த கிளினிக்குக்கு அழைத்துச் சென்றேன். கிளினிக் கவுண்டரில் இளம் பெண் ஒருத்தி கவர்ச்சியாக உடையணிந்திருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே மெய் மறந்து பார்த்தேன். அவளை நான் பார்த்தபோது தீப்தி என்னைப் பார்த்ததை நான் உணர்ந்திருக்கவில்லை. அவள் கண்களின் கோப மொழியை என்னால் வாசிக்க முடிந்தது.

பேய்ப் படத்தில் கதவு திறக்கும் சத்தத்துடன் மருத்துவரின் அறை கதவு திறந்தது. ‘ தீப்தி’, என்று பாதி திறந்திருந்த அந்தக் கதவில் தன் நெஞ்சைத் தள்ளிக் கொண்டு, அழைத்தாள் அந்தப் பெண். நான் கீழே குனிந்து கொண்டேன். நானும் மருத்துவர் அறைக்குள் அவரோடு செல்ல எழுந்தேன்.

“பேஷண்ட் ஒண்டிதான் உள்ளுக்கு வர முடியும்!” அந்தப் பெண்மணி என்னைத் தடுத்தார்.

அவளை நன்றாகக் கேட்க வாயைத் திறப்பதற்குள், அமைதி… அமைதி… பொருமை… பொருமை… பொருமை… என்று கண்களால் என் கோபத்தை அடக்கினார். அவரிடம் எனக்குப் பிடித்ததில் இதுவும் ஒன்று. நான் அதிகமாக உணர்ச்சிவசப்படும்போது கண்களால் என்னைச் சாந்தப் படுத்துவார். அவர் கண்களிலுள்ள அந்த ரகசியம் எனக்குப் புரிந்ததில்லை.

மருத்துவரைப் பார்த்த பிறகு அவர் வெளியே சற்று நொண்டிக் கொண்டு வந்தார். ஊசி போட்டதாகச் சொன்னார். பிறகு மருந்து கவுண்டருக்கு நான் வர மறுத்தேன். என் மறுப்பை அவர் ஏற்றார். என்னை உள்ளே அனுமதிக்காத அந்தப் பெண்மணிதான் மருந்தையும் கொடுக்கிறாள். எனக்கு அவளின் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை.

அவர் மருந்தை வாங்கி கொண்டு முகத்தில் சோகத்துடன் வந்தார். முகத்தில் அச்சமும் தெரிந்தது.

“உன்னைய அவ மகனான்னு கேட்கறா… மனசு ஒரு மாதிரியா ஆயிடுச்சி!”

கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் சீன உணவுக் கடைக்கு அழைத்தார். இப்போது பசி போய்விட்டது. தேவையில்லாமல் அவள் ஏன் அப்படிக் கேட்டாள் என்று தெரியவில்லை.

வெளியே வந்தததும் ஆறுதல் படுத்தினேன். நம்மை போல பலர் இருப்பதாகச் சொல்லி சமாளித்தேன். அதுக்குதான் நீங்கள் தமிழ்ப் படத்தை மட்டும் நம்பி இருக்காமல் என்னைப் போல கொரியன், இத்தாலி, ஸ்பேனிஷ் போன்ற உலகச் சினிமாவைப் பார்க்க வேண்டும். அவர்களெல்லாம் ரகசிய சமூகத்தில் வாழ்கிறார்கள். அதுதான் உண்மையிலேயே சீக்ரெட் சொசைட்டி. அவர் முகம் மலரவில்லை. கவனம் வேறு எங்கோ இருந்தது.

காரில் அவரின் அருகில் பேரங்காடியின் முன் நின்றோம். கொஞ்ச நேரத்தில் முகம் சிவந்து, கண்கள் முட்டை வடிவமானது. எங்கள் காருக்கு அருகில் இன்னொரு கார் வந்து நின்று, அதிலிருந்து சுருண்டத் தலைமுடியுடன் ஒருவன் இறங்கினான்.

அவனைப் பார்த்து பயந்து போய் விட்டார்.

“ஏற்கனவே எங்க பக்கத்து வீட்டில இருந்தவன். அவன் பாத்திட்டா அவ்வளவுதான்…” தனது அருகிலுள்ள கைப்பயை எடுத்து அவர், தனது முகத்தை மறைத்தார். காரிலிருந்து இறங்கியவன் எங்களுக்கு இடது புறத்திலே நடந்தார். அவன் காரிலிருந்து ஒரு பெண்மணி இறங்கியதும் அருகருகே சென்றார்கள்.

“அந்த ஆளு மக அழகாதான் இருக்கா…”என்றேன்.

“அவருக்கு மக இல்லையே…” சற்று குழப்பினார்.

“அவரைப் பொண்டாட்டி உங்க மாதிரியே, இந்த வயசலையும் …” நான் சொல்லி முடிக்கவில்லை.

“அது அவரு பொண்டாட்டி இல்ல.” என்றார்.

“சரி விடுங்க…” என்றேன்.

இயன் ஃப்லேமிங்’ஸ் ஜேம்ஸ் பாண்ட் நாவல் படித்த அனுபவத்தின் தூண்டலால் காரை விட்டு இறங்கி பேரங்காடியின்னுள்ளே நுழைந்தேன். என் வலது புறத்தில், மூக்குக் கண்ணாடி மற்றும் உணவு கடைகள். இடது புறத்தில் ஆண்கள், பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைகள். இடது புறமாக நடந்தேன். துணிக் கடைகளின் இறுதி எல்லை சுவர் வரை சென்றேன். அப்படியே திரும்ப வந்த வழியே நடந்தேன். இடது புறத்தில் தொங்கவிடப்பட்டிருந்தச் சட்டைகளுக்கு நடுவில் அவர்கள் இருவரும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் அணியும் வெள்ளை நிற கவுனை அவளின் முகத்துக்குக் கீழே கையில் பிடித்து வைத்து அளவு பார்த்தார்.

“இது உனக்கு நல்லா இருக்கும்!” இங்கிருந்து பார்த்ததில், காட்சியின் ஒளி மட்டுமே ஹெச் டி அளவில் தெரிந்தது. ஒலி சற்றுக் குறைவாகதான் கேட்டது. அதனால், அவர்களுக்கு அருகில் சென்றேன். வெள்ளை நிற டீசர்ட் ஒன்றை தனது கையில் எடுத்து அவருக்கு நேராக வைத்து பார்த்தாள் அவள். மூன்று முறை இவர்களையே சுற்றினேன். ஆனால் வெளிப்புறப் பார்வைக்கு நான் சட்டையைத் தேடுவது போலவே காட்சியாகும். அவர்கள் இருவரும் ஃபிட்டிங் அறைக்குள் சென்றார்கள். ஒர் அறையின் கதவுக்குள் புகுந்தால், உள்ளே நான்கு அறைகள் இருக்கும். அந்த அறையின் கதவிலுள்ள கண்ணாடியில் நன்றாகப் பளிச்சென்று முழு உருவத்தையும் பார்க்க முடியும். அந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்து முதலில் அவர் உள்ளே சென்றார். அவள் அந்த அறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கருப்பு நிற முகக் கவசத்தை தன் தாடைக்குக் கீழாக இறக்கி விட்டாள். மெல்லிய கருப்பு நூல் போலிருந்த அவளது தலை முடியை கைகளால் தடவி தன் அழகைக் கண்டு தானே ரசித்து கர்வம் கொண்டாள். கழுத்துக்குக் கீழ் நீண்டு முதுகின் நடு பகுதி வரை தங்க நிறமாக மாற்றப் பட்டிருந்தது கூந்தல். என்னை விட சிறு வயதுடையவளாக இருக்கும்.

முகம் பார்க்கும் கண்ணாடியாகக் கதவைச் செய்துள்ளதால், யாரும் தன் நிலை இழக்காமல் தங்கள் அழகைக் கண்டு பெருமைப்பட்டுக்கொண்டு பொருமையாக இருப்பார்கள். ஆனால், அவள் சற்றுப் பொருமை இழந்தாள்.

கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்ததை, பார்த்து விட்டேன். அவள் திரும்பும் போது நானும் திரும்பிக் கொண்டு நகர்ந்தேன். அடுத்தக் கடைகளுக்குள் சென்றேன். திரும்பச் சென்று பார்க்க திருடன் போல பதுங்கிச் சென்றேன். ஏன் இப்படியெல்லாம் செய்கிறேன் என்றே தெரியவில்லை. ஆனாலும் எதோ பிரிட்டிஷ் அரசாங்கம் ஜேம்ஸ் பாண்டுக்கு கொடுக்கும் அழுத்தத்தையே என் உள் மனம் எனக்குக் கொடுத்தது.

நானும் ஒரு சாங்கியத்துக்காக ஒரு சட்டையைக் கையிலெடுத்து ஃபிட்டிங் அறையை நோக்கினேன்.

அவளைக் காணவில்லை. என்னைக் கடந்துதான் அவள் சென்றாக வேண்டும். ஏற்கனவே அவர் சென்ற ஃபிட்டிங் அறை மட்டுமே சாத்திக் கிடந்தது. இவளும் அவரோடு அந்த அறைக்குள்ளே சென்றிருப்பாள் என்றே தோன்றியது. உள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கலாம்.

வெளியே சென்று விட்டேன். அவரின் கார் வெளியேதான் நின்றது. என் காரில் அமர்ந்து, தீப்தியின் கையைப் பற்றினேன். பேயாக மாறியது போலவே என் முகத்தைப் பார்த்தார். பின்னால் பார்க்க கண்களால் பேசினாள்.

பேரங்காடியில் ஒரு சட்டை ஒன்றை வாங்கி, இன்னொரு சட்டையைத் திருடி, ஒரே பையிலேயேப் போட்டு விரைவாக வெளியே ஓடும் பதற்றத்தோடு அவர்கள் இருவரும் வெளியேறினார்கள்.

அவரே அதிகப் பதற்றத்தோடு காணப்பட்டார். பின்னால் பல முறை தலையைத் திரும்பிப் பார்த்தப்படியே தொப்பை முன்னால் பார்க்க நடந்தார். அருகிலிருந்தவள் அவரை விட குறைவாகவே பதற்றத்தோடு தெரிந்தார். நாங்கள் காரில் இருப்பது வெளியே யாருக்கும் தெரியாமல் நாளிதழில் மறைத்து கொண்டோம்.

நான் யார் என்பது தெரியாமல், அவருக்குத் தெரிந்தவன் எவனோ வந்துட்டான் என்று அவள் சொல்லியிருக்கக் கூடும். அவர் என்னைப் பார்க்காததால், பயந்து போய் விட்டிருக்கிறார். தனக்குத் தெரிந்த எவனோ பார்த்திருக்கான். யாரென்று தெரியாமல் குழம்பி போயிருக்கிறார். இன்று அவர் தூங்காமல் தன் மனைவியிடம் எவனோ போட்டுக் கொடுத்து விடுவானோ என்று தவிக்கப் போகிறார். யாரவன்? யாரவன்? என்ற அவரின் மனதின் படபடப்பு குறையாமல் இனி அவளை, எங்கும் அழைத்துச் செல்லமாட்டார்.

மனதில் நான் போட்டக் கணக்கை அவரிடம் சொல்வதற்குள்…

“எனக்குப் பசிக்குது. சாப்ட போலாம்…”

“எனக்குப் பசிக்கலெ…” என்றேன்.

“நடிக்காதடா… வாடா போலாம்…” என் தலையைச் செல்லமாகத் தட்டியபடியே சொன்னார்.

கார்டியன் முன் கார் நிறுத்த இடமில்லாமல், பக்கத்திலுள்ள புதிய கார்கள் விற்கும் கடைகளின் முன் காரைப் போட்டார். கொஞ்சம் வேலை இருப்பதால், நான் குட்டி டைனசோரில் வருவதாக சொன்னேன்.

கார்டியன் கடை பாதி அடைக்கப்பட்டது. என்னை உள்ளே விடவில்லை. நேரம் முடிந்து விட்டது என்று ஊமை ஜாடை காட்டினார் உள்ளேயிருந்த பெண்மணி. நான் கடுப்பில் திரும்பினேன். பாதி கிழவியாக இருக்கும் சீனப் பெண் என்னை மோதியிருப்பார்.

“இத்து பொம்புவான் பிலா மாவு மரி? புலோக் கெரெதா சயா…” என்று சீனாவின் ஆதிக்கத் தொனியில் சொன்னார்.

“இத்து பொம்புவான் பினி சயாலா… யூ ஹொர்மாட் சிக்கிட். யூ புன் பொம்புவான் ஜுகா… சயா புன் துங்கு டியா…” நான் இந்தியத் திமிரில் பதிலளித்தேன்.

‘பொம்புவான்’ என்ற வார்த்தை பயன்பாட்டை அவரை நோக்கி செலுத்தியதால் எனக்குக் கோபம் வந்தது. கோபம் இன்னும் கொஞ்சம் கடுமையாகியிருந்தால் இந்தியச் சீன எல்லைப் போராக உருவாகியிருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க அவர் சொன்னதால் எனக்குக் கோபம் முன்பு போல வருவதில்லை. ஆனால், அந்தச் சீனக் கிழவியிடம் தீப்தியை என் மனைவிதான் என்று சொன்னதில் எனக்கு மகிழ்ச்சி. கிளினிக்கில் உள்ள பெண்மணியிடம் இதே மாதிரி ஏன் சொல்லவில்லை என்று மனம் உறுத்தியது.

தீப்தி வெளியே வந்ததும், “அந்தச் சீனக் கிழவியிடம் உங்களை என் மனைவி” என்று சொன்னதாகச் சொன்னேன். அதற்கு அந்தக் கிழவி என்ன சொன்னாள் என்று அவர் கேட்க, “உங்க மனைவி மிகவும் அழகாக இருக்கிறார். நீங்கள் கொடுத்து வைத்தவர்” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டதாகச் சொன்னேன்.

மீண்டும் அவர் என் தலையில் அடித்தார். அவர் அடித்தால் மட்டும் கோபம் வருவதில்லை. ஏன் என்றே தெரிவதில்லை. சிறு வயது முதல் யாராவது தலையில் கை வைத்தாலோ, அடித்தாலோ என் கோபத்தை எளிதில் யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

என்னோடு பேசும் போதுதான் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியாக உணர்வதாகச் சொன்னார். நான் உணர்வதையே அவரும் சொல்கிறார். என்றாவது ஒரு நாள் நாம் பிரியத்தானே போகிறோம் என்று சோகமாகச் சொன்னது என்னை ஒரு மாதிரியாக்கியது. அந்த வார்த்தைகளைக் கூட என்னால் கேட்க முடியவில்லை என்றேன்.

“பிரெஞ்ச் படம் ஒன்னு இருக்கு. தமிழ்ல சொன்னா படத்தோட பேரு ‘முடி வெட்டுபவளின் கணவன்’. ஒருத்தி தன் புருஷனோட வருங்காலத்துல சண்டை வந்து பிரியவே கூடாதுன்னு, சந்தோசமா அவன் கூட இருக்கும் போதே மழ வெள்ள நேரத்துல தண்ணீ தேங்கிய பெரிய அல்லூருல குதிச்சி செத்துடுவா. அவ புருஷனுக்கு கடைசியா எழுத்திட்டு போன லெட்டர் தான் செம்ம. படிச்சா கண்ணுல தண்ணீ வந்துடும்…!” என்றேன்.

“அதுக்குன்னு நாமலும் அப்படி சாவனுமா…” என்றார்.

அவர் மனம் நான் சொல்லும் கதையில் லயித்ததால் நான் தொடர்ந்தேன்.

“வாழ்கையில் எதுதான் நிரந்தரம். நமது உயிர் உட்பட எதுவுமே நிரந்தரம் இல்லை என்றேன். தொடர்ந்து என்றோ சாவப் போகிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக இன்று கவலைப்பட்டு என்ன வரப் போகிறது. இந்த நொடியில் என் மனதில் நீங்கள் நிறைந்துள்ளீர்கள். என்றோ சாவப் போவதற்குப் பதிலாக இன்றே சாவது தற்கொலை செய்வதாகும். இயற்கையில் மரணம் வருவது போல நம் பிரிவும் வரட்டும். நாமே எதற்கு நம் காதலைக் கொலை செய்ய வேண்டும். ” நான் கூறும்போது அவரின் முகத்தில் மகிழ்ச்சியான உணர்வுகள் ஓடியது. என்னைச் செல்லமாக அரைந்தார்.

“உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுதுன்னு தெரியல…!” என்றார்.

நிறைய உலகச் சினிமா பார்ப்பதாலோ, நிறைய மொழிபெயர்ப்புக் கதைகள் படிப்பதாலோ இப்படித் தோன்றலாம் என்று எனக்குள்ளே நானே சொல்லிக் கொண்டு அவரிடம் ஒரு புன்னகையை மட்டுமே வெளியிட்டேன்.

சொல்ல மறந்து விட்டேன். உங்கள் வேலையை நம் முதலாளி பாராட்டினார். இப்படியே இருந்தால் தங்களுக்குப் பதவி ஏற்றம் தருவதாகச் சொன்னார். அதெல்லாம் வேண்டாம். தனக்குப் படிப்பில்லை என்றார். நீங்கள் மலாய் மொழியைச் சரளமாகப் பேசுவது அவருக்குப் பிடித்து விட்டது. நம் நாட்டில் பிழைக்க அது ஒன்றே போதும். அதோடு நீங்கள் தன்னம்பிக்கையோடு வாடிக்கையாளர்களை அனுகுவதை அவர் பார்த்திருக்கிறார். உங்கள் தன்னம்பிக்கையை மட்டும் படிப்பைக் காரணம் காட்டி இழந்து விடாதீர்கள்.

தற்காலிகமான மகிழ்ச்சியோடு இருவரும் கிளம்பினோம். இன்றையச் படப்பிடிப்பு முடிந்ததும், குடும்ப வாழ்க்கைக்குள் சென்றவுடன் இடியுடன் கூடிய மழை வரும். சில நேரம் நில நடுக்கம் ஏற்பட்டு, சுனாமி வரும். உலகிலுள்ள எல்லா இயற்கை பேரிடரும் மொத்தமாக எங்கள் இருவரின் குடும்பத்தில் ஏற்படுகிறது. எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை கிடைத்து விடுவதில்லை. அப்படிக் கிடைத்தவனே தவறு செய்கிறான். அந்த வகையில் நாங்கள் எவ்வளவோ மேல் நிலையில் உள்ளோம்.

நான் அவரைக் காதலிப்பது இயற்கையா அல்லது செயற்கையா என்றே புரியவில்லை. முதன் முதலில் என் காதலைச் செயற்கையாகத் துணிவை வரவைத்துச் சொன்னேன். அவரிடம் எந்த அதிர்ச்சியும் இயற்கையாகவே வராதது குறித்து நான் தான் அதிர்ச்சியடைந்தேன். கைகளில் உள்ளாடை ஒன்றை மடித்து கொண்டே மௌனமாகச் சிரித்துக் கொண்டே கண் கலங்கினார்.

நான் சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தவராகவே தெரிந்தார். என் மனதில் தோன்றிய ஆசையை முன்பே கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்திருக்கலாம். ஆனால், அவர் என்னவரான அந்த நொடியில் அவரின் மௌன சிரிப்போடு கூடிய அழுகையில், வாய் திறந்து பதில் வரவில்லையென்றாலும் உள்ளுணர்வில் அவர் சொன்ன பதிலை உணர்ந்தேன்.

வேலை முடிந்ததும், கட்டடத்தின் பின்புறம் அவர் காரில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்போம். கைகள் பின்னிப் பிணைந்துக் கொண்டிருக்கும். என்னுடைய மோட்டார் சைக்கிள் குட்டி டைனசோர் மாதிரி இருக்கும். பின்னால் ஏறி அமர துணிச்சாலோடு சேர்ந்த இளமை வேண்டும். அதாவது இடுப்பு வளைய வேண்டும். இவரை ஒரு நாள் என் பின்னால் அமர வைத்துக் கொஞ்ச தூரமாகவாவது குட்டி டைனசோரில் சவாரி செய்ய வேண்டும் என்பது பல நாள் எண்ணம். வாழ்க்கையில் நான் பெரிய பெரிய தத்துவத்தையோ, வாழ்வியல் ரகசியத்தையோ அறிந்து வைத்திருப்பவன் அல்ல. ஆனால் நான் பதினாறு வயதில் படித்த அந்த ஒரு வாழ்வியல் தத்துவம் மட்டும் இன்று வரை இக்கட்டான சூழ்நிலையில் என்னை நீந்தச் செய்கின்றது.

தினமும் அன்றைய ராசிப்பலன் பார்ப்பது என்பது என் நண்பர்களிடமிருந்து எனக்கு ஒட்டிக் கொண்ட வைரஸ். பல நாள்கள் எதிர்மறையாக என் ராசிக்கு எழுதப்பட்டிருக்கும். ஆண்டு இறுதி பரிட்சையின் காலை பொழுதே, தடை என்பதை படித்து மனம் நொந்து போனேன். அதைப் பார்த்த நண்பன் இந்தப் புத்தகத்தை நான் படிக்கனும் என்றான். நானும் பரீட்சை முடிந்து அவன் சொன்ன புத்தகத்தைப் பள்ளி நூல் நிலையத்தில் படிக்க நேரம் இல்லாமல், சட்டைக்குள் மறைத்து கொண்டு வெளியே சென்று விட்டேன். அதை திருட்டு என்று சொல்ல மாட்டேன். நிஜ வாழ்க்கையில் ஹீரோ வில்லன் எனத் தனியாகக் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. எல்லோரும் என்னைப் போல ஆண்டி-ஹீரோவாக தான் இருப்பார்கள். இன்று வரையிலும், அந்தப் புத்தகத்தின் ஏடுகள் மஞ்சள் நிறமாகிப் போனாலும் அதிலிருந்து என்னுள் பதிந்த வரிகள் அப்படியே என்னுள் பதிந்து விட்டது. இக்கட்டான சூழ்நிலையில் கூட, மனைவிகூட சண்டையானாலும் அந்த வரிகள் என்னை ஆசுவாசப்படுத்தும்.

இதை பலமுறை அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது தன் வாழ்வில் தன் கணவனின் போக்கை எந்த விதத்திலும் மாற்றவில்லை என்றே சொன்னார். நம்மை மாற்றிக் கொள்வதே பெரிய வெற்றிதான். நானும் ஆறுதல் படுத்தினேன்.

“காதலிக்கும் போது உன்னை மறக்க நினைக்கிறேன். மறக்க நினைக்கும் போது மீண்டும் காதலிக்கிறேன்,” என்று அவர் சொன்னார். நானும் அவ்வாறே உணர்வதாகச் சொன்னேன். இப்படியே வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறோம். கைப்பேசியின் காவலுக்காக அவர் ரப்பர் கவசம் போட்டிருந்தார். அந்த ரப்பர் கவசத்தினுள் பாக்கெட் இருந்தது. அதனுள் பாதி தெரியும் படி தனது இளவயது புகைப்படத்தை வைத்திருந்தார். அவரின் கைப்பேசியில் நான் சில செட்டிங்கை சரி செய்து கொடுத்தேன். இது தனது பதினாறு வயதில் எடுத்த புகைப்படம் என்றார். நான் அதை திருடியது அவருக்குத் தெரியும். ஆனால், தெரியாதது போலவே காட்டிக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை எனக்கு மட்டும் தெரிந்த ரகசிய இடத்தில் மறைத்து வைத்தேன். நாளைக்கு நான் இல்லாமல் போனால் கூட எங்கள் கதை யாருக்கும் தெரிந்து கேவலமாக நினைத்துவிட கூடாது என்பதில் நான் தெளிவாகவே உள்ளேன்.

கோவிட்-19 ஊரடங்கில் தளர்வு நிலை ஏற்பட்ட காலகட்டத்தில், நோன்பு மாதம் மாலை என்பதால் அவர் ‘கொக்கோய்’ வாங்க போவதாகச் சொல்லி தனது கன்ஞ்சில் காரில் கை காட்டியப் பிறகு சென்றார். நானும் பிரிய மனமில்லாமல் சென்றேன். மனதில் ஏதோ ஒன்று உணர்த்த என் குட்டி டைனசோரைப் பின்னால் திருப்பி அவரின் காரைப் பின் தொடர்ந்தேன். அவரின் காரை முந்தாமல், காருக்கருகே அவரின் முகத்தை நோக்கினேன். என்னைப் பார்த்ததும் அவரின் சோக முகம் மகிழ்ச்சியான முகமாகத் திடீர் மாற்றமடைந்தது. காரைச் சாலையோரத்தில் நிறுத்தி, என்னைத் தன்னைப் பின் தொடர சொன்னார். கொஞ்ச தூரம் சென்று தாமானுக்குள்ளே சிறிய பாதையில் காரை நிறுத்தி இறங்கினார். எதிரே தற்காலிகக் கடைகள். கடைகள் பெரிய சாலையைப் பார்த்தவாறு போடப்பட்டிருக்கும்.

“நா இப்படியே போயிடுவேன். அங்க காடிங்க நிறைய இருக்கும்…” என்று சொல்லிக் கொண்டே கால்வாயில் இருந்த ஆபத்தான மக்கிப்போன பாலத்தைக் கடந்து கடைகளின் பின்புறமாக புகுந்தார். நானும் பாய் பாய் காட்டி, வேறு பாதையில் சென்றேன். பிறகு நான் சிறிய சாலையிலிருந்து வெளியேறியவுடன் படுத்துக் கொண்டே வலைந்து, பெரிய சாலையில் நுழைந்தேன். பெரிய லாரி ஒன்று ஹாரன் அடித்தது எனக்குத் தாமதமாக கேட்டது. கொஞ்ச நேரத்தில் என் குட்டி டைனசோரின் தலை அந்தப் பெரிய லோரியின் டையரில் நசுங்கி போயிருக்கும். அதோடு பதிவு என்று, இந்தக் கதையை இழுத்திருக்க மாட்டேன். ஆனால் அதற்கும் ஒரு விதி வேண்டும் தானே.

சிறிய சாலை வழியாக, கால்வாயைக் கடந்து கடைகளுக்குப் பின்புறமாகச் சென்ற அவர் கடைக்கு முன்புறம் பெரிய பாதையின் வழியாகப் பலகாரம் வாங்குவதைப் பார்க்கலாம் எனக் கணக்கிட்டிருந்தேன். பலகாரம் வாங்கியவர் திரும்புகையில் அவர் பின்னே நான் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். “நீ இங்கே வருவாய் என நினைத்தேன் என்று சொன்னவர்” என் தோள் மீது கைவைத்து என் குட்டி டைனசோரில் பயமில்லாமல் ஏறிக் கொண்டார். நானும் என் பங்குக்கு உங்களை வைத்து டைனசோர் சவாரி செய்யும் என் எண்ணம் பலித்தது என்றேன். என்னை அணைத்துக் கொண்டதன் வழியாகப் பதிலளித்தார்.

இதெல்லாம் சரியா தவறா என்று என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. சில நேரம் தவறு என்பதை உணர்ந்து, விட முயன்றாலும் முடியவில்லை. எல்லாமே ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட, டிரோன் போலவே என்னை யாரோ ‘கண்ட்ரோல்’ செய்வதாக உணர்ந்தேன். இதை பற்றி, என் பதினாறு வயதில் எண்ணங்கள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பனிடம் கேட்ட போது, ‘உன்னைக் குறை சொல்லும் யாருமே உன்னைவிட நேர்மையானவர்கள் இல்லை. அதனால், உனக்கு எது சரியோ அதை செய். வாய்ப்பு வாய்க்காத வரைக்கும் யாவருமே யோக்கியமானவர்கள்தான்…’ என்று சிங்கப்பூரில் கோவிட்டால் மாட்டிக் கொண்ட நேரத்திலும் எனக்காக வாட்சப் செய்தான். தொடர்ந்து வாழ்வில் நாம் எந்த ஒரு மனிதரையும் கெட்டவர், நல்லவர் என்று கூறவும் முடியாது என்றான்.

குட்டி டைனசோரில் அவரை ஏற்றிக்கொண்டு கொஞ்ச தூரம் சென்றேன். ஒரு பெரிய மேட்டின் மேல் வேகமாகச் செலுத்தினேன். அவர் கொஞ்சம் பயப்படுவதாக உணர்ந்தேன். பெரிய பாதையின் வலது பக்கம் செம்மண் சாலை வழி செலுத்தினேன். மலை உச்சியை நோக்கியபோது அவர் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டார். மலை பயணம் முழுவதிலும் கைவிடப்பட்ட சீனச் சுடுகாட்டை இரண்டுப் பக்கமும் பார்த்துக்கொண்டு செல்லலாம். ஒருவனைப் புதைத்தார்களா? அல்லது குழுவாகப் புதைத்தார்களா? என்ற சந்தேகம் வந்தது. அவ்வளவு பெரிய கல்லறைகள்.

அந்த மலையின் மேலே சீனப் புத்தர் கோவில் ஒன்றிருக்கும்.

அந்தக் கோவிலுக்கும் மேல் பகுதிக்குச் செல்வது அவ்வளவு பாதுகாப்பில்லை. ஆனால், மேலிருந்து பார்த்தால் சூரியனின் அஸ்தமனம் பொன் நிறத்தில் தெரியும். அந்தக் காட்சி கீழே இருந்து பாதுகாப்பாகப் பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஆபத்தைக் கடந்து மலை மேல் வந்து பார்ப்பவர்களுக்குத் தான் அந்த மாலை சூரியனின் தரிசனம் கிடைக்கும். கொஞ்ச நேரம் அவர், அந்தக் காட்சியையே பார்த்தபடி இருந்தார். நானும் எதுவும் பேசவில்லை. இருட்டத் தொடங்கியவுடன் அவருக்குப் பயம் வந்தது. விரைவாகக் கீழே இறங்கினோம். ஆபத்தானப் பகுதியிலிருந்து இறங்கி புத்தர் கோவிலுக்கு வந்தோம். அதன் பிறகு கீழே இறங்குவதில் ஆபத்தில்லை. புத்தர் கோவிலுக்குள் சென்றோம். சயாம் புத்தர் சாமி எங்கள் இருவரையும் அமர வைத்தார். தண்ணீரை எங்கள் தலையில் தெளித்தார். கைகளில் எங்கள் இருவருக்கும் ஒரே வர்ணத்தில் கயிறு ஒன்றைக் கட்டினார். எதோ சொன்னார், எங்களுக்கு அந்த மொழி புரியவில்லை. ஆனால் ஆசீர்வாதம் தருகிறார் என்று மட்டும் புரிந்தது. ஒரு சிறிய புத்தர் சிலையை என்னிடன் நீட்டினார். நானும் வாங்க கைகளை நீட்டினேன். அந்த மொட்டை புத்தர் சாமி கோபித்துக் கொண்டார். புத்தர் சாமியின் கோபம் எனக்குப் புரியவில்லை. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். தீப்தி என் கையைப் பிடித்து இழுத்து தன் கையோடு ஒன்றாக இணைத்துப் புத்தர் சாமியிடம் நீட்டினார். அவரின் கோபம் மாறி முகம் மலர்ந்தது. நாங்கள் அந்தப் புத்தர் சிலையை ஒன்றாகப் பெற்றுக் கொண்டோம். ஒரு புத்த சன்யாசியே ஒன்றாகச் சேர்ந்து நாங்கள் புத்தர் சிலையை வாங்கும் போது மகிழ்ந்தார். புத்தர் சிலையைச் சேர்ந்து பெற்றபோதும், என் கைகளைப் பிடித்து இழுத்து அவர் கைகளோடு சேர்த்தபோது அவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை என்னால் என்றுமே மறக்கவே முடியாது.

தார் சாலை, செம்மண் சாலை, மலை மேட்டு சூரிய தரிசனம், புத்தர் சிலை பெற்றது, புத்த சன்னியாசியின் ஆசீர்வாதம் பற்றியெல்லாம் டைனசோர் சவாரி அனுபவம் எற்பட்ட இரவில் அவரோடு மூன்று மணி வரை வாட்சப் குரல் பதிவில் பேசினேன். அவர் கணவனின் கொடுமையையும் என் மனைவியின் கொடுமையையும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சொல்லிக் கொண்டே இரவைக் கடந்தோம்.

***

இதற்கிடையில் மனதில் நான் தேடுவதைக் கைவிட்ட இந்திய ஆங்கிலச் சினிமாவை நான் தேடி அலைந்த காலம் நினைவுக்கு வந்தது. ஆகக் கடைசியாக நான் எப்போது அந்தச் சினிமாவைத் தேடுவதை விட்டேன் என்று துல்லியமாக அலசிப் பார்த்தேன்.

அனைத்து மொழிப்படங்களும் விற்கும் கடை ஒன்று நம் வட்டாரத்திலேயே இருப்பதாக ஏற்கனவே கொஞ்ச நாள் என்னோடு வேலை செய்த பொடிப் பையன் ஒருவன் சொன்னான். என்னையும் அழைத்துச் செல்வதாகச் சொன்னான். நான் ஆர்வமானேன். அன்றிரவே பத்து மணிக்கு மேல் தயாரகவும் இருக்க சொன்னான்.

“ஏன்டா, ராத்திரியில எங்கம்மா கேப்பாங்கடா…” என்றேன். நான் திருமணம் செய்வதற்கு முன்பு.

“இல்லண்ண, அந்தக் கட அப்பதான் தொறப்பாங்கே …” என்று நக்கல் சிரிப்புச் சிரித்துக் கொண்டே சிகரெட் புகையை வான் நோக்கி துப்பினான்.

வலக்கமாகப் போகும் சுங்கை பட்டாணி டவுன்தான். சென்ட்ரல் ஸ்குவேர் கடந்த கடை வரிசையின் எதிர்புறம். அங்கே எலக்ட்ரானிக் பொருள் பழுது பார்க்கும் கடை ஒன்றிருக்கும். நான் பகலில் அங்கே சென்றிருக்கிறேன். அந்தக் கடையா என்ற சந்தேகம்.

கடையின் அருகில் வந்து நின்றோம். அந்தப் பொடியன் பல எக்ஸ்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னப்பட்ட வலை போல சித்திரத்திலிருந்த இரும்புக் கதவின் உள் பகுதியை மூன்று முறை தட்டினான். சற்று நேரத்தில் கதவை ஒருத்தி திறந்தாள். ராக் ஸ்டார் உடை அணிந்திருந்தாள். கழுத்தில் நாய்க்குட்டியின் சங்கிலியின் அளவில் ஆட்டுத் தலையின் வடிவத்தில் ஒன்றைக் கோர்த்து தொங்க விட்டிருந்தாள். அவனைத் தொடர்ந்து நானும் உள்ளே நுழைந்தேன். நாங்கள் நுழைந்தவுடனே அவள் கதவுகளை மூடினாள். உள்ளே சிலர் தலைக்கவசம் அணிந்திருந்தார்கள். நாம் ஏன் அணியவில்லை என்று பொடியனிடம் மெதுவாகக் கேட்டேன்.

“ இங்க வரவனுங்கே எவனும் யோக்கியம் இல்லண்ண…” என்று குரலை உயர்த்தி சத்தமாகச் சொன்னான். தலைக்கவசம் அணிந்திருந்த ஒருவனுக்கு விளங்கியதால் எங்களை நிமிர்ந்து பார்த்தான்.

“அதாண்டா, நானும் சொல்றேன். அவனுங்க மூஞ்சி நமக்குத் தெரியாது. நம்ம முஞ்சியே அவனுங்க பாத்திருப்பானுங்க…வெளிய போனதும், அவனுங்கல பத்தினியா காட்ட, நம்பல இங்கே பாத்ததா சொல்லி மானத்த வாங்கப் போறானுங்க…” மெதுவாகப் பொடியனிடம் காதில் ஊதினேன்.

அதற்குள்ளே அந்த ராக் ஸ்டார் உடையணிந்த சீனப் பெண் எங்கள் இருவரின் கைகளிலும் பழைய புகைப்பட ஆல்பம் போலவே ஒன்றைக் கொடுத்தாள். திறந்து பார்த்தேன். ஒவ்வொன்றிலும் அரை நிர்வாணப் புகைப்படங்கள். சிலவற்றில் முழு நிர்வாணமும் கூட. இந்திய , சீன, ஆப்பிரிக்க, அமெரிக்க முகங்கள் கலர் அட்டையில் விலை பட்டியலைத் தலைக்கு மேல் தாங்கியப் படி இருந்தார்கள். நான் தேடும் சினிமா இங்கிருக்க வாய்ப்பில்லை.
அதற்குள் பொடியன் இரண்டு ஆல்பம்களை அவளிடம் காட்டி இழித்தான். அவளும் பதிலுக்கு இழித்துக் கொண்டு என்னைப் பார்த்தாள். நான் வேண்டாம் என்ற பாணியில் பார்த்தேன். என்னைப் பார்த்தவள் முறைத்தாள். திரும்பிச் சென்று கடைக்குள்ளிருந்த இன்னொரு அறைக்குள் மறைந்தாள். உடனே வெளியே வந்தவள், தலைக்கவசம் அணிதிருந்தவர்களிடம் சென்றாள். உள்ளே இருந்து சீன இளைஞன் ஒருவன் வேகமாக வெளி வந்து அவளிடம் இரண்டு குறுந்தட்டை கொடுக்க, அவள் உடனடியாகப் பொடியனிடம் நீட்டினாள். மின்னல் வேகத்தில் பொடியன் கொடுத்த பணத்திற்குப் பாக்கியை கொடுத்து விட்டு எங்களுக்குக் கதவைத் திறந்து விட்டாள். பொடியன் முகம் நோக்கி சிரித்தவளின் பார்வை, என்னை நோக்கியதும் முறைப்பதாக மாறிவிட்டது. நாங்கள் உள்ளே நுழைந்ததும் தெரியவில்லை, வெளியே வந்ததும் தெரியவில்லை. மர்மக் கடையினுள் எல்லாமே மின்னல் வேகத்தில் பரபரப்பாக நடந்தேறியது. வியாபாரியும் வாடிக்கையாளர்களும் ஊமை படத்தை இங்கு ஓட்டிக் கொண்டிருந்தார்கள். வாயைத் திறந்தால் காசு என்ற வியாபாரிகளுக்கு மத்தியில் வாயைத் திறக்காமலேயே இங்கு வியாபாரத்தை நடத்தி வெற்றி பெறுகிறார்கள்.

எனக்கு அதிலிருந்த படங்கள் எதிலும் ஈர்ப்பு உண்டாகவில்லை என்பதை விட அந்த மாதிரியான படங்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வமிருக்கவில்லை. இயற்கையாக வரவேண்டியதைச் செயற்கையாக வரவழைக்கும் இத்தகையப் போலி உணர்ச்சிகளைக் காட்டும் படங்களில் எனக்கு ஈடுபாடில்லை.

அந்த ராக் ஸ்டார் சீனப் பெண்ணோடு இந்திய ஆங்கிலச் சினிமாவைத் தேடுவதைக் கைவிட்ட மாதிரி நினைவு நினைவுறுத்தியது.

ஒருவனின் மனசாட்சியே தவறுச் செய்தவனைக் குத்திக் கொல்லும் என்று என் ஆரம்பப்பள்ளித் தமிழ் ஆசிரியர் அடிக்கடி அறிவுரை கூறுவார். அவரின் அறிவுரைக்கு ஏற்பவே புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருளுக்கு அடிமையாகுதல் போன்றவற்றிலிருந்து பயந்து ஒதுங்கியே இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அதே மனசாட்சி இன்று என்னிடம் இரட்டை வேடம் போட்டது. நான் தீப்தியை விட்டு விலகியப் போது குற்ற உணர்வினால் செய்த முந்தைய தவற்றைச் சுட்டிக் காட்டி மனசாட்சி மிரட்டியது. ஆனால், அவளோடு உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, தவறு என்று தெரிந்தே தொடரும் தவறை அதே மனசாட்சி அடிமையாகவே அடங்கி வேடிக்கைப் பார்த்தது.

“உங்களோடு என்னைத் தவிர யாரும் நெருங்கிப் பழகியதில்லை. உங்களைவிட என்னை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நம் இருவருக்கும் மரணம் என்று ஒன்று வரும்போது தூரமாக நின்று மட்டுமே பார்க்க முடியும். அது பெரிய வேதனை. என்ன தான் நாம் நெருங்கிப் பழகினாலும் யார் அந்த வேதனையை யாருக்கு கொடுக்க போகிறார்களோ? யார் கல்லறையில் யார் தனியே வந்து பூக்கொத்து ஒன்றை வைத்து நம் காதலை நினைத்து கண்ணீர்விட போகிறார்களோ?” என்றேன். “எனக்கு முந்தி பிறந்ததால் நீங்கள் முந்திக் கொள்வீர்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லையே!” என்று வாட்சப்பில் குரல் பதிவை அனுப்பினேன்.

வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்ட பிறகு கைப்பேசியில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

“நானும், அந்தக் கருப்பு, வெள்ளை மாதிரிதானே இருக்கிறேன்” என்று அன்றைய இரவில் அவளிடம் குற்றவுணர்வால் சொல்லி விக்கினேன். “அவனுக்கு குடுத்த. எனக்கும் குடு” என அந்த கருப்பனும் வெள்ளையனும் போட்டிப் போட்டுக் கொண்டு என் கனவில் வருவதையும் நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.

எங்கள் உறவில் சிரிப்பும் அழுகையும் சரிபாதியாகத் தான் எப்போதும் இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த அழுகையில்கூட எதோ ஒரு சுகமுள்ளது என்பதை நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் உணர்ந்திருக்கிறோம்.

“நீ அவனுங்க மாதிரி இல்ல… நீ வேற… அந்தப் பொருக்கிங்க வேற…” என்று அவரும் அழுதுக் கொண்டே என்னிடம் பதிலளித்தார். தீப்தி சொல்லும் ‘நான் வேறு’ எனும் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கே போய் என் போலி ஆங்கில இந்தியச் சினிமாவின் கதை முடியும் என்றே தெரியவில்லை.

***

கொஞ்சக் காலமாக நான் தேடுவதை நிறுத்தி, மறந்து போயிருந்த அந்த இந்திய ஆங்கிலச் சினிமா மீண்டும் நினைவில் மின்னல் வெட்டுப் போல தோன்றி மறைந்தது. அந்த ‘இ.ஆ.சி’யை மீண்டும் தேடத் தொடங்க வேண்டும். என் கதையில் ‘நான் வேறு’ என்ற அர்த்தத்தை அறிந்துகொள்ள அந்த இந்திய ஆங்கிலச் சினிமா உதவக்கூடும். மீண்டும் கள்ள மற்றும் நல்ல நெட்டில் தேடத் தொடங்கி விட்டேன்.

1 comment for “இ. ஆ. சி அல்லது ஆ. இ. சி

  1. அரவின்
    May 6, 2024 at 4:07 pm

    வணக்கம் தேவகுமார்
    உங்களின் இ.ஆ.சி அல்லது ஆ.இ.சி கதையை வாசித்தேன். அவன் தேடிக் கொண்டிருப்பது என்பது தனக்கு அந்தரங்கமான பாலியல் உணர்வைத் தரக்கூடிய ஒன்றை எனப் புரிந்து கொண்டேன். ஆனாலும், அதனைத் தேடி அடைவதில் தயக்கமும் பயமும் கூடவே இருக்கிறது. அந்தத் தேடலின் முடிவில் ராக்ஸ்டார் சீனப்பெண் அல்லது விபச்சார விடுதியில் சீனரின் கூச்சலுக்கு அஞ்சி ஓடுதல் என அவன் மனத்தில் தேங்கியிருக்கும் பயம் இயலாமையாக வெளிப்படுகிறது. அவருடனான உறவை அந்தத் தேடலுடன் பொருத்திப் பார்க்க முயல்கிறான். தான் பார்த்த சினிமா, தன் அறிவு என எல்லாவற்றையும் அதனுடன் இணைத்து அதனை நியாயப்படுத்த முயல்கிறான். இருந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் அந்த உணர்வின் விழைவை இந்த உறவு நிகர் செய்யவில்லை. அதனை நிகர் செய்வதற்காக மனம் செய்யும் பாவனைகளாகவே மற்றவற்றைக் காண முடிகிறது. இறுதியில், அந்த ஏமாற்றத்தாலே மறுபடியும் அந்தப் படத்தை மனம் தேடத் தொடங்குகிறது. அந்தத் தேடலுக்கான பதில் அவனுக்குள்தான் இருக்கக்கூடும்.
    திரைப்படக் கதைகள் சுருக்கம், அவனுடைய தனிப்பட்ட கருத்துகள் ஆகியவை இந்த முயற்சியின் மீது செய்யப்படும் பாவனைகளின் வெளிப்பாடு என்றாலும், அது வாசிப்பில் சற்றே சோர்வை ஏற்படுத்தியதாக உணர்ந்தேன். மற்றப்படியாக, கதையின் உணர்வு சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் தேவகுமார் சகோ.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...