முன்வாசல் கம்பி இடுக்கு வழி நுழைந்த உடும்பு ஒன்று, அவனது இரண்டு மாடி வீட்டின் முன்வாசல் கம்பிக்கும் கதவுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட பிறகுதான் எல்லாமே ஆரம்பமானது. ஒரு மீட்டர் அளவு வளர்ந்த பெரிய உடும்பு அது. சொரசொரப்பான அதன் தோலும் வெளியே துருத்தி துருத்தி மறையும் நாக்கும் அருவருப்பாக இருந்தது. அந்தக் கம்பி இடுக்கு விஸ்தாரமானதுதான். ஆனால், உள்ளே நுழைந்த உடும்புக்கு ஏனோ வெளியே செல்லத் தெரியாமல் அங்கேயே நின்று வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தது.
அண்டை வீடுகளில் பூனைக்குட்டிகள் சில காணாமல் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அந்த உடும்பு விடுவித்துவிட்டது. ஆனால், அது இன்று அவனது வீட்டில் மாட்டிக் கொண்டது.
அலிமான் அன்றும் எப்போதும் போல வேலைக்குப் போயிருந்தான். அவன் மனைவியும் அன்று வீட்டில் இல்லை. பணிப்பெண் மட்டும் பள்ளிக்குச் சென்றுள்ள இரண்டு பிள்ளைகளும் வீடு திரும்ப காத்திருந்தாள். அலிமானின் மூத்த பிள்ளை இடைநிலைப்பள்ளியில் மாலைபிரிவில் படிப்பதால் நல்ல வேளையாக அவனும் பள்ளிக்குச் சென்றுவிட்டிருந்தான்.
பணிப்பெண் அழைத்து விஷயத்தைச் சொன்னதும், பக்கத்தில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் அலிமானின் மனைவி பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். வகுப்பறையில் பாடம் நடத்தும் வேலைகள் முடிந்துவிட்டிருந்தன. ஆனால், பாடம் நடத்துவது மட்டுமா ஆசிரியர்களின் வேலை. எத்தனையோ குமாஸ்தா வேலைகளும் இருந்து கொண்டே இருக்கின்றனவே. அலிமானின் மனைவி தீயணைப்புப் படைக்குச் செய்தி சொன்னதும் அவர்கள் வந்து அந்த உடும்பைப் பிடித்துக் கொண்டு போனார்கள். மனைவியின் கைப்பேசியில்தான் தீயணைப்பு வீரர்கள் உடும்பைப் பிடித்து எடுத்துச் செல்லும் காட்சிகளைப் பார்த்தான் அலிமான்.
எப்படிச் செய்தி போனதோ தெரியவில்லை, அன்று இரவே அலிமானின் அம்மா கம்பத்திலிருந்து அழைத்தார். உடன்பிறப்புகள் புலனக்குழு மூலம் தெரிந்து கொண்டிருப்பார் போல. அவரும் அந்த உடும்பு காணொளியைப் பார்த்திருந்தார். கம்பத்தில் இருக்கும் அக்காவோ, அக்கா பிள்ளைகளோ காணொளியைக் காட்டியிருப்பார்கள். அம்மா, பரிகாரம் செய்ய ஒரு போமோவை உடனே தேடச் சொன்னார். இல்லையென்றால் உனக்கு உடும்பு தோஷம் பட்டுவிடும் என்றார். “உடும்பு தோஷமா? அப்டினா?” அலிமான் புரியாமல் கேட்டான்.
“உடும்பு வீட்டுக்குள்ள வருவது தீட்டு… அதற்குப் பரிகாரமா ஏழு குடம் தண்ணியில நீ தலைமுழுகணும். இல்லன்னா உன் வாழ்க்கையில நெரைய கெட்டது நடக்கும்.”
அலிமான் தாயின் பேச்சைத் தட்ட விரும்பாமல் அமைதியாக இருந்தான். ஆனால் அவன் மனது அந்த முட்டாள் தனத்தை ஏற்றுக் கொள்ளாமல் முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது. எங்கே போய் ஏழு குடம் நீரையும் குடத்து நீரில் பரிகாரம் செய்யும் போமோவையும் தேடுவது? அம்மா அவனையே போமாவைத் தேடச் சொன்னார். கிடைக்காவிட்டால் கம்பத்தில் ஒரு போமோ இருப்பதாகச் சொன்னார். அலிமான் தலையில் அடித்துக் கொண்டான். குடம் நீர் பரிகாரம் செய்யும் போமோவைக் கொண்டு வர சில நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து கம்பத்துக்குச் செல்ல வேண்டுமா? இதெல்லாம் செலவு, நேர விரயம், அலைச்சல்.
அலிமான் தாயின் பேச்சை ஆமோதித்தான். இங்கேயே அது போன்ற போமோ இருப்பதாகச் சொன்னான். அலிமான் பொய்தான் சொன்னான். பணநெருக்கடியான இந்த நேரத்தில் ஒரு உடும்பிற்காகவும் ஒரு போமோவுக்காகவும் கம்பத்துக்கு அவன் கண்டிப்பாகப் போக முடியாது. அதோடு, இப்போது கம்பத்துக்குச் செல்ல அவனிடம் பணமோ நேரமோ தெம்போ இல்லை. ஆனால், அலிமான் பொய் சொல்கிறான் என அவன் தாயிற்கு உடனே தெரிந்துவிட்டது. உடும்பு தோஷத்தால் நேரக்கூடிய ஆபத்துகளை அவர் எச்சரிக்கும் தொனியில் சொன்னார்.
உடும்பு தோஷமாம். அலிமான் அதை நம்பவில்லை. ஆனால் அன்றிலிருந்துதான் ஒவ்வொரு பிரச்சனைகளைச் சந்திக்கத் தொடங்கினான். கார் டயர் பஞ்சர் ஆவது போன்ற சிறிய பிரச்சனை முதல் மசூதியில் தொழுகைக்குச் சென்ற நேரத்தில் மோட்டார் சைக்கிள் காணாமல் போன பெரிய பிரச்சனை வரை நிகழத் தொடங்கின. நாட்கள் செல்ல செல்ல பிரச்சனைகளின் தாக்குதல் கூடிக் கொண்டே போனது. அரசாங்க மாற்றத்தால் திட்டங்கள் கைவிடப்பட்டதோடு சிறு குத்தகைக்காரனாகக் கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தவனின் ஒப்பந்தங்களும் ரத்தாகின. பழைய ஒப்பந்தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணமும் வந்து சேராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தன.
நாட்டில் தலைவிரித்தாடிய லஞ்ச லாவண்யத்தால் பொருளாதாரம் கடும் சரிவுக்குச் சென்றதன் விளைவாக அலிமான் இரண்டு வருடங்கள், சரியான குத்தகைகள் வந்து அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்தான். ஆனால் ஊழல்வாதிகளின் ஆட்சி வீழ்ந்த பின்னரும் அவனது நிலமை மேம்படாமல் மேலும் மோசமாகத்தான் போனது. கடைசியில் அலிமான் தன் சிறிய அலுவலகத்தை மூடவேண்டியதாகிவிட்டது. அவனிடம் இணை குத்தகையாளராக வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் வேறு முதலாளிகளைத் தேடி நடையைக் கட்டினர். அலிமான் மாதாந்திர தவணை கட்டணங்களைச் செலுத்த அல்லாடிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.
வீடு, இரண்டு கார்கள், காணாமல் போன மோட்டார் சைக்கிள், மாதாந்திர பில்கள், கடன்பற்று அட்டை, வங்கி கடன்கள் போன்றவற்றுக்குக் கட்டவேண்டிய தவணைப் பணமும், பணிப்பெண் சம்பளம், பிள்ளைகளுக்கான செலவு போன்ற இதர செலவுகளும் அலிமானைப் பம்பரமாகச் சுழல வைத்தன. இவ்வளவையும் சமாளிக்க மனைவியின் சம்பளம் போதுமானதாக இல்லை.
தன்னைப் போன்ற மக்களுக்கு ஒரு வீடு, ஒரு வாகனம், உண்ண கொஞ்சம் உணவு, உடுக்க சில உடைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள போராடுவது மட்டும்தான் வாழ்க்கையாக இருக்கிறதோ எனச் சில நேரங்களில் அலிமான் யோசிப்பான். முழு வாழ்க்கையையே அவர்கள் அவற்றுக்காகத்தான் இழக்கிறார்கள்.
ஆனால், இந்த அரசியல் தலைவர்கள், எப்படி லட்சக்கணக்கில் ஊழல் செய்து, தன்னைப் போன்றவர்களின் வாழ்நாள் வருமானத்தை ஒரே ஒரு கைப்பை வாங்க செலவிடமுடிகின்றதோ தெரியவில்லை. அதே போலத்தான், உயர்மட்ட அதிகாரிகளும், தன்னைப் போன்றவர்கள் கற்பனையில் கூட காண முடியாத பல கோடிகளை ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ளனர். ஆனால், அதெல்லாம் பழைய கதை. ஊழல் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது. ஆனாலும், அதனால் ஏதாவது மாற்றம் வந்ததா? அலிமான் வாழ்க்கை எப்போதும் போலத்தான் நெருக்கடியில் இருக்கின்றது. கிடைத்துக் கொண்டிருந்த சொற்ப வருமானமும் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.
அலிமான் வெறுமனே அதிர்ஷ்டத்தை நொந்துகொண்டு சும்மா இருக்க முடியாது. அலிமானுக்குத் தெரியும் அவன் கண்டிப்பாக வேலை தேடியாக வேண்டும். ஒரு வேளை நாட்டுப் பொருளாதாரம் மெல்ல சீராகிவிட்டால் அவன் பழைய வியாபாரத்துக்குத் திரும்பலாம். ஆனால், அதற்கு முன்பாக வருமானத்துக்கு ஏதாவது வேலை செய்தாக வேண்டும். என்ன மாதிரி வேலை என்ற தயக்கமெல்லாம் அவனிடம் இல்லை. பிள்ளைகளின் நலனை மட்டும்தான் யோசித்தான். நேர்வழியில் பணம் வரும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அலிமான் தன் மனைவியிடம் மட்டும் வேலை தேடப் போவதாகச் சொல்லிவைத்தான்.
அன்று தொடங்கி அலிமான் தீவிரமாக வேலை தேடத் தொடங்கினான். நாளிதழ்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்தான். நட்பு வட்டத்தில் விசாரித்தான். தலைநகரின் மூலை முடுக்கெல்லாம் அலைந்தான்.
உலு கிள்ளானில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவைத் கடக்கும் போது அவனுக்கு ஏனோ, அப்துல்லா ஹுசைன் எழுதிய ‘பபூன்’ சிறுகதை ஞாபகத்துக்கு வந்தது. அந்தக் கதையின் நாயகனைப் போலவே அலிமானும் சிரமமான சூழலில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அவனும் ‘பபூன்’ வேடமிட்டு வேலை செய்ய நேருமோ? பிறகு, ஒரு நாள் புலிக்கூண்டில் தவறி விழுந்து உயிருக்குப் பயந்து கிடக்கும் தருணத்தில், புலி வேடத்தில் இருப்பவனும் அவனைப் போன்ற இன்னொரு மனிதன்தான் என்பதைத் தெரிந்து கொள்ளக்கூடும்.
அந்த நேரத்தில்கூட உடும்பு தோஷம் பற்றிய கதை அவன் மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது. உண்மையிலேயே அந்த உடும்புதான் எல்லா பீடைகளையும் கொண்டுவந்திருக்குமோ? அலிமானின் சித்தப்பா துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி சாக உடும்பு தோஷம்தான் காரணம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறான். அவனுடைய சித்தப்பா நாட்டு எல்லையில் பிரபலமான மனிதராக இருந்தார். ஒரு நாள் அவர் தன் நண்பருடன் வெளியே சென்றபோது ஒரு உடும்பு அவர்களின் காரின் குறுக்கே கடந்து சென்றிருக்கிறது. நண்பர் உடனே திரும்பி விடலாம் என அறிவுறுத்தியும் சித்தப்பா அதை அலட்சியப்படுத்திவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். சற்று தூரத்தில் சாலை சமிக்ஞ்சையில் காரை நிறுத்தியபோது, எங்கிருந்தோ வந்த மோட்டார் சைக்கிள் காரின் பக்கமாக நின்றது. மோட்டாரின் பின்னால் இருந்தவன் சரமாரியாகச் சுட்டதில் சித்தப்பா அங்கேயே இறந்து போனார்.
அது இருபது வருடங்களுக்கு முன்னர் அவன் இளைஞனாக இருந்தபோது நடந்த சம்பவம். அதற்கும் அவனுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை. ஆனால் உடும்பு தோஷம் என்று சொல்வதால், மனம் குழம்பவே செய்கின்றது. உண்மையிலேயே அவன் எதை முயன்றாலும் அது கைக்கூடுவதில்லை. அரசாங்கம் கொடுக்க வேண்டிய பணமும் எங்கோ ஆகாய வெளியில் மறைந்திருக்கிறது. ஒரு சல்லிக் காசும் கிடைக்கவில்லை. கணக்குப் போட்டுப் பார்த்தால் இது போல ஆகாய வெளியில் மறைந்து போனவைப் பல்லாயிரம் வெள்ளிகளாக இருக்கலாம். அதைவிட, என்ன கெட்ட நேரமோ, கையில் இருந்த வேலைகளும் இல்லாமல் ஆகிவிட்டன. எல்லாமே அன்று அந்த உடும்பு வீட்டு கம்பிக்குள் சிக்கிக் கொண்ட பிறகுதான் நிகழத் தொடங்கின.
தெரிந்த மனிதர் ஒருவரின் உதவியில் அலிமானுக்குக் கடைசியாக வேலை ஒன்று கிடைத்தது. இது ‘பபூன்’ வேலை அல்ல என்றாலும் ‘பாபு’ என்று சொல்லப்படும் இந்த வேலையின் பெயரும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்தது. அலிமானுக்கு ஒரு முதியோர் இல்லத்தில் பராமாரிப்பாளர் வேலை கிடைத்தது. ஆகவே, அவன் அந்த முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களைப் பராமரிக்கும் பாபுவாக மாறினான். பெயரளவில் அவனை நிர்வாகி என்று சொன்னார்கள். ஆனால் அவன் செவிலியரைப் போலவே வேலை செய்தான். சம்பளம் அதிகம் இல்லை என்றாலும் மனநிறைவாக இருந்தது. அலிமானுக்கு இரண்டு நிரந்தர உதவியாளர்கள் இருந்தனர். மேலும் சில தன்னார்வளர்களும் தங்கள் ஓய்வு நேரத்தில் அங்கே உதவியாளர்களாக வேலை செய்தனர்.
அலிமானின் வேலை அதிக சிரமமானதில்லை என்றாலும் பொறுப்புணர்வு மிக்கதாக இருந்தது. பார்வையாளர்களை மகிழ்விக்கும் பபூன் கதாப்பாத்திரம் போல இங்கே அலிமான் முதியவர்களை மகிழ்விக்கும் கதாப்பாத்திரமாக வேடம் போடவேண்டியிருந்தது. மேலும், அந்தக் காப்பகம் முழுக்க அவன் பொறுப்பில்தான் செயல்பட்டது. ஆனால் அந்த முதியோர் இல்லத்திற்குத் தனிச் சிறப்பொன்று இருந்தது. அங்குத் தங்கியிருக்கும் முதியவர்கள் வழக்கமான முதியவர்கள் போல இல்லை. அவர்கள் எல்லாருக்கும் ஒரேவிதமான நோய் இருந்தது. அதை நோய் என்று சொல்லலாமா என்றும் தெரியவில்லை.
அங்குத் தங்கியிருக்கும் முதியவர்கள் அனைவருக்கும் தற்காலிக நினைவாற்றலே இருந்தது. ஆமாம். அவர்கள் எல்லாரும் எல்லா விசயங்களையும் கொஞ்ச நேரம்தான் ஞாபகத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவற்றை மறந்துவிட்டனர். இன்றைக்கு அலிமானை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால், நாளை காலையில் அவர்கள் அவனை யாரென்று மறந்துவிடுபவர்களாக இருந்தனர். ஒவ்வொரு நாளும் அலிமானும் மற்ற பணியாளர்களும் தங்களை அவர்களிடம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. பெரும்பாலும் பழைய பணியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டனர். தங்களின் வேலைகளை மட்டுமே அவர்கள் செய்தனர். ஆனால், அந்த முதியவர்கள்தான் தினமும் ஒவ்வொரு பணியாளரையும் புதிதாகப் பார்ப்பது போல விசாரித்துக் கொண்டிருந்தனர்.
தொடக்கத்தில் அலிமானுக்கு இது மிகவும் சலிப்பூட்டியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இயல்பாகிவிட்டது. மேலும் இது பெரிய பிரச்சனை அல்ல. அந்த முதியவர்களும் அதிகம் தொல்லை தருவதில்லை. அந்த மறதி நோய் மட்டும்தான் அவர்களின் ஒரே சிக்கலாக இருந்தது. யோக்கோ ஒகாவா எழுதிய ஒரு நாவலில், தனித்து வாழும் தாய் ஒருத்தி, சில மணிநேரங்கள் மட்டுமே தன் ஞாபகங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்த ஒரு கணித பேராசிரியரைப் பராமரிக்கும் வேலை செய்வதை அலிமான் நினைத்துக் கொண்டான். பிறகு அந்தப் பேராசிரியர் அவளை மறந்துவிடுவார். அது ஒரு சுவரஸ்யமான கதை. அலிமான் தன்னை யோக்கோ ஒகாவாவின் அந்த நாவல் கதாப்பாத்திரத்தோடு பொருத்திப் பார்த்துக் கொண்டான்
வாழ்க்கை என்பது பபூன் வேடமிட்டவனைப் போல போலியாக நடிப்பதாக மட்டும் இருந்துவிடுவதில்லை, சமயங்களில் பராமரிப்பு பணிப்பெண் போல ஒரே விசயத்தைத் தினமும் செய்து கொண்டிருப்பதாகவும் ஆகிவிடுகின்றது. ஆனால்வ் அலிமான் அந்தச் சூழலை மெல்ல மெல்ல ரசிக்கத் தொடங்கினான். தன்னைப் பற்றி பெருமிதமாகவும் நினைத்துக் கொண்டான். அலிமான் தான் விருப்பப்பட்ட எதையும் அன்றைய நாளில் செய்ய முடிந்தது. மறுநாள் அவற்றை அந்த இல்லவாசிகள் மறந்துவிடுவார்கள்.
திடீரெனதான் அவனுக்கு இது பிடிபட்டது. ஒருமுறை அவன் சொல் பேச்சைக் கேட்காத ஒரு முதியவரிடம் அவன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதுடன் அவரைப் பிடித்து தள்ளினான். அதைப் பார்த்த மற்ற இல்லவாசிகள் அவனைக் கடுமையாக எச்சரித்ததுடன் நிர்வாகத்திடம் அவனைப் பற்றி புகார் சொல்லப் போவதாகவும் மிரட்டினர். அன்று அலிமான் மிகுந்த சலனத்துடன் வீட்டுக்குச் சென்றான். நாளை நிச்சயமாக அவனைப் பற்றிய புகார் விசாரிக்கப்பட்டு அவனை வேலையில் இருந்து நீக்கிவிடுவார்கள். மறுநாள் அலிமான் துவண்ட முகத்துடன் வேலைக்கு வந்தான். ஆனால், அவன் அந்த இல்லத்தில் நுழைந்ததும் இல்லவாசிகள் அவனை அடையாளம் கண்டுகொள்ளாமல் புதியவனைப் போல பார்த்தனர். நேற்று அவன் செய்தவைகளை அவர்கள் முற்றாக மறந்திருந்தனர்.
அன்றிலிருந்து அந்த முதியவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ அந்த இல்லம் பற்றியோ அலிமான் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. அவன் முதல் நாளில் செய்த எல்லாவற்றையும் அந்த இல்லவாசிகள் மறுநாள் மறந்துவிடுவார்கள் என்பதை அலிமான் புரிந்துகொண்டான். அவன் முழு சுதந்திரத்துடனும் முழு அதிகாரத்துடனும் அந்த இல்லத்தில் இருந்தான். ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்கள் இல்லவாசிகளின் நலனைக் கவனிக்க வருவதால், முதியவர்கள் யாருக்கும் வெளிக்காயங்கள் மட்டும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான்.
அன்று முதல் அலிமான் அந்த இல்லத்தில் தான் விரும்பியதைச் செய்யும் அரசனாக மாறிவிட்டான். தங்கள் கண்ணெதிரே அவன் செய்யும் தவறுகளையும் ஊழல்களையும் கண்டு இல்லவாசிகள் கொந்தளித்து கடுமையாக எதிர்த்தனர். மிரட்டல் விடுத்தனர். ஆனால் மறுநாளில், முதல் நாளில் நடந்த எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எல்லா கொதிப்புகளும் அடங்கி மிக நிதானமாக எப்போதும் போல அமைதியாக வாழ்ந்தனர்.
அலிமான் அந்த இல்லவாசிகளுக்கும் இல்லத்திற்கும் வழங்க வேண்டிய சேவைகளில் தினமும் பல ஊழல்களைச் செய்தான். ஊழலில் கிடைத்தவற்றைத் தன் சுகபோக வாழ்விற்குப் பயன்படுத்திக் கொண்டான். இல்லவாசிகள் அலிமான் தரும் வாக்குறுதிகளை உடனுக்குடன் மறந்துவிடுவதால், கவலையின்றி வாக்குறுதிகளைத் அள்ளிவீசிக் கொண்டிருந்தான். அலிமான் திறமையாக நடித்துக் கொண்டும் ஒன்றையே திரும்ப திரும்ப செய்துகொண்டும் காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தான். இல்லவாசிகளோ, அலிமானின் நேற்றைய தவறுகளையும் சேதங்களையும் மறந்துவிட்டுத் தினமும் அவனைக் கண்டு வியப்பவர்களாகவும் அவனது சேவைகளைப் புகழ்பவர்களாகவும் இருந்தனர்.
அலிமான் தனது சிரமங்களையும் தன் தொழிலையும் கூட மறந்துவிட்டான். இன்று அவன், தங்களது முந்தைய நாளை மறந்துவிடும் இல்லவாசிகளை நிர்வகிக்கும் சக்திவாய்ந்த நிர்வாகியாக நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், மூடநம்பிக்கை என்றும், பகுத்தறிவிற்கு எதிரானது என்றும் சொல்லப்படும் உடும்பு தோஷம் பற்றி அவ்வபோது சிந்திப்பதுண்டு.
மறதி நோயில் வாழும் இந்த இல்லவாசிகளின் மீதும் இந்த இல்லத்தின் மீதும் தான் இப்போது அதிகாரம் செலுத்துவதும் கூட பிற்காலத்தில் தனக்கும் இந்த இல்லத்திற்கும், இல்லவாசிகளுக்கும் ஏற்படப்போகும் ஒரு பெருந்தீமையின் முன்னறிவிப்புதானோ என்ற சந்தேகம் அவனுக்கு இருந்து கொண்டே இருக்கின்றது.
CENDENG BIAWAK
மலாய் மூலம்: எஸ். எம். ஷாகீர்/ S.M. Zakir
தமிழில்: அ. பாண்டியன்
மொழிபெயர்ப்புப் படைப்புகளில் மூலப் படைப்பாளிகள் பெயரை முதன்மையாக வெளியிடுவதுதான் முறை. மொழிபெயர்ப்பாளர் பெயருக்கு அடுத்த இடம்தான். தம்ப் நெய்லில், இருவர் பெயரையும் சேர்த்து வெளியிடுங்கள். ஒருவர் பெயர் மட்டுமே வெளியிட இயலுமெனில் மூலப் படைப்பாளி பெயரை வெளியிடுங்கள்.
மொழிபெயர்ப்புப் படைப்புகளில் மூலப் படைப்பாளிகள் பெயரை முதன்மையாக வெளியிடுவதுதான் முறை. மொழிபெயர்ப்பாளர் பெயருக்கு அடுத்த இடம்தான். தம்ப் நெய்லில், இருவர் பெயரையும் சேர்த்து வெளியிடுங்கள். ஒருவர் பெயர் மட்டுமே வெளியிட இயலுமெனில் மூலப் படைப்பாளி பெயரை வெளியிடுங்கள்.
– ஷாராஜ், பொள்ளாச்சி