மிருகம்

கோமதி என்ன சொல்கிறாள் என்பதே எனக்கு விளங்கவில்லை. அவள் கதறி அழுதபோது மூச்சுக்காற்று மிகையாகி ‘உய் உய்’ என்று கேட்டது. அவள் கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்தது. தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை அழுகையினூடே கொட்டித் தீர்த்தாள். அப்படியானால் அவள் போப்பியைத்தான் திட்டுகிறாள். போப்பியிடம் என்னையும் என்னிடம் போப்பியையும் கெட்ட வார்த்தையில் திட்டுவது அவள் வழக்கம்.

“என்ன ஆச்சு… கொஞ்சம் அழுகையை நிப்பாட்டிட்டுதான் சொல்லேன்!” என்றேன் பதற்றமாக.

“அந்த சனியன் பாப்பாவ கடிச்சிடுச்சி!” என்றாள். அடித்தொண்டையின் அத்தனை சக்தியையும் திரட்டிய ஓலம். தொண்டையில் விசுத்த சக்கரம் இருப்பதாகச் சொல்வார்கள். அது அவளுக்கு அப்போது சுழலத் தொடங்கியிருக்கலாம்.

அழைப்பைத் துண்டித்தாள்.

மீண்டும் நான் பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை. என்னைப் பைத்தியமாக்கிப் பார்ப்பதில் அவளுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. காதலித்த காலங்களில் இப்படிப் பல முறை செய்திருக்கிறாள். ஒரு முறை ‘எல்.ஆர்.டி’ ரயில் நிலையத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்றவளை ஒவ்வொரு நிறுத்தமாகத் தேடி, ‘டாமாய்’ நிலையத்தில் கண்டுப்பிடித்தபோது என் செருப்பில் ஒன்று எப்போது எங்கே விழுந்தது என்பதுகூட மறந்து போயிருந்தேன். என் சீரற்றத் தோற்றத்தைப் பார்த்த அவள், “ஒனக்கு எம்மேல எவ்வளோ லவ்வு!” எனக் கட்டிப்பிடித்தபோது என்னை நினைத்து எனக்கே பரிதாபமாக இருந்தது.

பாப்பாவுக்கு என்ன ஆனது எனத் தெரியாமல் மனம் தவித்தது.

“முட்டாள்…முட்டாள்…” எனக் கத்திக்கொண்டே கைப்பேசியால் மண்டையில் அடித்துக்கொண்டபோது மாணவர்கள் என்னை வெறித்துப் பார்த்தபடி இருந்தனர். அவசரமாக ஒரு பக்கத்தைப் புரட்டி, அதில் உள்ள பாடத்தைச் செய்யச் சொல்லிவிட்டு தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற அலுவலகத்தை நோக்கி ஓடினேன்.

“நா இப்ப எங்கதான் வரணும்?” என ஏழாவது முறையாகக் குரல் பதிவை அனுப்பியப் பிறகுதான் செலாயாங் மருத்துவமனையின் லொக்கேஷனை அனுப்பி வைத்தாள். ‘எமர்ஜன்ஸி வார்ட்’ எனக் குறிப்பிருந்தது. நான் அதற்குள் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையை நோக்கி ஏதோ ஒரு நம்பிக்கையில் வண்டியை விட்டிருந்தேன். அது ‘செலாயாங்’ மருத்துவமனைக்கு நேர் எதிர் சாலையில் உள்ளது.

கோபமும் பதற்றமும் உடலைப் பதற வைத்தது. கடுமையான சாலை நெரிசலும் வெயிலும் தலைவலியை ஏற்படுத்தியிருந்தது. மீண்டும் சில முறை அழைத்துப் பார்த்தேன். புலனம் ‘ஆன்லைன்’ எனக் காட்டியது. பிடிவாதமாக எடுக்க மறுத்தாள். காரை ஓட்டுவதில் நிதானம் பிடிபடவில்லை. யார் யாரோ கண்டித்து ஹாரனை அடித்தனர். ஒரு மோட்டார் ஓட்டி காரை மறித்து நிறுத்தி, “ஏம் பாங்… உட்டா பைக்க சாத்திடுவீங்க போல…” எனக் கத்தினான். பின்னர் என்னை உற்றுப்பார்த்தவன் “பாத்து ஓட்டுங்க பாங்!” எனச் சமாதானமாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

எனக்கு அவன் சொற்கள் மூளைக்கு வந்து சேரவே தாமதமானது. நான் அழுதுக் கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

பாப்பாவைப் போப்பி கடித்துவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

எங்கள் திருமணம் நடக்க ஒரு மாதம் இருக்கும்போதுதான் போப்பி இரண்டு மாதக் குட்டியாக அறிமுகமானான். கல்யாண பத்திரிகையை ஈப்போவில் உள்ள நண்பர்கள் வீட்டில் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது சடாரென சாலையில் நுழைந்தவனைப் பார்த்துக் காரை ஓரமாக நிறுத்தினேன். கருப்பன். நெஞ்சுப்பகுதியில் இருந்த வெண்மை நிறம் எச்சரித்திருக்காவிட்டால் காரை அவன் மேல் ஏற்றியிருக்கக் கூடும். நெருங்கிச் சென்றபோது ஓடாமல் வாலை ஆட்டினான். அடுத்து நடந்த சம்பவம்தான் என்னை நிலைகுழைய வைத்தது. என்னைக் கடந்து சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நான்கைந்து கார்களை இடித்துத் தள்ளி சாலையின் குறுக்காகச் சருக்கிக்கொண்டு விழுந்தது.

ஏதோ ஓர் ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பது போல என் கண் முன்னால் அந்தக் கோர விபத்து அத்தனை விரைவாக நடந்து முடிந்திருந்தது. நான் முன்னமே காரை நிறுத்தாமல் இருந்திருந்தால் அடிப்பட்டு நசுங்கிய கார்களில் என்னுடையதும் ஒன்றாக இருந்திருக்கும். நான் அவனைத் தூக்கியபோது பூனை போல குரல் எழுப்பி அழுதுக் கொண்டிருந்தான். நுனி நாக்கை வெளியே நீட்டியபடி பசிக்கிறது என்றவனைக் காரில் ஏற்றிக் கொண்டு வேறு பாதையை ‘வேஸி’டம் கேட்டு கோலாலம்பூருக்குக் கிளம்பி வந்துவிட்டேன்.

வழி நெடுக அவன் உடல் உதறிக் கொண்டே இருந்தது. என் கைக்குட்டையை விரித்து அவனுக்குப் போர்வையாகப் போர்த்தினேன். மீண்டும் மீண்டும் அந்த விபத்தைக் கற்பனைச் செய்து கொண்டே இருந்தேன். அதில் என் கார் நசுங்குவதையும் உடல் சிதைவுற்று சிதறுவதையும் கற்பனை செய்தபோது இருக்கையில் இயல்பாக அமர முடியவில்லை. ஒவ்வொரு உறுப்பும் அச்சத்தால் நடுங்கியது. என் பிணத்தின் முன் கோமதி அழுதுகொண்டிருப்பது தெளிவான காட்சியாக ஓடியது. அம்மாவும் அப்பாவும் உயிருடன் இருந்திருந்தால் அவர்களும் அந்தக் காட்சியில் இணைந்திருப்பார்கள். எனக்கென அழ கோமதி மட்டுமே இருப்பதை நான் அப்போதுதான் அறிந்தேன். அவள் மேல் ப்ரியம் உண்டானது. கோலாலம்பூர் வந்து சேரும் வரை போப்பியின் உடலை என் இடதுகை தடவிக் கொண்டே இருந்தது.

அன்று மாலையில் கடைசி நேர திருமண ஏற்பாடுகள் குறித்துப் பேச வீட்டுக்கு வந்த கோமதியிடம் “டொண்டடொய்ங்!” எனப் போப்பியைத் தூக்கிக் காட்டியபோது “ஆய்… நாய்க்குட்டி!” எனச் சந்தோஷமானவள் “என்னா பிரிட்?” என்றாள். நான் நடந்த சம்பவம் அனைத்தையும் சொன்னேன்.

“தெருநாய்!” என்றாள் எரிச்சலாக.

“ஒனக்கு நாயின்னா புடிக்குந்தானே… எப்பவும் கேட்டுக்குட்டே இருப்ப,” என்றேன்.

“எனக்கு என்னா நாயி புடிக்குமுன்னுகூட ஒனக்கு தெரியலயில்ல…” எனக் கத்தினாள்.

“நாயினா ஒனக்கு புடிக்கும்தானே,” என்றேன் மீண்டும் பரிதாபமாக.

“ஒனக்கு என்னையப்பத்தி ஒன்னுமே தெரியல,” என மீண்டும் கத்தினாள்.

“எல்லாமே நாயிதான…” என்றேன் குழப்பமாக.

“ச்சீ தெருநாய்!” என்றவள் வேகமாக வெளியேறி காரில் நுழைந்து கொண்டாள். ஒரு கையில் போப்பியை வைத்துக் கொண்டு அவள் காரின் கதவருகே நின்று நான் கெஞ்சிக் கொண்டிருந்ததைக் கிட்டத்தட்ட என் வீட்டு வரிசையில் உள்ள எல்லாருமே பார்த்தனர். நான் போதுமான அளவு அவமானம் அடைந்ததை உறுதி செய்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் வீட்டில் நுழைந்தாள். நான் அவள் பின்னாலேயே நாய்க்குட்டி போல ஓடினேன்.

“அது இல்லனா நா செத்திருப்பேன்!” என்றேன் பரிதாபமாக.

“சாகலயில்ல… அப்புறம் என்னா?” என்றாள். அதற்கு என்ன பதில் சொல்வதென எனக்குத் தெரியாததால் சூழலை மேலும் மோசமாக்க விரும்பாமல் போப்பியை அழைத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றேன்.

திருமணத்திற்கு முன் கோமதி இப்படி சில சமயங்களில் என்னுடன் தங்கியது உண்டு. அப்போதெல்லாம் நாங்கள் உறவு கொள்வோம். தடைசெய்யப்பட்ட சில வலைத்தளங்களிலிருந்து நான் கற்றுக்கொண்ட சாகசங்களை அன்று இரவு நிகழ்த்திப்பார்க்க வாய்ப்பில்லாமல் போனதுமட்டும்தான் எனக்கு வருத்தமாக இருந்தது.

போப்பி இரவு முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தான். வெளியில் தனியாக இருக்க அவனுக்குப் பயமாக இருந்ததால் வேறுவழியில்லாமல் வீட்டினுள் விட்டேன். “ரூம் பக்கம் வந்துச்சி… தூக்கி ரோட்டுலயே வீசிறுவேன்…” என கோமதி சொன்னதால் நான் சோப்பாவில் படுத்துக்கொண்டு என் கால்களுக்கு நடுவில் போப்பியைப் படுக்க வைத்துக் கொண்டேன். என் முகத்தைப் பார்த்துக்கொண்டே, போப்பி போர்வையில் படுத்துத் தூக்கிவிட்டான். குப்புற அடித்து படுக்கும் நான் அன்று பிணம் போல மல்லாந்து படுத்துக்கிடந்தேன். அடுத்தடுத்த நாட்களிலும் இது தொடர்ந்ததால், வாசலில் அவன் தனியாகப் படுக்க பழகுவதற்குள் நான் மல்லாந்து படுக்கப் பழகியிருந்தேன்.

எதிர்ப்பார்த்ததைவிட போப்பி வேகமாகவே வளர்ந்தான். ஆனால், கோமதிக்கும் போப்பிக்குமான பகை ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடிதான் இருந்தது. எங்களுக்குத் திருமணமான பின்னர் அப்பகை மேலும் தீவிரமானது. கோமதி கெட்ட வார்த்தை பேசுவாள் என்பதே போப்பி வருகையின் பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.

“பொம்பள பிள்ள மாதிரியா பேசுற?” எனக் கேட்டால், “அது நாயாட்டமா நடந்துக்குது!” எனப் பதிலுக்குக் கத்துவாள்.

“நாயின்னா உனக்கு எப்படிதான் நடந்துக்கணும்? நீ வேல முடிஞ்சி வீட்டுக்கு வந்தா தேத்தண்ணி கலக்கி கொடுத்து கால் அமுக்கி உடணுமா?” என ஒரு முறை கோபமாகவே கேட்டுவிட்டேன். உண்மையில் அவளிடம் நான் கோபமாகப் பேசிய தருணங்கள் மிகக் குறைவு. சண்டை முற்றி வாக்குவாதம் என வந்தால் கடைசியாக அவள் தரப்பே நியாயமானதாகவும் நான் கடும் அயோக்கியனாகவும் ஒரு சித்திரம் உருவாகும். பல சமயங்களில் அவள் சொற்கள் வழியாக உருவாகி வளரும் அந்தப் படுபாதகன் நானா என எனக்கே அச்சமாக இருக்கும். ஆனால், போப்பி விஷயத்தில் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவனைப் பார்க்கும்போதெல்லாம் செருப்பைத் தூக்கி அடிக்கும் அவளது வன்மமும் உறங்கிக் கொண்டிருப்பவன் மீது அவள் குடித்த மிச்ச நீரை ஊற்றி பதற்றத்துக்குள்ளாக்கும் குரூரமும் என்னை ஆத்திரப்படுத்தியது. எல்லாவற்றுக்கும் பிறகு போப்பி அவளைப் பார்த்து வாலை ஆட்டுவதுதான் ஏனென்று புரிவதில்லை.

என்னை அருகில் அமர வைத்து கைப்பேசியைத் திறந்தாள் கோமதி. ‘டிக்டோக்கில்’ அவள் தோழிகளின் நாய்கள் சிலவற்றைக் காட்டினாள். எல்லாமே வெளிநாட்டு ஜீவன்கள். ‘ஃபூடல்’, ‘கோல்டன் ரிட்ரிவர்’, ‘பீகல்’, ‘ஜெர்மன் செப்பர்ட்’, ‘ரோட் வில்லர்’, ‘ஹஸ்கி’ என ஒவ்வொன்றின் இனத்தையும் குறிப்பிட்டவள் அவை ஒவ்வொன்றும் செய்யும் சேஷ்டைகளைக் காட்டினாள்.

அவை தன் தோழிகளோடு அமர்ந்து படம் பார்ப்பதையும் மெத்தையில் உரிமையோடு படுத்துத் தூங்குவதையும் புல்வெளிகளில் ஓடி ஆடி பந்தைப் பிடித்து விளையாடுவதையும் பாடல்களைக் கேட்டு ஊளையிடுவதையும் குழந்தைகள் தன் மேல் ஏறி விளையாடுவதை முழுமையாக அனுமதிப்பதையும் ஆர்வமாகக் காட்டிக் காட்டி விளக்கினாள்.

“தோ… இது… இந்த ஃபூடல பாரேன்… சின்னதாவே இருக்கும். நாம எங்கயாச்சும் வெளிய போனா பேக்குலயே வச்சி தூக்கிக்கிலாம். இந்த பீகல் இருக்கே… இது டோக்குலயே ஹைப்பர் ஆக்டிவ்… செம்ம சுட்டி… ஒனக்கு தெரியுமா… கோல்டன் ரிட்ரிவர் பல வருஷமா அமெரிக்காவுல பெஸ்ட் செல்ஸ் டாக்ஸா இருக்கு. ஃபேமிலியோட அவ்வளோ அன்பா இருக்கும்… ரோட் வில்லரெல்லாம் வீட்டுல இருந்தா ஒரு திருட்டுப்பய வர முடியாது… நீ அத கூட்டிக்கிட்டு வெளிய நடந்துபோனா எவ்வளோ கெத்தா இருப்ப தெரியுமா?” கோமதி அடுக்கிக் கொண்டே போனாள். அவளுக்கு நாய்களென்றால் பிடிக்கும் எனத் தெரியும். இவ்வளவு தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பாள் என அன்றுதான் புரிந்துகொண்டேன்.

எனக்கும் அவற்றை பார்க்க ஆசையாகவே இருந்தது. சில நாய்கள் பஞ்சுபொதி போல இருந்தன. சிலவற்றின் கம்பீரத் தோற்றம் ஒரு வீட்டுக்கே கம்பீரத்தைச் சேர்க்கும் போல இருந்தது. சின்னஞ்சிறியதாக இருந்த நாய்கள் குழந்தைகளின் கொஞ்சலை நினைவூட்டின. எனக்கு நாய்களில் இத்தனை வகை உண்டு என்பதெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. மின்னும் அதன் உரோம உடலை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் லூனாஸ் கம்பத்தில் இருந்தபோது குரைப்பவை எல்லாமே நாய்கள்தான். யார் வீட்டு நாயும் நம் வீட்டு உயிர்தான்.

“நீ ‘ம்’முன்னு ஒரு வார்த்த சொல்லு… இப்பவே நல்ல பிரிட்டா நானே ஒன்னு வாங்கிடுறேன்,” என்றாள்.

“வாங்கலாம்… ஆனா போப்பி இப்பவே அதிகமா கொரைக்கிறான். அப்புறம் வீட்டுல பெரிய கலவரமே நடக்கும்,” என்றேன்.

“அது எதுக்கு… தெருவுலேருந்து வந்தத தெருவுலயே போயி விட்டுடு,” என்றாள் கோபமாக.

“மனசாட்சியோடதான் பேசுறியா… வயித்துல புள்ள இருக்கும்போது இப்படியெல்லாம் பேச வருமா ஒனக்கு,” என்றேன்.

“அதனாலதான் சொல்லுறேன். வயித்துல புள்ள இருக்கும்போது நான் சந்தோசமா இருக்க வேணாமா…” என மறுகேள்வி கேட்டாள்.

“ஏய்… அது இல்லனா இன்னிக்கு நான் இல்ல… இந்த பிள்ளையும் இல்ல…” என்ற அவள் வீங்கிய வயிற்றை அழுத்தமாகப் பார்த்தேன்.

“ஒன்னோட பிரச்சன என்னா தெரியுமா? நீ பக்கா தமில் வாத்தி. நீ ஊருக்குதான் பேண்ட் ஷர்ட் போடுற. மத்தபடி ஒனக்குள்ள இருக்குறது வேட்டி சட்டை போட்டுக்குட்டு எந்த மோடன் திங்கும் இல்லாத ஒரு கோலோட்,” என எச்சில் தெறிக்கக் கத்தினாள்.

என்னை ‘கோலோட்’ என அவள் பலமுறை திட்டியதுண்டு. என்னிடம் ‘ஃபேஸ்புக்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘டிக்டோக்’ இல்லை என்பதெல்லாம் அவளுக்குப் பெரும் குறை. அவள் போடும் வீடியோக்களையும் படங்களையும் நான் பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை லைக் போடுவதில்லை எனும் சண்டையெல்லாம் போட்டுப் போட்டு சலித்துவிட்டது.

“நன்றியுணர்ச்சியோட இருக்குறது தப்பா?” என்றேன்.

“ஒன்னோட நன்றியுணர்ச்சி என்னோட சந்தோசத்த கெடுக்குதுங்கறது ஏன் ஒனக்குப் புரியவே மாட்டேங்குது,”

“போப்பியோட வெளையாடு… அன்பா இரு… மனசு சந்தோசமா இருக்கும். அவனுக்கு உன்னைய எவ்வளோ புடிக்கும் தெரியுமா?” என்றேன் சமாதானமாக.

“வெளையாடுறதா… அந்தச் சனியங்கிட்ட என்னா வெளையாடுறது? அதுக்கு என்னா புரியும்? வெறும் நாயி அது. ரோட்டுல என்ன ஏதுன்னு தெரியாம ஆளுங்கள கடிச்சி வைக்குமே அந்த மாதிரி மிருக குணம் மாறாத நாயி. அதுக்கு எதுவும் புரியாது. என்னா சொன்னாலும் புரியாது… ஒன்னைய மாதிரி அதுவும் ஒரு முட்டாள்,” எனக் கத்திக்கொண்டே வழக்கம் போல அறை கதவைச் படாரென சாற்றிக் கொண்டாள். நான் அமைதியாக இருந்துவிட்டேன். மேலும் அவள் சொல்வதில் அப்படி ஒன்றும் தவறு இல்லை என்றே எனக்கும் தோன்றியது.

போப்பி வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதம் நெருங்கிவிட்ட சூழலில் இதுவரை நான் சொல்லிக்கொடுத்தபடி எதையுமே அவன் செய்ததில்லை. விரும்பிய இடங்களில் மூத்திரம் பெய்து வைப்பான். கோமதி வாசலில் நட்டுவைத்த எல்லா செடிகளையும் கடித்துக் கிளைகளை ஒடித்துவிட்டான். அவன் கிழித்ததில் நான் இதோடு மூன்றாவது ஜோடி காலணிகள் வாங்கிவிட்டேன். நானும் அவனைப் பண்படுத்த எவ்வளவோ முயற்சிகள் செய்துவிட்டேன். ஒரு முறை வீட்டில் கோமதி இல்லாதபோது அவன் கண்பட வாசலின் ஓரமாக நின்று மூத்திரம் பெய்துகூட காட்டிவிட்டேன். என் குறியைத் தலையைச் சாய்த்துப் பார்த்துக் குரைத்ததோடு சரி.

போப்பிக்கு எதுவுமே புரிவதில்லை.

வேறு வழியில்லாமல் கோமதியின் கத்தலுக்குப் பயந்து அஞ்சடியைக் கழுவும் பொறுப்பை நானே எடுத்துக் கொண்டேன். அதற்காகக் காலையில் சற்றுச் சீக்கிரமே எழ வேண்டியிருந்தது என்றாலும் வேறு வழியில்லை. கோமதி காலை ஆறு மணிக்கெல்லாம் சாமி அறையில் விளக்கு ஏற்றுவாள். அப்போது வாசல் சுத்தமாக இருக்க வேண்டும் அவளுக்கு. இல்லாவிட்டால் அபிஷேகம் எனக்கு நடக்கும்.

அதிகாலை இருளில் போப்பியின் நெஞ்சுப்பகுதியில் உள்ள வெண்மைதான் அதன் இருப்பை அடையாளம் காட்டும். இருளில் அவ்வெண்மை இதய வடிவில் ஒளிரும். நாக்கை நீட்டிக் கொண்டு வாலாட்டியபடி துள்ளிக்குதிக்கும் போப்பியின் உற்சாகத்தால் உறக்கம் பறந்துவிடுவதுண்டு. தன் நாவால் நக்கி நக்கியே என் சோர்வையும் தூக்கத்தையும் தின்று தீர்ப்பான். எப்படி அவனால் தன் உடலைத் தரையில் துடிக்கும் மீன் போல அத்தனை வேகமாக ஒடித்து ஒடித்து ஆட்ட முடிகிறது என்பது எனக்கு வியப்பாக இருக்கும்.

அவனது உற்சாகமெல்லாம் வீட்டு எல்லையில் இருக்கும்போது மட்டும்தான். அவனைக் கிளினிக் அழைத்துச் சென்று முறையாக ஊசி போடுவது பெரும் சவாலாக இருந்தது எனக்கு. மூன்று தடுப்பூசிகள் போட்டப்பிறகுதான் நாய் வளர்க்கும் அனுமதி சான்றிதழை நகராண்மைக்கழகம் கொடுக்கும் என்பதால் வேறு வழியும் தெரியவில்லை. காரின் உள்ளே தூக்கிச் சென்றாலே ஏதோ பிணப்பெட்டியில் போட்டு உயிரோடு அடைப்பது போல திமிரிக் கொண்டு ஓடினான் போப்பி. சங்கிலியில் மாட்டி இழுத்தால் முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி வரவே மாட்டேன் என அடம்பிடித்தான். ஒரு முறை கஷ்டப்பட்டு காரில் ஏற்றியபோது கிளினிக் அடையும் முன்னரே கார் சீட்டில் சில இடங்களில் மூத்திரம் பெய்து வைத்தான். சென்று சேரும் வரை நிலைகொள்ளாமல் தவித்ததில் எல்லா இடங்களிலும் எச்சில் தெறித்திருந்தது. கிளினிக் சென்று கதவைத் திறந்தபோது துள்ளிக்கொண்டு என் மீது பாய்ந்தவன் இனி மேல் காரினுள் நுழையவே மாட்டேன் எனக் குரைத்தான்.

கிளினிக் வரும் எந்த நாயும் இன்னொரு நாயைப் பார்த்து குரைப்பதில்லை. அவை சமூக ஒழுக்கங்களை அறிந்தவையாக இருந்தன. போப்பி மட்டும் எந்த நாயை எதிர்க்கொண்டாலும் குரைத்தான். உடனே அதனை சண்டைக்கு அழைத்தான். அப்போதுதான் அவனுக்குப் பேழவும் வரும். ஒரு முறை அவன் அப்படிச் செய்தபோது “நீங்களே அள்ளிடுங்க சார்… இன்னைக்கு கிளினர் வரல” என அங்கு பணியாற்றும் பெண் சொல்லிவிட்டாள். போப்பியை மல்லுக்கட்டி தூக்கிக்கொண்டுச் சென்று காரில் விட்டுவிட்டு மீண்டும் கிளினிக்கில் நுழைந்தபோது அத்தனை கண்களும் என்னைக் குற்றவாளியாகவே பார்த்தன.

ஒரு வழியாக கொடுத்த காகிதத்தில் மலத்தை அள்ளி வீசிவிட்டு என் முறை வரும் வரை வெளியவே காத்திருந்தேன். போப்பி கண்ணாடிக்கு மறுபுறம் தெரிந்த நாய்களைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருந்தான். தொடர்ந்து அவன் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்ததில் எனக்கும் காதுக்குள் ‘ஙொய்’ எனும் சத்தம் எழுந்தபடியே இருந்தது.

டாக்டரிடம் காட்டும்போது பெரும்பாலும் போப்பியைத் தூக்கிக்கொண்டே சென்று விடுவேன். ஊசி போட உயரமான தளத்தில் படுக்க வைத்தாலும் தாவி குதிக்கத் துடிப்பான். தொடையருகே ஊசியை எடுத்துப்போகும் டாக்டரின் கையைப் பார்த்து பற்களைக் காட்டியதால் வாய்க்குக் கவசம் போட வேண்டியதாகிப் போனது.

எனக்குப் போப்பியின் குணங்கள் வினோதமாகவே இருந்தன. நானும் நாய்களை வளர்ப்பது குறித்த ‘யூடியூப்’ தளங்களைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். அதில் வரும் நாய்கள் காரில் அமர்ந்து ஊர் சுற்றுவது, எஜமானனுக்கு அடங்கி பொறுமையாக உடன் வருவது, கட்டளையிடும்வரை சாப்பிடாமல் காத்திருப்பது, வெளியிடங்களில் கண்ணியம் தவறாமல் நடந்துகொள்வது என ஆச்சரியப்படுத்தின. எல்லாமே வெளிநாட்டு உயர்ரக நாய்கள். சில சமயம் கோமதி சொன்னது எத்தனை சரி எனத் தோன்றுவதும் உண்டு.

இது எந்த நாகரீகமும் அடையாத வெறும் மிருகம் மட்டும்தானா எனும் எண்ணம் வரும்போதெல்லாம் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்புவேன். போப்பி அவனாக விரும்பி என்னிடம் வரவில்லை. நான்தானே எடுத்து வந்தேன் எனச் சமாதானம் செய்து கொள்வேன். எனது எந்தக் குழப்பத்திற்கும் பெரும்பாலும் பதில் கிடைப்பதில்லை. ஆனால், அவன் என் உயிரைக் காத்ததை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சில் ஈரம் நிறையும்.

போப்பி சார்ந்த அத்தனை பொறுப்புகளையும் நான் ஒருவனே செய்வதாக இருந்தது. வாரம் ஒரு முறை குளிப்பாட்டுவது, வாக்கிங் அழைத்துச் செல்வது, வாசல் கழுவுவது, மலம் அள்ளுவது, அவனுடன் விளையாடுவது என எனது ஓய்வு நேரங்கள் முழுவதையும் அவனுக்கே கொடுத்தேன். ஆனால், மற்ற நேரங்களில் வாஞ்சையாக இருக்கும் அவன், சாலையில் ஓர் அந்நியர் கடந்தாலும் மூர்க்கமாகிக் குரைக்கத் தொடங்குவான். புதியவர் என யார் எப்போது வந்தாலும் அவனுக்குப் பொறுப்பதில்லை. இரவெல்லாம் எதையாவது பார்த்துக் குரைத்துக் கொண்டே இருப்பான்.

அவன் குரைப்பது பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தொல்லையாக இருப்பதாக இரண்டு மூன்று முறை என்னிடம் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டனர். நான் நகராண்மை கழகத்திடம் நாய் வளர்க்கப் பெற்றுள்ள சான்றிதழைக் காட்டி அவர்கள் வாயை அடைத்துவிடுவேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்னைத் திட்டும்போதெல்லாம் கோமதியின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி பொங்கும்.

“தெருநாயில்ல… அதான் தெருவுக்கே ஜாகா இருக்கு…” என அவள் கிண்டலாகச் சொல்லும்போதெல்லாம் அவன் வளர வளர எல்லாம் சரியாகும் என நினைத்துக்கொள்வேன்.

ஆனால், கோமதியின் பெற்றோர் ஜொகூரில் இருந்து மகளைப் பார்க்க வந்தபோது நிலை மேலும் மோசமானது. அவர்கள் வாசலில் நின்றபடி “எப்படிடாம்மா இருக்க…” எனக் கண்ணீர் மல்க கேட்கத் தொடங்கியது முதல் மறுநாள் “பாத்துக்கடாம்மா” எனச் சொல்லி வெளியேறும் வரை பின்னணி இசை போல போப்பியின் குரைப்பு ஒலித்துக் கொண்டே இருந்தது. அவனே சலித்து ஓய்வான் எனப் பார்த்தால் குரல் உடைந்து கீச்சாகும் வரை நள்ளிரவைத் தாண்டியும் வீட்டைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் நானும் பொறுமை இழந்து ஒரு ரோத்தானை ஓங்கிக் கொண்டு அடிக்கச் சென்றபோது கோரப் பற்களைக் காட்டி என்னையே கடிக்கப் பாய்ந்தான்.

நான் அன்று உண்மையில் உடைந்து வாசல் படிக்கட்டில் அமர்ந்துவிட்டேன். ஏதோ வாழ்க்கையில் பெரிய தவறு செய்துவிட்டதைப் போல அப்போது உணர்ந்தேன்.

இரவெல்லாம் குரைத்ததில் மறுநாள் காலையில் சோர்ந்துபோய் படுத்திருந்த போப்பி, புறப்பட்டுச் செல்லும் கோமதியின் பெற்றோரைப் பார்த்து எஞ்சிய சக்தியைத் திரட்டிக் கொண்டு குரைத்தபோது அவள் அம்மா தலையில் அடித்துக் கொண்டாள். கோமதியின் அப்பாவுக்கு அவன் குரைப்பு தலைவலியை ஏற்படுத்துவதாகக் கூறி, வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். கோமதி என்னிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டதும் அதன் பிறகுதான். பெரும்பாலும் புலனத்தில் தகவல்களை அனுப்பிவிடுவாள். போப்பி இரவெல்லாம் குரைப்பதால் தன் தூக்கம் கெடுவதாகவும் அதன் குரைப்பைக் கேட்டுப் பிறக்கும் பிள்ளை புத்தி பேதலித்துதான் இருக்கும் என்றும் அதனால், தான் பிறந்த வீட்டுக்குச் செல்வதாக அவள் அனுப்பிய புலனச் செய்தியைப் படித்தபோது எனக்குப் போப்பியின் மேல் கடும் கோபம் வந்தது.

வீட்டுக்குச் சென்ற வேகத்தில் காலணியைக் கலற்றியபடியே “அப்புடி என்னாதான் ஒங் கண்ணுக்கு மட்டும் ராத்திரியெல்லாம் தெரியுது…” எனக் கத்தினேன். என்னைப் பார்த்து வாலாட்டியவன் மேல் கழற்றிய காலணியைத் தூக்கி அடித்தேன். இரண்டுமே குறி தவறிதான் பட்டது. போப்பி வாலைச் சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் சென்று சுருண்டு அமர்ந்து கொண்டான்.

கோமதி ஆறு மாதக் கற்பினியாக இருக்கும்போதே அவள் அப்பாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். ஒரு வகையில் எனக்கும் அது நல்ல முடிவாகவே தோன்றியது. எனக்கு அவள் மன நிம்மதி முக்கியம். பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம். காரில் தனியாகப் புறப்படுகிறேன் என்றவளின் காலில் விழுந்து கெஞ்சி நானே அழைத்துச் சென்றுவிட்டு வந்தேன்.

கோமதி இல்லாத சில மாதங்கள் அன்றாடம் இரவில் நான் போப்பியிடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் மேல் நான் வைத்துள்ள அன்பைப் புரிய வைக்க முயன்றேன். அவனுக்கு ஒரு தங்கை வரப்போகிறாள் என்றேன். இப்படிக் குரைப்பது அவளைப் பயமுறுத்தும் என்றேன். சில சமயம் அவனிடம் உணர்ச்சி பொங்க அழவும் செய்தேன். எல்லாவற்றையும் தாடை தரையில் பதிய படுத்தபடி கேட்டுக் கொண்டிருப்பான். எவ்வளவு தடவிக் கொடுத்தாலும் நிறைவில்லாமல் பெற்றுக்கொள்வான். கண்களில் குற்ற உணர்ச்சி தெரியும்.

கோமதியுடன் என் மகளை அழைத்துக் கொண்டு வீட்டில் நுழைந்தபோது போப்பி மௌனமாக இருப்பதைக் கோமதி கொஞ்ச நேரம் ஆச்சரியமாகத்தான் பார்த்தாள். கம்பியைக் கண்ணாடியில் கீறியதைப் போன்ற கீச்சிடும் குரலில் முணகியவன், கட்டிப்போட்ட இடத்திலேயே ஆர்வம் தாங்காமல் இரண்டு காலில் நின்று எங்களை அருகில் அழைத்தான்.

“இப்பல்லாம் அனாவசியமா கொரைக்கரது இல்ல,” என்றேன் உற்சாகமாக. கோமதிக்கு என் மேல் கோபம் குறைந்திருந்தது. நான்கு மாதப் பிரிவு எங்களிடையே நெருக்கத்தைக் கூட்டியது போல உணர்ந்தேன். ஆனால், அன்று இரவே போப்பி வேலையைக் காட்ட ஆரம்பித்தான். பாப்பாவின் அழுகை சத்தம் கேட்டாலே காதுகளை விடைத்துக்கொண்டு வீட்டை நோக்கி குரைக்க ஆரம்பித்தான். ஏதோ சரியில்லை என்பது போல அத்தனை புலன்களையும் விடைத்துக் கொண்டு வீட்டையே பார்த்து நின்றான்.

“நா சொல்லல… அது எதுவுமே புரியாத முட்டாள்… உன்னைப் போல,” என்றாள் கோமதி.

நான் உடனே போப்பியை வாக்கிங் அழைத்துச் சென்றேன். பாப்பா அழும்போதெல்லாம் இப்படி போப்பியை வாக்கிங் அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

வயது ஏற ஏற போப்பி கொஞ்சம் பக்குவமாகி விட்டதைப் போலத்தான் தோன்றியது. முதலில் எல்லாம் பெட்டை நாய்கள் போல இரண்டு கால்களையும் மடக்கி மூத்திரம் போனவன் ஒரு வயதைக் கடந்தபோது ஒரு காலைத் தூக்கி பெய்யத் தொடங்கியிருந்தான். செடிகளைக் கடிப்பதில்லை. காலணிக்காக நான் தனியாக ஒரு பெட்டி வாங்கியிருந்ததால் அதில் மூத்திரம் பெய்து அடையாளம் வைப்பதோடு நிறுத்திக் கொண்டான். தீபாவளி, சீனப்புத்தாண்டு, நோன்பு பெருநாள் காலங்களில் வெடிக்கும் பட்டாசு சத்தத்திற்கு மட்டும் குரைத்தான். அவன் குரலில் ஆண்மை கூடியிருந்ததால் குரலில் கம்பீரம் இருந்தது. கண் விழிகள் கறுமையில் இருந்து பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. போப்பி இளைஞனாகி விட்டான் எனத் தெரிந்தது. எனவே, இளைஞனுக்குரிய முதிர்ச்சியோடு நடந்து கொண்டான்.

கோமதிக்குப் போப்பியின் மேல் இருந்த கோபம் பெரும்பாலும் குறைந்துவிட்டதைப் போலதான் தோன்றியது. குழந்தை பிறந்த பின்னர் அவள் வேலை செய்த ஏற்றுமதி நிறுவனத்தில் நீண்ட விடுப்பு எடுத்தவள் பின்னர் நிரந்தமாக வேலையை விட்டிருந்தாள்.

நான் அவள் முடிவுகள் எதிலும் தலையிடுவதில்லை. குழந்தை வளர்ப்பு குறித்து எனக்கு அப்படி ஒன்றும் தெரியாது. பாப்பாவைத் தலைக்கு மேல் தூக்கி மகிழ்ச்சிப்படுத்துவது, சாப்பாடு ஊட்டும்போது பாட்டுப் பாடுவது, தொட்டிலை ஆட்டுவது, ‘யூடியூப்பில்’ குழந்தை பாடல்களைப் போட்டுக் காட்டுவது எனச் சிலவற்றைச் செய்வேன். கோமதிதான் பாப்பாவைப் பார்த்துப் பார்த்து வளர்த்தாள். இணையத்தில் எதையெதையோ தேடி வாசித்தாள். தோழிகளிடம் குழந்தை வளர்ப்பு குறித்தே அதிகம் பேசினாள். எனவே, குழந்தை வளர்ப்பில் நான் கோமதி கிழிக்கும் கோட்டைத் தாண்டுவதில்லை.

அப்படி கோமதி விதித்த முதல் கட்டளையே எந்தக் காரணத்தைக் கொண்டும் போப்பி வீட்டுக்குள் நுழையக்கூடாது என்பதுதான். அது போல பாப்பாவை ஒருபோதும் போப்பியிடம் நெருங்க விடக்கூடாது எனத் திட்டவட்டமாகச் சொல்லியிருந்தாள்.

போப்பியின் உரோமம் பாப்பாவுக்குத் தோல் நோய்கள் வரக் காரணமாக இருக்கலாம் என்றும் அதன் எச்சிலில் உள்ள கிருமிகள் நோய்களை ஏற்படுத்தலாம் என்றும் அவள் கண்டுப்பிடித்திருந்தாள். அவள் முன்னர் காட்டிய காணொளிகளில் நாய்கள் குழந்தைகளின் கொஞ்சிக் கொண்டிருந்த காட்சிகள் நினைவில் இருந்தாலும் அது குறித்து அவளிடம் கேட்கவில்லை. அவள் கொடுக்கப்போகும் விளக்கத்துக்குப் பின் அடையப்போகும் மன உளைச்சலுக்குப் பதிலாக மௌனமாகவே இருப்பது மேலெனும் மன நிலையை அடைந்திருந்தேன்.

ஆனால், கோமதியின் கட்டளைகளை ரகசியமாக மீறுவதில் எனக்கு ஓர் ஆர்வம் இருக்கவே செய்தது. பாப்பாவும் நானும் தனியாக இருப்பது கோமதி குளிக்கும்போது மட்டும்தான். அப்போது மட்டும் பாப்பாவைத் தூக்கிச் சென்று போப்பியிடம் காட்டிவிட்டு வருவேன்.

“பாத்தியா தங்கச்சிய!” என்பேன். போப்பி கனிவுடன் பாப்பாவைப் பார்ப்பான். வாலை ஆட்டுவான். நாக்கை நீட்டியுள்ள அவன் முகத்தைப் பார்க்க சிரிப்பது போல இருக்கும். எவ்வளவு நேரம் பாப்பாவைக் காட்டிக்கொண்டிருந்தாலும் அவன் ஆர்வம் குறைவதே இல்லை. பாப்பாவுக்கும் போப்பியை அருகில் பார்ப்பதில் அத்தனை ஆனந்தம். குதூகலித்துச் சிரிப்பாள். விடைபெறும்போது மென்மையாக ‘வொள்’ என்பான் போப்பி. அது வேறு விதமான ‘வொள்’. பாப்பாவும் பதிலுக்குக் கண்களை இமிட்டிச் சிரிப்பாள்.

பாப்பாவும் போப்பியின் மீது வெறுப்புடன் வளரக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். பாப்பாவிடம் போப்பி காட்டக்கூடிய அன்பால் மட்டுமே கோமதியின் மன நிலையை மாற்றமுடியும் என நம்பினேன். அவள் முட்டிப்போடத் தொடங்கியப் பிறகு வாசல் இரும்புக் கதவின் இடைவெளியில் போப்பியைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதும் மழலையாய் அதனிடம் பேசுவதும் என் நம்பிக்கையை அதிகரித்திருந்தது.

எல்லாமே கோமதியில் ஓர் அழைப்பால் நொறுங்கியிருந்தன.

செலாயாங் மருத்துவமனையின் அவசர பிரிவில் நுழைந்தபோது வியர்வையில் முற்றிலுமாக நனைந்திருந்தேன். உடலில் எங்காவது பெட்ரோல் ஊற்றியிருந்தால் கோமதி என்னைப் பார்த்த பார்வையில் அங்கேயே அப்போதே எரித்திருக்கக் கூடும்.

பாப்பா மயக்கத்தில் இருந்தாள். தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டிருந்தது. கண், மூக்கு, வாயில் எந்தக் காயமும் இல்லை. அவளது சின்னஞ் சிறிய கையில் ஊசியேற்றி மருந்து செலுத்திக் கொண்டிருந்தனர். முகத்தில் செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. என்னால் அந்தக் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. உடல் மொத்தமும் துக்கத்தால் அழுத்த அங்கேயே அப்படியே அமர்ந்து கதறி அழ வேண்டும் போல தோன்றியது.

கோமதியிடம் எதை கேட்டாலும் முறையான பதில் வராது என்பதால் அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் நிலையை விசாரித்தேன். கடி ஆழமில்லை. ஆனால் இடது காதின் மடல் சேதமடைந்துள்ளது. காதை ஒட்டிய கன்னப்பகுதியில் சிறு கிழிச்சல். தையல் போட்டிருந்தனர். கிருமி தாக்கம் இல்லாமல் இருக்க ‘ஆன்டிபயடிக்’ ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. நிலை ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதால் இரவில் வார்ட்டுக்கு அனுப்பி விடுவோம் என்றனர். காதை மீண்டும் சீரான வடிவத்திற்குக் கொண்டுவர பிளாஸ்டிக் சார்ஜரி போன்ற மருத்துவமுறைகளைப் பின்னர் ஆலோசிக்கலாம் என்றனர்.

நான் ஒன்றும் சொல்லாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதைப் பார்த்த கோமதி பின்னாலேயே வந்தாள்.

“காருக்குப் போகணும்!” என்றாள்.

“நீ ஏன் கேட்ட பூட்டாம சமைக்கப் போன… பூட்டியிருந்தா பாப்பா வெளிய போயிருக்காதுல்ல…” என்றேன். இதை கோபமாகச் சொல்லத் தொடங்கி கெஞ்சலாக முடித்தேன்.

“காருக்குப் போகணும்!” என்றாள் மீண்டும் அழுத்தமாக.

நான் ஒன்றும் சொல்லாமல் நடக்கவும் என்னைப் பின் தொடர்ந்தாள். அவளது ஒவ்வொரு அடியும் எனக்குத் தெளிவாகக் கேட்டது. பூமியில் அத்தனை அழுத்தமாகப் பாதங்களைப் பதிக்கிறாளா என என்னை நானே கேட்டுக் கொண்டேன். பாண்டியனிடம் நீதி கேட்க கண்ணகி அப்படித்தான் நடந்திருப்பாள் என எனக்கு அப்போது தோன்றியது.

காரின் கதவை இழுத்துச் சாத்தியவள் ஓங்கி எனக்கு ஓர் அறை விட்டாள். பின்னர் தன்னைத் தானே பளார் பளார் என அறைந்து கொண்டவள் காரின் கண்ணாடியில் மண்டையை முட்டிக் கொண்டு அழுதாள். எனக்கு அவள் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனம் போல இருந்தது. ஆங்காரமாக இருந்த அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன்.

“நீயெல்லாம் ஒரு அப்பன்!” என என் முகத்தில் காறி துப்பியவள், தன் கைகளை விடுவித்துக்கொண்டாள்.

“நீ மட்டும் கேட்ட பூட்டியிருந்தா…”

நான் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் தன் தலையைப் பலமாக அடித்துக்கொள்ளத் தொடங்கினாள். “அது வெறும் மிருகம்… அதுக்கு எதுவும் புரியாதுன்னு ஆயிரம் தடவ சொன்னனே…” என அடித்தொண்டையில் அழுதாள்.

நான் மேற்கொண்டு ஒன்றும் பேச முடியாமல் மௌனமானேன்.

“இந்தா பாரு… நா வீட்டுக்கு வரும்போது அது இருந்துச்சி இனிமே ஒனக்கு பொண்டாட்டியும் இல்ல புள்ளையும் இல்லன்னு நெனச்சிக்க. வீட்ட உட்டு போவும்போது சும்மா போவ மாட்டேன்… மண்ணெண்ணெய அதுமேல ஊத்தி உசுறோட கொழுத்தி உட்டுட்டுதான் போவேன்,” என்றவள் காரின் கதவை டமார் எனத் திறந்து, மடார் ஏனச் சாத்தினாள். நான் இறங்கி சமாதானம் செய்வதற்குள் விடுவிடுவென கூட்டத்துடன் கலந்தே விட்டாள்.

நான் காரை எடுக்கவே சில மணி நேரம் ஆகியிருக்கும். எதையெதையோ நினைத்துக்கொண்டு எஞ்சினைக் கூட முடுக்காமல் அமர்ந்திருந்ததில் மூச்சு முட்டியது; உடல் தொப்பலாகிக் கிடந்தது.

வீட்டுக்குச் சென்று சேர்ந்தபோது வீடே இருண்டு கிடந்தது. காரின் எஞ்சினை நிறுத்தாமல் வாசலில் படுத்திருக்கும் போப்பியையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் கார் சத்தம் கேட்டதும் உற்சாகத்தால் துள்ளி வந்து வாசல் கதவை தன் இரு கால்களால் அடிப்பவன் இப்போது இறந்தவனைப் போல படுத்துக் கிடந்தான்.

காரின் பின் கதவைத் திறந்து வைத்தேன். அவனைக் கட்டி, தரதரவென இழுத்துவந்து காருக்குள் வீச வேண்டும்போல இருந்தது. வாசல் கதவு திறக்கும் சத்தத்தில்கூட திரும்பாத அவனை நோக்கிச் சென்றேன். மூச்சு விடுவதில் வயிறு ஏறி இறங்குவது தெரிந்தது. காலையில் நான் அவனுக்கு வைத்துச் சென்ற உணவில் ஈக்களின் கூச்சல் சத்தம் கேட்டது.

“எந்த நாயும் சாப்பிடும்போது, தன்னுடைய சாப்பாட்டில் அடுத்தவர்கள் கை வைத்தால் அது கோபமடையும். என்னதான் நீங்கள் வளர்த்தாலும் அதனுடைய ஆதி உணர்ச்சிதான் முதலில் செயல்படும். உங்கள் மகள் அதனுடைய சாப்பாட்டைத் தொட்டிருக்கக் கூடாது. இது ஒரு விபத்து…” மருத்துவர் மலாயில் சொன்ன சமாதானங்களை யோசித்துக் கொண்டிருந்தேன்.

சூழ்ந்திருந்த இருட்டில் அதன் சங்கிலியைத் தேடி எடுத்தபோது போப்பி தட்டுத்தடுமாறி எழுந்தான். என் முகத்தைப் பார்க்க மறுத்தான். காலையில் இருந்து தண்ணீர் கூட குடிக்கவில்லை என்பதை அதன் குடுவையைப் பார்த்த பின்னர் அறிந்தேன். போப்பியைப் பார்க்க என்னவோ போல இருந்தான். அவனை நெருங்கி கழுத்தில் சங்கிலியைப் பிணைக்கவே கொஞ்சம் தயக்கமாக இருந்தது. உண்மையில் அவன் போப்பிதானா இல்லை ஏதோ ஒரு நாய் அங்கு நிற்கிறதா என்றுகூட எனக்கு ஒரு நிமிடம் சந்தேகம் வந்து மறைந்தது. ஒரே நாளில் அவன் வேறொருவனாகத் தெரிந்தான். நான் சங்கிலியை அவன் கழுத்தில் பிணைத்தபோது எந்த மறுப்பும் இல்லாமல் என்னைப் பின் தொடர்ந்தவன் திறந்திருந்த காரின் பின் கதவு வழியாக ஏறி சீட்டில் அமர்ந்து கொண்டான்.

நான் காரை எடுத்துக்கொண்டு அன்றிரவு எங்கெங்கோ சுற்றினேன். ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் நுழைந்து இன்னொரு நெடுஞ்சாலைக்குள் சென்றேன். கடைசியாகக் கோல சிலாங்கூர் சாலையில் சென்றுக் கொண்டிருப்பதை அங்குள்ள அறிவிப்புப் பலகைதான் உணர்த்தியது. அங்கிருந்து ஏதாவது புற நகரை நோக்கிச் செல்லலாம் எனக் காரை தீவிரப்படுத்தினேன்.

இரு பக்கமும் மாட்டுப் புற்கள் வளர்ந்திருந்த காட்டுப் பாதையில் நுழைந்தபோது அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கை கால்களில் உதறல் எடுத்தது. காரை வழியிலேயே நிறுத்தி, “இதுக்கு என்னைய அன்னைக்கே சாவ உட்டுருக்கலாமே” என வெறி கொண்டவன் போல போப்பியைப் பார்த்துக் கத்தினேன். பின்னர் காரின் எஞ்சினை நிறுத்தாமல் அங்கேயே இறங்கினேன். இப்படியே இந்த இருளில் எங்காவது ஓடித் தொலைய வேண்டும் போல இருந்தது.

பாப்பாவை நினைக்கும்போது மனமெல்லாம் வெம்பியது. எப்படியெல்லாம் வலியில் துடித்திருப்பாள்.

மனதில் மீண்டும் மூர்க்கம் புகுந்துகொண்டபோது கதவைத் திறந்தேன். இறங்க மறுத்தால் ஏதாவது கம்பை எடுத்து ஓங்கி அடிக்க வேண்டுமென எண்ணியபோது உடல் முறுக்கிக்கொண்டது.

போப்பி ஏக்கமாக என்னைப் பார்த்தான். காரில் இருந்து மெல்ல இறங்கினான். அவன் அப்படி இறங்குபவன் அல்ல என்பதால் நான் அக்கணம் அவனை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவன் மிகப் பொறுமையாக எதிரில் விரிந்துகிடக்கும் இருளை நோக்கி நடக்கத் தொடங்கியபோது மேற்கொண்டு என்ன செய்வதெனத் தெரியவில்லை. கார் விளக்கின் வீச்சைக் கடந்து அவன் மெல்ல இருளில் கலந்தான்.

நான் அந்த இருளையே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் வெண்ணிற இதயம் ஒன்று, ஒரு வினாடி அவ்விருளில் தோன்றி மீண்டும் மறைந்தபோது தரையில் அப்படியே அமர்ந்து கதறியழத் தொடங்கினேன்.

10 comments for “மிருகம்

  1. நலவேந்தன் வே.ம.அருச்சுணன்
    May 1, 2024 at 7:03 am

    செல்லப்பிராணிகளை வளர்பவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் சில எதிர்பாப்புகளும் இக்கதை மிக தெளிவாக சொல்கிறது.

    கோமதியின் ஆங்காரத்திற்க்கும் அவளது ( முட்டாள் ) கணவரின் நன்றி உணர்வுக்கும் இடையெ சிக்கித் தவிக்கிறான் போப்பி.

    தங்களின் குற்ற உணர்ச்சியினால் நிலை குழைந்த மனங்களின் நிலையில்லா வலியோடு கதை முடிகிறது.

  2. லதா
    May 2, 2024 at 12:20 am

    கச்சிதமாக எழுதப்பட்டுள்ள கதை. நவீனின் சிறந்த கதைகளில் ஒன்று.

    மனித உணர்வுகள், அதன் ஆதி குணத்தைத் தீண்டும்போது, தான், தனது என்றே நினைக்கிறது. பாசாங்குகள் அறுபட்டுப் போகின்றன.
    ஆதி குணத்திலேயே பாசாங்கற்று வாழும் மிருங்களின் தூய அன்பும் வேதனையும் தற்காப்பும் குற்றவுணர்வும் சமரசமற்றதாக உள்ளன. அவை சமாதானங்களைக் கோருவதில்லை. வினைக்கான எதிர்வினைகளை கேள்விகளற்று ஏற்றுக்கொள்கின்றன.

    காட்டுப்பூச்சிபோல எதற்கும் கட்டுப்படாமலேயே இருந்த பொப்பி, தான் தவறிழைத்தை உணர்ந்தபின் தண்ணீர்கூட வாயில் படாமல் விலகுகிறது. அதுவரையில், அவனின் அன்புக்கும் கவனிப்புக்கும் தான் தகுந்தவன்தான் என்று உரிமையோடு சண்டித்தனம் செய்தது, குழந்தைக்கு வலி ஏற்பட்டதை உணர்ந்து தான் எதற்கும் தகுதியில்லாதன் என முடிவெடுக்கிறது. அமைதியாக அவனிடமிருந்து வெளியேறுகிறது. கட்டிப்போடப்படாமல் இருந்தால் அது தானே சென்றிருக்கும்.

    அத்தனை பாசத்தோடும் அன்போடும் மனைவியின் எதிர்ப்புகளுக்கிடையே பொப்பியைப் பேணி வந்தவன், தன் குழந்தையைக் காயப்படுத்திவிட்டது என்பதை உணர்ந்ததும் அதன் மேல் கோபப்படுகிறான். அதை அடித்துத் துரத்த மனம் நினைக்கிறது. பாப்பாவுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று வேதனைப்படுகிறது. ஆனால், ஒரு நொடி கூட பாப்பாவைக் காயப்படுத்தியபின் பொப்பி வேதனைப்பட்டிருக்குமே என்று நினைக்கத்தோன்றவில்லை. தண்ணீர்கூட குடிக்காமல், அமைதியாக இருக்கும் அதன்மேல் கழிவிரக்கம் ஏற்படவில்லை.

    பொப்பி அவன் உயிரைக் காப்பாற்றியது என்பதாலேயே அதனால் ஏற்படும் சிரமங்களை எல்லாம் அவன் பொறுத்துக்கொள்கிறான். அதையே அடிக்கடி சொல்லவும் செய்கிறான். அந்த நன்றியுணர்ச்சியே அவனைக் கட்டிப்போட்டுள்ளது. கடைசியாக அதை இழந்தபின்னர் அதன் தூய அன்பின் இழப்பு அவனுக்கு உறைக்கிறது.

    தர்க்கங்களற்ற மிருகநிலைக்கும் பரிணாம வளர்ச்சியடைந்த மனித மனங்களின் தர்க்கரீதியான உணர்வாடல்களுக்குமிடையேயான இடைவெளியில் நகர்கிறது கதை.

    எவரும் குற்றவாளி அல்லர். பொப்பியும் கோமதியும் அவள் கணவனும் குழந்தையும் அவரவர் இயல்பில் உள்ளனர். எதிர்பார்ப்பு, நன்றியுணர்வு, குற்றவுணர்வு போன்ற பல உருவாக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட உணர்வுகளால் ஆனது மனித மனம். அதற்கு வேறுபாடுகள் இருக்கும். உணர்வுகள் கட்டமைக்கப்படாத, தூய ஆதி குணத்தோடு இருக்கும் பொப்பி அவனைப் பார்த்து வாலாட்டுவதைப் போலவே, அதை வெறுத்து, துன்புறுத்தும் அவன் மனைவியைப் பார்த்தும் வாலாட்டுகிறது. அதனிடம் வேறுபாடு இல்லை. எதிர்பார்ப்பும் இல்லை.

    உள்ளார்ந்து எழுதப்படும் எளிமையான ஒரு கதை, ஆழமான சிந்தனையையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த கதை.

  3. செல்வா
    May 2, 2024 at 4:13 pm

    தனது செயலை உணர்ந்த போப்பி தண்டனையை ஏற்றுக் கொண்டது. அதன் நியாயம் மனிதன் நியாயத்திற்கு முரணானது. கோமதி விரும்பிய “ஜாதி ” நாயை அவள் சீராட்டி வளர்த்திருந்தாலும் அதே செயலை அது செய்திருக்கக்கூடும். நாய் குணம் தானே என்று அவளே மன்னித்திருக்கக்கூடும்.
    தன் தவறை உணர கோமதி யின் “தெரு நாய்” சிந்தனை கடைசி வரை இடம் கொடுக்கவில்லை.

  4. Previna Rajendran
    May 5, 2024 at 12:49 pm

    வளர்ப்பு பிராணிகள் வைத்திருப்போருக்கு மட்டுமே கதை இறுதியில் அவரின் கதறலின் ஆழம் புரியக்கூடும். ஆறறிவு படைத்த மனிதனுக்கும் ஐந்தறிவு கொண்ட மிருகத்திற்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்பதை கதை உணர்த்துகிறது. நவின் சாரைப்போன்ற சிறந்த எழுத்தாளரால் மட்டுமே ஒரு வாசகனைக் கண் கலங்க வைக்க முடியும். வாழ்த்துகள்

  5. வெற்றிராஜா
    May 6, 2024 at 7:43 am

    தீவிர இலக்கிய செயல்பாடுகள், முகாம்கள், இலக்கிய பத்திரிக்கை நடத்துதல், இலக்கிய விழாக்களுக்கு நாடு விட்டு நாடு பயணித்தல், போட்டிகள், நடுவர் வேலை, பரிசளித்தல், நாவல்கள், விமர்சனம், கட்டுரை, புத்தக வெளியீடு, இலக்கிய அமர்வுகள் இவை யாவற்றுக்கும் நடுவில் நேரம் அமைத்து சிறுகதை எழுதுகின்ற ம.நவீன் அவர்களுக்கு முதலில் பெரிய சலாம்.

    இம்மாத வல்லினம் இதழில் அவரது ‘மிருகம்’ சிறுகதை வாசித்து அதன் முடிவிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன். பரிதாபமாக பார்க்கின்ற அந்த போப்பியின் புகைப்படம் கண்ணிலே நிற்கிறது. மிக நுட்பமான சிறுகதை. கதைசொல்லிக்கு பெயரே இல்லை. கதைசொல்லிக்கு பெற்றோர்கள் இல்லை. பெரிய அனுபவங்களோ புரிதல்களோ இல்லாத இளங்குறுத்துகளின் வாழ்வில் போப்பி நுழைவது, பின் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து வளர்கின்ற சூழல், மேலும் பல நுண் சித்தரிப்புகள், இக்கதையை சிறப்பானதொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.

    போப்பி என்றால் போப்பி மட்டும்தானா என்ன? ராணுவம், அரசியல், மதம், கார்ப்பரேட் ஆகிய அனைத்துமே செய்கின்ற de-humanisation செயலை ஏற்பதில்/மறுப்பதில் உருவாகின்றது சிக்கல். ராணுவத்தை, அரசியலை, கார்ப்பரேட் கலாச்சாரத்தை விட்டு விலகி ஓடுபவர்கள், நாள்தோறும் வேகமாய் மாறுகின்ற நவீன தலைமுறையை ஏற்றுக் கொள்ள இயலாது தோற்கும் பழைய தலைமுறைகள், விவாகரத்துகள் அதிகரித்து வரும் இன்றைய காலட்டத்தில், மிருகத்துக்கும் மனிதத்துக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் மனங்கள் என, அனைத்துமே போப்பிகள்தான்.

    போப்பி/poppy என்பது காட்டு மலரா, வீட்டு மலரா என கேள்வியெழுப்பும் அந்த நாய்குட்டியின் பெயரே ஒரு கவிதை.

    மையத்திலிருந்து மீண்டும் விளிம்பை நோக்கி, அதாவது கோலாலம்பூரில் இருந்து கோலா சிலாங்கூர் நோக்கி போப்பி செல்கையில், இந்த சிறுகதை வாசக மனங்களில் பிரம்மாண்டமாக விரிகிறது. அற்புதமான சிறுகதை அளித்ததற்கு நன்றிகளும், வாழ்த்துகளும் நவீன்.

  6. mahendran prabhu
    May 8, 2024 at 9:45 pm

    நாயை மிருகமாகக் கூட பார்க்க முடியும் என்பதனை இந்தக் கதையைப் படித்தப் பின் உணர்ந்தேன்.

    எம். பிரபு, பெந்தோங்.

  7. ரா.எஸ்.ஆர்
    May 29, 2024 at 11:04 pm

    இதை படித்தவுடன், எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு வாடகைக்குக் குடி இருந்தவர்களின் நினைவுதான் வந்தது. அவர்கள் வீட்டில் ஒரு பொமரேனியன் இருந்தது. அதனால் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்ற மனைவி கோபத்துடன் வீட்டை வீட்டு வெளியேரினாள்.

    இக்கதையில் வரும் போப்பி கடைசியில் தன்னையே தண்டித்துக் கொள்வது நெஞ்சை வலியில் ஆழ்த்துகிறது. இயற்கையாக வந்த கோபத்திற்கு போப்பியால் இதை விட என்ன செய்துவிட முடியும். போப்பியின் நெஞ்சில் இருக்கும் வெண்மை நிறம் போலவே அதன் மனதும் இருக்கிறது என்பதை கடைசிவரை கோமதியால் புரிந்து கொள்ள முடியாதது துரதிர்ஷ்டமே!

  8. Manoj Kumar Ganesh
    June 1, 2024 at 1:18 pm

    வாயில்லா பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால் ஏற்படும் சிக்கல்களை இந்த கதை கச்சிதமாக சொல்கிறது.

    என்னுடைய வீட்டில் நடந்த ஒரு சிக்கலை இந்த கதை நினைவுக்கு கொண்டுவந்தது

  9. Mrs.M.jessy malathiManivasagam
    September 7, 2024 at 1:34 am

    Animal is an animal

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...