வல்லினம் ஏற்பாட்டில் மார்ச் மாதம் 3 & 4-ஆம் திகதிகளில் களும்பாங்கில் உள்ள மை ஸ்கில் அறவாரிய வளாகத்தில் நடந்த ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையைச் சமர்ப்பிக்கும் நல்வாய்ப்பும் அமைந்தது. நான், இது நாள் வரை எந்த இயக்கம் சார்ந்தும் இயங்காததால் இது எனக்கொரு புது அனுபவமாக இருந்தது.
ஓர் இயக்கத்தின் முன்னெடுப்பில் நடக்கவிருக்கும் எந்த நிகழ்ச்சியும் அந்த இயக்கத்தின் நிர்வாகத் திறனைக் கண்டறிய உதவும் ஒரு சான்றாகும். ஆக வல்லினம், நிகழ்ச்சியை ஒழுங்குப்படுத்திய முறை, நேர நிர்வாகம், உணவு விநியோகம், பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்பு என்று நிகழ்ச்சி சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களிலும் நிர்வாகம் காட்டிய நேர்த்தி, காரார்த்தனம் பாரட்டப்பட வேண்டியது.
இரண்டு நாள் நிகழ்வு
2.3.2024 (சனிக்கிழமை)
‘முரண்’, ‘இளந்தமிழன் சிறுகதைகள்’, ‘தேவதைகளற்ற வீடு’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ‘ஆழம்’ என்ற நாவலும் வாசிப்பிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
‘முரண்’ வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள் ஆதித்தன், த. குமரன், சாலினி ஆவர். அதுபோல ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ குறித்த வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள் கோ. புண்ணியவான், ஸ்ரீகாந்தன், அரவின் ஆவர். தொடர்ந்து ‘தேவதைகளற்ற வீடு’ வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள் மோகனா, இளமாறன், தேவகுமார் ஆகிய மூவரும் ஆவர். அன்றைய இறுதி அமர்வில் ‘ஆழம்’ நாவல் வாசிப்பு அனுபவத்தைச் சண்முகா, ராஜேஸ் ராமசாமி ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.
தமது வாசகப் பார்வையைப் பகிர்ந்துகொண்ட பலரும் எந்த வித குறிப்பேடும் இல்லாமல் தமது நினைவிலிருந்து கோர்வையாகப் பேசியது சிறப்பாய் இருந்தது. அச்செயல், அவர்கள் யாவரும் கதைகளைச் சிரத்தையுடன் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதைக் காட்டியது. அவர்களில் பலரும் ஆசிரியர்களாய் இருப்பதால் அது, அவர்கள் பெற்ற பயிற்சி போலும். எனக்கெல்லாம் அது சாத்தியமே இல்லாததால் குறிப்பேடுடனேயே வாசிக்க வேண்டியிருந்தது.
3.3.2024 (ஞாயிற்றுக்கிழமை)
சீன மற்றும் மலாய் இலக்கிய அறிமுகத்துடன் அன்றைய தினம் ஆரம்பமானது.
‘தற்கால சீன நாவல்கள்’ என்ற தலைப்பில் மலாயாப் பல்கலைக்கழக சீன மொழிப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஃபுலோரன்ஸ் அவர்களும் ‘தற்கால மலாய் சிறுகதைகள்’ குறித்து எஸ். எம். சாகீர் அவர்களும் அறிமுக உரையாற்றி அடுத்தக் கட்ட உரையாடலுக்கு வழிவகுத்தனர். உரையாடலுக்கு முன்னதாக அ. பாண்டியன் வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது இவ்வாண்டு அரவின் குமாருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார். இந்த விருது விழா நவம்பர் மாதம் நடக்கும் என்றார்.
தொடர்ந்து கேள்வி பதில் அங்கம் இடம்பெற்றது. ராஜேஸ் ராமசாமி “‘கருப்பு பிரதேச காலம்’ என்று சொல்லப்பட்ட கம்யூனிச அவசரக் காலம், மலேசிய சீன இலக்கியத்தில் பேசு பொருளாகக் கையாளப்பட்டிருக்கிறதா?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
டாக்டர். ஃபுலோரன்ஸ் குவேக், மலேசிய சீன வம்சாவளியினர் தமது கம்யூனிச சார்ப்பு வரலாற்றை இப்போது நினைத்துப் பார்க்க விரும்பாத போக்கே மேலோங்கியிருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.
அடுத்ததாக நான், சயாம் மரண ரயில்வே மற்றும் மே 13 கலவரத்தைத் தொட்டுச் சீன படைப்புகள் ஏதும் படைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்பினேன்.
சயாம் மரண ரயில்வே பற்றி ஏதும் பதிவு செய்யப்பட்டிருக்கும் முயற்சியை அவரால் ஞாபகப்படுத்திகொள்ள முடியவில்லை என்றே கூறினார். ஆயிரக்கணக்கில் சீன வம்சாவளியினர் பலி கொள்ளப்பட்டதல்லாமல், ஜப்பானியர்களால் சீன ஜப்பானிய போர்களால் முன்பகையின் காரணத்தால் மூர்க்கத்தனமாய் கொடுமை படுத்தப்பட்டவர்கள் மலாயா சீனர்கள். ஆக, அது புனைவாக்கத்தில் வெளிப்படாதது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், நம்மிடையே ஆ. ரெங்கசாமியும், ஆர். சண்முகம் மற்றும் கோ. புண்ணியவான் போன்றோர் அதை புனைவில் கொண்டு வந்திருப்பது நாம் பெருமையுடன் நினைவுக்கூறிக்கொள்ள வேண்டிய செயலாகும்.
அடுத்து, 1969-ல் நடந்த மே 13 இனக் கலவரம்! அதை பற்றிய வாய்வழித் தகவல்களை மின்னூடகங்கள் சில, நிறைய சேகரித்து வைத்திருப்பதாகக் கூறிய ஃபுலோரன்ஸ், காமன் வெல்த் அங்கத்துவ நாடுகளின் இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் ‘English Pen Award’ என்ற பரிசை எழுத்தாளரான Miss. HO SOK FONG தனது சமீபத்திய ‘Transformation’ என்ற சீன நாவலில் மே 13 கலவரத்தைப் புனைவாக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, எஸ். எம். சாகீர் மற்றும் டாக்டர் ஃபுலோரன்ஸ் தற்கால மலாய், சீன இலக்கிய படைப்புலகப் போக்கு, படைப்பாளிகள் மற்றும் குறிப்பிடத்தக்கப் படைப்புகளைப் பற்றி கவனப்படுத்திப் பேசினர்.
இந்த நிகழ்சிக்கு நெறியாளராக இருந்த லாவண்யாவிற்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியிலிருந்த சரளம் மிகவும் பாராட்டுக்குரியது. சபையச்சம் இல்லாமல் பேசியது இன்னும் சிறப்பு.
வல்லினத்தின் இந்த முன்னெடுப்பின் வழி, சில மலாய் மற்றும் சீன படைப்பாளிகளின் பெயர்களோடு அவர்கள் எழுதி, உலக கவனத்தைப் பெற்ற சில படைப்புகளையும் அறிய நேர்ந்தது இந்த அங்கத்தின் வெற்றியாகத் தாராளமாகப் பார்க்கலாம். இதை எழுதும்போது, இப்படியெல்லாம் செயலாற்ற வேண்டிய மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமோ தாமுண்டு தமது இலக்கிய/இலக்கற்ற சுற்றுலா உண்டு என்றிருக்கும் போக்கைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.
அன்று மாலையில் அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ மற்றும் ம. நவீனின் ‘தாரா’ நாவல்கள் பற்றி முறையே தயாஜி, இளம்பூரணன், தினேசுவரியும்; ரேவின், புஷ்பவள்ளி மற்றும் சுதாகர் தமது வாசகப் பார்வையை முன்வைத்தனர். இந்த நிகழ்வில் நாவல்களின் படைப்பாளர்களும் கலந்துகொண்டதால் வாசகர்கள் பார்க்கத் தவறிய கோணத்தை அவர்கள் வழி அறிந்துக்கொள்ள முடிந்தது. அதேபோல், தாம் எண்ணிப் பார்க்காத முறையிலெல்லாம் வாசகர்களின் புரிதல் இருந்தது.
இது, நான் கலந்துகொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. நிறைய கற்றுக்கொண்டேன். தீவிர வாசகர்கள் மற்றும் படைப்பாளர்களின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும் சீரியதாக இருந்ததில் திருப்தியே மிகுந்தது.
சில இளம் படைப்பாளர்கள், கதைகளில் தாம் கண்ட ஆணாதிக்கப் பார்வையைக் கேள்விக்குட்படுத்தியது சிறப்பு.
புல்லாக, புருஷனாக, தெய்வமாக, பார்க்கப்படுபவன் பெண்களின் சுய மரியாதையைப் பேணும் ஒரு மனிதனாக முதலில் தன்னை வளர்த்துக்கொள்ளட்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களின் கேள்விகளில் ஓங்கி ஒளித்தது.
மொத்தத்தில் செயலூக்கமிக்க, ஆக்கப்பூர்வமான நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட திருப்தி எனக்குள் மீண்டது.
ஆயினும், நிகழ்ச்சியின் நிறைவில் எனக்குள் சில சுய விமர்சன சிந்தனைகள் எழாமலில்லை.
அவற்றை இப்படித் தொகுக்கலாம்:
. ஒரு படைப்பாளியின் படைப்பை இன்னொரு படைப்பாளி விமர்சிக்கலாமா? அப்படி விமர்சிக்கும் பட்சத்தில் அது படைப்பிற்கான நேர்மையான விமர்சனமாக அமையுமா அல்லது அந்த விமர்சகரின் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிக்கொள்ளும் போக்காக ஆகிவிடுமோ என்ற தடுமாற்றம் எனக்குள் எழுகிறது.
. விமர்சனத்தை வைக்கும் எழுத்தாளன், விமர்சனப்பூர்வமாக மெச்சத்தகுந்த அல்லது கலையமைதிமிக்க படைப்பு ஏதும் எழுதியிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? தன்னளவிலேனும் புனைவு என்பது என்ன என்ற புரிதல் அவருக்கு இருக்க வேண்டாமா? கதைகள் எழுதிய அனுபவமொன்றே ஒருவருக்கு இன்னொருவரின் படைப்பை விமர்சிக்கும் தகுதியாகிவிடுமா? நவீன இலக்கிய அறிமுகம், வாசிப்பு, பயிற்சி ஏதும் அவசியம் இல்லையா?
. விமர்சனமும் ஒரு கலை! எந்தக் கலையையும் அதற்கானப் பயிற்சி, மெனக்கெடல், உழைப்பு இல்லாமல் கைவருமா? வாசகனுக்கு ஒரு புனைவிலுள்ள புதிரை விளக்க வேண்டுமே! எது இலக்கியம் என்று குழம்பிக்கிடப்பவனுக்கு முதலில் அது அடையாளப்படுத்தப்பட வேண்டாமா? இந்தத் தேவைகள் யாவும் இந்த இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்ததா என்று எனது சிந்தனை விரிகிறது.
இப்படியெல்லாம் யோசிக்கையில் நவீன சிறுகதை உரையாடலை முன்னெடுக்கும் அதே வேலையில் நவீன விமர்சனத்தையும் இங்கே பயிற்றுவித்து, பரவலாக்கும் பணியை வல்லினம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
தங்கள் ஆதங்கம் அர்த்தம் உள்ளது. எனது சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இதனை நான் குறிப்பிட்டு உள்ளேன். உள்ளே உள்ள சில சிறுகதைகளிலும் இந்த ஆதங்கம் இருக்கும். எனது சிறுகதைத் தொகுப்புக்கு இந்த கருத்தரங்கில் எத்தகைய விமர்சனம் நடந்திருக்கும் எனத் தெரியாது. ஆனால், நான் கரிகாற் சோழன் விருதுக்கு அனுப்பிய முதல் நூலான இந்தத் தொகுப்புக்கு அந்த விருது கிடைத்தது குறிப்பிடத் தக்கது.
எமது மனவோட்டத்தைத் தங்களது பதிவாக்கம் பிரதிபலிக்கிறது. சாமர்த்தியமான விமர்சனங்களை முன்வைக்காமல், நேர்மையான வாசகப்பார்வையில் அமைந்திருந்தது நிகழ்வு.