இலங்கையில் ஆங்கிலேயரால் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட சுதேசி மக்கள் ஆர்வம் காட்டாததன் பின்னணியில் ஆள்கட்டிகள் என்று சொல்லப்படுகின்ற பெரியகங்காணிகளினால் கூலிகளாக தென்னிந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக கொண்டுவரப்பட்ட தமிழர்களை மலையகமெங்கும் குடியமர்த்தி இருநூறு வருடங்களை தொட்டிருக்கிறது. அதன் ஞாபகார்த்தமாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புக்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் தனிமனித ஏற்பாடுகளிலும் பல்வேறுபட்ட கொண்டாட்டங்கள் பரவலாக மலையகம் எங்கும், அங்கொன்று இங்கொன்று என்று வெளிநாடுகளிலும் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த வருடம் இறுதி காலாண்டு முழுதும் கொண்டாடப்பட்டு வந்ததை அறிந்தோம்.
உண்மையில் இந்த மக்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு 200 வருடங்களை தொட்டிருக்கும் நிலையில் அவர்கள் அடைந்த முன்னேற்றங்கள் என்ன? என்று தேடிப்பார்த்தால் கேலிக்கூத்தாகவே இருக்கும். கிட்டத்தட்ட 18 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் மலைநாட்டு சனத்தொகையில் பத்து வீதத்தினறிலும் குறைவானவர்களே வளர்நிலையில் இருக்கின்றனரே தவிர மிகுதியினர் அன்றாடங்களை கடப்பதிலும் அடிப்படைகளை பெற்றுக்கொள்வதிலும் பெரும் போராட்டங்களுக்கே முகங்கொடுத்து வருகின்றனர். இன்னும் கூட நாட்டின் தேசிய இனமாக அங்கிகாரம் பெறவும் ஒரு தேசிய இனத்துக்கான சலுகைகளை பெற்றுக் கொள்வதும் பெரும்பாடாக இருக்கும் சூழ்நிலைமையில் என்னதான் இருக்கிறது இந்த இருநூறை கொண்டாட என்று நீங்கள் நினைப்பீர்களென்றால் அப்பாவித்தனமும் முன்னோக்கி சிந்திக்க அறியா மக்களை ஆட்சியாளர் மூடர்களாகவே வைத்திருக்கும் கலையின், அதன் இரட்டிப்பு அடையாளம்தான் இந்த ஏற்பாடுகள். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகள், சந்தா பணத்தில் குடல் வளர்க்கும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. மேலும் மலைநாட்டு மக்களை முன்னிறுத்தி வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள் வயிறு வளர்க்க வேறு வழியென்ன இருக்கிறது.
ஒருமுறை ஈழத்தில் இருந்து வெளிவரும் வனம் இதழுக்கு மலையகத்தின் மூத்த இலக்கிய ஆளுமை திரு மாத்தளை மரலன்பனிடம் நேர்காணல் ஒன்றுக்காக ‘இத்தனை இடர்களுடன் அன்றாடங்களை கொண்டுச்செல்ல பெரும்பாடுபடும் எங்கள் மக்களின் இருநூறை கொண்டாட வேண்டுமா?” என்றேன்.
‘எங்கள் இருநூறு வருடங்களை கொண்டாட என்ன முன்னேற்றம் இருக்கிறது எங்களிடம் ” என்பதையே மறுகேள்வியாக கேட்டிருந்தார். மலரன்பனுக்கு மட்டுமல்ல இது மலையக மக்கள் மீது கரிசனை கொண்டிருக்கும் ஒவ்வொரு புத்திஜீவிகளினதும் மனவோட்டம்.
இலங்கைக்கு வந்து இருநூறு வருடங்களை தொட்டிருக்கும் பாரம்பரியத்தை கொண்ட மலைநாட்டு தமிழர்களின் இலக்கியவழி என்பது இருநூறு வருட தொன்மை கொண்டதுதான். ஆரம்பத்தில் இலங்கை மன்னாரிற்கு கொண்டுவரப்பட்ட தமிழர்கள் அங்கிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகவே நடந்து மலையகம் எங்கும் குடியமர்த்தப்பட்டவர்களின் வலிநிவாரணியாக அவர்களின் வாய்வழிப்பாடல்கள் என்று சொல்லப்படுகிற நாட்டார் பாடல்கள் காணப்பட்டன. அப்படி நாட்டார்ப்பாடல்வழி வந்த மலையக இலக்கிய வரலாற்று செல்நெறி நடேசய்யர் அவரின் மனைவி மீனாட்சி நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை போன்ற அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களால் கவிதைகள், புனைக்கதைகள் என வேறு வடிவங்கண்டு பயணிக்க முற்பட்டது.
இந்த வளர்நிலையில் இலங்கையில் அறுபதுகளுக்கு பின் இலக்கிய ரீதியாக பெரும் புரட்சி ஏற்பட்டதன் பின்னணியில் மலையகத்தில் அது தனித்துவமாக வளர்ச்சி கண்டதுடன் மறுமலர்ச்சியடைந்தது. வீறுகொண்டு எழுதக்கூடிய பெரும் எழுத்தாளர் படையொன்று மலையகம் எங்கிலும் இருந்து உயிரோட்டமாக எழுத ஆரம்பித்தார்கள். கவிதைகள், நாவல்கள சிறுகதைகள் என்று பரிணமித்தாலும் குறிப்பாக சிறுகதைகள் வெளிவருவதில் உச்சந்தொட்ட காலமாக அக்காலம் காணப்பட்டது. என்.எஸ்.எம் ராமையா, தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், மாத்தளை மலரன்பன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன் என்று பட்டியல் நீண்டாடும் எழுத்தாளர்களில் முதன்மையானவராக திகழ்ந்தவர் தெளிவத்தை ஜோசப். மலையக இலக்கியங்களை இலங்கை என்கிற நிலப்பரப்பை தாண்டி உலகத்தமிழ் வாசகப் பரப்புக்கும் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்களின் சிந்தனைக்கும் கொண்டு சென்று நிறுத்தியவர் அவர் 2013 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்திருந்த வி~;ணுபுர விருது மேற்சொன்ன நிகழ்தலை இன்னும் வலிமைப்படுத்தியதோடு மலையக இலக்கியங்கள் சார்ந்தும் தேடும் அண்மைய பாரம்பரியம் ஒன்று வளர்ந்து பெருக்கெடுக்கவும் அந்த விருதும் ஒரு காரணமாகவும் அமைந்திருந்தது.
தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மலையக இலக்கியத்திற்காக அர்ப்பணித்த தெளிவத்தை ஜோசப் கடந்த வருடம் (2023) காலமானார். அவரின் இறுதி படைப்புதான் ‘மாறுதல்கள்” என்ற நாவல்.
அவரைப்பற்றிய எந்த குறிப்பும் இல்லாமல் இந்த நாவல் வெளிவந்திருப்பது மனவருத்தம் என்றபோதும் வெளிவந்தமை கொண்டாட்டத்திற்கும் பாராட்டத்திற்கும் உரியதே. கனடாவை தலைமையாகக் கொண்டு இயங்கிவரும் தாய்வீடு சஞ்சிகையில் கடந்த ஐந்து வருடங்களாக அவர் எழுதி வந்த தொடர்தான் மாறுதல்கள் என்று நாவலாக இறுதிவடிவம் பெற்றிருக்கிறது. உங்களுடைய அடுத்த இலக்கியப் படைப்பு எப்போது வரும், எதுவாக இருக்கும் என்று அவர் இறப்பதற்கு சுமார் ஒரு வருடகாலத்திற்கு முன்னரான சந்தர்ப்பமொன்றில் கேட்டபோது, தாய்வீட்டு சஞ்சிகையில் தொடராக எழுதிய என் நாவல் பாக்யாவின் வெளியீடாக வெளிவர தயாராக இருக்கின்றது என்றார். அதற்கான ஏற்பாடுகளை கவிஞர் திரு. திலகராஜ் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். எழுத்தாளர் திரு திலகராஜின் பாக்கியா பதிப்பகத்தின் ஊடாகவே வெளிவருமென்றிருந்த தெளிவத்தை ஜோசப்பாரின் இறுதி நாவல் தாய்வீடு பதிப்பாகவே வெளிவந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தில் தாய்வீட்டின் இதழாசிரியர்கள் வெளியீட்டாளர்களுக்கு மலையகத்தவராக, ஒரு வாசகனாக மனம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்வதில் மகிழ்வடைகின்றேன். உண்மையிலேயே தெளிவத்தை ஜோசப் இறந்த உடனேயே இந்த புத்தக வெளியீடு கிடப்பில் கிடந்து விடுமே என்ற நிலையிலிருந்த தருணத்தில் தான் நாவல் வெளியீடு நிகழந்திருப்பது மனங்கொள்ளத்தக்கது.
கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுவதையும் தன் மக்களின் வாழ்தலின் அன்றாடங்களையும் அவர்களின் போராட்டங்களையும் எழுதிச் சென்ற எழுத்தாளுமை தெளிவத்தை ஜோசப். இது அவரது இறுதி நாவல் என்பதோடு அவர் இறந்த பிறகு வெளிவந்திருக்கும் நாவலென்ற அடையாளமும் மிக நீண்ட நாட்களுக்கு பின் மலையகத்தில் இருந்து வெளிவந்திருக்கும் நாவலாகவும் அதிக பக்கங்களை கொண்ட மலையகத்தின் மிகப்பெரிய முதல் நாவல் என்கிற அடையாளத்தையும் பெற்றுள்ளது. உண்மையிலேயே இந்த நாவல் பெறும் விமர்சனத்துக்குரியது. காரணம் ஒரு நாவலுக்கான அழகியல் வீழ்ந்த ஒரு நாவல். ஆனால் இந்த நாவல் மலையகத்தில் இலங்கையில் மூத்த ஏழுத்தாளர் ஒருவரை கௌரவிப்பதற்கான முகமாக அமைகின்றது என்பதை மறுப்பதாற்கில்லை. ஆகவே தனித்துவமான இந்த நாவலை அறிமுகம் செய்வதே ஒரு வாசகனாக கூடுதல் மகிழ்வை தரக்கூடியது. அடிமட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் அன்றாட போராட்டங்களையும் புனைவுக்குள் கையாளும் விதம், தன் நாவலின் பேசியிருக்கும் அரசியல், என்னும் பாணியில் நாவலை அறிமுகம் செய்வதையே மேலென்று கருதுகிறேன். அதுவே ஒரு பெரும் ஆளுமைக்கு மரியாதை செய்ததாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
‘மாறுதல்கள்’ இருநூறு வருடங்களை தொட்டிருக்கும் மலையக மக்களின் வரலாற்றில் கடந்து வந்திருக்கும் அநேகமாக எல்லா பிரச்சினைகளையும்பேசியிருக்கிறது. குறிப்பாக, தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வந்தபோது பாதை நெடுக அடைந்த துயரங்களை தவிர மற்றயவை எல்லாமும் பேசுகிறது. வெள்ளைக்காரத்துரைகள் தோட்டங்களை நிர்வகித்த காலந்தொட்டு ஆரம்பிக்கும் நாவல் இறுதியில் அரசாங்கம் தோட்டங்களை பொறுப்பேற்ற பின்பு வெள்ளைக்காரத்துரைகள் தோட்டங்களை விட்டு வெளியேறும் வரையிலான கால எல்லையை கொண்டதாய் முடிவடைகிறது. மேற்சொன்ன கால வரையறைக்குள் நாவல் நிகழ்ந்தபோதும் கதை போக்கில் சிலகால முரண்களும் இருப்பதை அவதானிக்கக முடிகிறது. ஆயினும் அது நாவலின் வாசிப்புக்கும் புரிதலுக்கும் தடையாக இல்லை. பதுளை பசறை பகுதியில் இருக்கும் ஒரு தேயிலை தோட்டத்தில் போக்குவரத்து காவலுக்காக போடப்பட்டிருக்கும் ஒரு நுழைவாயில் (புயவந) தான் கதையின் ஆரம்பம் மையம் கொள்கிறது. வெள்ளைக்காரத்துரை தன்னை தவிர வேறு யாரும் தோட்டத்து பாதையில் வாகனங்களை செலுத்திவிட கூடாதென்ற நோக்கத்தோடு தோட்ட ஆரம்பத்திலேயே ஒரு கேட்டும் அதற்கு அருகில் அதன் பாதுகாப்பிற்காக ஒரு காவல் குடிலுமாக அங்கு நடக்கக்கூடிய நிகழ்வுகளை கொண்டு ஆரம்பிக்கிறது கதை.
நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் இந்த நுழைவாயிலை (புயவந) அடிப்படையாக கொண்டு ஒரு நேர்கோட்டில் நகர்கிறது. தோட்டத்திற்கு கார் கொண்டுவர முயற்சி செய்யும் பெரிய கிளாக்கையா மற்றும் களுமாத்தியா என்கிற நாட்டுக்காரரும் தோட்டத்துக்குள் தங்களின் கார்களை கொண்டுவர செய்யும் பிரயத்தனம் அவர்களுக்கிடையிலான மறைமுக மோதலும் அதனூடாக வெளிப்படும் தோட்டத்துரையின் அரசியலும் பலிவாங்கும் தந்திரமும் விவரிக்கப்படுகின்றன.
அதுவரை பதுளை நகரத்திற்கு சென்றுவரும் போதெல்லாம் தொலைதூரமாய் தங்களின் பொருட்சுமைகளை தலைசுமையாய் நடந்து கடந்த பொதுமக்கள் காரினை தங்களின் அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தல், அதன் போக்குவரத்து கூலியாக சில்லறை பரிமாறல்கள் அதற்குள் நடக்கும் தில்லுமுல்லுகளென நாவல் மலையக மக்களின் வாழ்வியல் வாசனையோடு ஆரம்பமாகி சுவாரஸ்யத்தோடு நகருகிறது. கிட்டத்தட்ட பத்தாம் அத்தியாயம் வரை கிளைக்கதைகளின் தலையீடோ அல்லது ஒரு விடயம் பற்றிய விபரிப்புக்களோ இல்லாது நாவல் பயணம் செய்கிறது. பத்தாம் அத்தியாயத்திற்கு பிறகு ஒரு அத்தியாயத்தில் பேசப்படும் விடயங்கள் அந்த அத்தியாயம் முழுவதும் அல்லது ஒரு சில அத்தியாயங்கள் வரையும் என நீடித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியான விபரிப்புக்களில்தான் மலையக மக்கள் காலங்காலமாக அடைந்து வந்த இன்னல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த காட்சிபடுத்தல்களின் வழி தெளிவத்தையின் சமூக கரிசனத்தையும் அவரின் போராட்ட மனதையும் வாசகன் புரிந்துகொள்ள முடிகின்றது. நாவலின் பத்தாம் அத்தியாயத்தை ஒட்டிய தருணமொன்றில் மூல கதாபாத்திரமான ராமனின் தந்தையாகிய சின்னான் மாலை பொழுதொன்றில் கங்காணியை காணச்செல்லும் இடத்துக்கிடையில் லயத்தோட்டங்களில் பயிரிடப்படும் சிறுதோட்டப் பயிர்ச்செய்கை நிலமொன்றை கடக்க முற்படும் சந்தர்ப்பத்தில் அந்த தோட்டத்துடன் தோட்டங்களில் பயிரிடப்படும் சிறு வெள்ளாமை நிலங்களையும் அந்த நிலங்களை தக்கவைப்பதில் இருக்கும் இடர்களையும் விபரமாக பேசியிருக்கிறார். ஒட்டுமொத்த மலையக மக்களின் தோட்ட பயிர்செய்கையின் போக்கையும் குறுக்குவெட்டாக சித்தரிக்கும் வகையில் இக்காட்சி அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து நாவல் சொல்லும் உத்தி மாறுகிறது. அதாவது மலையக மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முழு நீளமாக சொல்லி செல்லும் அத்தியாயங்கள் பிறக்கிறது.
புனைவின் மூல கதாபாத்திரங்கள் இருவர. ஒருவர் ராமர் மற்றையவர் தங்கராசு. இவர்கள் இருவருக்கும் கதையில் சம முக்கியத்துவம் கொடுத்திருப்பார் ஆசிரியர். எதார்த்த சிந்தனை மிக்கவனாக ராமரும் முற்போக்கு சித்தாந்தத்தில் கவரப்பட்டவனாக தங்கராசும் சித்திரிக்கப்பட்டிருப்பார்கள். தோட்டத்து பெரியகங்காணியின் மகள் சீதையை பாடசாலைக்கு கூட்டிச் செல்லுவதும் அவளோடு தானும் படிப்பதுமாக ராமனின் இளமைகாலம் கடக்கிறது. காலத்திற்கு பின் அவர்களின் இளமையின் மிடுக்கேறும் பருவமடைய தினமும் அவர்களை காணும் லயத்தார் ராமர் சீதைக்கான உறவுமுறைக்கு காதல் என்று வாய்க்கதை வளர்க்கிறார்கள். இந்த காதல் விவகாரம் நாவலின் கதையோட்டத்தில் நுழைவாயிலுக்கு அடுத்து நுழைந்து கொள்கிறது. இந்த சம்பவத்துடனான நிகழ்வுகள் நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்களை நிரப்புகிறது. பெரிய கங்காணிகளின் காமலீலைகள் மோசடிகள் பற்றி பேசி செல்ல அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் தெளிவத்தையார் ஒட்டுமொத்த கங்காணிகளையும் குற்றஞ்சாட்டாது கதை சூழலை பயன்படுத்தி இருப்பது மனங்கொள்ளத்தக்கது.
ஒரு சமயத்தில் காதல் விவகாரம் கங்காணிக்கும் ஒரு தொழிலாளிக்கும் இடையிலான சண்டையின்போது அனைவரும் அறிய பலிதீர்த்து கொள்கிற ஒரு தொழிலாளியின் ஊடாக தன் மகளின் காதல் வதந்தி அறியவர கங்காணி அவமானப்பட்டு, ஆத்திரமடைந்து ராமரின் தந்தை சின்னானை வரச்சொல்லி ராமன் தன் மகளை அழைத்துச் செல்ல இனியும் அவசியம் இல்லை என்பதை நாசுக்காக சொல்வதற்கு முன்னதாகவே சின்னான் முந்திக்கொள்கிறான். தன் மகன் நகர பலசரக்கு கடையொன்றுக்கு வேலைக்கு அமர்த்த இருப்பதாக சொல்ல அதனை வாய்ப்பாக்கிக்கொண்ட கங்காணியும் அதை ஆமோதித்து வரவேற்கிறார்.
தொழிலாளர்கள் நேரடியாக தங்களின் பகைமையை காட்டக்கூடிய, நபர்கள்தான் தோட்டத்து கங்காணியினர் அதாவது தோட்ட நிருவாகத்தின் கடைமட்ட ஊழியர்கள். உண்மையிலேயே இந்த எதிர்வினையாற்றும் தைரியம் வர மூலகாரணம் தோட்ட தொழிலாளர்களில் இருந்தே ஒரு கங்காணி தெரிவு செய்யப்படுவதனாலேயாகும். தோட்ட மக்கள் பெரும்பாலும் கங்காணியை தவிர வேறு எந்த நிர்வாகத்தினரிடமும் நியாயத்திற்குக்கூட எதிர்வினையாற்றியது குறைவு. இதையும் நாவலின் கதையோட்டத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
ராமரின் நகர மற்றும் புது வேலையின் அனுபவங்களுடன் நாவலின் அடுத்த அத்தியாயங்கள் நகருகின்றன. இதன்போது தோட்ட மக்களுக்கு நகரத்து கடைமட்ட புழக்கத்தையும் சொல்லிச்செல்லும் அதேநேரம் ஊருக்கு முதன்முதல் வந்து சேரும் பேருந்தும் அச்சேவை ஒழுங்குக்கான அரசியல் தலையீடுகளும் மலையக மக்களின் அப்போதைய அரசியல் அதற்கு முன்னரான அரசியல் சூழ்நிலைமைகளை பற்றியும் விபரமாக பேசப்பட்டிருக்கின்றது.
தொடர்ந்து நாவலின் தோட்டப்பாதையில் புதிதாய் ஓடும் பேருந்தின் சாரதி நடத்துனருடனான ராமனின் மோதல், அவர்கள் ராமன் என்கிற ‘தெமழா” (சிங்களவர்கள் தமிழரை நாகரிகமற்று அழைக்கும் முறை அல்லது சண்டைகளின் போது பயன்படுத்தும் வார்த்தை) பலிவாங்க நினைக்கும் திட்டத்தின் ஊடாக சிங்கள மக்கள் மலைநாட்டு தமிழர்களின் மீதான அபிப்பிராயங்கள் அவதூறுகள் பற்றியும் அப்போது இடம்பெற்றுக்கொண்டிருந்த வடகிழக்கு விடுதலை போராட்டங்களுடன் சம்பந்தப்படுத்தி மலைநாட்டில் சூழ்ந்திருந்த சிங்கள பெரும்பான்மையினர் மலைநாட்டு மக்களை பார்க்கும் விதமும் உள்ளிட்ட விடயங்களையும் உயிரோட்டமாக தீவிரமாகவும் பேசியிருக்கிறார். ராமருக்கான பலிவாங்கலும் ஏற்பாடுகளும் சிங்கள அடாவடித்தனங்களின் வெளிப்பாடும் ராமருக்கு விரித்த வலையிலேயே சாரதியும் நடத்துனரும் விழுந்து துன்பப்படுதலும் அப்பாவித் தமிழர்கள் அப்போது நடந்து கொள்ளும் விதமும் தோட்ட தமிழர்களின் மனதைக் காட்டுகின்றன.
தொடர்ந்து நாவலில் முதன்மை கதாபாத்திரமான ராமர் பதுளை நகரில் பரமசிவத்தாரின் பலசரக்கு கடையில் வேலை செய்தல், அதனூடே அவன் அடைந்து கொள்ளும் அறிவு முதிர்ச்சி, அனுபவ முன்னேற்றம், உலகம் பற்றிய புரிதல் ஆகியவை ஒரு கிணற்று தவளை கடலை பார்ப்பதை போன்றது. இந்த புரிதல்தான் நாவலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது. மேலும் இந்த நாவல் எழுதியதன் நோக்கத்தை நோக்கி கூர்மையாக்குகிறது. இதற்கிடையில் மீனாவையும் அவளின் காதலன் தங்கராசுவை அறிமுகம் செய்தலும் அவனூடே மலையகத்தில் தோற்றம் பெரும் தொழிற்சங்கமும் மறுமலர்ச்சியும் நடேசய்யரை அறிமுகப்படுத்தி அவர் சார்ந்து உரையாடல்கள் மலையகத்தின் ஆதித் தொழில் சங்கத்தாரின் அடாவடித்தனம் என மாறுதலில் விரிந்துச் செல்கிறது. நடேசய்யர் பற்றிய தெளிவத்தையாரின் பார்வையும் தொழிற்சங்கங்கள் பற்றிய புரிதலும் அவை செய்யவேண்டியதன் பகிர்தலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
தங்கராசுவை அறிமுகச்செய்ததன் தொடர்ச்சியாக வரும் சில அத்தியாயங்களிலேயே சிங்கள காடையர்களையும் அவர்கள் தமிழர் மீது அத்துமீறும் அடாவடித்தனத்தையும் சொல்லிச் செல்லும் தொடர்ச்சியில் தங்கராசு அவர்களுடன் எதிர்த்தாக்குதல் நடத்துவதும் தப்பித்து ஓடும் சிங்கள காடையர்களின் தலைவனின் துப்பாக்கி தவறி விழுவதும் அதை எடுக்க அவனும் துப்பாக்கி சொந்தக்கார காவலரும் லயன்களில் செய்யும் அட்டூழியமும் ஒரு லயனை நெருப்பு வைத்து தப்பித்து செல்லுதல் போன்றன நாவலில் துயரம் நிறைந்த தருணங்கள். மேலும் தோட்டப்புறங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் லயன்கள் எரிக்கப்பட்ட நிகழ்வுகளின் பின்னணியையும் விபரணப்படுத்துவதோடு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்பித்துச் செல்லும் தங்கராசு வன்னி செல்வதும் விடுதலை புலிகளை சந்திப்பதும் அவர்களுக்கான சிலம்பு பயிற்சி தயார்படுத்தலுக்கு நியமிக்கப்படுவதும் அதற்கு பின்னர் சுதந்திர விடுதலை மனஉணர்வை அவன் அவாவி நிற்பதும் அதன் ஊடே தன் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முயலுதலுடன் நாவல் முடிவடைகிறது.
நாவல் முடியும் தருணத்தில் இன்னுமொரு மிக ஆழமான செய்தியை பதிவு பண்ணி செல்கிறார் ஆசிரியர். அதாவது வெள்ளைக்கார தோட்ட முகாமையாளர்கள் வெளியேறுவதுடன் அரசு தோட்டங்களை பொறுப்பேற்பதும் அதன் போது அரசு சிங்களவர்களுக்கு தோட்டங்களை துண்டாடிக் கொடுத்தலும் தோட்ட மக்கள் தங்கள் நிலத்தை, இருப்பிடத்தை விட்டு ஆறுதல் சொல்லவும் அடைக்கலம் அடைந்து வாழ்வதற்கும் யாருமற்று துயரடைகின்ற சூழ்நிலைகள் பற்றி பேசப்பட்டிருக்கிறது. இந்நிலை இன்றளவும் நீள்கிறது. அதை தெளிவத்தை ஜோசப்பார் மாறுதல்களில் மிக நேர்த்தியாகவும் வலி நிறைந்த நிகழ்வாகவும் தொட்டுச்சென்றிருக்கிறார். இன்னுமொரு இடத்தில் சிங்களவர்கள் வாழும் இடத்தை தோட்டமக்கள் ‘நாட்டு ஆட்கள், அல்லது நாட்டுக்கு போறன் என்றுதான் அந்த நிலத்தை அடையாளப்படுத்தி பேசுகிறார்கள் என்றும் உண்மை அது எவ்வளவு தூரம் நியாயமான சொல்லாடல் என்பதை நியாயப்படுத்த முற்பட்டவர் எங்களுக்கு எங்கே நாடு இருக்கிறது நாங்கள் நாடோடிகள் அவர்கள் தானே நாட்டு மக்கள் என்று ஆசிரியரே நேரடியாக பேசுவதின் ஊடாக சுட்டிச்செல்லுவார். மேலும் நாட்டுபுற சிங்களவருக்கும் லயத்தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு சிங்கள மக்களின் கல்வி நிலைகளின் போக்கு தமிழ் சமூகத்தின் உயர் நிலையினராக இருக்கும் பெரிய கங்காணியினரின் குடும்ப பிள்ளைகளுடனான கல்வி நிலைமைகள் என்றெல்லாம் பல்வேறு விடயங்களை கூறி செல்வது நாவலின் இன்னுமொரு சிறப்பாகும்.
இவ்வாறு மலையக மக்கள் இதுவரை கண்ட அத்தனை தேசிய இடர்களையும் அவர்களின் வாழ்வியல் போக்குகளையும் மாறுதல்கள் என்ற பெரும் புனைவின் வழி தெளிவத்தை ஜோசுப் விபரமாக சொல்லிச் செல்கிறார்.