வெள்ளம்

“சிவப்பு நிறத்துல ஒரு பைக் நிக்குது பாருங்க. அங்க நிப்பாட்டுங்க,” என்றான் சுதாகர். ஆட்டோ அவனை அனாதையாக நடுத் தெருவில் விட்டுவிட்டு அவனைச் சுற்றி அரைவட்டமிட்டுச் சென்றது.

லேசான தூரல் மட்டுமே இருந்தது. தாமரைப்பூ போட்ட இரும்புக் கதவைத் திறந்து கொண்டு, யாரோ போட்ட மனித கழிவு போல நிற்க்கும் மஞ்சள் கட்டிடத்தை நோக்கி நடந்தான் சுதாகர்.

சென்னையிலேயே இது போன்ற இரண்டு கதவு கொண்ட வீடுகள் நூறுக்குள் தானிருக்கும். அரியப் போக்கிஷமாகக் கருதி பழமை அழியாமல் இருக்க வீட்டில் எந்த மரமாத்துப் பணியும் செய்யாமல் அதன் வீட்டின் உரிமையாளர் காத்து வருகிறார். காலிங் பெல் ஸ்விட்சில் நீல நிற டேப்பைச் சுதாகர் சுற்றியிருந்தான். வேலை செய்யாத காலிங் பெல்லை அடித்துவிட்டு ஏதோ மந்திரிகள் போல வீட்டின் முன் காத்திருந்துவிட்டு கடைசியில் பிச்சைக்காரர்களைப் போல கதவைத் தட்டுகிறார்கள். அவர்கள் ஏன் தங்களை மந்திரிகளாக நினைத்துக்கொள்ள வேண்டுமென நினைத்து டேப்பை சுற்றிவிட்டான். வலதுபுறத்தின் நடுப் பக்கத்தில் உடைந்துபோன இரும்பு கட்டிலிலிருந்து எழுந்திருக்கும்போது எப்படிச் சத்தம் வரும் என்று கேட்க வேண்டுமானல் இரவு மணி ஒன்பதுக்கு மேல் சுதாகர் வீட்டுக் கதவைத் தட்டினால் தெரியும். ‘டொக்… டொக்…’ இது ஒன்றும் குதிரை ஓடும் சத்தமில்லை, சுதாகரின் அம்மா ஊன்றுகோலை வைத்துகொண்டு நடக்கும் சத்தம். கடைசியாக ‘டக்…’ கதவு திறந்தேவிட்டது.

நீல நிறப் புள்ளி வைத்த வெள்ளை நைட்டியில் தென்னைநார் துடைப்பக்கட்டை போல இருந்த ஹேமா ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டு சுதாகரைப் பார்த்தாள். அந்த ஊன்றுகோல் அலுமனியத்திலானது. நீல நிறச் சட்டகத்துடன் அதன் ஒரு பக்க கைப்பிடி சற்று தளர்ந்து போனதால் சத்தமிடும்.

“ரெட் அலர்ட் கொடுத்திருக்கரானுகனு புள்ளையாண்டானுக்கு தெரியுமோ?”

சுதாகர் உள்ளே வந்தான். அம்மா பின் தொடர்ந்தாள். சுவரில் மாட்டப்பட்டிருந்த டிவி இன்று அமைதியாகிக் கிடந்தது. மின்சாரம் இல்லை. டிவிக்கு பின்னால் எட்டுக்கால் பூச்சியின் வலை. ஹேமா நன்றாக இருந்த நாட்களில் இப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை. கதவுக்கு எதிர்ப்பக்கம் இருந்த சிவப்புக் கலரில் பூப்போட்ட இலவம்பஞ்சு சோபாவின் மேல் காய வைக்கப்பட்டத் துணிகள் கிடந்தன. கதவை ஒட்டி சுதாகரின் மேசையில் புத்தகங்கள், காப்பி டம்ளர், தின்று போட்ட பிளாஸ்டிக் கவர் எனக் குப்பைத் தொட்டியாய் இருந்தது.

“சும்மா அதெல்லாம் ஒன்னும் இருக்காது,” எனச் சொல்லிக் கொண்டே தோளில் இதுவரை சுமந்த பேக்கைத் தூக்கி சோபாவில் போட்டுவிட்டு ரெஸ்ட் ரூம் நோக்கி நடந்தான் சுதாகர்.

“கண்ட இடத்துல கண்டத தூக்கி போடறது…” என அம்மா புலம்பியவாறு பேக்கைப் பிரித்துக் கொண்டிருந்தாள்.

சமையல் அறையைச் சூரிய பகவான் என்றும், ஹாலை பூமி என்றும், படுக்கை அறையை நிலவு என்றும் கொண்டால், சுதாகர் வீட்டில் எப்போதும் சூரியக்கிரகணம் தான். ரெஸ்ட் ரூம்மை நெப்டியூன் என்றுதான் சொல்ல முடியும். பாரம்பரியமாகக் கட்டப்பட்ட பிராமண வீட்டில் உள்ளே அதனை எப்படி வைக்க முடியும்? நனைந்து கொண்டுதான் ரெஸ்ட் ரூமுக்குள் சென்றான் சுதாகர். மின்சாரமில்லாமல் கொஞ்சம் கஷ்டப்பட்டான். தேனீ காதுக்குப் பக்கத்தில் சுத்திக் கொண்டிருப்பதைப் போல அவன் மனதுக்குள் அந்தக் கதை குடைந்து கொண்டிருந்தது. எப்படியாவது அதை இப்போதே எழுதிவிட வேண்டுமென மலம் கழிக்கும்போது முடிவு செய்துவிட்டான். ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வரும்போது மழை கனமானது. கண்களை மூடினால் இருட்டு அறையை நிறைக்கும் வெளிச்சம் போல பரவுகிறது இந்த மழையின் இசை. கண்களைத் திறந்தால் சாதாரண மழையின் சத்தமென இருக்கிறது சுதாகருக்கு. தனக்குப் பித்துபிடித்துக்கொண்டு விட்டதோ என நினைத்தான் சுதாகர்.

“பித்துக்குளி…பித்துக்குளி…இப்படி மழைல நிக்கனும்னு வேண்டுதலா?” பில்ட்டரில் டிக்காஸனை ஊற்றினாள் அம்மா. மூன்று நாட்களாக இப்படி ஒரு காப்பியைத் தவறவிட்டுவிட்டோமே எனத் தன் மனதுக்குள் எண்ணியவனாகச் சமையல் அறைக்குள் வந்தான். மரக்கதவு குளிர்க்காலம் வந்தாள் கர்ப்பிணி போல ஆகிவிடுகிறது. அதனைச் சாத்தி மூடுவதென்பது பீமனால் மட்டுமே முடிந்த காரியம். மழை நீர் புழக்கடை கதவுக்குப் பக்கத்தில் ஏறிவிட்டிருந்தது. சென்ற மழை காலத்தைப் பார்த்துவிட்டு வாசப்படியை வாசக்காலுக்கு மேலே உயர்த்துவிட்டிருந்தனர். அம்மாவுக்கு இது என்னவோ ஒரு ஸ்பிடு பிரேக்கர் போல இருக்கும். மலையேறிகள் போல் கணக்காக ஊன்றுகோலை வைத்துக் கொண்டு ஏறி இறங்குவாள் அம்மா. மழை கடுமையாகிக் கொண்டிருந்தது. இன்னும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர். நீரின் மட்டம் வேகமாக எழுந்து உள்ளே வர முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

“ஆராய்ச்சி எல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்… எடுத்துக் குடி…” காபி வாசம் அவனைப் போதையுற வைத்தது.

‘டொக்… டொக்…’ சத்தம் ஹாலை நோக்கிச் சென்றது. தன் பிரமைக்குள் இருந்து வெளியே வராத சுதாகர் இன்னும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். பூச்செடிகள் வளர்க்க வாங்கிய செம்மண்ணால் நீர் இப்போது சிவப்பாக மாறியிருக்கிறது. அதன் மேல் புழக்கடையின் குப்பை செத்தைகள் எல்லாம் மிதந்தன. பழங்கால குப்பைகளும் கூட. எவ்வளவு காலத்துக் குப்பை என்று சொல்வது கஷ்டமானது. மனிதக் காலத்துக்கு முந்தைய குப்பைகூட இருக்கும். பூச்சி, பூனை, நாய், இன்னும் பல. இது ஒன்றும் சாதாரண நீர் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.
“கடங்காரனுக…ரோட்ட மேல ஏத்தி…வீட்ட தனுஸ்கோடி கனக்கா மாத்திவிட்டானுக… டேய் சுதா…பாரு தண்ணி உள்ள வரப் போகுது” எனக் கத்தினாள் அம்மா.

வேகமாக ஹாலுக்கு ஓடினான். அம்மா பீதியுடன் வெளியே நிற்க்கும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இருந்த ஒரு படிக்கட்டையும் தாண்டிவிட்டது வெள்ளம். “பிள்ளையார் கனக்கா நிக்கற. போய் எதாவது பண்ணுடா. இல்ல வீட்டுக்குள்ள வந்துடும்.” என்றாள் அம்மா.

புழக்கடைக்கு ஓடி, முழங்கால் அளவு இருந்த வெள்ளத்தைப் பொருப்படுத்தாமல் மம்முட்டியைத் தேடி கண்டுபிடித்து முன் வாசலுக்கு வந்தான். பார்க்க ஏதோ போருக்குப் போகும் படைவீரன் போல இருந்தது. வெள்ளை நிற சாக்கை அம்மா எடுத்துக் கொடுக்க, இரண்டு சாக்கு நிறைய மண்ணைக் கொட்டி படிக்கட்டுக்கு மேல் வைத்துவிட்டு இடைவெளிக்குச் சணல் சாக்கைத் திணித்தான். இடுப்பு முறிந்து விழுவது போல வலித்தது.

ஒருவாராய் சமாளித்துவிட்டோம் எனச் சுதாகர் நினைக்கும் போது, “இங்க வந்து பாருடா சுதா…” எனக் கத்தினாள் அம்மா.

மம்முட்டியைத் தன் ஆயுதமென தோளில் சாய்த்துக்கொண்டே புழக்கடைக்கு ஓடினான். வெள்ளம் புழக்கடை வாசல்படியைத் தாண்ட ஆரம்பித்திருந்தது. வெள்ளத்தில் வீடு மிதப்பதைப் போலவும் துடுப்பு போடாவிட்டால் நடுக்கடலுக்கு இழுத்துச் சென்றுவிடுமென சுதாகர் மனதில் தோன்றியது.

“குடு நா வேண்ணா மண்ண அள்ளிப் போடற” என்று சொல்லி அவன் கையில் இருந்த மம்முட்டியைப் பிடுங்கினாள் அம்மா.

வெடுக்கென அம்மாவின் கைகளைத் தட்டிவிட்டு புழக்கடை வெள்ளத்தில் இறங்கினான். திரும்பி வரும் போது அம்மா அங்கில்லை. முன் வாசலில் எப்படிப் பாதுகாப்பு அரணை அமைத்தானோ அதே போல புழக்கடைக்கும் செய்தான். குனிந்து வேலை செய்யாதவர்கள் திடீரென குனிந்து வேலை செய்தால் தலை சுற்றிக் கொண்டு வரும். இதுவென்னவோ சுதாகருக்குக் கப்பலில் இருப்பது போன்ற உணர்வை அளித்தது.

“சுதா…” என்று மட்டும் அம்மா கத்துகிறாள்.

கிட்டத்தட்ட தான் வென்றுவிட்டோமென நினைத்துக் கொண்டிருந்த சுதாகரின் எண்ணத்தில் மண் மூட்டையைப் போட்டுவிட்டாள் அம்மா. இடுப்பில் கை வைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான். படுக்கை அறையில் நின்று கொண்டிருந்தாள் அம்மா. கண்களில் இருக்கும் கண்ணீர் படலம் போல படுக்கை அறைக்குள் முழுவதும் தண்ணீர் வந்திருந்தது. இரண்டு கட்டில் போட்டுவிட்டு நான்கு பேர் அங்கு நிற்கலாம். தன் புலனாய்வதற்கான நேரம் வந்துவிட்டதென நினைத்தான் சுதாகர்.

அம்மாவின் உடைந்து போன இரும்புக் கட்டிலை நகர்த்திவிட்டுத் தன்னுடைய மரக்கட்டிலுக்கு அடியிலிருந்து நீர் வருவதைக் கண்டான். மரக்கட்டிலுக்குப் பின்னால் அடுத்த வீட்டின் கதவு. பொதுவாகச் சுவர்தான் இருக்க வேண்டும். ஆனால், சுதாகர் வீட்டு ஓனர் கொஞ்சம் வித்தியாசமானவர், கதவை வைத்துவிட்டார். பெரிய கலாரசிகர் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரே பொர்சனாக இருந்த வீட்டை இரண்டாகப் பிரித்தார். விளைவு சுதாகர் வீட்டில் சூரியக்கிரகணம், பக்கத்து வீட்டில் சந்திரகிரகணம். மரக்கட்டிலை ஒரு வழியாய் தள்ளிவிட்டு கதவுக்கு அடியில் பார்த்தான். கதவிடுக்கு வழியே நீர் தயங்கியவாறு பிறகு சுதாகர் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தது. இருவருக்கும் குழப்பம்.
“நம்ம புழக்கடை வாசல்படிய உசத்திட்டொம். ஆனா ஆனந்த் வீட்டுல ஏத்துல சுதா…பின் பக்கமா வந்து உள்ள வந்திருக்குன்னு நினைக்கற,” என்றாள் அம்மா.

“கால் போடு ஆனந்துக்கு,” என்று சொல்லிக் கொண்டு கதவின் தாழ்ப்பாள் இவர்களது வீட்டின் பக்கம் இருப்பதால் அதனை இழுத்து திறக்க முயற்சித்தான் சுதாகர்.

“அத எதுக்கு டா திறக்குறா? ஆள் இல்லாத வீட்டுல்ல…”

“ஆள் இல்லையா..எங்க போனாங்க இந்த மழைல?”

“யாருக்கு தெரியும்?”

சுதாகர் திரும்பிப் பார்த்தான். அம்மா தனது ஊன்றுகோலை மெதுவாக நகர்த்தி ஹால் பக்கம் நகர்ந்து கொண்டிருந்தாள். ஊன்றுகோலை அவள் குதிரை என வேண்டுமிடங்களுக்கு செலுத்துகிறாள். அது அவளைச் சுமந்து கொண்டு ஓடுகிறது..டொக்….டொக்….

கதவைத் திறக்கலாமா? வேண்டாமா? எனக் குழப்பமாக இருந்தது. சணல் சாக்கை எடுத்து கதவின் இடைவெளியில் செருகினான். முதலில் படைவீரர்கள் போல விறைப்பாக இருந்த சணல் சாக்கில் நீர் ஏற ஏற கனிந்து ஒரு பித்தன் போலாகிக் கொண்டு வந்தது. மூன்று சாக்குகளை வைத்துவிட்டு போதுமா எனப் பார்த்துக் கொண்டிருக்கிறான் சுதாகர். ‘டொக்…டொக்…’ அம்மா புழக்கடை கதவைப் பார்வையிடப் போகிறாள். இனி வெள்ளம் உள்ளே வர முடியாது அதனால் பயப்பட வேண்டியதில்லை, மழையைப் பார்க்கலாம் எனச் சுதாகர் முன் பக்கம் வந்தான். வெள்ளம் ஒரு பாம்பு போல மணல் மூட்டைகளின் ஓட்டை வழியே உள்ளே வர முயற்சிக்கிறது. சணல் சாக்கு ஒரளவே அதனைத் தடுக்க முடியுமென தெரிகிறது. அதன் ஒரு எல்லை சாலையைக் கடந்த சாய்பாபா பிளாட்டின் மதில் சுவரில் இருக்கிறது, மறு எல்லை சுதாகர் வீட்டு மண் மூட்டையில் இருக்கிறது. ஏதாவது வாகனம் சாலையில் சென்றால் வெள்ளத்தின் அளவு உயர்ந்து மணல் மூட்டையைத் தாண்டி விடுமோ என்ற பயத்தைக் கொடுக்கிறது, பிறகு கீழே இறங்குவதைப் பார்த்தால் நடனமாடுகிறதோ என்று தோன்ற வைக்கிறது. மழை இன்னும் விட்டபாடில்லை. இப்படியே போனால் வெள்ளத்தின் மட்டம் உயர்ந்து வீட்டிற்குள் நீறேரும். கரண்ட்டும் இல்லை மோட்டர் எதாவதை வைத்து நீரை வெளியேற்றலாம் என்றால். நீரை எடுத்து எங்கே விடுவது?

“சுதா…” அம்மா கத்துகிறாள்.

போச்சு மறுபடியும் எதாவது பிரச்சனையாக இருக்கும். இந்த முறை தன்னால் முடியாது எனச் சோர்ந்தவாறு நடந்து புழக்கடைக்குச் சென்றான் சுதாகர்.

“காபி ஆறிப்போயிட்டது… ஏன் குடிக்கல…” காப்பியை அடுப்பேற்றினாள்.

“எனக்கு சூடு பண்ணா பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்ல…”

“உனக்கு யாருடா சூடு பண்றது… நா குடிக்கற”

சுதாகருக்கு ஏமாற்றமாக இருந்தது. வெள்ளத்தின் மட்டம் அப்படியொன்றும் அபாயக் கட்டத்தை எட்டவில்லை. இந்தப் பக்கம் இன்னும் நம் படைவீரர்கள் திடமாகப் போர் செய்கிறார்கள், ஆனால் இந்த கைபர் கணவாய்தான் பிரச்சனை. இல்லை என்றால் நீர் உள்ளே வந்தே இருக்காது எனத் தனக்குள் எண்ணிக் கொண்டான் சுதாகர். அம்மா கையில் டவார செட்டுடன் மெதுவாக குதிரையில் சென்று கொண்டிருந்தாள். காப்பியைப் பற்றி நினைக்கையில் ஆத்திரம் வந்தது. தனக்கு ஒரு டம்ளர் கிடைத்தால் எப்படி இருக்கும்? குளிருக்கு அப்படியே தொண்டையில் இதமாக இறங்கும்.

“சை…” என மணல் மூட்டையை உதைத்தான். அது லேசாக நகர்ந்து கொண்டதால் பாம்புக்கு லேசான வழி ஏற்பட்டுவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு. மறுபடியும் மூட்டையை நகர்த்தி பழைய இடத்திற்கே கொண்டு வந்தான். தன்னுடைய காப்பி குடிக்கும் ஆர்வம் தெரிந்தும் அம்மா ஏன் இப்படி பண்ணுகிறாள் என நினைக்கும்போது சுதாகருக்கு எரிச்சல் ஏறியது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ஆனால், மழை இன்றைக்கு உங்களை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்பது போல கொட்டிக் கொண்டிருந்தது. அம்மா தன் கால்களை உயர்த்தி ஈசி சேரின் மீது வைத்துக் கொண்டாள். திரும்பிப் பார்த்த சுதாகருக்கு ஒரே அதிர்ச்சி. தான் தோற்றுவிட்டோமோ? என எண்ணி வேகமாக தன் ஆயுதத்துடன் ஹாலுக்கு வந்தான்.

“தண்ணீ வந்துடுச்சுடா….ரோட்டுல ஓடுற தண்ணீ வீட்டுக்கு மேலே ஓடுது…என்ன பண்ண முடியும்? ” அம்மா சொல்லிக்கொண்டே காப்பிக் கப்பைக் கால் ஆடும் சிவப்பு நிற பிளாஸ்டிக் டேபிலிள் வைத்தாள்.

பெட் ரூம் போலவே இங்கும் தண்ணீரின் அளவு இருந்தது. தோற்றுப் போனவனாக சுதாகர் தன் படைவீரர்களின் நிலைகளைப் பார்க்க போனேன். இது ஒன்றும் நவீனமான சிமெண்ட் போட்ட படைகள் கிடையாது, ஆகப் பழமையான மணல் மூட்டைதான். “தலைக்கு மேல் வந்தால் என்ன செய்வது?” எனச் சொல்லிக்கொண்டு அப்படியே நின்றான் சுதாகர்.

தான் ஒன்றும் அப்படி விட்டுக்கொடுக்க கோழை கிடையாது என வேகமாகத் தன் கையில் இருந்த ஆயுதத்தை மாற்றினான். இப்போது கடப்பாரை. வானிலிருந்து விழும்போது அம்பு பின்னர் தரையில் விழுந்த பின்பு பாம்பு. இதுதான் எதிரிகளின் ஆயுதம். இந்த மலைப்பாம்பின் உடம்பைக் குறைத்தால் ஒழிய என் வீட்டை அது விழுங்குவதிலிருந்து காப்பற்ற முடியாது. கடப்பாரையை வைத்து மதில் சுவரைக் குத்தினான். வெள்ளம் வெளியே போவதற்கான ஓட்டையின் உயரம் அதிகமாக இருப்பதால் வெள்ளத்தின் உயரமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மதில் சுவருக்கு வெளியே போய் மம்முட்டியால் பெரிய வாய்க்காலை ஏற்படுத்தி அதனைச் சாக்கடைக்கு உள்ளே விழுமாறு இணைத்துவிட்டு கடப்பாரையால் அந்த வாய்க்கால் இருக்கும் பக்கமாய் சுவரைக் குத்திக் கொண்டிருந்தான் சுதாகர். சட்டென மாட மாளிகையின் ஜன்னல் திறந்து ‘சாத் சாத் பரமசிவம்’ என்னும் வீட்டு ஓனரின் தரிசனம் கிடைத்தது.

“சுவத்தை எல்லாம் உடைக்க கூடாது…”என்று கத்தினார்.

அவரைப் பொறுத்தவரை அவர்தான் மன்னர். துணுக்குற்ற சுதாகர் நிமிர்ந்து அவரைப் பார்த்தான். அவர் இன்னும் அதையே சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். என்ன சொல்கிறார் என்பது சுதாகர் காதில் விழுந்தாலும் காதில் விழாதவனைப் போல காது கேட்கவில்லை எனச் சைகையால் அவரிடம் சொன்னான். மழையின் உக்கிரம் அப்படி என்று சொல்லிக்கொள்ளலாம். காதெல்லாம் நன்றாகத்தான் கேட்டது, இவர் சொல்லுவதைக் கேட்டால் வீட்டிற்குள் வெள்ளம் வந்துவிடும். ‘டப்… டப்…’ கடப்பாரை மதில் சுவரில் மோதி அதன் அதிர்வு சுதாகர் கைகளில் தெரிந்தது.

“ஐய்யோ சுவத்த உடைக்கரானே…அது அப்படி விழுந்துடும் போல…யாராவது வாங்களே” எனக் கத்தினார் பரமசிவம்.

பதிலுக்கு மழையும் காற்றும் கத்தியது. லேசாக பள்ளம் ஏற்பட்டுவிட்டதில் திருப்திதான் சுதாகருக்கு. மலைபாம்பு மணல் மூட்டைகள் மேல் ஏறி மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்த சுதாகர் கோபமுற்றான். கடப்பாரையை வேகமாக இடித்தான். கைகளை முடிந்த வரை கடப்பாரையின் கூர் முனைக்கு எதிர்பக்கம் வைத்து இடித்தால்தான் கை அதிராமல் எளிதாக உடைக்கலாம். அதெல்லாம் எப்படி நவநாகரிக இளைஞனிடம் எதிர்பார்க்க முடியும். ஒருவேளை மழையினால் இந்தச் சுவரை உடைப்பதைப் பற்றி கதை எழுதச் சொல்லியிருந்தால் எழுதியிருப்பான். இது அப்படி இல்லவே. ஒரு வழியாய் கடப்பாரை சுவரைக் கடந்து வெளிப் பக்கம் சென்றது. மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான் சுதாகர். மாளிகை ஜன்னலில் நின்று மன்னர் பார்த்துக் கொண்டிருக்கிறார். மழை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டது. வானத்தை அண்ணாந்து பார்க்கிறான் சுதாகர். கருத்தரித்த வானம் இன்னும் தன் பிள்ளைகளை ஈனும் என்றே தோன்றியது. பேறுகாலத்துக்குச் சிறு ஓய்வு போல. எதிர் படைகள் பின் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இதோ தன் கால்கள் வழியே வேகமாக ஓடுவதைத் தன்னால் உணர முடிகிறது. கத்தி கத்தி ஓய்ந்து போன மன்னர் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு கோபமாகப் பார்க்கிறார். மலைப்பாம்பு இப்போது மணல் மூட்டைக்குக் கீழே பம்மிக் கொண்டது. கரு நிற மழைக்கோட்டும் ஒரு கையில் கடப்பாரையும் மறுகையில் மம்முட்டியும் பிடித்துக்கொண்டு நடக்கும் சுதாகரைப் பார்த்தால் ‘முன்நின்று கல்நின் றவர்’ என்ற குறல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

‘காற்று வந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததும் காற்று வந்ததா’ என மனதுக்குள் பாடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். உடல் வலி தாங்கமாட்டாமல் சாய்வு நாற்காலியில் போய் தொப்பென்று விழுந்தான் சுதாகர். பக்கத்தில் இருந்த மேசையில் மழைப்பாடல், திருடன் மணியன் பிள்ளையின் புத்தகம் கிடந்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கால் கெண்டை வலியில் துடித்தது. பதிலுக்கு முதுகு வின் வின் என்றது. தலை கிறுகிறுத்து வலித்தது. மேசையைச் சுற்றி நிறைய எழுதி கசக்கிப் போடப்பட்ட காகிதங்கள் கிடந்தன. எல்லாம் அவன் முதல் சிறுகதை எழுதும் முயற்சியின் அடையாளச் சின்னங்களாக இருந்தன. சாய்வு நாற்காலியை அமர்ந்தவாரே மேசைக்குப் பக்கத்தில் இழுத்துக்கொண்டு சென்றான்.

“என்னடா?” என அம்மா அந்தச் சத்தத்தைப் பார்த்துக் கேட்டாள். பதிலேதும் சொல்லாமல் பேனாவை எடுத்து காகிதத்தின் மேல் வைத்தான். உடலின் வலி, களைப்பு எல்லாவற்றையும் உதறிவிட்டு அவனது பேனா முனை காகிதத்தில் இருந்தது. அதிலிருந்து எந்த எழுத்தும் வரவில்லை. அப்படியே வெள்ளை நிற காகிதத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனது தலை ஏதோ சுழலுக்குள் சிக்கி வேறு உலகுக்குள் செல்வது போல இருந்தது. அந்த உலகத்தில் வெள்ளை நீரோடைப் போல சூரியனின் பிரகாச ஒளி வானத்திலிருந்து வழிந்தது. அதீத வெள்ளை நிறம் கண்களை உறுத்தியது.

அவனுக்குத் தாகம் என்ற உணர்வு மெல்ல மேலிட்டது. பிறகு அது தீவிரமாகி தாகம் தாகம் என உள்ளம் அதிர, அவ்வுணர்வால் அலைகழிக்கப்பட்டான். கண்களைத் திறந்தான். வெள்ளை நிறக் காகிதமும் தாகம் என்ற உணர்வும் மட்டுமே அவனுக்கு அப்போது தெரிந்தது. மெதுவாக எழுந்து வெளியே வந்தான். பரிஷ்த் மைந்தன் ஜனமேயனின் வேள்வியில் கிடந்த தஷ்கன் பாம்பு போல களைத்திருந்தது மலைப்பாம்பு, ஆனாலும் தன்னைப் பின் நகர்த்தி தெருவழியாகத் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தது.

1 comment for “வெள்ளம்

  1. Karthik
    July 1, 2024 at 9:42 pm

    யதார்த்தமான கதை சொல்லல்…நல்ல முயற்சி…இதைப் போன்ற புது இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் வல்லினம் நீடுழி வளர்க வாழ்க!!!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...