இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!

2020எப்போதும் சொல்வதுதான். எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. பிரகாசமான முகத்துடன் என்னை நீங்கள் அன்று தரிசிக்கலாம். கடந்து சென்ற ஒரு வருடத்தை புதிய ஆண்டில் நின்றுகொண்டு அசட்டையாக எட்டிப்பார்ப்பதில் ஒரு ‘திரில்’ உண்டு. ஏதோ அதெல்லாம் யாருக்கோ நடந்ததுபோல. அப்படிப் பார்க்கும்போது, பெரும்பாலும் மகிழ்ச்சியும் துக்கமும் உலகியல் சார்ந்த நிகழ்வுகளில் குவிந்ததில்லை. பணித்துறை, கல்வித்துறை, பொருளாதாராம், குடும்பம் என எதில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களையும் நான் பொருட்படுத்திப் பதிவிட்டதில்லை. ஆனால் என் தாய்மாமாவின் மரணம் என்னை இம்முறை அதிகமே தடுமாற வைத்தது. மூளையில் மூன்று புற்றுக்கட்டிகள். அவற்றைக் கண்டுப்பிடித்த முதல் நாளில் இருந்தே காப்பாற்ற முடியாது என உள்ளூர அறிந்த நிலையிலும் ஏதோ நம்பிக்கையில் வைத்தியம் செய்ய அலைந்துகொண்டிருந்தேன்.

இலக்கியச் சூழலிலும் இதே நிலைதான்.

இவ்வருடத்தின் தொடக்கம், எழுத்தாளர் பிரபஞ்சனின்அக்கினி மரணச்செய்தியால் துக்கம் மிகுந்த வடுக்களுடன் தயங்கியபடியே விழித்தது. அவரை மலேசியாவுக்கு மீண்டும் அழைத்துவர வேண்டும் என்ற ஆவல் ஒரு நொடியில் இல்லாமலாகிபோனது. நம் வாழ்வில் நம்மை சுயபரீசீலனை செய்துகொள்ள சிலரது தூண்டுதல்கள் காரணமாக இருக்கும். பிரபஞ்சன் எனக்கு அப்படியானவர். முதன்முறையாக ரஷ்ய இலக்கியங்களை வாசிக்க வேண்டிய அவசியத்தை எனக்குச் சொன்னவர்; தூண்டியவர். பத்து வருடங்களுக்குப் பின் அம்ருதாவில் உலக இலக்கியங்கள் குறித்த தொடர் வந்தபோதும் அதனை முதலில் வாசித்து பாராட்டியவரும் அவர்தான். தொடர்ந்து அக்டோபர் மாதம் கவிஞர் அக்கினி சுகுமாறன், நவம்பர் மாதம் மா.இராமையா என எழுத்தாளர்களின் தொடர் மரணங்கள் மலேசிய இலக்கியத்தில் வெறுமையை ஏற்படுத்துவதை உணர முடிந்தது. இவர்கள் இருவரையும் ஆவணப்படம் இயக்கியிருந்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவர்கள் வழியாகவே அவர்கள் வாழ்வையும் ஒரு காலகட்டத்தின் இலக்கிய வரலாற்றையும் கடந்த ஆண்டில் முழுமையாகப் பதிவு செய்ய முடிந்திருந்ததில் நிம்மதி.

செல்வன் காசிலிங்கம்டிசம்பரில் செல்வன் காசிலிங்கம் அவர்களின் மரணச் செய்தி வந்தபோது மனம் அதை ஏற்கனவே எதிர்பார்த்தே இருந்தது. பெரும்பாலும் முகநூலில் ஏதாவது பதிவிடுபவர் அவர். அடிக்கடி கருத்துரைப்பவர். தொடர்ந்து சில மாதங்கள் அவர் முகநூல் மௌனமாக இருந்ததும் எந்தக் குறுந்தகவல்களுக்கு பதில் கூறாமல் இருந்ததும் நோயின் கொடுமை அதிகரித்திருக்கக்கூடும் என அனுமானித்திருந்தேன். தொண்டையில் புற்றுப் பாதிப்பு இருந்ததால் அவருடனான உரையாடல்கள் எழுத்து வடிவத்தில்தான் இருந்தன. ‘மிச்சமிருப்பவர்கள்’ நூல் வடிவம் பெறும்போது செறிவாக்க வேலைகள் முழுவதும் அப்படித்தான் நடந்தன. 1980களிலேயே எழுதத் தொடங்கியவர் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் வல்லினம் நடத்திய சிறுகதை போட்டிகளால் மீண்டார். உற்சாகமாக எழுதினார். அதன் உச்சம் ‘மிச்சமிருப்பவர்கள்’ குறுநாவல். மலேசிய நாவல் இலக்கியத்திற்கு அவரது முக்கிய பங்களிப்பு. அதேபோல வாசகர் பூங்கோதை மரணமும் வல்லினம் நிகழ்ச்சிகளில் மாய மௌனத்தை ஏற்படுத்தியிருந்தது.

 பயணங்கள்

இவ்வருடம் மூன்று முறை வெளியூர் பயணம் சாத்தியப்பட்டது. மூன்றும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகள். பயணங்கள் வழியே எழுதுவதற்கான மனவிசாலம் அதிகரிக்கிறது. புதிய மனிதர்கள் கொடுத்துச் செல்லும் அனுபவங்கள் எப்படியோ வீடு வரை தொற்றிக்கொண்டு வருகிறது.

கேரளாபிப்ரவரி முதல் வாரம் நண்பர்கள் முருகன் மற்றும் சரவணனுடன் கேரளப் பயணம் மேற்கொண்டேன். அது ஒரு சுவாரசியமான பயணம். கொச்சி, அலப்பி என கொண்டாட்டமான மனநிலையில் சுற்றித்திரிந்தோம். அலப்பியில் நாங்கள் தங்கியிருந்த இடம் அற்புதமான அனுபவத்தைக் கொடுத்தது. ஓயாமல் காயலில் எழுந்த ஓசை, மனம் முழுவதும் மெல்லிய அலையை எழுப்பியபடி இருந்தது.

மே முதல் வாரம் விஷ்ணுபுரம் முகாமில் பங்கெடுக்க ஊட்டிஊட்டி சென்றேன். பிரதான நோக்கம் ஜெயமோகனைப் பார்ப்பதுதான். அதுவே படைப்பூக்கத்தை உருவாக்கும். ஊட்டியில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் பலரையும் சந்திக்க முடிந்தது. நண்பர்கள் கடலூர் சீனு, ஈரோடு கிருஷ்ணன், ராஜகோபால் என கூர்மையான வாசகர்களை ஒரே இடத்தில் சந்திக்க முடிவதும் அவர்கள் அளிக்கும் அதிர்வலைகளைச் சுமந்துகொண்டு அடுத்த சில மாதங்களை உற்சாகமாக ஓட்ட முடிவதும் கொடை. இம்முறை அருண்மொழி அக்கா அவ்வாறான ஓர் உந்துதலை வழங்கினார். முழுக்க மூன்று நாட்கள் இலக்கிய வாசிப்பு சார்ந்த பகிர்வுடன் சூழல் அமைந்தது.  ஏப்ரல் வரை எழுதிக்கொண்டிருந்த நாவலைத் தொடர முடியாமல் இருந்து, ஊட்டி பயணத்துக்குப்பின் புதிதாக ‘பேய்ச்சி’ நாவல் எழுதும் உந்துதலைப் பெற்றேன். ஊர் திரும்பியதும் பேய்ச்சியின் முதல் வாக்கியம் வாய்த்தது.

சென்னைமீண்டும் நவம்பர் மாதம் சென்னைக்கு மட்டும் நான்கு நாள் பயணம். எழுத்தாளர் ஜெயமோகன், ஜா.ராஜகோபாலன், வீ.அரசு, தமிழ்ப்பிரபா, யுவன் சந்திரசேகர், பிரளயன், பச்சோந்தி இயக்குனர்கள் ரஞ்சித், அதியன், ஓவியர் மணிவண்ணன் என பலரையும் சந்திக்கவும் ‘பேய்ச்சி’ நாவலை  வழங்கவும் முடிந்தது.

வல்லினம் செயல்பாடுகள்

நாவல்31.3.2019 வல்லினத்தின் முதல் நிகழ்ச்சி நடந்தது. சீ.முத்துசாமியின் ‘மலைக்காடு’, அ.பாண்டியனின் ‘ரிங்கிட்’, செல்வன் காசிலிங்கத்தின் ‘மிச்சமிருப்பவர்கள்’ ஆகிய நாவல்களை அடிப்படையாகக் கொண்டு நாவல் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எழுத்தாளர்கள் இமையம் மற்றும் சு.வேணுகோபால் இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

சுனில்தொடர்ந்து 12.5.2019இல் சிறுகதை கருத்தரங்குக்காக சுனில் கிருஷ்ணன் வருகை முக்கியமானது. சமகால சிறுகதைகளின் போக்கு குறித்த அவரது உரையும் கலந்துரையாடலும் நல்ல பதிவாக அமைந்தது. சிங்கை நண்பர் சரவணனுடன் நெருங்கிப் பழக முடிந்தது.

கவிஞர் சாம்ராஜ் ஓரிரு நாட்கள் மலேசியாவில் தங்கிச் சென்றது தனிப்பட்ட முறையில் எனக்குப் பயனானது. கோலாலம்பூரில் நிகழ்ச்சிகள் என ஏற்பாடு செய்யாவிட்டாலும் கவிதைகள் குறித்தும் சமகால இலக்கியங்கள் குறித்தும் உரையாடல் சாத்தியமானது.

இவ்வருடம் டிசம்பர் 20 முதல் 22 வரை நடந்த இலக்கிய முகாம்நவீன இலக்கிய முகாம் வல்லினத்தின் பெரிய நிகழ்ச்சியாக அமைந்தது. சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களை மையமாகக்கொண்டு இயங்கும் கூலிம் நவீன இலக்கிய களத்துடன் இணைந்து இம்முயற்சியைத் துவக்கினோம். முகாமில் ஓர் அங்கமாக சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ய முடிந்தது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. சை.பீர்முகம்மதுவின் நாவலும் இந்த விருது விழாவை ஒட்டி பதிப்பிக்கப்பட்டது. முகாமை வழிநடத்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், சு.வேணுகோபால், சாம்ராஜ் மற்றும் அருண்மொழி ஆகியோர் கலந்துகொண்டது இவ்வருட இறுதியை உயிர்ப்பாக்கியது.

வல்லினம் இணைய இதழ் வழி எழுத்தாளர்கள் இமையம், சை.பீர்முகம்மது ஆகியோருக்குச் சிறப்பிதழ் கொண்டுவர முடிந்தது நிறைவான அனுபவம். ஒரு படைப்பாளியின் படைப்புகளைப் பல்வேறு கோணங்களில் வாசித்து ஆராய்ந்து பதிவு செய்து வைத்தல் அவர்களுக்கும் இலக்கியச் சூழலுக்கும் செய்யும் மரியாதை. அதேபோல பல புதிய படைப்பாளிகளை வல்லினம் வழி அறிமுகப்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சியான ஆண்டாக இருந்தது.

 

நூல் பதிப்பு

நூல்இவ்வருடம் வல்லினம் பதிப்பகம் வழி நான்கு நூல்களை பதிப்பிக்க முடிந்தது. நான்கு நூல்களுமே தமிழகத்தின் ‘யாவரும் பதிப்பகத்தோடு’ இணைந்து உருவானவை.

வல்லினம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகளில் தேர்ந்தெடுத்த பத்துக் கதைகள் ‘வல்லினம் பரிசுக் கதைகள்’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டது. பல புதிய படைப்பாளிகளின் முதல் சிறுகதை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து, சை.பீர்முகம்மது அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொடர்கதை செறிவு செய்யப்பட்டு ‘அக்கினி வளையங்கள்’ என வல்லினம் விருதை ஒட்டி நாவலாகப் பதிப்பிக்கப்பட்டது. மூன்றாவதாக, எனது அண்மைய கால கவிதைகளுடன் ஏற்கனவே பதிப்பான இரு கவிதை தொகுப்புகளில் இடம்பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் ‘மகாராணியின் Checkmate’ எனும் தலைப்பில் இணைத்துத் தொகுக்கப்பட்டது. நான்காவதாக என் முதல் நாவல் ‘பேய்ச்சி’ வெளிவந்தது. இவ்வருடம் இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம் வரை வாசித்தவர்கள் 006-200x400ஆரோக்கியமான விமர்சனங்களை இந்த நாவல் பெற்றுள்ளது கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

நான் பிறந்து வாழ்ந்த மாநிலத்தில் மனதுக்கு நெருக்கமானவர்களின் அருகாமையில் நாவல் எழுத தூண்டல் பெற்றவர் கையால் ‘பேய்ச்சி’ வெளியீடு கண்டது இவ்வருடமும் நினைத்து மகிழக்கூடிய நிகழ்வாக இருக்கும்.

 

யாழ் பதிப்பகமும் செயல்பாடுகளும்

ஆங்கில நூல்இவ்வருடம் ஏப்ரல் மாதம் யாழ் பதிப்பகம் வழி ‘Excellent Aspirations’ என்ற ஒரு புதிய நூல் மட்டுமே பதிப்பிக்கப்பட்டது. மலேசியாவில் முதன்முறையாக ஆங்கில நூல் தமிழ் விளக்கத்துடன் வெளிவருவது இதுவே முதன்முறை என்பதால் நூல் பரந்த கவனத்தைப் பெற்றது. யாழின் பிற மூன்று நூல்கள் (மலாய், தமிழ், அறிவியல்) மறுபதிப்பு கண்டன.

என்னளவில் யாழ் பதிப்பக நூல்கள் மலேசியச் சூழலில் ஒருயாழ் நூல் சாதனையே. அதன் வழி வெளியிடப்பட்ட நூல்கள்போல பிறிதொரு நூல்கள் இல்லை என உறுதியாகவே சொல்வேன். நான் யாழ் நூல்கள் தயாரிப்பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறேன். நான் மாணவனாக இருக்கையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் திக்குவேன். எனவே ஆசிரியரிடம் சந்தேகம் என எதையும் கேட்கமாட்டேன். ஒரு மாணவன் சுயமாகத் தன் குழப்பங்களைத் தெளிய, எவ்வாறான நூல்கள் இருந்திருந்தால் மேலும் நன்றாகப் படித்திருக்க முடியும் எனக் கருதுகிறேனோ அவ்வாறான நூல்களை மட்டுமே பதிப்பிக்கிறேன். அதில் முழுமையான நிறைவும் அடைகிறேன்.

போட்டியாழ் பதிப்பகம் வழி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போட்டியின் வழி பல புதிய படைப்பாளிகளை அடையாளம் காண முடிந்தது. அதில் பங்கெடுத்த பலரை தொடர்ந்து எழுத வைக்கவும் முடிந்தது.

யாழ் வழி மாணவர்களுக்காக நடத்தும் அநேகமான61325369_2517547944924935_1486134696747204608_n பட்டறைகளையும் இவ்வாண்டு தவிர்த்துவிட்டேன். நாவல் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் என நேரத்தை வகுத்துக்கொண்டேன். நெருக்கமான நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் மார்ச் மாதம் எப்பிங்கம் தமிழ்ப்பள்ளியில் ஒரு பட்டறையும் மே மாதம் UTAR (கம்பார்) இல் ஒன்பது பள்ளிக்கூட மாணவர்களுக்கும் பட்டறையை வழிநடத்தினேன்.

768x480_sjkt-students-ace-global-dancing-cahmpionshipsயாழ் பதிப்பகம் வழி பெறும் லாபத்தில் ஒரு பகுதியை மீண்டும் தமிழ்ப்பள்ளிக்கு பயன்படுத்தும் எண்ணம் இருந்தது. ரஷ்யாவில் நடைபெற்ற வி-அனைத்துலக நாட்டுப்புறவியல் திருவிழா 2019இல் அனைத்துலகக் குழந்தைகள் பிரிவில் முதல் பரிசையும் ஆடை அலங்காரத்திற்கான பரிசையும் பெஸ்ட் ஆர்டிஸ்டிக் விருதையும் பெற்ற ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அடுத்ததாக ஜியார்ஜியாவில் நடைபெற இருந்த அனைத்துலக நடனப் போட்டியில் பங்கேற்க பெரும் தொகை தேவைப்பட்டதால் யாழ் வழி 2000 ரிங்கிட் வழங்கினோம்.

கனடா இலக்கியத் தோட்ட விருது

தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா20200101_090237 தமிழ் இலக்கியத்தோட்டத்தின் ‘சிறப்பு விருது’ இவ்வருடம் எனக்கு வழங்கப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஈழத்தின் மதிப்புமிக்க கல்வியாளர், இலக்கிய விமர்சகர் A.J.கனகரத்னம். தமிழ் மொழி, இலக்கிய ஆய்வாளரான சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷாசா எபெலிங் (Sascha Ebeling), தமிழ் இலக்கியத் தோட்டத்திற்குப் பேராதரவு அளித்துவரும் தமிழ் மொழி ஆர்வலர்களான திரு & திருமதி ஆசீர்வாதம், சோ.பத்மநாபன், முனைவர் ப்ரெண்டா பெக், தமிழறிஞர், கல்வியாளர் டாக்டர் டேவிட் ஷூல்மன்  இரா. இளங்குமரன் மறைந்த கவிஞர் செழியன், தி. ஞானசேகரன், முனைவர் நிக்கோலப்பிள்ளை சேவியர் ஆகியோருக்கு இதுவரையில் இந்தச் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருதை பெற கனடா போக விசா சிக்கல் இருந்ததால் பயணத்தை தவிர்த்துவிட்டேன். ஆனால் இவ்விருதின் வழி வல்லினம் செயல்பாடுகள் விரிவான தளத்தில் அறியப்பட்டது உற்சாகத்தைக் கொடுத்தது.

சர்ச்சைகள்

001இவ்வருடம் பெரிதாக விவாதங்களிலோ சர்ச்சைகளிலோ ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. வயது ஆக ஆக கனிந்துவிட்டேன்போல. இரண்டு விடயங்களில் மட்டும் அழுத்தமான மறுப்பைச் சொல்ல வேண்டி இருந்தது. முதலாவது, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் இலக்கியப் போட்டிகளின் அறிக்கை மலாய் மொழியில் தயாரிக்கப்படுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படும் குழப்பம் சார்ந்தது. என் புளோக்கில் அது குறித்து எழுதியவுடன் ஊடகங்களே அதனை கவனப்படுத்தின. நான்கு நாட்களுக்குள் மலேசிய தலைமை ஆசிரியர் மன்றம் அதற்கான தீர்வை கண்டது மகிழ்ச்சியைக் கொடுத்தது. மற்றது, மறுபடி மறுபடி வைரமுத்துவை அழைத்து வந்து அவர் நூலை விற்றுக்கொடுத்து சம்பாதிக்கு ஏஜண்டு புத்திக்கு எதிரான கட்டுரை. மலேசியப் படைப்பாளிகளின் மேல் கவனம் இல்லாத அமைப்பின் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதனால் மாற்றம் வராது என அறிவேன். செய்பவர்களுக்கு தமிழ் தலைவர்கள் என்ற அடையாளத் தேவை உண்டு. அதற்கு புகழ் உச்சியில் இருக்கும் சினிமா வெளிச்சம் கொண்டவர்களின் எச்சம் அவசியம். இது ஒருவித வணிகம். வணிகர்களை மாற்ற முடியாது.

மற்றபடி கொஞ்சம் உறுப்படியான சில கட்டுரைகள், கவிதைகள் இவ்வருடம் எழுதியுள்ளேன். முழு கவனம் நாவலில் இருந்ததால் ஒரு சிறுகதை கூட எழுதவில்லை என்பது வருத்தம். சில நண்பர்கள் பகைவர் ஆனதுபோல பகைவர்கள் நண்பர்கள் ஆனார்கள். எப்படியாயினும் தொடர்ந்து இயங்க வேண்டும். இயங்கும் உடல் நிலைவேண்டும். மனதுக்கு ஒன்றும் சிக்கல் இல்லை. அது இன்னமும் இருபத்து ஒன்றிலேயே நின்றுகொண்டிருக்கிறது.

2020 எப்படிச் செல்லும் என இனித்தான் பார்க்க வேண்டும். மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாறு குறித்த நூல் ஒன்றை விமர்சன நோக்கில் வெளியிடும் எண்ணம் உண்டு. மார்ச் மாதம் நண்பர்களுடன் மதுரைக்குப் பயணம் திட்டமிட்டுள்ளேன். வல்லினம் வழி இரு நிகழ்ச்சிகள் உண்டு. வல்லினம் நிகழ்சிகளைப் பதிவு செய்ய நல்ல காமிரா ஒன்று வாங்க வேண்டும். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் 1500 ரிங்கிட்டு (டாக்டர் சண்முகசிவா புண்ணியத்தில்) வாங்கிய காமிராவில் பதிவு செய்வது இப்போது தெளிவில்லாமல் உள்ளது. பிறவற்றை காலம் முடிவு செய்து சொல்லும். காத்திருக்க வேண்டும்.

(Visited 283 times, 1 visits today)