சென்னையில் நான்கு நாட்கள்

23.11.2019 (சனிக்கிழமை)

jeyamohan - navinஎல்லாம் முடித்து உள்ளே நுழைய எத்தனித்தபோது தோள்பையில் கூடுதலாக மூன்று கிலோ இருந்தது. மூன்று கிலோவை குறைத்துவிட்டு வந்தால்தான் உள்ளே நுழைய அனுமதி என வாயிலில் நிற்கும் காவலர் கறாராகவே சொல்லிவிட்டார். என்ன செய்வதென தெரியாமல் வெளியே வந்தபோது ஒரு தமிழகத்துக்காரர் “என்னா பேக்கு பாரமுன்னு சொல்லிட்டான்னா. என்னோட வா,” என்றார். ‘நம்ம பிரச்சினையில இவர் காசு சம்பாரிக்க பாக்குறாரோ’ என சந்தேகம் எழுந்தாலும் அப்போதைக்கு வேறு திட்டங்கள் இல்லாததால் பின் தொடர்ந்தேன். அவர் பெட்டிகளைப் பாதுகாப்பாகப் பையால் சுற்றி அனுப்பும் வேலை செய்பவர். பையைத் திறக்கச் சொன்னார். திறந்தேன். உள்ளே இருந்த சாம்பல் நிற பையைக் கையில் எடுத்தவுடன் பெட்டியில் மூன்று கிலோ குறைந்து ஏழு கிலோவென காட்டியது.

சாம்பல் நிற பையைக் காட்டி “இதெல்லாம் என்ன?” என்றார்.

அவை மலேசியக் கவிதை புத்தகங்கள். கடந்த 15 ஆண்டுகளில் வெளிவந்தவை. அதைச் சொல்லவே நடுக்கமாக இருந்தது. காரணம் அவற்றில் சில தொகுப்புகளை அதிகாரிகள் வாசிக்க நேர்ந்தால் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக என்னைக் குற்றம்சாட்டக் கூடும். மலேசியக் கவிஞர்களால் ரொம்பவும் உக்கிரமாக எழுதப்பட்ட கவிதை நூல்கள் சில இருந்தன. சில தொகுப்புகளின் வாசனை பட்டாலே மனப்பிறழ்வு ஒரு தொற்று நோய்போல பரவக்கூடும் என்பதால் அவற்றை பையால் சுற்றி, காற்றுகூட வெளிவராமல் பாதுகாத்திருந்தேன். எப்படியாவது அவற்றை டிசம்பரில் மலேசியாவுக்கு வரும் கவிஞர் சாம்ராஜிடம் கொடுத்துவிட வேண்டுமென்பதே திட்டம். அவரிடம் மலேசியக் கவிதைகள் குறித்த ஒரு கட்டுரை வாசிக்கச் சொல்லியிருந்தேன். அவர் எந்தத் துன்பங்களையும் தாங்கிக்கொள்ளக்கூடியவர்.

தமிழகத்துக்காரர் புத்தகங்கள் இருந்த பையை என் இடதுதோளில் மாட்டினார். “ஒன்னும் பேசாம திரும்பவும் போ…” என்றார். “இல்ல அவர் 7 கிலோ மட்டும்தான்…” என உளறினேன். “அதெல்லாம் ஒன்னும் ஆவாது. நீ போ” என்றார். நான் மீண்டும் அதே அதிகாரியிடம் சென்று தோள்பையை நிறுவையில் வைத்தேன். ஏழு கிலோ. “போகலாம்” என்றார். என் இடது தோளில் இருந்த சிறிய பையைப் பார்க்கக்கூட இல்லை. திரும்பிப் பார்த்தபோது அந்தத் தமிழகத்துக்காரர் ‘சொன்னேன்ல’ என்பதுபோல சிரித்தார்.

அதிகாலை விமானம் என்பதால் நன்றாகத் தூங்க வேண்டுமென விமானத்தின் இரண்டாவது வரிசையில் சீட் பதிவு செய்திருந்தேன். கொஞ்சம் தாராளமாகக் கைகால்களை நீட்டலாம். விமானம் இன்னும் புறப்படவில்லை. திடீரென சேவல் கூவும் சத்தம் கேட்டது. என்ன ஏது எனப் புரிவதற்குள் விமானப் பணியாளர் என் தலைக்கு மேல் இருந்த பெட்டியில் கைவைத்து “உள்ளே யாருடைய சேவல் உள்ளது?” என கேலியாக ஓரிருமுறை கேட்க என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி  “என்னுடையதுதான்” என பதற்றமாக எழுந்து நான் வழிவிடும் முன்னரே தன் பிட்டத்தால் என் முகத்தை நசுக்கி பெட்டியிலிருந்து கைபேசியை எடுத்தார். அவர் நசுக்கியதை வலதுபுறம் அமர்ந்திருந்த பெண்மணி பார்த்துவிட்டு புருவங்களைக் கேலியாக உயர்த்தினார். நான் சங்கடமாகச் சிரித்துவைத்தேன். பேசிக்கொண்டே மீண்டும் நசுக்கியபடி வந்த வழியே புகுந்தார். சேவல் கூவுவதை ஏன் ரிங் டோனாக வைத்திருக்கிறார் எனக் குழப்பமாக இருந்தது.

எனக்கு முன் இருக்கையில் ஓர் அம்மா தன் நான்கு வயது குழந்தையுடன் ஏறியிருந்தார். பயணத்தின் நான்கு மணி நேரமும் குழந்தை தன் வாழ்நாளின் அத்தனை சந்தேகங்களுக்குமான கேள்விகளைச் சத்தம் போட்டுக் கேட்டுக்கொண்டே வந்தாள். அவளை அடக்க அம்மா ஏதேதோ செய்து பார்த்து கடைசியில் தொலைபேசியில் கேம் விளையாடக்கொடுத்தாள். அவ்விரவில் அச்சிறுமியால் உருவான சத்தம் குறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை. அவ்வப்போது தனக்குத் தாகமாக இருப்பதாகக் கூறி பாட்டிலைக் கேட்டாள். அதன் சின்னஞ்சிறிய மூடியில் நீரை ஊற்றிக் குடிக்க முயலும்போதெல்லாம் அவள் அம்மாவுக்குக் கடும் கோபம் வந்தது. உண்மையில் நான் பார்த்த குழந்தைகள் எல்லாருமே இவ்வாறுதான் இருக்கிறார்கள். பெரியவர்களுக்காக உருவாக்கப்பட்டதாக அவர்கள் கருதும் அனைத்திலும் குழந்தைகளுக்கானதைத் தேடி அடைகிறார்கள்.

விமான நிலையத்தில் இறங்கியவுடன் பாலு காத்திருந்தார். மகிழம்பூ கலைசேகரின் நண்பர். நான்கு நாட்கள் பயன்படுத்த அவர் மனைவியின் சிம் கார்ட்டை இரவலாகக் கொடுத்தார். யாவரும் பதிப்க்கத்திற்கு கார் பிடித்துச் சென்றேன். ஜீவகரிகாலனின் அலுவலகமும் வீடும் வேளச்சேரியில் இருந்தன. அலுவலகத்தின் எதிர்ப்புறம் வீடு. “ஆபிசுல வேல இருக்கு” எனப் பொய் சொல்லியெல்லாம் தப்பிக்கவே முடியாது. போனவுடன் ‘பேய்ச்சி’யைக் கையில் எடுத்துப் பார்த்தேன். நன்றாக வந்திருந்தது. பின்னர் அவர் வீட்டுக்கும் சென்று துணைவியாரைச் சந்தித்து ஒரு காப்பி குடித்தேன். சரவண பவனில் சாம்பார் இட்டிலி பசியாறல். பின்னர் மீண்டும் காரைப் பிடித்து ஜெயமோகனைப் பார்க்கப் புறப்பட்டேன்.

ஜெயமோகன் சென்னையில்தான் இருந்தார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட வேலைகள். அதுபோன்ற சமயங்களில் தொந்தரவு கொடுக்கக்கூடாதுதான். ஆனாலும் நாவலை அவரிடம்தான் முதலில் தர வேண்டுமென முன்பே திட்டமிட்டிருந்தேன். அவர் சென்னையில் இருக்கும்போது அவ்வாய்ப்பைத் தவறவிட மனம் வரவில்லை. அவரிடம் கொடுக்கும் முன்பே அக்காட்சி குறித்து மனதில் ஒரு சித்திரம் இருந்தது. நாவலைக் கொடுப்பேன். இரு கைகளிலும் எழுந்து வாங்குவார். தோளில் கைபோடுவார். ‘பேய்ச்சி’ என அழுத்தமாகச் சொல்வார். அப்படியே நடந்தது. அது நெகிழ்வான தருணம். மூன்று நாள் தாடியுடன் வேட்டி அணிந்திருந்தார்.

அறையில் வேறு யாருமே இல்லை என்றதும் உடனே வெளியேறிவிட வேண்டும்போல இருந்தது. உண்மையில் அறையில் வேறு யாரேனும் இருப்பார்கள் என்றே நினைத்துச் சென்றிருந்தேன். ஜெயமோகனை வாசித்து அவர் ஆளுமையை உணர்ந்ததைவிட நான் என் நாவலை எழுதும்போதுதான் இன்னும் நெருக்கமாக உணர முடிந்தது. கட்டற்று மனம் செல்கையில் நாம் என்னவாகிறோம் என்பதை அந்தரங்கமாக அறிய முடிந்தபோது இத்தனை ஆண்டுகாலம் அவ்வளவு தீவிரமாக இயங்கும் அவரை புனைவு மனநிலையின் பிரம்மாண்ட படிமம் என உருவகித்துக்கொண்டேன். என் முன்னால் அமர்ந்திருந்த அவருள் இன்னும் இன்னும் சென்று பார்த்தால் பிசாசரோ வியாசரோ யார் வேண்டுமானாலும் எதிர் வரலாம். ஆனாலும் அது நான் அறியாத பிரம்மாண்டம்.

ஜெயமோகன் ‘எது கலையாகிறது?’ என்பது பற்றிப் பேசினார். நான் நாவல் எழுதியபோது ஏற்பட்ட சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். நாவலை முடித்தவுடன் ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்தைப் பார்த்தேன். ‘கொற்றவை’ நாவலின் சில அத்தியாயங்களைப் புரட்டினேன். பின்னர் ‘நீலகண்ட பறவையைத் தேடி’க்குத் தாவினேன். ஒரு எளிய முயற்சிக்குப் பின் ஒரு பெரும் சாதனையை நெருங்கிச்செல்ல வேண்டியுள்ளது. அது நம்மை சிறியவர்கள் ஆக்கும். அழுத்தங்களைக் குறைக்கும். நிதானத்துக்குள் தள்ளிவிடும். பதினைந்து இருபது நிமிடங்களில் புறப்பட்டேன். அவருடன் சில நாட்கள் இருந்துள்ளேன். ஆனாலும் அவர் எவ்வளவு நட்பாகப் பழகினாலும் பார்த்தவுடன் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.  சுனில் கிருஷ்ணனும் “அவரோட ஃபோன் பேசும்போது எழுந்து நின்னுடுறேன் ஏன்னு தெரியல,” எனச் சொல்வார். அது பணிவால் வருவதல்ல. இளம் படைப்பாளி ஒருவன், தனக்குள் கொஞ்சமேனும் கண்டுகொண்ட படைப்பின் உயிராற்றலை புறத்தில் வணங்கி நிற்கும் கணம் எனலாம்.

அன்று மாலையில் இயக்குனர் அதியனைக் காணச் சென்றேன்.atiyan - navin அதியன் ‘கபாலி’ திரைப்படத்திலிருந்தே நண்பர். அப்போது ரஞ்சித்திடம் துணை இயக்குனராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ‘அப்பனின் கைகளால் அடிப்போம்’ எனும் கவிதை நூலைக் கொடுத்திருந்தார். நல்ல வாசகர். ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ என்ற அவரது முதல் திரைப்படத்தை ஒட்டி வெளிவந்த நேர்காணல்களை யூடியூப்பில் பார்த்திருந்தேன். ஒரு கலைஞனிடம் அடிப்படையில் இருக்க வேண்டிய மிகைப்படுத்தாத உண்மை அவரிடம் உண்டு.  நான் சென்றபோது ஒரு நேர்காணலில் இருந்ததால் அவரது துணைவியாரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். கீழே இறங்கி வந்தவர் அனைவரையும் அறிமுகம் செய்துவைத்தார். கடும் வேலைகளுக்கிடையில் நிதானமாகவே இருந்தார். ‘பேய்ச்சி’யைக் கொடுத்தேன். திரைப்படம் குறித்து சுருக்கமாகப் பேசினோம். விடைபெறும் வரை உடன் இருந்தார். ஒரு துணை இயக்குனராக அதியனின் உழைப்பை நேரில் பார்த்துள்ளேன். படப்பிடிப்பு இடத்தில் அவர் பெயர் பலமுறை உச்சரிக்கப்படுவதைக் கேட்டுள்ளேன். இத்திரைப்படத்தால் அது பல நூறு மடங்கு சாத்தியமாக வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

24.11.2019 (ஞாயிறு)

arasuமறுநாள் காலையில் பேராசிரியர் வீ.அரசு அவர்களைச் சந்தித்தேன். ஏற்கனவே அவர் வீட்டில் அமைத்திருக்கும் நூலகத்தைப் பார்க்கச் சென்றதுண்டு. நான் சென்றபோது சந்தையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். என்னை நூலகத்தில் அமரச் சொன்னார். நூலகத்தை மீண்டும் பார்வையிட்டேன். அதனை அவரது மாணவர்கள்தான் பராமரிக்கின்றனர். அந்நூலகத்தின் சிறப்பே தமிழில் வெளிவந்த பெரும்பாலான சிற்றிதழ்களின் தொகுப்பு அங்கு இருப்பதுதான்.

கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தார். வழங்கப்படும் நூல்களைப் பொருட்படுத்தி வாசிப்பவர். ‘பேய்ச்சி’ தனக்குப் பிடித்திருந்தால் பிப்ரவரி மாதத்தில் அவசியம் அது குறித்து எழுதுவேன் என்றார். அதுவரை அவர் செய்ய ஏராளமான பணிகள் இருந்தன. அறிவுஜீவிகளின் உலகம் பணி ஓய்வினால் நிற்பதில்லை. “மலேசியாவில நல்ல நாவல்கள் வராததற்கு காரணம் அங்க அனுபவங்கள கருத்துகளா மாத்திக்கிறாங்க. அப்புறம்  கருத்துகள கதைகளா எழுதுறாங்க. அனுபவங்கள் பல நூறா திரிஞ்சி வேறொரு அனுபவமா ஆகனும். அப்பதான் நல்ல இலக்கியம் உருவாகும்,” என்றார்.  கீழடி குறித்து பேசிக்கொண்டிருந்தோம். தமிழகத்தில் இதற்கு முன் நடந்த ஆய்வுகள் குறித்து துல்லியமாக நினைவில் இருந்து மீட்டுச் சொல்லத்தொடங்கினார்.

மீண்டும் அங்கிருந்து காரைப் பிடித்து குரொம்பேட்டைக்குச் ja.rajagobalசென்றேன். அங்குதான் ஜா.ராஜகோபாலன் இருக்கிறார். சென்னைக்குச் செல்லும் முன்பே அவரைச் சந்திக்க வேண்டுமெனக் கேட்டிருந்தேன். எனவே நினைவுபடுத்த அழைத்தபோது “நவீன் சொல்லுங்க” என்றார். “பார்க்க வரலாமா சார்?” என்றேன். “எங்க இருக்கீங்க?” என்றார். விடுதி பெயரைச் சொன்னேன். குழப்பமாக “ஓ” என்றார். “சரி… ஏன் என்னைப் பார்க்கனும்?” என்றார். “நாவலை உங்களிடம் வாசிக்கக் கொடுக்க சார்” என்றேன். “ஐயோ… மலேசிய நவீன்னு சொல்லக்கூடாதா? நா என்னோட வேலை செய்யுற நவீன்னு நினைச்சேன்” எனக்கூறி சிரித்தார்.

எந்நேரமும் கிளிகள் கீச்சிட்டுக்கொண்டிருக்கும் அழகான வீடு அவரது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வலுவாக இயங்க ஜா.ராஜகோபாலன், கடலூர் சீனு, ஈரோடு கிருஷ்ணன் (இன்னும் பலர்) முக்கியமானவர்கள். காரணம் அவர்கள் தொடர்ச்சியாக வாசிக்கிறார்கள். பன்மைத்தன்மையுடன் ஒரு புனைவை அணுகுகிறார்கள். கூர்மையாக விவாதிக்கிறார்கள். முரணான கருத்துகளுடன் ஒன்றித்து இயங்குகிறார்கள். ஜா.ராஜகோபாலன் நுட்பமான வாசகர். அத்தகையவர் ஒரு புனைவை வாசித்து ‘இதெல்லாம் தேறாத கேசு’ எனச் சொன்னால் ஏற்றுக்கொண்டு போதாமைகளைக் கண்டடைந்து அடுத்த முயற்சியில் இறங்க வேண்டியதுதான்.

அது மதிய உணவுக்கான நேரம். பிரியாணி சாப்பிட்டு விட்டுப் போயிருந்ததால் புறப்படும்போது சாப்பிடுவதாகக் கூறினேன். அவர் வீட்டில் நாரத்தங்காய் குழம்பு வைத்திருந்தனர். நான் அதுவரை நாரத்தங்காய் குழம்பைச் சாப்பிட்டதில்லை. பிரியாணிக்குக் கொடுத்த இடம்போக கொஞ்சமாவது சாப்பிட்டு பார்த்துவிட வேண்டுமென நினைத்துக்கொண்டேன். உரையாடல்கள் பல இடங்களுக்கும் போனது. கொஞ்சம் வரலாறு, அனுபவங்கள், இலக்கியம் எனப்பேசினார். நான் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்தேன். Bruno Manser குறித்து கூறினேன். அவரை அடிப்படையாகக்கொண்டு சமகால அரசியலில் புனைவுகளைச் சேர்ப்பது குறித்து எனக்கிருந்த சந்தேகத்தைக் கேட்டேன். அதில் எவ்வாறான சாத்தியங்கள் உண்டென விளக்கம் கொடுத்தார். “முத்துநாகு எழுதிய சுளுந்தீ வாசித்தீர்களா?” என்றார். வாசித்திருக்கவில்லை. அதற்கு முதல்நாள்தான் ஜீவகரிகாலன் அந்நாவல் பெற்றுள்ள கவனம் குறித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். ராஜகோபால் தன்னிடம் இருந்த நாவலைக் கொடுத்தார். அவர் வீட்டில் இருப்பதை மிகவும் இயல்பாக உணர்ந்தேன். அவர் மனைவி, மகன் எல்லோரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்போல இருந்தனர். புறப்படும் முன் கொஞ்சமாகச் சாப்பிட்டேன். கட்சி அரசியலில் புனைவுக்கான சம்பவங்கள் சிலவற்றை நினைவுபடுத்திச் சொன்னார். நான் அவர் ஒரு நாவல் எழுத்தினால் நிச்சயம் அது வாசிக்க புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்றேன். அவசியம் எழுதுவேன் என்றார். புறப்பட்டேன்.

ranjitமாலையில் தோழர் ரஞ்சித்தைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன். ‘மை ஸ்கில்ஸ்’ அறவாரியத்துடன் இணைந்து அடுத்த வருடம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக சில ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் தேவைப்பட்டன. எல்லோரும் சொல்வதுபோல ரஞ்சித் இயக்குனர்களில் வித்தியாசமானவர். உதவி இயக்குனர்கள் உட்பட அவரிடம் அனைவரும் தோழர் எனும் அடிப்படையில்தான் பழகுகின்றனர். அவர் அறையில் நுழைந்தபோது உடன் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா இருந்தார். ‘பேட்டை’ நாவலாசிரியர். நான் வந்திருக்கும் நோக்கத்தைச் சொன்னேன். கடந்த காலங்களில் மலேசிய இலக்கியமென எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளால் மொண்ணையான படைப்புகள் பல்கலைக்கழகங்களில் அறிமுகமாயின. இன்றும் அது ஓயவில்லை. இலக்கியச் சூழலில் கழிக்கப்பட்ட படைப்புகளை நூல்களாகத் தொகுக்கும் அறிய முயற்சியில் உள்ளனர். பின்னர் அவற்றை இங்குள்ள ஏதாவது கல்லூரி பாடத்திட்டத்தில் இணைப்பதாகக் கூறவும் அவற்றை மலேசிய இலக்கியத்தின் மாதிரிகளாக்கி விடுவார்கள். இந்தச் சூழலில் தரமான விமர்சகர் வழியே மலேசிய இலக்கியத்தின் சத்தான பகுதியைக் காட்ட வேண்டியுள்ளதைக் கூறினேன். தமிழ்ப்பிரபா நாவலை வாசித்து தன் கருத்தை எழுதுவதாகக் கூறினார். அவர் ஜெயமோகனின் தீவிரமான வாசகர். ‘மத்தகம்’ நாவல் குறித்து சிலாகித்தார். பொதுவாக வேலை நடக்கும் இடங்களில் அதிக நேரம் இருக்க நான் விரும்புவதில்லை. அன்புகூர்ந்த அவர்கள் உபசரிப்பு செய்யும் பணிக்குத் தடையாகிவிடக்கூடாது. சிறிது நேரத்திலேயே விடைபெற்றேன்.

இரவில் அறைக்கு ஓவியர் மணிவண்ணன் வந்தார். எழுத்தாளர்mani கோணங்கியின் மூலம் அறிமுகமானவர். பேய்ச்சி நாவலுக்கு அவரே ஓவியம் வரைந்திருந்தார். அடுத்த வருடம் மீண்டும் சமண மலைகளுக்குச் செல்ல திட்டமிட்டது பற்றி கூறினேன். கடந்த முறை அவரும் எங்களுடன் மாணிக்கவாசகர் திருக்கோயில், திருமறைநாதர் கோயில், காளமேகப் பெருமாள் கோயில், ஏகநாதர் கோயில், கொங்கர் புளியங்குளத்தில் உள்ள சமணர் பள்ளிகள் என உடன் வந்தார். புதிய பயணத்திட்டத்தைச் சொன்னதும் அவர் அடர் காடுகளுக்குள் பயணம் சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மேட்டுப்பாளையத்திற்கும் கோத்தகிரிக்கும் இடையில் உள்ள ‘வெள்ளேறிக் கொம்பு’ எனும் இடத்தில் அங்கு வசிக்கும் குரும்பர் இன மக்கள் துணையுடன் பழங்கால மனிதர்களில் கலைத்திறனைக் கண்டது குறித்தும் அப்பயணம் கொடுக்கும் அனுபவம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்.

பேசிக்கொண்டே இறங்கி ஒரு டீ சாப்பிடச் சென்றோம். பேச்சு எப்படியோ ராமாயணம் பக்கம் செல்லவும் ஒருவர் தள்ளாடியபடி அருகில் வந்தார். “ராமாயணத்தை கம்பர் எழுதினாரா?” எனக்கேட்டார். உச்சரிப்பும் தெளிவாக இல்லை. “ஆமா” என்றார். “அவரே எழுதினாரா?” அருகில்தான் டாஸ்மார்க் இருந்ததால் அவரது நிலை புரிந்தது. “இல்ல. வால்மீகி எழுதியதை கம்பர் தமிழில எழுதினாரு”. “அப்போ கம்பன் மொழிபெயர்த்தாருன்னு சொல்றியா?”

எங்களின் நிலை கொஞ்சம் பரிதாபமானதுதான். அவருக்கு பதில் சொல்வதே அர்த்தமற்றது. பதில் சொல்லாமல் போனால் ஓர் இலக்கிய வாசகனை அவமதித்ததாகிவிட்டதாக வரலாறு பேசலாம். என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் சில இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். ஒருவனுக்கு பளீர் என லத்தி அடி விழுந்தது. “எங்க ஒக்காந்து குடிக்கிற” என போலிஸ்காரர் அவர்களைத் துரத்திச்செல்லவும் ராமாயணத்தில் சந்தேகம் கொண்டிருந்த இலக்கிய வாசகர் மெல்ல நழுவிச்சென்றார்.

25.11.2019 (திங்கள்)

santiraயுவன் சந்திரசேகர் சிறுகதைகளை வாசித்திருக்கிறேனே தவிர நாவல்களை வாசித்ததில்லை. 2006இல் உயிர்மை அலுவலகத்தில் அவரைச் சந்தித்ததை நினைவு வைத்திருந்தார். என் மனதில் அவரது தோற்றம் இளமையாகவே இருந்தது. அதற்கு அவர் பெயரும் காரணமாக இருக்கலாம் எனச் சொன்னேன். சிரித்தார். அவரது உறவினர்கள் வந்திருந்ததால் அறையில் அமர்ந்து பேசினோம்.

அவர் கதைகள் தன்னிலையில் இருப்பது பற்றிக் கேட்டேன். “அது எனக்கு சௌகரியமா இருக்கு. உணர்வுகளை எளிதா வெளிப்படுத்த முடியுது. ஆனா கதையில் இருக்கிற நானும் கவிதையில இருக்குற நானும் வேறு. கவிதையில் ‘நான்’ எனச் சொன்னால் அதை வாசிக்கும் வாசகன் தன்னை உணர்வான். சிறுகதையில் ‘நான்’ எனும்போது சிறுகதையாசிரியனாகவே புரிந்துகொள்வான்,” இவ்வாறு தொடங்கியவுடனேயே யுவனுடனான உரையாடல் இயல்பாகச் சென்றது.

‘பெயரற்ற யாத்திரீகனை’ நினைவுக்குக்கொண்டு வந்தேன். ஜென் கவிதைகள் குறித்து கொஞ்ச நேரம் பேசினோம். சமீப காலமாக கவிதைகள் எழுதுவதில்லை என்றார். “எல்லா கலைஞனுக்கும் இயல்பாவே இன்னொரு கலை மேல ஆர்வம் இருக்கும். எனக்கு இசை மேல ஆர்வம் உண்டு. உலகம் முழுக்கவும் பல எழுத்தாளர்கள் எழுத்துக்கு ஈடாக இன்னொரு கலையில ஆர்வம் காட்டியிருக்காங்க. இப்ப உள்ள இளம் தலைமுறை எழுத்தாளர்கள் சினிமாவுல ஆர்வம் காட்டுறத என்னால அப்படித்தான் புரிஞ்சிக்க முடியுது. அது பொருளீட்ட மட்டுமல்ல. கலைஞனின் இயல்பான குணம்,” என்றார்.

“ஏன் சார் உங்கள் கதைகளில மேற்கோள் குறிகள பயன்படுத்துறதில்லை?” என்றேன். “அதனால் வாசிப்புக்கு ஏதாவது சிக்கலாச்சா?” எனக்கூறி சிரித்தார். பேச்சு அப்படியே ஜனரஞ்சக எழுத்துகள் பற்றி போனது. “ஜனரஞ்சக எழுத்தாளன் தெரிஞ்ச உண்மைக்கு அலங்காரம் செய்யுறான். அவனால புதியது என எதையும் சொல்ல முடியாது. அதை வாசிக்கிறவங்களாலயும் புதியதை அடைய முடியாது. அதனால என்ன? அப்படி சிலர் இருந்துட்டு போகட்டுமே” என்றார். உறவினர்கள் புறப்பட்டதும் ஹாலுக்கு வந்தோம். யுவன் படு சுறுசுறுப்பாக இருந்தார்.

யுவன் சந்திரசேகரின் துணைவியார் சைவ பிரியாணி எடுத்து வந்து உண்ணக்கொடுத்தார். “சார் பயங்கர சுறுசுறுப்பு” என்றேன். “வீட்டுல யாராவது ஒருத்தர் இருக்கனுமுல்ல” என்றார். அங்கதம் இருவருக்கும் பொதுவானதாக இருந்தது. நாவலை அவரிடம் வழங்கினேன். “உங்களையெல்லாம் வாசித்துதான் இலக்கியத்திற்குள் நுழைந்தேன். நீங்கள் நாவலை வாசிப்பதே எனக்கு பெருமையாக இருக்கும்” என்றேன். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்.

pralayanமாலையில் அறைக்கு நாடக ஆசான் பிரளயன் வந்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் தயாரித்த ‘பவுன் குஞ்சு’ நாடகம் மலேசியாவில் அரங்கேறியது. மீண்டும் அதுபோல நிகழ்த்த வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு உண்டு. அதை முன்னெடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பேசினோம். அவர் தற்சமயம் செய்துகொண்டிருக்கும் முயற்சிகள் குறித்துக்கூறினார். ‘காப்புரிமை கொத்தவால்’ என்ற அவர் மொழிபெயர்த்த நூலை வழங்கினார். காப்புரிமையை விட்டுக்கொடுப்பதை அடிப்படையாகக்கொண்ட நூலை.  Copy right போலவே Copy left, Copy south, Creative Commons என அந்நூலில் விளக்கப்பட்டுள்ளதைக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது.

இரவில் தனியாக நடந்து spencer plaza வரை சென்றேன். நண்பர் ஒருவர் சொன்ன சில மருந்துகளை வாங்க வேண்டியிருந்தது. சாலையைக் கடக்க காத்திருந்த பத்து நிமிடத்தில் தூசுகளால் தலைசுற்றியது. ஒருவழியாகத் தாண்டி எப்படியும் பேரங்காடிக்குள் நுழைந்து நன்றாக இழுத்துச் சுவாசிக்க வேண்டுமென நடந்தபோது “நவீன் தான” எனக் குரல் கேட்டது. யாரென திரும்பிப் பார்த்தேன். ஓர் இளைஞர் நின்றுகொண்டிருந்தார். “ஆம்” என்றேன். தன்னை ‘பச்சோந்தி’ என அறிமுகம் செய்துகொண்டார். கைகொடுத்தேன். தலை மெல்ல கிர்ரென இருந்தது. எங்காவது சென்று அமர வேண்டும் போலிருந்தது. நான் தங்கியுள்ள விடுதியைச் சொல்லி நாளை சந்திக்கலாம் என்றேன்.

26.11.2019 (செவ்வாய்)

paddinatarசென்னைக்குச் செல்லும்போதெல்லாம் பட்டினத்தார் சமாதிக்குச் சென்று பார்க்க வேண்டுமென ஆசை எழும். நிறைவேறியதில்லை. அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு திருவொற்றியூர் புறப்பட்டேன். அவ்வதிகாலை அற்புதமான உணர்வைக் கொடுத்தது. கடலை ஒட்டி கோயில் அமைந்திருந்தது. புதுப்பித்திருந்தார்கள். தூய்மையாகப் பராமரித்திருந்தார்கள். கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன்.

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;

தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;

பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;

உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;

புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

என்ற வரிகள் மட்டும் மறுபடி மறுபடி நினைவுக்கு வந்தது. கூகுளைத் திறந்து வேறு பாடல்களை வாசித்துப் பார்த்தேன். வணங்குவதற்குரியவர்களாக உயர்ந்த ஒவ்வொருவரது மொழிச்சாதனைகளையும் ஏதாவது ஒருவகையில் நினைவூட்ட வேண்டியுள்ளது. சினிமாவாகவோ, பாடலாகவோ ஏதோ ஒரு வடிவத்தில் அவர்களை மீட்க வேண்டியுள்ளது. கோயிலில் நானும் பட்டினத்தாரும் மட்டும் நெடுநேரம் தனியாக இருந்தோம். ஏகாந்தம். பசித்தபோதுதான் காலையில் இருந்து சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.

pacconthiஅறைக்கு வந்தபோது பச்சோந்தி அழைத்தார். விடுதிக்கு வரச்சொன்னேன். `அம்பட்டன் கலயம்’ கவிதை நூலுக்கு தமுஎகச விருது பெற்றவர் பச்சோந்தி. அவர் கவிதை நூலை வழங்கினார். பொதுவாக மலேசிய இலக்கியச் சூழலில் வல்லினம் உருவாகி வந்த கதையைச் சொன்னேன். ஒரு கலைப்படைப்பில் அரசியலின் இடம் என்னவாக உள்ளது என உரையாடல் போனது. ரஞ்சித் – மாரி செல்வராஜ் இருவரது திரைப்பட மொழி குறித்து பேசினோம். எனக்கு மாரி செல்வராஜின் திரை மொழியில் உள்ள நெருக்கத்தைக் கூறினேன். பச்சோந்திக்கு ரஞ்சித்தின் ஆளுமை மீது ஈர்ப்பு இருந்தது.

என் கவிதை குறித்த புரிதலைக் கேட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே கவிதைகளை வாசிக்காததையும் அதுகுறித்த எவ்வித தெளிவான புரிதலும் எனக்கு இல்லை என்பதைச் சொன்னேன். இவ்வாண்டு நாவல்களையும் சிறுகதைகளையும் மட்டுமே அதிகம் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளில் கூட மனம் ஒட்டுவதில்லை. இன்று தமிழில் கவிதைப் போக்கு என்னவாக உள்ளது எனவும் தெரியவில்லை. ஊட்டி முகாம் கவிதை குறித்த கவனத்தை மீண்டும் உருவாக்கியுள்ளதைக் கூறினேன். ஒருவேளை பச்சோந்தியின் தொகுப்பு மீண்டும் கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டலாம்.

பச்சோந்தியுடன் பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் பகிர்ந்துகொண்ட சில தகவல்கள் ஆச்சரியமாகவும் இருந்தன. கடைசியாக ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடிந்தது. படைப்பிலக்கியத்திடம் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தவனை எந்தக் குழு அரசியலும் எதுவும் செய்ய முடியாது. முதல் காரணம் படைப்பு நிகழும் கணத்தில் படைப்பாளி அடையும் மகிழ்ச்சியும் தனக்குள் அறியும் மாற்றங்களும் மிக அந்தரங்கமானவை. அதற்கு வெளியில் உள்ள இன்னொருவன் தேவையில்லை. அந்த மகிழ்ச்சியை ஒருவராலும் கெடுக்க முடியாது. விமர்சனங்களும் பாராட்டுகளும் அதற்கடுத்த நிகழ்வுகள்தான்.

76936853_2874509435895449_8604425227541151744_oஉரையாடலுக்கு மத்தியில் பாரதி புத்தகாலயம் சிராஜூதின் வந்தார். மாணவர்களின் உளவியல் குறித்த நூல்களை உருவாக்குவது குறித்து கொஞ்ச நேரம் பேசினோம். அவரிடம் ஷோபா சக்தியின் இச்சா நாவலைக் கேட்டிருந்தேன். கையோடு எடுத்து வந்திருந்தார். பேய்ச்சியைக் கொடுத்து அதைப் பெற்றுக்கொண்டேன்.

மாலையில் புலம் லோகநாதன் அறைக்கு வந்தார்.78061740_2874883552524704_77831520437403648_o நெடுநாட்களாகக் கிடப்பில் இருந்த ஒரு நூலைப் பதிப்பிக்கும் முயற்சி குறித்துப் பேசி முடிவெடுத்தோம். புத்தகச் சந்தைக்குக் கொண்டு வரலாம் எனத்திட்டமிட்டோம். எனது ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ அடுத்த வருடம் மீண்டும் பதிப்பிக்கப்படுகிறது என்றார். சந்தோஷமாக இருந்தது. என் கணிப்பில் அது நான்காவது பதிப்பாக இருக்கலாம்.

74185546_2875917805754612_8869492982504488960_oஇரவு 11.30க்கு விமானம் என்பதால் இரவு எட்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்தேன். பாலு வந்து சிம் கார்ட்டைப் பெற்றுக்கொண்டார். ஜீவகரிகாலனுடன் அவர் உதவியாளர் கணேஷ் வந்திருந்தார். பேய்ச்சியை கையோடு ஒரு புதிய பெட்டியில் போட்டு எடுத்து வந்திருந்தனர். பெட்டியை ஸ்கேன் செய்தவர்கள் உள்ளே என்ன உள்ளது எனக்கேட்டனர். புத்தகம் என்றேன். பெட்டியைக் குறித்துக்கொண்டனர். உள்ளே சென்றபோது தனியாக ஓர் அதிகாரி அழைத்து தமிழகத்தில் இருக்கும்போது எங்கெல்லாம் சென்றீர்கள் என்றார். சென்னையில்தான் இருந்தேன் என்றேன். “சரி போகலாம்” என்றார். ஏதோ சரியில்லை எனத்தோன்றியது. எல்லா சோதனைகளும் முடிந்து விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டது.

27.11.2019 (புதன்)

அதிகாலை 5.30 மணிக்கு விமானத்திலிருந்து இறங்கி சென்றபோது சுங்கத்துறை அதிகாரிகள் சாவகாசமாகவே அமர்ந்திருந்தனர். என்னை தொலைவில் பார்த்தவுடன் இருவர் எழுந்தனர். சுதாகரித்துக்கொண்டேன். என்னை மட்டும் தனியாக வரச்சொன்னார்கள். பெட்டியைத் திறக்கச் சொன்னார்கள். திறந்தேன். அவர் ஒரு மலாய் பெண் அதிகாரி.

“இது என்ன புத்தகம்?”

“நாவல். நான் எழுதியது.”

“நான் யார் எழுதியது எனக்கேட்கவில்லை. என்ன உள்ளடக்கம்?”

நான் கொஞ்சம் யோசித்தேன். அவர்களுக்கு ஏற்றதுபோல பதில் சொல்ல “ஒருவன் ஏன் மது அருந்தக்கூடாது என நன்னெறி விசயங்கள் அடங்கிய நூல் இது” என்றேன்.

“யார் படிக்க?”

இப்படியெல்லாம் ஏதும் சிக்கல் வரும் என்றே ஒரு அமைப்பிடம் இருந்த கடிதம் வாங்கி வந்திருந்தேன். அக்கடிதத்தில் அவ்வியக்கம் நூறு பிரதிகளை வேண்டியிருந்தது. கடிதத்தை வாசித்த அந்தப் பெண்மணி அதிர்ந்தார்.

“இதென்ன உன் பெயர் நவீன். நீயே உனக்குக் கடிதம் எழுதியுள்ளாய்?” என்றார். எனக்குச் சிரிப்பு வந்தது.

“மன்னிக்க வேண்டும் புவான். அமைப்புகளுக்கு அதிகாரபூர்வ முகப்பு உள்ளது. கடிதத்தின் மேலே பாருங்கள். அவர்கள் அமைப்பின் பெயரோடு முகவரியும் இருக்கும். அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியுள்ளதால் என் பெயர் அடுத்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.”

“அதெல்லாம் இல்லை. உங்களுக்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதத் தெரியவில்லை. முதலில் அனுப்புனர் முகவரி வர வேண்டும். அப்புறம் ஒரு நீண்ட கோடு. அப்புறம் பெறுநர் முகவரி. இதுதான் முறை. பள்ளியில் படித்ததில்லையா?”

“மன்னிக்க வேண்டும் புவான். நான் ஒரு ஆசிரியர். நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் அமைப்புகள் கடிதம் அனுப்பினால் இதுதான் முறை.”

“நீ யாராக இருந்தால் எனக்கென்ன. தவறென்றால் தவறுதானே. இந்தக் கடிதம் தவறுதான்.”

“சரி புவான். அடுத்த முறை சரியாகவே எழுதிவிடலாம்.”

“சரி நீ நூலை எடுத்து வருவதால் வரிப்பணம் செலுத்த வேண்டும்.”

“நான் இதற்கு முன் இப்படி எடுத்து வந்ததுண்டு. ஆனாலும் நீங்கள் சொல்வதால் செலுத்திவிடுகிறேன். நூல்களை அனுமதித்தால் போதுமானது.”

“அடுத்தமுறை அதிகாரபூர்வ கடிதத்தை முறையாக எழுதச்சொல்.”

“நல்லது புவான்.”

இப்படியாக இன்று மலேசியாவில் அதிகாலை சிறப்பாகப் புலர்ந்தது.

(Visited 493 times, 1 visits today)