மெட்ரோ மாலை: தாவலை வேண்டும் கலை

metro malaiநான் முதன்மையான சினிமா ரசிகன் இல்லை. ஆனால்  மலேசியத் தமிழர்கள் மத்தியில் கலை ரீதியாக நடக்கும் எந்த ஆரோக்கியமான முயற்சியையும் தவறவிடக்கூடாது என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. அதுபோன்ற முயற்சி உண்மையில் தரமானதென்றால் குறைந்தபட்சம் அது குறித்து சிலருக்கேனும் தெரியப்படுத்த மெனக்கெடுவேன்.

போலியான, மேம்போக்கான, பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே கொண்ட படைப்புகளுக்கு எல்லா நாடுகளையும் போலவே மலேசியாவிலும் இடம் உண்டு. ஆனால் அதுபோன்ற முயற்சிகள் ஊடகங்கள் மூலம் ஊதிப்பெரிதாக்கப்படும்போது அதன் தரம் குறித்த மாற்றுப் பார்வையை முன்வைக்க வேண்டியுள்ளது. பொருளியல் பலத்தாலும் அதிகாரத்தாலும்  முன்னெடுக்கப்படும் வெற்று விளம்பரத்தின் பிரம்மாண்ட வெளிச்சத்துக்கு எதிராக ஓர் எளிய எழுத்தாளன் வைத்துள்ள கைவிளக்கின் ஒளி மட்டுமே அது. மாற்றுக்கருத்துள்ள, பொய்மைகளை மறுக்கும் மற்றுமொரு தரப்பு உள்ளது எனும் பதிவு. பம்மாத்துகளை நம்பாத சிலர் இன்னமும் உள்ளனர் எனும் அறிவிப்பாகவும் அதை சொல்லலாம்.

‘மெட்ரோ மாலை’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தவுடன் நிச்சயம் திரையரங்கில் பார்க்க வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டேன். தமிழகப் பயணம் முடிந்து இன்றுதான் ஓய்வு கிடைத்தது. இன்றைய இளைஞர்களின் முயற்சி என்னவாக உள்ளது என அறியும் ஆவலில் அவ்வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன்.

திரைப்படத்தில் பிரதானமாக என்னைக் கவர்ந்தது கோலாலம்பூரின் இருண்ட பகுதிகளைக் காட்சி படுத்தியவிதம். தனிமையின் வெறுமையில் தற்கொலைக்குத் தயாராகும் இளைஞனிடம் இருந்து கதை தொடங்குகிறது. பெருநகரத்தின் எவ்வாறான கசகசப்பு, ஒருவனுக்கு அவ்வாறான உணர்வுகளை உந்துமோ அவ்வாறான நகரத்தின் முதுகுப்பகுதியை இயக்குனர் நெருக்கமாகக் காட்டியுள்ளார். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஏன் இன்னும் இப்பகுதிகள் அரிதாகவே இடம்பெறுகின்றன எனும் கேள்வி படம் பார்க்கும்போதே எழுந்தது.

இரண்டாவது புனிதா சண்முகத்தின் நடிப்பு. அவர் பெருநகரத்தின் ஒளிமிக்க பகுதியில் வசிப்பவர். பொருளாதாரத்தைத் தேடி ஓடும் கணவனால் கண்டுகொள்ளப்படாமல் தனிமையில் அவதியுறுகிறார். தன்னை தன் கணவன் நேசிக்கிறானா எனக் குழம்புகிறாள். இந்தக் குழப்பத்திலிருந்து மீண்டு வர, அவள் தேடும் துணை அவளை உள்ளூரக் குழப்புகிறது. இப்படி வெறுமை, காதலின் தருணம், தவிப்பு என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார்.

மூன்றாவது ஒளிப்பதிவும் வசனமும். ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு பதிவு செய்துள்ளனர். காட்சிகளின் வழி நுண்மையான தருணங்களை நகர்த்தியுள்ளனர். அதுபோலவே வசனங்கள். ஒருவனின் கூடுதல் திறனே அவனை அழிக்கும் கருவியாவதாகச் சித்தரிக்கும் இடங்களெல்லாம் சிறப்பு.

மொண்ணையான வசனங்கள், அலட்டலான உடல்மொழி, சோபையான ஒளிப்பதிவு, தடாலடி ஹீரோதனம் என வழக்கமான மலேசியத் திரைப்படங்களில் காணும் எந்த பலவீனமும் இல்லாத ஒரு முயற்சியென ‘மெட்ரோ மாலை’ திரைப்படத்தைச் சொல்லலாம்.

ஆனால் ஒரு திரைப்படத்தைச் சிறந்ததென சொல்ல இவை மட்டுமே போதுமானதா? தமிழ்ப்படங்களின் போலித்தங்களாக உருமாறிக்கொண்டிருக்கும் மலேசியத் தமிழ்த் திரை உலகத்தில் இதுபோன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது. ஆனால் இவர்கள் இன்னும் மேம்பட்ட கலைப்படைப்பை வழங்க வேண்டும் என்ற ஆவலின் அடிப்படையில்தான் இப்படத்தை விமர்சிக்கவும் வேண்டியுள்ளது.

காதலில் தோல்வியுற்று தனிமையில் உறைந்து கிடந்து சுய இன்பத்தாலும், மதுவாலும், இசையாலும் பொழுதை நிறைக்கும் ஒருவனுக்குத் திருமணமாகி வெறுமையில் இருக்கும் ஒரு பெண்ணுடன் ஏற்படும் நட்பு காதலாக மலர்ந்து பின்னர் உதிர்கிறது. இந்த அனுபவத்தை,  ஒரு இளைஞனின் ஏமாற்றத்தைச் சொல்லத்தான் ஒரு கலை மெனக்கெடுகிறதா என்ற கேள்வி படம் முடிந்தபிறகு எழுந்தது. இந்த அனுபவத்திற்குள் நிகழும் மற்றுமொரு அந்தரங்க அனுபவத்தை இத்திரைப்படம் காட்டத் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. அதுவே இப்படத்தை எளிய முயற்சியாக்கிவிட்டது.

எல்லா திரைப்படத்துக்கும் இக்கூற்று பொருந்தாதுதான். Rabbit Proof Fence போன்ற வரலாற்றை மையமிட்ட தீவிரமான புறக்காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களில் அனுபவங்களே பார்வையாளனுக்குப் போதுமானதாக உள்ளது. அதுவே Samsara போன்ற திரைப்படத்தில் உருவாகும் காட்சிகள் முழுக்க அகவயம் நோக்கி எழும் கேள்விகளே.  ‘மெட்ரோ மாலை’ அவ்வாறு அகவயம் நோக்கி ஆழமான கேள்விகளை உருவாக்கியிருக்க வேண்டிய படம். ஆனால் அது பார்வையாளனுக்கு எந்தக் கேள்வியையும் உருவாக்காமல் சம்பவங்களால், எளிய சமாதானங்களால் நிறைந்திருப்பது ஏமாற்றமளித்தது.

திருமணமான அந்தப் பெண் ஏன் அந்த இளைஞனைச் சந்தித்து தனது பொழுதுகளை கழித்தாள்? ஏன் கூடல் வரை அதைத் தொடர விடவில்லை? ஏன் அவனைக் குற்றவாளியாகக் காட்டுகிறாள்? சமூகம் சொல்லும் எல்லா ஒழுக்கத்திற்கும் எதிராகச் செயல்பட்டவள் இறுதியில் ஒழுக்கம் எனப் பிடித்துக்கொள்வது  எதை? அதன் மீதான பிடிப்புக்கு எவ்வித தர்க்கம் உள்ளது?

மறுபுறம் அந்த இளைஞன் முந்தைய காதல் வலியில் இருந்து அவ்வளவு சீக்கிரம் மீளக் காரணம் என்ன என்று கேட்கும் அளவுக்கு இருவரின் நெருக்கமும் அழுத்தமில்லாமல் காட்சியாக்கப்பட்டுள்ளது. இருவரும் சாலையோரம் அமர்ந்துகொண்டு பெண்ணியம், கடவுள் எனப் பேசுகின்றனர். மொத்தப் படத்திலும் சோர்வளித்த காட்சி அது. இலக்கியப் படைப்பில் பிரதானமான விசயம் ஒரு பாத்திரம் எவ்வளவு சிந்திக்குமோ அந்த அளவே பேச வேண்டும். அப்படிப் பேசும் வசனங்கள் கதையை இன்னும் மேலே எடுத்துச் செல்ல வேண்டும். அந்த இரவின் உரையாடல் கட்டற்ற காமத்தின் சாத்தியங்கள் குறித்த உரையாடலாக மாறியிருந்தால் அந்த இருவரும் (நட்பாகவோ, காதலாகவோ) தங்கள் நம்பிக்கைக்காகப் புனிதப்படுத்த விரும்பும் உறவுக்குப் பின் ரகசியமாக அமர்ந்துள்ள தடுமாறும் உணர்வு நிலைகள் கதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கக்கூடும். ஆனால் அன்பை நாடிவரும் பெண் X சபலம் சீண்டி விடுபடும் ஆண் என எளிதான தீர்வுடன் முடிகிறது.

‘பேய்ச்சி’ நாவலின் முதல் வடிவத்தை எழுத்தாளர் சு.வேணுகோபாலிடம் அனுப்பியபோது அதில் 1940களில் மதுரைக் காட்சி சித்தரிப்பில் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் சாயல் ஒரு வாக்கியத்தில் உள்ளதென விமர்சனத்தை முன் வைத்தார். அது உண்மைதான். 40களின் மதுரை வேறெங்குமே மதுரையின் காட்சி ஆவணங்களாக இல்லாத பட்சத்தில் அந்நாவலில் பேருந்துகள் வயலில் புகுந்து ஓடும் பாங்கை ஒரு வாக்கியத்தில் இணைத்திருந்தேன். பின்னர் அதை நீக்கிவிட்டேன். வாசகன் எப்போதும் படைப்பாளியைவிட கெட்டிக்காரன். அவன் ஏராளமான அனுபவங்களைக் கொண்டவன். படைப்பாளியைக் காட்டிலும் அதிகம் அறிந்துள்ளவன் என ஒவ்வொரு படைப்பாளியும் உணரும்போது இதுபோன்ற பிற படைப்பின் பாதிப்புகள் பதியாமல் இருக்கலாம். மெட்ரோ மாலையின் தொடக்கக் காட்சி அவ்வாறு ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தை நினைவுபடுத்துவது சங்கடமானது.

தற்கொலைக்கு செல்லும் இளைஞன். பின்னணியில் சூழலை விளக்கும் குரல். மாடியில் இருந்து விழ முயல்வது என அத்திரைப்படத்தின் காட்சிகளே மனதில் வந்து மோதின. அதே சமயத்தில் முக்கிய பாத்திரமாக நடித்த இளைஞருக்கு முகத்தில் நடிப்பு சுத்தமாக வராதது படத்தில் பெரிய பலவீனம். குறிப்பாகக் காதல் காட்சிகளை அவரால் கையாள முடியவில்லை. அதைச் சமன் செய்ய அதிகம் புகைபிடிக்கும் காட்சிகளைச் சேர்த்ததுபோல உள்ளது. முதல் காட்சியில் பேசப்படும் வசனங்கள் தெளிவான உச்சரிப்பில் இல்லாதது மற்றுமொரு பலவீனம். இசையில் அவ்விளைஞனுக்கு இருக்கும் ஆளுமையும் தெளிவாகக் காட்டப்படவில்லை. நித்தியா மட்டுமே அவன் இசையை ரசிக்கிறாள். எனவே கலை குறித்து அவனுக்கு இருக்கும் எண்ணங்களும் வலுவற்றுப்போகின்றன. இருவருமே தனிமையில் இருக்கும்போதெல்லாம் எங்காவது மேற்பரப்பின் விளிம்பில் நின்றுகொண்டு எதிரில் உள்ள வெற்று வெளியைப் பார்ப்பது போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பேற்படுத்துகிறது. ஒரு காட்சியில் அந்த இளைஞன், மாலை மங்கி இரவு நெருங்கு நேரத்தில் மரத்தின் ஓரம் அமர்ந்து புத்தகம் வாசிக்கிறான். எப்படிக் கண் தெரியும்? என யோசிக்கத் தொடங்கிவிட்டேன்.

சில காட்சிகளை படிமங்களாக மாற்றியிருந்தால் கவித்துவமாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. எவ்வித அன்பும் செலுத்தாமல் உறவுக்கு மட்டும் நித்தியாவிடம் கணவன் நெருங்கும் காட்சியில் அவள் முகம் காட்டப்படுகிறது. அச்சூழலில் அவள் மனதில் தோன்றும் ஒவ்வாமையின் தவிப்பை வேறொரு காட்சியாகக் காட்டியிருந்தால் வலுவாக இருந்திருக்கும். மேலும் இக்காட்சி லட்சுமி எனும் பிரபலமான குறும்படத்தை நினைவுப்படுத்தக்கூடியதாக இருந்தது.

இது ஹரன் காவேரி மற்றும் ஷோபனின் முதல் முயற்சி. அவ்வகையில் இது ஆரோக்கியமான முயற்சியே. என் பார்வையில் அவர்கள் வெளிப்பாட்டில் போதாமை உள்ளதே தவிர போலித்தனம் இல்லை. போலித்தனமான சினிமாவுக்கு உதாரணமாக நான் கார்த்திக் ஷாமலன் (மலேசியா) திரைப்படங்களைச் சொல்வேன். தமிழகத்தில் என்றால் இயக்குனர் பாலா. தான் சொல்லக்கூடிய உளவியல் குறித்த நுண்ணுணர்வோ அறிவாழமோ இல்லாமல் பல்வேறு சாயல்கள் பிணைந்த செயற்கையான முயற்சிகளையே போலியான கலை என்கிறேன். அவ்வகையில் ‘மெட்ரோ மாலை’ அசலான படைப்பு. அது இன்னொரு தாவலில் வேறொன்றாக மிளிர்ந்திருந்தால் நிச்சயம் கொண்டாட வேண்டிய படமாகியிருக்கும்.

அவ்வகையில் இவர்கள் இன்னும் வலுவான முன்தயாரிப்புகளோடு மற்றுமொரு படைப்பை வழங்க வேண்டும். ஒரு ரசிகனாக நான் அதைக் காண ஆவலாகவே இருக்கிறேன்.

(Visited 184 times, 1 visits today)