மீண்டும் கேரளம்

04இன்றுதான் கேரளாவில் இருந்து அதிகாலை 6 மணிக்கு வந்திறங்கினேன். வீட்டுக்கு வந்து சேர்ந்து மலேசியனாக மாறியபோது காலை மணி 9. உடனே கொச்சியில் உள்ள Globe Trotters Inn விடுதியின் மீது புகார் கடிதம் அனுப்பிவிட்டுதான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். ஏன் புகார் கடிதம் எனத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். இவனுக்கு இதே வேலை எனச் சலித்துக்கொள்பவர்கள் ஆகக் கீழே உள்ள தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு சிறப்பான முறையில் கேரளா சென்று வரலாம்.

பத்துநாள் டெங்குவில் படுத்துக்கிடந்து கொஞ்சம் தெம்பு வந்தபின் கேரளா பயணமானேன். டெங்குவினால் எதிர்ப்புசக்தி குறைந்திருந்ததால்  சளியும் காய்ச்சலும் துரத்திக்கொண்டிருந்தது. பயணம் ஏற்கனவே முடிவு செய்தது. ஏற்கனவே கேரளாவில் 21 நாட்கள் தனிமையில் சுற்றி அனுபவம் இருந்ததால் இம்முறை ஒரு ஜாலி ட்ரிப். ஜாலி ட்ரிப்பில் இலக்கியம் இருப்பது தகாது. ஜாலி பயணத்திற்கான நண்பர்கள் ஆசிரியர் சரவணன் மற்றும் ஆசிரியர் முருகன். ஒன்றாகவே ஒரே பள்ளியில் பணியாற்றி இப்போது மூவரும் வெவ்வேறு பள்ளிகளில் பணியாற்றுகிறோம். ஆனாலும் ஜாலி பயணத்துக்கு இதுதான் பொருத்தமான குழு.

இது ஒரு சிக்கனப்பயணமும் கூட. விமானத்தில் காப்புறுதிகூட போடாமல் பயணப்பட்டோம். 03எனவே விமானத்தில் அமரும் இருக்கையையும் முன்பதிவு செய்யவில்லை. விமான செலவு ஒருவருக்கு 400 ரிங்கிட் கொச்சியையும் அலப்பியையும் சுற்ற ஒருவருக்கு 300 ரிங்கிட் (தங்கும் விடுதி + வாகனம்) மொத்தமே 700 ரிங்கிட் செலவில் சென்று வருவதுதான் திட்டம். விளைவாக விமானத்தில் எனக்கும் சரவணனுக்கும் பக்கம் பக்கம் இருக்கையும் முருகன் சாருக்கு சற்று தள்ளியும் கிடைத்தது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த மலையாள முதியவரிடம் இடத்தை மாற்ற முடியுமா என்றேன். கடுமையாகக் கையாட்டி முடியாது என்றார். அப்போதுதான் அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். உதடுகள் முன்தள்ளி இருந்தன. அது எனக்குப் பிடிக்காத முக வெட்டு. பொதுவாகத் தமிழ்ப்பட காதலர்களைப் பிரிக்கும் வில்லன் அப்பாக்களின் முக வெட்டுகள் அப்படித்தான் இருக்கும். மூக்கைத்தாண்டி தொங்கிகொண்டிருக்கும் உதடுகள் கடுமையான முகத்தோற்றத்தைத் தரும். கொஞ்ச நேரம் அவரை ஓரக் கண்ணில் கண்காணித்தோம். விமான இருக்கையில் இருக்கும் புத்தகத்தைக் கூர்ந்து படித்துக்கொண்டிருந்தார். முருகன் சார் ‘இதப்போயி ஏன் இப்படி படிக்கிறார்’ என சந்தேகமாக கேட்கவும் எட்டிப்பார்த்தேன். மதுபான விளம்பரத்தில் உள்ள புட்டி படங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு மூடுக்கு வருகிறார் எனத் தெரிந்தது. விமானம் மேலே ஏறிய பின்னர்தான் கவனித்தோம் எங்களுக்கு கிடைத்த சீட் வரிசை அவசர தரையிறங்களுக்கானது. எனவே சீட்டை சாய்க்க முடியாது. நான்கு மணி நேரம் நேராகவே அமர்ந்தபடி வந்தோம். இப்படி அமோகமாக எங்கள் சிக்கனப்பயணம் தொடங்கியது.

விமான நிலையத்தில் நண்பர் வாஹிட் ஏற்பாடு செய்திருந்த கார் வந்து ஏற்றிக்கொண்டது. (வாஹிட் யார் என்பதை பின்னர் சொல்கிறேன்)  மலிவு விமானம் என்பதால் விமானத்தில் உணவு இல்லை. வண்டி நேராக மலபார் ஹோட்டல் என்ற 24 மணிநேர உணவகம் முன் நின்றது. சப்பாத்தி, பரோட்டா, டீ, என சாகசங்களை முடித்தபின் பயணம் தொடர்ந்தது. கடந்த முறை கொச்சி பட்டணத்தில் தங்கியிருந்ததால் இம்முறை ஃபோர்ட் அருகில் அறை போடச் சொல்லியிருந்தேன். சிறிய அறையில் இரு கட்டில். கூடுதலாக ஒரு மெத்தை கேட்டு நான் தரையில் படுத்துக்கொண்டேன். எனக்கு அது வசதி.

மறுநாள் கடலோர நடை. சீன வலை அனுபவம், உயிருடன் துடித்த மீன்- நண்டுகளைப் பார்த்து இவைகளை மசாலா மணத்துடன் தட்டில் பார்க்க மாட்டோமா என ஏக்கப்பெருமூச்சு, கலைப் பொருட்களைப் பார்வையிடல் என முடிந்து ஓர் உணவகத்தில் பசியாறினோம். சில கடைகளில் விலை விசாரித்து, உள்ளதில் மலிவாக இருந்த உணவகத்தில் அமர்ந்தோம். நன்கு புளித்துப்போன தோசையுடன் மஞ்சள் தண்ணீரில் பருப்பை போட்டது போன்ற சாம்பாரும் கிடைத்தது. ஆனாலும் சுவைத்து சாப்பிடுவதுபோல ஃபோட்டோவெல்லாம் எடுத்துக்கொண்டு வெளியேறினோம். தெருவோரம் நல்ல கூட்டம். அது ஒரு சிறிய ஒட்டுக்கடை உணவகம். நின்று மூன்று டீ வாங்கி குடித்தோம். அமிர்தம். ஒரு வாழைப்பழ பஜ்ஜி; வாங்கி அதை சரிசமாக மூன்று துண்டாக்கி மூவரும் சுவைத்தோம். வண்டி 10.30 க்கு வருவதாகச் சொல்லியிருந்தது. எனவே அறைக்குச் சென்று பயணத்துக்குத் தயாராகி காத்திருந்தால் வண்டி வர தாமதமாகும் என செய்தி வந்தது. சரி எதற்கு நேரத்தை விரையமாக்க வேண்டுமென அருகில் இருந்த இரு முக்கியமான தேவாலயங்களுக்கு நடந்தே சென்றோம்.

ஒன்று, St. Francis Church. மற்றது Santa Cruz Cathedral. ஏற்கனவே இரண்டையும் பார்த்துள்ளேன்.02 நண்பர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். கொஞ்ச நேரம் வாஸ்கொட காமா பற்றிய பேச்சு. கடலோடிகள் பற்றிய வியப்பு. வெளியே வந்தபோது வண்டி இன்னும் வந்திருக்கவில்லை. கடுப்பேறியது. வாஹிட்டுக்கு அழைத்தேன். அவர்தான் அந்த வாகன ஓட்டுனரை ஏற்பாடு செய்திருந்தார். அவரும் வாகன ஓட்டுனர் மேல் கடுப்பில் இருந்தார். கொஞ்சம் பொறுத்துக்கொண்டு போர்த்துகீசிய தொல்பொருளகத்துக்குச் சென்று வரச்சொன்னார். அது கொஞ்சம் தள்ளி இருந்தது.  ஆட்டோவில் சென்றோம்.

ஆட்டோவில் ஏறியதும் அதன் ஓட்டுனர் எங்களிடம் ஒரு பரிந்துரை வைத்தார். போகும் பாதையில் ஒரு கைவினைக் கடை இருப்பதாகவும் தான் அங்கு நிறுத்தி நாங்கள் உள்ளே சென்று வந்தால் தனக்கு ஒரு தாளில் சாப் அடித்து கொடுப்பார்கள் என்றும் அதன் வழி ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாகக் கிடைக்கும் என்றும் சொன்னார். எங்களுக்கோ இது சிக்கனப்பயணம். உள்ளே நுழைந்து ஏடாகூடமாக எதிலாவது சிக்கி பணம் செலவாகி விடுமோ என மறுத்துவிட்டோம். எவ்வளவோ கெஞ்சினார். நாங்கள் அசையவில்லை.

போர்த்துகீசிய தொல்பொருளகத்தில் வெளிநாட்டவருக்கு 40 ரூபாய். உள்ளூர்வாசிக்கு 20 ரூபாய். கடந்த முறை நான் இருபது ரூபாயில் உள்ளே நுழைந்து சுற்றி பார்த்துவிட்டு டிக்கெட் விற்ற தம்பியிடம் நான் மலேசியன் என்றேன். அவன் அம்போ என விழித்தான். இம்முறையும் அவன்தான் டிக்கெட் விற்றான். ஞாபகம் வைத்திருப்பான் என்றுதான் நினைத்தேன். கொஞ்ச நேரம் முகத்தை உற்றுப் பார்த்தான். நான் விமானத்தில் பார்த்தவரைபோல உதடுகளை முன்னே தள்ளிக்கொண்டதால் அடையாளம் தெரியவில்லை போல. 60 ரூபாயில் மூவரும் நுழைந்தோம். சுற்றிவிட்டு வந்தபோது வண்டி இன்னும் வந்திருக்கவில்லை. கடுப்பேறியது. இருந்த கடுப்பில் மீண்டும் அந்த ஆட்டோ ஓட்டி ஒரு நிமிடம் கடைக்குள் சென்று வாருங்கள் எனக்கு சாப் கிடைக்கும் என முன்னே வந்து தரிசனம் கொடுத்தார். இதென்னடா  தொல்லையாகி விட்டது என நினைத்தேன். அவர் சொன்ன கடைக்குள் சென்று வந்தால் சற்று தள்ளி இருக்கும் கடல்சார் அருங்காட்சியகத்துக்கு இலவசமாக அழைத்துச்செல்வதாகக் கூறினார். அந்த ஒப்பந்தம் பிடித்திருந்தது. உள்ளே நுழைந்தோம்.

11அது கைவினைப் பொருள் கடைதான். அதிக விலை. வாங்குவதுபோல நடிக்க உள்ளே புகுந்த சரவணனும் முருகன் சாரும் அதை மறந்து பாத்திரத்துடன் ஒன்றித்திருந்தனர். பொருளின் அழகியலையெல்லாம் ரசிக்க ஆரம்பிக்கவும் நாங்கள் நடிக்க வந்திருப்பதை நினைவுறுத்தினேன். வெளியே வந்ததும் ஆட்டோ டிரைவர் சந்தோஷமாக ஒரு தாளைக்காட்டினார். அதில் ஒரு சாப் இருந்தது. படித்த காலத்தில் தேர்வு முடிவு தாள் கூட அவரை அவ்வளவு சந்தோசப்படுத்தியிருக்காது. சொன்னபடி எங்களை இலவசமாக அடுத்த மியூசியத்தில் இறக்கிவிட்டார். ஆனால் முருகன் சார் அவருக்கு 50 ரூபாய் கொடுத்தார். ஏன் என்றேன். இந்த சாப்புக்காகதான் அவர் நம்மை சுற்றியிருக்கிறார். நாம் அவரை சந்தேகித்துவிட்டோம். மனசு கேட்கவில்லை என்றார்.

உள்ளே செல்வதற்குள் வண்டி வந்தது. மியூசியத்தை நிராகரித்துவிட்டு பிரியாணி சாப்பிடச் சென்றோம். காய்ஸ் பிரியாணி. கடந்த முறை என்னைக் கவர்ந்த பிரியாணி. கொஞ்சம் தாமதமானாலும் ஆட்டு பிரியாணி அங்கு முடிந்துவிடும். வாகன ஓட்டுனர் ஏதோ சமாதானம் சொல்ல பேச்செடுத்தார். உங்களால் எங்களுக்கு பணமும் நேரமும் நட்டம் என நான் எரிச்சலாகச் சொன்னேன். அடங்கிவிட்டார்.

01பிரியாணி, நண்பர்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. நாக்கு என ஒன்று இருந்து அதில் ருசி அறியும் தன்மை இருக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். உணவு முடிக்கும் முன்பே வாஹிட் அழைத்தார். அந்த வாகன ஓட்டுனரை மாற்றி விட்டதாகச் சொன்னார். பிரியாணிக்குப் பின் புதிய ஓட்டுனரோடு பயணித்தோம். மட்டஞ்சேரி அரண்மனையைச் சுற்றி பார்த்தோம். 1545 ஆம் ஆண்டளவில் போத்துகீசியரால் கட்டப்பட்டு கொச்சி அரசரிடம் வழங்கப்பட்டுள்ளது. டச்சுக்காரர்கள் ஆட்சியில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொச்சி அரசர்களின் ஓவியப்படங்கள், பல்லக்குகள், உடைகள், ஆயுதங்கள், வாள்கள், தபால்தலைகள், நாணயங்கள் போன்ற பலவிதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுவர்களில் ஹிந்து புராணக்காட்சிகள் அற்புதமான ஓவியங்களாக இருந்தன. கீழ் தளத்தில் கண்ணன் லீலைகளின் ஓவியம் கவர்ந்தது. கண்ணனின் பல கைகள், கால்கள் ஒவ்வொன்றும் காமத்தின் சுவையைத் தேடி அலைவது அற்புதக் காட்சி.

அறைக்கு வந்தபோது களைப்பு மிகுந்திருந்தது. ஒரு மணி நேர தூக்கத்துக்குப் பின் கடல் உணவு சாப்பிடலாம் எனப் புறப்பட்டோம். நீண்ட கடை வரிசையில் ஆங்கிலேயர்கள் அதிகமாக உள்ள கடையில் அமர்ந்தோம். அங்குதான் சுவை அதிகம் இருக்கும் நான் உறுதியாகச் சொன்னேன். இறால், மீன், கணவாய் ஆகியவற்றை ஆர்டர் செய்தோம். அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் தயாராகி சப்பாத்தியுடன் வந்தன. ருசிக்கவில்லை. இங்கு அமரலாம் எனச் சொன்ன சிந்தனையாளன் யார் என நண்பர்கள் கேட்காததால் கமுக்கமாக இருந்துவிட்டேன். மீண்டும் கடலை நோக்கி நடை. சினிமா, பெரியார், தமிழக அரசியல், மலேசிய அரசியல், கேமரன் மலை தேர்தல் என பேச்சு இலக்கில்லாமல் சென்றது. கொச்சி கடலோரத்தில் இரவில் நடக்கும்போதுதான் அங்கேயே கடல் உணவுகளை இன்னும் குறைவான விலையில் சமைத்துக்கொடுக்கிறார்கள் என தெரிந்தது. நாம் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டால் மலிவான கட்டணத்தில் கேட்ட விதத்தில் சாப்பாடு கிடைக்கும். இனி அங்கு செல்பவர்களுக்கு இந்தத் தகவல் பயனாக இருக்கும்.

அறைக்குச் சென்றோம். மெத்தையில் படுக்க எத்தனித்தபோது ஒரு கரப்பான் பூச்சி மெத்தையின் அடியில் ஓடி ஒளிந்தது. விடுதியின் பொறுப்பாளரை அழைத்தோம். அவர் சிரித்துக்கொண்டே வந்தார். அவர் மேசையில் அரை விஸ்கி பாட்டில் இருந்தது. அரை பாட்டில் அவர் வயிற்றில் இருக்கலாம். கரப்பான் பூச்சியை விரட்டி சுத்தப்படுத்தக் கூறினேன். சிரித்துக்கொண்டே மெத்தனமாக மெத்தையை தூக்கவும் கரப்பான் பூச்சி ஓடிப்போய் கட்டிலின் ஒரு கால் அருகில் ஒளிந்துகொண்டது. பொறுப்பாளர்  நல்ல போதையில் மெத்தையில் அடியில் இல்லாத கரப்பான் பூச்சியைக் கட்டிலுக்கு வெளியே பிடித்துக்கொண்டிருந்தார். நான் “சிக்கல் இல்லை எனக்கு இங்கு ஒரு கட்டில் போடுங்கள். தரையில் படுத்தால் இரவில் என் மேல் கரப்பான் வந்து ஊரக்கூடும்” என்றேன். “அது முடியாது கட்டில் இல்லை” என்றார். எனக்குக் கொஞ்சம் கடுப்பேறியது. பக்கத்து அறை காலியாகவே இருந்தது. சரி அப்படியானால் எனக்கு பக்கத்து அறை தாருங்கள் என்றேன். அதுவும் முடியாது என்றதும் “அப்படியானால் கரப்பான் பூச்சியைத் தேடிப் பிடித்துப் போடுங்கள்” என்றேன். பொறுப்பாளர் மேனஜருக்கு ஃபோன் செய்தார். மேனஜர் என்னிடம் பேச வேண்டும் என சொல்லவும் வாங்கினேன். “அது ஒன்றும் பாம்பல்ல பாச்சைதான். ஒன்றும் ஆகாது படுக்கலாம்” என்றவுடன் முற்றிலும் கோபம் தலைக்கேறியது.  “அப்படியானால் கரப்பான் பூச்சியை உன் வீட்டில் தட்டில் வைத்து தின்பீர்களா? அது பாம்பில்லைதானே…’ என்றதும் அவரும் கடுப்பாகி இருக்க வேண்டும். அந்தக் கடுப்பெல்லாம் எனக்கு வெறி பிடித்துவிட்டால் செல்லாது. “பிடிவாதமாக எனக்கு அறையை மாற்று” என சத்தமிட்டேன். அறைக்குள் செல்லாமல் முன் வளாகத்திலேயே நின்றேன். நண்பர்கள் இருவரும் தீவிரமாகக் கரப்பான் பூச்சியைத் தேடிக்கொண்டிருந்தனர்.

கொஞ்ச நேரம் கடந்து மீண்டும் அழைப்பு வந்தது. பொறுப்பாளர் பக்கத்து அறையை பயன்படுத்த மேனஜர் அனுமதி கொடுத்துள்ளதாகச் சொன்னார். ஆனால் குளிர்சாதனம் இல்லாமல் படுக்க வேண்டுமாம். நான் முடியாது என்றேன். அவர் மீண்டும் மேனஜரை அழைத்தார். சரி என சொல்லிவிட்டு எல்லாரும் அறை மாறுங்கள் என்றார். அப்போது மணி அதிகாலை 1.00. மற்ற அறையில் எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தனர். இல்லாவிட்டால் ‘அங்கு மட்டும் கரப்பான் பூச்சி வராதா’ என வம்பிழுத்திருப்பேன்.

உண்மையில் எனக்கு கரப்பான் பூச்சியெல்லாம் அசௌகரியம் இல்லை. தாய்லாந்தில் கரப்பான் பூச்சி பொரியல் கிடைக்குமா என தேடித்திரிந்துள்ளேன். பொதுவாகவே எனக்கு ஒருவரின் உரிமை அலட்சியப்படுத்தப்படும்போது, அந்த அலட்சியம்தான் இயல்பானது என நம்ப வைக்க முயலும்போது கடும் கோபம் வருகிறது. யாராவது ஒருவர் அந்த அலட்சியத்தை சகிக்த்துக்கொள்ளும்போது அது ஒரு கலாச்சாரமாகி விடுகிறது. அறை மாற்றியபின் கோபம் தணிந்தது. ஆனால் விடுவதாக இல்லை. (அதுதான் ஊர் வந்து சேர்ந்தபிறகு கேரளாவில் உள்ள சுற்றுலாதுறை சார்ந்த பல தரப்பிடம் புகார் கடிதமாகச் சென்றுள்ளது.)

மறுநாள் நாங்கள் காலையிலேயே புறப்பட்டோம். அந்தப் பொறுப்பாளர் வேகமாக வந்தார். நேற்று நீங்கள் அறை மாறிய பின் சாவியை என்னிடம் தரவில்லை என்றார். உண்மையில் அவர்தான் அறையைப் பூட்டி சாவியை எடுத்தார். போதையில் செய்திருந்ததால் மறந்துவிட்டிருந்தார். காலையிலேயே சூடேறியது. அப்போது நாங்கள் தெருவோரம் விற்கும் வாழைப்பழ பஜ்ஜி சாப்பிடலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். அவர்தான் நேற்று போதையில் சாவியை எடுத்ததை சொன்னோம். ‘நீ மேலே வந்து தேடித்தா’ என என்னை அழைத்தார். குரலில் அதிகாரம் இருந்தது. ‘வரமுடியாது’ என்றேன்.  என்ன செய்வது, இயல்பாக குரலில் திமிர் ஒட்டிக்கொண்டது.முருகன் சார் விளக்கமாகவே சாவியை அவர்தான் எடுத்து வைத்ததைச் சொன்னார். ஏதோ சின்னப்பையனை அழைப்பது போல ‘ வா’ என்றார் உறுதியான குரலில். மார்புக்கு நேராக மிதித்தால் நெஞ்சுக்கூண்டு உடைந்துவிடுமா? என மனம் கணக்குப்போட்டது. ‘வர முடியாது’ என உறுதியாகச் சொல்லிவிட்டு வெளியேறினோம். பேசாமல் மேலே போய்விட்டார்.

08ஒரு சாயாவுடன் பஜ்ஜியை சாப்பிட்டதும் மனசு சந்தோஷமானது. வாகனம் சரியாக 7.30 க்கு வந்தது. கடந்த முறை என்னை அதிகம் கவர்ந்த Arthunkal St. Andrew’s Basilica தேவாலயம் நோக்கி முதலில் போகச் சொன்னேன். கொச்சியில் இருந்து அலப்பிக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள தேவாலயம் அது. பழமையானது. பக்கத்திலேயே புதிய தேவாலயம் ஒன்றையும் நிர்மாணித்திருப்பார்கள். அதைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் விசே‌ஷமானவை. உயிர்ப்புள்ளவை. கொஞ்ச நேரம் அங்கே உலாத்திவிட்டு வாஹிட் வீட்டை சென்றடைந்தோம்.

வாஹிட் கடந்தமுறை எனக்கு கிடைத்த நண்பர். கடந்த பயணத்திற்குப் பின் அனேகமாக ஒவ்வொரு நாளும் பேசிக்கொள்கிறோம். அங்கு பயண நிறுவனம் வைத்துள்ளார். அலப்பியில் நதியோரம் இருக்கும் விடுதி கேட்டேன். ஏற்பாடு செய்துகொடுத்தார். அற்புதமான சூழல். பெட்டியை இறக்கிவிட்டு நல்ல கடல் உணவு சாப்பாடு, கேரள மசாஜ், சின்ன ஷாப்பிங் முடிந்து ஆறு மணிக்குள் மீண்டும் படகு பிடித்து அறைக்கு வந்தோம். வாஹிட் பேசிக்கொண்டிருக்க விரும்பினாலும் நான் மாலை நேரத்து அலப்பியின் காட்சியை இழக்கத் தயாராக இல்லை. இரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் கதைகள், சினிமா, திருமணம், பெண் துணை, தனிமை, என அதிகாலை 1 மணி வரை பேச்சு போய்க்கொண்டே இருந்தது.

10அதிகாலை ஆறு மணிக்குள்ளாக எழுந்துவிட்டேன். அது அற்புதமான காட்சியைக் கொண்டிருக்கும் நேரம். குறைந்தது பத்து விதமான பறவைகள் கூச்சலிட்டபடி காயலைச் சூழ்ந்திருந்தன. தாவியும், நீரை ஒட்டியபடி பறந்தும், மிதந்தும், வட்டமிட்டும் பறவைகள் அலைந்துகொண்டிருந்தன. சின்ன வயதில் லாஸ்டிக்கில் பறவைகளை அடிக்க முயற்சித்ததுண்டு. முயற்சி திருவினையாகவில்லை என்பது வேறு விசயம். ஒரு சிறுவனுக்கு அத்தனை சுதந்திரமாக ஒரு உயிர் பறப்பது கர்வத்தின் அடையாளமாக தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை. உனக்கென்ன அவ்வளவு கர்வமா என கீழே வீழ்த்துவது அதன் அகங்காரத்தை அடக்கத்தான். ஆனால் இப்போதெல்லாம் அப்படித் தோன்றவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அளவிலான இறக்கை அசைப்பு. மிகச்சிறிய பறைவைகள் படபடக்க இறக்கையை அசைக்கின்றன. பருந்துகள் இறக்கையை அசைக்க மறந்ததுபோல வட்டமிடுகின்றன. மனம்போலவே உயர உயர பறக்க இறக்கையின் படபடப்பு குறைந்துவிடுகிறது.

கொஞ்ச நேரத்தில் முருகன், சரவணன் இருவரும் வந்தனர். ஒரு காப்பி வாங்கி குடித்தோம். காயல் 09ஓரம் அமர்ந்து குடிப்பது இதமாக இருந்தது. 9 மணிக்கு போட் வந்தது. வாஹிட் ஏற்பாடு செய்திருந்தார். நான் ஏற்கனவே சென்ற பயணம்தான். நான்கு மணிநேரம் போட்டில் சுற்றினோம். நான் இறால் சாப்பிட வேண்டும் எனக் கேட்டதால் போட் ஒரு கரையில் நின்றது. அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட்டோம். ருசித்தது. மீண்டும் அறைக்கு வந்தபோது வெளியேறும் நேரம் கடந்திருந்தது. ஆனாலும் குளிக்கவும் ஆடை மாற்றவும் அறை கொடுத்து உதவினர் நிர்வாகத்தினர். மீண்டும் ஒரு காப்பி கேட்டோம் கிடைத்தது. உண்மையில் நல்ல உபசரிப்பு.

வாஹிட் சரியாக இரண்டு மணிக்கு வந்துவிட்டிருந்தார். விமானநிலையத்திற்கு போகிற பாதையில் கடல், தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் என கொஞ்சம் வேடிக்கை பார்த்து, ஜஸ் கிரீம், டீ, பஜ்ஜி என சாப்பிட்டு, சிப்ஸ், கச்சான்கள், கேரளப்புடவை எல்லாம் வாங்கிக்கொண்டு விமான நிலையம் வந்து சேர்ந்தபோது என் கையில் 15 ரூபாய் இருந்தது. சரவணனிடம் அதற்கும் குறைவாக இருந்திருக்க வேண்டும். அதை வைத்துக்கொண்டு எப்படி இரவு உணவு சாப்பிடுவது என யோசித்தபோது முருகன்  தன்னிடம் நானூறு ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதைக் காட்டினார். எங்களில் ஒருவர் செல்வச் செழிப்புடன் இருப்பதில் மகிழ்ந்து டீயும் ஃபிரைட் ரைசும் வாங்கி சாப்பிட்டு மிச்ச பணத்தையும் முடித்தோம்.

மீண்டும் பேச்சு சிரிப்பு. திட்டமிட்டபடி பயணம் சிக்கனமாக அமையாதது பற்றி நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவே இல்லை. அதனால் என்ன!

கேராள செல்லும் நண்பர்களுக்குச் சில குறிப்புகள்:

வாஹிட்டுடன்

                  வாஹிட்டுடன்

  1. நண்பர் வாஹிட் நியாயமான விலையில் பயண ஏற்பாடுகளைச் செய்துக்கொடுப்பார். யாருக்கும் அவரை பரிந்துரை செய்வேன். அவர் எண்: +918547 999 392, +919895620483. அகப்பக்கம்: www.tour2kerala.in
  2. அலப்பி செல்லும் நண்பர்கள் விரும்பினால் தரகிளி எனும் புத்தம் புதிய விடுதியில் தங்கலாம். அற்புதமான அனுபவமாக இருக்கும். எண்: +9605091669
  3. கொச்சி போன்ற இடங்களில் உள்ள விடுதியில் ஏதும் சிக்கல் ஏற்பட்டால் அங்குள்ள சுற்றுலா துறை காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம். இது எனக்கு தாமதமாகவே தெரிந்தது. அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.
  4. கொச்சியில் கடலோரம் உள்ள மீனவர்களின் வளாகத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவது மலிவு.
  5. நீங்கள் செல்லவே கூடாத தங்கும் விடுதி Globe Trotters Inn
(Visited 406 times, 1 visits today)