மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில் எழுந்த குரல் சண்முகசிவாவினுடையது.
மலேசியாவில் ரசனை விமர்சனத்தை உருவாக்க முனைந்து 1987-இல் ‘அகம்’ எனும் அமைப்பு மூலமாக அக்குரலைத் தீவிரப்படுத்த தொடங்கினார் சண்முகசிவா. உளவியல் மருத்துவரான அவரிடம் கறாரான பார்வையும், எவர் படைப்பையும் நிராகரிக்கும் விமர்சன முறையும் இல்லை. அதன் காரணமாகவே அவரது இலக்கியப் பார்வையும் ரசனை விமர்சனமும் அக்காலத்தில் தொடர் விவாதங்களை உருவாக்கவில்லை.
2000க்குப் பின் உருவான புதிய தலைமுறை எழுத்தாளர்களிடமே இவரது கருத்துகள் பெரும் செல்வாக்கைப் பெற்றன. ஒருவகையில் இரண்டாயிரத்துக்குப் பின் மலேசியாவில் உருவான புதிய தலைமுறை எழுத்தாளர்களின் வீச்சுக்குத் தடைகளற்ற சண்முகசிவாவுடனான உரையாடல்களும் விவாதங்களும் முக்கிய காரணம் எனலாம்.
சண்முகசிவா உரையாடல் விரும்பி. அவர் விவாதங்களை விரும்புபவர். தமிழ்ச் சூழலில் இயங்கும் முக்கிய ஆளுமைகளை மலேசியா வரவழைத்து உரையாடல்கள் மூலம் புதிய சிந்தனையை உருவாக்க முனைப்புக் காட்டுபவர். ‘அகம்’ இலக்கிய வட்டம் தொடங்கியது முதலே இந்தக் குணம் அவரிடம் பிரதானமாக உள்ளதைக் கண்டுள்ளேன்.
அறிவுலகிற்கான புதிய திறப்புகளை ஏற்படுத்துவதை தனது தொடர் இயக்கமாகச் செயல்படுத்தி, இலக்கியப்படைப்பு முயற்சிகளை இரண்டாம்பட்சமாகவே வைத்துள்ளார். அதனால்தான் 1998இல் அவர் வெளியிட்ட ‘வீடும் விழுதுகளும்’ எனும் சிறுகதை தொகுப்புக்குப் பின் 20 ஆண்டுகள் கழித்தே இந்தச் சிறுகதை தொகுப்பு உருவாகியுள்ளது.
ஒரு விமர்சகனாக 1998இல் வெளிவந்த ‘வீடும் விழுதுகளும்’ தொகுப்பை சுமாரானது என்பேன். அவர் காலத்தில் மலேசியாவில் இயங்கிய பல எழுத்தாளர்களைக் காட்டிலும் அவரது மொழி மேம்பட்டது. மிக எளிதாகக் காட்சிகளை முன்கொண்டு வந்து நிறுத்துவது.
தமிழகத்தில் மருத்துவம் பயின்ற காலத்தில் அவர் இலக்கியத்தையும் சேர்த்தே பயின்றார் என்பதற்குச் சான்றுகள் அவரது மொழி. ஆனால், அவரது முந்தைய தொகுப்பில் உள்ள கதைகள் திட்டவட்டமான நீதிகளைச் சொல்பவை. சரி, தவறுகளில் நிலைப்பவை. மனித மனங்களின் பிறழ்வுகளுக்கு அவர் கதைகளில் இடமே இல்லை. அதேபோல மானுடத்தின் மேன்மைகளை வாசகன் விவாதிக்கும் நுட்பமான இடைவெளிகளும் இல்லை. நீதிகளை முன்வைத்து கதை புனைவதற்கும் வாழ்வனுபவத்தில் கண்டடையும் தரிசனம் புதிய நீதிகளாகவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
நவீன எழுத்தாளர்களுக்கு இருக்கின்ற அடிப்படைச் சிக்கலை சண்முகசிவாவின் முந்தைய கதைகளில் தாராளமாகக் காணலாம். அவர் தன்னை உடைத்துப் பன்மையாக்கத் தயாராக இல்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எந்தச் சூழலையும் அவர் பகடியுடனேயே அணுகுகிறார். அதிகாரம் கொண்ட மனிதர்களின் பாவனைகளைச் சீண்டிப்பார்க்கிறார். ஆனால் அந்தப் பகடி/ சீண்டல் கதையில் இருக்கின்ற கதாபாத்திரம் வழி சண்முகசிவா உருவாக்குபவை. தன்னை மையப்படுத்துபவை. தன்னை தன் கருத்தை மையப்படுத்தும் அவரால் முற்றிலும் வேறொரு தர்க்கத்தை கொண்ட கதாபாத்திரத்தின் குரலில் பேசமுடியாமல் போகிறது.
அவ்வகையில் மா.சண்முகசிவாவின் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை அவரது புதிய பரிணாமம் எனலாம். கறுப்பு – வெள்ளைகளைத் துறந்து இந்தக் கதைகள் சாம்பல் நிறம் போர்த்தியவை. திட்டவட்டமான தீர்ப்புகள் இல்லாதவை. மானுடத்தின் மீதிருக்கும் நம்பிக்கைகளை மீள் பரிசீலனை செய்பவை. இயலாமையின் நியாயங்களைப் பேசுபவை. நிகழ்வுகளில் ஒரே ஒரு நுண்ணிய தருணத்தை உணர்ச்சிகள் அற்ற ஒரு காமிரா கண்ணோடு பார்த்துவிட்டு அகல்பவை. அங்கதச்சுவையைப் பூசிக்கொண்டவை.
முந்தைய தொகுப்பைப் போலவே இந்தத் தொகுப்பிலும் பல கதைகளில் சிறுவர்களையும் மருத்துவர்களையும் உலாவ விட்டுள்ளார் சண்முகசிவா. சிறுவர்கள் தங்களுக்கான வெளிச்சத்தை, துரத்தும் இருட்டில் தேடித் தேடி கண்டடைகிறார்கள். இருண்மையில் முட்டிக்கொண்டு அழுகிறார்கள். மருத்துவர்களை அல்லது சமூக மதிப்புப் பெற்றவர்களை பெரும்பாலும் தன் கதைகளில் குற்றவாளிகளாக அல்லது சூழல்களால் பலவீனம் அடைந்தவர்களாக உலாவ விடுகிறார் சண்முகசிவா. தனது கற்றற்ற கிண்டல்களை அவர்கள் மேல் அவிழ்த்து விடுகிறார்.
முந்தைய தொகுப்பில் இல்லாத நுட்பமான தருணங்களைச் சண்முகசிவா இந்தத் தொகுப்பில் உள்ள பல சிறுகதைகளில் வாசகர்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
அடிப்படையில் சண்முகசிவா மானுடத்தில் நம்பிக்கை கொண்டவர். இன்னமும் மனிதன் நல்லவன்தான் என்பதே அவரது அழுத்தமான நம்பிக்கை.
‘ஒரு கூத்தனின் வருகை’, ‘துர்க்காபாய்’, ‘எல்லாமும் சரிதான்’ என பல கதைகளில் அவர் அவ்வாறான நம்பிக்கைகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஆனால் ‘புலிச்சிலந்தி’, ‘வைரத்தூசு’, ‘கனவு’ போன்ற கதைகள் மனிதன், சக மனிதன் மீதான நம்பிக்கையை இழக்கும் தருணங்களையும் அவ்வெண்ணத்துக்கு எதிராக மனிதன் வாழ்ந்து தீர வேண்டிய கட்டாயத்தால் உருவாகும் உணர்ச்சிப் பிறழ்வுகளையும் நேர் எதிராக நின்று பேசுகின்றன. ஆனால் இவ்விரு வகை கதைகளுமே இறுதியில் தேடித் தேடி கண்டடைய விரும்புவது எஞ்சி இருக்கும் மானுடத்தைதான்.
‘மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கன்னியம்மனும்’, ‘சாமி குத்தம்’ போன்றவை தன்னைப் பகடிகளால் நனைத்துக்கொண்ட சிறுகதைகள். இன்னும் சொல்வதானால் அவை அப்பட்டமான அரசியல் கதைகள். கோயிலை மையப்படுத்தி மலேசியாவில் நடக்கும் கட்சி அரசியல் தொடங்கி, சமூக அடுக்குகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்குள் இந்த அரசியல் என்னவாக உருகொள்கிறது என்பதுவரை சண்முகசிவாவின் நையாண்டிகள் புனைவுகள் வழி படர்கின்றன.
சண்முகசிவாவின் இந்தத் தொகுப்பை உருவாக்கும்போது ‘ஒரு கூத்தனின் வருகை’ மற்றும் ‘வைரத்தூசு’(‘உயிர்ப்பு’ என்பது பழைய தலைப்பு) ஆகிய கதைகளையே பழைய தொகுப்பிலிருந்து இணைத்தேன். மேலும் உள்ள ஆறு கதைகள் நூலுரு காணாதவை. எட்டு கதைகளும் அவரது 20 ஆண்டு கால சிறுகதை ஆக்கங்களில் முக்கியமானவையாக உணர்கிறேன். அவற்றில் சில மலேசியத் தமிழ் சிறுகதை உலகிலும் முக்கியமானவை என ஒரு வாசகனாகத் துணிந்து கூறுவேன். அவற்றை ஒரு சேர வாசகர்களுக்கு வழங்குவது மலேசிய நவீன இலக்கியத்தின் ஓர் ஆளுமையை மேலும் நெருக்கமாக அறிய வழிவகுக்கலாம்.