தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

001தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ்மொழிப் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் வட்டார ரீதியில் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பர். அதில் தேர்வு பெறுபவர் மாநிலத்தைப் பிரதிநிதித்து தேசிய அளவில் நடக்கும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்வார்கள். இப்படி நடக்கும் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து அடங்குவதுமுண்டு. அதில் அடிப்படையான சர்ச்சைகள் இரண்டு.

முதலாவது, பேச்சுப் போட்டியில் பங்கெடுக்கும் மாணவனின் தொனி, மொழி, பாவனை போன்றவற்றில் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் நடுவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கும்போது ஏற்படும் சலசலப்பு. இதற்கு தீர்வு கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் ஒவ்வொன்றை சிறந்தது என தர்க்கம் செய்ய வாய்ப்புண்டு. ஒருவகையில் அது ரசனை அடிப்படையிலானது. ரசனை என்பது அரூபமானது. எனவே நீதிபதிகளின் முடிவே இறுதியானதாக இருப்பதில் தலையீடு செய்ய முடியாது.

இரண்டாவது, பேச்சுப் போட்டியில் படைக்கப்படும் உரையின் உள்ளடக்கம் சார்ந்தது. இது நிச்சயம் அறிவுள்ள யாரும் தலையிடுவதற்குரியதுதான். தவறான தரவுகள், பொருந்தாத உதாரணங்கள், முரணான உவமைகள் போன்றவற்றை பகுத்து அறியும் ஆற்றலுள்ள நீதிபதி இல்லாவிட்டால், தவறான கருத்துகள் அடங்கிய உரைக்கு அது படைக்கப்பட்ட தோரணையின் காரணமாக பரிசு கிடைப்பது கண்டனத்துக்குரியது. எது தவறான கருத்து என அறிந்துகொள்வதற்கு முயலாமல் கைதட்டும் கூட்டத்திற்கு மத்தியில் எப்போதுமே போலி அறிவுவாதம் உற்சாகமாக சத்தமிடுவதைக் காலகாலமாக பார்த்து சலித்துவிட்டது.

தமிழ்க்கல்வி சார்ந்த பல தளங்களின் மேம்போக்கான பார்வையும் அடிப்படை புரிதலற்ற தட்டையான சிந்தனையும் வளரும் மாணவர்களின் அறிவில் நஞ்சைக் கலப்பதுதான் வருத்தத்திற்குரியது.

2019இன் சிலாங்கூர் மாநில மொழிப் போட்டிக்கான தலைப்புகள் அண்மையில் கிடைக்கப்பெற்றன. 18 பக்க அறிக்கை அது. திருக்குறள் மனனம், ஆங்கிலத்தில் கதை சொல்லும் போட்டி, தமிழ்மொழியில் கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் மலாய் பேச்சுப் போட்டியென பல்வேறு அங்கங்கள். அறிக்கை கையில் கிடைத்ததும் புரட்டிப் பார்த்த எனக்குப் பெரும் அதிர்ச்சி. மலாய்மொழிப் போட்டி விதிகள் மலாய்மொழியிலும் ஆங்கிலமொழிப் போட்டிக்கான விதிகள் ஆங்கிலத்திலும் இருந்தன. ஆனால் தமிழ்மொழிப் போட்டிக்கான விதிகள் அனைத்தும் மலாய்மொழியில் தயாரிக்கப்பட்டிருந்தன.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் தமிழ்மொழித் திறனை வளர்க்க தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு போட்டிக்கான அறிக்கையில், தமிழ் இல்லை என்பது குறித்து யாரும் கூச்சம் அடைந்ததாகவோ எதிர்ப்பு தெரிவித்ததாகவோ தெரியவில்லை. காரணம் கடந்த ஆண்டும் இதேபோன்ற ஓர் அறிக்கைதான் முழுக்க மலாய்மொழியில் வெளியிடப்பட்டது. தமிழுக்காக உயிரைக் கொடுக்கிறோம் என மேடையில் முழங்கும் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தமிழ்மொழிக்கு நிகழும் இந்த அவமதிப்பு குறித்து வலுவான எதிர்ப்பைக் கடந்த ஆண்டே தெரிவித்திருந்தால் இன்று நான் இதைப் பொதுவில் எழுத வேண்டிய சூழல் எழுந்திருக்காது.  அரசாங்கம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் இதுபோன்ற அம்சம் இருப்பதில் தவறில்லை. ஆனால் இந்த 18 பக்க அறிக்கை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போதுமான விளக்கம் வழங்க தலைமையாசிரியர் மன்றம் தயாரித்த ஒன்று.  அதுவும் திருக்குறள், தமிழ்க்கவிதை, பேச்சுப் போட்டி போன்ற அங்கங்களுக்குத் தமிழுக்கே உரிய கலைச்சொற்களை உபயோகிக்காமல் தெளிவுபடுத்துதல் சாத்தியம் இல்லை. ஆனால் மொழியின் மீது காட்டப்படும் இந்த அலட்சியம் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்தின் மேற்பார்வையிலேயே நடப்பது எவ்வளவு நகைமுரண்.

தலைப்புக்குத் தேவையான கூறுகளைத் தமிழில் விளக்காமல் போனால், அதனால் சிரமப்படப்போவது பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் கலந்துகொள்ளும் மாணவர்களும்தான். மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் இந்த வார்த்தைகள் அரையும் குறையுமாக மொழிபெயர்க்கப்பட்டு பலவாறாகத் திரிந்து செல்லும். ஒவ்வொருவரிடமிருந்தும் வெவ்வேறு விளக்கங்கள் வரும். விளக்கங்களை ஏற்பாட்டுக் குழுவினர் வாயால் சொல்லித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அத்தனை பக்க அறிக்கை எதற்கு? ஓர் அறிக்கையின் பணி முழுத் தகவலையும் சொல்வது அல்லவா? இத்தனை குழப்பத்துக்கும் மத்தியில் கடைசியில் நடுவர் ஒரு கட்டமைப்பைக் கொண்டுவந்து புதிய விளக்கங்கள் கொடுத்து, ஆசிரியர்களின் சில மாத முயற்சியை நசுக்கி எறிவார். கடும் பணிச்சுமைகளுக்கு மத்தியில் உழைக்கும் ஆசிரியர்கள் எதுவும் பேசாமல் வீடு திரும்ப வேண்டும்.

இவ்வறிக்கையைக் கொஞ்சம் புரட்டி மலாய்மொழியில் எவ்வாறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன என ஆராய்ந்தால் மேலும் மனச்சோர்வே ஏற்படுகிறது. இம்முறை பேச்சுப் போட்டிக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்புகள் மூன்று. அவை முறையே Pendeta, Bahasa, Perayaan kebudayaan india.  இதில் Pendeta எனும் தலைப்புக்குக் கீழ் மலேசியாவில் தமிழுக்குத் தொண்டு செய்த ஆளுமை என மலாய் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உதாரண ஆளுமைகள் என சீனி.நைனா முகம்மது, காரைக்கிழார் ஆகியோரோடு ஆதி.குமணன் பெயரும் இருந்ததைக் கண்டு சோர்வு ஏற்பட்டது.

m-durai-00886இந்நாட்டில் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் என்றால் குறிஞ்சி குமரனார், அ.பு.திருமாளனார்,  மணிவெள்ளையனார் என சிலர் சட்டென நினைவுக்கு வருவர். இவர்கள் வரிசையில் சீனி.நைனா முகம்மது அவர்களை இணைப்பதும் பொருந்தும். வாழ்பவர்களில் திருச்செல்வம், திருமாவளவன் இருவரும் நினைவுக்கு வருவார்கள். இவர்கள் மொழி வளர்ச்சிக்குச் செய்துள்ள – செய்துகொண்டிருக்கின்ற பங்களிப்பை இந்நாட்டின் அறிவுலகம் அறியும். இவர்களைத் தமிழ் அறிஞர்கள் பட்டியலில் தாராளமாகச் சேர்க்கலாம். அதேபோல இந்நாட்டு தமிழர்கள் வரலாற்றைக் கள ஆய்வு செய்து அதனை ஒட்டிய பல்வேறு அறிவுத்துறையில் ஆளுமை பெற்றிருந்த டாக்டர் ஜெயபாரதியை அறிஞர் என தாராளமாகச் சொல்லலாம்.  இவர்களுக்கு அடுத்து மொழியை மூலமாகக்கொண்டு  இயங்கும் மரபான படைப்பாளர்களை இன்னொரு பட்டியலிடலாம். அதில் காரைக்கிழார் முதல் பாதாசன் வரை ஒரு வரிசை உண்டு. நவீன இலக்கியம் வழி மலேசியப் படைப்புகளையும் இங்குள்ள தமிழர் வாழ்க்கையையும் உலகத் தமிழ் வாசகப் பார்வைக்கு எடுத்துச் சென்றவர்கள் எனப் பட்டியலிட்டால் அ.ரெங்கசாமி முதல் சீ.முத்துசாமி வரை ஒரு பட்டியல் நீளும். இவர்களைப் புனைவுகள் வழி தமிழ்மொழிக்குப் பங்காற்றியவர்கள் எனும் இடத்தில் நிறுத்தலாம். தம் வாழ்நாள் முழுக்க இந்நாட்டில் தமிழுக்கான இடத்தை வலுவாக்க பாடுபட்டவர்களை எடுத்துக்கொண்டால் கோ.சாரங்கபாணியின் உழைப்பு நினைவுக்கு வரும். தமிழ்ச் சிந்தனையாளராகவும் தமிழ் மொழியை இந்நாட்டில் திடப்படுத்திய பெரும் ஆளுமையாகவும் அவரைப் போற்றலாம்.

இதில் ஆதி.குமணன் யார், அவர் தமிழுக்கு என்ன சேவை செய்தார் என்ற கேள்வியுடன்தான் மலேசிய தலைமையாசிரியர் மன்றம் தயாரித்துள்ள இந்த அறிக்கையை ஆராய வேண்டியுள்ளது.

ஆதி.குமணன் ஆளுமையை இப்படிப் பட்டியலிடலாம். அவர் தாம் பணியாற்றிய தமிழ் மலர் பத்திரிகையில் தொழிலாளர்களின் தேவையைக் கவனிக்கக்கோரி அந்த நிர்வாகத்தை எதிர்த்து 1975இல் மறியல் செய்தார். எனவே அவரை ஒரு சமூகப் போராளி என அடையாளப்படுத்தலாம். பின்னர் வானம்பாடி எனும் நாளிதழை உருவாக்கி ஜனரஞ்சக இலக்கியத்தை மலேசியாவில் பரவலாக்கினார். எனவே அவரை ஒரு ஜனரஞ்சக பத்திரிகை ஆசிரியர் எனலாம். பத்திரிகை ஆசிரியராக இருந்தபடியால் தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதினார். அப்போது பிளவுபட்டிருந்த ம.இ.காவின் ஒருதரப்பு குரலாக இருந்தார். எனவே அவரை ஓர் அரசியல் கட்டுரையாளர் எனலாம். வானம்பாடி மூலம் குறுநாவல் பதிப்புத் திட்டம் உருவாக்கினார். அதேபோல எழுத்தாளர் சங்கத் தலைவரானபோது இலக்கிய நிகழ்ச்சிகளை முன்னெடுத்தார். எனவே அவரை இலக்கியச் செயல்பாட்டாளர் எனலாம். ஒரு காலகட்டத்தில் அவர் ஐ.பி.எஃப் கட்சியில் இணைந்தார். எனவே அவரை அரசியல்வாதி எனலாம். வைரமுத்து, சிவசங்கரி போன்ற வெகுசன படைப்பாளிகளை மலேசியாவுக்கு அழைத்துவந்து நிகழ்ச்சிகள் நடத்தினார். எனவே அவரை வெகுசன ரசனை கொண்டவர் என வர்ணிக்கலாம். நாளிதழ் வழி நன்கு சம்பாதித்து பெரும் செல்வந்தராக இருந்தார். எனவே அவரை தொழிலதிபர் என்றும் சொல்லலாம்.

இப்படி ஆதி.குமணனைப் புகழ, போற்ற பல்வேறு அடைமொழிகளும் அதற்கேற்ற தகுதிகளும் அவருக்கு உள்ளன. ஆனால் இந்நாட்டில் மொழிக்காக பாடுபட்டவர்கள், மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல அயராமல் அதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு உழைத்தவர்களின் வரிசையில் அவரை இணைத்து அந்தப் பொய்யை மாணவர்கள் வழி வெளிப்படுத்த முயல்வது அறிவுலகம் செய்யும் செயலா? இந்த அலட்சியம் நாளை வரலாறாக மாறாதா? தமிழுக்குத் தொண்டாற்றியவர் என தாம் நம்பிய ஒருவரின் ஆளுமையை வருங்காலத்தில் இம்மாணவர் வர்க்கம் ஆராயும்போது தாம் ஏமாற்றப்பட்டதாக உணராதா? நாம் நம் சமூகத்துக்குச் சரியான ஆளுமைகளை எப்போதுமே அடையாளம்காட்ட மாட்டோமா? ஆசிரியர்களையும் குழப்பி மாணவர்களையும் குழப்பி நடத்தப்படும் இதுபோன்ற போட்டிகளால் யாருக்கு என்ன நன்மை?

இப்படி மலாய்மொழியில் பிரசுரிப்பதில் சூழ்ச்சி இருக்கிறதோ என சந்தேகமும் எழுவதாகச் சிலர் கூறினர். ‘தமிழ் அறிஞர், தமிழ் ஆளுமை’ என திட்டவட்டமான தலைப்பை வழங்கினால் பேச்சுப்போட்டிக்கு வரும் நடுவர்கள் தடுமாறிவிடக்கூடும். காரணம் அவ்வரங்கிலேயே தமிழ் அறிஞர்கள் யார், தமிழுக்காக உழைத்தவர்கள் யார் என பாகுபடுத்திப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் அறிவார்ந்த பார்வையாளர்களினால் சர்ச்சை ஏற்பட்டுவிடக்கூடும். ‘தமிழ்மொழியின் சிறப்பு’ என தெளிவாகக் கூறிவிட்டால் ஆதாரம் அற்ற உணர்ச்சி மொழிகள் எவை, நிஜத் தரவுகள் எவை என்ற குழப்பம் எழலாம். ‘தமிழர் பண்டிகை’ எனத் தெளிவாக வரையறுத்துவிட்டால் எது தமிழர் பண்டிகை எது இந்து பண்டிகை என்ற தெளிவின்மை ஏற்பட வாய்ப்புண்டு. வரையறுக்கப்பட்ட தலைப்போடு ஒவ்வாத கருத்தைச் சொன்ன மாணவனுக்குப் புள்ளிகள் கிடைத்தால் கூட்டத்தினர் கேள்வி எழுப்பக்கூடும். இப்போது மலாயில் இருக்கிறது. அனைத்தையும்  ஒன்றுக்குள் அடக்கிவிடலாம். தமிழ் என்றால் அப்படி அடங்காது. அது தனித்த பிரத்தியேக அர்த்தத்தைக் கொண்டிருக்கும். சூழலுக்கு ஏற்ப புள்ளிகளை வழங்க ஏதுவாக இப்படி மலாயில் தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளதோ என எழும் சந்தேகத்தைத் தடுக்க முடியவில்லை.

ஆக மொத்தத்தில் மொழியை அழித்து ஒரு மொழிப் போட்டி. தவறான சுட்டிக்காட்டலுடன் ஓர் அறிக்கை. இந்தச் செயலைத் தட்டிகேட்காத ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் மாணவர்கள் முன் நின்று மொழியைக் காப்பது பற்றி பேசும்போது உள்ளூரக் கூச்சம் எழாதா?

வெற்றி என்பது போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவதல்ல. தோல்வியடைந்தாலும் தான் ஈடுபட்ட நிமிடங்களை அர்த்தமாக்கிக்கொள்வது. கொஞ்சமாவது தன் அறிவை விசாலமாக்கிக்கொள்வது. நாம் நமது மாணவர்களுக்கு எதைக் கொடுக்கப் போகிறோம்? இதற்கும் மௌனமாக இருக்கப் போகிறோமா?

(Visited 1,097 times, 1 visits today)