கடிதம் 1: தலைமை ஆசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்ப்பள்ளி வீழ்ச்சியும்

imagesவணக்கம்.  தமிழ் மொழி நம்பவர்களால் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு மட்டும் என் கருத்துரையை எழுதுகிறேன்.

மொழியைக் குறித்து தாழ்வு மனப்பான்மை முதலாவது காரணம். இன்று ஏறக்குறைய தமிழில் உரையாடினால்/ எழுதினால் மதிப்பில்லை என்று தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மணிமன்றங்கள், திராவிடர் சங்கங்கள், இந்து சங்கங்கள் என்று எல்லா நிலையிலுமான தலைவர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். எனவே, மிக எளிதாக மலாய்/ ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். இதைக் குறித்து யாரும் கேள்வி கேட்டால், ‘தமிழ் எல்லாருக்கும் புரியாது’, என்ற அலட்சியமான பதிலைச் சொல்வார்கள். என்னைப் போன்றவர்கள் கேட்டால், ‘வெள்ளைக்கார பெயரைக் கொண்ட உனக்கு தமிழ் மீது என்ன அக்கறை?’ என்று கேட்பார்கள்.

இன்று தமிழ்ப்பள்ளிகள் பெயரில் பல பேஸ்புக் குழுக்கள் இயங்குகின்றன. அவர்கள் தங்கள் பள்ளி நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து போட்டு, அவற்றுக்கான விளக்கத்தை ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் எழுதுகிறார்கள். இதைக் கவனித்த நான் பல முறை அந்தப் பேஸ்புக் குழு நிர்வாகிகளுக்கு (admin) தனி மடல் (privite message) அனுப்பினேன். ஓரிரு பள்ளிகள் தங்கள் தவற்றைத் திருத்திக் கொள்வதாக உறுதியளித்தன. வேறு பள்ளிகள் ஏதேதோ சாக்குபோக்குகள் சொல்லி சமாளிக்கின்றன. ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் சற்று அதிகப்பிரசங்கியாகப் பேசினார். ‘………. எங்கள் பள்ளியின் சாதனையை முறியடிக்கப் பார்க்கிறீர்களா? …………’ என்று கேட்டார். ஏதோ ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் பதிவு வழங்கினால்தான் அவர்கள் சாதனை செய்ய முடியும் என்று தலைமையாசிரியர்களே அடம் பிடித்தால், அந்தப் பள்ளி மாணவர்கள் எப்படி உருவாகுவார்கள் என்று கற்பனை செய்து பார்க்கலாம்.

சிந்தனையால் அடிமைப்பட்டுப் போன சமூகம் இது. காலா காலமாக பிற மொழி தாக்கத்தால் நம் சமூகம் சிந்தனையால் அடிமையாகிப் போய் விட்டது. நாம் மொழியால் மட்டும் அடிமையாகிப் போகவில்லை. நம்முடைய ஒட்டுமொத்த சமூகப் பண்பாடுகளும் அடிமையாகிப் போய் விட்டன. பொறி நுட்பச் சாதனங்களின் வருகைக்குப் பிறகு இந்த நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

சிந்திப்பதிலும் செயல்படுவதிலும் சோம்பல் படுவது நமது சமுதாயத்தின் அடுத்த பிரச்னை. இன்று கணினியிலும் சரி. கையடக்கக் கருவியிலும் சரி, தமிழை உள்ளீடு செய்வது ஆங்கிலம், மலாய் போல் எளிதாக அமையவில்லை. தமிழ் வழி கற்றவர்களே சிரமப்படும்போது, வேறு பள்ளிகளில் படித்து தலையெடுத்தவர்களின் நிலை இன்னும் பரிதாபமாக இருக்கும். அதுவும், தமிழ் உள்ளீட்டுக்குப் பரிந்தரைக்கப்பட்ட இரண்டு முறைகளும் ‘சோம்பேறிகளுக்கு’ உகந்ததல்ல. முதலாவது எழுத்திணைப்பு முறை. அதாவது அகரம் ஏறிய உயிரையும் மெய்யையும் இணைத்து உயிர்மெய் எழுத்துகளைக் கட்டுவது. தமிழ் கற்றவர்களுக்கே இந்த எழுத்திணைப்பு முறை எடுபடுவதில்லை. இப்படியிருக்க, மலாய் பள்ளியில் தமிழ் கற்றவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். தமிழில் மாஸ்டர்ஸ் செய்த ஓர் ஆசிரியரை நான் அறிவேன். அவர் இன்று வரை வாட்ஸ்ஆப்பில் தமிழில் சுயமாக எழுதியதை நான் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு நிலைமை கெட்டு விட்டது. ஆங்கிலம் வழி தமிழில் தட்டுவதிலும் சிரமம் இருக்கிறது. ஒரு சில தமிழ் எழுத்துகளுக்கு ‘மேல் தட்டு விசைகள்’ (shift key) தட்டப்பட வேண்டியிருப்பதால் அதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். இப்படிதான் கோல சிலாங்கூர் தலைமையாசிரியர்கள் தமிழில் அறிக்கை தயாரிப்பதற்குச் சோம்பல் பட்டுப் போயிருக்கக்கூடும்.

வல்லினம் குழு ஒரு நியாயமான நிலைப்பாட்டை எழுப்பியுள்ளது. ஆனால், இந்தச் சமுதாயம் அடாவடித்தனமான போக்கைக் கொண்டுள்ளது. ‘நேற்று வந்த சின்னப் பயல்கள்’, ‘ரொம்ப பேசுகிறார்கள்’, ‘முரணாளிகள்’, ‘அதிகப்பிரசங்கிகள்’ என்றெல்லாம் சில தலைமையாசிரியர்கள் பேசினால் அதில் வியப்பில்லை. முன்பு ***** தமிழ்ப் பள்ளியின் திடலில் மண்டபம் கட்டப்படுவது குறித்து, அந்தப் பள்ளியின் அப்போதைய பெ.ஆ.ச. தலைவர் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால், அந்த மண்டபத்தின் மூலம் லாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள், ‘இந்தப் பள்ளித் திடலில் விளையாடி, உலக சாதனை படைத்த ஒருவரின் பெயரைக் குறிப்பிடு பார்ப்போம்’ என்று சவால் விட்டார்கள். அதே போல் இந்தக் கோல சிலாங்கூர் தலைமையாசிரியர் மன்றம் பேசினாலும் வியப்பில்லை….. ‘இந்தப் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்கள் எதிர்காலத்தில் கோடீர்வரர்களாக உருவாக முடியும் என்று உத்திரவாதம் கொடு’ என்று உங்களைச் சவால் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது கூட பரவாயில்லை….. ‘உன்னை ஒழித்துக் கட்டுவேன். உன் குடும்பத்தைச் சிதறடிப்பேன்’ என்று பேசுகிற தலைமையாசிரியகள் இந்த சிலாங்கூர் மாநிலத்தில் ஏராளம். தமிழுக்குக் குரல் கொடுத்தல் நீங்கள் இந்த அபாயங்களையும் எதிர்நோக்க நேரிடும்.

எவ்வளவுதான் நாம் சமுதாயத்தை உணர்த்திக் கொண்டிருக்க முடியும்? ஒரு முறை சொல்லலாம் இரண்டு முறை சொல்லலாம். திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் போது நமக்கும் சலிப்பு ஏற்படுகிறது. கோயில் அறிக்கைகள் கூட இப்போது தமிழில் வருவதில்லை. தமிழ்ப் பள்ளிகளை விட கோயில்கள்தான் தமிழை வளர்ப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று நான் கருதுகிறேன். மொழிக்குச் சமய சாயம் கொடுக்கும் போது, அந்த மொழியைச் சார்ந்தவர்களுக்கு அதன் மீது ஒரு ‘பக்தி வைராக்கியம்’ வரும். நான் இதைச் சுட்டிக் காட்டினால், ‘நீ வேறு மதம், எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’, என்று வாதம் செய்வார்கள். எனவே, என் வட்டத்துக்குள் மட்டுமான மொழி விவகாரங்களில் நான் கண்டிப்புடன் செயல்பட்டு வருகிறேன். இன்று ஒரு கோயில் அறிக்கை மலாய் மொழியிலும், ஆங்கில மொழியிலும் வருகிறது என்றால், அது சுமார் 35 வருடத்துக்கு முன்பே துளிர் விட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்தக் காலக்கட்டத்திலேயே பிள்ளைகள் தேவரங்களை ‘ரோமனைஸ்ட்டில்’ எழுதிப் பாடுவதைக் கண்டிருக்கிறேன். ‘நமது பிள்ளைகள் மலாய் பள்ளியில் படிக்கிறார்கள்’ என்று அப்போது விட்டு விட்டதால், இன்று இந்து சங்க அறிக்கைகள் கோயில் அறிக்கைகள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அந்த 35 வருடத்துக்கு முன்பு, மலாய் பள்ளியில் படிக்கின்ற அந்தப் பிள்ளைகளுக்கு தமிழிலேயே தேவாரத்தை அச்சடித்துக் கொடுத்து, படிக்க வைத்திருந்தால், இன்று நாம் தமிழுக்காகப் பிச்சை கேட்க வேண்டியதில்லை.

இன்று எங்கள் ஆலயத்தில் தமிழுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, நான் எப்படிப்பட்ட எதிரலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இங்கு எழுதுவது தேவையானதாகத் தென்படவில்லை.

வல்லினம் விஷத்தை முறிக்கும் சக்தியாகத் தலையெடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

விபி. ஜோன்சன்

 

(Visited 287 times, 1 visits today)