‘சட்ட’ திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வந்தது முதல், சென்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். மலேசியத் திரைப்படங்களைச் சில காலமாகவே தாமதித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவதுண்டு. திரையரங்கில் சென்று பார்க்கும்போது அவசியம் இல்லாமல் அது குறித்து ஏதும் கருத்து சொல்ல வேண்டி வரும் (வாயை மூடிக்கொண்டும் இருக்க முடியாது அல்லவா) அப்படி ஏதாவது மலேசியப்படத்தைப் பற்றி எதிர்மறையாக எழுதிவிட்டால் மலேசியாவில் திரைப்படத்துறை வளராமல் இருக்க என்னைப் போன்றவர்கள்தான் நண்டுகளாக இருந்து செயல்படுவதாக வசைகள் பறக்கும். எதற்கு வம்பு?!
சமீபகாலமாக மலேசியத் திரைப்படங்களைப் பார்ப்பதில் உள்ள ஒவ்வாமைக்குக் காரணம் அப்படத்தை இயக்கியவர்களே முன் வந்து ‘மலேசிய படைப்புக்கு ஆதரவு தாங்க. மண்ணின் மைந்தர்களுக்கு ஆதரவு தரலனா எப்படி?’ என இறைஞ்சுவதுதான். உள்ளூர்காரனின் வாந்தி என்றால் பாதுகாத்து வைக்கவா முடியும். நாற்றம் அடித்தால் ஊற்றிக் கழுவுவதுதானே வழி. ஆனால் அப்படிச் சொன்னால் நாம் இனத்துரோகிகளாக மாறிவிடக்கூடும். என்னளவில் இதே அணுகுமுறைதான் இலக்கியத்துக்கும். மலேசியப் படைப்பாளி என்பதற்காக விமர்சகர்களிடம் கரிசனையும் சலுகைகளும் கேட்பதைப்போல அவமானம் வேறு ஒன்றும் இருக்கமுடியாது. அதேபோல ஒரு நூல் விற்பனையாக ‘உள்ளூர் படைப்பு’ என்பதை ஒரு வணிக முத்திரை போல பயன்படுத்துவதும் அபத்தம். அதன் வழி அதை வாங்க கட்டாயமாக்குவது அருவருப்பு. வாசகர்களிடம் அல்லது ரசிகர்களிடம் கொண்டு செல்லக்கூடிய ஒரு கலைப்படைப்பு தரத்தை அடிப்படையாக முன்வைத்தே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
‘சட்ட’ திரைப்படத்தைப் பார்க்கச் செல்ல மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது அதில் என் நண்பர்கள் சிலர் நடித்திருந்தனர். இரண்டாவது அது ‘பெந்தோங் காளி’ சார்ந்த நிஜ கதையைச் சம்பந்தப்பட்டது என சமூக ஊடகங்களில் சொல்லப்பட்டிருந்தது. மூன்றாவது, அது ஒரு கேங்ஸ்டர் படம் என கேள்விப்பட்டிருந்தேன்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முதல் காரணத்தைத் தவிர மற்றவை வதந்தி எனப் புரிந்தது. இது கேங்ஸ்டர் படமில்லை என்றும் பெந்தோங் காளி வாழ்வு பதிவாகவில்லை என்றும் புரிந்துகொண்டேன். மாறாக குண்டர் கும்பலில் இணைந்திருக்கும் இருவருக்கு நடக்கும் தனித்த அனுபவம் திரைகதையாக்கப்பட்டிருந்தது. அதுவும் சுவாரசியமானதுதான்.
கொலை செய்ய உபயோகித்த ஒரு துப்பாக்கியை கடலில் எறிய நம்பிக்கையான ஒரு இளைஞனிடம் (லிங்கேஸ்) கொடுக்கப்படுகிறது. ஆனால் போதையில் அதை தவறாகப் பயன்படுத்திய அவர்கள் துப்பாக்கியைத் தொலைத்துவிட்டு தேடுவதுதான் கதை. இந்தத் திரைக்கதையை எந்தச் சூழலுடனும் பொருத்தலாம். ஒரு மாணவனிடம் பறிமுதல் செய்த ஆபாசப்படத்தை வீசிவிடக்கோரி தலைமை மாணவனிடம் கொடுத்தப்பின்னர் பொறுப்பேற்றுக்கொண்ட அவன் அதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறான் என்றும், அந்த படத்தட்டு காணாமல் போனப்பின் வீட்டில் எங்கெல்லாம் தேடுகிறான் என்றும் திரைக்கதை அமைக்கலாம். ஒரு மருத்துவர் அதிகாரிகளின் சோதனைக்குப் பயந்து அதீத கற்பனை தரும் போதை மருந்துகளை தாதியிடம் கொடுத்து வீசச்சொல்ல அவள் அதை உண்டு என்ன செய்கிறாள் என்றும் போதையில் எஞ்சிய மருந்துகளைத் தொலைத்துவிட்டு எங்கெல்லாம் தேடுகிறாள் என்றும் திரைக்கதை அமைக்கலாம். இவை பள்ளிச்சூழலைச் சொல்லும் கதையோ மருத்துவச் சூழலைச் சொல்லும் கதையோ அல்ல. அதிலிருந்து கிளைவிட்டு பிரிந்த ஒரு தனி மனிதரின் கதை. மற்றபடி பெந்தோங் காளி வாழ்க்கையில் இதுவெல்லாம் நடந்ததா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தாலும் ஒரு கவனப்படுத்தப்பட்ட மலேசியாவின் முதன்மை ரௌடியாக இச்சம்பவம் அவர் வாழ்வில் என்னவாக இருந்திருக்கிறது? இச்சம்பவம் அவர் வாழ்க்கையில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது? என்பது முக்கியம். அப்படி ஒன்றும் நடந்ததாகவும் இல்லை. மாறாக ‘இது நடந்தது’ என்றால் அதை படத்துக்கான விளம்பர உத்தியாக மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
இதெல்லாம் பெரிய தவறு கிடையாது. ஒரு திரைப்படத்தை கவனப்படுத்த தமிழகத்தில் பிரபலமான நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் கூத்துகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே மலேசியச் சூழலில் ஒரு திரைப்படம் வெளிவருவதை கவனப்படுத்த என்ன உத்தி மேற்கொண்டாலும் அதற்கான நியாயம் அவர்களுக்கு இருக்கலாம். இந்த உத்தியாலெல்லாம் ஒரு திரைப்படம் ரசிகனைக் கவர்வதில்லை. வெற்றியடைவதும் இல்லை என்பதே உண்மை. திரையரங்கின் முன் அமர்ந்திருக்கும் அவன்(ரசிகன்) இதற்கு முன் பல்வேறு மொழியில் வெளியான திரைப்படங்களைப் பார்த்திருப்பான் என்றும் திரைப்படம் குறித்த புரிதலை இன்று கட்டற்று கிடக்கும் இணைய வெளி அவனுக்குப் போதித்திருக்கும் என அறியாத இயக்குநர் சோர்வை கொடுக்கும் திரைப்படங்களையே உற்பத்தி செய்கிறார். ராய் தினேஷ் அதற்கு ஓர் உதாரணம்.
மேற்சொன்ன துப்பாக்கி காணாமல் போகும் திரைகதை மிகச் சுவாரசியமானது. ஒவ்வொரு காட்சியிலும் எதிர்ப்பார்ப்பை வைக்கக் கூடியது. ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் இப்படம் சோர்வளிக்கும்படி திரைப்படமாக்கப்பட்டுள்ளது. திரைக்கதையின் மையம் துப்பாக்கி காணாமல் போவதும். அதை பதற்றத்துடன் தேடுவதும். இந்தக் காட்சியைப் பார்க்கும் ஒரு ரசிகனுக்கும் பதற வேண்டும். காரணம் துப்பாக்கிக் கிடைக்காமல் போனால் அதை ரகசியமாக வைத்திருந்த இருவருக்கும் (லிங்கேஸ், குபேன்) என்ன ஆகும் என்ற கேள்வி தொற்றிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு நிகழப்போகும் கொடுமைக்காக நாமும் பதற்றம் அடைவோம். அப்படி எதுவும் நிகழவே இல்லை. அதற்கு நான்கு முக்கியமான காரணம் உள்ளது.
முதலாவது, வீரா (செந்தில்குமரன்) கதாபாத்திரம் பலவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியண்ணனுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் வீரா. ஆனால் அவரது குரல் ரொமென்டிக்காக ஒலிக்கிறது. செந்தில் மற்றும் லிங்கேஸ் உரையாடல்களில் லிங்கேஸின் குரலே மேலோங்குகிறது. ஜகாட்டில் (குறும்படம்) செந்தில் தோற்றம்தான் மிகப்பெரிய பலம். அதில் அவர் பேசவே மாட்டார். பேசாமல் இருப்பதுதான் அவரது தோற்றத்தை மேலே மேலே எடுத்துச்செல்லும். குரலின் அழுத்தம் அவசியமா என்றால் அவசியம்தான். வீரா பேசும்போதே இவர் யாரையும் அடிக்க மாட்டார் எனத் தோன்றுவதை தடுக்க முடியவில்லை. கரிசனத்தோடுதான் எதிரிகளோடும் பேசுகிறார். நிதானமாகவே பதிலளிக்கிறார். அதற்கு ஏற்ப ஒரு இளைஞனின் கையை அடித்து உடைக்கும் காட்சியில் கம்பை அதிகம் ஓங்காமல் பள்ளி மாணவனை ஆசிரியர் அடிப்பது போல வீச்சு இல்லாமல் உள்ளது. அருகில் நிற்பவர்களும் “அங்கிள் ச்சும்மா அடிக்கிறாரு” என்பதுபோல பார்க்கின்றனர்.
இரண்டாவது, பெரியண்ணன். (ஹரிடாஸ்). இப்படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். தொடக்கத்தில் அவரைப் பற்றி படு பயங்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ரௌடியை நானும் காண ஆவலாக இருந்தேன். திரையரங்கில் அவர் தோன்றிய சில நிமிடத்தில் உண்மையில் நான் சிரித்தேவிட்டேன். ஒழுங்காக மீசைகூட முளைக்காத முடிவெட்டும் சிறுவனை கடத்தி வந்து அவர் முன் நிறுத்த, அவனைப்போய் அவர் மிரட்டிவிட்டுச் செல்வார். அந்தப் பரிதாபமான இளைஞனிடம் ‘வட்டிக்கு வாங்கிய பணத்தக் கொடு’ என கடையில் வைத்து குபேன் சொல்லியிருந்தால் கூட அவர் தாடியைப் பார்த்து பயந்து வட்டியை முதலோடு கொடுத்துவிட்டு கடையையும் அடைத்துவிட்டு ஊரைப்பார்த்து ஓடியிருப்பான். அத்தனை பலவீனமானவனை கடத்த இவர்கள் இருவரும் (லிங்கேஸ், குபேன்) வாடிக்கையாளர்கள் போல வந்து, போதாதற்கு மீசை முறுக்கிய படி வீராவும் நுழைந்து, அவனைக் காரில் அழைத்துச்சென்று பெரியண்ணன் வந்து மிரட்டும் வரை நீள்கிறது காட்சி. இவர்களெல்லாம் என்ன சிரிப்பு ரௌடிகளா எனக் கேட்கவே தோன்றியது.
மூன்றாவது, இணை ரௌடிகளாக வருபவர்கள் ஏனோ சுறுசுறுப்பில்லாமல் இருக்கின்றனர். வேறு ஒரு குண்டர் கும்பல் பகுதியில் புதிதாகக் கட்டப்படும் கட்டட பாதுகாப்பு பணியைக் கைப்பற்றி இருக்கும் சசிதரனை அடிக்க ஒடுக்க நாசுக்காய் அழைக்கின்றனர். அவர் வீடு கட்டும் இருண்ட பகுதிக்குள் சென்றவுடன் ஐந்தாறு மோட்டார் சைக்கிள் வருகின்றன. அதிலிருந்து இறங்கிச் செல்பவர்கள் ஏதோ ராத்திரி ஷிப்டுக்கு கல் சுமக்க வருபவர்கள் போல சாவகாசமாக நுழைகிறார்கள். அதேபோல இறுதி கொலைக்காட்சியில் லிங்கேஸை அடிக்கும் குழுவும் ஒரு கையில் கம்பைப் பிடித்துக்கொண்டு ஓங்கி ஓங்கி எதையோ அடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ரௌடிகள்தானே. கத்தியெல்லாம் இருக்காதா? ஏதோ தோட்டத்தில் திருடன் புகுந்துவிட்டால் ஊரே சேர்ந்து அடிப்பது மாதிரி படுத்துக்கிடப்பவனை சுற்றி நின்று ஏன் அடிக்கிறார்கள் என்ற குழப்பமே எஞ்சுகிறது.
நான்காவது, லிங்கேஸின் கதாபாத்திரம் பெரியண்ணன், வீராவைக் காட்டிலும் வலுவாக இருப்பது. வீராவை முறைத்தவனை லிங்கேஸ் ரகசியமாகக் கொல்கிறார். அந்த ஒரு காட்சியில் உள்ள அராஜகமும் குரூரமும் அவரை ஆட்டுவிக்கும் மற்ற இருவருக்கும் இல்லாமலேயே போகிறது. ஆனால் அவரையும் காதலிக்கும் சின்னஞ்சிறுசுகளை அறையவிட்டு அப்படி அவர் அறைவதை சின்னப்பையன்களை விட்டு புகழவைத்து மீண்டும் காமடி ரௌடியாக்கிவிடுகிறார் இயக்குனர்.
இயக்குனர் ராய் தினேஷ் திரைப்படம் என்பது தோற்றம் மட்டுமே என நினைத்திருக்கலாம். முரட்டுத்தனமான தோற்றங்களை வைத்து பயம்காட்ட நினைப்பவர் காட்சிகளில் உயிரில்லாமல் இயக்கியிருக்கிறார். இவ்வாறு பெரியண்ணன், செந்தில், பிற ரௌடிகள் என யாருமே எவ்வித காத்திரமும் இல்லாமல் வருவதால் துப்பாக்கியைத் தொலைத்துவிட்டு லிங்கேஸ் மற்றும் குபேனை அடையும் பதற்றம் ரசிகனைப் பற்றவில்லை. ‘அதெல்லாம் ஒன்னும் ஆகாதப்பு’ என நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்கிறோம்.
உண்மையில் இப்படத்தைத் தூக்கி நிறுத்த முயல்வது லிங்கேஸ் மற்றும் குபேன் இருவரும்தான். இருவரும் வெவ்வேறு வகையில் அற்புதமான நடிகர்கள். தனது தனிமையைப் பற்றி சொல்லும் இடத்திலும் இறந்த தாத்தாவுக்கு ச்சியேஸ் சொல்லும் இடத்திலும் குபேன் நடிப்பாற்றல் வெளிப்படுகிறது. லிங்கேஸ்வரனுக்கு இப்படம் பெரிய களம். ஒரு நல்ல நடிகரை அறிமுகம் செய்ததற்காகவே இப்படத்தைப் பாராட்டலாம். சரியான இயக்குனரிடம் இணைந்தால் மேலும் மேலும் மிளிர்வார்.
லிங்கேஸ் – குபேனுக்காக ஒருதரம் இப்படத்தை மலேசிய ரசிகர்கள் பார்க்கலாம்.