பேரன்பு: யாரைக்காட்டிலும் பாப்பா ஆசீர்வதிக்கப்பட்டவள்

CsNf84LWAAEtCyW_15398ராமின் திரைப்படங்களின் கதை என்பது வாழ்வில் நாம் கண்டுகொள்ளாமல் அல்லது கண்டுகொள்ள விரும்பாமல் அகலும் தருணங்களை கேள்விகளாக முன்னிறுத்துபவை. அந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தேடி ஆராய்வதே அவரது திரைக்கதை. திரைப்படத் தொழில்நுட்ப நுணுக்கங்கள் பற்றியும் அதைச் சார்ந்த இசை மற்றும் ஒளிப்பதிவின் பாங்கு பற்றியும் அறியாத நான் சினிமா எனும் கலை வடிவத்தின் மொழி என்னுள் கடத்தும் உணர்ச்சிகளையும் திரைக்கதை தன்னுள்ளே கொண்டுள்ள அரசியலுக்கும் உளவியலுக்கும் எவ்வளவு நேர்மையாக உள்ளது என்பதையும் மட்டுமே கவனிக்கிறேன். தொடர்ந்து ராமின் திரைப்படங்களைப் பார்த்து வருபவனாக எனக்கு அவர் நேர்மையான இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகளை வளர்க்க முடியாமல் மனைவி பிரிந்த பின்னர், அச்சிறுமியைப் பெற்றோரும் உறவினர்களும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும்நிலையில் அந்தக் குடியிருப்பில் உள்ளவர்களும் அவள் போடும் கூச்சலைத் தாங்க முடியவில்லை என புகார் கூறும்போது வேறு வழியில்லாமல் கொடைக்கானலில் உள்ள ஒரு தனி வீட்டில் மகளை வளர்க்கத் தொடங்குகிறார் அமுதவன் (மம்மூட்டி). பெண் துணையில்லாத ஒரு தந்தை உடல்குறையுள்ள தன் மகளை கைகழுவிவிட்டு வேறு புதிய வாழ்வை உருவாக்கிக்கொள்வது எவ்வளவு நியாயம் எனச் சொல்ல அவருக்கு இருக்கும் அத்தனை வாய்ப்புகளையும் உதறுகிறார். தன் மகளை நெருங்கிச் செல்வதற்கான முயற்சிகளை மட்டுமே செய்கிறார். அவளுக்குப் பிடித்த குதிரை, அவளுக்குப் பிடித்த பறவை, அவளுக்குப் பிடித்த நட்சத்திரம் அனைத்தும் அவருக்கும் பிடித்ததாகிறது.

இவ்வாறுதான் அமுதவன் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. மிகச்சரியாக அவர் கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ள வைக்கும் காட்சி, காப்பாற்ற வேண்டும் என மகள் அவர் கைகளில் கொடுத்த காயப்பட்ட சிட்டுக்குருவி ஒரு விவாதத்தில் அவரால் தரையில் வீசி எறியப்பட்டு சாகடிக்கப்படுவது. அமுதவன் அன்பானவர்தான். ஆனால் அது அளவுகோள்களுடன் உள்ள அன்பு. அந்த அளவுகோளை சமூகம் அவருக்கு உருவாக்கிக்கொடுத்துள்ளது. பிறர் துணையின்றி வாழமுடியாத மகளை அனாதையாக விடக்கூடாது என்றும் அவள் அன்பைப் பெற அன்பைக் கொடுக்கலாம் என்றும் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் தராமல் அனைத்துச் சச்சரவுகளில் இருந்தும் ஒதுங்கிவிடுலாம் என்றும் தன்மீது பழியைச் சுமத்திக்கொள்வதன் மூலம் கோபத்தையும் அதனால் ஆற்ற வேண்டிய எதிர்வினையையும் தள்ளிவைத்துவிடலாம் என்றும் உருவாக்கிக்கொள்ளும் அன்பு. அந்த அன்பு, கையில் இளஞ்சூட்டுடன் உயிருக்குப் போராடும் ஒரு சிட்டுக்குருவியின் உயிர்த்துடிப்பை அறிவதில்லை. அந்தக் கைக்கு அது ஒரு பொருள் மட்டுமே. அவர் மனம் தன்னை மட்டுமே மையப்படுத்துவது. மகளும் தன்னில் ஒருத்தி என்பதால் அவளையும் மையப்படுத்துவது. அவ்வளவு சிறிய உலகம் அவரது.

இந்த அமுதவன்தான் ஒரு குதிரை ஒரு மனிதனை மகிழ்ச்சிப்படுத்தும் என பின்னாட்களில்index அறிகிறார். தான் மகளின் கண்களில் மறைந்திருப்பதன் மூலம் அவள் சுதந்திரமாகத் தனக்கான வெளியை பெற்றுக்கொள்கிறாள் என்பதை உணர்கிறார். ஆனால் அவருக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஒரு மனிதனை நெருங்கிச்செல்ல அந்த மனிதர் விரும்பும் ஒன்றின்/ ஒருவரின் நகலாக இருக்க வேண்டும் என்றே தவறாகப் புரிந்துவைத்துள்ளார். தன் மகளுக்குப் பிடித்த அம்மாவாகவும் தன் மகளுக்குப் பிடித்த நடனக் கலைஞராகவும் தன் மகளுக்குப் பிடித்த நாய்க்குட்டியாகவும் மாற முயன்று அவள் மனதைக் கவர முடியாமல் தோற்கிறார். பின்னர் மிக எதார்த்தமாக தன் இயல்பை மீட்டு தானாக மாறி வீட்டில் மாட்டிக்கொண்ட ஒரு பறவையைப் பொறுமையாகக் கையில் பிடித்து பறக்கவிடும்போது அவர் மகளுக்கு அணுக்கமான அப்பாவாக மாறிவிடுகிறார். தானும் தன்னிலிருந்து உருவான தன் மகளும் வெவ்வேறு ஜீவிகள். அவரவருக்கு தனித்தனியாக சந்தோசங்கள் உண்டு. அவரவருக்கான உலகம் அவரவருக்கு என உணரும் அப்பாவாக மாறுகிறார். ஆனால் இரக்கமற்ற வாழ்வு அவரை அப்படியே வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

அவர் வாழும் இயற்கை சூழந்த பகுதியை அவரிடமிருந்து அபகரிக்கும் சூழ்ச்சி நடக்கிறது. மிரட்டலுக்குப் பணியாதபோது அன்பை ஒரு வணிக சக்தியாகப் பயன்படுத்துகிறார்கள். மம்முட்டி மீண்டும் விஜயலட்சுமியிடம் (அஞ்சலி) ஏமாறுகிறார். விஜயலட்சுமி வழங்கிய அன்பின் முன் எந்தக் கேள்வியும் இல்லாமல் அவரை ஏற்றுக்கொள்கிறார். தன் வாழ்வில் அதுவரை பெறாத அன்பை விஜயலட்சுமியிடம் பெறுவதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதன் பொருட்டே கேள்விகளற்று அவளை வாழ்வில் இணைத்துக்கொள்வதாகவும் சொல்கிறார். உண்மையில் அவருக்குப் பணிவிடைகள் பிடித்துள்ளது. பெண்ணில் அரவணைப்பில் கிடைக்கும் சொகுசுகள் பிடித்துள்ளது. தன் காலுக்குச் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கும், தன் கடமைகளை எளிதாக்கும் அந்த ஊரின் குளிருக்குக் கதகதப்பாகும் இன்னொரு துணையைப் பிடித்துள்ளது. மிக முக்கியமாக தன் இயலாமையையின் படபடப்பைக் குறைக்கும் சக்தியாகவே அவருக்கு விஜயலட்சுமி தெரிகிறார். வாழ்க்கை நிறைவு பெற்றதாக நினைக்கையில் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறார். ஆனால் அந்த ஏமாற்றம் அவர் மனதை இன்னும் விரிவாக்குகிறது. தனது துன்பங்களை நன்கு அறிந்த, தனது கண்ணீரை முதன்முதலாய் பார்த்த ஒரு பெண் தன்னை ஏமாற்றக்கூடுமென்றால் அவளுக்கும் எத்தனை துன்பம் இருக்கக் கூடும் என நினைக்கும் அளவுக்கு மனம் பக்குவமடைகிறது. மிக முக்கியமாக அன்புபோல ஒன்றை அவ்வளவு துல்லியமாக உருவாக்கி ஜீவிக்க வைக்கலாம் என்றும் அதுவும்கூட தற்காலிகமாக மனிதர்களுக்குள் நெருக்கத்தைக் கொடுக்கும் வஸ்து என்றும் அறிகிறார். எல்லாவற்றையும் இழந்து, மகளுடன் பட்டணத்து வாழ்க்கையில் நுழையும்போது இன்னொரு மனிதனைச் சந்தேகிக்கும் குணத்துடன் ஜாக்கிரதை உணர்வு அதிகரிக்கரித்தவராக அவர் உருமாறியிருக்கிறார். சகல தற்காப்பு உணர்வுடனும் செயல்படுகிறார். ஆனால் அப்போது அவர் வெல்ல வேண்டிய எதிரிகள் வெளியில் இல்லை. அது அவர் மகள் உள்ளத்தில் உருவாகி வளர்கிறது.

பாப்பாவுக்கு (சாதனா) கோபம் வருவதுபோல, அழுகை வருவதுபோல, அச்சம் வருவதுபோல காமமும் வருகிறது. காமம் தோன்றிய கனத்தில் அவளுக்குத் தன் தந்தை ஆண் என்ற உணர்வு வருகிறது. அதுவரை அவளது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வந்த அப்பாவை ஒரு மாதவிடாய் இரவில் தூமை துணியை அணிய முயலும்போது கடுமையாக அவரை நிராகரிக்கிறார். அன்புக்கு ஆண் பெண் பேதமில்லை எனும் உணர்வை அமுதவன் மகளுக்கு முழு பணிவிடைகளைச் செய்யும்போதே அடைகிறார்.  அடிப்படை உயிரின் உணர்ச்சிகளையும் அந்த உணர்ச்சிகளின் செயல்களையும் மட்டுமே கொண்டுள்ள பாப்பாவுக்கு அந்தத் தெளிவு இல்லை. அவள் தன்னை சொந்தமாகச் சுத்தப்படுத்த முனைகிறாள். அதுபோலவே காமத்தின் தூண்டுதல்களால் சொந்தமாகத் தன்னைத் தீண்டிப்பார்க்கவும் தொடங்குகிறாள். அதுவரை குழந்தையாக தன் மகளைக் கண்ட மம்முட்டியின் முன் பெரிய சவால் வந்து நிற்கிறது. முதலில் அந்தத் தூண்டுதல்கள் எழாமல் அவளது கண்களை உலகத்தின் மலினங்களில் இருந்து மறைத்து வைக்க முயல்கிறார். சுற்றியுள்ள அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்து எச்சரிக்கையாக இருக்கிறார். இறுதியில் அவளை ஒரு மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பாதுகாப்புப் மையத்தில் சேர்க்கிறார். அங்குள்ள குழந்தைகள் உடல் குறையுள்ளவர்கள் என்பதுமட்டுமல்லாமல், நிராகரிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குப் புரிகிறது. பொது நாகரீகத்துக்கு எதிராக இருக்கும் மனிதனெல்லாம் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்படவேண்டியவர்கள் எனும் சித்தாந்தம் அமுதவனை உறுத்தத் தொடங்கும்போது அவர் மகளை மீட்கிறார்.

வாழ்க்கை அமுதவனுக்கு எதார்த்தத்தைக் கற்றுக்கொடுக்கிறது. இவையெல்லாம் எதார்த்தம். மகளுக்கு இயல்பான உணர்சிகள் எழுவது, அவர் சுய இன்பம் கொள்வது, திருநங்கையாக வரும் அஞ்சலி அமீர் செய்யும் பாலியல் தொழில், எல்லாமே எதார்த்தமானதாக உள்ளது. இலக்கற்ற வாழ்க்கை எப்போதுமே திடுக்கிடலை ஏற்படுத்தும். அதுவே அதன் இயல்பு என அறிந்துகொண்டபின் முன்னாள் மனைவியைப் பார்க்கச் செல்கிறார். மகளைப் பார்த்துக்கொள்ள முடியுமா எனக் கேட்கச் சென்றவருக்கு அவளுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளதையும் அது நல்லபடியாக உள்ளது எனவும் புதிய கணவன் சொன்னதும் மௌனமாகிறார். ஒன்றும் சொல்லாமல் செல்லும் முன் மனைவி கலக்கி வைத்த காப்பியை பருகிவிட்டுச் செல்கிறார். அதன் வழி அவர் எதார்த்தத்தை பருகத்தொடங்கிவிட்டார். அதை ஜீரணிக்கவும் தொடங்கிவிட்டார். அந்த எதார்த்தம் தன் மகளுக்கான ஆண் பாலியல் தொழிலாளியைத் தேடுவது வரை துரத்துகிறது. கட்டற்ற உணர்ச்சிகள்போல கருணையற்ற எதார்த்தமும் சமூக அமைப்புக்கு எதிரானது என உணரத்தொடங்கிய அமுதவன் முதன்முறையாக நிராகரிக்கப்பட்டுவதாக உணரும் தருணமே அவரது அடுத்த பரிணாமமாக உள்ளது.

முடங்கிக் கிடக்கும் குழந்தை குடும்பத்துக்கு ஆகவில்லை, அவளது கூச்சல் சமூகத்துக்கு ஒவ்வாமையாக உள்ளது, அவள் இச்சைகள் பாதுகாப்பு இல்லத்தில் தண்டனைக்குரியதாக உள்ளது இவ்வாறு சமூக நிர்ணயங்களுக்கும் சமூக அளவுகோள்களுக்கும் ஏற்ப வாழ முடியாமல் துரத்தியடிக்கப்படும் அமுதவன்  தற்கொலை முயற்சியில் தனக்குள்ளும் அவ்வாறான சமூக அளவுகோள்களின் எச்சங்கள் இருப்பதை உணர்ந்திருக்கக்கூடும். எஞ்சியிருக்கும் அந்த எச்சத்தை கடல் கழுவியபின் தங்களைக் காப்பாற்றிய திருநங்கை அஞ்சலி அமீரை திருமணம் செய்கிறார். அவருக்கு அன்புக்கும் பேரன்புக்குமான வித்தியாசம் தெரியும்போது வாழ்க்கை அவரை நிபந்தனையற்று அரவணைக்கிறது.

அனைவரிடமிருந்தும் – அனைத்திலிருந்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக  வெளிப்படும் கலங்கிய குரல்களுக்கு கரிசனம் தேவைதானா என படம் முடிந்தபின் சட்டென ஒரு கேள்வி தோன்றி மறைந்தது. அனைவர் என்பதும் அனைத்தும் என்பதும் ஒருவர் தன்னளவில் கட்டமைத்துக்கொண்ட வாழ்க்கை முறையைச் சார்ந்ததாகவே இருக்கிறது. நமது நண்பர்கள், உறவுகள், காதலி, மனைவி என வாழ்வில் உடன்வருகிற ஒவ்வொருவர் குறித்தும் நம்மிடம் இருந்த முன்முடிவுகளிலும் / முன்தேர்வுகளிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளே ஒருவர் வழங்கும் பெரும் அன்பின் அளவை பல சமயங்களில் தீர்மானிக்கின்றன.

ராமின் கதை சொல்லும் உத்தி எப்போதும் பல உள்மடிப்புகளைக் கொண்டிருக்கும். சராசரி ரசிகர்கள் மேலே உள்ள கதையுடன் மட்டுமே தொடர்புகொள்கிறார்கள். கற்றது தமிழ், தமிழ் படிக்காதவனுக்கு தமிழகத்தில் வேலை கிடைப்பதில்லை என்றும், தங்க மீன்களில் அரசாங்கப் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒரு புரிதலை உருவாகிவிடுகின்றன. ஆனால் ராம் அதனோடு ஒட்டி உள்ளே பயணிக்கும் மற்றுமொரு கதையையும் வைத்திருப்பார். அந்த மற்றுமொரு கதையே உரையாடலுக்குரியது. எண்ணற்ற வாழ்வின் சாத்தியங்களைப் பேசக்கூடியது. ஆனால் தீர்ப்புகளைச் சொல்லாதது.

imagesபேரன்பு மூளை முடக்கு வாதத்தால் சிரமப்படும் பாப்பாவை (மகளை) அப்பா மீட்கும் கதையல்ல. மூளை முடக்கு வாதத்தில் இருப்பவர்கள் பாப்பாவைப்போல உடல் முடங்கி மட்டும் இருக்கமாட்டார்கள். அவர்கள் அமுதவனை போல அழகாகவும் இருப்பார்கள் எனச்சொல்லும் கதை. சமூகம் ஏற்றுக்கொண்ட அந்த நோயாளியை பாப்பா தனது தீராத ஆச்சரியங்களால் எப்படி குணப்படுத்துகிறாள் என்பதே அடியில் இருக்கும் மற்றுமொரு தளம். அதற்கும் கீழே அன்பு, காதல், கற்பு என்பதெல்லாம் எவ்வளவு போலியான விழுமியங்கள் என பகடி செய்யும் காட்சிகள் கருநாகம் போல ஊர்ந்து மொத்தத் திரைக்கதையையும் இணைக்கிறது. அமுதவன் அழகனாக பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு முற்றும் முரணான தோற்றம் கொண்ட ஒருவரையே அவர் மனைவி விரும்பி எந்தப் பழியையும் சுமக்கத் துணிந்து வீட்டை விட்டு ஓடுகிறாள். அமுதவன் தன் மனைவி இன்னொருவன் பக்கத்தில் படுத்திருப்பதாகக் கண்ட கனவைச் சொல்லி அஞ்சலியிடம் அழுகிறார். ஆனால் அஞ்சலி ஒரு இக்கட்டான சூழலில் தன்னை இன்னொருவனுடன் பழக அனுப்பும் கணவனுக்கு விசுவாசமாக இருக்கிறாள். அவனுக்காகக் கொலை முயற்சிக்கும் துணிகிறார். காலம் வழங்கும் இக்கட்டுகளால் ஒரு மனிதனில் வாழ்வு, அவன் சந்திக்கும் சக மனிதனின் நேசம், அறம் குறித்த தனது அளவுகோள்கள், விழுமியங்கள் மேல் உள்ள பிடிப்பு எல்லாமே எப்படி தகர்ந்து அவனை மறுகட்டமைப்புச் செய்கின்றன என்பதும் அதன் வழி எப்படி ஒருவன் பேரன்பு கொண்டவனாக மாறுகிறான் என்பதுமே இத்திரைப்படம். வாழ்வின் திருப்பங்களுக்கும் உக்கிரங்களுக்கும் புதிர்களுக்குமான படிமமே பாப்பா.

மூளை முடக்குவாதம் எனப் புறக்கணிக்கப்படும் பாப்பா ஆழமாக உங்கள் நம்பிக்கைகளைச் சீண்டிப்பார்க்கக் கூடியவள். திரைப்படத்தின் முடிவில் உங்களைச் சுயபட்சாதாபம்கொள்ள வைப்பாள். அப்போது நீங்கள் புரிந்துகொள்ளக்கூடும், திரைப்படத்தின் தொடக்கத்தில் மம்மூட்டி ‘என்னைக் காட்டிலும் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்’ எனச் சொல்வதற்குப் பின்னால் உள்ள சீண்டலை.

(Visited 291 times, 1 visits today)