எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விருது!

Jaya mohan,writer in his home at Nagarkovil,Tamilnaduநவம்பர் 2010இல் வல்லினம் இலக்கியக் குழு மற்றும் நவீன இலக்கிய களம் இணைந்து தைப்பிங் நகரில் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தோம். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களை ஒரு தீவிர இலக்கிய வாசகராக நான் அறிந்துகொண்ட சந்திப்பு அது. அதற்கு முன் நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோதே சுவாமியின் ஆசிரமத்துக்கு தேவாரம் பயிலச் செல்வேன். ஓர் ஆன்மிகவாதியாக மட்டுமே அதற்கு முன் எனக்கு அவர் அறிமுகம்.

தைப்பிங் இருநாள் சந்திப்பில் ஓர் அங்கமாக எழுத்தாளர் அ.ரெங்கசாமியுடனான உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். அவரது ‘நினைவுச்சின்னம்’ மற்றும் ‘லங்காட் நதிக்கரை’ நாவலை வாசித்த பிறகு ஏன் இவ்வளவு முக்கியமான ஆளுமைக்கு மலேசியாவில் விரிவான அறிமுகம் இல்லை எனத் தோன்றியதால் அவரைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்த வேண்டுமென விரும்பினேன். கற்றாரைக் கற்றாரே காமுறுவது இயல்புதானே. அங்கும் அது நிகழ்ந்தது. அ.ரெங்கசாமியின் ஆளுமையைச் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வெகு எளிதில் அறிந்துகொண்டார்.

இரண்டாவது நாள் இரவில் தியான ஆசிரமம் ஏற்பாட்டில் வருடந்தோறும் கொண்டாடும் ‘அருள்விழா’ குறித்தும் அதில் வழங்கப்படும் ‘அருளாளர் விருது’ குறித்தும் தெரிவித்தார். அவ்வருடம் அந்த விருதை அ.ரெங்கசாமிக்கு வழங்க வேண்டுமென்ற தனது விருப்பத்தைக் கூறவும் எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியானது. அந்த இருநாள் நிகழ்வில் நடந்த நன்மை என்றே அவ்வறிப்பைக் கொண்டாடினோம்.

டிசம்பர் 2010இல் நடந்த அருள் விழாவில் நான் முதன்முறையாகக் கலந்துகொண்டேன். அ.ரெங்கசாமியின் நாவல்கள் குறித்து விரிவாகப் பேசினேன். மலேசியத் தமிழர்கள் வரலாறு சார்ந்து அவர் எழுதிய ஐந்து நாவல்களின் பங்களிப்புக்காக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அ.ரெங்கசாமிக்கு ‘அருளாளர் விருதாக’ தங்கச் சங்கிலியும் கேடயமும் வழங்கி கௌரவித்தார். அப்போதுதான் அதற்கு முன் அவ்விருது பெற்றவர்கள் குறித்துத் தெரியவந்தது.

கலையின் மூலமோ சேவையின் மூலமோ ஒருவரின் தொடர்ச்சியான செயல்பாடு ஆன்மிகத்தன்மை கொண்டது. அதுபோன்ற தீவிரமான தொடர் செயல் சமூகத்தில் நேர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது. அதுபோன்ற செயல்பாட்டாளர்கள் தங்கள் செயல்களின் வழியே ஆன்மிக உச்சத்தை அடைகின்றனர். எனவே அவர்கள் அருளாளர்கள். அத்துறையின் வழி வாழ்நாள் சாதனை படைத்தவர்கள்.

அவ்வாறு கடந்த முப்பது ஆண்டுகளாக சுவாமி முன்னெடுத்து வரும் அருள் விழாவில் இதுவரை பத்துப் பேருக்கு மட்டுமே அருளாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகளுக்கே சுவாமி இவ்விருதை அறிவிக்கிறார். தற்சமயம் குறிப்பிட்ட ஒரு துறையில் தொடர்ச்சியாகப் பெரும் பங்களிப்பை வழங்கியவர்களின் வாழ்நாள் சாதனையைப் போற்றி விருதுத் தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஓர் அறிவார்ந்த சமூகம் இதுபோன்ற விதி சமைப்பவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் மிகக் கவனத்துடன் சுவாமி இதை முன்னெடுத்து வருகிறார். இதுவரை இந்த விருது பெற்றவர்கள் அனைவருமே முக்கியமான ஆளுமைகள் என அறிந்தபோது இது கௌரவமான விருது என்ற மனப்பதிவு உண்டானது.

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுக்கு இசையில் நாட்டம் மிகுதி என்பதாலும் அவர் அதில் முறையாகப் பயிற்சி பெற்றவர் என்பதாலும் 1960களில் தொடங்கி 1990கள் வரை மலேசியாவின் வடக்குப் பகுதியில் தமிழ் இசை வளர பெரும் பங்காற்றிய தமிழ் இசைச்சுடர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இவ்விருதை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வயலின், வீணை என பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் திறன் பெற்ற இவர், பாடல்கள் எழுதி, இசையமைத்து, பாடும் திறன் பெற்றவர். இவரைப் போலவே அருளாளர் விருது பெற்ற ஜெயலட்சுமி குலவீரசிங்கம் தென் மாநிலங்களில் மிகவும் அறியப்பட்ட வயலின் கலைஞராகத் திகழ்ந்தவர். தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வரும் கர்நாடக சங்கீத வித்வான்களின் (பாலமுரளிகிருஷ்ணா உட்பட) கச்சேரிகளில் வயலின் வாசித்தவர். அதை போதனையின் வழி இளம் தலைமுறையிடம் பரவச் செய்தவர்.

விருது பெற்றவர் பட்டியலில் மருத்துவர் ஜெயபாரதி குறிப்பிடத்தக்கவர். மலேசியாவில் ‘அறிஞர்’ என அழைக்கப்படுபவர். இவர் தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம், உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இறந்தபிறகு அவரது ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தளம் செயலிழந்துபோனது வருத்தத்திற்குரியது. பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களையும் தாம் தேடிப் பெற்ற அரிய சுவடிகளையும் தமது வீட்டு நூலகத்தில் வைத்திருந்தார். குறிப்பிட்ட சில காலம் நான் அவருடன் நெருக்கமாகப் பழகியதுண்டு. கடைசியாகப் சாரு நிவேதிதா எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் குறித்துப் பேசினார். தொடர்ந்து வாசிப்பதை கைவிடாதிருந்தார். கடாரம் குறித்த ஆய்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்.

மற்றுமொருவர் பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ்.

மலேசியப் பத்திரிகைத் துறையின் பிதாமகன் என்றே அழைக்கப்படுபவர். 1963ஆம் ஆண்டில் முதன்முதலில் மலேசியத் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியபோது, அந்தச் செய்தியைத் தொகுத்து வழங்கியவர். அதன் பின்னர் தொடர்ச்சியாகத் தனது வாழ்வை பத்திரிகை மற்றும் இதழியல் துறையுடன் இணைத்துக்கொண்டவர். அவர் நடத்திய இதயம் இதழ் நவீன இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது. அப்போதே (2004) இலக்கியம் குறித்து நான், பா.அ.சிவம் என்ன நினைக்கிறோம் என உரையாடலை ஏற்படுத்தி அதை இதழில் பதிவு செய்தார். இளைஞர்களை எப்போதும் ஊக்குவிக்கக் கூடியவராக இருந்தார்.

சங்கபூஷணம் ருக்மிணி அம்மாள் மற்றும் கர்னல் கரு. சாத்தையா ஆகியோரை சமயத்தொண்டுக்காக சுவாமி விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

இவ்வாறு அருளாளர் விருது விழா  மிகச்சிறந்த ஆளுமைகளை கௌரவப்படுத்தும் நிகழ்வாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இவ்வருடம் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இவ்விருது வழங்கப்படுவது இவ்விருதின் கௌரவத்தை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது என்றே கருதுகிறேன்.

indexசுவாமி, தியான ஆசிரமம் மூலம் இவ்விருதை வழங்குகிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மிகம் மட்டுமல்லாமது பல்வேறு சமூகப்பணிகள், நுண்கலைப் பயிற்சிகள், பண்பாட்டு வளர்ச்சிக்கான செயல்பாடுகள் என இடையறாது தியான ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆன்மிகம் போலவே நவீன இலக்கியத்திலும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி நாட்டம் கொண்டவர். தொடர்ச்சியான விரிந்த வாசிப்பில் உள்ளவர். அது குறித்து விவாதிப்பவர். தெளிவான இலக்கிய ரசனை கொண்டவர். அவ்வகையில் தன்னை எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகராகவே முன் வைப்பவர். தன்னை வாசகன் எனச் சொல்லிக்கொள்ளும் முழு தகுதியுடன் அவரை முழுமையாக கற்றுணர்ந்தவர்.

இவ்விருது குறித்து சுவாமி என்னிடம் கூறியபோது, தான் கொண்டாடும் ஒரு பெரும் எழுத்தாளனுக்கு ஒரு வாசகன் தெரிவிக்கும் பாராட்டாகவே ஒரு மின்னல் கனம் தோன்றி மறைந்தது. தமிழ் இலக்கியத்தின் பெரும் ஆளுமைக்கு மலேசியாவில் வழங்கப்படும் விருது அதன் வழியே எல்லா வரலாற்று சிறப்புகளையும் பெற்றுவிடுவதாகவே தோன்றியது.

விருது வழங்கும் விழா 24.12.2019 (செவ்வாய்) இரவு 7.30க்கு மணிக்கு நடைபெறுகிறது. வாசகர்கள், எழுத்தாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

(Visited 942 times, 1 visits today)