கலையும் கடமாவும்: ஊட்டி முகாம் அனுபவம்

16‘வல்லினம் விமர்சனப் போட்டி’ நடத்த வேண்டும் எனத் தோன்றியபோது வெற்றியாளர்களை ஊட்டி முகாமில் பங்கெடுக்கச் செய்வதே தகுந்த பரிசாக இருக்கும் என முடிவெடுத்தேன். ஊட்டி முகாம் வாசிப்பு முறையை நெறிப்படுத்தக்கூடியது. ஒரு படைப்பை அணுகும் விதத்தை போதிக்கக்கூடியது. ஒரு படைப்பாளிக்கு அதுவே சரியான பரிசாக இருக்க முடியும். அண்ணன் அரங்கசாமியிடம் கேட்டபோது உடனடியாகச் சம்மதித்தார். நிகழ்ச்சி முடிந்து வெற்றியாளர்கள் கூடுதலாக இரு நாட்கள் தங்கினாலும் விஷ்ணுபுரம் குழு அப்பொறுப்பை ஏற்கும்படி திட்டமிடலாம் என்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரளத்தில் இருந்தபடியே போட்டிக்கான வரையறைகளை நண்பர்களுடன் தீர்மானித்தேன்.

மொத்தம் மூன்று பகுதி. சிறுகதை, நாவல், கட்டுரை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வெற்றியாளர். வெற்றியாளருக்கான விமானச் செலவு உட்பட ஊட்டி பயணத்திற்கான அனைத்துப் பொறுப்புகளையும் வல்லினமே ஏற்பது என முடிவானது. சிறுகதைப் பகுதிக்கு மட்டும் மனதுக்கு நிறைவான விமர்சனங்கள் கிடைக்கவில்லை. இறுதியாக நாவல், கட்டுரைப் பிரிவுகளில் முறையே ஶ்ரீதர் ரங்கராஜ், பவிதாரா இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஶ்ரீதர் சூழல் காரணமாக ஊட்டிக்கு வர முடியா நிலை. எனவே பவிதாரா மட்டுமே வெற்றியாளராகப் பங்கெடுத்தார். உடன் சரவண தீர்த்தாவும் அவர் மனைவி எலிஸும் இப்பயணத்தில் கலந்துகொண்டனர்.

மலேசியாவிலிருந்து தமிழகம் செல்ல சென்னை, திருச்சியில் ஆகிய நகர்களுக்கு மட்டுமே17 விமான சேவை வழங்கப்படுகிறது. இரண்டுமே ஊட்டியிலிருந்து தொலைவானவை என்பதால் கொச்சிக்கு விமானம் எடுத்து அங்கிருந்து கார் பிடித்து ஊட்டிக்குச் செல்வதாகத் திட்டம். திட்டம் என்னவோ சரிதான். ஆனால் விமானத்தில் முதல் சோதனை தொடங்கியது. ஒரு வசதிக்காக கடைசி சீட்டாகப் போட கடைசி சீட்டை பின்னால் சாய்க்க முடியாது என அப்போதுதான் தெரிந்தது. முதுகை நேராக்கி அமர்ந்தவாரே நான்கு மணி நேரப் பயணம். கஷ்டப்பட்டு தூங்க முயன்றாலும் ‘எங்க பொருள்களை வாங்குறீங்களா?’ என விமானப் பணிப்பெண்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு பொருள்களுடன் திரவிய வாசனை மணக்க குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தனர். தூக்கத்தின் போதுதான் கண்டுபிடித்தேன். பொதுவாகவே விமானப் பணிப்பெண்கள் காதுகளைத் தொந்தரவு செய்யும் குரலுடன் இருக்கின்றனர். அல்லது அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு உறக்கத்தில் இருந்தாலும் அது கூர்மையாக மூளையைச் சீண்டுகிறது.

நான்கு மணி நேரப் பயணத்துக்குப் பின் நள்ளிரவு 12க்கு இறங்கியதும் சாஹூல் காத்துக்கொண்டிருந்தார். வாகனமோட்டி. இனோவா ரக கார். உடனடியாகப் பயணம் ஊட்டியை நோக்கி தொடங்கியது. வெள்ளிக்கிழமை (3.5.2019) முதல் அமர்வு காலை 10 மணிக்கு என்பதால் தாமதிக்காமல் புறப்பட்டோம். இடையில் சரவணபவன் உணவகத்தில் தேநீருடன் தோசை. அதோடு 8 மணி நேர கார் பயணம். உறக்கம் அழுத்தியபோதுதான் சாஹூலுக்கு கூகள் சொல்லும் இடது, வலது புரியவில்லை எனத் தெரிந்தது. என் கையில் தொலைபேசியைக் கொடுத்து அது சொல்லும் பாதையைத் தனக்கு காட்டி உதவச் சொன்னார். திரும்பிப் பார்த்தேன். நண்பர்கள் தூங்கிக்கொண்டிருக்க “இன்னும் கொஞ்ச தூரத்தில் இடது அப்புறம் வலது” என எச்சரித்தபடியே அவ்வதிகாலையை நான் கடந்த கொடுமை இலக்கியச் சூழலில் உள்ள எதிரிகளைத் தவிர வேறு யாருக்கும் நிகழக்கூடாது.

ஊட்டி மலையின் உச்சிக்குச் செல்லும் பாதை பிரேசருடன் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் ஆபத்தானதல்ல. ஆனால் எதிர்வரும் வாகனங்களும் முந்திச்செல்லும் வாகனங்களும் அப்பயணத்தை அச்சத்திற்குரியதாக மாற்றுகின்றன. சில அங்குலம் இடைவெளியில்தான் வாகனங்கள் மோதிக்கொள்ளாமல் கடந்தன. கூகள் வழிகாட்டி சரியாக வேலை செய்யாதபோது, இடையிடையே வழி விசாரித்தபடி சென்றோம். குளிரை அனுபவிக்க வண்டி சன்னலைத் திறக்க முடியவில்லை. மாசடைந்த காற்று. பசுமைக்கு நடுவில் எழுந்து செல்லும் பனியை மட்டும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டோம்.  ஒன்பது மணிக்கு நாராயண குருகுலத்தை அடைந்தபோது செந்தில், சீனு, விஜயராகவன், விஜய் சூரியன் ஆகியோர் வரவேற்றனர். சோர்வு நீங்கி கொஞ்சம் உற்சாகம் பிறந்தது.

சிங்கையில் இருந்து ராம், சுஜா, விஜிப்பிரியா, வெங்கடாசலம் ஆகியோர் வந்திருந்தனர். ஆக மலேசியாவில் இருந்து நால்வருக்கும் சிங்கையில் இருந்து நால்வருக்கும் தனியாக ஒரு வீடு வழங்கப்பட்டது. மூன்று அறைகள் கொண்ட வீடு அது. சிறிதுநேர ஓய்வுக்குப்பின் முதல் அமர்வில் கலந்துகொண்டோம். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வர சற்றுத் தாமதமானதால் ஜெயமோகனின் கண்கள் கூட்டத்தில் அலைமோதின. அந்தப் பார்வையை நான் அறிவேன். அது நிகழ்ச்சி சிறப்பாக நடக்க பலியாட்டைத் தேடும் பூசாரியின் கண்கள். அருவாளை என்னை நோக்கி அப்படி இப்படி வீசிப் பார்த்தார். சிரித்தபடி தப்பியபின் அடுத்தடுத்த தலைகளை அக்கண்கள் தேடின. ஊட்டி குருகுலத் தலைவர் முனி நாராயணப்பிரசாத் துவக்க உரையுடன் அக்கண்கள் அமைதி கொண்டன.

05நாஞ்சில் நாடன் வருகை சற்று தாமதமானதால் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து முதல் அமர்வாக நாவல் குறித்த அரங்கு நடந்தது. பாலாஜி பிருத்விராஜ் உரையாற்றினார். நாவல் எனும் கலை வடிவத்தின் தன்மைகள் எவ்வாறு இருக்கலாம் என தான் வாசித்த செவ்வியல் நாவல்களின் அடிப்படையிலிருந்து கூறினார். தொடர்ந்து அவரது உரை குறித்த விவாதம் நடந்தது. ஜெயமோகன் உரையாற்றுபவர் கொண்டிருக்க வேண்டிய கவனத்தை நினைவூட்டினார். குறைந்தபட்சம் 10 நிமிடம் அதிக பட்சம் 20 நிமிடத்திற்குள் ஓர் உரை இருக்க வேண்டுமென்றும் அவ்வுரையின் அடிப்படையில் விவாதம் நடக்கும்போது மேற்கொண்டு விரிவாகப் பேசலாம் என்றும் சொன்னார்.

தேநீருக்குப் பின் நாஞ்சில் நாடனின் ராமாயண உரை தொடங்கியது. இம்முறை ‘கும்பகர்ணன்06 வதைப்படலம்.’ நேரம் ஆக ஆக உரையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு முதுகுத் தண்டின் வலியும் மயக்கம் போன்றதொரு உறக்கமும் நெருக்கியது. உணவு நேரத்திற்கு 30 நிமிடம் இருக்கும்போது செந்தில் அவர்களிடம் சொல்லிவிட்டு அறையில் சென்று படுத்தேன். கொஞ்ச நேரத்தில் எனக்கான உணவையும் எடுத்துக்கொண்டு நண்பர்கள் எழுப்பிவிடவும் உடல் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. வீட்டிலேயே சாப்பிட்டோம். அரங்கிலிருந்து நான் சென்ற சிறிது நேரத்தில் ஜெயமோகன் ராமாயணப் பாடலைப் படித்துக்காட்ட என்னை அழைத்ததாகவும் நான் இல்லாதது அவருக்குக் கோபத்தை மூட்டியிருக்கக்கூடும் என்றும் கூறினர். உணவு இறங்கவில்லை. மீண்டும் அடுத்த அமர்வுக்குச் சென்றபோது “எங்க பாதியிலேயே போயிட்டீங்க” என்றார் சீனு. விளக்கம் சொல்வதற்குள் “ஒரு அறிவுப் பசியோட வரல போலிருக்கே” என்று நக்கலடித்தபடி நகர்ந்தார். அப்புறம் அதே கேள்வியைப் பார்ப்பவர்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். இனி மயக்கமே வந்தாலும் இடத்தை விட்டு நகரக்கூடாது என நினைத்துக்கொண்டேன். ஜெயமோகனிடம் சூழலைக் கூறினேன். கனிவாகப் பார்த்தார். புரிந்துகொண்டிருப்பார்.

உணவுக்குப் பின் சிறுகதை அரங்கு. ‘வெற்றுப்பக்கம்’ என்ற ஐசக் டினேசன் சிறுகதை குறித்து 07பிரியம்வதா, கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’ குறித்து விஜயராகவன், Ted Chiang கின் Story of Your Life சிறுகதை குறித்து அருணாசலம் மகராஜன் ஆகியோர் உரையாற்றி கேள்விகளுக்குப் பதிலளித்தனர். ஒரு கதைக்குப் பல்வேறு வினாக்களும் விளக்கங்களும் வழங்கப்பட்டன. ஒரு கதையிலிருந்து எழுத்தாளரின் பிற படைப்புகள்; அப்படைப்புகள் வழி அப்படைப்பாளிகளின் புனைவுலகம் என விரிவாகவே உரையாடல்கள் நகர்ந்தன. உரையாடல்கள் மையத்திலிருந்து திசை மாறும்போது ஜெயமோகன் மீண்டும் அதனை புனைவிலக்கிய வெளிக்குள் எடுத்து வந்துவிட்டார். இவ்வமர்வில் எனக்கு விஜயராகவனின் விளக்கங்கள் கவர்ந்தன. ஜெயமோகன், கோணங்கி உருவாக்கும் சித்திரங்கள் துண்டுதுண்டாக உதிர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். காலம் அவர் கதைகளில் தெளிவாக இல்லாதது விவாதிக்கப்பட்டது. எனக்கு அவரது ‘மதினிமார்கள் கதை’, ‘கருப்பு ரயில்’ எனும் அற்புதமான சிறுகதையின் தொடக்க முயற்சியாகவே தோன்றுவதுண்டு. கோணங்கி பற்றிய பேச்சு விரிவானபோது அவரது ‘கோப்பம்மாள்’ சிறுகதை நினைவுக்கு வந்தது. ச.தமிழ்ச்செல்வன் சிலமலைப்பட்டி கிராமத்தில் சீலைக்காரி கோப்பம்மாள் எனும் சாமியைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். கோப்பம்மாள் சிறுகதை இந்த சிறு தெய்வத்தில் மீள் புனைவாக்கம் என்பதே என் கணிப்பு. கிராம தெய்வங்கள் வரலாற்றில் ஈடுபாடு காட்டும் கோணங்கியிடமிருந்து இவ்வாறான புனைவுகள் வருவது சாத்தியம்தான். ஒருவேளை யாராவது ‘கோணங்கியின் சிறுகதைகளில் காணப்படும் நாட்டாறியல் தெய்வங்கள்’ என ஆய்வு செய்தால் சிறப்பாக இருக்கும். இதைச் சொல்ல அது தகுந்த இடமாகப்படவில்லை. அப்படி அங்கு பேசலாமா என்றுகூடத் தெரியவில்லை. பின்னர் ஓய்வு கிடைத்த இடைவெளியில் இக்கதையை நண்பர்களுடன் சொல்லிக்கொண்டிருந்தேன். கோப்பம்மாளைவிட சீலைக்காரி கோப்பம்மாள் கதை சுவாரசியமாக உள்ளதாக நண்பர்கள் கூறினர்.

சாம்ராஜ்

சாம்ராஜ்

இரவில் இறுதி நிகழ்ச்சியாக வேணு வெட்ராயன், சாம்ராஜ், வி என் சூர்யா ஆகியோர் கவிதைகள் பற்றிப் பேசினர். உண்மையில் அந்த இருநாள் நிகழ்ச்சியில் எனக்கு மிக நெருக்கமானதாக அமைந்தது சாம்ராஜ் உரை. கண்டராதித்தன், சபரிநாதன் மற்றும் லிபி ஆகியோர் கவிதைகள் குறித்து பேசினார். ஒரு படைப்பிலக்கியம் மானுட அவலத்தை, வதையைப் பேசுவதில் சிக்கல் இல்லை. ஆனால் படைப்புக்கான மொழியும் அதை வெளிப்படுத்தும் பாணியும் வாசகனை உற்சாகம் கொள்ளச் செய்யும் வகையில் அமைவதில் எந்தத் தவறும் இல்லை என்பதாக அமைந்தது அவரது விளக்கம். எனக்கு அது ஏற்புடைய கருத்தாகவே இருந்தது. அதை அவர் சொல்லிய பாங்கு, அதற்கேற்ற குரல் அனைத்துமே அவ்விரவை உற்சாகப்படுத்தியது. உண்மையில் நான் கவிதைத் தொகுப்புகளை வாசித்து பல மாதங்கள் ஆகின்றன. கடைசியாக சு.வேணுகோபால் அன்பளிப்பாகக் கொடுத்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ (புதுப்பிக்கப்பட்டது) நூலை ஆவலுடன் புரட்டினேன். சாம்ராஜ் தரமான கவிதைகளை முன்வைத்து மட்டும் பேசவில்லை. மாறாக உற்சாகமிழந்திருக்கும் கவிதைச் சூழலுக்குள் நடைபெற வேண்டிய புதிய சாத்தியங்களைச் சுட்டிக்காட்டினார். அது எனக்கு முக்கியமாகப் பட்டது. குறைந்தபட்சம் பல கவிஞர்கள் கவிதை எழுதும் முன்பாகவே ததும்பும் கண்ணீரைத் துடைக்க கைக்குட்டையுடன் அமர்ந்திருப்பதுபோல தோன்றும் கற்பனையையாவது ஒரு வாசகனால் அகற்ற முடியும் அல்லவா?

02

செந்தில்குமார்

இரவு ஒன்பது மணியளவில் அன்றைய நிகழ்ச்சி முடிவுற்றதும் உணவு வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வது இது இரண்டாவது முறை. இருமுறையும் நான் கவனித்தது நேர்த்தி. அதற்கான காரணம் செந்தில்குமார் என்றே கணிக்கிறேன். ஒவ்வொன்றும் அவர் கண்காணிப்பில் நடக்கிறது. இலக்கிய விவாதத்திலும் தீவிரமாகப் பங்கெடுக்கிறார். மற்றொருவர் மீனாம்பிகை. நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள முடியாத சூழல். இவை நான் பார்த்ததில் கணித்தது. இன்னும் சிலர் இருக்கலாம். அனைவரும் சமமாகவே நடத்தப்படுவது மற்றுமொரு சிறப்பு. சில சமயம் ஜெயமோகனே கூடாரத்தில் இடமில்லாமல் வெயிலில்தான் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

20அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றேன். மூளை விழிப்புடன் இருந்தது. ஆனால் உறங்கியாக வேண்டும். மனதில் ஒவ்வொன்றாக அசைப்போட்டுக் கொண்டேன். முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தாலும் அருணாசலம் மகராஜன் போன்றவர்கள் முன்வைத்த கருத்துகளும் சிறுகதைப் பகிர்வும் ஒவ்வாமையை உண்டாக்கியிருந்தது. நான் ஒரு படைப்பை முழுக் கவனத்துடன் அணுகவே முயற்சிக்கிறேன். அந்த கவனம் ஒரு ஆய்வாளனுக்குரியது அல்ல. ஒரு சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டியின் அபோத துள்ளலை என்னால் மனதில் நிறுத்தி அதன் உற்சாகத்தை என்னுள் கடத்த முடிகிறதே தவிர அதன் உந்துவிசையின் வேகத்தை ஆராய்வதில் ஆர்வமில்லை. இது ஒருவேளை எனது போதாமையாகக்கூட இருக்கலாம். பெரும்பாலும் அவரது கருத்துக்கும் அமர்வுக்கும் எவ்வித எதிர்வினையும் எழவில்லை என்பதால் நான் பின் தங்கி இருக்கிறேனோ என்னவோ. ஆனால் சுமைகள் எப்போதும் பறப்பதற்கு உரியதல்ல.

19நல்ல உறக்கத்திற்குப் பின் மறுநாள் உற்சாகமாக இருந்தது. நண்பர்கள் கிளம்பி வரும் முன்பே உணவு பகுதிக்குச் சென்றேன். கிருஷ்ணன் சங்கரன் இருந்தார். கொஞ்ச நேரம் ‘போயாக்’ சிறுகதை தொகுப்பு குறித்து உரையாடிக்கொண்டிருந்தபோது ஊட்டியில் இருக்கும் காட்டெருதுகள் பற்றிய பேச்சு வந்தது. அவை இரவிலும் அதிகாலையும் அங்கு மேய்கின்றன என்றார். சில சமயம் குருகுலம் வரையும் வரும் என்றார். கொஞ்சம் நடந்து தேயிலைத் தோட்டம் பக்கம் சென்றால் அவற்றைக் காணலாம் என்றவுடன் நடந்தோம். நெடுதூரம் நடந்தும் எதையும் காணவில்லை. இதற்கிடையில் சீனு அவரும் காட்டெருதுகள் குறித்து உருவாக்கிய பிம்பம் ஆர்வமளிக்கக் கூடியதாக இருந்தது. உலகின் மிகப்பெரிய மாட்டினமான காட்டெருதுவினால் மாதம் ஒருவர் ஊட்டியில் கொல்லப்படுகிறார். ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட இவை மனிதர்களைத் திட்டமிட்டுத் தாக்குவதில்லை என்றும் ஒரு விபத்துபோல அவை நேர்ந்துவிடுவதாகவும் கிருஷ்ணன் சங்கரன் கூறினார். எனக்கு அவற்றை பார்க்க ஆவல் தோன்றியது. எவ்வளவு நடந்தும் கண்ணில் அகப்படவில்லை. ‘தேயிலைப் பாத்திகளுக்கு நடுவில் கரிய கல் தெரிந்தால் அதுவே அதன் திமில்’ என்றார். நான் அக்கரிய கல்லைத் தேடினேன். ஒரு கட்டத்தில் ஆளில்லா காட்டில் நாங்கள் இருவர் மட்டும் நின்றுகொண்டிருப்பதாகத் தோன்றவே திருப்பி நடந்தோம். மேடு பள்ளமான பாதைகள் அதிக தூரம் நடந்துவந்த களைப்பைக் கொடுத்தது.

08

ஈரோடு கிருஷ்ணன்

இரண்டாவது நாள் முதல் அமர்வாக ‘இராமாயண வகுப்பு’ நடந்தது. தொடர்ந்து மாரிராஜ் இந்திரன், ஸ்வேதா, ஜி எஸ் வி நவீன் ஆகியோர் முறையே அ.முத்துலிங்கத்தின் ‘என்னைத் திருப்பி எடு’, ஹெமிங்கவேயின் ‘ஒரு சுத்தமான நன்கு ஒளியூட்டப்பட்ட இடம்’, தூயனின் ‘பிரக்ஞைக்கு அப்பால்’ ஆகிய கதைகளைத் தேர்வு செய்திருந்தனர். பொதுவாக ஹெமிங்வே போன்ற ஆசிரியர்கள் எழுதும் புனைவுகளில் அவசியம் இன்றி எதுவும் வருவதில்லை. அக்கதை குறித்த விவாதம் ஒரு கிழவன், இரு உணவக ஊழியர்களை மட்டும் மையப்படுத்திச் சென்றதால் அதில் வரும் இராணுவ வீரனையும் அவனுடன் வந்த பெண்ணையும் கவனப்படுத்தினேன். இக்கதை குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதன் வழியே அக்காட்சியின் அவசியத்தை நான் அறிந்திருந்தேன். தனித்தனியானவர்களின் அச்சத்தை சொல்வது அக்கதை என்றால் அவ்வச்சம் முதியவர்களுக்கு மட்டுமானதல்ல இராணுவ வீரனுக்கும் உண்டு. இரவின் தனிமையை அவன் தன் வழியில் தீர்த்துக்கொள்கிறான். அ.முத்துலிங்கத்தின் சிறுகதை குறித்த விவாதமும் சிறப்பாக அமைந்தது. ஒரு ஜோக்கர் போன்ற கதாநாயகனின் மனநிலையும் மிதிலாவின் குரூரத்திற்கு அவன் எவ்வாறு சளைக்காதவன் என்றும் சில கருத்துகள் வெளிப்பட்டன. இக்கதையில் அதிகாரப் பிரயோகம்  அவன் மீது திணிக்கப்பட்டு  பின் அவனிடமிருந்து எவ்வாறு வெளிப்படத் தவிக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால், அதில் அவன் எப்போதும் வெல்லப்போவதே இல்லை என சிரிப்பொலியோடு விவாதம் முடிந்தது. ஜி எஸ் வி நவீன் முன்வைத்த ‘பிரக்ஞைக்கு அப்பால்’ சிறுகதை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

கடலூர் சீனு

கடலூர் சீனு

பொதுவாகவே ஜெயமோகன், புனைவுலகில் யார் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறாரோ அவர்களிடம் காணப்படும் அவசரத்தையும் அலட்சியத்தையும் கடுமையாக விமர்சனம் செய்யக்கூடியவர்தான். தன் பின்னே சீடர்கள் இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர்கள் இவ்வாறான கறார் முகத்தை காட்டுவதே இல்லை. அவர்களைப் போலியாகப் பாராட்டி நட்பு வட்டத்தை பெரிதாக்குகின்றனர். அதன் வழி தங்களுக்குச் சாதகமானவற்றை அடைகின்றனர். தூயனின் இக்கதை தன்னகத்தே கொண்டுள்ள போலியான புனைவெழுத்தும் அவ்வெழுத்தின் வழி அதன் ஆசிரியர் பெற முயலும் அவசரமான கவனமும் எவ்வித வலுவும் அற்ற இக்கதை சமூக வளைத்தள வாசகர்களால் கொண்டாடப்பட்டு அதுவே அப்படைப்பாளிக்கு தன்  ஆக்கத்தை மேம்படுத்தும் எண்ணங்களை விதைக்காமல் வீழ்ச்சியைக் கொடுக்கும் என்றும் ஜெயமோகன் வருத்தப்பட்டார். இலக்கியத்தை நேசிப்பவர் எவருக்கும் எழுதும் வருத்தமும் அதன் வழி எழும் விமர்சனமும் அன்றெழுந்தது. இன்னும் சொல்லப்போனால் அடுத்த தலைமுறையில் உள்ள நம்பிக்கையான எழுத்தாளர்கள் மீது இவ்வாறான விமர்சனங்கள் வழியாகவே ஜெயமோகன் தன் அக்கறையைச் செலுத்துபவராக உள்ளார். எனக்கு அதெல்லாம் புரிந்தாலும் அடுத்து வரப்போகும் அமர்வில் நான் பேச வேண்டியிருந்ததை நினைக்கும்போது படபடத்தது.

சில புலிகள் வேட்டையாடிவிட்டு வயிறு சுருங்கி விரிய ஓய்வெடுக்கும். அவற்றால் ஆபத்து ஒன்றும் இல்லை. சில சமயம் குரங்குகள் அதன் வாலைப்பிடித்துச் சீண்டினாலும் கவிழ்ந்து படுத்துவிடும். சில புலிகள் கடுமையாக தாக்கிவிட்டு உஷ்ணம் சிதறாமல் காத்திருக்கும். அது முந்தைய தாக்குதலைவிட அடுத்த தாக்குதலை வலுவாக்கும். ஜயகாந்த் ராஜு, அந்தியூர் மணி ஆகியோர் மரபிலக்கியக் கவிதைகள் குறித்து பேசி முடித்த பிறகு “அடுத்து நவீன் வாங்க” என ஜெயமோகன் அழைக்கவும் இது எந்த ரக புலியின் குரலோ என நினைத்தபடி அரங்கின் முன் சென்றேன்.

04மலேசிய சிறுகதை குறித்து பேச வேண்டும் என நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன் ஜெயமோகன் கேட்டிருந்தபோது செய்துகொண்டிருந்த அத்தனை மேற்கல்விக்கான வேலைகளையும் எடுத்துவைத்துவிட்டு மலேசியச் சிறுகதைகளை மீண்டும் ஒரு கவனமான வாசிப்பு செய்தேன். ஏறக்குறைய 86 கதைகளை வாசிக்க 10 நாட்கள் தேவைப்பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் மலேசியாவில் எழுதப்பட்ட முக்கியமான 10 சிறுகதைகளைத் தொகுத்தேன். ஒரு எழுத்தாளரின் இரு சிறுகதைகள் குறுக்கிட்டபோது சு.வேணுகோபாலிடம் அனுப்பி மறு அபிப்பிராயம் கேட்டிருந்தேன். திருப்தியான 10 சிறுகதைகள் அடங்கிய பட்டியல் கிடைத்தது. நூல் வடிவில் உள்ளதை மீண்டும் டைப் செய்து ஜெயமோகனுக்கு அனுப்பிய போதுதான் ஒரு சிறுகதை குறித்து மட்டுமே பேச வேண்டும் என்று தெரிந்தது. ஆனாலும் நான் மேற்கொண்டது நல்ல பயிற்சி. ஒரு கதைதான் என்றவுடன் யோசிக்காமல் சீ.முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதையை முன் மொழிந்திருந்தேன்.

அங்கு நான் சந்தித்த நண்பர்கள் பலருக்கும் ஏன் நான் அக்கதையைத் தேர்ந்தெடுத்தேன் என்ற11 குழப்பம் இருந்தது. காரணம் முதல் வாசிப்பில் ஒரு காலத்தின் சமூகச் சிக்கலைச் சொல்லும் கதையாகவே அதை பலர் வாசித்திருக்கக்கூடும். அப்படித்தான் 1970இல் எழுதப்பட்ட இக்கதை கடந்த ஐம்பது ஆண்டுகளாக மலேசியாவில் வாசிக்கப்பட்டு வருகிறது. கல்லூரியின் ஒரு பருவத்தின் சிவப்பு அடையாள அட்டை பிரச்சனையைச் சொல்ல இக்கதை பயன்பட்டதென்றால் மலேசிய நவீன இலக்கிய வாசகர்கள் இக்கதையை சமூக அவலத்தால் நிகழ்த்தப்பட்ட காதலின் தியாகம் என்றே கருத்துகளை வைத்திருந்தனர். முன்பே இக்கதை குறித்த மாற்று அபிப்பிராயம் இருந்தாலும் ‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனும்’ எனும் சீ.முத்துசாமியின் சிறுகதை தொகுப்பை வாசித்த பின்னரே சீ.முத்துசாமியின் அக உலகம் எனக்குப் பிடிபட்டது. அவ்வக உலகத்தை அறிந்துகொண்ட வாசகன் இக்கதையை வாசிக்கும்போது அது திறந்து காட்டும் உலகம் என்பது வேறு.

21பத்து நிமிடத்திற்குள் பேசிவிட வேண்டும் என செறிவாகக் குறிப்பெடுத்து கதையின் அடர்ந்த தன்மையையும் அதன் காலத்தையும் அக்காலத்தின் மலேசியத் தமிழர்கள் வாழ்வையும் அதிலிருந்து எழுந்து வந்த லட்சுமி என்ற ஒரு பெண்ணின் அக உணர்வையும் விரித்துக்காட்டினேன். அப்பெண் தனது அன்பின்/ காதலின் பொருட்டு தான் விட்டுக்கொடுக்க விரும்பாத சுதந்திரத்தை கதை சுட்டுவதைக் கூறினேன். கதையில் வெளிப்படுத்த விரும்பாத கிருஷ்ணன் மேல் அவளுக்கு ஏற்பட்ட காதலால் இரவில் மேனஜரின் மிரட்டலுக்கு அடிபணிவது என்பது தோட்டம் அறிய கணவனின் வன்மத்துக்கு உள்ளான அவளுக்கு பெரிதில்லை; மாறாக கணவனை இழந்தபின் அவள் ருசிக்கத் தொடங்கியிருக்கும் எளிய விடுதலையை அவள் கிருஷ்ணனை பராமரிக்கும் பொருட்டு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என விளக்கினேன். சில கேள்விகள் எழுந்தன. விளக்கம் கொடுத்தேன். ழான் – பால் சார்தரின் (Jean-Paul Sartre) ‘மீள முடியுமா?’ நாடகத்தை வாசித்தபின் உண்டாகும் கேள்விகளே முத்துசாமி சிறுகதைகள் காட்டும் உறவுகளின் அடிநாதம். அவர் கதையின் இணையர்கள் அனைவருமே மனதிற்குள் ஆழமாக ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்’ என நம்புபவர்கள். லட்சுமியும் அவ்வாறே. அவளுக்கு தானல்லாத வெறெதுவும் அவசியமற்றது. ஜெயமோகன் என் விளக்கத்தை மேலும் விரிவு செய்ய துணை நின்றார். காயங்களின்றி உயிர்தப்பி இடத்தில் வந்து அமர்ந்தேன். தொடர்ந்து ‘சங்கேதங்களும் குறியீடுகளும்’ எனும் சிறுகதை குறித்து நிகிதா பேசினார்.

09

சுசித்ரா

சிறிய ஓய்வுக்குப் பின் மீண்டும் சுசித்ராவும் கமலக்கண்ணனும் அறிவியல் புனைகதைகள் குறித்து விளக்கினர். இருவருமே அரூ நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் சிறந்த 10 சிறுகதைகளில் ஒன்றை எழுதியவர்கள். கமலக்கண்ணன் ‘சிவந்த நூலிழை’ சிறுகதையை முன்வைத்துப் பேசினார். சுசித்ரா அறிவியல் புனைவுகள் குறித்த விளக்கத்தை விரிவாகவே வழங்கினார். அரங்கு உயிர்ப்புடன் இருக்க ஈரோடு கிருஷ்ணன், ராஜகோபால், செல்வேந்திரன், விஷால் ராஜா, சுசித்ரா, தேவதேவன், காளிபிரசாத், விஜயராகவன், நரேன், சீனு, லட்சுமி மணிவண்ணன் போன்றவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. 25 வருடங்களாக ஜெயமோகனின் ஓயாத நகர்ச்சி உயிர்ப்புள்ள ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்த சிந்தனை கொண்டவர்கள். அதனாலேயே விஷ்ணுபுரம் குறிப்பிடத்தக்க அறிவியக்கமாகத் திகழ்கிறது. இரவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். குறிப்பாக அருண்மொழி அக்காவிடம். பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு அக்காவை பார்த்தபோது பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். அவ்வப்போது ஓரிரு சொற்கள் பேசினார். இம்முறை “கொஞ்சம் இருங்க ஜெயன்” என தனது பார்வையை விவாதத்தில் ஆழமாக முன்வைத்தார்.

13மறுநாள் காலையிலேயே நாங்கள் புறப்படுவதாகத் திட்டம். மேலும் இரு அமர்வுகள் இருந்தாலும் ஞாயிறு போக்குவரத்து நெரிசல் இருக்கலாம் என எச்சரித்தார் வாகன ஓட்டுனர். எனவே எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டாக வேண்டும். அப்படியானால் அது எங்களுக்கு ஊட்டியின் இறுதி இரவு, அவ்விரவில் எப்படியும் காட்டு எருதுகளைப் பார்த்துவிடுவதென முடிவெடுத்தோம். குவிந்த இருள் கண்களுக்கு வழிவிடாதவரை நடந்தோம். பின்னர் ஒரு ஆட்டோவை பிடித்து பேருந்து நிறுத்தம் வரை சும்மா செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆட்டோ ஒரு புதர் வளைவைத் தாண்டியபோது காட்டு எருது நடந்து சென்றது. ஒரு சில வினாடிகள் அதனை நாங்கள் பின்புறமிருந்து பார்த்தோம். குனிந்து மேய்ந்துகொண்டிருந்தது. அதன் சுவாசத்தின் உஷ்ணம் இரு பக்கமும் புகையாக வெளிபட்டது. உறுதியான உடல். முறுக்கி மேலெழுந்த திமில். கம்பீரமான ஜீவன். ஒரு கார் அதன் அருகில் நின்று வேடிக்கை பார்த்தது. ஆட்டோகாரர், “அது கார்; இது ஆட்டோ. சாச்சிடும்” என இடத்தை விட்டு அகன்றார். எல்லா டீக்கடைகளும் மூடியிருக்கவே மீண்டும் திரும்பி வந்தபோது நிமிர்ந்த நடையுடன் சென்றுகொண்டிருந்தது எருது. பாகுபலியில் பல்வாள் தேவன் ஒரே அடியில் வீழ்த்திய பிரம்மாண்ட உருவம். முன் மண்டையிலும் காலிலும் வெண்மை. ஆட்டோகாரர் இம்முறையும் நிற்கவில்லை. மாறாக சில வாரங்களுக்கு முன் ஒருவரை கொம்புகளால் குத்தி ரத்தச் சிவப்புடன் பிணத்தைத் தூக்கி அலைந்த காட்டெருது பற்றி நாளிதழில் வந்ததைக் கூறினார். சாதாரணமாகப் புல் மேய்ந்து கொண்டிருந்தாலும் அது ஓடி வந்து தாக்கும் வேகம் படுபயங்கரமானது என்றார். எனக்கு அதைப் பார்க்க பார்க்க ஆசை தீரவில்லை. ஒருநாள் அதை மனிதன் தன் கால்நடையாக்குவான். அப்போது அதன் திமிலை தொட்டுத் தடவுவேன் என நினைத்துக்கொண்டேன்.

வீட்டை ஆட்டோ நெருங்கியபோது வீட்டின் அருகே வெண்மையான நான்கு தூண்கள் தெரிந்தன.15 உற்றுப் பார்த்தபோது அது மற்றுமொரு பிரம்மாண்ட காட்டெருது. ஆட்டோ அலறியது. வீட்டின் வாயிலில் இருந்து பத்தடி தொலைவில் நின்றுகொண்டிருந்தது. ஆட்டோ அருகே செல்லத் தயங்கியது. நான் வண்டியில் இருந்து இறங்கி வாயில் கதவை திறக்க முயன்றபோதுதான் கதவை யாரோ உட்புறமாகப் பூட்டியிருந்தது தெரிந்தது. கதவை ஆட்டினேன் திறக்க முயன்றேன். கதவு திறக்கவில்லை. என்னை உடனே ஆட்டோவுக்குள் வந்து நுழைந்துவிடும்படி கூச்சல் எழுந்தது. ஆட்டோ விளக்கு வெளிச்சமும் அதிலிருந்து வரும் கூச்சலும் நிச்சயம் எருதின் கவனத்தைக் கவர்ந்து ஆட்டோவை சுக்கு நூறாக்கப்போகும் அறிய காட்சியைக்காண நான் அவலுடன் காத்திருந்தேன். சட்டென வாயில் கதவு வெங்கடாசலம் அவர்களால் திறக்கப்பட்டது. எருது காட்டில் நுழைந்து மறைந்தது. இரவில் அதன் நீராவிப் புகை முகத்தில் அனலாக பரவி கனவுகளை உண்டாக்கியது.

18மறுநாள் காலையிலேயே எழுந்துவிட்டோம். திடீரென எனக்கும் சரவண தீர்த்தாவுக்கும் காட்டெருதை பகலில் பார்த்துவிடுவதென எண்ணம் எழுந்தது. முந்தினம் கிருஷ்ணன் சங்கரன் அவர்களுடன் நடந்த அதே பாதையில் சென்றேன். தேயிலைக்கு நடுவில் கருங்கல். அவைதான். காட்டின் உள்ளே இறங்கி நடந்தோம். குனிந்திருந்தன. “மா” எனக் கத்தினேன். திடுக்கிட்டு தலையைத் தூக்கி பார்த்தது. பெண் பழுப்பு நிறத்திலும் ஆண் கருமை நிறத்திலும் இருந்தன. நெடுநேரம் எங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. சரவண தீர்த்தா எந்த நேரமும் ஓடத் தயாராக இருந்தார். இன்னும் ஒரு அடி முன்னோக்கி வைக்கலாம் என வைத்தபோது அதன் உடலில் சிறு அசைவு. “நவீன் துரத்துது ஓடுங்க ஓடுங்க” என சரவண தீர்த்தா ஓட்டம் பிடிக்க நானும் பின் தொடர்ந்து ஓடினேன். சட்டென சுதாகரித்து அவரை நிறுத்தினேன். திரும்பிப் பார்த்தோம். அவை பிட்டத்தைக் காட்டியபடி நிதானமாக புல் மேய்ந்துகொண்டிருந்தன. எங்கள் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் அவை திரும்பியதை துரத்தியதாக நினைத்துக்கொண்டோம். “நம்மல மாதிரி அது தேயில செடிகளுக்கு மத்தியில் வளைஞ்செல்லாம் ஓடாது நவீன். நேரா எல்லாத்தையும் பிச்சி எரிஞ்சிக்கிட்டு வரும்” என்றார் சரவண தீர்த்தா பதற்றம் குறையாமல். எருதுகளின் வால் ஆடிக்கொண்டே இருந்தன. “போங்கடா சின்னப் பசங்களா” என அவை எண்ணியிருக்கக்கூடும்.

மீண்டும் உணவருந்தும் இடம் சென்று அனைவரிடமும் விடைபெற்றோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்பதாகக் கூறிக்கொண்டோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். சீனுவைத் தேடியபோது மேலே நூலகத்தில் இருப்பதாகக் கூறினார். சென்று கண்டு விடைபெற்றேன். நிறைவானது.

வண்டிக்குச் சென்றபோது சரவண தீர்த்தா எங்கள் வீரதீர சாகசத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். “காட்டுல போயி பார்த்தீங்களா? ஓ மை காட்” என அவர் மனைவி வியந்தார். பயத்தில் ஓடிவந்ததை பின்னர் சொல்லிக்கொள்ளலாம் என அமைதி காத்தேன். அனுபவங்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்வது அவரவர் விருப்பம்தானே.

(Visited 2,103 times, 1 visits today)