“அவதூறுகள் தரமான ஒரு விருதின் மூலம் பொடிப்பொடியாகின்றன” – ம.நவீன்

04மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது. தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை முதன் முறையாக மலேசியாவிலிருந்து பெரும் ம.நவீனை தமிழ் மலர் நாளிதழுக்காக நேர்காணல் செய்தோம்.

கேள்வி : இலக்கியச் செயல்பாடுகள் இலக்கியப்புனைவுகள் இரண்டிலும் ஈடுபட்டு வருகிறீர்கள். எதன் பொருட்டு உங்களுக்கு இந்தக் கனடா இலக்கியத் தோட்டத்தின் சிறப்பு விருது கிடைத்திருப்பதாகக் கருதுகிறீர்கள்.

ம.நவீன் : புனைவிலக்கியம் சார்ந்த எனது முயற்சி சொற்பமானதுதான். இரண்டு சிறுகதை தொகுதிகள், இரண்டு கவிதை தொகுதிகள், இரண்டு பத்தி எழுத்து தொகுதிகள், இரண்டு இலக்கியக் கட்டுரை நூல்கள், ஒரு நேர்காணல் தொகுப்பு, ஒரு மாணவர் உளவியல் சார்ந்த   தொகுப்பு. இவை மட்டுமே இதுவரையிலான எனது ஆக்கங்கள். இலக்கியச் செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டே என் பெயர் பரிந்துரைக்கப்படிருக்கலாம்.

கேள்வி: இதுவரை மலேசியாவில் நிகழாத இலக்கியச் செயல்பாடுகள், வல்லினம் மூலமாக என்னென்ன நிகழ்ந்துள்ளன?

ம.நவீன்: முதன்மையானது ஆவணப்படங்கள். ஏறக்குறைய மலேசிய – சிங்கப்பூரின் பதினைந்து முக்கிய இலக்கிய ஆளுமைகளை ஆவணப்படம் செய்துள்ளேன். அதன் நீட்சியாக பல ஆளுமைகளின் புகைப்படங்களை அகப்பக்கத்தில் தொகுக்கும் பணிக்கு ஊக்கியாக இருந்துள்ளேன். இன்று ‘சடக்கு’ எனும் அத்தளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் எல்லா தகவல்களோடும் உள்ளன. அதேபோல 25 முக்கியமான ஆளுமைகளை விரிவாக நேர்காணல் செய்து ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ என நூலாகத் தொகுத்துள்ளேன். இவை அனைத்தும் மலேசிய இலக்கியத்தை அறிய விரும்பும் எவருக்கும் அடிப்படையான வலுவான தரவுகளைக் கொடுக்கக்கூடியவை. சமகால இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ‘வல்லினம் 100’ எனும் ஐந்நூறு பக்க களஞ்சியத்தை சமகால மலேசிய – சிங்கை இலக்கிய, சமூக, அரசியல் சூழலை அறியத்தருவதற்காகத் தொகுத்துள்ளேன். மலேசியாவில் சிற்றிதழ் மற்றும் ஆய்விதழ் முயற்சிகள் உருவாக வல்லினம் மற்றும் பறை போன்ற இதழ்களை தொடங்கி நண்பர்களுடன் இணைந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். முப்பதுக்கும் மேற்பட்ட தரமான நூல்களை இதுவரை பதிப்பித்துள்ளேன். புதிய எழுத்தாளர்களைக் கண்டடைய சிறுகதை, குறுநாவல் என வல்லினம் நண்பர்கள் துணையுடன்  நடத்தியுள்ளேன்.  இம்முயற்சிகள் அனைத்தும் பரந்த தளங்களில் சேர்வதற்கு ‘கலை இலக்கிய விழா’ எனும் பெரிய நிகழ்ச்சியைக் கடந்த 10 ஆண்டுகளாக வல்லினம் மூலம் நடத்தியுள்ளோம். மேலும் இலங்கை, தமிழகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நூல் அறிமுகக்கூட்டங்களை அந்தந்த நாட்டில் உள்ள நண்பர்களோடு இணைந்து நடத்தியுள்ளோம். இம்முயற்சிகள் அனைத்தும் மலேசியாவின் நவீன இலக்கிய முகத்தை தமிழ் வாசகர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளது.

கேள்வி : எங்கிருந்து உங்களுக்கு இந்த இலக்கியச் செயல்பாட்டில் ஆர்வம் எழுந்தது?

ம.நவீன் : முன்னாள் நண்பர்களால்தான். நான் இலக்கியத்தில் இயங்கத் தொடங்கிய சமயத்தில் இரு வகையான நண்பர்கள் இருந்தனர். முதலாவது அமைப்பு சார்ந்தவர்கள். இவர்கள் சத்தற்ற படைப்புகளை மலேசியாவின் சிறந்த படைப்புகள் என பொதுவெளியில் கட்டமைக்க முயன்றனர். முடிந்தவரை அந்த எழுத்தாளர்களை தங்கள் அமைப்பு விசுவாசம் உள்ளவர்களாக இருப்பதை உறுதிச்செய்துக்கொண்டனர். அதன் மூலம் தரமான எழுத்தாளர்கள் தங்கள் அமைப்பில் இருப்பதாக காட்டிக்கொள்ள அவர்களுக்கு வசதியாக இருந்தது. மற்றுமொரு குழுவினர் தீவிர வாசிப்பு கொண்டவர்கள். ஆனால் இவர்களுக்கு மலேசிய இலக்கியம் என்றாலே இதழோரம் ஒரு நக்கல் சிரிப்பு வரும். அந்த நக்கலை மலேசியாவுக்கு வரும் தமிழகத்துப்படைப்பாளிடம் சொல்வதில் அலாதி இன்பம் கொண்டிருந்தனர். தமிழகத்தின் சிற்றிதழ் போக்குடன் ஒப்பிட்டுக்காட்டு இந்நாட்டு இலக்கியச் சூழலை பரிகசிக்கவும் செய்தனர். அது தொடர்ச்சியாக அவர்களால் புனைவிலக்கியத்தில் ஈடுபட முடியாத இயலாமையில் ரகசியக் கண்ணீர் என பின்னர் அறிந்துகொண்டே. எனக்கு இரண்டிலும் உடன்பாடில்லை. நான் மலேசியாவில் நல்ல இலக்கியம் உள்ளது என்று நம்பினேன். அதை சரியாகக் கண்டடைய எனக்கு பரந்த வாசிப்பு தேவைப்பட்டது. தொடர் வாசிப்புப் பயிற்சி மூலம் ஓரளவு தரமான இலக்கியப் போக்கை அறிந்துகொண்டப்பின் மலேசிய இலக்கியச் சூழலில் உள்ள தரமான படைப்புகளையும் படைப்பாளிகளையும் அடையாளப்படுத்த முயன்றேன். அதற்கு இதழியல் சூழல் தேவைப்பட்டது. வல்லினம் இதழ் மூலம் ஒத்த சிந்தனைகொண்ட நண்பர்கள் இணைந்தனர். நண்பர்கள் பலத்துடன் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தினேன்.

கேள்வி : வல்லினம் குழுவில் உள்ள நண்பர்கள் பலர் விலகுகின்றனர். சிலர் இணைகின்றனர். இதனால் உங்கள் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படவில்லையா?

ம.நவீன் : இல்லை. கருத்து முரண்பாடு, அடையாளச் சிக்கல், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் பலர் இணைந்து – விலகுவதுண்டு. எத்தனைப்பேர் உள்ளனர் என்பது முக்கியமல்ல. என்ன செயல்பாடு என்பதே முக்கியம். கடந்த பத்து ஆண்டுகளில் வல்லினம் செயல்பாடுகளில் முன்னேற்றங்களே நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நான்கு போட்டிகள் நடத்தி புதிய எழுத்தாளர்களைக் கண்டடைந்துள்ளோம். இந்தக் காலத்தில்தான் ‘வல்லினம் 100’, ‘சடக்கு இணையத்தளம்’ போன்ற முயற்சிகள் நிகழ்ந்தன. இந்த நான்கு ஆண்டுகளில்தான் இலங்கை, மதுரை, சென்னை ஆகியப்பகுதிகளில் வல்லினம் நூல்களைப் பரவலாக அறிமுகம் செய்தோம். இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் வல்லினம் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை அதன் மொத்தத்தில் பாதி. மலேசியாவில் சிறந்த சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் முயற்சியையும் சமீபத்தில்தான் செய்தோம்.  சுயநலமற்ற ஆக்ககரமான நண்பர்கள் மட்டுமே வல்லினத்தில் இணைந்திருப்பதே இந்த செயல்பாடுகளுக்குக் காரணம்.

கேள்வி : வல்லினம் என்பது சர்ச்சைக்குப் பேர்போனதாக உள்ளது. சர்ச்சை என்பது கவனத்தை ஈர்ப்பதற்காக என்ற குற்றச்சாட்டும் உள்ளதல்லவா?

ம.நவீன்: பொதுபுத்தியில் நம்பப்படும் ஒரு கருத்துக்கான மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது சர்ச்சை எழவே செய்யும். கருத்தை முன்வைப்பதே எங்கள் நோக்கமன்றி சர்ச்சையை உருவாக்குவதல்ல. இருளில் தீபம் ஏற்றும்போது ஒளி வருவதை தவறென்று சொல்ல முடியுமா என்ன?

கேள்வி : முகநூல் சர்ச்சைகளில் ஈடுபடுவதெல்லாம் இலக்கியத்திற்கு ஒவ்வாததாகச் சொல்லப்படுவதுண்டு. நீங்கள் தனிப்பட்ட முறையில் அதில் ஆர்வம் காட்டுவதாக உள்ளது. இது உங்கள் இலக்கிய முயற்சிகளை சோர்வடைய வைக்காதா?

ம.நவீன் : எனக்குத் தனிப்பட்ட அரசியல் நோக்கு உண்டு. அதற்கு மாற்றான கருத்துகளை ஒருவர் வைக்கும்போது நான் அதில் தலையிடுவதில்லை. மாற்றுக்கருத்தும் சொல்வதில்லை. ஆனால் ஒரு துறை  குறித்து எவ்வித அறிவும் இல்லாமல் முட்டாள்தனமான அல்லது அரைவேக்கட்டுத்தனமான கருத்தை ஒருவர் பொதுவெளியில் வைக்கும்போது அதை முட்டாள்தனமானது எனச் சொல்லவேண்டிய அவசியம் உள்ளது. அப்படிச் சொல்வதால் அந்த அரைகுறை கருத்தைச் சொன்னவர் அதை மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனவும் நன்கு அறிவேன். ஆனால் இதுபோன்ற அரைகுறையாளர்கள் உருவாக்கும் குழப்பத்தில் உள்ள இளம் வாசகர்களுக்குத் தெளிவு ஏற்படலாம். மேற்கொண்டு தேடல் நிகழ்த்தலாம். அதற்குப் பிறகு அரைவேக்காடுகள் முகநூலில் வசைகளைக் கொட்டுவார்கள். அதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்னளவில் நான் கண்ணுக்குத் தெரியாத குழப்பத்தில் சிக்க இருந்த இளம் வாசகர்களை மீட்க என் பகுதியைச் செய்துவிட்டேன். தொடர்ந்து தேடலில் இருப்பதும் கிடைத்த தகவல்களை நம்பி ‘லைக்’ போட்டுக்கொண்டிருப்பதும் அவர்கள் பொறுப்பு. மேலும் இதுபோன்ற சர்ச்சைகளில் முகநூலில் அரைவேக்காடுகள் ஒன்றாக இணைவதால் அவர்கள் யாரென அடையாளம் காண சுலபமாக உள்ளது. அது நல்லதுதானே.

கேள்வி : இன்றைய இளம் எழுத்தாளருக்கு முகநூல் முக்கியமா?

ம.நவீன்:  நிச்சயமாக. வாசிக்காத நூலின் அட்டையைப் போட்டு ‘தற்போது வாசிப்பில்’ எனப் பொய்யுரைத்து லைக் வாங்க, இலக்கியம் மண்டையில் ஏறாத போது இடதுசாரி செயல்பாட்டாளராகக் காட்டிக்கொண்டு ‘லைக் வாங்க’, தன்னைப்போன்ற அரைவேக்காட்டு நபர்களை ஒன்றினைத்து கும்பலாக புகைப்படம் போட்டு ‘லைக் வாங்க’ , தொடர்ச்சியாக நடைபெறாத முயற்சிகளை தொடக்குவதாக அவ்வப்போது அறிவித்து ‘லைக் வாங்க’ இப்படி பலவற்றுக்கும் முகநூல் எழுத்தாளர்களுக்குப் பயன்படுகிறதுதானே. மற்றபடி தரமான படைப்புகளை படைத்து அதை முகநூலில் வாசிக்கப் பகிர்பவர்கள் மிகக்குறைவுதான்.

கேள்வி : கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் விருதுகள் மிகுந்த மதிப்பு மிக்கது. இவ்விருது உங்களுக்கு அறிவிக்கப்பட்டபோது என்ன நினைத்தீர்கள்.

ம.நவீன் : விருதுகள் பொதுவாகவே ஊக்கப்படுத்துபவை. இத்துறையில் இவர் செயல்படுகிறார் என்பதை உலகுக்குக் காட்ட முயல்வது. கனடா இலக்கியத் தோட்டம் அத்தகைய மதிப்பு மிக்கது என்பதை அறிவேன். மேலும் அதில் என் மதிப்பிற்குறிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மையமாக உள்ளது அதற்கான இலக்கிய அந்தஸ்தைக் கூட்டுகிறது. நான் புனைவுகள் எழுதுவதையும் மலேசிய இலக்கியத்தை முன்னெடுப்பதையும் மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கவில்லை. இலக்கிய விமர்சனமும் செய்கிறேன். இதனால் பலர் தொடர்ச்சியாக அவதூறுகளை உருவாக்குவதுண்டு. இந்த அவதூறுகளால் மனம் குழம்பிய பலர் என்னைத் தொடர்புக் கொண்டனர். வல்லினத்தைப் பற்றியும் என்னைப்பற்றியும் அவர்களுக்கு இருந்த எதிர்மறையான எண்ணங்கள் இந்த விருதின் மூலம் அகன்றுள்ளதாகக் கூறினர். ஒரே ஒரு விருது அவர்களை மீளாய்வு செய்ய வைத்துள்ளது. இயலாமையால் உருவாக்கப்படும் அவதூறுகள் தரமான ஒரு விருதின் மூலம் பொடிப்பொடியாவதை இந்த விருதின் மூலம் கண்டேன். மகிழ்ச்சிதான்.

கேள்வி : வணிகத்தில் ஈடுபடுவது, திட்டவட்டமான காலக்கேட்டில் செயல்படுவது இலக்கியவாதியின் லட்சணம் அல்ல எனச் சொல்லப்படுவதுண்டு.  அவ்வாறான திட்டமிடல்கள்  இல்லாமல் இத்தனை பணிகள் சாத்தியமில்லை. இது உங்கள் புனைவிலக்கிய மனத்தை பாதிக்காதா?

ம.நவீன் : நான் யாழ் எனும் பதிப்பகம் மாணவர்களுக்காக நடத்தி வருகிறேன். அது வணிக நிறுவனம்தான். வணிகத்தால் புனைவு மனம் பாதிப்பதில்லை. வணிகத்தின் லாப நட்டங்களில் மனத்தை அலைய விடுவதும், அடையும் லாபத்தின் லௌகீக கனவுகளாலும் அது அழியலாம். யாழ் பதிப்பக லாபம் வல்லினம் செயல்பாடுகளுக்கே பெரிதும் பயன்படுகிறது. மற்றபடி உலகின் பெரும் படைப்பாளிகள் அதிகமாக எழுதியவர்கள். அதற்காகக் கடுமையாக உழைத்தவர்கள். அதற்காக உடலை வறுத்திக்கொண்டவர்கள். இலக்கியம் சாவகாசமாக நிகழ்வது என்பதெல்லாம் சோம்பேறிகளின் வியாக்கியானம். நான் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வீச்சை ஒரு படி நகர்த்த வேண்டும் என்ற தனியாத வேட்கையில் இருப்பவன். கட்டொழுங்கு இல்லாமல் செயல்படுவது சாத்தியமே இல்லை.

கேள்வி : அதுத்து உங்கள் திட்டம்.

ம.நவீன் : என் போதாமையை நான் நன்கு அறிவேன். மிக விரைவில் எனது முதல் நாவலைப் பதிப்பிக்க உள்ளேன். நான் இளம் படைப்பாளிகள் பலருடன் உரையாடலில் இருக்கிறேன். என்னைக்காட்டிலும் வாசிப்பிலும், ரசனையிலும், எழுத்துத்தீவிரத்திலும் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களோடு ஒப்பிடுகையில் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. என் புனைவுகள் வழியாகத்தான் என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. எதைக்காட்டிலும் எழுத்தாளானாக என்னை அடையாளம் காண்பதையே நான் விரும்புகிறேன்.

(Visited 287 times, 1 visits today)