விருது உரை

nigaz-06-600

கனடா இலக்கியத் தோட்ட விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. விசா முதன் விண்ணப்பத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தது. சில கூடுதல் தகவல்களை இணைத்து மீண்டும் முயன்றால் கிடைக்கும் என்றார்கள். ஆனால் நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் செல்ல முடியும். 10ஆம் திகதியுடன் பள்ளி தவணை விடுமுறையும் முடிவதால் கூடுதல் விடுப்பெடுப்பதில் சிக்கல்.  எனவே எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கி உரையை மட்டும் அனுப்பினேன். அது அங்கு வாசிக்கப்பட்டதை வீடியோவில் பார்த்தேன். அது கீழே.

அனைவருக்கும் வணக்கம்.

முதலில் எனக்கு இவ்விருதை வழங்க முன்வந்தமைக்கு கனடா இலக்கியத் தோட்ட குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இலக்கியத்தில் இயங்கத் தொடங்கிய சமயத்தில் இரு வகையான நண்பர்கள் இருந்தனர். முதலாவது அமைப்பு சார்ந்தவர்கள். இவர்கள் சத்தற்ற படைப்புகளை மலேசியாவின் சிறந்த படைப்புகள் என பொதுவெளியில் கட்டமைக்க முயன்றனர். முடிந்தவரை அந்த எழுத்தாளர்களை தங்கள் அமைப்பு விசுவாசம் உள்ளவர்களாக இருப்பதை உறுதிச்செய்துக்கொண்டனர். அதன் மூலம் தரமான எழுத்தாளர்கள் தங்கள் அமைப்பில் இருப்பதாக காட்டிக்கொள்ள அவர்களுக்கு வசதியாக இருந்தது.

மற்றுமொரு குழுவினர் தீவிர வாசிப்பு கொண்டவர்கள். ஆனால் இவர்களுக்கு மலேசிய இலக்கியம் என்றாலே இதழோரம் ஒரு நக்கல் சிரிப்பு வரும். அந்த நக்கலை மலேசியாவுக்கு வரும் தமிழகத்துப்படைப்பாளிடம் சொல்வதில் அலாதி இன்பம் கொண்டிருந்தனர். தமிழகத்தின் சிற்றிதழ் போக்குடன் ஒப்பிட்டுக்காட்டி இந்நாட்டு இலக்கியச் சூழலை பரிகசிக்கவும் செய்தனர். எனக்கு இரண்டிலும் உடன்பாடில்லை. நான் மலேசியாவில் தரமான இலக்கியம் இருக்கும் என்று நம்பினேன். அதனை இந்நிலத்தின் சூழலை உள்வாங்கிய கறார் விமர்சனத்தில் பகுக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதை சரியாகக் கண்டடைய எனக்கு பரந்த வாசிப்பு தேவைப்பட்டது. ஓரளவு தரமான இலக்கியப் போக்கை அறிந்துகொண்டப்பின் மலேசிய இலக்கியச் சூழலில் உருவான தரமான படைப்புகளையும் படைப்பாளிகளையும் அடையாளப்படுத்த முயன்றேன்.

அதற்கு இதழியல் சூழல் தேவைப்பட்டது. வல்லினம் இதழ் மூலம் ஒத்த சிந்தனைகொண்ட நண்பர்கள் இணைந்தனர். நண்பர்கள் பலத்துடன் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தினேன்.  அந்தச் செயல்பாட்டின் விளைவுதான் நான் இயக்கிய எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள், அதன் நீட்சியாக பல ஆளுமைகளின் புகைப்படங்களின் ‘சடக்கு’ எனும் அகப்பக்கத் தொகுப்பு, சமகால மலேசிய – சிங்கை இலக்கிய, சமூக, அரசியல் சூழலை அறியத்தரும்   ‘வல்லினம் 100’ எனும் ஐந்நூறு பக்க களஞ்சிய முயற்சி, சிற்றிதழ் மற்றும் ஆய்விதழ் முயற்சிகள், முப்பதுக்கும் மேற்பட்ட தரமான நூல்களின் பதிப்பு. புதிய எழுத்தாளர்களைக் கண்டடைய சிறுகதை, குறுநாவல் போட்டிகள், வல்லினம் விருது என  எனப் பட்டியலிடலாம். இம்முயற்சிகளை விடாமல் செய்துக்கொண்டிருந்த காலத்தில் பொருளியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் எத்தனை நெருக்கடிகள் வந்தும் இம்முயற்சிகளை விடாமல் தொடர என் தேசத்தின் தமிழ் எழுத்தாளர்கள் மீது இருந்த பெரும் மரியாதையே காரணம். அவர்கள் வரலாற்றில் பல நெருக்கடிகளில் மொழியையும் கலை இலக்கியத்தையும் விடாமல் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கையளித்து வந்துள்ளனர்.

அப்படி இந்தத் தலைமுறையில் எங்கள் கைக்குக்கிட்டியுள்ளது. அதை பத்திரமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மாபெரும் பொறுப்பு எங்களிடம் இருப்பதை உணர்கிறேன்.

இந்த விருது அப்பொறுப்பை எனக்கு வலுவாக நினைவூட்டுவதால் மிகுந்த உற்சாகத்துடன் இதனைப் பெற்றுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

 

(Visited 158 times, 1 visits today)