பூங்கோதை என்பவரை அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்காது. நானும் அவரை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அழைத்து கலை இலக்கிய விழாவுக்கு வருவதாகச் சொன்னார். அப்படி நிறைய பேர் அழைத்து முன்பதிவு செய்வதுண்டு. மறுநாளும் அவர் அழைப்பு வந்தது. நிகழ்ச்சிக்கு வருவதில் சிக்கல் இருப்பதாகவும் தனது தம்பி சம்மதித்தால் மட்டுமே அவரும் இணைந்து வர முடியும் என்றார். நிகழ்ச்சிக்கு முன்பு அவரது அழைப்புகள் பலமுறை வந்தன. அனைத்துமே தன்னால் வர முடியுமோ முடியாதோ என்ற தவிப்புகள் அடங்கியவை. நான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இருக்கும்போது அவசியமற்ற அழைப்புகளில் எரிச்சல் அடைவதுண்டு. அழைப்பை எடுக்க தவிர்த்தபோது வட்சப்பில் குரல் பதிவு அனுப்பினார். ‘அன்புள்ள நவீன் சார்’ என தொடங்கியது அந்தக் குரல் பதிவு. தொடர்ந்து அதுபோன்ற பதிவுகள் வந்தன. நிறுத்தி நிதானமாகப் பேசுபவராக இருந்தார். நீளமான குரல் பதிவுகளாக இருந்தன. எனக்கு அதை முழுமையாகக் கேட்பதில் பொறுமை இருக்காது.
ஒரு வல்லினம் நிகழ்ச்சியின் போதுதான் அவரைச் சந்தித்தேன். தனது தம்பி மற்றும் தம்பியின் மனைவியுடன் வந்திருந்தார். “வணக்கம் சார்” என்றவரை அடையாளம் கண்டுக்கொண்டேன். “உங்கள் துணிச்சல் பிடிச்சிருக்கு சார். ஆனா கொஞ்சம் பாத்துக்கோங்க” என்றார். எனக்கு யாராவது பாராட்டினாலோ ஆலோசனை கூறினாலோ சிரித்துக்கொண்டிருக்க மட்டுமே தெரியும். அதையே அன்றும் செய்தேன். குடும்பமாக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நான் நிகழ்ச்சிகளில் அதிகம் பேசுவதில்லை. அடுத்து அடுத்து என சுழன்றுக்கொண்டிருப்பேன். நிகழ்ச்சி முடிந்தபின்பும் பொருள்களை எடுத்து வைப்பதிலேயே நேரமாகிவிடும். நின்று நிதானமாகப் பேசுவது மிகக் குறைவு. பலருக்கு இதனால் மனவருத்தம் உள்ளதைக் கூறியுள்ளனர். மன்னிப்புக் கேட்பேன். என் நிலை அது. தங்கும் விடுதியில் மட்டுமே வல்லினம் நிகழ்ச்சி நடப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியேறிவிட வேண்டும். இல்லாவிட்டால் விடுதி நிர்வாகி கோபித்துக்கொள்வார். நான் யார் கோவத்துக்குதான் பதில் சொல்வது.
ஆனால் பூங்கோதை தனது கூர்மையான குரலால் என்னை நிறுத்துவார். எங்கிருந்தாவது “வணக்கம் நவீன் சார்” என்ற குரல் வரும். “ரெண்டு நிமிஷம் இருங்க சார்” என்பார். மீற முடியாது. நிதானமாகப் பேசுவார். “உங்க நிகழ்ச்சியில கலந்துக்கவே கஷ்டப்பட்டு வந்தேன்” என்பார். “நான் உங்கள் வாசகி சார். உங்க லைன பிடிச்சிதான் வந்துக்கிட்டு இருக்கேன். எந்த நிகழ்ச்சினாலும் கூப்பிடுங்க” என்பார். நான் சில நிமிடங்கள் செலவழித்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவேன்.
பூங்கோதை உண்மையிலேயே என்னைத் தீவிரமாக வாசிக்கிறார் என்பது அவர் என் கதைகளை வாசித்து அதுபற்றி குரல் பதிவு அனுப்பியபோதுதான் தெரியும். சமூகவியல் கட்டுரைகளைப் படித்துவிட்டு “கவலை படாதீங்க சார். நான் உங்களோட இருக்கேன்.” என்பார். பூங்கோதையை நான் தொடர்ந்து சந்தித்தது வல்லினம் நிகழ்ச்சியில்தான். சிறிய பெரிய என எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்துவிடுவார். ஒருவேளை நான் அவரை அழைக்க மறந்துவிட்டால் நாளிதழில் அறிவிப்பைப் பார்த்து அவரை அழைக்காமல் விட்டதைச் சொல்லி வருந்துவார். நான் அவரைச் சிரமப்படுத்த வேண்டாம் என நினைப்பேன். அவர் நோயாளி. உணவுபோல மருந்தை உண்பவர். பயணத்துக்குப் போக்குவரத்து சிக்கல் இருந்தது. அவரைப் புண்படுத்த வேண்டாம் என எந்த நிகழ்ச்சியானாலும் சொல்லிவிடுவதுண்டு. தன் தம்பியுடன் வந்து அரங்கின் ஓரமாக அமர்ந்துகொள்வார்.
பூங்கோதைக்கு ஒருநாள் எழுத்தாளராக வேண்டுமென ஆசை வந்தது. ஜெயமோகன் நடத்திய குறுநாவல் பட்டறையில் கலந்துகொண்டார். அவர் குறுநாவல் போட்டியில் பங்கெடுத்துள்ளார் என காலம் தாழ்த்தியே தெரிந்தது. எழுத்தாளர் ஆதி லட்சுமியின் துணையுடன் அதை முழுமையும் செய்துள்ளார். ஆனால் பரிசு கிடைக்கவில்லை. தான் பங்கெடுத்தது குறித்தும் தனது நாவல் முயற்சி குறித்தும் அவர் என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. எப்போதும்போல இறுதி கலை இலக்கிய விழாவுக்கு அழைத்தபோது வருவதாகச் சொன்னார். குரல் தளர்ந்திருந்தது.
சொன்னதுபோலவே நிகழ்ச்சிக்கு வந்தார். இறுதி விழா. இரண்டு மடங்காக சுழன்றுக்கொண்டிருந்தேன். வழக்கம்போல பிடித்து நிறுத்தி “உடம்பு சரியில்லை சார். உங்களை பார்க்கதான் வந்தேன். இத இறுதி நிகழ்ச்சின்னு வேற சொல்லிட்டிங்க. வருத்தமா இருக்கு” என்றார். எப்போதும்போல என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவரிடம் அவ்வாறு என்னுடன் எடுத்தப்படம் ஏராளமாக இருக்கக்கூடும்.
நிகழ்ச்சி முடிந்து மறுவாரமே கேரளா புறப்பட்டேன். மறுநாள் பூங்கோதையின் மரணச் செய்தி வந்தது. அவர் உடல் நலமில்லை எனச்சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த நிமிடம் மட்டுமே அதுபற்றி யோசித்தேன். பின்னர் வாசிப்பிலும் எழுத்திலும் மூழ்கியிருந்தேன். என் நெருக்கமானவர்களுக்கு என்னிடம் பிடிக்காத குணம் இது. என்னால் துக்கத்தை நீட்டிக்க முடியாது. அடுத்த நிமிடமே துள்ளியெழுந்து ஓடிவிடுவேன். நாடு திரும்பியப்பின் அவர் எண்ணுக்கு அழைத்தேன். மகள் பதிலளித்தார். அவருக்குக் கடும் காய்ச்சல் என்பதால் கோலாலம்பூரில் இருந்து தனது ஜொகூர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் வல்லினம் நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து பூங்கோதை வந்ததாகவும் சொன்னார். நிகழ்ச்சிக்கு வந்து திரும்பியபோது படுத்தப் படுக்கையாகிவிட்டாராம். ஒரு வாரத்தில் உயிர் பிரிந்துள்ளது.
பூங்கோதை பலகாலமாகத் தனிமையில் இருந்த பெண். திறன் தொலைபேசி பழக்கமானதும் வட்சம், முகநூல் போன்றவற்றில் தனதுலகை விரிவாக்கிக்கொண்டார். அப்படியே வல்லினம் அறிமுகமானது. வல்லினம் வழி நான். நான் முகநூலில் இருந்த சமயம் என்ன பதிவிட்டாலும் அவரது வாழ்த்தோ கருத்தோ அதில் பதிவாகும். பல்வேறு நோய்கள் அவரைத் தொடர்ந்து வாட்டியுள்ளது. ஆனாலும் அவர் தனது அந்திமகாலத்தில் இலக்கியத்தை எட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். ஏதோ ஒரு உற்சாகத்தை அவருக்கு இலக்கியம் கொடுத்திருக்க வேண்டும்.
இன்று பலருக்கும் தொலைபேசியில் அழைத்தேன். மார்ச் 31 நடக்கும் நிகழ்ச்சி குறித்து தெரியப்படுத்த ஒவ்வொரு இலக்கிய ஆர்வளரையும் அழைத்துச் சொன்னேன். அப்போது பூங்கோதை பெயர் தட்டுப்பட்டது. மூன்று மாதத்தில் அவரை முழுக்கவே மறந்திருந்தேன். அவர் அனுப்பிய வட்சப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய குரல் பதிவுகள் நான் திறந்து கேட்கப்படாமலேயே இருந்தது. அதை திறந்து விடுவேனோ என அச்சம் வந்தபோது ஒவ்வொன்றாக அழித்தேன்.
இறந்துபோனவர்கள் எப்போதோ பேசிவிட்டுச் சென்ற குரல் அவ்வளவு அச்சமூட்டக்கூடியது. எனவே அவற்றை அழிப்பது மூலமாக அவர் மரணத்தை என் மனதுக்குள் நிச்சயமாக்கிக்கொண்டேன். இனி பூங்கோதையை யாருக்கும் தெரியப்போவதில்லை.