தலைமையாசிரியர் மன்றம்: கோஷமும் கொதிப்பும்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

indexவணக்கம் சார். உங்கள் கட்டுரையைப் படித்தேன். என் பள்ளிக் குழுமத்தில் பகிர்ந்தேன். கண்டிக்கப்பட்டேன். என் தோழிகள் பலருக்கும் இது நிகழ்ந்துள்ளது. இப்படித் தனித்தனியாக பேசும்போது பள்ளியில் முடக்கப்படுவோம். ஒன்றாக இணைந்து இப்போட்டியை நிராகரித்தால் என்ன? கடந்த ஆண்டும் இதே போன்ற அறிக்கையே வந்தது. வயிறு எரிகிறது. நிகழ்ச்சி அன்று அனைத்து ஆசிரியர்களும் ஒற்றுமையாக கோஷமிட்டு நிராகரித்தால் உண்டு. முன் வருவார்களா?

மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)


நண்பரே, எனக்கு கோஷத்திலும் வன்மமான அணுகுமுறையிலும் நம்பிக்கையில்லை. ஒரு வயதில் அதன் மீது மட்டுமே நம்பிக்கை இருந்தது. இது நிபுணத்துவமாக அணுக வேண்டிய விடயம்.  அறிவார்த்தமாக சிந்திக்க வேண்டிய விடயம்.

முதலில் தலைமையாசிரியர்களை ஏதோ எதிரிபோல பார்ப்பதை விடுவோம். அது ஆரோக்கியமற்ற பார்வை. இயக்கம் என்பது வேறு; அதன் உறுப்பினர்கள் என்பது வேறு. மொழியின் மீது ஆழமான பற்றுக்கொண்ட தலைமையாசிரியர்களை நான் சந்தித்துள்ளேன். இதில் அவர்கள் ஒத்துழைப்பு அவசியம் என்பதே உண்மை. நமது பள்ளி தலைமையாசிரியர்கள் எழுத்துப்பூர்வமாக அந்தந்த மாவட்ட தலைமையாசிரியர் மன்றத்திடமிருந்து தமிழில் தலைப்புகளுக்கான வரைமுறைகளைப் பெற வேண்டும். அதில், வழங்கப்பட்டுள்ள மூன்று தலைப்பிலும் எதிர்ப்பார்க்கப்படுவது என்ன என்ற தெளிவு தேவை. உதாரணமாக, ‘மொழி’ என பொதுத்தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி ஒருவர் ‘ஆங்கிலமொழியின் சிறப்பு’ என உரையாற்றினால் ஏற்றுக்கொள்வார்களா எனத் திட்டவட்டமாக விளக்க வேண்டும். இல்லை இது தமிழ்மொழியை மட்டுமே குறிக்கிறது எனச் சொன்னால் அதற்குறிய சொல்லாடல்களைப் பயன்படுத்தி எழுத்துப்பூர்வமாக மன்றம் சமர்ப்பிக்க வேண்டும். குத்துமதிப்பாகக் கூறுதல், ஏறக்குறைய தெரிவித்தல், தொலைப்பேசியில் அறிவித்தல் போன்றவை கூடாது.

அடுத்து, தமிழ்ச் சான்றோர் அல்லது தமிழுக்குத் தொண்டு செய்தவர் எனும் பகுதியில் ஆதி.குமணன் பெயர் நீக்கப்பட வேண்டும். கடந்த கட்டுரையில் அதற்கான காரணத்தை நான் தெளிவுபடுத்திவிட்டேன். ஒருமுறை இப்படித் தவறாக பேசப்படும் உரை பின்னர் அப்படியே வளர்ந்து எழுதப்படாத வரலாறாக மாறிவிடும். எனவே, குறிப்பிட்ட அறிவுத்துறையில் யார் இடம்பெற வேண்டும் என்ற தெளிவு கற்றோர் மத்தியில் அவசியம். எனவே தமிழில் அனுப்பப்படும் அறிக்கையில் அப்பெயர் இடம்பெறக்கூடாது. மாறாக, குறிஞ்சி குமரனார், அ.பு.திருமாளனார், மணிவெள்ளையனார், சீனி நைனை முகம்மது போன்றவர்கள் பெயர் இடம்பெறவேண்டும்.

மூன்றாவதாக, மன்றம் ஆணவமாக மேற்கண்ட விடயங்களைச் செய்ய மறுத்தால் தமிழ் அறவாரியம் உள்ளிட்ட மொழி சார்ந்த பிற சமூக இயக்கங்கள் இதில் தலையிட வேண்டும். இவர்கள் வழி இந்த அலட்சியம் அரசாங்க கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். அதற்கு பெரும்பான்மையான ஆசிரியர்கள் தங்கள் அதிருப்தியை சமூக ஊடகங்கள் முன்வந்து தெரிவிக்க வேண்டும். புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அரசாங்க தொழிலாளர்களே தவிர எந்த மன்றத்திற்கும் அடிமைகள் இல்லை. அரசின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விசுவாசம் செலுத்த வேண்டுமே தவிர உங்களைப் போன்ற சக அரசு ஊழியருக்கு இல்லை.

நான்காவது இதையெல்லாம் மீறி எம்மாற்றமும் இல்லாமல் மொழியை இழிவு படுத்தும் இம்முயற்சி தொடர்ந்து நடக்கும்போது மனு அளிக்கும் (online petition) ஒன்றை உருவாக்கி ஆசிரியர்களின் அதிருப்தியை நேரடியாக அரசாங்கப் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதை நான் நிச்சயம் உருவாக்குவேன்.

சூழ்ச்சி உள்ளம் கொண்டவர்கள் இந்தச் சூழலை ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்குமான சிக்கலாக சிண்டு முடித்துவிட முயல்வர். நாம் தெளிவாக இருக்க வேண்டும். இது இந்நாட்டில் மொழியைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கும் அதை அலட்சியம் செய்பவர்களுக்கும் இடையிலான சிக்கல். ஒவ்வொரு முறையும் போட்டியில் கலந்து கொண்டு காரணமின்றி நிராகரிக்கப்படும் மாணவர்களின் நலன் கருதுபவர்களுக்கும் அது குறித்து அக்கறை இல்லாதவர்களுக்குமான சிக்கல். கடந்த ஆண்டு போட்ட அதே அறிக்கையை வருடம் மட்டும் மாற்றி வெளியிடுபவர்களுக்கும் பள்ளியில் தினம் தினம் உழைப்பவர்களுக்குமான சிக்கல்.

குழப்பம் வேண்டாம். எதையும் வன்மமாகச் செய்ய வேண்டாம். ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டு வெந்ததை தின்று வேலை வந்தால் புறப்படப்போகும் மெத்தனமும் வேண்டாம். உங்களிடம் தீ இல்லாவிட்டால் இருளை அகற்ற எதைப் பயன்படுத்தப்போகிறீர்கள்?

கடிதம் 1

கடிதம் 2

(Visited 307 times, 1 visits today)