நாரின் மணம்: சிதறடிக்கப்படும் அழகு

cover-10எழுத்து என்பது எனக்கு மிக பிடித்தக் கலைதான். எனினும், அதை எழுத முயன்ற அளவுக்கு வாசிக்க முயன்றதில்லை. அதன் காரணமாகவே எனது முயற்சிகள் பல தோல்வியில் முடிந்திருப்பது இப்போதுதான் புரிகிறது. வாசிப்பது நமக்கான அசல் தன்மையை இழக்கச் செய்யும். நம்மை அறியாமல் நம் எழுத்துகளில் பிறரின் சாயல் வந்தமரும் என நம்பியிருந்தேன். இந்த உச்சநிலை அறியாமையைத் திருத்திக் கொண்ட தளம் வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழாதான். இங்கிருந்துதான் எனக்குப் பத்திகளும் அறிமுகமாயின. கட்டுரைகள் பத்திகளில் இருந்து வேறுபடுவதே எனக்குப் புதிய தகவல்தான்.

 பத்திகள் மிகக் குறைந்த பக்கங்களுக்குள் வாசிப்பை சுவாரசியம் ஆக்குபவை. ஒரு எளிய வரலாற்றை, ஒரு நீண்ட கதையைப் புதிய பார்வையோடு மிக எளிமையாகவும் அழகாகவும் எவ்வளவு சொல்லமுடியுமோ அவ்வளவே சொல்வது. இப்படி பத்திகளை நான் உள்வாங்க எனக்கு முதலில் அறிமுகமானது ம.நவீனின் ‘நாரின் மணம்’ நூல்தான். இவைதான் பத்திகளென்ற அறிமுகமில்லாமலேயே நான் வாசித்த முதல் பத்திகள் அவை.

‘நாரின் மணம்’ புத்தகத்தில் உள்ள பத்திகளின் வழி என்னோடு கதைப் பேசியது ம.நவீனின் குரல். புத்தகத்தில் எல்லா இடைவெளிகளிலும் நான் என்னை நிரப்பிக் கொண்டேன். அழகான அவரது பதிவுகளின் பல இடங்களில் நான் என்னை காணமுடிந்தது. புத்தகங்களோடு கதைப் பேசுவது எனக்கு இதுதான் முதல் அனுபவம். ஆனால் நான் இரசித்து இரசித்து நகர்த்திய வாசிப்பின் அனுபவம். இனி தனிமைக் கண்டு அஞ்ச தேவை இல்லை புத்தகங்கள் இருக்கும் வரை. பிறருக்குரிய வாழ்க்கையைக் கொஞ்சம் வாழ்ந்து பார்ப்பதற்குண்டான அனுபவம் அது.  கார் ஓட்டும் நேரம் எரிச்சலானது. பச்சை சமிக்ஞை விளக்கு அதை விட எரிச்சல் தந்தது. நான் புத்தகம் பிரிக்கும் வரை காத்திருந்து அப்போதுதான் வர வேண்டுமா என்று நொந்து கொண்ட அனுபவம் இந்த புத்தகத்தை வாசித்தபோதுதான் முதல் முறையாக என்னைக் கடந்தது. காத்திருக்கும் தருணங்களெல்லாம் வாசிப்பதற்கானதாய் பகுத்துக் கொண்டேன். எனவே, காத்திருக்கும்படியான பல சந்தர்ப்பங்களை நானே வகுத்தும் கொண்டேன். எனது நாட்களில் பிறருக்குரிய எனது நிமிடங்களை நானே திருடத் தொடங்கியிருந்தேன்.

இந்த புத்தகம்  என்னோடு பேச காத்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். என்னை ழுழுநிலை வாசகியாக அங்கீகரித்தது இந்த புத்தகம். எங்குச் சென்றாலும் புத்தகம் கொண்டு செல்லும் பழக்கம் இப்போதுதான் புதிதாய். அதற்கென்றே பை  ஒன்று கச்சிதமாய் தயாரானது. அதற்குள் ஒரு பேனாவும் அழகான குறிப்பேடும் என்னை ஒரு வாசகியாக்கின. எனது இந்தப் பழக்கம் இந்தப் புத்தகத்திலிருந்து தீவிரமடைகிறது. எனவே, இந்தப் புத்தகம் எப்போதும் எனக்கு முக்கியமானது. இனி வாசிப்பைப் பின்தொடரும் எல்லா புத்தகங்களிலும் எப்போதும் இந்த நாரின் மணம் வீசிக் கொண்டே இருக்கும்.  இந்தப் புத்தகம் பற்றி பிறர் ஏன் பெரிதாக விமர்சிக்கவே இல்லை என ஐயங்கள் எழுந்தன. ஒரு வேளை அவற்றை நான் படிக்கவில்லையோ?

ம.நவீன் அவர்களின் இந்தத் தொகுப்பில் தந்திருக்கும் பத்திகளில் எது என்னை மிகக் கவர்ந்தது என்று என்னால் முதன்மைப்படுத்த முடியாது. எல்லாமே பிடித்ததுதான். ஆனால், அப்படி அவரது பத்திகளில் வந்த பாத்திரங்களை முதன்மைப்படுத்த முடியும் என்றால் முதலில் சரவணனைதான் குறிப்பிடுவேன். ‘நடை’ என்ற பத்தியில் அவரது மாணவனாகச் சரவணனை அறியமுடிந்தது. பாட்டியைத் தேடிச்செல்லும் அவன் பல கிலோ மீட்டர் தூரம் நடக்கிறான். அந்த நடையின் வலி என் கால்களையும் தாக்கியது. பாட்டியைப் பேரனிடமிருந்து பிரித்துவைக்கும் கல்வி முறை நாசுக்காக விமர்சனப்படுத்தப்பட்டது. ஓர் ஆசிரமத்து சிறுவனின் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருந்துவிட முடியும் என்பதை யூகிக்க முடியாத நமது கற்ற சமுதாயத்தால், பின்னொருநாள் அவன் நிஜக் குற்றவாளியாகக் கூடுமோ என்ற வருத்ததையும் இந்தப் பத்தி தந்துள்ளது. அதுவே, இப்போது அவன் நிலை குறித்த கேள்விகளை எனக்குள் எழுப்புகிறது.

பட்டியலில் அடுத்த இடம் மன்சூருக்கானது. கண்ணீரைப் பின்தொடர்தலென்ற பத்தியில் அவர் கண்ணீரோடு அறிமுகமாகிறார். செய்யாத தவறுக்குரிய தூக்கு தண்டனை கைதிகளை நான் அறிந்தது திரைப்படங்களில் மட்டும்தான்.  நிஜத்திலும் நடக்குமென அறிந்தது இந்தப் பத்தியில்தான். மரணத்தை நோக்கிய அவரது நாட்களில் உதிர்ந்த சின்ன நம்பிக்கைதான் ம.நவீனிடம் ஒப்படைக்கப்பட்ட அவரது கைப்பிரதி நாவல்கள். அது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உருவான குற்றமற்ற கைதியின் நாவல். அவர் எதிர்பார்த்த விமர்சனத்தைக் கொடுக்கமுடியாத நிலையில் ம.நவீன் அவர் அழைப்புகளைத் தவிர்க்கப் போவதை இப்படி சொல்கிறார். “அவர் அழைப்பை இனி எப்போதும் எடுக்கப் போவதில்லையோ என என்னை நானே கேட்டுக் கொண்டபோது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது”. இந்த வரிகள்  ம.நவீன் என்ற எழுத்தாளனுக்குள் உள்ள மனிதனைக் காட்டுகின்றன. விமர்சனத்துக்காகக் காத்திருந்து ஏமாந்த அவரது தருணங்கள் மிக பாரமானதுதான். ஆனால், சிக்கலான தருணங்களிலும் ஒரு கைதியின் அழைப்புக்கு மதிப்பளித்து சிறைச்சாலை வரை சென்றதிலும் அவருக்கு ஆதரவாய் நான் ஏதும் உதவ வேண்டுமா என கேட்டதிலும், அவரது கதைகளைப் படித்த போதிலும் ம.நவீனை அறியமுடிந்தது. அவருக்கு மனிதர்களின் மனம் புரிகிறது.

  அடுத்தவர் ஆத்தா, அவரைப் போல ஒரு ஆன்மா என் வாழ்க்கையிலும் இருந்திருக்கலாமே என்ற  ஏக்கங்களாக ஆத்தா என்னுள்  இன்னமும் விரிவடைகிறார். ம.நவீனின் உள்ளமெல்லாம் அவர் நிரம்பி வழிவது பல பத்திகளில் தெரிந்தது. வளர்ப்புப்  பிராணிகளில்லாத நகர வாழ்க்கையை விரும்பாத ஆத்தா தனது இறுதி நாட்களில் மௌனமாகவே இருந்தது ம.நவீனைப் பாதித்துள்ளது. எனவேதான், அவரால் ஆத்தாவை “தோலிருக்க சொளை முழுங்கி” பத்தியின் கடைசி வரிகளில் அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஈசாப்புடன் ஒப்பிட முடிந்துள்ளது. இதிலிருந்து ஈசாப்பின் கதைகளுக்கு ஆத்தாவின் கதைகள் ஈடு கொடுத்திருப்பதையும் அறிய முடிந்தது. ம.நவீனின் ஆத்தா என்னை மிகக் கவர்ந்ததும் கதைச் சொல்லும் தேவதையாகத்தான். கதைகளின் தேவைக்கேற்ப குரலை மாற்றி மாற்றி மிரட்டும் தேவதை. அவர் ம.நவீனுக்குக் கதைகளின் வழி காட்சிகளைக் காட்டியவர்.  ஆற்றைப் அதுவரை பார்த்திராத ம.நவீனால் அதை கற்பனை செய்து பார்க்கும் அளவுக்கு ஆத்தாவால் கதை சொல்ல முடிந்துள்ளது. அவர் சொன்ன தோலிருக்க சொளை முழுங்கி கதை என்னையும் சிரிக்க வைத்தது. அது பத்திக்குள் கதைச் சொல்லப்பட்ட முறையின் வெற்றி எனலாம்.

‘அவதாரும் ஆத்தாவும்’ என்ற பத்தியின் தலைப்பில் ம.நவீனுக்குள்ளான ஆத்தாவின் இடம் புரிந்தது. பிராணிகளுக்கும் ஆத்தாவுக்குமிடையிலான பந்தத்தையும் பூமி மனிதனுக்கானது மட்டுமல்ல தனக்கானதும்தான் என விலங்குகள் யுத்தம் செய்யும் அவதார் படத்தையும் இணைத்துத் தலைப்பாக்கியது அலாதி. ‘அனைத்து வளர்ப்புப் பிராணிகளும் ஆத்தாவைத் தன் தலைவியாகத் தேர்ந்தெடுத்திருந்தன’ என்ற வரிகளில் அவதார் படத்துக்குண்டான அவரது தொடர்பு புரிகிறது.

‘இறுதிக் கையசைப்பு’ என்ற பத்தியில் “சட்டென வண்ணங்கள் மரணத்துக்குரியதாகிறது” என அவர் எழுதியது யாருக்கும் சட்டென தோன்றிடாத கற்பனை. இங்கு நான் முதன்மைப்படுத்துவது பாத்திரத்தை அல்ல, ம.நவீன் அவர்களின் நுட்பமான பார்வையை. அவர் அப்படி எழுதி இருப்பதாலோ என்னவோ, இறக்கும்போது பல வண்ணங்களை மாறி மாறி உமிழ்ந்த அந்த விசித்திர மீனுக்குரிய  காட்சி எனக்குள் ஒரு கற்பனை பிம்பமாக வந்து வந்து போகிறது. ஒரு வேளை அது வெறும் புனைவுதானென்றால் அந்தக் கற்பனைக்குரியவரை எண்ணி பிரமிக்க வைக்கிறது ம.நவீனின் எழுத்து. இது Life of pi என்ற படத்தில் அமைந்த காட்சி. “இறுதிக் கையசைப்பு” என்ற பத்தி தலைப்பு உருவாகியதற்கு இந்தக் காட்சியும் காரணமாக இருந்திருக்கலாம். கடலில் பல இழப்புகளுக்குப் பின்னர் Pi என்ற ஒற்றை மனிதனும், மனிதனை வேட்டையாடும் ஒற்றைப் புலியும் போராடி ஒரே படகில் பயணமாவதைக் காட்சியாக்கிய படம் life of pi. 227 நாட்களுக்குப் பின்னர் புலியும் pi யும் கரையைச் சேரும் இறுதிக் காட்சியை ம.நவீன்  நுட்பமாக உள்வாங்கி எழுதியது மிக அற்புதம். தனக்கான இயல்பு நிலைக்குச் சட்டென மாறி காட்டுக்குள் ஓடும் புலியிடம் pi பழைய நட்பை இறுதியாக எதிர்பார்த்து நிற்கிறான். இந்தக் காட்சியை ம.நவீன் மனிதனையும் விலங்குகளையும் அதனதன் தன்மைகளோடு வாசகர்களுக்குக் காட்ட விரும்புவது புரிந்தது. இங்குதான் பத்தியின் தலைப்புக்கான அவசியம் புரிந்தது.  “மனிதன் தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கான கற்பனைகளாக இந்தப் படம் எஞ்சி நிற்கிறது” என்று பத்தியை முடித்திருக்கும் இந்த வரிகளில் படக்காட்சிகளின் தத்துவங்கள் இன்னும் விரிவடைகின்றன.

என்னைக் கவர்ந்த பாத்திரங்களுக்கான பட்டியலின் இறுதி இடம் ம.நவீன் வீட்டில் வளர்ந்த முதல் பூனை பூசிக்கானது. அவர் எழுத்துகளில் அது இன்னும் வாழ்கிறது. உண்மையில் எழுத்தாளர்களின் வாழ்வில் இணையும் எதற்கும் இறப்பு வருவதில்லைதான்.

பத்தியில் எந்த இடமென்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் எல்லா இடத்திலும் பாத்திரமாக ம.நவீனையும்  காணமுடிந்தது. அதில் குறிப்பாகச் சொல்லக் கூடியது ‘கச்சடாப் பேச்சு’ என்ற பத்திதான். காதலி என்று அவர் உச்சரித்த வார்த்தை நிச்சயமாகக் கெட்ட வார்த்தையென நம்பி அம்மாவுக்கு பயந்த ம.நவீன் பின் கெட்ட வார்த்தைகளை உருவாக்கும் வாலிபனாக மாறியது ஆச்சரியம். கெட்ட வார்த்தைகளை எதிர்க்கும் சமூகத்தின் முன் அது சார்ந்த தனது பாலிய அனுபவங்களை பகிர்ந்தது கொள்ளும் அவரது துணிவு தனித்துவம் பெற்றது. ஆனால், அதை அவர் பத்திக்குள் கொண்டு வந்த விதம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்கவில்லை என்பதில்தான் அவரின் எழுத்து நுட்பம் மேன்மையடைகிறது. இறுதியில் நாம் கெட்ட வார்த்தைகளென நம்பும் எதுவுமே கெட்ட வார்த்தைகளல்ல என்ற தெளிவையும் தந்துள்ளார். இரகசியங்களற்ற எழுத்தாளனாக ம.நவீனை அடையாளம் காண முடிகிறது. அவரால் தான் சொல்ல நினைக்கும் எல்லாவற்றையும் தடைகளின்றி சொல்ல முடிகிறது.

அடுத்ததாக ம.நவீனின் இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது பத்திகளின் தலைப்புகள். தலைப்புக்கான அவசியம் பத்திகளுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பின்னப்பட்டுள்ளது.  இறுதிக் கையசைப்பு, கண்ணீரைப் பின் தொடர்தல், அவதாரும் ஆத்தாவும் போன்ற தலைப்புகள் கவித்துவமிக்கவை. பத்திகளில் அநேகமான காட்சிகளோடு அவற்றைக் இணைத்துப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, இறுதிக் கையசைப்பில் அவர் காட்சி படுத்தி இருக்கும் அந்த விசித்திர மீன் உமிழ்ந்த வண்ணங்களை அதன் இறுதிக் கையசைப்பாக நான் பார்த்தேன். அதே போல pi புலியிடம் கடைசியாக எதிர்ப்பார்த்ததும் அந்த இறுதிக் கைசைப்புதான். இவை தத்துவங்களை அதிகம் வரவேற்பதாக நான் கருகிறேன்.

அழுதும், சிரித்தும், வருந்தியும் நகர்ந்த இந்த வாசிப்பு எனக்கு வாசிப்பின் மறுபக்கத்தைக் காட்டியுள்ளது. வாசிப்பது ஒரு அறிவுத் தேடலுக்குரிய நடவடிக்கை, அது எப்போதும் எல்லோருக்கும் சுவைக்காது என்ற எனது கருத்துகளை களைந்துள்ளது. அது அவசியப்படும்போது வாழ்க்கைக்குரிய தேடலாகவும் மாறுமென தோன்றியது. வாசிப்பது அழகான அனுபவங்களைப் பக்கங்களின் மூலமாக அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு பக்கங்களிலும் நாம் புதிது புதிதாய் பிறக்க முடிகிறது. பத்திகள் முடிந்த பின் சின்னதாய் ஒரு வருத்தம் மீண்டும் ஒட்டிக் கொள்ளவே செய்தது. பாதியில் இறக்கிவிடப்பட்டது போல ஓர் உணர்வு. ஆனால், அது அடுத்த வாசிப்புக்கு என்னை உந்துவதாகவே உள்ளது.

எப்படிச் சிதறடித்தாலும் அழகாகவே இருக்கும் விண்மீன்களைப் போலவே  வாழ்க்கை எப்படி இருந்தாலும் எழுதும்போது அழகான  பதிவாகிவிடுகிறது. ஒரு கலைஞனுக்குரிய சந்தோஷமும், துக்கமும் எப்போதும் மற்றவர்களிடமிருந்து தனித்தன்மை பெற்றது. அது அவனுக்குள் கலையாகிக் கொண்டே இருப்பதால் படைப்பாளிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் பிறரின் வாழ்க்கையையும் தனக்குரியதாக்கி வாழக்கூடியவர்கள். தன் வாழ்க்கையையும் பிறருக்குரியதாக்க அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.  எப்போதும் எல்லாவற்றையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த அறிந்தவர்கள். எனவே, இந்த வாழ்க்கையை முழுமையாக வாழக் கற்றவர்கள்.

பவிதாரா

(Visited 198 times, 1 visits today)