2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

hqdefaultவண்ணங்களைப் பூசி விளையாடிய குழந்தை கைகளைக் கழுவாமல் தூர நின்று ஒழுங்கற்ற ஒழுங்கை ரசிக்கும்போது அதற்குள் ஏற்படும் பரவசம்தான் வருட இறுதியில் நின்றுகொண்டு திட்டுத் திட்டான அவ்வருட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும்போது ஏற்படுகிறது. புதிய கார் வாங்குவது, புது வீடு வாங்குவது, திருமணம் செய்வது என இவ்வாண்டு தொடக்கத்தில் முகநூல் முழுக்க லட்சியக்குரல்கள் நிறைந்து கிடந்தபோது ஓர் எழுத்தாளனாக மட்டுமே வாழ்ந்து முடிக்க சித்தமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அர்த்தப்படும் கணங்கள் பொதுவெளியில் வியப்புக்கும் பின் நீடித்த நகைப்புக்குமாக மாறிவிடுகின்றன. அவ்வாறு சவர்க்கார பலூன் விடும் குழந்தையைப்போல எனக்குள் நுரைத்து நுரைத்து இவ்வருடம் மகிழ்ந்த நாட்கள் அதிகம்.

நூல்கள்

இவ்வருடம் ஜனவரி மாதமே எனது ‘உலகின் நாக்கு’ நூல் வெளியீட்டினால் உற்சாகம் பிடித்துக்கொண்டது.20170110_161628 அப்போது நான் வல்லினம் நண்பர்களுடன் தமிழகத்தில் இருந்தேன். முதல் நூலை ஜெயமோகனிடம் தேடிச்சென்று கொடுத்தேன். அவர் அந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். சென்னையில் தங்கும் விடுதியின் அறை ஒன்றில் ஜெயமோகன் நூலை வெளியிட அவர் நண்பர்கள் உடன் இருந்தனர். அதன்பின்னர் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த வல்லினம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் சென்னையிலேயே வழங்கியது மறக்க முடியாத அனுபவம். அதேபோல சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பில் வந்த நூல்களை ‘புலம்’ அரங்கில் விற்பனைக்கு வைத்திருந்ததும் மகிழ்ச்சியான தொடக்கமாக இருந்தது. ‘புலம்’ லோகநாதன் மூலம் வல்லினம் பதிப்பித்த நூல்களுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

18119385_1818252178494451_2582130184304590871_nமாணவர்களுக்கான சிறுகதைகளை கல்வி அமைச்சில் அறிமுகம் செய்து 12 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் வாசிக்கத் தகுந்த சிறுகதைகள் இல்லாதபட்சத்தில், ஏப்ரம் மாதம் 50 சிறுகதைகள் அடங்கிய மாணவர்களுக்கான முதல் சிறுகதை தொகுப்பொன்றை நான் எழுதி வெளியிட்டதும் ஏறக்குறைய 5,000 பிரதிகள் சில மாதங்களில் யாழ் பதிப்பகம் மூலம் விற்றுத்தீர்ந்தது. தரமான அடுத்த தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள் உருவாவார்கள் எனும் நம்பிக்கையை இது தந்தது. சிறுகதை எழுதுவது மட்டும் அல்லாமல் சிறுகதைகளை வாசித்து அறியும் உத்திகளையும் நுணுக்கங்களையும் அந்த நூலில் இணைத்ததன் மூலம் பல மாணவர்கள் வாசிப்பு ருசியை அறிந்ததை அவர்கள் அழைப்புகள் வழி அறிய முடிந்தது,.

பயணங்கள்

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வல்லினம் நண்பர்களுடன் சென்றதும் அந்தப் பயணத்தில் மகாபலிபுரம்01 உள்ளிட்ட சென்னையின் சில பகுதிகளைச் சுற்றியதும் நல்லனுபவம். ஒருவகையில் அது ஓர் இலக்கியப் பயணம்தான். ஷோபாசக்தி, ஜோ டி குரூஸ் உள்ளிட்ட பல முக்கிய எழுத்தாளர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

மார்ச் மாத வட இந்தியப் பயணத்தை முழுக்க எனக்கானதாக மாற்றிக்கொண்டேன். ஆக்ரா, மதுரா, காசி உள்ளிட்ட ஊர்களில் சுற்றித்திரிந்தது அகம்நோக்கி பயணிக்கும் இன்னொரு வழிமுறையாக இருந்தது. பாரதியார் காசியில் வாழ்ந்த வீட்டைத் தேடிச்சென்று அவர் சகோதரியின் மகனைப் பார்த்ததும் அவர் பேசுவதைப் பதிவு செய்ததும் நிறைவான அனுபவம். முன்பின் அறிமுகமில்லாதவர்களும் அவரவர் வசதிபடி உள்வாங்கி தன்னில் உழலும் சுதந்திரத்தைக் கொடுக்கும் ஊராக காசி இருந்தது.

28வருட இறுதியில் தூயனுடனும் கோணங்கியுடனும் மீண்டும் தமிழகத்தில் சித்தன்னவாசல், குடுமிநாதர் கோவில், திருமறைநாதர் கோயில், காளமேகப் பெருமாள் கோயில் , ஏடகநாதர் கோயில், புளியங்குள சமணர் பள்ளி என ஒரு சுற்று வந்தது இவ்வருடத்தை புத்துணர்ச்சியாக்கிவிட்டிருக்கிறது.

மார்ச்சில் சிங்கப்பூர் வாசகர் வட்ட நூல் வெளியீட்டுக்கு எம்.கே.குமாரின் அழைப்பில் சிங்கப்பூர் சென்றது புதிய நண்பர்களை உருவாக்கிக் கொடுத்தது. தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுகமும் கிடைத்தது.

யாழின் சிறுகதை பட்டறை, ஆவணப்பட இயக்கம் தொடர்பாக நாடு முழுவதும் பயணம் செய்யும் சூழல் அமைந்தது. ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடனுடன் கேமரன் மலை, கோணங்கியுடன் பத்துகாஜா எனச் சுற்றியது மனதுக்கு இதமானது. வருடம் தோறும் செல்லும் ஃபிரேசர் மலை பயணமும் பூலாவ் பெசார் தீவு பயணமும் இவ்வாண்டு நிறைவேறாதது மட்டும் வருத்தம்.

எழுத்தாளர்கள் வருகை

இவ்வருடத்தில் வல்லினத்தின் முதல் விருந்தினர் கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என022 இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கும் எழுத்தாளர் யூமா வாசுகி. ஈப்போவில் பிப்ரவரி மாதம் நடந்த கவிதை குறித்த கலந்துரையாடலும் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் யூமா வாசுகி நிகழ்த்திய ‘ குழந்தை கதைகள் நேரம்’ நிகழ்ச்சியும் சுவாரசியமானது.

அடுத்த வருகை எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமாரது. சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோதே அவரைச் சந்தித்தோம். மலேசியாவுக்கு வந்த அவருடன் வல்லினம் நண்பர்கள் அவரவர் ஊர்களில் சந்தித்து உரையாடினர்.

ஏப்ரலில் மலேசியா வந்த  Parnab Mukherjeeயுடனான சந்திப்பும் தனிப்பட்ட முறையில் எனக்கு உவப்பானது. கல்கத்தாவைச் சேர்ந்த நாடகக் கலைஞரான அவரது சொற்கள் அனைத்தும் படைப்பிலக்கியத்துக்கான தூண்டுதலைக் கொடுத்தன. இலக்கியச் செயல்பாடுகளுக்கு நிகராக படைப்பிலக்கியத்திலும் கவனத்தைச் செலுத்தச் சொன்னவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் தேவை, உலகம் முழுக்கக் கொண்டுச்செல்ல வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தினார்.

வல்லினம் ஏற்பாட்டிலான குறுநாவல் பட்டறையை வழிநடத்த மே மாத இறுதியில் ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் வருகை பலருக்கும் எழுதுவதற்கான உத்வேகம் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக நவீன இலக்கியக் களம் ஏற்பாட்டில், அனைத்துலக நவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கில் நடந்த அமர்வுகளும் அதன் இறுதியில் சீ.முத்துசாமிக்கான விஷ்ணுபுரம் விருது அறிவிப்பும் மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தின் மாபெரும் தாவலாய் அமைந்தது.

IMG-20171006-WA00221ஜூன் மாதத் தொடக்கத்தில் வல்லினம் ஏற்பாட்டில் நடந்த பவா செல்லதுரை மற்றும் சைலஜா அவர்களுடனான கலந்துரையாடல் சமகால மலையாள இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் வாசிப்பு நுணுக்கம் குறித்த தேவையையும் உணர்த்தியது. குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்றாலும் அரங்கம் நிறைந்திருந்தது ஆச்சரியம்.

செப்டம்பரில் நடந்த வல்லினத்தின் ஒன்பதாவது கலை இலக்கிய விழாவுக்கு எழுத்தாளர் கோணங்கி வந்திருந்தார். அவருடனான கலந்துரையாடல்களும் பயணங்களும் வல்லினம் நண்பர்களை உற்சாகப்படுத்தியது. சுவாரசியமான ஆளுமை. எழுதுவதன் தேவை, புனைவிலக்கியத்தின் அவசியம், தொடர் செயல்பாடுகள் என தொடர்ந்து அவர் எங்களுக்கு உற்சாகம் கொடுத்தபடி இருந்தார். இடைவெளிகள் அற்ற ஓர் உறவை தனது எளிமையினால் உண்டாக்கினார்.

கௌதம சன்னாவின் வருகை நவம்பரில் நிகழ்ந்தது. ‘குறத்தியாறு’ எனும் முக்கிய நாவலை எழுதியவர். ஒரு எளிய கலந்துரையாடல் மை ஸ்கில்ஸ் அறையில் நடந்தது. மறுநாள் அவரை வல்லினத்துக்காக நேர்காணல் செய்தேன். பௌத்தம் குறித்த அவரது ஆய்வுகளின் அடிப்படையிலான உரையாடல் அது.

ஆவணப்படங்கள்IMG-20170505-WA0030

வல்லினத்துக்காக இவ்வருடம் ஏழு ஆவணப் படங்களை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவற்றில் நான்கு சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப் படங்கள். பி.கிருஷ்ணன், இளங்கண்ணன், இராம. கண்ணபிரான், பால பாஸ்கரன் ஆகியோரது வாழ்வை ஆவணப் படுத்தியதில் மூன்றை மட்டுமே குறுவட்டாக்க முடிந்தது. மலேசியாவில் கோ.முனியாண்டியையும் விஷ்ணுபுரம் விருதுக்காக சீ.முத்துசாமியையும் பதிவு செய்தேன். மா.செ.மாயதேவனை ஆவணப்படம் எடுத்தது இவ்வருடத்தில் மனநிறைவு தந்த பணி. இதன்மூலம் கு.அழகிரிசாமி காலம் தொடங்கிய இலக்கிய செயல்பாடுகளின் சொல்லப்படாத வரலாற்றை மீட்க முடிந்தது. இந்த ஆவணப்பட முயற்சிகள் அனைத்திற்கும் நண்பர்கள் ஷாநவாஸ், தயாஜி ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கினர். ஒளிப்பதிவாளர் செல்வனின் உழைப்பு இதில் கணிசமானது.

மாணவர்களுக்கான பட்டறைகள்

அடுத்த தலைமுறையை சிறுகதை இலக்கியத்தில் ஈடுபடுத்த கடந்த ஆண்டைப் போலவே சிறுகதைப் பட்டறைகளை நாடு முழுவதும் நடத்தினேன். விஜயலட்சுமியும் தயாஜியும் முன்னெடுக்கும் ‘யாழ் பதிப்பகம்’ அதற்குத் துணை நின்றது.

18882285_1841190569533945_8367070322038192052_nநெகிரி செம்பிலான் வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு பள்ளிகளை ஒன்றிணைத்து முதல் பட்டறை பிப்ரவரியில் தொடங்கியது.  மார்ச்சில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பட்டறை நடத்தினேன். ஜூன் மாதத்தில் தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி, புக்கிட் பெருந்துங் தமிழ்ப்பள்ளி, பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி, எமர்லண்ட் தமிழ்ப்பள்ளி என தொடர் பட்டறைகள் அமைந்தன. ஜூலை சுங்கை சீப்புட் வட்டார பள்ளிகள் எனத் தொடர்ந்து மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த 16 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குச் சிறுகதை பட்டறை ஒன்றும் ஏற்பாடானது. யாழுடன் இம்முறை சரவணதீர்த்தாவும் கைகொடுத்ததால் லாடாங் பெர்தாம் பள்ளியை மையமாக வைத்து ஒரு மாபெரும் சிறுகதைப் பட்டறையும் ஜொகூர் மாநிலத்தில் ஒரு பட்டறையும் என இம்முறை அதிகம் தெற்கு நோக்கி அதிகம் பயணம் செய்தேன். தொடர்ந்து ஆகஸ்ட் 26, பஹாங் ஜெராந்துட் தமிழ்ப்பள்ளியில் இறுதிப் பட்டறையை நடத்தி முடித்தேன். மாணவர்களைப் புனைவிலக்கியத்தில் ஈடுபட வைக்கவே இம்முயற்சி தொடங்கப்பட்டது. பாடத்திட்டத்தில் பயிலும் சிறுகதைகள் வழி ஊக்கம் பெற்று புதிய தலைமுறை ஒன்று சிறுகதை இலக்கியத்தில் நுழைவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல எழுத்தாளர் முனீஸ்வரன் நடத்தும் ‘புத்தகம்’ அமைப்பு தஞ்சோங் மாலிமில் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்துகொண்டு பயிற்சி ஆசிரியர்களிடம் சிறுகதை வாசிப்பு, அதன் புரிதல் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு மணி நேர கலந்துரையாடல் உற்சாகமாக அமைந்தது.

வல்லினம் செயல்பாடுகள்

வல்லினத்தின் ‘படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம்’ எனத் தொடங்கிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.21762838_1480486425321429_4654187497600265211_o-300x200 தொடர்ந்து தரமான படைப்புகளையும் படைப்பாளிகளையும் அடையாளம் காண முடிந்தது.

இவ்வருடத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்றால் ‘வல்லினம் 100’ களஞ்சியம்தான். 70% படைப்புகள் இந்தக் களஞ்சியத்திற்கு என்றே உருவாக்கப்பட்டு தொகுக்கப்பட்டவை. நூறாவது மாதம் இலக்கை அடையும் உற்சாகம் வல்லினம் நண்பர்கள் அனைவரிடமும் காணப்பட்டது. தொகுப்பைத் தயாரிக்கும் பணியில் எல்லோரிடமும் பொறுப்புணர்ச்சி அதிகரித்திருந்தது. ஓர் ஆக்ககரமான பணியின் தேவையை அறிந்து செயல்படும்போது அறிவார்ந்த நெருக்கம் சாத்தியமாகிறது. வல்லினம் நண்பர்கள் அனைவரும் தம்மளவில் நிறைவும் பெருமையும் கொள்ளும் தருணத்தை ‘வல்லினம் 100’ வழங்கியது.

யாழ் பதிப்பகம்

22406083_1908150932837908_8176514500803109474_nயாழ் பதிப்பகத்துக்காக மாணவர்களின் நூல்களை உருவாக்கும் முயற்சியில் இவ்வருடம் இரு நூல்களை உருவாக்கித்தர முடிந்தது. அதில் அறிவியல் நூல் இதுவரை மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குத் தரமானதாக பதிப்பானது. கார்ட்டூன்கள் மூலம் எளிய விளக்கங்கள் அடங்கிய அந்நூல் இதுவரை யாழ் பதிப்பித்த நூல்களில் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் இதுவரை மலேசியாவில் வந்த அறிவியல் நூல்களில் சிறந்தது. மாணவர்களுக்காக நான் எழுதிய கட்டுரை நூல் ஒன்றும் யாழ் மூலம் பதிப்பிக்கப்பட்டது. இந்தப் பணிகள் என் நேரத்தை அதிகம் எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்காகத் தயாரிக்கப்படும் நூல்களில் மாற்றத்தை நிகழ்த்தவேண்டும் என எடுக்கப்படும் ஆரம்பகால முயற்சியில் நேரத்தைச் செலுத்த வேண்டியிருந்தது.

படைப்புகள்

பயணக்கட்டுரைகள், அனுபவக்கட்டுரைகள், விமர்சனங்கள், பத்திகள், எதிர்வினைகள் என இவ்வருடம் முழுவதும் எழுதிக்கொண்டே இருந்தாலும் சொற்பமான கவிதைகளும் ஐந்து சிறுகதைகளும் என புனைவிலக்கியத்தில் சொற்பமாகவே செயல்பட முடிந்திருக்கிறது. ‘மண்டை ஓடி’ தொகுப்புக்குப் பின் எழுதப்பட்ட கதைகள் அனைத்தும் புதிய திசையில் பயணிப்பதை ஒரு வாசகனாகப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

விஷ்ணுபுரம் விருது

இவ்வருடம் விஷ்ணுபுரம் விருதில் கலந்துகொண்டது உற்சாகமான நிறைவு. மொத்த வளாகமும் இலக்கியச்06 சூழலின் அதிர்வலைகளால் நிரம்பி இருந்தது. ஜெயமோகனின் ஊக்கம் தரும் சொற்கள் அடுத்தவருடம் முழுவதும் இயங்குவதற்கான தூண்டுகோல். கோவை ஞானியின் கரங்களின் வெதுவெதுப்பு இன்னும் என் கைகளில் ஒட்டிக்கொண்டு உள்ளது. புதிய நண்பர்கள், புதிய வாசகர்கள், நான் மதிக்கும் எழுத்தாளர்கள் என உற்சாகமான இரு நாட்கள் அவ்வப்போது வந்துபோகும் சின்னச் சின்ன சோர்வுகளின் சுவடுகளைத் துடைத்தொழித்துவிட்டது.

சிக்கல்கள்

மணிமன்றம் செயல்பாடுகள் குறித்த கட்டுரை மற்றும் எழுத்தாளர் சங்கம் குறித்த கட்டுரை திருப்திகரமான அளவு எதிரிகளைச் சம்பாதித்துக்கொடுத்தது. மிரட்டல்கள் தொடர்ந்தன. அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட புகார் கடிதங்களின் விளைவால் தொடர்ச்சியான விசாரணைகள் நடந்தபடி உள்ளன. இறுக்கமான சூழலைச் சமாளிக்க பள்ளியை நானே மாற்றிக்கொண்டேன். சிறிய தோட்டப்பள்ளி. ஆனால் ஒரு மணி நேரப் பயணம். போகும்போதும் வரும்போதும் ஒலி நூல்களைக் கேட்கப் பழகிக்கொண்டேன். தண்டனைகளை வரமாக்குவது அவரவர் திறமைதானே.

ஆனால் இந்தத் தூர பயணம் பொருளாதார ரீதியில் கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கார் ஓட்டுவது முதுகுத்தண்டை நோகச் செய்கிறது. வேறு வழி தேட வேண்டும். திருமண வாழ்வில் இருந்து அதிகாரபூர்வமாக விலகிய பத்திரம் இவ்வருடம் கிடைத்தது. வருங்காலத் தனிமை குறித்து பலரும் ஆலோசனை கூறியபடி உள்ளனர். குறிப்பாக அம்மா.

இவ்வருடம் உடல் ரீதியாக, மன ரீதியாக, பொருளாதார ரீதியாக எனக்கு அலைக்கழிப்புகளே அதிகம். ஆனால் இவ்வருடம்தான் அதிகமாக எழுதவும், வாசிக்கவும், புதிய திட்டங்களை வகுக்கவும் என்னை நான் உத்வேகப்படுத்திக்கொண்டேன். செயலூக்கத்தின் பதைபதைப்பை என் மீது நானே வாரி இறைத்துக்கொண்டேன். லௌகீக வாழ்வின் சிக்கல்களின் புலம்பல்கள் மறந்தும் என்னிடமிருந்து எழாமல் பார்த்துக்கொண்டேன். வல்லினம் 100 களஞ்சியத்தை என் இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரிடம் வழங்கச்சென்றபோது தயாஜியிடம்  ஆசிரியர் கூறினார், “நவீன் நல்லப் பையன்தான். ஆனா வகுப்பில் பாடம் நடக்கும் போது போட்டுல எழுதி திரும்பி பார்த்தா காணாமல் போயிருப்பான். கிளாஸ விட்டு வெளிய போயி யாரையாச்சும் அடிச்சிக்கிட்டு இருப்பான். கோவக்காரன்.” தயாஜி காரில் ஏறியப்பிறகு “நீங்கள் அப்படியெல்லாம் செஞ்சிருக்க வாய்ப்பில்லையே” என கிண்டலடித்தார்.

உடல் எதையும் தாங்கும், வலியை எவ்வளவும் தாங்கலாம் எனும் மனநிலை ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்குகிறது. வலது கை விரல்களிலும் வலது கால் மூட்டிலும் செய்த அறுவை சிகிச்சைக்குப் பின் உடலில் எல்லைகள் கொஞ்ச கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. ஒரு சிறு நரம்பின் பாதிப்பு தினசரி வாழ்வை எப்படி பாதிக்கும் என்ற அனுபவம் செயலை நிதானமாக்குகிறது. ஆனால் வயது கூடும்போது இதற்கு முற்றும் முரணாக  இன்னல்களால் மனம் அறுவை சிகிச்சைக்குள்ளாகும்போது அது தன் எல்லைகளை விரிவாக்கிக்கொள்வது ஆச்சரியம். மனமும் உடலும் எதிரெதிர் திசையில் பயணிக்கும் விசித்திரமான இயந்திரங்கள் என அறிந்த ஆண்டு இது.

ஜெயமோகன், சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி போன்ற மிக அந்தரங்கமாக உணரும் நண்பர்களிடம் மட்டும் மன அலசலைப் பகிர்ந்துகொண்டேன். அதிலிருந்து மீண்டேன். நண்பர்கள் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த என் இழப்புகளால் நான் கலங்கவில்லை என்றே நினைத்துக்கொள்வர். ஆச்சரியப்பட்டு கேட்டவர்களும் உண்டு. ஒரு காலத்தை நகர்த்தும் மாபெரும் பணியில் இருப்பவன் நிகழ்கால லௌகீக சிக்கல்களை இயலாமைக்கான காரணமாகச் சொல்வது அவமானம்.

பல சமயங்களில் நான் என் இந்த நிலைபாட்டில் பிறரையும் வைத்துப் பார்த்து புண்படுத்திவிடுவதை அறிகிறேன். நான் என் மீது சுமத்திக்கொண்டவற்றை பிறரும் சுமக்க வேண்டும் என கருதுவது அபத்தம்தான். முடிந்தவரை அடுத்த வருடம் அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு எண்ணுவதெல்லாம் மற்றுமொரு காலத்தில் நின்று கவனிக்கும்போது அர்த்தமற்றவையாகத் தோன்றலாம் என்ற எதிர் உண்மையையும் அறிவேன். அடர்த்தியான வாழ்வைச்சொல்லும் பெரும் நாவல்கள் மீண்டும் மீண்டும் அதைதான் எனக்குச் சொல்லிக்கொடுத்தன. அதை மனதில் இறுத்திக்கொண்டுதான் தீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது. ஹெமிங்வேயின் சான்டியாகோ போல, பா.சிங்காரத்தின் பாண்டியன் போல, குர் அதுல்ஜன் ஹைதரின் கமால் போல, நானெனும் பொய்யை நடத்துவோன் நான் எனச்சொன்ன பாரதி போல.

(Visited 637 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *