காலையிலேயே எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் மாணிக்கவாசகர் திருக்கோயில் சென்றோம். கோயிலை நெருங்கியதுமே அதன் புற வளாகத்தில் இருந்து வேப்ப மரக் காற்று சிலிர்க்க வைத்தது. “இதுதான் நம்ம இடம்” என கோணங்கி கைகளை விரித்து காற்றை உள் வாங்கினார். மாணிக்கவாசகர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் அக்கோயில் மிக எளிமையாக, சிறிய பரப்பளவைக் கொண்டிருந்தது. அங்கிருந்த கிணறு மிகப்பழமையானது எனச் சொன்னார்கள். கோயிலைவிட அதன் சுற்றுப்புறம் அவ்வதிகாலையில் உற்சாகத்தைக் கொடுத்தது. கொஞ்ச நேரம் அவ்வின்பத்தைப் பருகிவிட்டு திருமறைநாதர் கோயில் புறப்பட்டோம்.
திருமறைநாதர் கோயில் தொன்மையான சிவ வழிபாட்டுத்தலம். இக்கோவிலின் நூறு கால் மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்பது நம்பிக்கை. கோணங்கி நம்பிக்கைகளிடம் முழுக்க தன்னைச் சமர்ப்பிப்பவர். அது கலைக்கான பாதையாக நினைப்பவர். நான் வழிபாட்டு இடத்தில் இருந்து விலகி கோயில் வெளிகளில் அலையத் தொடங்கினேன். தன்னிச்சையாக சிவபுராணம் நாவில் தவழ்ந்தது. 13 வயது வரை ஓயாமல் பாடிக்கொண்டிருந்த நாக்குக்கு சொற்கள் வசப்பட்டன. 13 வயதுக்குப் பின் செவிமடுத்த எந்தக் காதல் பாடலையும் விட சிவபுராணத்தில் உருகிப்போகும் தன்மை அதிகம் இருந்தது. நான் தமிழ் பயில சிவபுராணம் ஒரு காரணம்.
அடுத்து கோணங்கி எங்களை 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காளமேகப் பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். போகும் இடமெல்லாம் யானை மலை கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தது. நான் அதில் ஏறிய அனுபவம் பற்றி கூறினேன். “ஆமாம் இதற்கு யானை மலை என்பதைவிட நத்தை மலை எனும் பெயர் பொருத்தமாக இருக்கும்” என்றார். வாகனம் ஓட்டி வந்தவர் கோணங்கியின் நண்பர். “அதெப்படி அதற்குதான் ஏற்கனவே யானை மலை என பெயர் இருக்கிறதே” என குறுக்கிட்டவரிடம் “அது மத்தவங்களுக்கு. என் பார்வையில் அது நத்தையோட தோற்றத்தில இருக்கு. அதனால் ஒரு படைப்பாளி அதை நத்தை மலை என அழைக்க சுதந்திரம் உண்டு” என்றார். கோணங்கியுடன் பயணம் செய்வது சுவாரசியமானது. அவரிடம் நாம் காணும் காட்சிகளை வேறொன்றாக நம்மிடம் மாற்றிக்காட்டும் வித்தை இருந்தது. இதெல்லாம் நீர் உரிஞ்சி பிசாசு என கருவேலமரங்களைக் காட்டி அவர் சொல்லும்போது அவை பல் முளைத்து விகாரமாய் நின்றன.
காளமேகப் பெருமாள் கோயிலிலும் சிற்பங்கள் ஆச்சரியப்படுத்தின. தூண்களில் இருந்த யாளிகளின் உருவங்கள் பிரம்மாண்டமாய் இருந்தன. மருது பாண்டியர் கற்றூண் உருவங்களைப் படம் பிடித்துக்கொண்டேன். இக்கோயிலில் பல மண்டபங்கள் அவர்களால் உருவானது என கோணங்கி விளக்கினார். நான் வழிபாடுகளில் ஆர்வம் காட்டாததைக் கண்டவர் “நாம எல்லாம் நவீன பைகளைத்தான் சுமக்கறோம். ஆனா அதுக்குள் சின்னதா மரபுப் பை ஒன்னு இருக்கு. அதையும் அவ்வப்போது எடுத்துப் பார்க்கனும்” என்றார். பசித்தது. ஏற்கனவே தமிழகத்தில் இரு முறை உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால் உயர்தர உணவகத்துக்குச் செல்லலாம் என்றேன். கோணங்கி சிறிய கடைகளில்தான் உணவு ருசிக்கும் என ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
அது சிறிய இட்டிலி கடை. 8 பேருக்கு மேல் அமர்ந்தால் நெரிசல் எனக்கூறிவிடும் அளவுக்கு குறுகிய பரப்பளவு. ஆனால் இட்டிலி பரிமாறிய அம்மாவின் முகம் அத்தனை ஈர்ப்பாக இருந்தது. ஆளுக்கு நான்கு இட்டிலி என தள்ளினோம். சுவையான இட்டிலிதான். பணம் செலுத்தும்போது சில்லறை இல்லை. 130 ரூபாயில் 30 ரூபாய் குறைந்தது. அந்த அம்மா பரவாயில்லை. போயிட்டு வாங்க. பார்த்துக்கலாம் என அன்புடன் அனுப்பிவைத்தார். “நான் சொல்லல சுவைக்குமுன்னு. சுவை என்பது இந்த மாதிரி எளிய மனிதர்களோட மனங்கள்ள இருக்கு” கோணங்கி சொல்லிக்கொண்டே வண்டியை ஏடகநாதர் கோயிலை நோக்கி விடச்சொன்னார்.
’வாழ்க அந்தணர்’ என்ற திருப்பதிகம் எழுதிய திருஞானசம்பந்தரின் ஓலை வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து கரையை அடைந்த தலம் என இக்கோயிலைப்பற்றி சொன்னார் அவ்வூரில் இருந்த கோணங்கியின் உறவினர். கோணங்கி என் முகத்தைப் பார்த்தார். நெருக்கமாக வந்து, “அறிவியலுக்கு எதிரானதை நீ நம்ப மாட்ட. ஆனா அறிவைவிட கற்பனைக்கு ஆற்றல் அதிகம். இந்தக் கற்பனையை ஜெயிக்க உன் கற்பனையால் முடியும். இன்னொரு புனைவாலதான் இந்த கற்பனையை மறுக்க முடியும். அறிவால் முடியாது.” என்றார். நாங்கள் சென்றபோது கோயில் மூடியிருந்தது. சூழ்நிலையை விளக்கி உள்ளே செல்ல அனுமதி பெற்றார். கோயிலின் சுற்றுப்புறங்களை பார்க்க முடிந்தது. கோயிலின் பெரும்பகுதி பூமிக்கு அடியில் புதைந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. சிற்பங்கள் பாதியளவு பூமியில் வெளிபட்டு இருந்தன.
மீண்டும் காரில் ஏறி கொங்கர் புளியங்குளத்தில் உள்ள சமணர் பள்ளியை நோக்கிச் சென்றோம். நல்ல வெயில். கோணங்கி நோவாவின் பூர்வக்குடி கதைகள் குறித்து பேசத்தொடங்கினார். ‘வல்லினம் 100’ இல் அக்கதைகள் தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னார். “எழுதி முடித்தவுடன் உள்ளது கதையில்லை. கதை உருவாகும் முன் ஒன்று தோன்றும் பாரு. அதுதான் கதை. அந்த தோன்றுவதைதான் நாம கதையா விரிச்சி எடுக்கிறோம். பூர்வக்குடி கதைகள்ள அந்த தோன்றும் இடங்கள் அழகா இருக்கு” என்றார்.
மதிய உணவுக்குப் பின் புளியங்குள சமணர் பள்ளிக்குச் சென்றோம். நாகமலை தொடரில் அமைந்துள்ள இந்த சமண மலையில் 80க்கும் மேற்பட்ட சமணப் படுகைகள் உள்ளன. மேலே ஏறிச்செல்ல படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீர்வடி விளிம்புகளைக் காணமுடிந்தது. அதன் அருகில் மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் காணமுடிந்தது. கோணங்கி மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டார். “இலக்கியம் என்பது முன்னோடிகளிடம் தோக்குறது. நான் இளங்கோவடிகள் உள்ளிட்ட எனது முன்னோடிகள் பின்னால் ஓடி தோக்குறேன். ஆனாலும் ஓடிக்கிட்டே இருப்பேன். இந்தக் கல்லோட வண்ணம் பார்த்தியா. இது கவிதையின் வண்ணம். கவிதையில் வண்ணத்த நான் அறிவேன். ஒன்றை அறிய அறிவு தேவையில்லை. அதுக்கு வேறொன்னு தேவை,” என்றார். நான் இருப்பதில் உயரமான ஒரு பகுதியில் ஏறி அங்கிருந்த சமணப்பள்ளியில் படுத்துக்கொண்டேன். எவ்வளவு நேரம் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன் எனத் தெரியாது. எழுந்து எட்டிப்பார்த்தபோது எல்லோரும் கீழே ஒவ்வொரு படுகையில் படுத்திருந்தனர். எல்லாரையும் சமண முனிகளாகக் கற்பனை செய்து பார்த்தேன். எங்களால் ஒரு வார்த்தை பேசாமல் அரை மணி நேரத்திற்கு மேல் இருக்க முடிந்திருந்தது. அது இங்குள்ள ஆதி அமைதியின் அதிர்வலையாக இருக்கலாம்.
கீழே இறங்கியபோது சாலையில் ஒரு சாவு ஊர்வலம் சென்றது. வண்டியை ஓட்டிய நண்பர் வேகமாக வண்டியின் சன்னலை மூடினார். பிணத்துக்கு போட்டிருக்கும் மாலையைத் தூக்கி வண்டி ஓட்டிகளின் கழுத்தில் போட்டுவிடுவது அங்கு பிரபலமாம். மேலே வாழ்தலில் இருக்கும் மௌத்திற்கும் கீழே மரணத்தில் இருக்கும் இரைச்சலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. மதுரையைச் சுற்றினோம். சில புத்தகங்களை வாங்கினோம். ஜிகிரிதண்டா சாப்பிட்டோம். நேரம் கடந்துகொண்டிருந்தது.
அந்த அதிகாலையே மதுரையில் இருந்து திருச்சிக்குப் புறப்பட்டோம். மறுநாள் விமானம். கோணங்கி அடிக்கடி வரச்சொன்னார். “நீங்களெல்லாம் மூதாதையர்களைத் தொலைச்ச நவீன அனாதைகள். அதனால நாமதான் இங்க உறவுகள ஏற்படுத்திக்கனும்”. டைபெற்றோம். தயாஜியையும் விஜியையும் விமான நிலையத்தில் விட்டுவிட்டு நான் திருச்சியில் பதிவு செய்திருந்த தங்கும் விடுதிக்கு வந்தேன். என் விமானம் மதியம் 2க்கு. அந்தக் காலையில் நண்பர் ஜீவ கரிகாலனைச் சந்திப்பதாய் திட்டம்.
அவரும் அதிகாலை 7க்கெல்லாம் விடுதிக்கு வந்தார். யாவரும் பதிப்பக நூல்களை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். பதிப்பைத் தொழிலாகவோ, தொழில்நுட்பப் பணியாகவோ நினைக்காத சிலர் மட்டுமே அவ்வப்போது தோன்றுகிறார்கள். அவர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்ற சாத்தியமாகிறது. யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து நூல்களைப் பதிப்பிக்கும் திட்டம் குறித்துப் பேசினேன். உற்சாகமாகப் பேசினார். தொடர்ந்து பேசவிடாமல் உறக்கம் அழுத்தியது. ஜீவகரிகாலன் புறப்பட்டப்பின் மரணம் போல ஒரு தூக்கம்.
விமானம் ஏறும் முன் ஒரு டீ வாங்கி அருந்தினேன். கோணங்கி எங்களுக்கு இருக்கும் மூதாதையர்களின் நாக்கு பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது. அது உணவில் மட்டும் அல்ல; மொழியிலும் உண்டென நினைத்துக்கொண்டேன். மாணிக்கவாசகர் முதல் உணவு வரை தமிழகத்தை நெருக்கமாக்குவது நாக்கிலிருந்து வெளிபடும் சொல்லாலும் நாக்கு உள்வாங்கும் சுவையாலும்தான். அதுதானே மூதாதையர்களின் நாக்கு .
முற்றும்