இறுதியாக – சீனு

jb34ehஅன்பு அண்ணா ,

முதலில் இரண்டு விஷயங்களை திட்டவட்டமாக சொல்லி விடுகிறேன் .  ஒன்று    உரையாடலின் புரிதலின் பொருட்டு மட்டுமே  ”இங்கு ”  ”அங்கு ” எனும் பதத்தை பயன்படுத்துகிறேனே அன்றி , அது பிரிவினையை சுட்டுவதற்கு அல்ல . [நீங்கள் அதை அறிவீர்கள் ].

இரண்டு  தீவிர இலக்கியம் , இலக்கிய செயல்பாடுகள்  கைக்கொள்ளும் ஆளுமைகள் மீதான மாளாத காதல் கொண்ட வாசகனாக மட்டுமே நின்று உரையாடுகிறேன் .  நிற்க .

ஒண்றினை ஏற்றுக்கொள்ள மறுப்பது  என்பது  அது நிகழும் களத்தை முற்றிலும் புரிந்து கொண்ட பின்பே நிகழ வேண்டும் என்பேன் .  உதாரணமாக  படிகம் சிற்றிதழை நடத்தும் ரோஸ் ஆன்றோ அவர்களை எடுத்துக் கொள்வோம் .  ஜெயமோகன் பங்குகொள்ளும் பெரும்பாலான கூட்டங்களில் கலந்து கொள்வார் . அவர் சொந்த காசு போட்டு கொண்டு வரும் கவிதைக்கான சிற்றிதழான படிகம் இதழை பெரும்பாலும் இலவசமாகவே கொடுப்பார் .  அதன் உள்ளடக்க கவிதைகளின் தர மதிப்பீடு  என்பது விமர்சனத்துக்கு உட்பட்டதே .  ஜெயமோகன் சார் வசம் இது குறித்து கேட்டேன் .

ரோஸ் பல ஆண்டுகளாக இந்த செயல்பாட்டில் இருப்பவர் . அவருக்கென தனி அரசியலோ ,கணக்கு வழக்கு உள் குத்துக்களோ கிடையாது . தீவிர இலக்கியம் என்ற இந்த தளத்தின் பால் மாறாத பற்று ஒன்றைக் கொண்டே பணி செய்து கொண்டு இருக்கிறார் .  ஆம் அவரது இதழின் கவிதைகள் விமர்சனத்துக்கு உட்பட்டதே . ஆனால் அவரது பணி என்ன ?  தொடர்ந்து புதிய புதியவர்கள் கவிதைகள் எழுதும் சூழலை இதன் வழியே உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் .  ஒரு கபில் தேவ்  உருவாகி வர வேண்டும் எனில்   ,கால்வாசி பஞ்சாப் தெருவில் இறங்கி கிரிக்கெட் ஆடும் நிலை நிகழ வேண்டும் .  அத்தகைய ஒரு பனி ரோஸ் உடையது என்றார் .  ரோஸ் அவர்களே மறந்தாலும் பல சமயம் ஜெ அவரே தொலைபேசி ரோசை அழைப்பார்.  ரோஸ் முதல் வகை . இரண்டாம் வகை  பௌத்த அய்யனார் . முற்றிலும் வெத்து வேட்டு. காணும் எல்லா நிகழ்விலும் கலந்து கொண்டு தன்னால் முடிந்த அளவு குழப்பம் விளைவிப்பார் .ஐயா நீவிர் எவர் என வினவினால்,இலக்கிய விமர்சகர் என்பார் .  ஜெ  இத்தகு ஆளுமைகளை  அண்டவே விடமாட்டார் .

லட்சுமி மணிவண்ணன் ,இந்த ரோஸ் ஆன்றோ  வரிசையில் வருபவர் . பல நிகழ்வுகளை தனது கை காசு போட்டு நடத்துகிறார் .நானறிந்து  அவர்  ஒழுங்கமைவு செய்யும் கூடல்களில் , அலட்சியத்துடனோ ,உதாசீனத்துடனோ ,எவரையும் தேர்வு செய்பவர் இல்லை .  பிறகு பிழை எங்கே ?   ஆளுமைகளை தேர்வு செய்யும்  அவரது அளவீடுகளில் ஊசலாட்டம் இருக்கலாம்.  உதாரணமாக  அவரது முகநூலில்  தேவ தச்சன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட கவிதை ஒன்றினை ,திரை சொட்டாக எனக்கு அனுப்பி , ஜி இது கவிதை மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு ,இது கவிதைதானா என கேட்டார் .  அந்த கவிதையின் உள்ளடக்க காட்சி இது . மரத்தின் கீழ் ஒரு கல்லறை .அதன் மேல் சருகுகள் உதிர்ந்து கிடக்கிறது.  அந்த கவிதை நோக்கு இது . எடையற்ற கல்லறைகள் பறக்காவண்ணம் அதன் மேல் எடை மிக்க சருகுகள் கிடக்கிறது .  உண்மையில் இது கவிதை இல்லை .வெறும் லேட்ரல் திங்கிங் என்பதற்கு மேல் இதில் ஏதும் இல்லை . மேலும் இந்த கவிதையில் இருக்கும் பொய் .  சருகுகள் கொண்டு மூடப்பட்ட மரத்தடி கல்லறை அந்த கவிஞ்சனை உள்ளே கிடந்தது உறுத்தும் ஒன்று அல்ல .சும்மா வாசகனுக்குக்கான ஒரு பொய் .

வெளியே என்ன நடக்கிறது தெரியவில்லை

வெளியே என்ன நடக்கிறது தெரியவும் வேண்டாம்

சூடான காபி நிறைந்த கோப்பையை

மேஜையில் வைக்கிறேன்

நடனமாக மாறியபடி .

[நினைவில் இருந்து எழுதியது வரிகள் மாறி இருக்கலாம்] தேவ தச்சன்  கவிதை இது .

இப்படிப்பட்ட கவிதையை எழுதும் ஒருவரிடம் ,அவருக்கு சமர்ப்பணம் என்று சொல்லி ஒரு டப்பா கவிதையை நீட்டினால் அவர் என்ன செய்வார் .நீட்டியவன் மண்டையில் கொட்டி அனுப்புவார் .

மற்றொருவர் சபரி நாதன் .தேவதச்சனை சரியாக உள் வாங்கிய கவிஞ்சர் .   சபரி நாதன் எழுதிய  தேவ தச்சம்  எனும் மிக முக்கியமான   கட்டுரையை ”கண்டு பிடித்து ” அதை  வெளியே கொண்டுவந்தவர்  லட்சுமி மணிவண்ணன் தான் .

இதுதான் அவரது தேர்வில் உள்ள ஊசலாட்டம் . ஆக இந்த ஊசலாட்டத்த்தின்  ஒரு பகுதியாகவே  வாணி ஜெயம்  போன்ற பிழை, தேர்வு செய்யப்பட்டிருக்க சாத்தியம் இருக்கிறது .  மேலும் எப்போதும் லட்சுமி மணிவண்ணன்  உரையாடலுக்கான ஒரு வாசலை எப்போதும் திறந்தே வைத்திருப்பவர் . முன்பு ஒரு காலம் அவர் ஜெயமோகனுடன் நிகழ்த்திய கருத்து சண்டை ,கருத்துக்கள் அற்ற தூய அடி தடி ,இவை எல்லாமே வரலாறு .  உரையாடலின் வாசல் வழியேதான் இருவரும் இன்று நெருங்கி நிற்கின்றனர் .  எனவே  அன்று அவ்வாறு நடந்தது . உண்மை .அது அவ்வாறே இனியும் நடக்கும் என்பது கிடையாது . மாற்றம் நமது உரையாடலில் இருக்கிறது .

அது போலவே மனுஷ்  விவகாரமும் . திருச்சி அருகே ஒரு சிறிய கிராமத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்தவரை .சுஜாதா அனைவருக்கும் அடையாளம் காட்டினார் . மனுஷ் பதிப்பகம் துவங்குகையில் சுஜாதா அதன் பக்க பலமாக இருந்தார் .  சுஜாதாவின் அத்தனை நல்ல சிறுகதையை சேர்த்தாலும் சுஜாதாவை ,  தீவிர வாசகர்களுக்கும் இடம் உள்ள வெகுஜன கதைகளை எழுதியவர் என்றே வகுக்க வேண்டும் .[அதாவது முழுமையான வெகுஜன எழுத்தாளர் எனலாம் ]  .அவரிடம் இருந்து தனது பொது வாழ்வை துவங்குகிறார் மனுஷ் .அவரது பலமும் பலவீனமும் அதுவே .

உங்களுடன் சுற்றிய மனுஷ் .உண்மையும் தீவிரம் கொண்டவர் . அவர்  அங்கே நிகழ்த்தியது அவரது உள்ளார்ந்த வெளிப்பாடே . எங்கே சரிவு துவங்கியது ? இரண்டு எல்லைகளில் .ஒன்று வணிகம் .இரண்டு அவர் கருத்துக்கள் வழியே அவருக்கு வந்து சேர்ந்த இடர் .  நூலக ஆணை நின்று விட்டது , பெரும்பாலான புத்தக அங்காடிகளுக்கு பணம் கொடுக்கும் வழக்கமே இல்லை , எல்லா பதிப்பாளரும் சந்த்தித்த இடரை உயிர்மையும் சந்தித்தது . அதிலிருந்து மீளும் செயல்கள்  அளித்த கட்டுக்கோப்பு குலைவு . அவர் தான் சார்ந்த மதத்தின் அடிப்படை வாத செயல்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் .அது அவருக்கு சிக்கல்களை கொண்டுவந்தது . பல தொடர் விளைவுகள் .அவர்  கட்சிக்காரர் ஆனார் . தளபதி என விளிக்காமல் கட்சிக்காரராக நீடிக்க முடியுமா என்ன ?

அன்றைய மனுஷ் உண்மை . அவருடன் நீங்கள்  பணி புரிந்த நாட்கள் சிறுமை கொள்ளத்தக்க நினைவுகள் இல்லை .இன்றைய மனுஷ் யதார்த்தம் [இன்றும் அவர் வீர்யம் குன்றா சில கவிதைகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறார் ] .  இதை புரிந்து கொண்டு , அவரை ஏற்பதோ ,மறுப்பதோ நிகழவேண்டும் .

அடுத்து ஜெயகாந்தன் .  மு வ வை  எளிதாக ”அந்தப்பக்கம் ”வைத்து கதவை சாத்தி விடலாம் . ஜெயகாந்தனை அப்படி செய்ய இயலாது .காரணம் அவர் இலக்கியவாதி . உதாரணமாக சுரா வின் மிக சிறந்த மூன்று கதைகள் இது என தேர்வு செய்வோம் ,  ஜெயகாந்தனின் மிக சிறந்த மூன்று கதைகள் இது என தேர்வு செய்வோம் ,அவ்வாறே அழகிரி சாமி .  இந்த மூவரையும் அந்த கதைகள் அடைந்த  ஆழத்தின் அடிப்படையில் வரிசை அமைக்க சொன்னால் .முதல் படியில் கு அழகிரிசாமி இடம் பிடிப்பார் , இரண்டாம் படியில் ஜெயகாந்தன் இடம் பிடிப்பார் .
சுரா மூன்றாம் படியில்தான் இடம் பெறுவார் .

கு அழகிரி சாமி ,ராஜா வந்திருந்தார் கதையில் நிகழ்வது என்ன ?  கம்பனின்கூவும்   மானுடம் வென்றதம்மா போன்றதொரு தரிசனம் அல்லவா ?  ஜெயகாந்தனின்  சுய தரிசனம் கதையை எடுத்துக் கொள்வோம்,  பூணூல் அறுத்து வெளியேறுகிறான் கதை சொல்லி .நவீனத்துவர் அனைவரும் கையாண்ட அந்நியமாதல் சிக்கல்தான் .  ஆனால் நவீனத்துவர் அனைவரும் சென்று சேரும் ,கையறு நிலை , சூழ்ந்த அனைத்தாலும் கைவிடப்படுத்தல்  எனும் நிலையை ஜெயகாந்தன் தனது தரிசனத்தால் [ பிரச்சாரத்தாலோ உரத்த குரலாலோ அல்ல ] கடக்கிறார் .ஆம் அந்த கதை சொல்லி , கடலின் ஒரு துளி போல இந்த பாரத நிலத்தில் கலந்து விடுகிறான் .  எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் இக் கதை நமது பண்பாட்டின் சாரமான ஒன்றின் பதாகை .இந்த எல்லையில் அவர் சுரா போன்றோரை விட ஒரு படி மேலானவர் .

ஜெயகாந்தன் நமது வேருக்கு உயிர் நீர் . அவரை உண்டு செரிக்கத்தான் வேண்டுமே அன்றி , சிற்றிதழ் விமர்சன மரபு எனும் பெயரில் ”அந்தப்பக்கம் ”வைத்து கதவை சாத்தி விடக் கூடாது . அப்படியே செய்தாலும்  தீவிர இலக்கியத்தில் அவரது  சரியான இடம் என்ன என நிறுவிய பிறகே ,  அவர் சார்ந்த மாயைகளை உடைத்து ஏறிய வேண்டும் .

http://www.jeyamohan.in/74240#.WkcUaNKWa1s

இதோ சிற்றிதழ் மரபினருக்கு ஜெயமோகன் எழுப்பிய கேள்வி .  இப்படி ஒரு வாசிப்பு அங்கே சிற்றிதழ் மரபில் நிகழ்ந்திருக்கிறதா ?   நாங்கல்லாம் ஜீரியஸ் ரீடராக்கும் என ஜெயகாந்தனுக்கு மணி அடிப்பது ,கநாசு காலம் துவங்கி இன்று வரை இங்கே  நிகழும் மோஸ்தர் . அவர்களில் எவரும்  ஜெயமோகன் தனது இலக்கிய முன்னோடிகள் நூலில் ஜெயகாந்தனின் இடத்தை வகுத்து வைத்ததை போல ஒரு கட்டுரை எழுத வில்லை .

http://www.jeyamohan.in/98561#.WkcrSdKWa1t

அட விமர்சகர்களை விடுங்கள் , இதோ  இது  ஜெயகாந்தன் நாவல் குறித்து ஒரு வாசகியின் கடிதம் . இங்குள்ள  எந்த  விமர்சகரும் இப்படி ஒன்றை எழுதியதில்லை . இப்படி ஒரு பத்து பதிவாவது அங்கே நிகழ்ந்திருக்க வேண்டாமா ?   இந்த செயல்பாடுகள்  நடந்து ,அதன் மறு பகுதியாக அங்கே ஜெயகாந்தனால் உருவான எதிர்மறை அம்சம்  நிறுவப்பட்டு ,அதன் பிறகே ஜெயகாந்தன் ”அந்தப்பக்கம் ”வைத்து கதவு சாத்தப்படுவார் எனில் ,நமது விமர்சன மரபு  சரியாகவும் கராறாகவும் உள்ளது என்று பொருள் .

[அங்கே ஜெயகாந்தன் குறித்து நிகழ்ந்த உரையாடல்  என்ன என்பதறியேன் எனும் என் அறியாமையையும் இங்கே கணக்கில் ஏடுத்தே இப் பதிவை பொருள் கொள்ள வேண்டும் ]

இறுதியாக . எந்த சூழல் எனினும் சரி . அது ”இன்றைய ”சூழல் மட்டுமே .    சூழலுக்கு எதிராக அல்லது மாற்றாக முன்னெடுப்பது எதுவும் ஒரு வியூகம் மட்டுமே .  தீவிர எழுத்தாளன் தனது அந்தரங்கத்தால் ,இத்தகு விஷயங்களுக்கு கட்டுப்பட்டவன் அல்ல .

நான் சுட்டுவது எழுத்தாளன் என்பவன் யார் என்பதை மட்டுமே .

சந்தனக் கட்டையோ , சாளரக் குப்பையோ , எதில்  எரிந்தாலும் தீ தீதான்.

இங்கே  எனது உரையாடலை நிறைவு செய்கிறேன் . நன்றி .    🙂

(Visited 245 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *