அன்பான சீனு, இந்த உரையாடலைத் தொடங்கியது முதலே வேதசகாயகுமாரின் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்’ எனும் நூலே நினைவுக்கு வருகிறது. சண்முகசிவா என் தொடக்கக் கால வாசிப்புக்கு இந்நூலைக் கொடுத்தார். எல்லோரையும்போல நானும் ஜெயகாந்தன் வழி இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தேன் என்பதால் இந்நூல் என்னை மிகவும் புண்படுத்தியது. அப்போது வேதசகாயகுமார் முக்கியமான திறனாய்வாளர் என்றெல்லாம் தெரியாது. தெரிந்திருந்தால் இன்னும் கலக்கம் அடைந்திருக்கக் கூடும். அதில் வேதசகாயகுமாரின் கருத்துகள் ஜெயகாந்தனை நிராகரிப்பதாகவே உள்வாங்கிக்கொண்டேன். விகடனின் எழுதிய அவரது நிலைபாடு குறித்து கு.அழகிரிசாமி உள்ளிட்ட பலரது கருத்துகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. 1992 அவரது முனைவர் பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆய்வேடு 2000இல் தமிழினி பதிப்பில் வந்தது. அப்போது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான பதில் 20 வருடங்களுக்குப் பின் மலேசிய இலக்கியச் சூழலில் இருந்து கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சீனு, இந்த உரையாடலின் மொத்த சிதறல்களையும் இவ்வாறு தொகுக்கிறேன்.
முதலாவது, ஜெயகாந்தன் அன்றி வேறொருவர் விகடன் மூலம் மலேசிய இலக்கியச் சூழலில் ஊடுறுவியிருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே என் பதில். முதல் காரணம் அவரது கதையை வாசித்தவுடன் வெளிப்படையாகத் தெரியும் கருத்துகளே அவரது கதைகள் என நம்பப்பட்டது. மேற்கல்வி கூடங்களில் பாடமாக வைக்கப்பட்ட அவரது கதைகள் மிக மேலோட்டமாகப் புரிந்துகொள்ளப்பட்டு அதில் உள்ள பண்பாட்டு முரண்களே கதையின் மையமாக கவனிக்கப்பட்டது. எனவே அவை முற்போக்குக் கதைகளாயின. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் ஏற்கனவே அதுபோன்ற சிந்தனைக்குப் பழக்கப்பட்ட வாசகர்கள் ஜெயகாந்தனை எளிதாக உள்வாங்கிக்கொண்டார்கள். சீனு, வெளிப்படையாகச் சொல்வதானால் ஆழ்ந்து வாசிக்கப்படாததாலேயே ஜெயகாந்தன் மலேசியாவில் வென்றார். அவர் பேசிய ‘கருத்துகளே’ கதைகளாயின. எந்த எளிய வாசகனும் தான் விரும்பியவாரு ஜெயகாந்தனை தங்களுக்கானவராக உள்ளிளுத்துக்கொண்டனர். சுந்தர ராமசாமியையோ, அசோகமித்திரனையோ அவ்வாறு ‘கருத்தை’ வைத்து அறிந்துகொள்ள முடியாது. எனவே அவர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர். ஜெயமோகன் இன்று விகடனில் எழுதினாலும் இந்த நிலைதான். உள்மடிப்புகள் கொண்ட அவரது கதையை இளம் வாசகன் ஒருவன் வாசித்து அங்கிருந்து எழுந்து வருவான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அது அவரது பிற படைப்புகளுக்குள் நுழைந்து பார்க்க இளம் வாசகனுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பு.
திட்டவட்டமாகவே சொல்கிறேன் சீனு. ஜெயகாந்தன் மூலம் மலேசிய நவீன இலக்கியத்தில் நடந்த மாற்றம் இனி வேறொரு நவீன எழுத்தாளர் மூலம் நடக்காது. ஜெயகாந்தன் வாசகனை நோக்கிச் சென்றார். அவர் நோக்கம் அது. இன்றைய நவீன படைப்பாளிகளை நோக்கி வாசகர்கள்தான் வரவேண்டியுள்ளது. வரலாற்றை இதற்குச் சான்றாகச் சொல்வேன். 70களின் தொடக்கத்தில் ஜெயகாந்தன் மூலம் எழுச்சி பெற்ற மலேசிய நவீன இலக்கியம் 70களின் இறுதியில் மங்கியது. உத்வேகமாக எழுந்த படைப்பாளிகள் சிலர் முடங்கிப்போனார்கள். சிலர் அதிகாரத்திடம் முயங்கிபோனார்கள். 90களுக்குப் பிறகு சுபமங்களா போல ஓர் இதழை உருவாக்கவென அப்போது மலேசியாவில் இருந்த ‘மயில்’ எனும் இதழில் டாக்டர் சண்முகசிவா முயன்றார். வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் போன்றவர்களின் சிறுகதைகளும் அக்கதைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய முறைகளும் சண்முகசிவா முன்னெடுத்த ‘அகம்’ எனும் இயக்கம் மூலம் சாத்தியமானது. சண்முகசிவா நவீன இலக்கியத்துக்கான புதிய வாசிப்பு முறைகளை உருவாக்கிக் கொடுத்ததில் மலேசியாவில் முன்னோடி. அவரில் இருந்து அடுத்த வளர்ச்சி தொடங்குகிறது. அது இன்று வல்லினம் வரை வளர்ந்துள்ளது.
இரண்டாவது, இன்றைய எழுத்தாளர்கள் இயங்க விரும்பும் இலக்கியச் சூழல் குறித்து. நான் லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதை குறித்து பேசவில்லை. நான் சொல்லவந்தது அவர் இலக்கியத் தகுதி பற்றியல்ல. அவர் ‘சிலேட்’ என்ற ஒரு இதழ் நடத்துகிறார். அதை சிற்றிதழாகவே முன்னிறுத்துகிறார். அதில் வரும் படைப்பின் தரம் குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, தமிழ் சிற்றிதழ் சூழலில் ‘சிலேட்’ மூலமாக ஓர் இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். இப்போது அதை மையமாக வைத்து பரிவாதினி எனும் சந்திப்பில் சிற்றிதழ் சூழலில் இயங்கும் வேறு சில எழுத்தாளர்களையும் இணைத்து ஒரு சந்திப்பு நடத்துகிறார். தேவதச்சன், கோணங்கி உள்ளிட்டவர்கள் அதில் பங்கெடுக்கும்போது மெல்ல அதன் நிறம் மாறுகிறது. எல்லாவகையிலும் ஆளுமை கொண்ட படைப்பாளிகளை அங்கு நிறுத்தும் அவர் வாணி ஜெயம் போன்றவர்களையும் மலேசிய இலக்கியம் குறித்து அறிமுகம் செய்ய வைக்கிறார்.
சீனு, நேற்று ஜெயமோகன் எழுதிய கட்டுரையில் /பல்வேறு அதிகார விளையாட்டுக்களுக்கு உடன்பட்டு இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே வெளியே இலக்கியக்காவலர்களாகப் பேசிக்கொண்டும் இருப்பார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவந்து இவர்களின் தரமென்ன என்று இலக்கியவாசகர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும். இவர்கள் தமிழுக்கு இயற்றிய அநீதி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும்படிச் செய்யவேண்டும்/ என ஒரு வரி வந்தது. அவ்வரி ஒருவரின் கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்துவரும் உக்கிரம் கொண்டிருந்தது. தமிழக மேடைகளில் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு இவ்வாறான அபத்தங்கள் நடக்கும்போது எனக்கும் இதே எண்ணம் தோன்றுகிறது. இவ்வாறு செய்பவர்களின் உண்மையான இலக்கிய தரம் என்ன? எதை இவர்கள் இலக்கியமென பேசுகிறார்கள்? மலேசிய இலக்கியமென்றால் குறைந்தபட்ச தகுதி போதும் என்ற நினைப்பா? அவ்வளவு அலட்சியமா ஒரு நாட்டின் இலக்கியத்தின் மேல்? இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம். உண்மையில் எவ்வித இலக்கிய ரசனையும் இல்லாதவர்களைத் தமிழக தீவிர இலக்கிய மேடைகளில் ஏற்றும்போது நான் அவமானத்தால் கூனிக்குறுகுகிறேன். அதை அறிவீனர்கள் பொறாமை எனலாம். கொஞ்சம் கொஞ்சமாக மலேசிய நவீன தமிழ் இலக்கியத்திற்கான இடத்துக்கு நகர்ந்து வரும் ஒருவரால் மட்டுமே அதன் வலியை அறிய முடியும்.
இந்த அவமதிப்பைதான் தமிழகத்தில் உள்ள கல்வி கூடங்களும் வைரமுத்து போன்ற எழுத்தாளர்களும் செய்கின்றனர். அதற்கு இலக்கிய மதிப்பில்லை என நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் மலேசியாவின் நிலை அதுவல்ல. நல்ல சிறுகதைகளையும், விமர்சனங்களையும் எழுதிய ரெ.கார்த்திகேசு வைரமுத்துவே சிறந்த எழுத்தாளர் எனும் நிலைபாட்டுடன் அவர் அமைத்துக்கொடுக்கும் அரங்குகளை அலங்கரித்து அவர் நாவல்களை புகழ்ந்து தள்ளினார். ஒரு பேராசிரியரின், ஐந்து நாவல்கள் எழுதியவரின், விமர்சகாரக் கருதப்படுபவரின் கூற்றை தகர்க்க முதலில் அவரது படைப்பிலக்கியத் தரத்தைக் கேள்வி எழுப்பினோம். அவரது புனைவுகளின் பலவீனத்தை பொதுவில் வைத்து உரையாடினோம். கார்த்திகேசு ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர். அதிகபட்சம் அவர் மு.வ வரிசையில் வரும் இன்னொரு படைப்பாளி என நிறுவ வேண்டி இருந்தது. ஆனால் நன்றாக உபசரித்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மலேசியா வந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவரை சிறந்த இலக்கியவாதியாகக் கூறிவிட்டு விமானம் ஏறிவிட்டார். சிக்கல் இதுதான். ராமகிருஷ்ணன் குரலுக்கு முன் என் குரலின் அதிர்வெல்லாம் அபத்தமாகிவிடும்.
இன்னொரு உதாரணம் சொல்லலாம். 2006இல் மலேசியாவில் படைப்பாளிகள் வைரமுத்துவின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தபோது நவீன கவிதைகள்/ இலக்கியங்கள் குறித்த சரியான அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும் என மனுஷ்ய புத்திரனை அழைத்திருந்தோம். இளம் தலைமுறை மத்தியில் இவர்கள் வரவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மனுஷ்ய புத்திரனை நாடு முழுவதும் அழைத்துச்சென்றோம். அப்போது மலேசியாவில் அரசியல் தலைவர்களைப் புகழ்ந்து பேசி நூல் வெளியிடும் கலாச்சாரம் பிரபலம். ஒரு நூல் வெளியீட்டில் 35000 ரிங்கிட் வரை வசூல் செய்தவர்கள் உண்டு. இதற்கு எதிரான கலகக் குரலாகவே நாங்கள் மாறினோம். படைப்பாளி அரசியல் கட்சி தலைவர்கள் தயவை நாடுவதையும் இலக்கிய மேடைகளை அவர்கள் பிரச்சாரத்துக்காக அமைத்துக்கொடுப்பதையும் இலக்கியம் தரம் குறித்து அறியாத அவர்கள் சொற்களை ஒரு படைப்புக்கான இலக்கிய விமர்சனம்போல உருவகித்து நாளிதழ்களில் செய்தியாக்குவதையும் கடுமையாகவே சாடினோம். இதெல்லாம் மனுஷ்ய புத்திரனின் ஆளுமையில் இருந்து பெற்ற உத்வேகம் என்றால் நம்புவீர்களா? வைரமுத்து கவிப்பேரரசு எனும் பட்டத்தை ஏற்றுக்கொண்டபோது மனுஷ்ய புத்திரன் எழுதிய எதிர்வினை இங்கு பெரும் தாக்கத்தைக் கொண்டு வந்தது என்றால் ஏற்க முடிகிறதா? ஆனால் 12 வருடங்களுக்குப் பின் ஸ்டாலின் தன் நூலை வெளியிடும் பெருமிதமான மனநிலைக்குதான் மனுஷ்ய புத்திரன் வந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய வீழ்ச்சி. உயிர்மை அரங்குகளில் வைரமுத்துவுக்கு வைக்கும் பதாகைகளில் கவிப்பேரரசு என விளிப்பது எவ்வளவு பெரிய இழுக்கு.
சீனு, தமிழகம் போல இந்த மாற்றத்தையெல்லாம் ஒப்பிட்டுப்பார்க்கும் இலக்கியவாதிகள் இங்கு இல்லை. அவர்கள் இன்னமும் உயிர்மை போன்ற இதழ்கள் வழியாகத்தான் நவீன இலக்கிய உலகைப் பார்க்கின்றனர். ஆனால் இதை ஒரு முன்னெடுப்பாக செய்த நானும் எனது நண்பர்களும்தான் இன்று உயிர்மை இலக்கியத்துக்கான வழி இல்லை எனக் கூறி வருகிறோம்.
மூன்றாவது, இந்த நிலைபாட்டை அந்த நிலம்தான் தீர்வு செய்ய வேண்டும். உதாரணமாக ஒன்று சொல்கிறேன். சீ.முத்துசாமியின் ‘வனத்தின் குரல்’ எனும் சிறுகதை ‘தென்றல்’ எனும் ஜனரஞ்சகப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பிரசுரமாகி ‘புரியவில்லை’ எனப் புறக்கணிக்கப்பட்டது. நாங்கள் காதல் தொடங்கியபோது அதை மீள் பிரசுரம் செய்து விரிவான வாசிப்புக்கு எடுத்துச் சென்றோம். பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாகும் நாளிதழ்களில் வந்தவைதான் சீ.முத்துசாமி, சண்முக சிவா போன்றோரின் சிறுகதைகள். பத்திரிகையை நடத்துபவர்களே இயக்கங்களையும் முன்னெடுத்ததால் அவை எவ்வித உரையாடலும் இல்லாமல் போனது. காதல், வல்லினம் என வந்தப்பின் அவற்றை மீள் வாசிப்பு செய்து முன்னிலைப்படுத்துகிறோம். மொத்தக் கதைகளில் எது உருப்படியானது என விமர்சனம் வைத்து அந்தக் கதைகளை மீண்டும் பதிவேற்றுகிறோம். அதை மொழிப்பெயர்க்கிறோம். இனி அடுத்தத் தலைமுறையில் ஒரு வாசகன் வெகு எளிதில் தரமானவற்றை கண்டடைவான். கண்டடைவதற்கான பாதைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
நான்காவது, வெகுசன இதழ்களையெல்லாம் மீறி இன்று முகநூல் போன்ற ஊடகங்கள் மற்றுமொரு ஆபத்தை நிகழ்த்தி வருகின்றன. ஓர் அனுபவம் சொல்கிறேன். மொழி மொண்ணையாகிவிட்டது என்றும் வாசிப்பு இல்லையென்றால் படைப்பில் தரம் குறையும் என்று ஒரு பெண் எழுத்தாளரை கடுமையாகவே விமர்சனம் செய்து வாசிக்கச் சொன்னேன். அவர் வல்லினத்தை விட்டு நீங்குகிறார். ஒரு வளைத்தளம் தொடங்குகிறார். வரலாறு என அபத்தங்களை எழுதுகிறார். மொழி அவரிடம் முறித்துக்கொண்டபோது பெண்ணியவாதியாக பரிமாணம் எடுக்கிறார். உடனே அவருக்கு உலகம் முழுக்கவும் இருக்கும் பெண்ணியவாதிகள் கைக்கொடுக்கின்றனர். தமிழக ஊடகத்தில் பணியாற்றும் ஆண்கள் இளம் பெண் படைப்பாளிக்கு ஆதரவு தருகிறோம் என நட்பு கரம் நீட்டுகின்றனர். அவரைப் பிரபலப்படுத்துகிறார்கள். இப்போது அவர் பிரபலமான பெண்ணியவாதியாகவும் கவிஞராகவும் உலகம் முழுக்க உலா வருவதாகக் கேள்வி. போகும் இடமெல்லாம் மலேசிய நாட்டில் பெண்களின் நிலை பற்றி பேசும் வீடியோக்கள் யார் மூலமாவது வந்து அன்றைய பொழுதை நகைச்சுவையாக்குகிறது. ஒரு படைப்பாளி சிரமப்பட்டு அடைய வேண்டிய இடத்தை எந்த உழைப்பும் இன்றி, சிந்தனை இன்றி, எளிய மொழியையும் அதீதமான உடல் பாவனையும் வைத்துக்கொண்டு எவ்வளவு எளிதாக அவரால் அடைய முடிந்துள்ளது. நிச்சயம் அந்தத் திறமையை நான் மதிக்கிறேன். ஆனால் இதுபோன்றவர்களுக்கு ஶ்ரீலங்கா, தமிழகம் போன்ற நாடுகளின் மேடைகளில் கிடைக்கும் வாய்ப்பு மலேசியாவில் பெரும் இலக்கியவாதிக்கான அடையாளமாக மாறிவிடுவதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆம் சீனு, ஜெயகாந்தன் காலம் இல்லை நாம் வாழும் காலம். எந்த இதழின் தேவையும் இல்லாமல் ஒருவரால் தன் பிம்பத்தைக் கட்டி எழுப்ப முடியும். நீங்கள் இதை நல்ல வாசகர்கள் அறிவார்கள் என்பீர்கள். அந்த உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால், மலேசியாவில் வாழும் எனக்கு இது ஆபத்தாகப் படுகிறது. இந்த ஆபத்து முற்றும்போது அவர் எழுத்திய அத்தனைப்படைப்பிலும் உள்ள போலிதனத்தை, வரலாற்றுப்பிழையை, திருட்டுப்பிரதியை பொதுவில் வைத்து கிழித்தெறிவதை தவிர வேறு வழியில்லை. என்னளவில் அது நான் மலேசிய இலக்கியத்துக்குச் செய்யும் நன்மை.
இறுதியாக,
சீனு, வைரமுத்துவுக்கு ஞானபீடம் கிடைப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கறுப்பு நிற உடையுடன் கை கால்களில் பெரிய சங்கிலிகளை அணிந்துகொண்டு சதா சர்வகாலமும் தான் ரௌடி என்பதை எப்படி உலகுக்குச் சொல்வதின் பின்னால் பலருக்குக் கோழைத்தனம் உள்ளதோ அப்படித்தான் வைரமுத்து தன்னால் சரியான இலக்கிய உலகத்துக்குள் நுழைய முடியாது என்பதை அறிவதன் அச்ச உணர்வின் வெளிபாடு அது. மொழி இலக்கியத்தின் மூலப்பொருளே தவிர மூலப்பொருள் எல்லாம் சிறந்த உணவாவதில்லை என்பதையும் அதை அள்ளி தின்ன முடியாது என்பதையும் அவர் நன்கு அறிவார். இப்படி பயந்து பயந்து எழுத்தாளனாக இருக்க உடை, பேச்சு, பாவனை எல்லாவற்றையும் பிரக்ஞை பூர்வமாக உருவகித்துக்கொள்ளும் ஒரு பரிதாபத்துக்குறிய ஜந்து அவர். வேஷம் களைந்துவிடும் அச்சம் அதிகரிக்கும்போது விருதுகளால் தன்னை மறைத்துக்கொள்ள நினைப்பது இயல்பு. மனிதனின் ஆதி உணர்வில் பயமும் ஒன்றல்லவா. பயம் எதையும் செய்ய வைக்கும். ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் ரஸ்கால்நிகாப் கிளவியின் தங்கையைக் கொல்வதுபோல. அதற்கெல்லாம் வரலாற்றில் இடம் உண்டா என்ன?