தோழர் அன்புவேந்தனைச் சந்தித்தவுடன் மதுரைக்கு வந்த உற்சாகம் பிறந்துவிட்டது. கடந்த முறை தமிழகப் பயணத்தில் யானை மலையில் உள்ள சமண படுகைகள் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளுக்கு என்னையும் தயாஜியையும் அழைத்துச் சென்றார். பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பான தொடர்ந்த ஆய்வில் இருப்பவர். மீனாட்சியம்மன் ஆலயத்தில் அவரைச் சந்தித்தோம். விஜயலட்சுமியை மீனாட்சி தரிசனத்துக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் ‘வல்லினம் 100’ கொடுக்க வேண்டும் என விரும்பினேன். கொடுத்தேன். அவரது அப்போதைய ஆய்வுத்திட்டங்கள் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார். கடும் உழைப்பை கோரும் பணிகள். கோணங்கி எங்களுக்காகப் பசியுடன் காத்துக்கொண்டிருப்பார் என்பதால் சீக்கிரமாகவே புறப்பட்டோம்.
கோணங்கி வழக்கறிஞர் வேல்ராஜ் வீட்டில் இருந்தார். அவர் கோணங்கியுடன் இணைந்து கல்குதிரையில் பயணிப்பவர். கோணங்கியிடம் எப்போதும் ஒரு தாய்மை உணர்வை கண்டதுண்டு. பெரிய நிபந்தனைகள் இல்லாமல் அன்பை மட்டும் கொடுப்பவராக இருந்தார். பழகியவரையில் யார் குறித்தும் தனிப்பட்ட புகார்கள் இல்லாதவராக இருந்தார். அவரது எதிர்வினைகள் இலக்கியத்தில் தோன்றி இலக்கியத்தில் முடிந்தன. எதிர்வினைகளையும் ஓர் அறிவிப்புபோல சொல்லப்பழகியிருந்தார். அதில் வெறுப்பு இருக்காது. தன்னுடன் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போதும் உறுதி செய்பவராக இருந்தார். தன்னைப்பற்றி எதுவும் பேசாமல் தன்னுடன் இருக்கும் சக படைப்பாளிகளை, கலைஞர்களை வல்லினம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் அக்கறை காட்டுபவர் கோணங்கி. அப்படித்தான் எனக்கு மணிவண்ணனை அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்தமுறை கோணங்கி மலேசியா வந்தபோது கல்குதிரை அட்டை வடிவமைப்பு கவர்ந்திருந்தது. அதன்
வடிவமைப்பு குறித்தே அதிகம் பேசிக்கொண்டிருந்தோம். எனவே அதன் வடிவமைப்பாளர் ஓவியர் மணிவண்ணனையும் கோணங்கி உடன் அழைத்து வந்திருந்தார். ஓவியர் மணிவண்ணன் ‘இந்து’ நாளிதழில் தலைமை வடிவமைப்பாளராக 18 ஆண்டுகள் பணியாற்றியவர். அதிக சம்பாத்தியத்தை விட ஓவியனாக/ கலைஞனாக இருக்க அதற்கேற்ற வெளி அவசியமென வேலையை விட்டு சுதந்திரமாக ஓவியம், வடிவமைப்பு என இயங்கிவருகிறார்.
கோணங்கியின் அக்கா எங்களுக்காக ஆட்டுக்கறி குழம்பு வைத்திருந்தார். விஜி தான் ஆடெல்லாம் சாப்பிடுவதில்லை என்றும் தனக்குப் பசியும் இல்லை என்றும் உணவை மறுத்துவிட்டார். கோணங்கி ஒரே ஒரு துண்டு ஆட்டிறைச்சியை எடுத்து வாயில் வைத்துப்பார்க்கச் சொன்னார். கோணங்கியின் அன்பை மீறுவது சிரமம். வேறு வழியில்லாம் சுவைத்தவுடன் விஜயலட்சுமியின் கண்களில் மின்னல். இலையின் முன் அமர்ந்தவர் சில ரவுண்டுகள் போனார். நானும் தயாஜியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி எங்களுக்கான பங்கை முன்னமே போட்டு இலையை நிரப்பிக்கொண்டோம். வாயில் வைத்தவுடன் உருகி ஒழுகும்படி மென்மையான இறைச்சி. அபோதம் நிரம்பிய ஓர் இள ஆடு கத்தாம, கூச்சல் போடாமல், குதித்து ஓடாமல் எங்களை அவ்வீட்டில் அனுக்கமாக்கிவிட்டு அடைக்கலம் புகுந்தது.
உணவு முடிந்ததும் விஜியும் தயாவும் உறங்கப்போய்விட்டனர். நான் ஓவியர் மணிவண்ணனுடன் பேசத்தொடங்கினேன். சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற அவர் தன் மடிக்கணினியில் சேகரித்து வைத்திருந்த வடிவமைப்புகளும் ஓவியங்களும் களைப்பை மீறி ஆர்வத்தைக் கிளறின. அவர் வடிவமைத்த பல நூல்களை நான் வாசித்துள்ளேன். அதன் முகப்பின் கலையம்சத்தை எண்ணி வியந்துள்ளேன். “வடிவமைப்பு என்பதை நான் ஒரு நூலின் முழுமைப்படுத்தலுக்கான மற்றுமொரு கலையாகவே பார்க்கிறேன். எழுத்தாளரின் புனைவை உள்வாங்கி அதன் பாதிப்பின் இன்னொரு பகுதியாக நூலில் அட்டை வடிவமைப்பு வரவேண்டும் என்பது என் விருப்பம்” என்றார். அவர் திறமையை எப்படியும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அப்போதே முடிவெடுத்துக்கொண்டேன்.
படுக்கும் முன் கோணங்கி கூறினார். “ஆட்டிறைச்சி சாப்பிட மாட்டேன்னு சொன்னப்பிள்ள எப்படி சாப்பிட்டா பார்த்தியா… அது அவ சாப்பிடல. மூதாதையர்களோட நாக்கு சாப்பிட்டது.” என்றார். ஆம்! நான் கோணங்கியுடன்தான் இருக்கிறேன் என்பதை சந்தேகம் இல்லாமல் உணர்ந்தேன்.
தொடரும்