அன்பு அண்ணா ,
உங்கள் எதிர்வினையை தொடர்ந்து மேலும் என் சிந்தனையை தொகுத்துக்கொள்ள முயல்கிறேன் .
முதல் அலகாக நீங்கள் குறிப்பிட்ட தமிழ் நிலத்தின் சூழலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் . இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாதோருக்காக வைரமுத்து அவர்கள் உருவாக்கி அளிக்கும் மேடைகள், அவர் தனக்கான ஆதரவு வட்டத்தைத் தமிழ் புழங்கும் எல்லா நிலங்களிலும் உருவாக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றே. தீவிர இலக்கியத்துடன் எவ்வகையிலும் சம்பத்தம் அற்ற வைரமுத்து ஜெயகாந்தன் எனும் ஆசானுக்கு அளிக்கப்பட ஞான பீடம் விருதை குறி வைத்து கணக்குகள் போட்டுக்கொண்டிருப்பது தமிழ் நிலம் அறிந்த ஒன்றே. அகிலனுக்கு அளிக்கப்பட்டு எய்திய இழிவை,ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டத்தின் வழியே சமன் செய்து கொண்டது அவ் விருது. இதோ மீண்டும் அவ்விருதின் பாதையில் மற்றொரு புதைகுழி . இதில் வைரமுத்து போன்ற ஒருவரின் கயமை என்ன எனில் அவர் ”கொற்றவை” நாவல் வரை வாசித்திருப்பவர். இங்கே தீவிர தளத்தில் நிகழும் அனைத்தும் [ குழிபறித்தல் உட்பட] அறிந்தவர். இவருக்கு அளிக்கப்படும் ஆதரவு எந்த நிலத்தில்,என்ன வகையில் நடந்தாலும் அது தீவிர இலக்கியத்துக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த அத்தனை முன்னோடிகளுக்கும் அவமத்திக்கும் செயலே ஆகும் . இந்த நிகழ்வுக்கு எதிராக இன்று தமிழ் நிலத்தில் இருந்து எழும் ஒரே குரல் ஜெயமோகன் அவர்களுடையது மட்டுமே .
ராஜமார்த்தாண்டன் எழுதிய [ரசனை மதிப்பீட்டு அடிப்படையில் உருவான] புதுக்கவிதை வரலாறு [தமிழினி வெளியீடு] மிக முக்கியமான நூல். அதை தெடர்ந்து தனது மதிப்பீட்டு விமர்சன அடிப்படையில் புதுமைப்பித்தன் துவங்கி மனுஷ்ய புத்திரன் வரை கிட்ட தட்ட நூறு கவிஞர்களின் சிறந்த கவிதைகளை, கொங்குதேர் வாழ்க்கை எனும் தலைப்பில் ஒரு தொகை நூலாக கொண்டுவந்தார். இது தமிழின் நவீன கவிதை போக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தொகுதி அல்ல. எது கவிதையோ எது தமிழின் சொத்தோ அது மட்டுமே கொண்ட தொகுதி . [இரண்டுமே தற்போது பதிப்பில் இல்லை .இனி பதிப்பிக்கப்படும் அறிகுறியும் தெரியவில்லை . இந்த நூல்கள் வைத்திருப்போர் புதையலின் சொந்தக்காரர்கள் ].
இந்த தொகுதியில் லட்சுமி மணிவண்ணன் கிடையாது. பிரம்மராஜன் கிடையாது . ஜெயமோகன் தனது விமர்சகனின் பரிந்துரை பட்டியலில் சிறந்த கவிதைகள் பட்டியல் அளித்துள்ளார் அதிலும் இருவரும் கிடையாது . சுகுமாரன் அவர்களை மதிப்பீட்டு ரசனை பட்டியல் இட சொன்னால் அதிலும் இந்த இருவரும் வர மாட்டார்கள் . இன்றைய சபரிநாதன் அவர்களை ஒரு பட்டியல் இட சொன்னால் அதிலும் இவர்கள் இடம்பெற மாட்டார்கள் . கவிதை சார்ந்த எந்த சிறந்த உரையாடலிலும் இந்த இருவரின் ஒரு வரி கூட இடம்பெற்றிருக்காது இது திட்டமிட்ட இலக்கிய சதியா என்ன ? அவரது இடம் அதுதான். அங்கே நிகழும் அனைத்து பிழைகளும் , தவறுகளும் அந்த ”இன்மை ” இலிருந்து துவங்குவதே.
அடுத்து உயிர்மை. உயிர்மை இதழின் முதல் ஆண்டு இதழ்களையும் , அங்கிருந்து இந்த ஆண்டின் இதழ்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உயிர்மை சென்றுகொண்டு இருக்கும் பாதையின் இறங்குமுகம் விளங்கும். தீவிர இலக்கியப் புனைவுகளுக்கும், வெத்துவேட்டு புனைவுகளுக்குமான இடைவெளியை அழிக்க முயலும் பல அலகுகளில் ஒன்றே உயிர்மையில் செயல்பாடும் . [ஜெயமோகன் தளத்தில் சுஜாதா விருதுகள் சர்ச்சையில் அதை காணலாம் ] குப்பை நாவல் பலவற்றுக்கு அது அளித்த விளம்பர முக்கியத்துவத்தை , அதில் வெளியான கவுதம சன்னாவின் குறத்தியாறு எனும் நல்ல நாவலை முன்னெடுக்க அதில் பத்தில் ஒரு பங்கு கூட காட்டாததில் இருந்து அங்கே நிகழ்வது என்ன என அறிந்து கொள்ளலாம். அடுத்த வருடம் ராஜேஷ்குமாரின் கதைகள் முழு தொகுதியை உயிர்மை வெளியிட்டால் இங்கிருக்கும் எவரும் ஆச்சர்யம் அடைய மாட்டார்கள் .
இவற்றைக் கடந்து இங்குள்ள தீவிர இலக்கிய வாசகனின் இடம் என்ன ? உதாரணமாக ஈழப்போருக்கு பின்னான நிலை என எடுத்துக் கொள்வோம் . ஷோபா ஷக்தி இன் பாக்ஸ் கதை புத்தகம் , சயந்தனின் ஆதிரை , இரண்டு நாவல்களும் போருக்கு பின்னான சூழல் எனும் களத்தில் நிகழ்ப்பாவை . ஷோபா அளவு சயந்தன் புகழ் பெற்றவர் அல்ல. ஆனால் இங்குள்ள வாசகன் ஆதிரை நாவலே கலை வெற்றியை அடைந்த படைப்பு என அறிவான்.
தன்னியல்பாக அவனுள் செயல்படும் இந்த விமர்சன அளவுகோலை,வெங்கட் சாமிநாதன் வரை நான்கு தலைமுறைகளாக விமர்சகர்கள் வளர்த்து எடுத்திருக்கிறார்கள். வாசக மனதில் பதியன் இட்டிருக்கிறார்கள் .
அதனால்தான் நாஞ்சில் சாகித்ய அகாதமி விருது பெறும்போது அவரை தலைமேல் வைத்து கொண்டாடினார்கள். செல்வராஜ் தோல் நாவலுக்காக சாகித்யம் பெறும்போது அதை மௌனமாக புறக்கணித்தார்கள். அதாவது நான் அரசன் ஆனால் என் நிலத்தில் ஒரு சிறு புழுவின் அங்கீகாரமும் எனக்கில்லை என்றால் அது எத்தகையதொரு அவமதிப்பு. அதை தவறாமல் தகுதி இன்றி விருது பெரும் அனைவருக்கும் இங்குள்ள வாசகர்கள் அளித்தார்கள் .
ஆம்! இங்குள்ள தீவிர வாசகன் தனது அந்தரங்கத்தால் அறிவான் எது தீ. எது சருகு என . இந்த நிலை இன்று மலேசிய நிலத்தில் இல்லை என உங்கள் எதிர்வினை வழியே அறிகிறேன் .
இனி மலேசிய நிலத்துக்கு வருகிறேன். ஆம்! விமர்சன செயல்பாடு எனும் எல்லையில் உங்கள் நிலைப்பாடு சரி என்றே படுகிறது . விமர்சன மதிப்பீட்டு பணியை மு. வ மற்றும் ஜெயகாந்தன் இவர்களில் இருந்தே துவங்க வேண்டும் .
மு .வ முதன்மையாக, அர்ப்பணிப்பு கொண்ட கல்வியாளர் . அவரது அர்ப்பணிப்பு குணத்தில் இருந்தே அவர் மேல் அதிதீவிர காதல் கொண்ட பல மாணவர்கள் உருவாகி வந்தார்கள் . மு.வ எழுத வந்த காலம்,இங்கே சுதந்திர கனவுகள் அலையடித்துக் கொண்டிருந்த காலம். மு.வ யாரை அடி ஒற்றி தனது புனைவுகளை உருவாக்கினார் என்றால் வீ .ச .காண்டேகர் எனும் மராத்திய எழுத்தாளரை . காண்டேகரின் பல நாவல்கள் அப்போதே தமிழில் வந்து பெரும் வரவேற்பை பெற்றவை. சுதந்திர கனவுகள் ஆவியான காலத்தில் காண்டேகர் காலாவதி ஆனார்.அவரோடு இங்கே மு.வ வும் காலாவதி ஆகிப்போனார். ஒரு தலைமுறையை வாசிக்கவைத்த பலரில் அவரும் ஒருவர். ஆனால் தீவிர இலக்கியம் எனும் கலை வடிவில் அன்றும் இன்றும் அவருக்கு எந்த இடமும் இல்லை .
ஜெயகாந்தன் முதன்மையாக இலக்கியவாதி. அவரது முன்னோடி கம்பனும் ,இளங்கோவும் ,வள்ளுவனும் ,பாரதியும். இந்த நால்வரும் தமிழ்ப்பண்பாட்டின் ஆணி வேர். இங்கிருந்து கிளைத்து வந்தவரே ஜெயகாந்தன். மு.வ வுக்கும் ஜெயகாந்தனுக்குமான வேறுபாடு என்ன ? கதைக்கும் கலைக்குமான வேறுபாடுதான் அது .
முன்னவர் எதை எழுதி இருக்கிறாரோ அதை வாசித்துக்கொண்டால் மட்டும் போதும்,வாசக பங்கேற்பு என அங்கே எந்த தேவையும் இல்லை.அனைத்தையும் அவரே சொல்லி விடுவார் .
//இலக்கியம் என்பது ஒருவர் தான் நினைப்பதையெல்லாம் சீரான மொழியில் எழுதி வைப்பது அல்ல. அது தன்னுள் இறங்கிச்செல்லும் பயணம். அதன் வழியாக தான் வாழும் சமூக ஆழ்மனத்துக்குள் ஊடுருவிச்செல்லல். மொழியின் நேரடித்தொடர்புறுத்தலை அதன் கற்பனைச் சாத்தியங்களைக்கொண்டு மீறிச்செல்லுதல்.
வாசகனுக்கு விஷயங்களை தெரியப்படுத்துதல் அல்ல இலக்கியத்தின் வழி. வாசகன் கற்பனையை தூண்டிவிடுதல். வாசகன் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நிகரான ஒரு கற்பனைவாழ்க்கையை தன் சொற்கள் வழியாக வாழச்செய்தல். அதன் வழியாக அவன் தன் சிந்தனைகளை தானே கண்டடையும்படிச் செய்தல். இலக்கியம் என்பது மொழி வழியாக சமகாலச் சிந்தனைகளை மீறிச்செல்லுதல். இலக்கியம் என்பது மொழிக்குள் உள்ள நுண்மொழி ஒன்றில் நிகழும் உரையாடல்//
வாசகர் ஒருவரின் கேள்விக்கு ஜெயமோகனின் பதிலில் ஒரு பகுதி இது. முற்றிலும் ஜெயகாந்தனுக்கு பொருந்தும் சொற்கள் இவை என்பதால் இதை மேற்கொள் காட்டினேன் .
திராவிடம் எனும் கருத்தாக்கத்தில் இருந்து ஒரே ஒரு [நாவலை விடுவோம்] நல்ல நான்கு வரி கவிதை கூட வந்ததில்லை. அங்கிருந்தது வெகுஜனம் நோக்கிய வெற்று கூச்சல் . அந்தக் கூச்சலை கைவிட்டு ஜெயகாந்தனின் சங்கநாதம் பால் கவர்ந்து இழுக்கப்பட்டார்கள் எனில் அது எத்தகையதொரு மகிழ்ச்சிகரமான பண்பு மாற்றம் ?
ஆம் இன்றைய மலேசிய வாசக சூழலில் தனித்து நின்று ஒலிக்கும் கறாரான விமர்சன மரபே தேவை என்று படுகிறது . [மு.வ இங்கே கோலோச்சி கொண்டிருந்த சூழலில் குறைந்தது ஐந்து சிற்றிதழ்கள் வழியே ,வெவ்வேறு ஆளுமைகள் தீவிர விமர்சன உரையாடலை துவங்கி முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்].
ஆனால் கதைகள் என வரும்போது சற்றே மாறுபாடு கொள்கிறேன். உதாரணமாக சூர்யராதனா வகை கதைகள் வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்றினில் , அவ்வகை கதைகள் நடுவே ஒரே ஒரு தீவிர இலக்கிய கதை பிரசுரம் ஆகும் எனில், அதன் தாக்கம் வலுவாக இருக்கும் என்றே எண்ணுகிறேன் .
ஒரு கலைப்படைப்பு தன்னளவில் ஒரு விமர்சனமும் தானே. பிரபல தளத்தில் ஒரு தீவிர விமர்சனத்தை வைப்பது விமர்சன சூழலுக்கு வலு சேர்ப்பது தானே .