சீனுவின் கடிதம் சிற்றிதழ் சூழல் குறித்து மேலும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கத் தூண்டியது. புறத்தோற்றம், வணிகமற்ற போக்கு, குரல் நசுக்கப்பட்டவர்களுக்கான தளம் என்கிற மாதிரியான வரையறைகள் சில முன்வைக்கப்படுவதைப் போலவே சிற்றிதழை மற்றுமொரு ஊடகமாகவும் (another medium) அல்லது குறிப்பிடத்தக்க ஒரு குறுங்குழுவுக்கானதாகவும் பார்ப்பதும் மிகக் குறுகலான பார்வை என்றே நினைக்கிறேன். அப்படியான வகைபாட்டு சிந்தனையினூடேதான் சீனுவின் கடிதத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
சிற்றிதழ் என்பது another medium என்பதாக இல்லாமல் alternative medium என்பதாக இயங்கி வந்துள்ளதை எல்லா மொழி இலக்கிய செயல்பாடுகளிலும் காண முடியும். திராவிட கழகத்தின் எழுச்சியால் தங்களது குரல் நசுக்கப்பட்டதாக உணர்ந்த பார்ப்பனர்களிடம் ‘எழுத்து’ இதழ் தோன்றியது போலவே, சாதி மறுப்பை அரசியலாக கொண்ட அயோத்திதாச பண்டிதர் நடத்திய ‘ஒரு பைசா தமிழன்’ இதழையும் உதாரணமாக சொல்லலாம்.
இலக்கியச் சூழலில் சிற்றிதழ் எதற்கெல்லாம் மாற்று ஊடகமாக (alternative medium) இருந்துள்ளது என்று பார்த்தால் மூன்று விடயங்களோடு அவை ஒத்துப்போகின்றன.
(1) புதிய எழுத்தாளருக்கான எழுதும் தளம்;
(2) பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள உதவும் தளம்;
(3) பொதுபுத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட ஒன்றை மீறி பார்ப்பது அல்லது முற்றாக மறுக்கும் தளம்
இதில் சீனு கோடிகாட்டியிருக்கும் ஜெயகாந்தன் எனும் எழுத்தாளர் பொதுபுத்தியில் இருப்பதை மீறி பார்க்கும், மறுக்கும் ஓர் எழுத்தாளுமை. எதிலும் எழுதலாம் என்கிற மாதிரியான ஏற்புத் தன்மை அவருக்கு மட்டுமே அல்லது தமிழக சூழலுக்கு மட்டுமே பொருந்தும் என்றே தோன்றுகிறது. காரணம்,
(1) ஜெயகாந்தனுக்கு முன்பே ஓர் சிற்றிதழ் மரபு உருவாகி காத்திரமான விமர்சனங்கள்வழி எது இலக்கியம் எது இலக்கியம் இல்லை எனும் போக்கை வலுவாக நிலைநிறுத்திவிட்டது;
(2) ஜெயகாந்தன் எதிலும் சரிந்துவிடா நிலைபாடு கொண்ட மிகப்பெரிய ஆளுமை எனும் பிம்பம் பொதுவில் அகல பதிந்துவிட்டது;
(3) ஜெயகாந்தனின் சற்றே பிரச்சார பாணியிலான இலக்கியம் பேசும் போக்கு.
ஜெயகாந்தன் மட்டுமல்ல இன்றைய சூழலில் ஜெயமோகன் அப்படியான முடிவுக்கு வந்தாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அதை ஒட்டுமொத்த இலக்கிய சூழலுக்கும் பரிந்துரைப்பது ஏற்புக்குறியதாகாது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்.
இங்கு வெகுஜன இதழ்களுக்கே விற்பனை இல்லாத சூழலில் யார் வேண்டுமானாலும் எழுதலாம்; பரிசோதனை முயற்சி எனும் பெயரில் அதிர்ச்சி மதிப்பீடுகளை எழுதித்தள்ளினாலும் பிரசுரிக்கத் தயாராக இருக்கும் இவ்விரு நாட்டு இலக்கியச் சூழலில் மிக அழுத்தமாக தீவிர இலக்கியத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
கூடவே, சிற்றிதழ் என்பது மாற்று ஊடகமாக மட்டும் இல்லாமல் ஓர் இயக்கமாகவும் இருந்து செயல்பட வேண்டிய தேவை இன்றும் இங்கு அவசியமாகிறது. [சிற்றிதழ் எனும் வடிவம் உருவானது தொடங்கியே அதை மாற்று ஊடகமாக மட்டும் பார்ப்பதும்கூட ஒருவித மாயையான பிம்பம்தான் என்றே சொல்லப்பட்டு வந்துள்ளது.]
அடுத்து தீவிர இலக்கியத்தை ஒரு குறுங்குழுவுக்கானதாக பார்க்கும் போக்கு சிற்றிதழின் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு மற்றும் விற்பனை ஆகிய அம்சங்களின் நீட்சியாகவும் பொருத்திப் பார்க்கிறேன். சிற்றிதழை முன்னெடுப்பவர்கள் யார் தமது வாசகர்கள் என்பதை மனதில் இருத்தி மட்டும் அச்சிடுவதில்லை. இதன் பின்புலத்தில் அச்சு செலவு, அனுப்பும் செலவு என பொருளாதார நெடுக்கடிகள் இருப்பதை அறிகிறோம். சில சிற்றிதழ்கள் கையெழுத்துப் பிரதிகளாகவே வலம் வந்திருப்பது இவ்விடம் நினைவுகூரத் தக்கது. இணைய வாசிப்பு வந்துவிட்டபின் தீவிர இலக்கியம் குறுங்குழுவுடன் சிக்கி சுருங்கிவிடும், வெகுமக்கள் பார்வைக்கு போய்ச் சேராது என்றெல்லாம் வருந்த வேண்டாம் என்றே தோன்றுகிறது.
நிதர்சனத்தில் மலேசிய சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தீவிர இலக்கியத்தை முன்னெடுப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது நவீன் குறிப்பிடுவதுபோல ‘அதுவும் இதுவும் வேறு’ எனக் கறாராக சொல்லிக்கொண்டே வெகுமக்களிடம் எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று பதிய வைப்பதுதான். தொடர்ந்து இந்நாட்டு இலக்கிய ஆளுமைகளை அவர்தம் படைப்புகளை முன்னெடுப்பது, புதியவர்களை அடையாளம் காண்பது, தீவிர இலக்கிய விமர்சனத்தை முன்வைப்பது போன்ற செயல்பாடுகளுடன் தொய்வின்றி வெகுமக்களை அணுகுவதும் அவர்களுடன் உரையாடலை நீட்டிப்பதும் அவசியமானதாக இருக்கிறது.
விஜயலட்சுமி