தீவிர (வணிக) இலக்கியம்

imagesஅன்பான சீனு. மலேசிய இலக்கிய வரலாற்றை பலரும் திணற திணற மேடைகளில் பேசுவதை நான் கேட்டுள்ளேன். வருடங்களையும் சம்பவங்களையும் சரியாக ஒப்பிப்பதன் மூலம் தத்தம் ஞாபக சக்தியின் பளபளப்பைப் பொதுவில் காட்டி கண்ணைக் கூசச்செய்யும் திறன் வாய்ந்த நிபுணர்கள் எங்கும் உள்ளதுபோல மலேசியாவிலும் உண்டு. இப்படி ஒப்புவிக்கப்படும் இலக்கிய வரலாறுகள் பெரும் நிகழ்வுகளாகவோ சூழலை மாற்றியமைத்ததாகவோ சலனத்தை ஏற்படுத்தியதாகவோ தரவுகளின் பட்டியலாகவோ மட்டுமே இருந்துவிடுகிறது. வரலாற்றில் மாற்றங்களை நிகழ்த்தும் தனி மனிதர்களின் அந்தரங்க மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போதே மொத்த வரலாற்றின் வரைபடம் ஓரளவு பூர்த்தியாகிறது என்று நினைக்கிறேன். இதை வாய்மொழி வரலாறு மூலமே தொகுப்பது சாத்தியம். அவ்வாறான முயற்சியில் இறங்கியபோதுதான் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நவீன இலக்கியத்தில் இயங்கிய பலருக்கும் ஜெயகாந்தனின் தாக்கம் இருந்தது புரியவந்தது. அவர் வழியே அவர்கள் இலக்கியத்தின் காத்திரமான ஒரு பகுதியை அடைந்தனர். ஆனால் அந்தத் தாக்கம் ஜனரஞ்சக இதழ்கள் வழி கிடைக்கப்பெற்ற நகைமுரணே மலேசிய இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்ள சரியான பாதை என நினைக்கிறேன்.

மலேசிய இலக்கியச் சூழலில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்திய தமிழக எழுத்தாளர்களாக இருவரைச் சொல்லலாம். முதலாமவர் மு.வரதராசன். இரண்டாமவர் ஜெயகாந்தன். அதற்கு முன் வாசிக்கப்பட்டாலும் மு.வ மலாயாப்பல்கலைக்கழத்தில் பணியாற்ற வந்த இரா.தண்டாயுதம் வழி கல்விக்கூடங்கள் தோறும் தீவிரமாகக் கொண்டுச்செல்லப்பட்டார். அதன் விளைவை இன்றும் கல்விக்கூடங்களில் காண முடியும். ஆனந்த விகடன், குமுதம் சிறுகதைகள் வழி ஜெயகாந்தன் தீவிர இலக்கியப் பிரதிநிதியாக மாறினார். அவர் எழுத்துகள் மூலம் தாக்கம் பெற்றவர்களே மலேசிய நவீன இலக்கியத்தில் படிப்படியாக மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர். இன்று மலேசியாவில் இலக்கியம் என இயங்கிக்கொண்டிருப்பவர்கள் இந்த இரு பள்ளிகளின் தொடர்ச்சியே.

மலேசியா போன்ற நாட்டில் கூலித்தொழிலாளர்களாக நசுக்கப்பட்ட ஒரு தலைமுறைக்கு லட்சியவாதத்தின் குரல் அவசியமாக இருந்தது. எனவே ஜெயகாந்தனின் குரல் இங்கு வென்றது. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன் மலேசியாவில் உரத்து ஒலித்த திராவிட இலக்கியங்களை வாசித்தவர்களுக்கு ஜெயகாந்தனின் குரலை நெருங்கிச்செல்ல தடையிருக்கவில்லை. இப்படி யோசித்துப்பார்க்கிறேன், அதே ஆனந்தவிகடனில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், மௌனி போன்றவர்கள் எழுதியிருந்தால் அது அன்றைய மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை முறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

உண்மையில் சொல்வதானால் பத்திரிகை அல்லது இதழ்களை மையப்படுத்தி அடையாளப்படுத்தப்படும் இலக்கிய வகைமைகள் குறித்த நம்பிக்கைகள் இன்று முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. தீவிர இலக்கியம் என்பதற்கான சந்தை மதிப்பை அறிந்தவர்கள் முதலில் தங்களை அதன் ஒரு பிரதிநிதிகளாக மாற்றி ஒரு இதழின் பெயரை அல்லது இயக்கத்தை ‘பிரேண்ட்’ ஆக்குகின்றனர். அந்த பிரேண்டின் கீழ் பதிப்பாகும் எந்த மொண்ணையான நூலையும் சாமர்த்தியமான வியாக்கியானங்கள் வழி தரமானது என விற்பனை செய்கின்றனர். மூலிகைகள் மீது மோகம் வந்த பிறகு எல்லா சவர்க்காரங்களும் மூலிகை சோப் ஆனது போல துளியும் இலக்கிய வாசிப்போ ரசனையோ இல்லாதவர்களெல்லாம் முகநூல் வழியே தமிழகத்தின் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவதும், மலேசிய இலக்கியம் குறித்து அபத்தமான கருத்துகளைச் சொல்வதும் நச்சுநிகழ்வு.

தமிழகத்திற்கு வருடம் தோறும் சென்று பிடிவாதமாக எங்களுக்கு இலக்கியம் தெரியாது எனப் போராடும் உத்வேகம் மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கு இருந்தது. இங்கிருந்துகொண்டேயும் அவர்கள் அதை நிரூபிக்கலாம் என நல்லெண்ணத்தில் நான் கூறியதை அவர்கள் விமர்சனமாகக் கருதிவிட்டனர். அவர்களுக்கான அரங்குகளை வைரமுத்து போன்றவர்கள் அமைத்துக்கொடுப்பதால் பகிரப்படும் கருத்துகள் தீவிர இலக்கியச் சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என ஓரளவு அமைதியும் நிம்மதியும் கொள்ள முடிந்தது. ஆனால், இன்று தீவிர எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களால் அதைவிட பெரிய ஆபத்து தொடர்கிறது.

லக்‌ஷ்மி மணிவண்ணன் 2015இல் ஒருங்கிணைத்த பரிவாதினி எனும் நிகழ்ச்சியில் மலேசியாவைப் பிரதிநிதித்து வாணி ஜெயம் என்பவர் கலந்துகொண்டார். எழுதப்படும் எல்லாமே இலக்கியம்தான் எனும் கருத்துடையவரால் மலேசிய இலக்கியம் குறித்து எவ்வாறான அறிமுகத்தை ஏற்படுத்த முடியும் என்று குழம்பிதான் போனேன். உயிர்மை மேடையில் மலேசியக் கவிதைகளின் தனித்துவம் பற்றி பேசும்போது யோகி என்பவர் அதில் மலாய் சொற்கள் இருப்பதுதான் தனித்துவம் என மேடையில் சொல்கிறார். அதை மறுத்துக் கருத்து கூற அங்கு ஒருவரும் இல்லை. இந்த அரங்குகளை அமைத்துக்கொடுப்பவர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான ஆளுமைகள்தான். இதுபோன்ற மேடைகளில் சொல்லப்படும் கருத்துகள் தீவிர வாசகர்கள் மத்தியில் கவனம் பெறுகின்றன.  ஏதோ குறைந்தபட்ச கோட்டா வழங்குவதுபோல மலேசியத் தமிழ் இலக்கியத்தையும் சேர்த்துக்கொண்டோம் எனும் போக்கில் செயல்படும் இலக்கிய இதழ்களைவிடவும் இயக்கங்களைவிடவும் ஆனந்தவிகடன் போன்ற ஜனரஞ்சக இதழ்கள் அப்போதிருந்தே ஆபத்தில்லாமல்தான் இருந்துள்ளதோ எனும் ஐயம் எழுகிறது.

இன்று நான் எழுதும் ஒரு சிறுகதையை அல்லது கட்டுரையை மலேசியாவில் உள்ள இதழோ நாளிதழோ ஒரு சொல்லை மாற்றாமல் பிரசுரிக்கும் எனும் சலுகை இருந்தும் நான் அதில் எழுதுவதை தவிர்க்கிறேன். தமிழகத்தில் சிற்றிதழ் போக்கு ஒன்று உருவாகி கறாரான விமர்சனங்கள் வழி இலக்கிய போக்குகளை வரையறுத்தும் மறுத்தும் தரமான இலக்கியச் சூழலில் அதற்கே உண்டான விவாதங்களுடன் முன்னெடுத்தது. இந்தச் சூழலில் எழுந்து வந்த ஜெயகாந்தனுக்கு தான் எழுதும் களம் குறித்த அவசியம் இல்லாமல் இருப்பதில் தவறில்லை.  ஆனால் அவ்வாறான ஒரு சூழல் இல்லாத மலேசியாவில் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்த முனையும் என்னைப் போன்றவர்கள் ‘அதுவும் இதுவும் வேறு’ எனச்சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அதற்கான அடையாளமாக வேண்டியுள்ளது.

அந்த நிலைபாட்டால்தான் தீவிர இலக்கிய அடையாளத்தை வணிகமாகவும் நட்பு பாராட்டவும் நூல்களைச் சந்தைப்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சங்கடமான இலக்கியச் சூழலில் தரமான படைப்பாளிகளை முன்னிறுத்த முடிகிறது.

(Visited 195 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *