பனை மட்டையும் பத்திரிகையும் – கடலூர் சீனு

22023022அன்பு அண்ணா ,

இக்கடிதம் அவ்வப்போது இலக்கு விலகி அலைய சாத்தியம் உண்டு . உங்கள் வினா வழியே நான் சிந்தித்தவற்றை தொகுத்துக்கொள்ளும் பொருட்டு இதை எழுதுகிறேன் எனக்கொள்ளலாம் .

முதலில் உங்கள் வினாவை  தமிழ் நிலத்தில், இந்த வினா உருவாகி வந்த கலாச்சார பின்புலத்தில் வைத்து அணுகிப் பார்க்கிறேன்.

இரண்டு உலகப்போருக்கு இடையே அச்சுக்கலை, மிஷனரிகள் பிடியில் இருந்து விடுபட்டு  ஜனநாயகம் அடைகிறது.  சம காலத்தில் ஆங்கிலேய அரசு, தனது அரசின் தேவைக்காக சாதி பேதமற்ற, புதிய ,பொதுக்கல்வி அமைப்பை உருவாக்குகிறது . சுதந்திரம் அடைந்த அச்சு தொழிலின் வணிக சாத்தியங்கள் பலரை அந்தத் தொழிலின் உள்ளே வர வைக்கிறது. முன்பு எங்கேனும் ஒரு ஏட்டு சுவடி இருக்கும் ,அதை ஒருவர் வாசிக்க, ஒருவர் விளக்கம் சொல்ல, ஐம்பது பேர் கேட்பார்கள் [அங்கு பெரும்பாலும் பெண்கள் இல்லை .பெண் கல்வி என்பது வீட்டு ஆடு மாடு படிக்க வைக்க படுவது போல நகைச்சுகைக்கு உரிய ஒன்றாக இருந்தது] . இப்படி இருந்த மரபார்ந்த கல்வியில் உடைப்பு நிகழ்ந்தது. பொதுக்கல்வி அடைந்த எவரும் காசு கொடுத்து தனக்கே தனக்கென ஒரு புத்தகம் வாங்கி ,தானே வாசிக்கலாம் எனும் நிலை உருவாகியது.

இந்திய விடுதலை சார்ந்து நிகழ்ந்த மறுமலர்ச்சி போக்குகள், ஆண்களை  குறைந்த பட்சம் எழுத்து கூட்டி வாசிக்கும் அளவு தம் இல்ல பெண்களை வளர்க்க வைத்தது .

இந்த சூழலில்தான் அகிலனும் கல்கியும் உருவாகி வருகிறார்கள். தமது பத்திரிக்கை வழியே, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்   இந்திய விடுதலை ,தேசியம் போன்ற கனவுகளை தமது கதைகளில் விதைத்தார்கள். கல்கி தன்னை வாசிப்பதன் வழியே ஒவ்வொரு வீட்டிலும் தேசம் எனும் தன்னுணர்வை கொண்டு வந்தார்.  தமிழ் நிலத்தில் சுதந்திரம் நோக்கிய மறுமலர்ச்சியில் கல்கியின் பங்கு கணிசமானது. விடுதலை வருகிறது. கனவுகள் சிறகு மடக்கி, கால்கள் நிலத்தில் அமைகிறது. இங்குதான் துவங்குகிறது  தீவிர இலக்கியத்தின் பணி .

தமிழ் நிலத்தின் இலக்கிய முதல்வன் பாரதியார், இந்த சுதந்திரம் அடைந்த அச்சு யுகத்தில்தான் பொது வாழ்வுக்குள் வருகிறார்.  சொல் புதிது, பொருள் புதிது ,சோதி மிக்க இந்த நவ கவிதை  என தன்னை தனது படைப்பைக் குறித்து பிரகடனம் செய்கிறார் .   அவர் கம்பனின் உபாசகர். அதே சமயம் ஷெல்லி தாசனும் கூட.  அவர் ”ஆஹா என வருகுது பார் யுக புரட்சி’ ‘என விதந்தோதிய ருஷ்ய புரட்சியை தமிழ் நிலத்துக்கு முதலில் அறிமுகம் செய்தவர் அவரே. இந்த ஆழமான மரபு மற்றும் சமகால அறிவு பின்புலத்தில் நின்றே பாரதி உருவாகி வருகிறான்.  தமிழ் மொழி பேசுவோர் அனைவரும் பெருமிதம் கொள்ளும் வீரியம் மிக்க இலக்கிய முன்னோடி பாரதி . அதன் பிறகான சிறிய தேக்கத்துக்குப் பிறகு புதுமைப்பித்தன் வருகிறார். அவரிலிருந்தே துவங்குகிறது தமிழின் தீவிர இலக்கிய போக்கு .

சுதந்திரத்துக்குப் பிறகு  கனவுகளையும், லட்சியங்களையும் கட்டி எழுப்பிய கதைகளின் பயன்மதிப்பு சரிகிறது.  வெகுஜன வாசிப்பில் இருந்து ஒரு குறுகிய தீவிரம் கொண்ட சாராருக்கு, எனில் இதற்கெல்லாம் பொருள் என்ன எனும் கேள்வி எழுகிறது.  கருத்துக்களுக்கும் சமூக மாற்றங்களுக்குமான உறவென்ன? கருத்துக்களுக்கும் காலத்துக்குமான உறவென்ன? போன்ற கேள்விகள் எழுகிறது. இங்கேதான் கா.நா.சு வின் இடம் வருகிறது. இந்த கேள்விகளுக்கு வெகுஜன இலக்கியம் பதில் சொல்லாது. இந்த கேள்விகளை கொண்டு வாழ்வை ஆராய்வது தீவிர இலக்கியம்  என்று துவங்கி  பாரதி துவங்கி  இந்தியா உலகம் என எங்கெங்கும் நிகழ்ந்த தீவிர இலக்கிய பிரதிகளை இந்தக் குறுங்குழுவுக்கு அறிமுகம் செய்கிறார். தீவிர இலக்கியத்தின் தன்மை என்ன?  அது தீவிரம் கொண்ட குறுங்குழுவுக்கானது .  [ஷங்கர் படம் அனைவருக்கும் ஆனது. சத்ய ஜித் ரே படம் அந்த அலைவரிசைக்கான குறுங்குழுவுக்கானது அது போல ]  எனவே தீவிர இலக்கியம் இந்த குறுகிய எல்லையை தனது களமாக கொண்டது என்றார் கா நா சு .

தீவிர இலக்கியத்தின் முக்கிய அம்சம்   வாசகனின்  அந்தரங்கத்துடன் அது  உரையாடலை நிகழ்த்தும் ரகசிய தன்மை .

இரு உலகப் போர்களுக்கு இடையே பொருளாதார வீழ்ச்சியை சமன் செய்ய ,காசு கொடுத்து புத்தகம் வாங்கும் வெகுஜனத்தை நோக்கி  ஏகாதி பத்திய அரசுகள்  நிறைய பாலியல் கதைகளை கொண்டு வந்து இறக்கியது.  இங்கே தமிழ் நிலம் அடைந்த அந்தரங்க வாசிப்பு எனும் துவக்க புள்ளியை உருவாக்கிய பல அலகுகளில் ஒன்று இது .

வண்ணதாசன் வரை தொடரும் காமம் சார்ந்த அந்தரங்க துவனியின் துவக்கமும் இதுவே .

நவீனத்துவம் பகுத்தறிவும், விமர்சன பார்வையும் கொண்டது இயல்பாகவே அது லட்சியவாதம் உட்பட அனைத்து விழுமியங்களையும் கேள்வி கேட்டது .

இங்கேதான் வருகிறார் ஜெயகாந்தன்.  திராவிடம் எனும் பெயரில் பிராமணர்களைப் போட்டு சாத்திக்கொண்டிருக்க, நவீனத்துவம் எனும் பெயரில் தனி மனிதனை வெற்று வெளியில் கொண்டு நிறுத்த, இதன் முரண் இயக்கமாக எழுந்து வந்தவர் ஜெயகாந்தன்.  திராவிட அரசியலுக்கு மாற்றாக திராவிட பண்பாட்டை  கட்டி எழுப்பினார், நவீனத்துவத்தின்  வறட்சிக்கு  எதிராக, நம்பிக்கையை ,லட்சியவாதத்தை அரை கூவல் என சிம்ம கர்ஜனையாக  முன்வைத்தார்.

ஆம் லட்சியவாதத்தின் குரல் அவ்வாறுதான் இருக்கும்.   அவரது சமகாலத்தில் சுஜாதா துவங்கி பல நூறு வெகுஜன எழுத்தாளர்கள் பணம் புகழுடன் எழுந்து வந்தார்கள் .

இன்று இங்கே நின்று திரும்பிப் பார்த்தால், ஜெயகாந்தனுடன் விகடனில் எழுதிய எந்த எழுத்தாளரின் பெயரும் வரலாற்றின் சுவடில் இல்லை காரணம், மற்றோர் கேளிக்கைவாதி. ஜெயகாந்தன் வாழ்க்கையை எழுதியவர். நாளை விகடனின் பெருமிதம் என எஞ்சப்போகும் மிக சிலவற்றில் ஒன்று, ஜெயகாந்தன் விகடனில் எழுதினார் என்பது .

இன்று தமிழ் நிலத்தின் சூழல் முற்றிலும் வேறு . காட்சி ஊடகத்தின் தாக்கத்தால் வெகுஜன வாசிப்பு என்பதே அழிந்து விட்டது. எழுதும் எதையுமே வாசிக்க வைக்கும் சுஜாதா போன்றோர் இன்றில்லை.  யார் தீவிரம் கொண்டு எழுதிக்கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே இன்று எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் .

இதோ இன்றைய விகடனில்  ஜெயமோகனின் புதிய கதை ஒன்று வெளியாகி இருக்கிறது.  இலக்கிய அறிமுகம் அற்ற மூன்று புதிய வாசகர்களின் போன் கால் இன்று வந்தது .

வாசிக்க கேளிக்கை எழுத்தென இன்று இங்கே பொருட்படுத்தும்படி ஏதும் இல்லை. வாசித்தால் தீவிர தளத்தில்தான் வாசிக்க வேண்டும் .இதன் நேர்மறை ,எதிர்மறை தாக்கங்கள் இனி வரும் காலங்களில்தான் தெரியும் .

இதுவேதான் மலேசிய சூழலிலும் நிகழும் .விகடன் வழியே ஜெயகாந்தன் உடன் மலேசியா வந்த வேறு எழுத்தாளர்கள் பெயர் எதுவும் அங்கே நினைவில் இருக்கிறதா என்ன ?

ஒரு மதிப்பீட்டு விமர்சனம் எனும் வகையில் ,நமது சுஜாதா உருவாக்கிய  கதை உலகை, நமது மலேசிய வெகுஜன எழுத்தாளர்கள் வந்தடைய இன்னும் இருபது வருடம் தேவை.  ஆக மலேசியாவிலும் தமிழ் நிலம் போலவே  இன்று  வெற்றிகர வெகுஜன எழுத்தாளர் என யாரும் இல்லை. தீவிர எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமே பொருட்படுத்த தக்கதாக இருக்கிறது .

இத்தகு சூழலில்  தீவிரம் எனும் பெயரில்  தீவிர இலக்கியத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்பட்டுவிடக்கூடாது.  பொது வாசகன்  பொது வாசிப்பிலிருந்து, தீவிர வாசிப்பு எனும் உலகுக்கு வர, இன்று இருக்கும் தாண்ட முடியாத அகழி அப்படியே நீடிக்கும் .

கா. நா. சு  துவங்கி  இன்று எஸ்.ரா வரை செய்யும் எது தீவிர இலக்கியம் என்பதை நோக்கிய பரிந்துரையும் உரையாடலும் தீவிர எழுத்தாளர்களால் வெகுஜன இதழ்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் .

இது குறித்து எழுதுங்கள் [இதை எவ்வாறு எழுதுவது என்பது எழுத்தாளனின் தீர்மானம்]  ,இத்தனை பக்கங்களுக்குள் எழுதுங்கள் இந்த இரண்டு  அளவுகள் தவிர்த்து வணிக இதழ்கள் வைக்கும்  வேறு எந்த வணிக சூத்திரத்துக்குள் மட்டும் தீவிர எழுத்தாளர்கள் சிக்காமல் கவனம் கொள்ள வேண்டும் .

ஜெயகாந்தன் சொன்னதுதான் , பிரபல பத்திரிக்கையில் எழுதப்படுகிறதா, பனை மட்டையில் எழுதப்படுகிறதா  என்பது முக்கியம் இல்லை . எழுதுபவன் யார் ? அவன் யாரை நோக்கி எழுதுகிறான் ? அது மட்டுமே முக்கியம்.

வணிக தளத்தில் இறங்கி காணாமல் போவது இயலாதவன் செயல். எங்கே செயல்பட்டாலும் அங்கே தான் விரும்பும் விளைவை உருவாக்குபவனே  தீவிரவாதி .

ஜெயகாந்தனின் வழி அதுதானே.

(Visited 150 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *