அழகான குடும்பம் எழுத்தாளர் தூயனது. சற்று நேரம் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். விஷ்ணுபுரம் கலந்துரையாடலில் இளம் படைப்பாளிகளை நோக்கி ‘இப்படி எழுதக் காரணம் என்ன?’ எனும் அர்த்தத்தில் கேள்விகள் தொடர்ந்து எழுவதைக் காண முடிந்தது. தூயனை நோக்கி அவ்வாறான கேள்விகள் அதிகமே எழுந்தன. உண்மையில் அதுபோன்ற கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதில்லை. அல்லது படைப்பாளிகளும் அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளிக்கின்றனர்.
உளவியல் நிபுணர் முன் அமர்ந்திருப்பவர்கள்கூட தங்களுக்குள் இயங்கும் அந்தரங்க மனதை திறந்து காட்டுவது அவ்வளவு எளிதல்ல. அவர்கள் சொல்வது அவ்வறையை விட்டு வெளியே போகாது என்ற உத்தரவாதம் இருந்தாலும் இறுக்கத்தைத் தளர்த்துவது எளிதல்ல. பல சமயங்களில் அந்த இருட்டறையில் இயங்கும் நமது அந்தரங்க மனதை எதிர்கொள்ள நாமேகூடத் தயங்குகிறோம். படைப்பாளி அவ்விருளில் கொஞ்சம் துளாவி அள்ளியே படைப்புக்கான அக்கணத்தைக் கொண்டு வருகிறார். கோபம், அச்சம், காமம் என ஆதி உணர்வுகள் உள்ள அவ்விருளுக்குள் அவன் பிரக்ஞையுடன் இருக்கும்போது அழைத்துச்செல்வது சாத்தியமற்றது. அரங்கு அதைதான் செய்ய விரும்பியது. வைரமுத்து, ராஜேஸ்குமார், சிவசங்கரி, சுஜாதா போன்றவர்களால் மிகத்தெளிவாக அவர்கள் கதைகள் உருவான விதம் குறித்துப் பேச முடியும். அவர்கள் அதைத் திட்டமிடுகிறார்கள். வாசகனை மையப்படுத்திய பிரதிகள் அவை. தூயனைப்போல உள்நோக்கிப் பயணிக்கும் ஒருவரை அக்கேள்விகள் வதைக்கவே செய்திருக்கும்.
தூயனிடம் நான் கதைகள் பற்றி அதிகம் விவாதிக்கவில்லை. ஒரு மனிதம் முற்றிலும் மனச்சோர்வில் இருக்கும்போதும் காமத்தின் சிறு துணுக்கு அவனைத் தீண்டியபடி இருப்பதாக உள்ள அவரது சிறுகதைப் பகுதிகள் கவர்வதாகச் சொன்னேன். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் அப்பாவைச் சந்தித்தோம். அதற்கு முன்பே அவரது இளமைகாலப் படத்தைப் பார்த்தேன். ஆண்கள் வயது முதிர முதிர அழகாவது மனதுக்கு புத்துணர்ச்சியையும் வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் கொடுத்தது. மதுரைக்குச் செல்ல நேரமாகிவிட்டதால் காலம் தாழ்த்தாது சித்தன்னவாசல் நோக்கி புறப்பட்டோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கி.பி 7, 8ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சித்தன்னவாசல் ஓவியங்கள் சமணர் காலத்தவை. குடைவரைக் கோயிலினுள் இருக்கும் இவ்வோயிங்களைக் காணச்சென்றபோது பாதுகாப்பாளர் ஒருவர் இருந்தார். தூயன், கோணங்கியின் நண்பர்கள் என எங்களை அறிமுகம் செய்து வைத்தார். கோணங்கி அடிக்கடி சென்று தனது படைப்பூக்கத்தைப் புதுப்பித்துகொள்ளும் இடம் அது. சமணர்கள் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை பாதுகாப்பாளர் காட்டினார்.
தாமரைக்குளத்தின் ஓவியத்தைக் கண்டவுடன் அசந்துவிட்டேன். வரையப்பட்ட காலத்தில் அதன் கவர்ச்சியைக் கற்பனை செய்யும்போது பிரமிப்பாக இருந்தது. தாமரைக்குளத்தில் நீந்தும் அன்னப் பறவை சிறகை விரித்து அச்சம் பதிந்த பார்வையுடன் இருப்பதைப் படம்பிடித்துக்கொண்டேன். அதன் கண்களில் அச்சத்தைக் காட்டும் துல்லியம். அதே துல்லியத்தோடு வஞ்சனைக் கண்களோடு முதலை ஒன்று அக்குளத்திலேயே இருந்தது. அதன் அருகிலேயே மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. இவையெல்லாம் இருக்கும் அதே தடாகத்தில் கோவணம் அணிந்த சமணத்துறவிகள் மலர்களைக் கொய்தபடியும் சுமந்தபடியும் சாந்தமாக இருந்தனர்.
குகையின் உள்ளே சமணதீர்த்தங்கரர்களின் மூன்று சிலைகள் இருந்தன. அங்கு செல்வதற்கு முன் வலது புறம் சிரிப்பும் இடது புறம் நமட்டுச்சிரிப்புமாக துவாரபாலகர்கள். நமட்டுச்சிரிப்பு அவ்வளவு துல்லியமாக வடிக்கப்பட்டிருந்தது. உள்ளே சுவர்புடைப்புச் சிற்பங்களைவிட மேல் கூரையில் இருந்த ஓவியம் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு சேலையில் எப்படி ஒரே மாதிரியான வடிவமைப்பு இருக்குமோ அதேபோல ஒரே மாதிரியான சின்ன சின்ன ஓவியங்களினால் கூரை விரிந்திருந்தது. அதில் நுணுக்கமான மனித முகங்கள்.
தூயன் அடுத்து எங்களை குடுமிநாதர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள சிற்பங்களை மிகுந்த பரவசத்துடன் காட்டினார். அதன் நுட்பமான பகுதிகளை விளக்கினார். ஒவ்வொரு சிற்பத்தின் நுணுக்கமான பகுதிகளையும் நாங்கள் தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். கங்கா முழுக்க சந்திரமுகியாவது போல தூயன் கொஞ்சம் கொஞ்சமாக வேதசாதகராகிக்கொண்டிருந்தார். உண்மையில் அற்புதமான சிற்பங்கள் அவை. நுண்மையின் கவனம் கிளர்ச்சியுற வைத்தது. அந்தக் கோயிலின் சிற்பங்களை மையமாக வைத்து தான் எழுதிய கதை ‘பேராழத்தில்’ என்றார். சிற்பி (வேதசாதகரார்) கைவிளக்கின் வெளிச்சத்தில் தன்னால் வடிக்கப்பட்ட ரதியின் யோனியைப் பார்த்தபோது அவ்வொளியின் வெளிச்சத்தில் அது காந்தல் மொட்டினை அவிழ்த்த சிவப்பில் இருந்த வரியை நினைவுகூர்ந்தேன். “வாசித்துள்ளீர்களா?” என்றார் ஆச்சரியமாக. அவரின் பரவசத்தை நான் புரிந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடும்.
இவ்வளாகம் அருகில் காணப்படும் இசைத் தகவல்களைக்கொண்ட கல்வெட்டைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவைதான் தமிழ் இசைமரபுக்கு ஆதாரம் என விளக்கினர் தூயன். தூயனின் துணை இல்லாதிருந்தால் ஆவுடையார் கோயிலைப் போலவே பல அரிய பகுதிகளைத் தவறவிட்டிருப்போம். இசைக்குறிப்புகளை அருகில் சென்று பார்க்க முடியாதபடிக்கு தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. அதன் ரீங்காரம் திகிலை ஏற்படுத்தியது.
தூயனிடம் விடைபெற்றுப் புறப்பட்டோம். அடுத்தமுறை அவர் வீட்டில் தங்கி ஊர் சுற்ற வேண்டும் என நினைத்துக்கொண்டேன். பயணம் நெடுகிலும் வீதியோரங்களை வேடிக்கை பார்த்தபடி சென்றோம். விஷ்ணுபுர விழாவில் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மலேசியாவில் இருந்து தமிழகத்தில் நுழையும்போது அடிப்படையான என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள் எனக்கேட்டிருந்தார். நான், “வண்ணம்” என்றேன். என் கண்களுக்கு எங்குமே பழுப்புக் கவிந்ததுபோல இருக்கிறது என்றேன். கிருஷ்ணன் அப்படி இருக்கமுடியாது எனக்கூறி சில விளக்கங்களை அளித்தார். அவர் சொன்ன விளக்கங்கள் நியாயமாக இருந்தன. உடைகள், பேரங்காடிகள் என எல்லாமே வண்ணமயமாகவே இருந்தன. ஆனால் முதலில் தோன்றும் அபிப்பிராயத்தில் பிழை இருக்க முடியாது எனத் தோன்றியது. எனவே எது என் கண்கள் முழுமைக்கு பழுப்பை அப்பிச்செல்கிறது என ஆராய்ந்தேன்.
அப்போதுதான் புலப்பட்டது. சாலையோர மரங்கள் எங்கும் புழுதி படிந்து பசுமைத்தன்மையைக் கெடுத்திருந்தன. இலைகள் எங்கும் பழுப்பு நிறம். அதை மீறியே பச்சை வெளிபட்டது. இன்னும் கொஞ்சம் அகல பார்த்தால் பொருந்தாத இடங்களில் ஓலைகள் தடுப்பாக இருந்தன. பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், அரசு பேருந்துகள், அவர்கள் உடைகள், அதன் அறிவிப்புப் பலகைகள் என எல்லாமே மங்கிய நிறத்தில் இருந்தன. வேட்டி, சட்டைகள் இன்னமும் அதிகமாகப் புலக்கத்தில் இருந்தன. இதற்கு எதிராக தனியார் கடைகளும் அலுவலகங்களும் எவ்வளவு வண்ணத்தை அள்ளி தெளித்திருந்தாலும் பெண்கள் சேலையில் எவ்வளவு ஜொலித்தாலும் அவையெல்லாவற்றையும் இந்த பழுப்பு அலை மூழ்கடிக்கிறது.
மெல்ல இருள் படரத்தொடங்கியது. இருளில் நிறம் என்பதற்கு பொருள் இல்லை என நினைத்துக்கொண்டேன்.
தொடரும்